பகுதி ஐந்து : மணிச்சங்கம்
[ 3 ]
அம்பிகை தன்முன் திறந்து கிடந்த பேழைகளில் அஸ்தினபுரியின் பெருஞ்செல்வக்குவியலை பார்த்துக்கொண்டிருந்தாள். பூதங்கள் காக்கும் குபேரபுரிச்செல்வம். நாகங்கள் தழுவிக்கிடக்கும் வாசுகியின் பாதாளபுரிச்செல்வம். வைரங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள், நீலங்கள், பச்சைகள், பவளங்கள். ஒளியை அள்ளித்தேக்கிவிட விழைந்து ரத்தினங்களை முன்னோர் கண்டடைந்தார்கள் போலும். மலர்களை அழியாதவை என பார்க்கவிழையும் மனம் ரத்தினங்கள்மேல் காதல்கொண்டது போலும்.
அம்பாலிகை அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து தன்மேல் வைத்து பார்த்துக்கொண்டிருக்க சேடிகள் விலகி நின்று வியந்த கண்களுடன் நோக்கினர். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் பிரதிபலித்து அந்த நகைகள் பெருகிக்கொண்டே சென்றன. அவர்கள் ஒவ்வொருவரும் அவற்றை அள்ளி அள்ளி அணிந்துகொண்டிருந்தனர் எங்கோ. அம்பாலிகை இரு கைகளாலும் நகைகளை அள்ளி தன்மேல் வைத்து நோக்கிவிட்டு திரும்ப வைத்தாள்.
சிவையை நோக்கி அம்பிகை “உனக்கு இவற்றில் எவ்வளவு நகை இருந்தால் நிறைவுதோன்றும்?” என்று கேட்டாள். “தேவி, நான் என் மனதில் காதல்கொண்டிருந்தேனென்றால் ஒரே ஒரு மணிநகை போதுமானதாகும். அதில் குபேரபுரியை நான் கண்டுகொள்வேன்” என்றாள்.
அம்பிகை உதடுகளைச் சுழித்து “நூல்களை கற்றிருக்கிறாய்…நீ எங்கு பிறந்தாய்?” என்றாள். “என் அன்னையின் பெயர் சுபை. இங்கே அவளும் தாசியாகத்தான் இருந்தாள். அவளுக்கும் புரவிச்சாலை பொறுப்பாளராக இருந்த பீதருக்கும் நான் பிறந்தேன்.” அம்பிகை தலையசைத்துவிட்டு “உனக்குத்தேவையான நகைகள் எவையென்றாலும் எடுத்துக்கொள்” என்றாள்.
அம்பாலிகை சிறுமியின் சினத்துடன் தலைதூக்கி “ஆனால் நான் எடுத்துக்கொள்வதைவிட குறைவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றாள். சிவை புன்னகைசெய்து “இளவரசி, இவையனைத்துமே உங்களுடையவை அல்லவா?” என்றாள். அம்பாலிகை நகைகளைப் பார்த்துவிட்டு “அப்படியென்றால் நான்தான் உனக்குத்தருவேன். நீயே எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றாள்.
“சரி இளவரசி எதைத்தருவீர்கள்?” என சிவை சிரித்தபடி கேட்டாள். அம்பாலிகை மீண்டும் நகைகளைப் பார்த்துவிட்டு “எல்லாமே என்னுடையவை என்றால் எல்லாவற்றையுமே தந்துவிடுகிறேன்” என்று சிரித்தாள். அவள் கன்னங்கள் நீளமாகக் குழிந்து பற்களின் நுனிகள் வெளித்தெரிந்தன.
சத்யவதியின் முதன்மைச்சேடி சியாமை வந்து பணிந்து “அரசி, மங்கலவேளை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று பேரரசி சொல்லியனுப்பினார்” என்றாள். “எங்கிருக்கிறார்கள்?” என்று அம்பிகை கேட்டாள். “இதோ இங்கே, இடைநாழியில் நின்றிருக்கிறார்கள்.”
அம்பிகை எழுந்து ஒரு வெண்மேலாடையை மட்டும் அணிந்துகொண்டு வெளியே சென்றாள். “அக்கா, நீங்கள் நகையேதும் அணியவில்லையா?” என்று அம்பாலிகை கேட்டதை அவள் புறக்கணித்தாள். அவள் கூந்தல் தோளில் விழுந்து கிடந்தது.
