நூல் ஐந்து : மணிச்சங்கம்
[ 5 ]
விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை. முந்தையநாள் இரவு தொண்டை உலர்ந்து குரல் கம்மியதும் எழுந்து நீர் அருந்துவதற்குள்ளேயே சொற்கள் நிறைந்து தளும்பத்தொடங்கிவிட்டன. “ஏனென்றால் நீ சொல்வதையெல்லாம் நானும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீ உன் மனதால் அவற்றைக் கேட்கிறாய்” என்றான் விசித்திரவீரியன்.
பேச்சுநடுவே நிறுத்திக்கொண்டு “உண்மையிலேயே நான் பேசுவதிலிருந்து உங்கள் மனம் விலகவில்லையா? இல்லை கண்களால் நடிக்கிறீர்களா?” என்று கேட்டாள். விசித்திரவீரியன் புன்னகையுடன் “உன்னிடமல்ல, எவரிடமும் நான் இப்படித்தான் முழுமையாகத் திறந்துகொண்டு கேட்கிறேன்” என்றான். “வியப்புதான்…ஆண்களுக்கு பெண்கள் பேசுவதெல்லாம் பொருளற்ற சிறுமைகள் என்று படும் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “பெண்களுக்கும் ஆண்களின் பெரியவை எல்லாம் கூழாங்கற்களாகத்தானே தெரியும்?” என்றான் விசித்திரவீர்யன். கையால் வாய் பொத்தி “ஆம்” என அவள் நகைத்தாள்.
விசித்திரவீரியன் அவள் முகத்தை நோக்கி “உனக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.”
அம்பிகை வியப்புடன் “ஆம்” என்றாள். அவனருகே சரிந்து, “நீங்கள் ஏன் அப்படி இல்லை?” விசித்திரவீரியன் “நானா? நான் அப்படி பிறர்முன் வைக்க ஒரு விசித்திரவீரியனை உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்கான நேரமே எனக்கிருக்கவில்லை. நான் காட்டிலிருக்கும் சிறிய தடாகம். காற்றையும் நிழல்களையும் கவனிப்பவன். அவை இல்லாதபோது வானை” என்றான் .
அவனை நினைத்தபோது ஏன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்த ஆணே அல்ல. ஆனால் அவனைப்போல அவளுக்குள் இடம்பெற்ற ஓர் ஆணும் இல்லை. ஆணிடமல்ல, இன்னொரு மனித உயிரிடம்கூட அத்தனை நெருக்கம் தன்னுள் உருவாகுமென அவள் நினைத்திருக்கவில்லை. ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன் முன் நின்றிருந்தாள்.
விசித்திரவீரியன் வந்தபோது அவன் முற்றிலும் இன்னொருவன் போலிருந்தான். நடையில் ஒரு நிமிர்வும் துள்ளலும் இருப்பதுபோலத் தோன்றியது. உடைகள் சற்றுக் கலைந்தும் புழுதியுடனும் இருந்தன. “பயணத்தில் இருந்தா வருகிறீர்கள்?” என்று அம்பிகை கேட்டாள். “ஆம், ஒரு கேள்விக்கு விடைதேடிச் சென்றேன், கிடைத்தது” என்றான்.
அவள் மலர்ந்த முகத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “என்ன?” என்றான். அவள் விழிவிரிய நோக்கியபடி இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்று அவள் தலையைத் தட்டினான். அவள் தலையைப் பிடித்துக்கொண்டு “சென்ற இடத்தில் ஏதோ கந்தர்வன் வந்து அருளியிருக்கிறான் போலிருக்கிறதே?” என்றாள்.
“ஏன்?” என மீண்டும் கேட்டான். “அழகாக இருக்கிறீர்கள்…” சிரித்துக்கொண்டு விசித்திரவீரியன் வந்து அவளருகே அமர்ந்தான். அம்பிகை சிவந்த முகத்துடன் “உண்மை, என் ஆன்மாவிலிருந்து சொல்கிறேன். பார்க்கப்பார்க்க பேரழகாகத் தெரிகிறீர்கள்….மனிதனைப்போலவே இல்லை” என்றாள்.
