கிறித்தவ தசரா;கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு கேரளத்தில் வேரூன்றியிருக்கும் ஒரு பண்பாட்டு அம்சம்,எழுத்தறிவித்தல், மத எல்லைகளை தாண்டி விரிவது ஒரு நல்ல விஷயமாகவே பட்டது.

நல்ல விஷயம் தான்..  ஆனால் அதற்கு கிறிஸ்தவ சாயம் பூசி, இல்லாத ஒரு கிறிஸ்துவ கதையை வேண்டுமென்றே உருவாக்கி ஏன்செய்யவேண்டும்? அது தான் கேள்வி. . இந்துக்களில் கூட சிலர் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள், ஆனால் தாங்கள்  மதரீதியான குற்றவுணர்ச்சி இல்லாமல் உணர வேண்டும்  என்ற  குறுகிய காரணத்திற்காக  இப்படிக் கதைகளை உருவாக்கி விட்டுக் கொண்டாடுவதில்லை என்பதைப் பாருங்கள் – இத்தனைக்கும்  இந்து கலாசாரத்தில் இவற்றை உருவாக்குவது மிகமிக எளிது.  ’கிறிஸ்து பிறந்த நாளாகவே இருக்கட்டும்,  ஐராப்பிய சாண்டா கிளாஸே மான் தேரில் வந்து பரிசு கொட்டுக்கட்டும்.. அதை நான் அப்படியே கொண்டாடுவதால் என்ன குடிமுழுகிவிடும்?’  என்று தான் ஒரு சராசரி இந்து கேட்பான்.  சீன உணவை சாப்பிடுவதாலேயே தான் சீனனாகி விடுவதில்லை என்று அவனுக்குத் தெரியும்.

இந்த வித்தியாசம் எதை உணர்த்துகிறது?

இந்து மனதில் அடிப்படையிலேயே மற்ற மதங்களை, அவற்றின் கலாசாரங்களை unconditional ஆக மதிக்கும் பண்பு உள்ளது. அதனால் இந்த திருட்டு/திரிபு வேலைகளுக்கு அவசியம் இல்லை.

ஆனால் அடிப்படையில்,  கிறிஸ்தவ மனதில் இந்து மதம் கீழானது, அதன் கலாசரம், பண்டிகைகள், படிமங்கள், தொன்மம் எல்லாம் பொய்யானவை, மரியாதைக்குரியவை அல்ல என்ற  கசப்பு உறைந்து இருக்கிறது – இது கிறிஸ்தவ மதம் உருவாக்கி வளர்த்து விட்டது.  அதனால்,  இந்து கலாசாரத்தின் ஒரு நல்ல அம்சத்தை அவர்கள் கடைப் பிடிக்கவேண்டுமால் கூட,  அதை வெட்கமில்லாமல் திருடி, கிறிஸ்துவ சாயம் பூசி மட்டுமே கொண்டாடியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இல்லையா?  தங்கள் மதம் பற்றிய பாதுகாப்பின்மை,  மூடிய எண்ணம் தான் அவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது..

கேரளத்தில்,  எழுத்தாளர்கள், இலக்கியகர்த்தாகக்ள், கலைஞர்கள் கையால் குழந்தைக்கு வித்யாரம்பம் செய்ய வேண்டும் என்ற கலாசாரம் வெகுவாகப் பரவி வருகிறது.   எம்.டி.வாசுதேவன் நாயர் சொந்த ஊரில் விஜ்யதசமி நாளில் இதற்காகவே பெரும் கூட்டம் கூடுமாம்.   இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்..

நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸில்  டிபி ராஜீவன் இது பற்றி எழுதியிருக்கிறார் –

http://www.expressbuzz.com/edition/story.aspx?title=sishyas%20teach%20the%20guru%20about%20hope&artid=5sFmf0d/w08=&type=

When the Malayala Manorama asked me to be one of the gurus for their vidyarambham this year, I was hesitant to take it upon myself. ……. What blessing must I give the toddlers after making them write ‘Hari Sree’? ….. I asked the child his or her name, I was surprised to hear a Hindu name, then a Christian and the other a Muslim name. Religious, communal and class consciousness didn’t prevent parents from bringing their children to be initiated into the world of knowledge.

