(இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
(இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -ஜெயமோகன். யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 30 /2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை ௮6. விலை. ரூ65)
ஏற்கனவே நாவல் இலக்கிய வகையைப்பற்றியும் நவீனத்துவத்தைப்பற்றியும் வாசகர்களின் புரிதல் விரிவடையும்பொருட்டு எளிய அறிமுக நூல்களை எழுதிய ஜெயமோகன் இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்களைப்பற்றிய அறிமுக நூலை இப்போது வழங்கியுள்ளார். விஷ்ணுபுரம் என்னும் தன் நாவலில் நிகழும் விவாதப்பகுதியில் இத்தரிசனங்களைப்பற்றிய அறிமுகத்தை இவர் ஏற்கனவே தந்திருந்தாலும், அந்த அறிமுகம் நாவலின் கதைச்சூழலுக்கும் பாத்திரங்களின் எண்ணப்போக்குக்கும் பொருந்துகிறவகையில் சுருக்கமான அளவிலேயே இடம்பெற்றிருந்தது. அவை அனைத்தும் இந்த அறிமுக நூலில் ஒன்றையடுத்து ஒன்று என்கிற பாங்கில் தெளிவாகவும் ஊக்கத்துடன் படிக்கத்துாண்டும் வகையிலும் அழகான உவமை நயங்களுடன் செறிவான வகையில் விரிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
எந்த மொழியிலும் எந்தத் துறையிலும் எளிய அறிமுக நூல்கள் முக்கியமானவை. எந்தச்சிக்கலான பகுதியையும் பதற்றமின்றி பசுமரத்தாணியைப்போலப் பதியவைக்கும் ஓர் ஆசிரியரின் கற்பித்தலால் எந்தக் கருத்தாக்கத்தையும் வாசிப்பவர்களின் மனத்தில் பதிய வைத்துவிட முடியும். கற்பிப்பவர்களின் ஆழ்ந்த தெளிவும் அக்கறையும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இத்தகு அறிமுகங்களால் எல்லாருடைய மனங்களிலும் ஆர்வம் ஒருசிறு பொறியாக முதலில் விழுகிறது. பிறகு அவரவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் இயல்புக்கும் வேகத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி அப்பொறி மனமெங்கும் பரவி நிறைகிறது. சொல்லித்தரப்பட்ட விதத்தில் மட்டுமல்ல, முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணம் செய்வதற்கும் கூட இந்த அடிப்படை விளக்கங்களும் புரிதல்களும் தேவைப்படுகின்றன.
ஞானம் என்பதையும் ஞானமரபு என்பதையும் மதச்சடங்குகளோடும் நம்பிக்கைகளோடும் சேர்த்துப் புரிந்துகொள்ளச் செய்யப்படும் முயற்சிகளை இந்த நுால் தொடக்கத்திலேயே தகர்க்கிறது. ஞானம் என்பது ஓர் அறிவுப்பயணம். ஒரு கேள்விக்கான விடையைத் தேடி அலையும் வேகம். தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக்கொள்ளப்பட்ட கேள்விகளையும் கண்டடைந்த விடைகளையும் மீண்டும் மீண்டும் தொகுத்து வைத்துக்கொள்கிறது மனித நாகரிகம். இந்த வினா விடைத்தொகுப்பு எப்போதும் முழுமையான ஒன்றல்ல. காலந்தோறும் வினாவின் சிக்கல்கள் புதிய பரிமாணங்களுடன் சவால்களை முன்வைத்தபடி இருக்கின்றன. விடைகளின் பரப்பளவும் வேறுபடுகின்றன. மூடிவைக்கப்பட்ட சீட்டுக்கட்டைக் கலைத்துத் தேவையான சீட்டுக்கு அலைபாய்கிற ஆட்டக்காரனைப்போல ஆயத்த விடைத்தொகுப்புகளைக் கலைத்துப் போட்டு விடைகளுக்காக அலைபாய்கிறது ஒவ்வொரு தலைமுறையும். ஒரு சங்கப் பாடல் வரிக்கு இன்றைய வாழ்க்கைக்குப் பொருத்தமான உரையைச்சொல்லி, அந்த வரியை நவீனகாலத்துக் கவிதையாக மாற்றிவிடுவதைப்போல ஞானப்பயணத்தில் கண்டடைந்த ஒரு பதிலை விரித்து வளர்த்தெடுக்கும்போது கேள்வியும் பதிலும் நவீனமடைகின்றன.
