வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…

அன்புள்ள ஜெ,

வெண்முரசை ஒவ்வொருநாளும் ஐந்துமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இலக்கியத்தை வாசிக்கும்போது அதை எழுதும் ஆசிரியரிடம் கேள்விகேட்பது தப்பு என்று தெரியும். ஆனால் இந்த நாவல் நீண்டநாள் வரப்போகிறது. வாசிக்கவேண்டிய முறையை இழந்துவிட்டால் நாவலை நான் அடையாமல்போய்விடுவேனா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. ஆகவே இதைக் கேட்கிறேன். எனக்கு இரண்டு சந்தேகங்கள். இதிலே வரக்கூடிய துணைக்கதைகளை எப்படி எடுத்துக்கொள்வது. அவற்றையெல்லாம் அர்த்தப்படுத்துவதற்குத்தான் மனசு முயற்சி செய்கிறது. அதேமாதிரி தனித்தனியான வரிகளும் நிறைய வேறு அர்த்தங்களை அளிக்கின்றன என்று படுகிறது. இந்தமாதிரியான வாசிப்புக்கு இதில் இடம் உண்டா?

ஏனென்றால் 76 வயதான என் அப்பா இதை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் பல அர்த்தங்கள் எனக்குப்புரியவில்லை. ‘மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா, வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. கொடையால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.’

என்ற வரிகளை வாசித்துவிட்டு அவர் மகாபலிச்சக்ரவர்த்தி இறைவனுக்கே கொடுத்து சிரஞ்சீவி ஆனார் என்றும் அனுமன் இறைவனை பணிந்து சிரஞ்சீவி ஆனார் என்றும் இறைவன் மீது வைத்த நம்பிக்கையால் விபீஷணன் சிரஞ்சீவி ஆனார் என்றும் பரசுராமர் தன்னுடைய பயங்கரமான கோபத்தால் சிரஞ்சீவி ஆனார் என்றும் கிருபர் அவருடைய குரோதத்தால் சிரஞ்சீவி ஆனார் என்றும் பாண்டவர்களின் குழந்தைகளைக் கொன்ற தீராத பழியால் அஸ்வத்தாமா சிரஞ்சீவி ஆனார் என்றும் நீங்கள் சொல்வதாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. இதேமாதிரி ஏராளமான விஷயங்களை நான் விட்டுவிட்டு வாசிக்கிறேனா என்று நினைத்துக்கோண்டேன். ஆகவேதான் இந்தக்கடிதம். .

விஜயலட்சுமி ஜெகதீஷ்

அன்புள்ள விஜயலட்சுமி,

இந்த வினாக்களை எல்லாம் என் இணையதளத்தில் பலமுறை விவாதித்திருக்கிறேன். ஆனால் இப்போது என் இணையதளத்தின் வருகை பத்துமடங்காகியிருக்கிறது. புதியவாசகர்கள், ஏராளமான வாசகிகள். அவர்களுக்காக அடிப்படைகளை சுருக்கமாகச் சொல்கிறேன். விரிவாக அறிய முந்தையகட்டுரைகளை வாசிக்கவும். எல்லா கடிதங்களுக்கும் என்னால் இன்று பதிலிடமுடியாதென்பதனால் இது பொதுவான பதில்.

1. இது மகாபாரதம் மறுசித்தரிப்பு அல்ல. இது ஒரு நவீனநாவல். கம்பராமாயணம் வான்மீகியை மறு ஆக்கம் செய்ய எடுத்துக்கொண்ட சுதந்திரத்தை இதுவும் எடுத்துக்கொள்ளும்

2. இவ்வாறு மரபை மறுபடியும் எழுதிக்கொள்வது நவீனத்துவகாலகட்டம் முடிந்து பின்நவீனத்துவ எழுத்துமுறை உருவானபின் உலகமெங்கும் நிகழ்ந்துவருவது. அது அங்கிருந்து வணிக எழுத்துக்கும் வந்து சேர்ந்திருப்பதனாலேயே சிவா டிரையாலஜி போன்ற நாவல்கள் உருவாகின்றன

