மீறல்களின் கனவு

குமரகுருபரன்

குமரகுருபரன் விருது

இரண்டு சினிமா இருக்கிறது என்று சொன்னால் இப்போது சில விமர்சகர்கள் கொதிப்பார்கள். இல்லை என்று காட்ட அவர்கள் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இரண்டாகவே அது இருந்துகொண்டிருக்கிறது. அதை நான் இப்படிப்பிரிப்பேன், பார்வையாளர்களின் சினிமா படைப்பாளியின் சினிமா. அல்லது வேண்டுமென்றால் பரப்பியல்படம் கலைப்படம் எனலாம். அல்லது வேறு எவ்வகையிலும் சொல்லலாம்

கலை என்று நான் சொல்வது படைப்பாளியின் சினிமாதான். அது உருவாகும்போது அங்கே பார்வையாளனே கிடையாது. பார்வையாளன் அதைக் கண்டெடுக்கிறான். பார்வையாளன் ஏதோ ஒருவகையில் தன்னை படைப்பாளியின் கோணத்தில் மாற்றிக்கொள்ளும்போது மட்டுமே அந்தக் கண்டடைதல் நிகழ்கிறது. ஆகவே நாற்காலியில் அமர்ந்தபடி ‘சரி, காட்டு உன் சினிமாவை’ என்று சொல்பவனுக்குரியதல்ல அது. ‘வா நாம் தேடுவோம்’ என்று சொல்லக்கூடிய மிகச்சிலருக்கு உரியதுதான். கோபயாஷியும் தர்கோவ்ஸ்கியும் பர்க்மானும் டெரென்ஸ் மாலிக்கும் கலைஞர்கள். சத்யஜித் ரேயும், கட்டக்கும், அடூரும் கலைஞர்கள்.

இன்னொரு சினிமா பார்வையாளனையும் உள்ளே வைத்துக் கட்டப்பட்டது. மௌனப்பெரும்சக்தியாக அவன் திரண்டு படைப்பவன் முன் நிற்கிறான். வாய்திறந்து விருப்பங்களைச் சொல்லாத மாமன்னன். அவன் சேவகனாக நிற்கும் கலைஞன் ஊகிக்கவேண்டும், யோசிக்கவேண்டும், குறிப்புணரவேண்டும், மன்னனின் முகம் மலரச்செய்யவேண்டும். நான் இன்றுவரை பங்குகொண்ட அத்தனை திரைவிவாதங்களிலும் பேசப்பட்டது சினிமாவைபற்றி அல்ல, வாழ்க்கையைப்பற்றியும் அல்ல, பார்வையாளனைப்பற்றி மட்டுமே.

பார்வையாளனுக்காக எடுக்கப்படும் சினிமாவின் நுணுக்கமான ரசிகராக எழுதுகிறார் குமரகுருபரன். பாரவையாளருக்காக எடுக்கப்படும் சினிமா மெல்லமெல்ல பார்வையாளனை பிரதிநிதித்துவம் செய்ய தொடங்குகிறது. ஒருகட்டத்தில் அது சமூகத்தின் ஒரு மாதிரி வடிவமாகவே ஆகிவிடுகிறது. சினிமா என்பது சமகாலமும் கடந்தகாலமுமாக ஆகும் மாயம் நிகழ்கிறது. சினிமாவிலிருந்து அந்த வரலாற்றை எடுக்கமுயலும் நூல்களில் ஒன்று என்று குமரகுருபரனின் இந்நூலைச் சொல்வேன்

[ 2 ]

குமரகுருபரனின் இந்நூல் ஒருமுக்கியமான உள்வெளிச்சத்தை எனக்களித்தது. உலகமெங்கும் பிரபலசினிமாவின் தேடல் என்பது மீறலை நோக்கியதாக இருக்கிறதோ என. முதல்கட்டுரையில் இன்னொருகாதலை எப்படி இந்தியச் சமூகமும் ஐரோப்பிய அமெரிக்கச் சமூகங்களும் அணுகுகின்றன என்று நான் பார்த்தவையும் பார்க்காதவையுமான சினிமாக்களின் வழியாக அணுகிப்பார்க்கிறார். ஏன் சமூகங்கள் இன்னொரு காதலை ஏற்கத் தயங்குகின்றன, ஏன் நெறிகளையும் விதிகளையும்போட்டு இறுக்கிக்கொள்கின்றன என்று ஆராய்கிறார் குமரகுருபரன்