இதில் எல்லா மதக் குழந்தைகளும்  வந்திருக்கிறார்கள். எல்லாரும்  ’ஹரிஸ்ரீ’ எழுதித் தான் தொடங்கியிருக்கிறார்கள்..  மத சுவர்களை மீறி ஞானத்தைப் போற்றும்  இந்த மாதிரி நிகழ்ச்சியை வேண்டுமானால் பாராட்டலாம்..

ஆனால்,  வித்யாரம்பம் என்ற புனிதத்தை காப்பியடிக்கும்  கிறிஸ்தவ மதவெறி சடங்கு  கண்டனத்திற்குரியது என்பதே என் எண்ணம்.  நீங்கள் பாராட்டியதற்கு சொல்லும் நியாயம் ஏற்கத் தக்கதாக இல்லை.

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு,

நீங்கள் முன் வைப்பது கொஞ்சம் பதற்றம் கொண்ட, ஒற்றைவேகம் கொன்ட, ஒரு தேசிய உருவகம். மன்னிக்கவும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு சமூக மக்கள் மதவழிபாட்டு முறைகளுக்கு அப்பால் பண்பாட்டு ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஒரே திரள்தான் என உணரச்செய்யும் எதுவும் அவர்களுக்கு நலன்செய்யும், அவரக்ள் சேர்ந்து வாழ உதவும் என்பதே என் எண்ணம். சேர்ந்து வாழ்வதே முதல் நோக்கம் என்றால் ந்ன் சொல்வது எளிதில் புரியும். அடையாளத்தூய்மையை தக்கவைத்தால்போதும் சேர்ந்துவாழ்வது முக்கியமில்லை என்றால் இது புரியாது. எளிமையான இரு நிலைபாடுகள் மட்டுமே
ஜெ

 

அன்பின் ஜெ.மோ,

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?

இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது குறித்து நான் எழுதியிருப்பதைப் பாருங்கள்,  அதில் அடையாளத் தூய்மை பற்றிய கருத்தாக்கம் எங்கே உள்ளது?

நான் கிறிஸ்தவர்கள் வித்யாரம்பம் கொண்டாட வேண்டாம் என்றும் கூறவில்லையே… அதற்கு ஒரு கிறிஸ்தவக் கதையைக் கண்டுடித்து, திரித்து  பிரசாரம் செய்வதைத் தானே கண்டித்தேன் – இது போன்ற சின்னக் கட்டுக் கதைகள் பின்னர் பூதாகாரம் எடுத்து  புனித தோமையர் விவகாரம் போன்று ஆகிவிடும் சாத்தியம் உள்ளது – அதனாலேயே அதனை எதிர்க்கிறேன்.

அந்த எக்ஸ்பிரஸ் கட்டுரையைப் பாருங்கள், அதில் எல்லா மத மக்களும் ஒன்று கூடி விஜயதசமியை அதன் இயல்பைத் திரிக்காமல் கொண்டாடியிருக்கிறார்களே..  ”பண்பாட்டு ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஒரே திரள்தான் என உணரச்செய்ய” உகந்த வழி அதுதான் இல்லையா?

அன்புடன்,
ஜடாயு

 

அன்பின் ஜெயமோகன்,

தாங்கள் அண்மையில் எழுதியிருந்த விஜயதசமி-எழுத்து கூதாஸா கண்டேன். சமண-பௌத்த-வேத மரபுகளின் சடங்கு-சம்பிரதாய-தெய்வ கொடுக்கல் வாங்கல்களையும் கிறிஸ்தவ நிறுவனம் நடத்தும் பாரத சடங்குகளின் கிறிஸ்தவமயமாக்கலையும் ஒன்றாக கருத முடியாது என்பதுதான் உண்மை.

 

 

இதில் இரண்டு வேறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. ஆங்காங்கே சைவ-சமண, சமண-பௌத்த , சைவ-வைணவ மோதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், சமண மற்றும் பௌத்தத்தின் சில மிக உன்னதமான உச்சங்கள் வைதீக மரபு அரசர்களால் உருவாக்கப்பட்டவை. எல்லோரா குடைவரைகோவில்கள், அஜந்தா, நாலந்தா பல்கலைக்கழகம் என. ஏனெனில் இவற்றுக்கிடையே ஒருவித மரபார்ந்த ஒற்றுமை இருந்தது. எனவே இந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிர்த்தன்மை இருந்தது. அது நிறுவன ரீதியாக மேலிருந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டு மக்கள் மீது பிரச்சார உக்தியாக திணிக்கப்படவில்லை. (அத்தகைய போக்குகள் இருந்திருக்கலாம் ஆனால் அது மையத்தன்மை கொண்டவை அல்ல)