3. இது நவீனநாவல். ஆகவே இதில் சொல்லப்படுவனவற்றை விட சொல்லாதவற்றுக்கே அழுத்தம் அதிகம். குறிப்புணர்த்தப்படுவனவற்றை உய்த்தறிந்து வாசிப்பதே சிறந்த வாசிப்பாக அமையும். ஆகவே கதைமாந்தர் இயல்புகள், கதைகள், வரிகளின் உருவகங்கள் அனைத்தையுமே வாசகன் கூர்ந்து வாசித்துப் பொருள்கொள்ள வேண்டும். அதில் தன் கற்பனையை முழுமையாகச் செலவிடவேண்டும்

4. எந்த வகை இலக்கியமும் மனிதவாழ்க்கையின் சிக்கலையும் மனிதமனத்தின் சிக்கலையும் சொல்லும்போதே ஆழம் கொள்கிறது. அதற்கு ஒவ்வொரு எழுத்தும் ஒரு வழிமுறையைக் கண்டுகொள்கிறது. காவியங்களின் வழிமுறை என்பது படிமங்கள் [poetic images] .இது காவியத்தின் மறு ஆக்கம் என்பதனால் அந்தப்படிமங்களை வேறுவகையில் திரும்பிச் சொல்வதன் வழியாக அந்த ஆழத்தை அடைகிறது

5. இதில் உள்ள எல்லா கதைகளும் அவ்வாறு மறு ஆக்கம் செய்யப்பட்டவைதான். உதாரணமாகச் சித்ராங்கதனின் கதையைச் சொல்லலாம்.

7. துணைக்கதைகள் மகாபாரதத்தில் தனியாகவே ஒலிக்கும். இந்நாவலில் அவை ஒருகதாபாத்திரத்தின் மனதை விளக்கவோ. ஒரு வாழ்க்கைச்சூழலை மேலும் விளக்கவோ மட்டும்தான் வரும். அத்தனை கதைகளையும் மையக்கதையின் முடிச்சுகளுடனும் கதாபாத்திரங்களின் மனங்களுடனும் இணைத்து வாசிக்கவேண்டும். உதாரணமாக சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை. அவ்வாறு மேலதிக நுண்ணிய அர்த்தம் தராத எந்தக்கதையும், வர்ணனையும் இந்நாவலில் இருக்காது

8. எல்லா வரிகளையுமே கூர்ந்து வாசித்தால் அவ்வாறு மேலதிகப் பொருள் கிடைக்கும்படியே இது அமைகிறது. அவ்வாறு திட்டமிட்டு எழுதவில்லை, காவியநடையே அதுதான். வரிகளில் உள்ள உவமைகளையும் படிமங்களையும் வாசகன் கவனித்தால் நாவல் விரியும். வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.

9 வரிகளில் உள்ள அடுக்குவரிசையையும் கவனிக்கவேண்டும். உங்கள் தந்தை சொன்னது அதையே. அது வியாசபாரதத்தின் தரிசனமும்கூட. அதாவது பெரும்பழியாலும் கூட அழியாத தன்மையை அடைகிறார்கள். [ஆனால் இவை ஒருவேளை தவறினாலும் பிழையில்லை. முழுமையாக வாசித்தபின் இன்னொருமுறை வாசிக்கையில் கிடைத்தால்போதும்]

10. சொற்களை கவனிப்பதும் மேலதிகப் பொருள் தரலாம். வியாசருக்கு சொல் கொண்டுவரும் மீனின் பெயர் ஸித்தி. அருட்கொடை என்று பொருள்

*

பொதுவாக எழுத்தாளன் எழுத்தை விளக்கக் கூடாது. அது எழுத்தாளனின் வாசிப்பை நோக்கி வாசகனைக் கட்டிவிடுகிறது. ஆயினும் இதைச் சொல்வது இலக்கியவாசிப்பில் நுழையும் அறிமுக வாசகர்களுக்காக மட்டுமே. மேலதிக விளக்கங்கள் சொல்லப்போவதில்லை.

இதில் என்ன உள்ளது என நானே பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டேன். இக்குறிப்புகளை அதன் மீள்வாசகன் என்ற வகையிலேயே சுட்டுகிறேன். இதற்கு அப்பால் இவை பொருள்தரமுடியும் என்பதையும் நான் அறிவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபெரிய உயிர்களின் தேசம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7