அவளைக் கண்டதும் சத்யவதியின் முகம் மாறியது. “அரசி எப்போதும் அணியுடன் இருந்தாகவேண்டும்” என்றாள். அவள் கண்களைப் பார்க்காமல் “நான் நகையணியப்போவதில்லை” என்று அம்பிகை திடமான குரலில் சொன்னாள்.
“நீ நகையணிவது உன் அழகுக்காக அல்ல. உன் கணவனுக்காக உன் மனம் மலர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுவது அது” என்றாள் சத்யவதி. சர்ப்பம்போல தலைதிருப்பி “ஆம், அதனால்தான் நகையணியமாட்டேன் என்றேன்” என்று அம்பிகை சொன்னாள். சத்யவதியின் தளர்ந்த கழுத்தில் ஒரு தசைநார் மட்டும் அசைய வாய் சற்று இழுபட்டது.
பெருமூச்சுடன் தன்னை அடக்கிய சத்யவதி அம்பிகையின் தலையில் கைவைத்து “உன் கருப்பை நிறையட்டும். உன் குலம் நீடூழி வாழட்டும்” என்று வாழ்த்திவிட்டு சேடியிடம் சைகை காட்டினாள். சேடி அம்பிகையின் கைகளை மெல்லப்பற்றி “வருக அரசி” என்றாள்.
இடைநாழியின் மரத்தாலான தரையில் தன் காலடிகள் ஒலிப்பதை அம்பிகை அந்தக் கட்டடத்தின் இதயத்துடிப்பு போல கேட்டாள். பெரிய மரத்தூண்கள் பூமியைத்தாங்கி நிற்கும் பாதாள சர்ப்பங்களாக தோன்றின. மானுட வாழ்க்கையெல்லாம் தலைக்குமேலே நிகழ்ந்து கொண்டிருக்க அவள்மட்டும் புதையுண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டாள். இதோ ஒவ்வொரு காலடியாக வைத்து ஒருபோதும் விரும்பாத ஒன்றைநோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இருண்ட பெரும்பள்ளம் நோக்கி தன் இயல்பினாலேயே ஓடிச்செல்லும் நீரோடையைப்போல.
அவள் துயிலறையின் வாயிலில் தன்னை அறியாமல் நின்றுவிட்டாள். உள்ளிருந்து மூச்சு உடலை விட்டு உயிர்பிரிவதுபோல முட்டிமுட்டிப்பிரிந்தது. கதவை மெல்லத் திறந்த சியாமை “இன்னும் மன்னர் வரவில்லை அரசி..உள்ளே சென்று அமருங்கள்” என்றாள். அவள் உள்ளே சென்றதும் கதவு மெல்ல மூடிக்கொண்டது, மூழ்கியவள் தலைமேல் நீர் போல.
உள்ளே சென்று அன்னத்தூவிமெத்தைமேல் விரித்த நீலப்பட்டில் அமர்ந்துகொண்டாள். அறையில் இமயத்தின் தேவதாருக்களின் அரக்கு புகைந்த நறுமணம் திகழ்ந்தது. சாளரத்துக்கு வெளியே வானமும் மரங்களும் அரண்மனை முகடுகளும் கலந்து கரியதிரை போல அசைவிலாது தொங்கின. மரங்களில் இருந்த தனித்த பறவை ஒன்று மீளமீள ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது.
அவள் தன் கைகளை விரித்துப்பார்த்தாள். அத்தனை விதியும் அங்கே எழுதப்பட்டிருக்கிறது என்பார்கள் நிமித்திகர்கள். அங்கே அவள் இன்னும் காணாத அவனைப்பற்றியும் சொல்லியிருக்குமா என்ன? அவன் முகம் எப்படி இருக்கும்? நோயுற்றவன் என்றார்கள். மெலிந்தவன் என்றார்கள். ஆயுதமோ நூலோ கற்றறியாதவன் என்றார்கள். அவ்வரிகளை அவளால் முகமாக திரட்டிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அலைகுளத்தின் அடிப்பாறைபோல அந்தமுகம் கலைந்து கலைந்து தன்னை காட்டிக்கொண்டே இருந்தது.
நீந்தும் யானைபோல கரிய பெரும்கால்களை ஓசையின்றித் துழாவி காலம் நடந்துகொண்டிருந்தது என்று உணர்ந்தாள். அருகே இருந்த சிறிய நீர்க்குவளையின் பிடியில் இருந்த செம்மணிகள் அவளைப் பார்ப்பதாக உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள். பொன் கைப்பிடியாகச் சுருண்டிருந்த நாகம் வாய்திறந்து எரிவிழிகளால் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் குனிந்து அதையே பார்த்தாள். பார்வையை விலக்காமல், நாகமே வருக, என்னைத் தீண்டுக என சொல்லிக்கொண்டவளாக. சினந்த நாகம் மெல்ல சிலைத்து வெறும் பொன்வளைவாக மாறியது.