விசித்திரவீரியன் சிரித்து “காதல் விழிகளால் உருவாக்கப்படுவது அழகு என்று சொல்வார்கள்” என்றான். “ஆம், நான் காதல்கொண்டுவிட்டேன்…அது எனக்கு நன்றாகவே தெரிகிறது” என்றாள் அம்பிகை. “கண்விழித்து எழுந்த முதல் எண்ணமே உங்களைப்பற்றித்தான். வேறெந்த எண்ணமும் அற்பமானவையாகத் தெரிகிறது. எதிலும் நினைவு நிற்கவேயில்லை…”
விசித்திரவீரியன் சால்வையை இருக்கையில் போட்டான். “திரும்பத்திரும்ப ஒரே சந்தர்ப்பங்கள்தான்… அந்த முதற்பெரும் வியாசனுக்கு புதியகதைகளே வருவதில்லை” என்றான். அம்பிகை “ஆம், சூதர்கள் இதையே மீண்டும் மீண்டும் பாடுவார்கள். பதினாறு வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்று அவை புத்தம் புதியவை, என்னைப்பற்றி மட்டுமே பாடுபவை என்று தோன்றுகின்றன…” என்றாள்.
அவன் மஞ்சத்தில் அமர்ந்தான். அவள் அவனருகே அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “இதையெல்லாம் எவரிடமாவது சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அம்பாலிகையிடம் சொல்லமுடியாது… அவளும் என் சகபத்தினி என நினைத்தாலே என் உடல் எரிகிறது… அந்த சூதப்பெண் சிவையையும் நான் சேர்க்கமாட்டேன். எந்தப்பெண்ணிடமும் உங்களைப்பற்றிச் சொன்னால் காதல் கொண்டுவிடுவாள்… ஆகவே சூதருடன் வந்த விறலியிடம் சொன்னேன். அவள் பெயர் சோணை. நன்றகாக் கனிந்த முதியவள். சிரிக்கும்போது கங்கையில் நீரலைகள் போல முகம் மலர்வதைக் கண்டேன்.”
“என்ன சொன்னாய் அவளிடம்?” என்றான் விசித்திரவீரியன். “எல்லாவற்றையும்… அவளைப்பார்த்தால் முன்னரே அனைத்தையும் அறிந்தவள் போலிருக்கிறாள்” என்றாள் அம்பிகை. “அவளிடம் சொன்னேன், நான் பீஷ்மரை நினைத்ததைப்பற்றி…”
விசித்திரவீரியன் சிரித்தான். “அதற்கு அந்த முதுவிறலி, இப்போது அவரை நினைத்தால் அருவருப்பாக இருக்குமே என்றாள். நான் ஆம் என்றேன். இறைவனின் சன்னிதியில் தலைப்பாகையும் வாளுமாக வந்து நிற்பவர் போலிருக்கிறார்…” அம்பிகை அச்சொற்களை இயல்பாக வந்தடைந்தாள். “நிமிர்ந்து தருக்கி நிற்கும் மனிதனைப்போல பொருளற்றவன் வேறில்லை” என்றாள்.
விசித்திரவீரியன் “சிலசமயம் குழந்தைகளும் பேருண்மைகளை சொல்லிவிடுகின்றன” என்றான். “நான் அதை வேறுவகையில் நினைத்துக்கொண்டேன். நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை.”
அம்பிகை “இதைப்பார்த்தீர்களா?” என்றாள். நீர்த்துளிபோல ஒரு வைரம் அவள் கழுத்திலிருந்த சங்கிலியில் தொங்கி மார்புகள் நடுவே இருந்தது. “ஒரே ஒரு நகைதான் அணிவேன் என்று சிவையிடம் சொன்னேன். அந்த ஒற்றை நகையில் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இருக்கவேண்டும். எந்த வண்ணம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அம்பாலிகை வெண்ணிறம் என்றாள். சிவை செந்நிறம் என்றாள். நான் நீலநிறத்தை எடுத்தேன். ஆனால் அதன்பின் இந்த நீர்த்துளிவைரத்தை எடுத்துக்கொண்டேன்.”
“கண்ணீர்த்துளி போலிருக்கிறது” என்றான். “ஆம், மனம் நெகிழ்ந்து துளிக்கும் ஒற்றைத்துளி என்றுதான் எனக்கும் பட்டது…” உவகையுடன் சொன்னாள். “இதை நீளமான சங்கிலியில் கோர்த்துத் தரும்படி சொன்னேன். இது என் ஆடைக்குள்தான் இருக்கவேண்டும். வேறு எவரும் இதைப்பார்க்கலாகாது.”