 

 

ஆனால் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை இறையியலும் நிறுவன இயற்கையும் இத்தகைய உள்ளார்ந்த பரிணாமத்தை -மக்கள் பண்பாட்டு பரிமாண வளர்ச்சியிலும் சரி, தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சியிலும் சரி- எடுத்துக்கொள்ளும் தன்மைக்கு புறம்பானவை. புகழ் பெற்ற சயின்ஸ் இதழில் லின் வைட் (ஜூனியர்) என்பவர் எழுதிய “நமது சூழலியல் பிரச்சனைகளின் வரலாற்று வேர்” எனும் கட்டுரையில் கிறிஸ்தவம் பாகனிய சடங்குகளை உள்ளிழுத்த போது நிகழ்ந்த ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிப்பிடுகிறார். பாகனிய தெய்வங்கள் தன்னளவில் முழுமை பெற்று விளங்கின. ஆனால் கிறிஸ்தவத்துக்குள் உள்ளிழுத்துக்கொள்ளப்படும் போது அவை தன் முழுமைத்தன்மையை இழந்து வானில் உறையும் தந்தை தெய்வத்துக்கு கீழே இருக்கும் சிறு இறைத்தூதராகவோ புனிதராகவோ மாற்றப்பட்டன.

 

 

நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்ச்சிகளில் இதே கீழ்மைப்படுத்தும் தன்மை மிக தெளிவாகக் காட்டப்படுகிறது. நமது மரபில் முழுமையான பிரம்மத்துக்கு வடிவு கொடுக்கப்பட்ட பெண் தெய்வங்களுக்கு இணையாக வைக்கப்படுவது புனித செபாஸ்டியனும் புனித பவுலும். மகாசிவராத்திரிக்கு வக்கீஸ் கூமந்தலா சொன்ன விளக்கம் தெய்வநாயகத்துக்கே மயிர் கூச்செறிய செய்யும். இந்த பண்பாட்டு-அபகரிப்புக்கு இரண்டு பயன்கள் இருக்கின்றன. இது நம் பண்பாட்டிலிருந்து அதன் செழுமையிலிருந்து அன்னியப்பட்டதாக உணரும் கிறிஸ்தவர்களுக்கு வடிகாலாக இருக்கும். (ஆனால் கத்தோலிக்க சபை அந்த அன்னியப்படுதலைக் குறித்து பெரிதாக கவலைப்பட்டதில்லை.) இரண்டாவதாக நம் பண்பாட்டின் அம்சங்களை கிறிஸ்தவத்திலிருந்து வந்ததாக பிரச்சாரம் செய்யும் பெரும் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.

 

 

அண்மைக்காலமாக மிக அதிக அளவில் விற்கப்படும் கிறிஸ்தவ பிரச்சார இலக்கியங்களில் வேதங்கள் உபநிடதங்களில் ஏசுவை கண்டுபிடிக்கும் முயற்சி கன ஜோராக நடைபெற்று வருகிறது. உதாரணமாக 2002 முதல் 2009 க்குள் 1,40,000 பிரதிகள் விற்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார இலக்கியத்திலிருந்து ஒரு பகுதியை தருகிறேன்:
எந்த தெய்வம் மனிதனுடைய பாவங்களைப் போக்கும்படியாக தன்னை இரத்தபலியாக கொடுத்தது என அவர் வேதங்களை தேடி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த போது சாம வேதத்தில் காணப்பட்ட ஒரு மந்திரம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது – லிவ்ஹ்யா கோப்தாராம் மஹக்யவ்வத்தினா கொரியன்த்தி ஹவ்யாயான பரியதாசீன்அதாவது அவதாரம் எடுக்கப் போகிறவர் ஒரு கன்னியின் வயிற்றில் பசுத்தொட்டிலில் பிறப்பார் என சாமவேதம் சாட்சி சொல்கிறது.”

