இரவும் கவிதையும்

அன்பின் ஜெயமோகன்

தங்களின் இரவு நாவல் வாசித்தேன்.
ஒரு புதுவித வாசிப்பனுபவம் அது.எங்களது பெரும்பாலான இரவுகள் பயமும் பயங்கரமும் நிறைந்ததாக அமைந்தது.

இருந்தாலும் தங்கள் நாவலை படித்த பிறகு என்அழகான இரவுகளை நான் வீணாக்கிவிட்டதாக உணர்கிறேன். இப்போது பகலை ரசிக்க முடிவதில்லை அந்நாவலில் இழையொடுகிற மென்மையான காதல் நீலு பற்றிய வர்ணனைகள் மனதை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. நான் கவிதை எழுதுவேன் இப்போது எழுத முடியவில்லை உங்கள் நாவல் முழுவதும் ஓர் அழகான கவிதை நீங்கள் சொல்லாத ஒன்றை என்னால் எழுத முடியுமோ தெரியவில்லை இந்த எழுத்து சாரணமாக எழுதpபடுகிற விடையம் அல்ல எழுதி முடித்தபின் உணர்தீர்களா ஜெ நான் முன்பு எழுதிய கவிதையொன்று உங்கள் நீலுவுக்கு பொருந்தும் போல் உள்ளது

ஒற்றைமுத்தம்.

என் ஏக்கம், தவிப்பு, ஆற்றாமை

எல்லாவற்றையும் துடைத்துச்செல்கிறது.

உன் ஒற்றைமுத்தம்.

உன் இதழ்கள் எழுதிய காதலின் கவிதை அது.

என்னை மீள முடியா இசைவெளியில் தள்ளியது

என் கனவுகளில் வர்ணங்களை கொட்டியது.

அன்பினால் தன்னைக் கொழுத்திக்கொண்டு

எரியத் தொடங்கியது.

ஒரு பக்கம் பனியைப்போர்த்தியிருந்த அது

மறு பக்கம் சூடாக இருந்தது.

காதலால் செய்யப்பட்ட அந்த முத்தத்தில்

கொஞ்சம் காமமும் இருந்ததா.????

நன்றி உங்கள் கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

அன்புடன்
வேலணையூர்-தாஸ்
யாழ்ப்பாணம்.
இலங்கை.

அன்புள்ள தாஸ்

கற்பனை உடைய மனங்கள் அனைத்துமே இரவை தங்களுக்குரியனவாக உணர்ந்திருக்கும். இரவின் முடிவின்மை பகலுக்கு இல்லை என்பதை உணரும் இடத்திலேயே கற்பனை தொடங்குகிறது என்றுகூடச் சொல்லலாம்

மகாபாரதத்தை எழுதும்போது இதை உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகளாக இரவை எழுதிக்கொண்டிருக்கிறேன். இரவை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் புத்தம்புதியதாகவே ஒவ்வொரு இரவையும் என்னால் எழுதமுடிந்திருக்கிறது

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
அடுத்த கட்டுரைதிருப்பூரில்