விசித்திரவீரியன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மலர்வனத்தில் சிக்கிய ஒற்றை வண்ணத்துப்பூச்சி போல அவள் ஒன்றிலும் அமராமல் படபடத்துப் பறந்துகொண்டிருந்தாள். “நான் எல்லாவற்றையும் சோணையிடம் சொன்னேன். உங்கள் உடல்நிலையைப்பற்றி…. அவள் எனக்கு சௌபநாட்டு சாவித்ரியின் ஒரு சிறிய சிலையைத் தந்தாள். தந்தத்தால் ஆன சிலை. அதை என் கையிலேயே வைத்திருக்கவேண்டும் என்றாள்” அம்பிகை தன் ஆடைக்குள் இருந்து அந்த சிறிய சிலையை எடுத்துக்காட்டினாள்.
“சாவித்ரியா?” என்றான் விசித்திரவீரியன். “சூதர்களின் பாட்டில் கேட்ட கதை…ஆனால் நினைவில் மீளவில்லை.” அம்பிகை பரபரப்புடன் “நான் சொல்கிறேன்” என்றாள். “சௌப நாடு அந்தக் காலத்தில் இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்ததாம். இன்னொரு நாட்டின் பெயர் மத்ரவதிதேசம். அங்குதான் சாவித்ரி தேவி பிறந்தாள்” என்று உற்சாகமாக ஆரம்பித்தாள்.
மத்ரநாட்டை ஆண்ட அஸ்வபதி என்னும் மன்னனுக்கும் அவன் மனைவி மாலதிக்கும் மைந்தர்களில்லை. அறுபது வயதாகியும் அரியணைக்கு குழந்தைகளில்லாததனால் மன்னன் அத்தனை தெய்வங்களையும் வேண்டினான். அவனுடைய விதியை வெல்ல தெய்வங்களாலும் முடியவில்லை. அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மாலதியுடன் காட்டுக்குச்சென்று அங்கே குடில்கட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்தான். பசுக்களை மேய்த்து அதைமட்டும் கொண்டே வாழ்பவர்கள் முற்பிறவியின் பாவங்களைக் கழுவுகிறார்கள்.
காலையின் முதல்பொற்கதிர் அரைக்கணம்கூட மண்ணில் நிற்பதில்லை. ஆயிரம் வண்ணங்கள் கொண்ட சூரியனுக்கு ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு பெயர், ஒரு தோற்றம். அவனுடைய ஒவ்வொரு பாவமும் ஒரு மகளாகப் பிறந்தன. பொன்வண்ணனாகிய சூரியனை சவிதா என்றனர் ரிஷிகள். அவனை காயத்ரியால் துதித்தனர். பொன்னிறமான சிந்தனைகளை மனதில் எழுப்பவேண்டுமென்று அவனிடம் பிரார்த்தனை செய்தனர். சவிதாவின் மகள் சாவித்ரி. அண்டவெளியில் உள்ள கோளங்களில் பூமியில் அவள் வாழ்வது அரைக்கணம் மட்டுமே. அந்தக்கணத்தில் அவளைப்பார்ப்பது எதுவானாலும் முழுமையடையும்.
ஒருநாள் காலை கணவன் எழுவதற்குள் எழுந்து சவிதம் என்ற அழகிய குளிர்ந்த தடாகத்தில் நீராடி அங்கே நின்ற தளிர்விட்ட மாமரத்தடியில் நின்று வணங்கிய மாலதி சாவித்ரியை கண்டாள். முளைவிட்ட புங்கமும், தளிர்விட்ட மாமரமும், பூவிட்ட கொன்றையும், காய்விட்ட செந்தென்னையும், கனிவிட்ட நெல்லியும், நெற்றான இலவமும் பொன்னிறத்தாளான சாவித்ரிக்கு பிரியமானவை. சாவித்ரி வந்து தொட்டதும் மாலதியின் உள்ளும் புறமும் ஒளியால் நிறைந்தன. மறுநாள் அவளறிந்தாள், அவளுக்குள் ஒரு கரு குடிகொண்டிருந்தது. அது பொன்னிறமான குழந்தையாகப் பிறந்ததும் அதற்கு சாவித்ரி என்று பெயரிட்டாள்.