ஞானமரபு பழைமை சார்ந்த ஒன்றல்ல. அப்படிப்பட்ட ஓர் எண்ணம் எழ நம் அறியாமையே காரணம். கண்ணுக்குத் தெரியாத அல்லது நாம் ஒதுக்கியும் ஒதுங்கியும் நடக்கிற ஓர் இயக்கத்தின் முன் நம்மை அழைத்துச்சென்று நிறுத்துகிறார் ஜெயமோகன். இக்கேள்விகளுடனும் விடைகளுடனும் நம்மால் உரையாட முடியும். நம் அனுபவங்களின் பலத்தோடும் அறிவின் தெளிவோடும் நம் சூழலுக்கும் பொருந்தும்வண்ணம் அந்த உரையாடலை மேலும் செழுமையடையச் செய்யமுடியும். அப்படி நிகழவேண்டும் என்பதே ஜெயமோகனுடைய ஆவலாகத் தென்படுகிறது.
நுாலில் உபநிடதங்கள் பற்றி ஜெயமோகன் சுருக்கமாக முன்வைக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை. ஒரு கவிதையை வாசித்த பரவசத்தையும் மலர்ச்சியையும் முன்வைப்பதைப்போல உபநிடத வாசிப்பு அனுபவத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன்.
எங்கும் எரியும் தீ ஒன்றேதான்
எங்கும் ஒளிரும் சூரியன் ஒன்றேதான்
இவற்றையெல்லாம் ஒளிரவைக்கும் உஷஸ் ஒன்றுதான்
அந்த ஒன்றே இதெல்லாம்
இது ரிக் வேத வரிகளிலிருந்து ஜெயமோகன் முன்வைக்கிற ஓர் எடுத்துக்காட்டு. ரிக்வேத வரி என்று சொல்லாவிட்டால் இவற்றை நகுலன் அல்லது விக்கிரமாதித்யன் எழுதிய கவிதைவரிகளாகத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இப்பகுதியில் சில ஆப்தவாக்கியங்களைத் தொகுத்து முன்வைக்கிறார் ஜெயமோகன்.
1. நேதி நேதி நேதி (இவையல்ல, இவையல்ல, இவையல்ல)
2. பிரக்ஞானம் பிஹ்ம (பிரக்ஞையே பிரம்மம்)
3. தத்துவமஸி ( அது நீயேதான் )
4. அகம் பிரம்மாஸ்மி ( நானே பிரம்மம் )
5. ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் ( இவற்றிலெல்லாம் இறைவன் உறைகிறான் )
செய்தித்தாளில் படிக்க நேர்கிற தலைப்புச் செய்திகளைப்போல அல்லது கணக்குத் தேர்வுக்குத் தயாரிக்கும் மாணவன் கடைசிநேரப் பார்வைக்குத் தயார்செய்த சூத்திரத்தொகுப்பைப்போல இவை காணப்படுகின்றன. முதல் தோற்றத்துக்கு அப்படித்தான் புலப்படுகின்றன. ஆனால் ஜெயமோகன் இந்த வரிகளிடையேயும் ஒரு பயணத்தைக் கண்டடைந்து அதை நம்மிடம் விவரிக்கும்போது உண்மையில் மனம் சிலிர்க்கிறது. முதல் வாக்கியத்தில் நாம் கண்டறியும் அனைத்தையும் இவை உண்மையல்ல என்று உடனடியாக மறுத்து ஒதுக்கும் நம் பிரக்ஞை வெளிப்படுகிறது. அடுத்த வரியில் நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்கிற தெளிவு பிறந்துவிட்டதை உணர்கிறோம். நமது அறியும் எல்லைக்கு அப்பால் உள்ள எதையுமே நாம் அறிவதில்லை என்று அறிவதையும் உணர்த்துகிறது. பிறகு பிரக்ஞையே முழுமுதல் கடவுள் என்று அறிகிறது. இதன் தொடர்ச்சியாக அறிவதும் அறியப்படும் பொருளும் அறிவனும் வேறுவேறல்ல என்ற அறிதல் எழுகிறது. அது நீயே என்னும் பிரக்ஞையும் எழுகிறது. தொடர்ந்து நானே பிரபஞ்சம், நானே பிரம்மம் என்ற முழுமையுணர்வு எழுகிறது. இறுதியில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும் நாமும் பிரம்மமே என்கிற எண்ணம் உதிக்கிறது. வாக்கியங்களிடையே எண்ணங்களை நிரப்பி அவற்றில் பொங்கியெழும் பேரருவி, சீறிப்பாயும் சமுத்திரம், இதமான விழும் அருவி எனப் பலவிதமான சித்திரங்களை மாற்றிமாற்றித் தோன்றவைக்கிற ஜெயமோகனுடைய ஆற்றல் பாராட்டுக்குரியது.