நான் ஏன் மீளமீள சினிமா இன்னொருகாதலை நோக்கிச் செல்கிறது என்றே அதை அணுகுகிறேன். சினிமா ஆரம்பித்த காலம் முதலே அதுதான் முதன்மையான கருவாக இருக்கிறது. முக்கோணக்காதல், முதற்காதல், இழந்தகாதல், மறுகாதல் என. ஏனென்றால் அதிலுள்ள மீறல்தான். விதிவகுக்கிறது சமூகம், ஆழ்மனம் மீறிக்கொண்டே இருகிறது. பார்வையாளன் மீறலுடன் உடனடியாக தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான். அது சினிமாவின் முதல்தேவையொன்றை நிறைவேற்றுகிறது

குமரகுருபரன் இந்நூலில் கேட்கும் வினாவுக்கு இதுவே பதில் . சினிமா தன்னை மிக நாசூக்காக இரண்டுபகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று பார்வையாளன் என்ற தனிமனிதனுக்காக. இன்னொன்று பார்வையாளன் என்ற சமூகத்துக்காக. தனிமனிதனுக்காக அது மீறலை முன்வைக்கிறது. சமூகத்துக்காக அந்த மீறலை எப்படியோ மழுப்புகிறது. எழுபதுகள் வரை மீறலின் சம்பளம் மரணம் என்ற விதி இருந்தது. மரணம் அனைத்துப்பிழைகளையும் சமன் செய்யும் சக்தி அல்லவா?

‘தெய்வத்தின் மாலை தெருவினில் விழலாமா?’ என்று கதாநாயகி பாடும்போது திரையரங்கே அவள் எல்லை மீறிச்சென்று கதாநாயகனை அடையவேண்டுமென்று ஏங்க வைக்கிறது சினிமா. அப்படி ஏங்கினால் மட்டுமே அந்த பிரிவின் துயரம் அதிகரிக்கிறது. மீறல் ஒரு கனவாக இருந்தால் எவ்வளவு இனிமையானது அது. மீறலின் ஆனந்தமும் உண்டு, விழித்தெழுந்து ஆறுதலும் கொள்ளலாம். சினிமா ஒரு கனவாகவே நம் பார்வையாளனுக்கு வந்துசேர்கிறது

குமரகுருபரன் உலகம் முழுக்க நிழல் உலகப்படங்கள் எந்தெந்த அடிப்படைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராயும் இடமும் எனக்கு மீறலின் கதையாகவே தோன்றியது. நிழலுலகப் படங்களைப்பார்ப்பவர்கள் சவரக்கத்தியைக் கண்டாலே அஞ்சும் சராசரி மக்கள். சுட்டுச் சுட்டுத்தள்ளிச் செல்லும் கௌபாய்களைக் கண்ட அதே கண்கள். நிழலுலகக் கதைகளுக்கும் வெஸ்டர்ன் கதைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை ஆச்சரியமூட்டுவதல்ல. இரண்டும் ஒன்றே

இரண்டிலும் சாமானியன் கண்டடைவது மீறலை. குற்றம் தண்டிக்கப்படும் என்ற விதியின் ரத்தை. நீதியும் தர்மமும் இரக்கமும் அளிக்கும் கட்டுபபடுகள் அறுபடுவதை. அவன் அதில் திளைக்கிறான். ஆனால் அது ‘இங்கு’ அல்ல ‘அங்கு’ என்று அவனுக்கு சினிமா நம்பிக்கை அளிக்கிறது.

நான் கேரளத்தில் நிழல் உலகை கையாள்வதில் புகழ்பெற்ற ஓரு காவலதிகாரியிடம் ஒருமுறை பேசினேன். நிழல் உலக காவல் பணிக்காக சர்வதேச காவல் துறைஉயிடம் பயிற்சிபெற்றவர். நிழலுலக சினிமாக்களைப்பற்றி பேச்சு வந்தது. என் வரையில் குட்ப்ஃபெல்லாஸ் நிழலுலக மனநிலைகளை மிகச்சிறப்பாகச் சொன்ன சினிமா. குறிப்பாக விடுதியில் உரக்க வெறும் சொற்கள் பேசி போலியாகச் சிரிக்கும் குற்றவாளிகளின் மனநிலை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.

நிறைய சினிமா பார்ப்பவரான அந்த அதிகாரி சொன்னார், நிழல் உலகை சினிமாவாக எடுக்கமுடியாது. பார்வையாளர்கள் கொஞ்சமும் விரும்பமாட்டார்கள். நிழல் உலகின் சில சாயல்களையே உலக சினிமா இன்றுவரை காட்டியிருக்கிறது. மார்ட்டின் ஸ்கார்ஸிசியும் சரி குவிண்டின் டொரொன்டினோவும் சரி கப்பல்லோவும் சரி அவ்வுலகை எடுத்ததே இல்லை. காவலர் பயிற்சியின் முதல்பாடமே சினிமாவை நம்பாதே, அது பொய் என்பதுதான்.