கன்னிப்பருவமடைந்த சாவித்ரி பொன்னிறக்கூந்தலும் பொன்னிறக் கண்களும் கொண்டவளாக இருந்தாள். ஒளியைப்போலவே எங்கும் நிறைந்து பரவி தொட்டவற்றை எல்லாம் துலங்கச்செய்தாள். பொன்னிறக் குதிரைகளில் ஏறி காட்டில் அலைவதை அவள் விரும்பினாள். ஒருநாள் காட்டில் அவள் சத்யவானைக் கண்டாள். மெலிந்தவனாக துயருற்றவனாக இருந்த அவனை அவளுடைய தாய்மை அடையாளம் கண்டுகொண்டது. காயை கனியச்செய்யும் சூரியஒளிபோல அவள் அவனை அடைந்தாள்.
சௌபநாட்டு மன்னனாகிய தியமசேனரின் மகன் சத்யவான். தியமசேனர் முதுமையில் விழியிழந்தபோது அவரது தம்பியர் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அவரை காட்டுக்குத் துரத்தினர். காட்டில் வாழ்ந்த தியமசேனர் அங்கே சத்யவானை பெற்றெடுத்தார். வேட்டுவனைப்போலவே காட்டில் வளர்ந்த சத்யவானுக்கு அரசநெறியும் புராணங்களும் கலைகளும் தந்தையாலேயே கற்பிக்கப்பட்டன.
சத்யவானை சாவித்ரி ஒரு கொன்றை மரத்தடியில் சந்தித்தாள். கையில் கனிகளும் கிழங்குகளுமாக வந்த அவன் அவளைக் கண்டு திகைத்து நின்றான். அப்பகுதியே பொன்னொளி பெற்றதாகத் தோன்றியது. ஆணும் பெண்ணும் சந்திக்கும் தருணங்களை உருவாக்கும்போது பிரம்மன் மகிழ்ந்து தனக்குள் புன்னகை செய்துகொள்கிறான். அவன் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டான். அந்தக் கொன்றை காற்றிலாடி அவள்மேல் மலர்களைக் கொட்டியது. அவள் அவனைத் தொடர்ந்துசென்று அவன் யார் என்று கண்டுகொண்டாள்.
தியமசேனர் அவளுடைய குரலைக் கேட்டதுமே அவள் காதலை புரிந்துகொண்டார். சத்யவான் அவளுக்கேற்ற மணமகனல்ல என்றார். அவன் பிறந்ததுமே நீலம்பாரித்து உதடுகள் கறுத்து அசைவற்றுக்கிடந்தான். மருத்துவச்சி அவனைத்தூக்கி குலுக்கியபோதுதான் அழத்தொடங்கினான். அவனால் மரம் ஏறவோ விரைந்து ஓடவோ முடியாது என்பதை இளமையிலேயே கண்டு அவர் ஒரு மருத்துவரிடம் காட்டினார். மனிதனுக்குள் ஒரு புரவி இருக்கிறது என்றார் அந்த மருத்துவர். அதன் குளம்படிகளைக் கொண்டே மருத்துவர் நாடி பார்க்கிறார்கள். சத்யவானின் குதிரைக்கு மூன்றுகால்களே இருந்தன.
“இன்னும் ஒருவருடம்கூட அவன் உயிர்வாழமுடியாது பெண்ணே… அவனை நீ மறந்துவிடுவதே உன் குலத்துக்கு நல்லது” என்றார் தியமசேனர். ஆனால் “எது ஒன்றுக்காக உயிரைக் கொடுக்கமுடியுமோ அதற்காக மட்டுமே வாழ்வதே வாழ்க்கையின் இன்பம்” என்று சாவித்ரி சொன்னாள். அன்னையும் தந்தையும் குலகுருவும் சொன்னதை அவள் பொருட்படுத்தவில்லை. தியமசேனர் விலக்கியதை கருத்தில் கொள்ளவில்லை. சத்யவான் அஞ்சி விலகியதையும் எண்ணவில்லை. “நான் உன்னை விதவையாக்கிவிடுவேன் தேவி” என்றான் அவன். “அதற்குமுன் காதலால் என்னை மாமங்கலையாக்குவீர்கள்… அதுபோதும்” என்று அவள் சொன்னாள்.
