பகுதி ஐந்து : மணிச்சங்கம்
[ 2 ]
வைகாசி மாதம் கருநிலவு நாளன்று மணிமஞ்சம் ஒருக்கப்படும் என்று விசித்திரவீரியனின் செயலமைச்சர் ஸ்தானகருக்கு செய்தி வந்தது. செய்தியைக் கொண்டுவந்த சத்யவதியின் தூதன் ஒற்றைவரி குறிக்கப்பட்ட ஓலையை அளித்துவிட்டு வணங்கி விடைபெற்றான். சிந்தனையுடன் அந்த ஏட்டை மீண்டும் மீண்டும் வாசித்தார் ஸ்தானகர்.
ஆதுரசாலைக்குள் சென்று படிகள் ஏறி விசித்திரவீரியனின் அறை வாசலில் நின்று உள்ளே பார்த்தார். அவன் பட்டுத்துணியாலான தூளித்தொட்டிலில் சுள்ளிக்கட்டுபோல தூங்கிக்கொண்டிருந்தான். அவர் மெதுவாக உள்ளே வந்து அவனருகே நின்றார். விசித்திரவீரியன் அரைத்துயில் கலைந்து சிவந்த விழிகளைத் திறந்து “சொல்லுங்கள் ஸ்தானகரே” என்றான். ஸ்தானகர் சொல்வதற்கு முன்னரே “எப்போது?” என்று கேட்டான்.
“கருநிலவில்” என்றார் ஸ்தானகர். “நினைத்தேன்” என்று சொல்லி விசித்திர வீரியன் கண்களை மூடிக்கொண்டான்.பின் “கருவுறுவதற்குச் சிறந்த நாள் இல்லையா?” என்றான். ஸ்தானகர் மெல்லிய புன்னகையுடன் “மிருகங்களை புணரச்செய்ய அந்நாளை தேர்ந்தெடுப்பார்கள்” என்றார். “ஆனால் வீரியமுள்ள ஆண் மிருகத்தைத்தானே தேர்ந்தெடுப்பார்கள்?” என்றான் விசித்திரவீரியன்.
“மிருகங்களில் அரசும் அரசனும் இல்லையல்லவா?” என்றார் ஸ்தானகர். விசித்திரவீரியன் கண்களை திறக்காமலேயே உரக்கச்சிரித்து “ஆனால் தாய் இருக்கும். அனைத்து வல்லமைகளும் கொண்ட காளி” என்றான்.
“அரசே, திருவிடத்திலிருந்து தொல்குடிமருத்துவர் ஒருவரை நம் தூதர்கள் அனுப்பியிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவரை சந்தித்தபின் நாம் முடிவெடுத்தாலென்ன?” ஸ்தானகர் கேட்டார். விசித்திரவீரியன் “இல்லை ஸ்தானகரே, இனி என் உடலை நான் வழிபட முடியாது. பொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்று அறிந்திருக்கிறேன். புகழும், செல்வமும், உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்கள். நான் உடலையே வழிபட்டு இதுநாள் வரை வாழ்ந்துவிட்டேன். இனி அதை செய்யப்போவதில்லை. இந்த உடல் இருந்தாலும் அழிந்தாலும் எனக்கு ஒன்றுதான்” என்றான்.
“அரசே, உடல் ஆன்மாவின் ஆலயம்” என்றார் ஸ்தானகர். “இல்லை ஆன்மாவின் சிதையா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டபடி விசித்திரவீரியன் எழுந்தான். “அரசியல் விவாதத்துக்கு வேதாந்தத்தை பயன்படுத்துவதற்கு வேதவியாசரின் அனுமதி உண்டா என்று தெரியவில்லை” என்றார் ஸ்தானகர். “அந்த ஆராய்ச்சி எதிரிநாட்டுக்கு தீவைக்கும்போது ஓதவேண்டிய வேத மந்திரம் என்ன என்ற இடத்திற்குத்தான் சென்று நிற்கும்.”