வெளியே குறடு ஒலித்ததும் தன் நெஞ்சின் ஒலியைக் கேட்டு எழுந்து நின்றாள். முதல் எதிர்வினை தன் உடல்பற்றிய உணர்வுதான். மார்பகங்கள்மேல் மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டாள். ஓசையற்ற வெண்கலக்கீல்களில் மெல்லத் திறந்த கதவின் வழியாக உள்ளே வந்த விசித்திரவீரியன் அங்கேயே நின்றான். அவனுக்குப்பின்னால் கதவு மெல்ல மூடியது.
அவன் நீர்மேல் படகுபோல மெதுவாக ஆடியபடி நின்று சிவந்த பெரிய கண்களால் அவளைப்பார்த்தான். சீனத்து வெண்குடுவை போன்ற வெளிறிய சிறுமுகத்தில் கன்ன எலும்புகளும் கண்குழியின் விளிம்புகளும் மூக்கும் புடைத்து நிற்க, கீழே வெளுத்த உதடுகள் உலர்ந்து தோலுரிந்து தெரிந்தன. கழுத்தில் எழுந்த குரல்வளை ஏறியிறங்கியது. அவள் நெஞ்சில் முதலில் எழுந்த எண்ணம் அவன் தன்னை தொடக்கூடாது என்பதாகவே இருந்தது.
விசித்திரவீரியன் தன் பழுத்த விழிகளால் அவளைப் பார்த்துவிட்டு கைகூப்பினான். மதுமயக்கத்தில் செய்வது அது என அவளுக்குப்பட்டதும் முகம்சுளித்தாள்.”மன்னிக்கவேண்டும் காசிநாட்டு இளவரசி…என்னை மன்னிக்கவேண்டும்” என்றான். அவள் நினைப்பதை அவனே உணர்ந்துகொண்டு “நான் மதுமயக்கத்தில் இல்லை. ஆனால் அதைவிட அதிகமான ஏதோ மயக்கத்தைத்தரும் ஒரு மருந்து என் உடலில் இருக்கிறது…நாகரசம்…என்னால் முறையாக நிற்கவோ பேசவோ முடியவில்லை” என்றான்.
அம்பிகை “எதற்கு வீண் சொற்கள்?” என்றாள். “நான் என்றுமே வீணாக சொற்களைப் பேசியதில்லை. எனக்கு நேரமில்லை என்று எப்போதோ மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். சொல்லோ கணமோ பயனற்றவை என ஏதும் என்னிடமிருக்காது” என்றான் விசித்திரவீரியன். “நான் உங்கள் வாழ்க்கையில் இச்சிலகணங்களுக்கு அப்பால் எதையுமே எடுத்துக் கொள்ளப்போவதில்லை இளவரசி.”
அம்பிகை அவனை கூர்ந்து பார்த்தாள். விசித்திரவீரியன் “உங்கள் தமக்கையை நான் அவளிருந்த குகைக்குள் சென்று பார்த்தேன். அவள் காலடியில் அமர்ந்து என்மேல் தீச்சொல் தொடுக்கும்படி கேட்டேன். அவள் தன் பெருந்தவக்காலை என் தலைமேல் வைத்தாள். என் குலம் அவள் ஆசியைப் பெற்றது. என் முன்னோர் நிறைவுகொண்டனர்.”
மதுமயக்கத்தில் என்பதுபோல நடுங்கும் கைகளை விசித்திரவீரியன் கூப்பினான். சுயஎள்ளல் என அவள் நினைத்துக்கொண்ட புன்னகையுடன், “நான் என்றுமே நல்லூழ் கொண்டவன். உடல்நலக்குறைவு காரணமாக அத்தனைபேராலும் அன்புசெலுத்தப்பட்டேன். என் நாடுசெய்த பெரும்பழியால் மண்ணுலகிலேயே பெரிய நல்லருளைப் பெற்றேன்…இங்கே, என் சிரம் மீது சண்டப்பிரசண்டியான காளியின் கால் பதிந்தது.”