 

இந்த ரீதியாக 108 பக்கங்கள் செல்கிறது இந்த பிரச்சார புத்தகம். இந்த பிரச்சார ஒளிநாடா 76,000 பிரதிகள் விற்பனையாகிறது. மகாசிவராத்திரி மிஸிகாராத்திரி யாக்குவது இதே ஏமாற்றுவேலையின் மற்றொரு பகுதிதானே. இனி எப்படி மிஸிகாராத்திரி மகாசிவராத்திரியாக இந்த அஞ்ஞானிகளால் மாற்றப்பட்டது என்பதில் ஆரிய-பார்ப்பன தந்திரம் தானே சைத்தானாகக் காட்டப்படும்? பெப்ஸி கோலா விற்பனைக்கு பரதநாட்டியத்தை பயன்படுத்துவதின் theological equivalents தான் இந்த பண்பாட்டு அபகரிப்புகள். ஒரு இறையியல் ஏகாதிபத்திய உக்தி,

 

 

இந்த உண்மையை உணர மிக எளிய வழி உண்மையான ஆன்மிக இணைப்பை குறித்து பேசுபவர்களை இதே சர்ச் என்ன செய்கிறது என பார்ப்பதுதான். ஆண்டனி டி மெல்லாவுக்கு நிகழ்ந்தது தெரிந்ததது தானே. ஆனால் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களிலிருந்தே வெளியேற்றப்பட்டு சிவன் கோவில் முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு வீழ்ந்து கிடந்த கத்தோலிக்க இறையியலாளர்கள் குறித்து அதிகமாக வெளியே தெரியாது. ஆனால் இவர்கள் நம் நினைவு கூர்தலுக்கும் உண்மையான ஆன்மிக உறவாடல்களுக்கும் உரியவர்கள். என்றாலும் இவர்கள் பேசப்பட மாட்டார்கள். வர்க்கீஸ் கூமந்தல்லாக்களே நம் ஊடக ஒளி வட்டங்கள் சோபிக்க நம் முன் நிறுத்தப்படுவார்கள்.

அரவிந்தன் நீலகண்டன்

 

 

அரவிந்தன்,

இந்த விஷயத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களை நான் திட்டவட்டமாக ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

1, இன்று பல்வேறு திரிப்புகளுடன் சொல்லப்படும் மதமாற்ற பிரச்சாரத்துடன் சிரியன் கிறித்தவர்களை தொடர்புபடுத்த முடியாது. அவர்களுக்கு அந்த திடாம் ஏதும் இல்லை.

2. அவர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்தியப் பண்பாட்டு மனநிலைகளை தங்கள் மத நம்பிக்கைக்குள் கொன்டுவந்தாகவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. குத்துவிளக்கு வரை அவ்வாறு உள்ளே சென்றதுதான்.

3. எத ஒரு மதமும் அதன் நம்பிக்கைக் கட்டுமானத்தின் உள்ளே நின்றபடித்தான் புதிய விஷயங்களை எடுத்துக்கொள்ளும். அந்த கட்டுமானத்தை அது உதறவேண்டும் என்றால் அது தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்றே பொருள்.

4. சிரியன் கிறித்தவர்களில் இந்து பேரறிஞர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம் புறக்கணிக்கப்படவோ அழியவோ இல்லை. தங்கள் மதத்துக்குள்தான் வசதியாக வாழ்ந்தார்கள்.

5. இவாறு உருவாகும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை தொடர்ந்தே ஒரு பொதுவான தளம் உருவாக முடியும். ஐயத்தின் கசப்பின் ஆரம்பத்தை இதற்குக் கொடுப்பது ஆரோக்கியமல்ல.

ஜெ

 

அன்பின் ஜெயமோகன்,

சிரியன் கிறிஸ்தவர்கள் குறித்து நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினர் மலங்கரை கத்தோலிக்கர்களாக கத்தோலிக்க சர்ச் உள்ளிழுத்துக்கொண்டது. இது கத்தோலிக்க சர்ச்சின் ஒரு பகுதியே ஆகும். சிரியன் கிறிஸ்தவர்களுக்கும் ஐரோப்பிய நிறுவன கிறிஸ்தவத்துக்குமான மோதல்கள், விட்டுக்கொடுத்தல்கள் ஆகியவையும் சில நேரங்களில் கத்தோலிக்க சர்ச்சை விட மேலதிகமாகவே சென்று தாமஸ்-திராவிட கிறிஸ்தவத்தை பிரச்சாரம் செய்வதும் நடந்து வருகின்றன.