விசித்திரவீரியன் வெடித்துச் சிரித்தபடி எழுந்து அமர்ந்தான். “ஸ்தானகரே, இத்தனைநாளில் ஒரு கணம்கூட நான் என் மரணத்தை அஞ்சியதில்லை என்று அறிவீர்களா?” என்றான். “எனக்கு நான்கு வயதாக இருந்தபோது ஒருநாள் காய்ச்சலில் படுக்கையில் இருந்தேன். என்னை தொட்டுப்பார்த்த அரண்மனை மருத்துவர் அந்திக்குள் நான் உயிர்துறப்பது உறுதி என்று சொன்னார். நான் கண்களைமூடிக்கொண்டேன். அந்தி வர எவ்வளவு நேரமிருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை. ஆகவே ஒவ்வொருகணமாக நான் செலவிடத்தொடங்கினேன். என் அன்னையை எண்ணிக் கொண்டேன். அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால் கண்டேன். என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணுவணுவாகப் பார்த்தேன். நான் உண்ட இனிய உணவுகளை, பார்த்த அழகிய மலர்களை, கேட்ட இனிய இசையை என ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டே இருந்தேன்.”
“ஸ்தானகரே, முடிவேயில்லாமல் வந்துகொண்டிருந்தன நினைவுகள். எவ்வளவு அதிகமாக வாழ்ந்துவிட்டேன் என்று பிரமித்துப்போய் கிடந்தேன். அந்தியில் அரண்மனையின் நாழிகைமணி ஒலித்தது. இரவு வந்தது. என் நினைவுகள் முடியவில்லை. மேலும் மேலும் நினைவுகள். காலையொளி பளபளக்கும் இலைகள். இளங்காற்றில் மகரந்தபீடம் குலையும் மலர்கள். காற்றில் சிறகுகள் பிசிறிய பறவைகள். எவ்வளவு வண்ணங்கள் ஸ்தானகரே…. ஒருபறவையின் சிறகிலேயே எத்தனை வண்ணங்கள்! ஒவ்வொரு வேளையிலும் அவை மாறுபட்டுக் கொண்டிருக்கின்றன…. இவ்வுலகம் வண்ணங்களின் பெருக்கு. ஒலியின் பெருக்கு. மணங்களின் பெருக்கு. சுவைகளின் பெருக்கு….ஸ்தானகரே புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை.‘’
தன் சொற்களாலேயே வசியம் செய்யப்பட்டவனைப்போல விசித்திரவீரியன் பேசிக்கொண்டிருந்தான். “நான்குவருட வாழ்க்கையை அள்ளி நினைவாக்கிக்கொள்ள முயன்றேன். ஒருவருடத்தை, பின்பு ஒருமாதத்தை, ஒருநாளை. ஸ்தானகரே, ஒருநாழிகையை வாழ்ந்து முடிக்க இப்புலன்களும் இதை ஏந்திநிற்கும் சிறுபிரக்ஞையும் போதவில்லை. அன்று தூங்கிப்போனேன். விழித்தபோதும் நான் இருந்தேன். என் மீது குனிந்த அன்னையிடம் ‘அன்னையே நான் சாகவில்லையா’ என்றேன். ‘விசித்திரவீரியா, நீ இருக்கிறாய்’ என்றாள். அந்த வரி என் ஆப்தவாக்கியமானது. நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான். நான் இருக்கிறேன். அதை பலகோடிமுறை எனக்குள் சொல்லிக்கொண்டேன். இங்கே இதோ நானிருக்கிறேன். அவ்வரியிலிருந்து ஒவ்வொருகணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்..”
ஸ்தானகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார். அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை.
“மறுநாள் நான் உணர்ந்தது என் வாழ்நாள் எவ்வளவு பெரியது என்றுதான். அந்த ஒருநாளை நான் தாண்டியபோது வெகுதொலைவுக்கு வந்திருந்தேன். போதும் போதும் என அகம்நிறைய வாழ்ந்துவிட்டிருந்தேன். ஆனால் மறுநாளும் எனக்குக் கிடைத்தது. அதன்பின்னர் ஒவ்வொருநாளாக இதோ பதினான்கு வருடங்கள். இக்கணம் இறந்தால்கூட என் வாழ்க்கை ஒரு வெற்றிதான் ஸ்தானகரே. வாழாது இருந்துகொண்டிருந்தவர்களுக்குமட்டும்தான் மரணம் என்பது இழப்பு….அச்சமில்லை. மரணத்தின் மீது அச்சமில்லை என்பதனால் எதன்மீதும் அச்சமில்லை.” அவர் கண்களை நோக்கி விசித்திரவீரியன் புன்னகை புரிந்தான் “நான் அவமதிப்பையும் அஞ்சவில்லை. ஏன் சூதர்பாடல்களில் ஒரு இளிவரலாக எஞ்சுவதைப்பற்றிக்கூட அஞ்சவில்லை.”