தன் மனநெகிழ்வை வெல்ல அவன் அணிந்துகொண்டிருக்கும் பாவனை அந்த சுயஎள்ளல் என அவளுக்குப் புரிந்தது. அவன் மீண்டும் கைகூப்பினான். “இந்த அஸ்தினபுரிமீது இன்னும் இரு பெண்பழிகள் உள்ளன. இந்த நாட்டின் மக்களுக்காக அதை நான் ஏற்க சித்தமாகியிருக்கிறேன்.”
தள்ளாடியபடி அவன் முன்னால் வந்து அவள் முன் மண்டியிட்டான். “என் மேல் எவ்வித தீச்சொல்லையும் நீங்கள் பொழியலாம் இளவரசி…அனைத்துத் தீயூழுக்கும் நான் தகுதியானவனே.” பற்களை இறுகக்கடித்து தன்னை அவன் நிலைப்படுத்திக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவளால் தன் கண்ணீரை அடக்கமுடியவில்லை. ஆனால் என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.
“இளவரசி, தங்கள் மனம் ஒரு பெரிய பளிங்கு வெளியாக எனக்குத்தெரிகிறது. என் தீயூழே இதுதான். உள்ளும் புறமும் நானறியமுடியா எவரையும் நான் சந்திப்பதில்லை என்பதுதான். இந்த நோயுற்ற உடலில் இருந்து என் ஆன்மா பிற அனைத்து உடல்களுக்கும் எளிதில் தாவிவிடுகிறது. உங்கள் துயரத்தையும் கோபத்தையும் நான் அறிகிறேன். துரத்தப்பட்ட முயல் சுவர்களில் முட்டிக்கொண்டது போல சீறித்திரும்புகிறீர்கள். இந்த அறைக்குள் நான் நுழைந்ததுமே நீங்கள் என்னை அருவருத்தீர்களென்பதையே அறிந்தேன்.” அவன் தலை அசைந்தது. “ஆணைவெறுக்கும் பெண் இளக்காரமே கொள்கிறாள். ஏனென்றால் தங்கள் நெஞ்சில் இருக்கும் அவர்…”
“வேண்டாம்” என அழுகையால் நடுங்கும் உடலும் கிசுகிசுக்கும் குரலுமாக அம்பிகை சொன்னாள். ‘ஆம்’ என்ற பாவனையில் மிகமெல்ல இமையசைத்து அவன் அப்படியே அச்சொல்லில் நிறுத்திக்கொண்டான். அதை உணர்ந்த அக்கணம் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டத்தொடங்கியது. கண்ணீர் அவ்வளவு இனியதாக வழியுமென்பதையே அவளறிந்திருக்கவில்லை.
விசித்திரவீரியன் “என் மேல் உங்கள் எல்லா பழியையும் சுமத்துங்கள் தேவி” என்றான். தான் என்ன செய்தோமென்பதை செய்தபின்னரே அவள் அறிந்தாள். இருகைகளையும் விரித்து அவனை அள்ளி அணைத்து தன் விம்மும் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். ஒரு கைக்குழந்தையாக அவனை ஆக்கி தன் கருவறைக்குள் செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதுபோல. அவன் தலையை இறுக்கியபோது அவள் முலைகள் வலித்தன. அவன் மூச்சடங்கி அவளுடன் இணைந்துகொண்டான்.
பின்பு அவள் தெளிந்து தன் கண்ணீர் சொட்டிய அவன் ஈரத்தலையை தன் மேலாடையாலேயே துடைத்தாள். விசித்திரவீரியன் சிரித்தபடி “மழைக்கண்ணீர் என சூதர்கள் பாடுவதை உண்மையென இன்றறிந்தேன். அப்படியென்றால் இதெல்லாம் கவிதையின் மிகை நாடகங்கள் அல்ல….. பாவம், இதற்காக எத்தனை சூதர்களை பாதிப்பாட்டிலேயே எழுந்து போகச்சொல்லியிருப்பேன்!” என்றான்.
அவன் விளையாட்டைக்கொண்டு சமன்செய்வதை உணர்ந்து அம்பிகை வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து “சூதர்கள் என்னசெய்வார்கள்? அவர்கள் பாடுவதைக்கண்டு பிறர் அதை நடிக்கத்தொடங்குகிறார்கள்” என்றாள். விசித்திரவீரியன் “ஆம்” என்று சிரித்து “தேவி, என்னுடன் சேர்ந்து நகைக்கும் முதல் பெண் நீ…” என்றான். பின்பு சிரித்துக்கொண்டு “மஞ்சத்தைப் பகிர பல்லாயிரம் பெண்கள் கிடைப்பார்கள். நகைச்சுவையைப் பகிர பெண்ணை பிரம்மனிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும் என்று என் அமைச்சர் சொல்வார்…” என்றான்.