 

ஒரு உதாரணமாக இன்றைக்கு மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களில் அங்கு வழக்கமாக இருக்கும் சிலுவை எடுக்கப்பட்டு சென்னை பரங்கிமலையில் உள்ள தாமஸ் சிலுவை வைக்கப்படுகிறது.

 

 

சென்னையில் மலங்கரை சிரியன் கிறிஸ்தவர்கள் தாமஸின் உடல் மற்றும் தாமஸ் சர்ச்சை தங்களிடம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கலாம் என்கிற பிரச்சனை எழுந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் யார் மிக அதிகமாக மிக தீவிரமாக தாமஸ் கதையாடலை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதில் போட்டியும் எழலாம்.

 

நீங்கள் ஜான் சாமுவேலின் மாநாட்டு கட்டுரை சுருக்கங்களிலேயே பல சிரியன் கிறிஸ்தவர்களை காணலாம். கத்தோலிக்க சர்ச்சுடனான மோதலில் தங்களது பழமையைக் காட்ட ஒரு முயற்சியாக தாமஸ் கதையை சிரியன் கிறிஸ்தவர்கள் கையிலெடுத்தார்கள். இதனை கத்தோலிக்க சர்ச் கபளீகரம் செய்து அதனை ஒரு மதமாற்ற யுக்தியாக கையிலெடுத்துவிட்டது.

 

 

இந்நிலையில் மகாசிவராத்திரி என்பது மெஸியா ராத்திரிதான் என்று சொல்லும் ஆட்கள் விஜயதசமியை பவுலுக்கும் செபாஸ்டியனுக்கும் தொடர்பு படுத்ம் போது ஐயப்படாமல் இருப்பது எப்படி என்று நீங்களே சொல்லுங்கள், அதே நேரத்தில் குருட்டாம் போக்காக கிறிஸ்தவம் என்பதற்காகவே அதை எதிர்க்கவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்
அநீ

 

 

அன்புள்ள அரவிந்தன்,

இன்று கேரளத்திலும் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்குள் உருவாகி வரும் இந்திய நிராகரிப்புத் தீவிரப்போக்குகள் — உதாரணமாக பெந்தேகொஸ்தே சபை போன்றவை –  அம்மக்களை வாசலை உள்ளிருந்து சாத்திக்கொள்ளக்கூடியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட வஹாபிகள் இஸ்லாமியர்களை மாற்றுவதுபோலத்தான் இதுவும். அந்த போக்குக்கான மார்று என்பதே கிறித்தம மையவழிபாட்டையும் நம்பிக்கையும் மாற்றிக்கொள்ளாமல் பண்பாட்டு உள்வாங்கல்களாக நிகழும் இம்மாதிரியான போக்குகள். இவை பிறமதத்தினரிடம் தங்களை தக்கவைத்துக்கொண்டே ஒத்துப்போவதற்கான ஒரு வெளியை கிறித்தவர்களுக்கு அளிக்கின்றன. உரையாடலுக்கு இடமளிக்கின்றன. சூ·பிசம் இஸ்லாமுக்கு அலிப்பதும் இதையே.

இதற்கும் தீவிர கிறித்தவ வெறிக்கும் இடையே உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லை என்றால் அது வருத்தத்துக்குரியதே. உரையாடவருகிறாய் என்றால் முதலில் உன்னுடைய மதநம்பிக்கையை விட்டுவிட்டு வா என்பது ஒரு வகை ஆதிக்கப்போக்கு. கிறித்தவம் மட்டுமல்ல இன்றுள்ள சமணமும் பௌத்தமும் சீக்கியமதமும் கூட இவ்வாறுதான் உரையாடல்வெளியை உருவாக்கிக் கொள்கின்றன. உதாரணமாக பௌத்த மதத்தில் சிவனும் விஷ்ணுவும் புத்தரின் பரிவாரதேவதைகள்தான்.