“அது சரிதான்” என்றார் ஸ்தானகர் “மாவீரராக இருந்தால் விதியின் இளிவரலாக எஞ்சலாம்” விசித்திரவீரியன் சிரித்து “அந்த சித்தர் வரட்டும். அவரும் என் உடலைக்கொண்டு மருத்துவம் கற்றுக்கொள்ளட்டும். என்ன சொல்கிறீர்?” என்றான். ஸ்தானகர் சிரித்தார்.
மறுநாளே சேவகர்களால் அழைத்துவரப்பட்ட திருவிடநாட்டு சித்தர் ஆதுரசாலைக்கு வந்துசேர்ந்தார். அவர் வண்டியில் இருந்து இறங்கியதும் ஸ்தானகர் ஒருகணம் திகைத்தார். மூன்றுவயது சிறுவனின் உயரமே இருந்தார் சித்தர். ஆனால் மிக முதியவர் என வெண்ணுரைபோன்ற தலைமுடியும் நீண்டு இருபுரிகளாகத் தொங்கி வயிற்றிலாடிய தாடியும் காட்டின. புதியனவற்றைப் பார்க்கும் சிறுவனின் அழகிய கண்களுடன் நிமிர்ந்து ஆதுரசாலையைப் பார்த்தார். ஸ்தானகரிடம் “அரக்கைப் பூசி இதை எழுப்பியிருக்கிறீர்கள் இல்லையா?” என்றார். “ஆம்” என்றார் ஸ்தானகர். அவர் “திருவிடநாட்டிலே நாங்கள் சுண்ணத்தை பூசுகிறோம்” என்றார்.
ஸ்தானகர் முதல் திகைப்பு அகன்று புன்னகைசெய்து “வருக சித்தரே, நான் மாமன்னர் விசித்திரவீரியரின் அமைச்சன். என்பெயர் ஸ்தானகன். உங்களை சிரம்பணிந்து வணங்குகிறேன்” என்றார். ஆசியளிக்காமல் சிறுவனைப்போல பரபரவென்று சுற்றிலும் நோக்கி “இங்கே ஏன் நீங்கள் சுண்ணம் கையாள்வதில்லை என்று சொல்லவில்லையே” என்றார் சித்தர். “இங்கே குளிரின்போது சுண்ணப்பூச்சு வெடிக்கிறது” என்றார் ஸ்தானகர். “மேலும் இங்கே சுண்ணம் மிக அரியது. அருகே கடல் இல்லை அல்லவா?”
“ஆம் உண்மை” என்று சொன்ன சித்தர் “என் பெயர் அகத்தியன். நான் திருவிடநகராகிய மூதூர் மதுரைக்கு இப்பால் பொதிகைமலையில் வாழ்பவன்.” ஸ்தானகர் வணங்கி “ஆசியளியுங்கள்” என்றார். ஆசியளித்தபின் அகத்தியர் “இந்நகரம் பெரியது…மதுரைக்கு நிகரானது” என்றார். ஸ்தானகர் “தென்னகர் மதுரையை இங்கே சூதர்கள் பாடுவதுண்டு. கடற்சிப்பியின் ஓடுகளால் கூரையமைக்கப்பட்ட அரண்மனைகளைப்பற்றி நான் கனவுகண்டிருக்கிறேன்” என்றார்.
“ஆம், அவை பரத்தையர் வீதியின் மாளிகைகள். உங்கள் வணிகர்கள் அங்கு மட்டும்தான் வருகிறார்கள்” என்றார் அகத்தியர். ஸ்தானகர் புன்னகையை அடக்கி மெல்ல, “தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியரின் குருமரபில் வந்தவரா?” என்றார்.