“யார் அவர்?” என்றாள் அம்பிகை. “ஸ்தானகர் என்று பெயர். அவர் என்னுடன் சேர்ந்து சிரிப்பதனால்தான் நான் வாழ்கிறேன்” என்றான். “அவரிடம் சொல்லுங்கள் பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை என.” விசித்திரவீரியன் சிரித்து “சொல்கிறேன்…உறுதியாகச் சொல்கிறேன். திகைத்துவிடுவார், பாவம்” என்றான்.
அம்பிகை அவன் தலைமுடியை மெல்ல கோதியபடி “உண்மையிலேயே நான் தீச்சொல்லிடுவேன் என நினைத்தீர்களா?” என்றாள். “ஆம், அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் சென்று அம்பையை வணங்கியது பற்றி சூதர்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அன்று அவள் முன் சென்றபோது அவள் என்மேல் தீச்சொல்லிடுவாளென நான் எண்ணியிருந்தேனா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இல்லை என்றே தோன்றுகிறது. இப்போதும் அப்படித்தான்…” என்றான் விசித்திரவீரியன்.
சிரிப்பை கண்களில் எஞ்சவிட்டு விசித்திரவீரியன் “இளவயதிலிருந்தே இந்த மனநிலை என்னிடமிருக்கிறது. சிறுநாய்க்குட்டிகள் கண்திறந்த மறுநாளே மனிதர்களை நம்பி பின்னால் செல்வதைப்போல நான் உலகை நம்புகிறேன். இவ்வுலகிலுள்ள அத்தனைபேரும் என்னைவிட வலிமையானவர்கள். வலிமையானவர்கள் ஒருபோதும் பலவீனர்களை துன்புறுத்துவதில்லை…எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறுமுலையையாவது வைத்திருக்கிறார்கள்” என்றான்.
அம்பிகை வாய்விட்டுச் சிரித்தபோது அவ்வளவு சுதந்திரமாக எவர் முன்னாலும் அதுவரை சிரித்ததில்லை என்ற எண்ணம் எழுந்தது அவளுக்குள். இளமையில் எப்போதுமே அவளுடன் அம்பை இருந்தாள். அது குலதெய்வத்தை கூடவே வைத்துக்கொள்வதுபோல என்று சேடி பிரதமை சொல்வதுண்டு. அம்பாலிகையுடன் தடாகத்தில் தனியாகக் குளிக்கும்போது மட்டுமே அவளால் சிரிக்கமுடியும்.
விசித்திரவீரியன் “ஆனால் பெண்கள் இரண்டு முலைகள் கொண்டவர்கள். நான் சந்தித்த அத்தனை பெண்களுக்கும் பிரியமானவனாகவே இருந்திருக்கிறேன். பின்னொரு நாளில் பிங்கலகேசினியும் சியாமரூபிணியுமான மிருத்யூதேவியை நான் சந்திக்கும்போது அவளும் என் மேல் அன்புடன்தான் இருப்பாள். நான் அவளிடம் தேவி, உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன். உன் புதல்வியரில் மேன்மையானவள் வ்யாதி. அவளை மட்டுமே என்னிடம் அனுப்பினாய் என்பேன்” என்றான்.
அம்பிகை அச்சொற்களைக் கேட்டு நடுங்கினாள். அவன் கையைப்பற்றி “வேண்டாமே” என்றாள். “ஆகுக” என அவன் புன்னகை செய்தான். அவள் அவன் தலைமுடியைக் கோதிய கைகளால் அவனுடைய தோள்களை, எலும்பு புடைத்த கைகளை, மெலிந்த குளிர்விரல்களை வருடினாள். குயவன் போல கையாலேயே அவனை வனைந்துவிட முடியும் என்பதைப்போல.