கசப்புகள் இருபக்கமும் தாழிட்டுக்கொள்வதில்தான் சென்று முடியும். அதன் இழப்பு இந்த தேசத்துக்கே

ஜெ

 

அன்பின் ஜெயமோகன்,கேரளா உண்மையிலேயே விசித்திர பூமிதான்:
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-5117548,prtpage-1.cms

 

அநீ

 

அன்பின் ஜெயமோகன்,

நீங்கள் கூறிய விஷயங்களைக் குறித்து சிந்திக்கிறேன். சிவனும் விஷ்ணுவும் பரிவாரத்தேவதைகளாக்கப்பட்டதும் புத்தர் சமணத்தெய்வங்களும் ஹிந்து மரபுக்குள் ஈர்க்கப்பட்டதும் குறித்து கூறினீர்கள். உண்மைதான். இன்று அவை சமநிலை அடைந்துவிட்ட நிலையிலிருந்து நாம் பேசுகிறோம். ஆனால் இப்படி ஒன்றையொன்று மட்டம் தட்டும் நிலையில் விவாதமல்ல மோதல்களே ஏற்பட்டன.

 

இன்றைக்கும் சிவன் விஷ்ணுவின் உடலின் ஒரு பகுதி என்று சொல்லும் வைணவர்களையும் விஷ்ணுவை கீழான நிலையில் உள்ள சிறு தெய்வமாக காணும் சைவர்களையும் நாம் காண்கிறோம். அந்த நிலையை கடந்து வந்துள்ளோம். கிறிஸ்தவமும் இதை செய்துள்ளது. இன்னமும் கொடூரமாக. பாகன் தெய்வங்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாம் இதைச் செய்துள்ளது. மத்திய ஆசியாவில் பல பௌத்த பீடங்கள் சூஃபி தர்காக்களாக மாற்றப்பட்டன.

 

ஆனால் இன்றைக்கும் இதுதான் உரையாடலுக்கான வெளியா? ஏசுவை நாயன்மார்களில் ஒருவராக நாம் வைத்துக்கொள்ளலாமா? அல்லது சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் செயிண்ட் பவுலுக்கும் செயிண்ட் செபாஸ்டியனுக்குமான அந்தஸ்து கொடுத்து அவர்கள் வைத்துக்கொள்ளலாமா? ஒரு சிவன் கோவிலில் ஏசுவை நாயன்மார்களில் ஒருவராக நிறுத்தி வைத்தால் அது மத உரையாடலுக்கு வழி வகுக்குமா அல்லது மதக்கலவரங்களுக்கா?

 

அல்லது ஞான கிறிஸ்தவ கோவில் (Gnostic Temple of Jesus) என்று இந்துக்களில் ஒரு சாரார் கட்டி அதில் மகதலேன் அம்பா -சமேத-நாசரேதீசன் என கழுதை வாகனராக ஏசுவை பிரதிஷ்டை செய்தால் மெசையாராத்திரி-மகாசிவராத்திரி ஆனதைக் காட்டிலும் வரலாற்று யதார்த்தம் கொண்டதாகக் கூட இருக்கும். ஆனால் அது உரையாடலுக்கான வெளியை உருவாக்கும் என நினைக்கிறீர்களா? வேறுவிதமான உரையாடலுக்கு நாம் இன்னும் வளரவேயில்லையா?

 

 

ஆண்டனி டி மெல்லாவை நினைவுகூரவும்.. நிறைந்த சிரிப்பும் ஞானமும் கொண்ட எளிமையான அந்த ஏசுசபை பாதிரியார் இறுதி வரையில் எத்தனையோ துன்பங்களுக்கு அப்பாலும் சபையிலிருந்து விலகவில்லை. இறுதிவரை கிறிஸ்தவ அடிப்படைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்தாம்.

 

ஏன் லாரி பேக்கர் இந்திய பாரம்பரிய கட்டுமானத்தை மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆலயங்களையே கட்டவில்லையா? அவரை நாம் போற்றி கொண்டாடவில்லையா? “நீங்கள் உங்கள் க்வாக்கர் நம்பிக்கைகளை விட்டால்தான் இந்திய பாரம்பரிய கட்டிடக்கலைகளை பயன்படுத்தலாம்” என்று எவரும் சொல்லவில்லையே…அவரை நாம் அனைத்து இந்தியர்களுக்கும் உதாரணமாக அல்லவா காண்கிறோம்.

 

ஜோசப் கர்னீலியஸ் குமாரப்பா கிறிஸ்தவத்தை கைவிட்டால்தான் காந்தியத்தை ஏற்கமுடியும் என எவரும் சொல்லவில்லையே. அவரை கிராம முன்னேற்றத்துக்கான மிகச்சிறந்த முன்னோடியாக

பேசுவார்கள்.