கன்னியருக்கே உரிய மழலையில் விட்டு விட்டு சாவித்ரியின் கதையை சொல்லிக்கொண்டிருந்த அம்பிகை அந்த வரியைச் சொன்னபோது தொண்டை இடறி முகம் தாழ்த்திக்கொண்டாள். விசித்திரவீரியன் அவளைப்பார்த்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான். அவள் தன்கண்களை விரலால் அழுத்த விரலிடுக்குகள் வழியாக கண்ணீர் கசிந்தது.
பின்பு விடுபட்டு வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து “நான் கதைகேட்டு அழுதேன்” என்றாள். “தெரிகிறது…” என்றான் விசித்திரவீரியன். “நீயே ஒரு விறலியைப்போல கதை சொல்கிறாய்.” அம்பிகை புன்னகைசெய்து “இல்லை…நான் விறலி சொன்னதை நினைத்துக்கொள்கிறேன்….என்னால் சொல்லவே முடியவில்லை” என்றாள். “நான் விறலியையும் அவள் கதையைக் கேட்ட உன்னையும் சேர்த்தே கேட்கிறேன். சொல்” என்றான் விசித்திரவீரியன்.
சாவித்ரி சத்யவானை மணம்புரிந்துகொண்டாள். மத்ரநாட்டு இளவரசி கணவனுக்காக அந்த வனத்தில் வந்து விறகுவெட்டி வாழ ஆரம்பித்தாள். அவன் அறிந்த காட்டை அவள் பொன்னொளியால் நிறைத்தாள். அவள் தொட்டதும் வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் பூத்து மலர் பொழிந்தன. அவள் கால்பட்டதும் நீரோடைகள் பொன்னிற சர்ப்பங்கள்போல நெளிந்தன. அவள் விழிபார்த்ததும் கருங்குருவிகள் பொன்னிறச்சிறகுகள் பெற்றன. அவளுக்கு சேவை செய்வதற்காக அப்ஸரஸ்கள் பொன்வண்டுகளாக மாறி காட்டுக்குள் நிறைந்தனர்.
ஒருவருடம் கழித்து ஒருநாள் அவர்கள் காட்டில் இருக்கும்போது சத்யவான் படுத்திருந்த மரத்தின் அடியில் காது அடிபடும் ஒலியும் மூச்சொலியும் கேட்டு அவள் எழுந்து பார்த்தபோது அங்கே ஒரு காட்டெருமை நின்றிருந்ததைக் கண்டாள். அதன் பச்சைநிறமான ஒளிவிடும் கண்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. மெலிந்து வெளிறி பச்சைநரம்புகள் புடைத்த கழுத்தும் தோள்களுமாக, வாய்திறந்து மூச்சுவாங்கியபடி கிடந்த சத்யவானின் மூச்சு சீரடைவதையும் அவன் முகம் பொலிவுகொள்வதையும் கண்டாள். அவள் பார்த்திருக்கவே அவன் அழகும் இளமையும் ஒளியும் கொண்டவனானான். அவனிடம் அவள் எப்போதும் கண்டிராத வேகத்துடன் துள்ளி எழுந்து சிரித்தபடி அந்த காட்டெருமைமேல் ஏறிக்கொண்டான்.
பாய்ந்துசென்று சாவித்ரி அவனைத் தடுத்தாள். இருகைகளையும் விரித்து “எங்கே செல்கிறீர்கள்? என்னை விட்டுவிட்டுச் செல்கிறீர்களா?” ஏன்று கூவினாள். ஆனால் அவளை அவன் காணவே இல்லை. அவன் கண்கள் ஒளிபட்ட நீர்த்துளிகள் போல மின்னின. சிரித்தபடி “செல்க! செல்க!” என்று அவன் அந்த காட்டெருமையை ஊக்கினான். அது பாய்ந்து புதர்களைத் தாண்டி சேற்றுவெளியை மிதித்துக்கொண்டு காட்டுக்குள் சென்றது. சாவித்ரி அதன் வாலை இறுகப்பற்றிக்கொண்டாள். அவள் உடலில் முட்கள் கீறி குருதிவழிந்தபோதும், அவள் தலை பாறைகளில் மோதி சிராய்த்தபோதும் அந்தப்பிடியை அவள் விடவில்லை.