தோற்றத்துக்கு எளியனவாகக் காணப்படுகிற வரிகளைத் தர்க்கத்தோடும் கற்பனையோடும் இணைக்கும்போது, அவ்வரிகள் ஒரு புனைகதைக்குரிய ஈர்ப்பைக் கொடுக்கக்கூடியதாக மாறிவிடுகின்றன. எத்துறையின் அழகையும் அறிவதற்கு நமக்கு அந்தந்த துறைசார்ந்த தர்க்கமுறையின் அறிமுகமும் கொஞ்சம் கற்பனையும் அவசியம். ஞானமரபைப் புரிந்துகொள்ள நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியவையும் இந்தத் தர்க்க ஒருமையும் கற்பனையும். ஆறு தரிசனங்களின் அடிப்படைகளையும் அவற்றையொட்டி நடந்த விவாதங்களையும் அறிமுகப்படுத்தும் எல்லாக்கட்டுரைகளிலும் இந்தத் தர்க்க ஒழுங்கும் கற்பனையும் ஜெயமோகனிடம் வெளிப்பட்டபடி இருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையின் அமைப்புமுறையும் வசீகரம் குன்றாத ஓர் ஆய்வுக்கட்டுரையைப்போல உள்ளது. முதலில் சில வரிகளால் மட்டுமேயான சிறிய அறிமுகம், அது மனத்தில் ஆழமாகப் பதியும்பொருட்டுச் சில எடுத்துக்காட்டுகள், பிறகு அது சுட்டும் காட்சி, சுட்ட விழையும் உண்மை, இந்த உண்மைப்புள்ளிக்கு நெருக்கமாக உள்ள மற்ற உண்மைகள், அவற்றுக்கிடையே நிகழ்ந்த உரையாடல், இறுதியில் சொல்லப்பட்ட அனைத்தையும் தொகுத்துச் சாரப்படுத்துதல், சாரத்தின் குணம் எக்கணத்திலும் மிதந்தபடி இருக்கும் வகையில் எளிய உருவகமாகவோ உவமையாகவோ முன்வைத்து முடித்தல். இந்த வெளித்தோற்ற அமைப்புடன் வாசிப்பவர்களுக்கு எந்தச் சிக்கலும் எழாதவகையில் பல நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தபடி எல்லாக் கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன. இரண்டு பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். தத்துவத்தைப்பற்றிய எளிய அறிமுகத்தை முன்னுரையாகவும் தரிசனங்களின் அடிப்படைகள், தரிசனங்களின் பின்னணி, தரிசனங்களைப்பற்றிய அடிப்படைப்புரிதல்கள் என்கிற தலைப்புகளில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளையும் கொண்டது முதல் பகுதி. ஆறு தரிசனங்களைப்பற்றியும் தனித்தனியான அறிமுகத்தையும் விளக்கத்தையும் கொண்டது இரண்டாம் பகுதி.
விழிப்புற்ற மனம் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது என்பது ஒரு வாக்கியம். மனத்தை விழிப்படையச் செய்வதன் அணுகுமுறைகள் வேறுபடுகின்றன. துாய நிலைக்கு மனத்தை உயர்த்திச்செல்வதன் மூலம் விழிப்படைய இயலும் என நம்புகிறது ஒரு போக்கு. இயற்கையோடு இயற்கையாக இரண்டறக் கலப்பதன் வழியாக விழிப்படைய இயலும் என நம்புகிறது மற்றொரு போக்கு. இன்னும் பல அணுகுமுறைகள். தரிசனங்களின் மையத்தை நோக்கிச்செல்வது நல்ல நிலவொளியில் மேற்கொண்ட நீச்சல்பயணத்தைப்போல இனிய அனுபவத்தைத் தருகிறது.