’யார் எடுக்கமுடியும்?’ என்று கேட்டேன் . ‘வெர்னர் ஹெர்ஷாக் எடுக்கலாம் என்றார். நான் சிரித்துக்கொண்டு அவர் எடுக்கமாட்டார், ஏன் மக்கள் நிழலுலகை விரும்புகிறார்கள் என்று வேண்டுமென்றால் ஒரு சினிமா எடுக்கக்கூடும்; என்றேன். அவர் சிரித்துக்கொண்டார்.

உலகமெங்கும் குற்றம் என்ற மீறலை சினிமா தன் கருவாகக் கொண்டிருக்கிறது. வசீகரமான ஒரு மாயக்கனவு. பார்வையாளைன் சம்மதத்துடன் அவன் கற்பனையைக்கொண்டு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டது. மீறலின் ரகசிய உலகம். குமரகுருபரன் விதவிதமான நிழல் உலக சினிமாக்கள் வழியாக அந்த கனவு சமைக்கப்பட்டதை காட்டுகிறார்

ஆரண்ய காண்டம் வெளிவந்தபோது ‘அப்படி ஒரு நிழல் உலகம் இங்கு இல்லையே’ என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது ‘நண்பா, அப்படி ஒரு உலகம் நமக்குள் மட்டுமே இருக்கிறது என்று சொன்னேன்

[ 3 ]

பாலியலை பார்வையாளனின் படங்கள் எப்படிக் கையாள்கின்றன? அவற்றுக்கு பாலியல் என்பது ஓரு யதார்த்தமே அல்ல, அவை பகற்கனவுகள். வணிக சினிமா என்ற பகற்கனவு காமத்தின் பகற்கனவை ஒரு கண்ணாடி இன்னொரு கண்ணாடியை பிரதிபலிப்பது போல முடிவின்மையாக்குகிறது. காதல் என்று சினிமா கூவிக்கொண்டே இருக்கிறது இங்கே. மேலைசினிமாவோ பாலியல் மீறல் என்று கூவிக்கொண்டே இருக்கிறது. இரண்டு வகை பகற்கனவுகள் அன்றி இவை வேறல்ல

குமரகுருபரனின் இந்நூல் இந்திய சினிமா காமத்தையும் காதலையும் கையாளும் விதத்தை பரதன் பத்மராஜன் உள்ளிட்ட முதன்மையான நடுவாந்தர சினிமாக்களின் நாயகர்களின் படங்களை முன்வைத்து விரிவாக ஆராய்கிறது. தமிழ்சினிமா காதலயே மேலைசினிமாவிலிருந்துதான் கண்டுகொண்டது. பாலியல் மீறலையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டது. இன்று எவ்வாறு மெல்லமெல்ல பாலியல்திரிபுகளையும் எடுத்தாள்கிறது என்று காட்டுகிறார்

குமரகுருபரன் சினிமாக்கள் வழியாக செல்லும் இப்பயணம் நாம் நம்முடைய நவீனகால பாலியல் மனநிலைகளை கட்டி எழுப்பிக்கொண்ட வரலாற்றையெ காட்டக்கூடியதாக மாறுகிறது என்ற எண்ணம் எழுகிறது. இந்நூலின் முக்கியமான பகுதி என இதைச்ச் சொல்லலாம்

மீண்டும் மீண்டும் மீறல்களைச்சார்ந்து பொதுச்சினிமா சென்றுகொண்டிருப்பதற்கான ஆவணமாகவெ அமைந்திருக்கும் நூல் இது. யதார்தத்தில் இருந்து தப்பி அந்தரங்க உலகை கட்டி எழுப்பவிழையும் மனிதனின் கூட்டுக்கனவாகவே சினிமா மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. மாந்திரீகக் கதைகள், க்னவுகளும் நனவுகளும் நிறைந்த கதைகள், வாழ்க்கைப்பின்னல்களின் வழியாக அன்றாட எளிய யதார்த்ததை அழித்துச்செல்லும் கதைகள் என ஒவ்வொரு கதைக்குள்ளும் சென்று சித்தரிக்கிறது குமரகுருபரன் ஆய்வுநோக்கு

நூலின் ஆரம்பத்திலேயே ஒரு படிமம். சினிமா பாரடைசோவில் பாதிரியார் வெட்டி எறிந்த முத்தங்களினாலான ஒரு சினிமா அரங்கில் ஒளிந்திருக்கிறது. சினிமா நம் கூட்டுமனம் என்ற அரங்கில் ஒளிந்திருக்கும் வெட்டி எறியப்பட்ட பகுதிகளின் தொகுதி போலும்

ஜெயமோகன்

[குமரகுருபரன் எழுதி வெளிவரவிருக்கும் இன்னொருவனின் கனவு நூலுக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைதமிழ் பிழைதிருத்தி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30