அந்த எருமை ஒரு கரிய மனிதனின் முன் சென்று நின்றது. கையில் இரும்பு உழலைத்தடியும் கயிறுமாக நின்ற அவன் காட்டெருமையை பிடித்து நிறுத்தினான். சத்யவானை சிரித்தமுகத்துடன் தழுவிக்கொண்டு திரும்பியபோதுதான் அவளைக் கண்டான். “பெண்ணே நீ யார்?” என்று கேட்டான். “மத்ரநாட்டு இளவரசியான என் பெயர் சாவித்ரி” என்றாள் அவள். “நீ இங்கே வரலாகாது. என்னைப்பார்ப்பதும் தகாது. விட்டுச்செல்” என்றான் அவன்.
“நான் என் கணவன் இன்றி செல்லமாட்டேன்” என்றாள் சாவித்ரி. “பெண்ணே, நீ அவனை இனி பெறமுடியாது. அவன் கண்களில் நீ படமாட்டாய். அவன் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டுவிட்டான். அவனை இறப்புலகுக்கு கொண்டுசெல்ல வந்திருக்கும் என்பெயர் காலன்” என்றான். “நான் எதையும் செவிகொள்ளமாட்டேன். கணவனை பின் தொடர்வது பெண்ணின் உரிமை” என்றாள் சாவித்ரி.
காலன் தன் பின்னால் ஓடிய கன்னங்கரிய நதியைக் காட்டி “இதன் பெயர் காலவதி…இந்த எருமை இதைத் தாண்டிச்செல்லப்போகிறது. இதற்குள் வைத்த இரும்புத்தடி அறுபட்டுத் தெறிக்கும் வேகம் கொண்டது. உடலுடன் எவரும் இதைத்தாண்டமுடியாது. விலகிச்செல்” என்றான்.
சாவித்ரி “என் கணவனை என்னுடன் அனுப்புங்கள். இல்லையேல் இதை நான் விடமாட்டேன்” என்றாள். “பெண்ணே இந்தப் பாதையில் செல்வது மட்டுமே பிரம்மனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. திரும்புவதற்கு எவருக்கும் அனுமதியில்லை” என்று காலன் பதில் சொன்னான். “நான் என் கணவனில்லாமல் திரும்பமாட்டேன்” என்றாள் சாவித்ரி.
காலன் “காலவதியை கடக்க வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். நீ உன் வீடு, குலம், பெற்றோர், உலகம் அனைவரையும் துறப்பதாகச் சொல்லி இந்த மரத்திலிருந்து ஓர் இலையைப்பறித்து நீரில் போடு” என்றான். சாவித்ரி அக்கணமே ஓர் இலையைப்பறித்து தன்னுறுதி சொல்லி அதை அந்நீரில் விட்டாள். எருமை நீரில் பாய்ந்து நீந்தியது. அதனுடன் அவளும் சேர்ந்து அந்நதியைக் கடந்தாள்.
அப்பால் வாயு சுழித்தோடும் ஒரு நதி இருந்தது. அதனருகே நின்றிருந்த கரியமனிதன் அதன் பெயர் சிந்தாவதி என்றான். அவன் பெயர் யமன். பாறைகளை தூசாக மாற்றும் வேகம் கொண்டது அது. அதில் இறங்கி தாண்டவேண்டும் என்றால் அவள் தன் உயிரை தானே பிரியவேண்டும். சாவித்ரி அக்கணமே இலையொன்றைப்பறித்து சிந்தாவதியில் இட்டு அதைக்கடந்து சென்றாள்.
மூன்றாவது நதி நெருப்பு சுழித்து ஓடுவதாக இருந்தது. அனைத்தையும் ஆவியாக்கி வானத்தில் கரைக்கும் வேகம் கொண்டது அது. அதன்பெயர் பிரக்ஞாவதி. “அதில் நீ உன் குழந்தைகளை எல்லாம் வீசவேண்டும்” என்றான் அதனருகே நின்ற காவலனாகிய ரௌத்ரன். சாவித்ரி கணமும் நினையாமல் தனக்குப்பிறக்கவிருந்த அத்தனை குழந்தைகளையும் அந்நதியில் வீசி அதைக்கடந்தாள். அங்கே ஒரு கருநிற வாயில் இருந்தது. அதன் வாசல்கதவுகள் இருள்போன்ற திரையால் மூடப்பட்டிருந்தன. எருமை அந்தத் திரையை தாண்டிச்சென்றது.