“நான் அவரேதான்” என்றார் அகத்தியர். ஸ்தானகர் திடுக்கிட்டார். “இந்த தீபச்சுடர் அந்த திரைச்சீலையில் ஏறிக்கொண்டால் அதை வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்?” என்று அகத்தியர் சொன்னபோது தெளிந்தார். அகத்தியர் “இங்கே நீங்கள் என்னவகையான மதுவை அருந்துகிறீர்கள்?” என்றார். “பழரசங்கள்…சோமம்…” “அவையெல்லாம் சாரைப்பாம்புகள். நான் ராஜநாகத்தைப்பற்றி கேட்டேன்.” ஸ்தானகர் திகைத்து “அப்படி ஏதும் இங்கே இல்லை” என்றார். அகத்தியர் “தென்னக மதுக்கள் சிலவற்றைச் செய்ய நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.” என்றார்
சித்தர் படிகளில் தாவித்தாவி ஏறினார். “இந்தப்படிகளை நான் விரும்புகிறேன். இவை நான் ஏறும்போது அதிக ஒலி எழுப்புகின்றன. பாண்டியன் கல்லால் படி கட்டியிருக்கிறான். நான் ஏறிசெல்வது எனக்கே தெரியாது.” திரும்ப படிகளில் தாவி கீழே வந்து கையைத் தட்டியபடி மீண்டும் மேலே சென்றார்.
“நான் என் நோயாளியை பார்க்கலாமா?’” என திடீரென்று அவர் கேட்டபோதுதான் ஸ்தானகர் அவர் மருத்துவர் என்னும் நினைவை அடைந்தார். “சித்தரே, தாங்கள் உணவுண்டு இளைப்பாறலாமே. தங்கள் சேவைக்கு என்னை அனுமதிக்கவேண்டும்” என்றார். “நான் இரவிலன்றி இளைப்பாறுவதில்லை. தாவரங்களிலிருந்து மட்டுமே காய்கனிகளை புசிப்பேன். ஓடும் நீரையே அருந்துவேன்.மரநிழல்களிலேயே துயில்வேன். எனக்கு எவரும் பணிவிடைகள் செய்யவேண்டியதில்லை” என்று அகத்தியர் சொன்னார். “எனக்குநானே பணிவிடைகளை செய்துகொள்வேன்.”
விசித்திரவீரியன் அறைக்குள் அகத்தியரை ஸ்தானகர் அழைத்துச்சென்றார். அரசன் எழுந்து வந்து அவர் பாதங்களில் பணிந்து வணங்கினான். ஆசியளித்தபின் அகத்தியர் ஒன்றும் பேசாமல் அந்த அறைக்குள் நடந்து சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். அவன் படுத்திருந்த மஞ்சத்தின் அடியிலும் தூண்களுக்குப் பின்னாலும் குனிந்தும் முழந்தாளிட்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த அகத்தியரை பார்த்தபின் ஸ்தானகரைப் பார்த்து விசித்திரவீரியன் புன்னகைபுரிந்தான்.
“என்ன பார்க்கிறீர்கள் சித்தரே?” என்றார் ஸ்தானகர். “ஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா?” என்றார் அகத்தியர். “ஆம், மனிதர்கள் பிறவியின் வலையிலும், குலத்தின் வலையிலும், செயலின் வலையிலும் அமைந்திருக்கிறார்கள் என்பார்கள் நூலறிந்தோர்” என்று சொன்ன ஸ்தானகரிடம் அகத்தியர் சுட்டுவிரலைக் காட்டி “கோடிவலைகள். கோடானுகோடி வலைகள். ஒவ்வொன்றிலும் கோடானுகோடி கண்ணிகள்…முடிவிலியையே அதில் ஒரு கண்ணி என்று சொல்லலாம்” என்றார்.
ஸ்தானகர் பிரமித்தவர் போல பேசாமல் நின்றார். அகத்தியர் “அந்த வலைகளை அறிய எவராலும் முடியாது. ஆனால் ஒரு வழி உள்ளது. அதை கணஞானம் என்கிறோம். இங்கே இப்போது இக்கணத்தில் மட்டும் அந்த வலையைப்பார்க்கிறோம். இந்த அறையில், இந்த கணத்தில் நிகழ்வதன் ஒரு பகுதிதான் நீங்களும் நானும் இவரும்” என்றார்.