“எல்லா பெண்களும் எளிய ஆண்களிடம் அருள்கொண்டவர்கள் அல்ல” என்று அவள் பேச்சை மாற்றுவதற்காகச் சொன்னாள். சிரிப்பு மறைந்த கண்களுடன் “ஆம், எளியோரிலும் தீயூழ்கொண்டவர்களுண்டு” என்று விசித்திரவீரியன் சொன்னான். “என் தந்தை அவர்களில் ஒருவர். எளியோருக்குள் இச்சை மட்டும் வேகம் கொண்டிருந்தால் அது பெரிய சுமை. ஓர் எளியோன் வலியோனின் இச்சைகொண்ட கண்களுடன் தன்னைப்பார்க்கையில் பெண்களின் அகத்தில் ஒரு விஷநாகம் சீறி எழுகிறது. பாவம் சந்தனு மன்னர். வாழ்நாளெல்லாம் புலிக்குட்டிகள் தட்டி விளையாடும் முயல்போல பெண்களிடம் துன்புற்றார்.” மீண்டும் உரக்கச்சிரித்து “பெண்கள் அவருக்கு எச்சம் வைத்த கடன்களை எல்லாம் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
“உங்கள் உடல்நிலையில் என்ன பிழை?” என்றாள் அம்பிகை. “பிறவிப்பிழை அது. இப்போது அஸ்தினபுரிமீது பெண்நெஞ்சின் முதற்கனல் விழுந்துவிட்டது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இக்குலம் மீது முதல்கண்ணீர் விழுந்தது இருதலைமுறைக்கு முன்னர். என் பெருந்தாயாருடையது அவ்விழிநீர்” என்றான் விசித்திரவீரியன்.
“என் பெருந்தாய் சுனந்தை சிபிநாட்டு இளவரசி. என் பெருந்தாதை பிரதீபர் அவளை மணம்செய்தபோது சைப்யர்கள் இழிகுலத்தவரென கருதப்பட்டிருந்தனர். சுனந்தையின் அழகை அறிந்து அவளை மணக்க பிரதீபர் விரும்பினார். ஆனால் அவரது தந்தை பீமர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. பிரதீபர் பதினெட்டாண்டுகாலம் தந்தை இறப்பது வரை காத்திருந்தார். மூன்று அரசகுமாரிகளையும் நான்கு சூதர்பெண்களையும் அவர் மணந்தாலும் எவரிலும் காதலுறவில்லை. அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கவில்லை” விசித்திரவீரியன் சொன்னான்.
“பீமர் மறைவது வரை சிபிநாட்டு இளவரசிக்கு மணம் நிகழாதபடி பிரதீபர் பார்த்துக்கொண்டார். தந்தை இறந்து நாற்பத்தொன்றாம் நாள் நீர்க்கடன்கள் முடிந்ததுமே சிபிநாட்டுக்கு தூதனுப்பி கன்யாசுல்கம் அளித்து சுனந்தைதேவியை மணந்துகொண்டார். அப்போது அவருக்கு ஐம்பது வயது. தேவிக்கு முப்பத்தாறு வயது” சிரித்தபடி “பெருங்காதலை தன் தீயூழாகப் பெற்று அவள் இந்த அரண்மனைக்கு வந்துசேர்ந்தாள்” என்றான்.
“அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன அல்லவா?” என்று அம்பிகை கேட்டாள். “ஆம். மூவர். என் தந்தை இரண்டாமவர். மூவருமே இயல்பானவர்களாக இருக்கவில்லை…” என்ற விசித்திரவீரியன் கண்கள் ஒளிர “அவள் மூன்று வியாழவட்டக்காலம் கன்னிமாடத்தில் சிறையிருந்தாள். அப்போது எத்தனை கனவுகள் கண்டிருப்பாள். எத்தனை ஆண் உடல்கள்!”
“இதென்ன பேச்சு?” என்றாள் அம்பிகை. “இல்லை என்று சொல் பார்ப்போம்!” அம்பிகை “மனித இயல்பு அல்லவா?” என்றாள். “ஆம், அந்த அகச்சித்திரங்களை எல்லாம் அஸ்தினபுரிக்கு வந்ததும் கசக்கி உள்ளத்தின் ஆழத்தில் போட்டிருப்பாள். அக்கசங்கல்கள் எல்லாம் எழுந்து அவள் கருவில் பிறந்தன.”
அம்பிகை “சூதர்கள் இப்படித்தான் முற்பிறவிக்கதைகளைச் சொல்கிறார்கள் போலும்” என்றாள். “என் அடுத்தபிறவியையே சொல்லிவிட்டார்கள்” என்றான் விசித்திரவீரியன். “நான் ஓர் ஆலமரமாகப் பிறந்து காட்டின் நடுவே நிற்பேன். பல்லாயிரம் கிளிகளுக்கு விதைகள் வழங்குவேன். பாறையிடுக்குகளில்கூட முளைப்பேன்.”