அந்தத் திரைக்கு அப்பால் நீலநிறமான ஒரு பெருநகரம் இருந்தது. அங்கே ஒளியாலான வீதிகளுக்கு இருபக்கமும் மாடங்கள் நீலவானத்தின் நிறம் கொண்டிருந்தன. நீலநிறமான கல்பக மரங்கள் கொண்ட பூங்காக்களில் நீலத்தின் ஆயிரம் நிறவேறுபாடுகளால் ஆன பறவைகளும் பூச்சிகளும் பறந்தன. நீலக்கலைமான்கள் மிதந்தன. நீல எருதுகள் ஒழுகின. நீலயானைகள் மேகங்களாக தழுவி நின்றன. கருநீலத் தடாகங்களில் நீலம் ஒளிரும் மீன்கள் துள்ளின.
மனிதர்களை மண்ணில் காலூன்றச்செய்யும் தீமைகளேதும் இல்லாத அவ்வுலகில் இறகுகள்போல பறந்தலைந்த மனிதர்கள் அனைவருமே அழியா இளமையுடனும் கலையாத நிறைநிலையுடனும் இருந்தனர். அந்நகர் நடுவே அந்தரத்தில் மிதந்துநின்ற மாபெரும் மாளிகைக்குள் அவள் சென்றாள். அங்கே சபாமண்டபத்தில் பெரும் தராசு ஒன்றின் முள் என அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் சிம்மாசனத்தில் கரிய உருவம்கொண்ட பேரரசன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
சாவித்ரியிடம் அவன் “என் பெயர் தருமன். கோடானுகோடி கல்பங்களாக இங்கே எவரும் இவ்வாறு வந்ததில்லை பெண்ணே. துறந்தவர்களுக்கு நான் அடிமை என நூல்கள் சொல்லியும் எவரும் துறப்பதில்லை. ஞானத்தை விட, தவத்தைவிட பிரேமையே மகத்தானது என்று இன்று அறிந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்றான். “முன்பொருநாள் நசிகேதனுக்கு நான் மெய்ஞானத்தை அளித்தேன். நீ விரும்பும் அனைத்தையும் என்னால் அளிக்கமுடியும்.”
“என் கணவனை திருப்பித்தாருங்கள்” என்று சாவித்ரி கேட்டாள். “வேறெதையும் நான் வேண்டவில்லை.” “பெண்ணே அறவுலகின் வாயிலை நீ தாண்டிச்சென்றால் பிரம்மாவை மீறிச்செல்கிறாய். அழியா நரகில் நீ விழவேண்டியிருக்கும்” என்றான் தருமன். “அழியாநரகத்தில் நான் உழல்கிறேன், என் கணவனை மட்டும் அளியுங்கள்” என்றாள் சாவித்ரி. அவள் பிரேமையைக் கண்ட தருமன் சாவித்ரிக்கு அவள் தந்தையையும் நாட்டையும் கணவனையும் குலவரிசையையும் அளித்து வணங்கி அறவுலகின் வாயில்வரை வந்து வழியனுப்பினான்.
தன் கையைக் காட்டி அம்பிகை சொன்னாள் “இந்த பொற்சரடை விறலி என் கையில் கட்டினாள். வரலட்சுமியாகிய சாவித்ரியை வணங்கி நோன்பிருந்தால் மங்கலம் மறையாது என்றாள். நான் நோன்புகொள்ள உறுதிபூண்டு இதை கட்டிக்கொண்டேன்.” விசித்திரவீரியன் புன்னகையுடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிறிய நாசி, சிறிய உதடுகள். குழந்தைக்கன்னங்களில் பருவத்தின் சிறிய பருக்கள். நெற்றியில் சுருண்டு காற்றிலாடிய மென்கூந்தல்சுருள்கள். விரிந்த கரிய கண்களுக்கு பேரழகை அளித்த பேதைமை.