 

ஆனால் அவர்களையெல்லாம் மறுதலித்த அல்லது முன்னிறுத்தாத ஒரு நிறுவன மதம் பழைய பரிவார தேவதையாக்கும் செயல்முறை மூலம் மத நல்லிணக்கத்தையும் மத உரையாடலுக்கான வழியையும் வைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை இன்றைக்கு கடுமையான இந்திய எதிர்ப்புடன் வளர்ந்து வரும் பெந்தகோஸ்தே அலையில் இத்தகைய பண்பாட்டு முயற்சிகள் நல்லவை என சொல்கிறீர்கள். இருக்கலாம்.

 

அண்மையில் தசாவதாரம் என ஒரு கார்ட்டுன் படம் வெளியிடப்பட்டது அதில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக காட்டியதை நியோ பௌத்த அமைப்புகள் எதிர்த்தன. அதற்காக அந்த படத்தை தயாரித்தவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். அகிம்சை சக்கரவர்த்தி அசோகர் ஜைனருக்கு பணிவிடை செய்பவராக புத்தரை காட்டியதற்காக ஜைன துறவிகளின் தலைக்கு இத்தனை பணம் என தலைவாங்கிய வரலாற்றை பெருமையுடன் தெரிவிக்கும் திவ்யவதனா எனும் பழமையான பௌத்த பௌராணீக நூல்.

 

நாம் இந்த இறையியல்-அரசியல் சித்து விளையாட்டுக்களை தாண்டிய ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்துவது அல்லவா நல்லது? அதற்கான இயல்பான இத்தகைய பின்விளைவுகளை உள்ளடக்காத வெளி கிறிஸ்தவ இறையியலில் இல்லை என நினைக்கிறீர்களா? நான் அவ்வாறு கருதவில்லை. அல்லது பொதுப்புலத்தில் இதுதான் இந்திய மறுப்பு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திலிருந்து சிரியன் கிறிஸ்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நல்ல உபாயம் மேலும் நல்ல முதல்படி என நினைக்கிறீர்களா? இருக்கலாம்.

 

இறுதியாக என்னுடைய கருத்துகள் வெறுப்பையோ நம்பிக்கையின்மையையோ அடிப்படையாக முன்வைக்கவில்லை. நேர்மையான உரையாடலையும் பண்பாட்டு பகிர்வையுமே கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்நோக்குகிறது என்கிற குறைந்தபட்ச நம்பிக்கை சலுகையை எனக்கு வழங்குவீர்கள் என கருதுகிறேன். இவை என்னுடைய அச்சங்கள், ஐயங்கள்…இன்றைய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ள நியாயமான எச்சரிக்கை உணர்வே என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 

அரவிந்தன் நீலகண்டன்

*****

மதிப்பிற்குரிய ஜெ,

அமாவாசை உபவாச ஜெபக்கூட்டங்கள் அனுசரிக்கப் படுவதும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்போடு
ராஜசுந்தரராஜன்

அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்

எதையாவது செய்து எல்லாரும் ஒரு கும்பல்தான் என்று உணர்ந்து சண்டைபோடாமல் இருந்தால் சரி
ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் கட்டுரைகளில் பலசமயம் மிஷனரிகள் மீது நியயமற்ற கசப்பை வெளிப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுவதுண்டு.

ஆனால் இந்த ‘நகைச்சுவையை’ வாசித்த பிற்பாடு நான் சொல்லிழந்து போய்விட்டேன். எங்கள் பிஷப்புகளுக்கும் பாதிரிமார்களுக்கும் வரலாற்றுணர்வே இல்லாமல் போய்விட்டனவா என்ன? 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்தேன். மயிலை ஆர்ச் பிஷப் அருளப்பா காலத்தில் ஒரு மோசடிக்காரர் அறிஞராக வேடம் போட்டுப்போய் திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று நிருபிப்பதாகச் சொல்லி பெரும் பணாம் பெற்றுச்சென்றார்

இவ்வாறு தங்களை வேடிக்கைக்கு ஆளாக்குவதன் மூலம் கிறித்தவ மதத்தலைவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள்?