சிரித்துக்கொண்டே கைகளை தலைக்குப்பின் வைத்துக்கொண்டு “முதுமையில் கருவுற்று குருதியையும் கண்ணீரையும் முழுக்க மகவுகளுக்கு அளித்துவிட்டு இறந்த சுனந்தையின் பழி அன்றே இந்நகர் மேல் விழுந்துவிட்டது” என்றான் விசித்திரவீரியன். “என் உடலின் அநாகதத் தாமரையில் அனலில்லை என்று சித்தர் சொன்னார். அங்கே சுனந்தையின் குளிர்ந்த கண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.”
அம்பிகை மீண்டும் பெருமூச்சு விட்டு அவன் தலைமயிரை கோதினாள். மெல்லக் குனிந்து அவனிடம் “களைத்திருக்கிறீர்கள். உங்களால் பேசவும் முடியவில்லை. படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். விசித்திரவீரியன் “ஆம்….நான் இவற்றையெல்லாம் எண்ணிக்கொள்ளலாகாது என எப்போதும் முடிவெடுப்பேன்.எண்ணாமலும் இருக்கமுடியாது. நீண்டநாட்களுக்குப்பின் நேற்று முன்தினம் முதுசூதர் தீர்க்கசியாமர் வந்து இக்கதைகளைப் பாடினார்…” என்றபடி படுத்துக்கொண்டான். அவள் அவனருகே மஞ்சத்தில் அமர்ந்தாள்.
“கண்மூடினால் காலத்தின் இருளில் எத்தனை கண்களை பார்க்கமுடிகிறது!” என்று விசித்திரவீரியன் சொன்னான். “இருண்ட மரத்தில் வௌவால்களை அண்ணாந்து பார்ப்பதுபோல. எத்தனை அன்னையர். எத்தனை பாட்டியர் முப்பாட்டியர்….” அம்பிகை “அத்தனை அரசகுலத்திலும் அதுதானே நிகழ்ந்திருக்கும்?” என்றாள்.
“ஆம், களத்தில் குருதிசொரிந்து சாவது ஷத்ரியர்களுக்கு விதி என்றால் இருளறையில் மட்கி அழிவது ஷத்ரியப் பெண்களின் விதி. ஒருமுறை என் உபவனத்தில் சிறுபாறை இடுக்குக்குள் ஒரு ராஜநாகத்தைப் பார்த்தோம். அது உள்ளே புகுந்து இன்னொரு நாகத்தை விழுங்கிவிட்டது. அதன்பின் உள்ளே சென்ற இடுக்குவழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே மடிந்து எலும்புச்சரடாக வளைந்திருந்தது. அதனுள் இன்னொரு எலும்புச்சரடாக அந்த இரை. இரைக்குள் ஒரு தவளையின் சிறிய எலும்புத்தொகை இருந்தது…” விசித்திரவீரியன் சிரித்து மெல்லப்புரண்டு “பிரம்மனின் நகைச்சுவைக்கு முடிவே இல்லை அல்லவா?” என்றான்.
அம்பிகை “நான் இளமைப்பருவத்தில் சாளரம் வழியாக பார்த்துக்கொண்டே இருப்பேன். தொலைவில் குகர்களின் பெண்கள் தனியாக படகோட்டிச் செல்வார்கள். வலைவீசி மீன்பிடித்து கூடையுடன் தூக்கிக்கொண்டு செல்லும்போது மீன் துள்ளுவதுபோல அவர்களின் சிரிப்பு ஒளிவிடும்…இங்கே அஸ்தினபுரிக்கு வரும் வழியில் சேற்றுவயலில் வேலைசெய்யும் உழத்தியரைப்பார்த்தேன். மண் மூடிய உடலுடன் காட்டுமரம்போல கூந்தல் காற்றிலாட நின்றிருந்தார்கள். நினைக்கையில் எனக்கு கண்ணீர் வந்து நெஞ்சுச்சிமிழில் நிறைகிறது.” பெருமூச்சுடன் “அந்த இரையான ஷத்ரிய நாகம் சிறையில் அதன் கணக்கை முடித்துவிட்டது. அடுத்தபிறவியில் அது உழத்தியாகப் பிறந்து மண்ணில் திளைக்கும்” என்றாள்.
விசித்திரவீரியன் “ஷத்ரியர்கள் பலிமிருகங்கள்” என்றான். “மாலையும் மணியாரமும் அணிந்தவர்கள். சுவையான உணவளிக்கப்படுபவர்கள். அனைவராலும் வணங்கத்தக்கவர்கள்.” அம்பிகை “நான் யார் என்று இப்போது என்னிடம் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விந்துவிலிருந்து விந்துவைக் கொண்டுசெல்லும் கருப்பை மட்டும்தான் என்கிறார்கள்…” என்றாள்.