“என்ன புன்னகை?” என்று கேட்டாள். “இல்லை. வளையைவிட்டு வெளியே வரும் குழிமுயல் போலிருக்கிறாய். கன்னியாக வந்து பூங்காவில் உலவுகிறாய். ஆனால் உன் காதுகள் எச்சரிக்கையாக உள்ளன. சிறிய ஆபத்து என்றாலும் ஓடிச்சென்று உன் குழந்தைமைக்குள் பதுங்கிக்கொள்கிறாய்.” புரியாமல் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றான். பின்பு மெல்ல அவளை அணைத்து தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.
அவன் கைகள் வழியாக அவள் தன்னுடலை கண்டுகொண்டாள். அவன் உடல் வழியாக தன் உடலுக்குள் புகுந்து நோக்கினாள். மூச்சுவாங்கும் குரலில் விசித்திரவீரியன் அவள் காதுக்குள் கேட்டான் “தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்ரிநோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?” அவள் அவ்வினாவை அக்கணமே சால்வையென நழுவவிட்டு ஆயிரம்காதவேகம் கொண்ட அந்த ரதத்தில் சென்றுகொண்டிருந்தாள். பின்பு ரதம் மலையுச்சியில் இருந்து வானில் எழுந்தது.
மெல்ல அது தரையில் இறங்கி செம்புழுதி கனத்துக்கிடந்த மென்பாதையில் ஓசையின்று உருளத்தொடங்கியதும் அவள் அந்த வினாவை நினைவுகூர்ந்தாள். வெண்ணிறவெளியில் அலையும்போதும் அவள் எண்ணிக்கொண்டது தன் குழந்தையைப் பற்றிதான். ஒருபோதும் தன்னால் பிரக்ஞாவதியை தாண்டமுடியாதென்று அறிந்தாள்.
மூச்சுவாங்கும் குரலில் “குழந்தையை விட்டுவிடமுடியுமா என்ன?” என்றாள். தானும் மூச்சுவாங்க “ஆம்… விட்டுவிடவும்கூடாது” என்றான் விசித்திரவீரியன். அவன் தொண்டையின் இருபக்கமும் இரு நரம்புகள் புடைத்து அசைவதுபோலத் தெரிந்தது. “குழந்தைதான் கணவனை சாகாமல் வைத்திருக்க எளிய வழி என எல்லா பெண்களுக்கும் தெரியும்” அவன் திணறியபடிச் சொல்லி வியர்வையுடன் மல்லாந்தான்.
“ஏன் இப்படி வியர்க்கிறது உங்களுக்கு?” என்றாள் அம்பிகை. ‘குடிநீர்’ என்று அவன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சுட்டிக்காட்டினான். அவள் தன் ஆடையை மார்பில் அழுத்திப்பற்றியபடி எழுந்து நீர் இருந்த மண்குடத்தை அணுகி நீர் எடுத்து திரும்பியபோது அவன் கோணலாக விரிந்து கிடப்பதைக் கண்டாள். குரல்வளை புடைத்து எழ முகம் அண்ணாந்து மூக்கின் துளைகள் பெரிதாகத் தெரிந்தன. கைகள் விரிந்து விரல்கள் அதிர்ந்துகொண்டிருக்க இரு பாதங்களும் கோணலாக விரிந்திருந்தன.
அம்பிகை எழுந்தோடி அகல்சுடரைத் தூண்டி திரும்பிப்பார்த்தாள். நீலநரம்புகள் புடைத்தெழுந்து கட்டிவரிந்த வெளிறிய உடல் மெல்லத் தளர்ந்து மெத்தைமேல் படிய, உதடுகளைக் கடித்த பற்கள் இறுகிப்புதைந்திருக்க, கருவிழிகள் மேலே மறைந்து, விசித்திரவீரியன் கிடந்தான். அப்போது உடைகளை முழுதாக அணிவதைப்பற்றித்தான் அவள் மனம் முதலில் எண்ணியது என்பதை பிறகெப்போதும் அவள் மறக்கவில்லை. அவள் மேலாடையை அணியும்போது அவன் கடைசியாக மெல்ல உதறிக்கொண்டான். உடையணிந்து வாசலைத் திறந்து குரலெழுப்பியபடி ஓடும்போது அவன் முழுமையாகவே விலகிச்சென்றிருந்தான்.