jas diaz
அன்புள்ள jas diaz,

1. நான் மிஷனரிகள் மீது கசப்பு ஏதும் கொண்டவனல்ல. நான் எழுதும் எந்த ஒரு வரலாற்றுச் சித்திரத்திலும் அவர்களின் ஆரம்பகாலப்பெரும்பணியை பாராட்டுடன் குறிப்பிடாமல் மேலே சென்றதே இல்லை. ஒரு சிறு குறிப்பில்கூட.தாவர்கள் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் ஆற்றிய சேவைகள், இங்கே சமூகப்படிநிலைகளில் கீழே கிடந்த மக்களை அவர்கள் கைகொடுத்து ஏற்றிய விதம் இரண்டும் வரலாற்றின் பொன்னேடுகள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஆனால் மறுபக்கம் அவர்கள் இங்குள்ள பண்பாட்டையும் வரலாற்றையும் தங்கள் இனமேட்டிமைவாதம் மற்றும் மதவாத நோக்கிலேயே எழுதினார்கள். அவற்றை நம் வரலாற்றாய்வுக்கான நேரடியான ஆதாரங்களாகக் கொள்ளக் கூடாது, இதுவே நான் சொல்வது.

இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. கிறித்தவத்தன்மை கொண்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ , பிரேஸில் போன்ற நாடுகளில்கூட மிஷனரிகளின் எதிர்மறைக்கூறுகள் பலமடங்கு அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நான் ஆஸ்திரேலியா அமெரிக்கா இருநாடுகளிலும் செய்த பயணங்களில் அங்கே உள்ள பழங்குடிப் பண்பாடு குறித்த எந்த ஒரு ஆவணப்பதிவிலும், அருங்காட்சியகத்தில் உள்ள சிறிய குறிப்புகளில்கூட, அம்மக்களைப் பற்றி மிஷனரிகள் செய்த பதிவுகளில் உள்ள முன்நோக்கம் மற்றும் இழிவுபடுத்தும் தன்மையை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு மாற்றாக உண்மையை குறித்து வைத்திருப்பதைக் கண்டேன்.  சில அருங்காட்சியகங்களில் ஓர் எச்சரிக்கை போல மிஷனரிகளின் கண்ணோட்டத்தில் உள்ள பிழைகளை தனியாகவே எழுதி வைத்திருக்கிறார்கள். பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் நாம் மிஷனரிகளை அவர்களின் சேவையைக் கொண்டே பார்க்கிறோம். நன்றி என்ற அம்சமே மேலோங்கி இருக்கிறது. அது இந்தியப் பண்பாட்டுக்கு உகந்ததுமாகும். ஆனால் வரலாற்றை ஆராயும்போது அது மேலோங்கியிருக்கக் கூடாது. அங்கே உண்மைக்கான தேட்டமே மேலோங்கியிருக்க வேண்டும். இதுவே என் தரப்பு.இது என் தரப்பு மட்டுமல்ல. விவேகானந்தர், காந்தி, எம்.என்.ராய், அம்பேத்கார், நேரு அனைவருமே இந்நிலைபாட்டையே எடுத்திருக்கிறார்கள். விரிவாக எழுதியும் இருக்கிறார்கள்.

 

2. சிரியன் கிறித்தவர்கள் மிஷனரிகள் அல்ல. அவர்கள் ஆயிரம் வருடப்பண்பாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஒரு கிறித்தவ மரபினர். அவர்கள் நெடுங்காலமாக இந்தியப் பண்பாட்டுக்கூறுகளை உள்ளிழுத்துக்கொண்டு, அதேசமயம் தங்கள் மத அடையாளத்தை இழக்காமல், இங்கே வாழ்கிறார்கள். இந்த இயல்பு காரணமாகத்தான் அவர்களுக்கும் பிறருக்கும் இடையே மனக்கசப்புகளோ மோதல்களோ இன்றுவரை உருவானதில்லை.

3. கிறித்தவ மதப்பரப்பு நோக்கத்துடன் செய்யப்படும் மோசடிகளை இதனுடன் சம்பந்தப்படுத்தலாகாது. அருளப்பா அவர்களின் முயற்சியைப் பற்றிச் சொன்னீர்கள். இப்போது அதே மயிலை சாந்தோம் சபை தெய்வநாயகம் என்பவரின் முயற்சியுடன் மேலும் விரிவான மோசடிகளை அரங்கேற்றி வருவது உங்களுக்கும் தெரிந்திருக்கும்

இணைப்பு

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்
ஜெ

முந்தைய கட்டுரைவாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி
அடுத்த கட்டுரைகாந்தி என்ற பனியா – 2