விசித்திரவீரியன் சிரித்து “நான் மட்டுமே சூதர்களைப்போல பேசிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணினேன்…நீயும்தான்” என்றான். “இல்லை, பேசவில்லை” என்று அவள் பொய்ச்சினம் காட்டினாள். “பேசு…உன் சொற்களைக் கேட்பதற்காகவே இதுவரை உயிர்வாழ்ந்தேன் என்று தோன்றுகிறது” என்றான் விசித்திரவீரியன்.
இரவெல்லாம் அவள் பேசிக்கொண்டிருந்தாள். அருவி பொழிவதுபோல தன்னுள்ளிருந்து வெளிவரும் அவையெல்லாம் தன்னால் தன்னுள் ஆயிரம் முறை சொல்லப்பட்டவை என்று உணர்ந்தாள். அவையெல்லாம் பேசப்பட்டபின்பு அவள் சொல்லிக்கொண்டிருந்தவை அவளே அறியாமல் அவளுக்குள் இருந்தவை என்று அறிந்தாள். ஒளிபடாத இருளுக்குள் இருந்து வெட்கிக்கூசிய முகத்துடன் அவை ஒவ்வொன்றாக வெளிவந்து நின்றன. தயங்கி விழி தூக்கி புன்னகைசெய்து பின் தன்னை வெளிக்காட்டின. அவன் கண்களையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவள் ஒரு கணம் ஏதோ உணர்ந்து நிறுத்திக்கொண்டாள்.
“ஏன்?” என்று அவன் கேட்டான். “எப்படி இதையெல்லாம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? சிதைநெருப்பு மட்டுமே அறியவேண்டியவை அல்லவா இவை?” விசித்திரவீரியன் சிரித்து மல்லாந்து படுத்து தலைமேல் கை நீட்டி “சரிதான், நான் உன் சிதை” என்றான். “சீ என்ன பேச்சு இது?” என அவள் அவன் வாயில் மெல்ல அடித்தாள். “இனிமேல் மரணத்தைப்பற்றி என்னிடம் பேசக்கூடாது” என்றாள். “ஆணை” என்று அவன் சொன்னான்.
“நான் இவற்றை ஏன் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?” என்று அம்பிகை கேட்டாள். “சொல்” என்றான் விசித்திரவீரியன். “உங்கள் விழிகள். அவற்றில் ஆணே இல்லை.” விசித்திரவீரியன் சிரித்து “அதைத்தான் மருத்துவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
அம்பிகை அதை கவனிக்காமல் “ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள். ஒன்று, வேட்கை. எப்போதும் எரியும் அதன் சுவாலை விலகினால் தெரிவது புறக்கணிப்பின் ஏளனம்…அதையே ஆண்மை என்கிறார்கள். அவை உங்கள் கண்களில் இல்லை. இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன.”
விசித்திரவீரியன் “ஆண்களின் கண்களில் அவற்றை எங்கே பார்த்தாய்?” என்றான். “எல்லா அன்னிய விழிகளிலும்… வேட்கையில்லாத விழிகள் என் தந்தையுடையவை மட்டுமே. அவர் புறக்கணிப்பையும் ஏளனத்தையும் பரிவு என்னும் வேடமிட்டு அங்கே வைத்திருப்பார்” என்றாள் அம்பிகை. விசித்திரவீரியன் நகைத்து “சூதர்மொழியில் சொல்வதென்றால் இவ்வளவு கூரிய கண்களுடன் வாழ்வது வேல்முனையுடன் திருவிழாவுக்குச் செல்வதுபோல” என்றான்.
அம்பிகை சிரித்து “அஞ்சவேண்டாம், விடிந்ததும் இச்சொற்களெல்லாம் என்னிடமிருந்து சென்றுவிடும்” என்றாள். பின் அவன் கண்களைப்பார்த்து புன்னகையுடன் “பீஷ்மரின் கண்களும் கூட அவ்வாறுதான்” என்றாள். “ஆனால் புறக்கணிப்பின் திரைக்கு அப்பால் வேட்கை.”
விசித்திரவீரியன் “இப்போது மட்டும் அவரைப்பற்றி சொல்லலாமா?” என்றான். “இப்போது நான் உன்னிடம் எதைப்பற்றியும் சொல்வேன், என் நெஞ்சின் துடியல்லவா நீ?” என்று சொல்லி சிரித்துக்கொண்டு அவன் முகத்தில் தன் முகம் சேர்த்துக்கொண்டாள்.