சாங்கிய மரபைப்பற்றிய பகுதியை நுாலின் முக்கியமான பகுதியாகச் சொல்லலாம். நம் கண்முன் உள்ள எல்லாவற்றையும் இயற்கையாகக் காணும் சாங்கியத் தரிசனத்தின் சாரமே, அதன் மீது நம் ஈடுபாடு வளர்வதற்குக் காரணமாகும். ஓரிடத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ விளக்கங்களில் படிந்துள்ள சாங்கிய மரபின் சாயல்களை அடையாளம் காட்டுகிறார் ஜெயமோகன். பல நவீன சிந்தனைகளிலும் படிந்துள்ள சாங்கிய மரபின் எண்ணங்களை உடனே நம் மனம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள இது ஒரு துாண்டுகோலாக இருக்கிறது. இயற்கையிலும் மனிதர்களிடையேயும் படிந்துள்ள சத்துவ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களை மூன்று தட்டுகள் கொண்ட தராசாக உருவகப்படுத்திப் பார்ப்பது ஒரு கவிதையை வாசிப்பதுபோல உள்ளது. அத்தட்டுகள் சதாகாலமும் ஆடியபடியே உள்ளன. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு தட்டு மேலெழுகிறது. தொடர்ந்து இக்குணங்கள் ஒன்றோடொன்று மோதியபடியே உள்ளன. வாழ்க்கையின் பல கட்டங்களில் காணநேரும் காட்சிகளோடு இந்த உருவகத்தைப் பொருத்திப்பொருத்திப் பார்க்குந்தோறும் நம் அனுபவங்கள் விரிவடைந்தபடியே உள்ளன.
சாங்கிய மரபை அறிமுகப்படுத்தும் கட்டுரையைத் தொடர்ந்து மனத்தில் இடம்பிடிப்பவை யோகமரபைப்பற்றிய கட்டுரையும் நியாயமரபைப்பற்றிய கட்டுரையும். மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சியாக விளம்பரப்படுத்தப்பட்டு தட்டச்சு நிலையங்களையும் கணிப்பொறிப் பயிற்சி நிலையங்களையும் திறப்பதைப்போல தெருவுக்கு இரண்டு யோகப் பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆசனங்களும் மூச்சொழுங்கும் தியானமும் சாதாரண உடற்பயிற்சியாகக் கற்பதும் கற்பிப்பதும் நகரெங்கும் நடந்துவருகின்றன. பெயர் அட்டையை மாற்றி ஒட்டிப் பொருள்விற்பனையில் கருத்தைக் குவிக்கிற வணிகர்களைப்போல அமோகமாக விற்பனையாகும் ஒரு பண்டமாக யோகத்தை அதன் பயிற்சியாளர்கள் குறுக்கிவிட்டார்கள். அதைப் புரிந்துகொள்ளத் துணையாக நிற்கிறது ஜெயமோகனுடைய கட்டுரை. யோகத்தின் அடிப்படைக்கொள்கைகள், அவை உருவாகக் காரணங்கள், அதன் தரிசனம், பரணாமம், அதில் படிந்துள்ள தத்துவநிலை, யோகத்தைப் பயிலும் வழிமுறை, பயிற்சி வகைகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் சுருக்கமாகவும் கோர்வையாகவும் முன்வைக்கும் விதம் மனத்தில் ஆழமாகப் பதிகின்றது.
மரபின் கருத்தாக்க அடிப்படையில் நவீன சிந்தனைகளை எடைபோடுவதும் நவீன சிந்தனைச்சாதனங்கள் வழியாக மரபின் எண்ணங்களில் படிந்திருக்கும் சிடுக்குகளைப் புரிந்துகொள்வதும் என்கிற வகையில் கொடுக்கல் வாங்கல் கொண்ட ஒன்றாக அமைந்திருக்கிறது சிந்தனைத்துறை. அது அணுகத்தக்க ஒன்றுதான் என்கிற சகஜநிலையையும் நம்பிக்கையும் வாசகர்களிடையே உருவாக்குவதிலும் மிரட்சியையும் தயக்கத்தையும் பெருமளவு தகர்ப்பதிலும் இந்த நூல் வெற்றிபெற்றுள்ளது.
நூலை வாசித்ததும் ஆறுமரபுகளையும் ஆறு திரிகள் ஒளிரும் குத்துவிளக்காக உருவகிக்கிறது மனம். சூழ்ந்துள்ள அஞ்ஞான இருளுக்கிடையே ஒவ்வொரு ஒளிச்சுடரும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.