ஸ்தானகர் இவருக்கு உண்மையில் மருத்துவம் தெரியுமா என்ற சிந்தனையைத்தான் அடைந்தார். “இவ்வறையில் இப்போது இருபத்தெட்டு மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்று அகத்தியர் சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்பினார். “இயற்கையில் மரணம் என்பது உண்ணப்படுவதுதல் மட்டுமே.”
விசித்திரவீரியன் கைகளைப் பற்றி நாடியைப்பிடித்தபடி “மெல்லிய அதிர்வு மட்டும்தான்” என்றார். விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “ஆம், அதை உணர்கிறேன் சித்தரே” என்றான். “மிகமெல்லிய சிலந்திவலை. மிகச்சிறிய சிலந்தி. அது தன்னுள் இருந்து தன்னை எடுத்து தாவித்தாவி நான்கு திசைகளையும் இணைத்துக்கொண்டே செல்கிறது. அதில் உதிர்ந்த ஒரு நீர்த்துளி அந்தவலையில் அதிர்ந்துகொண்டிருக்கிறது. இந்த அறையில் இந்த ஆதுரசாலையில் இந்தத் தோட்டத்தில் நிகழும் ஒரு அதிர்வினால்கூட அது உதிர்ந்துவிடலாம்” என்றார் அகத்தியர்.
விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “புரிந்துகொண்டேன் சித்தரே. என்றும் எனக்கு என் உடலுக்கான மருத்துவம் மீது நம்பிக்கை இருந்ததில்லை” என்றான். அவனை படுக்கச்செய்து அவன் நெற்றிமுதல் உள்ளங்கால் வரை தொட்டுத்தொட்டு ஆராய்ந்தார் சித்தர். “ஏழு பசுக்கள் கொண்ட மந்தை என உடலை எங்கள் நூல்கள் சொல்கின்றன. ஏழு தாமரைகள் விரிந்த தடாகம். ஏழு சக்கரங்களாலான இயந்திரம். ஏழுபொருள் கொண்ட சொல்.”
அவன் இடைக்குக் கீழே கையால் அழுத்தி “முதல்புள்ளி மூலாதாரம். திருவிடமொழியில் அளவைப்பதி என்போம். அதுவே காமம், அதுவே ஊக்கம், அதுவே உடலில் இருந்து உடலுக்குத்தாவும் நெருப்பு. அதில் நோயிருப்பதாக எண்ணித்தான் இதுவரை எல்லா மருத்துவர்களும் மருந்தளித்திருக்கிறார்கள். ஆனால் அது வல்லமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இளவரசர் வண்ணங்களை விரும்புகிறார். ஒலிகளை ரசிக்கிறார். உணவை சுவைக்கிறார். மூலாதாரத்தில்தான் வாழ்க்கையை அழகாக்கும் மூன்று தேவதைகள் வாழ்கிறார்கள். காதல்கொள்ளச் செய்யும் பிரேமை, ஒவ்வொன்றையும் அழகாக்கும் சைதன்யை, ஒவ்வொன்றையும் அன்றே அக்கணமே என்று காட்டும் ஷிப்ரை.”
ஸ்தானகர் “அப்படியென்றால்…” என்று ஆரம்பித்ததை பொருட்படுத்தாமல் அகத்தியர் தொடர்ந்தார். “அன்னத்தை அனலாக்கும் சுவாதிஷ்டானம் வல்லமை கொண்டிருக்கிறது. காற்றை உயிராக மாற்றும் மணிபூரகம் நன்றாக உள்ளது. ஆனால்…” விசித்திரவீரியன் மார்பைத்தொட்டு “குருதியை வெம்மையாக்கும் அநாகதத்தில் அனலே இல்லை. ஈசானருத்திரன் குடிகொள்ளும் ஆலயத்தில் மங்கிய விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்கிறது.”
ஸ்தானகர் “என்ன செய்வது சித்தரே?” என்றார். “இது விதிப்பயன். ஏற்றிய விளக்கிலிருந்து அனல் வந்துசேரவில்லை” என்றார் சித்தர்.
விசித்திரவீரியன் புன்னகையுடன் எழுந்து “வணங்குகிறேன் சித்தரே, தாங்கள் இங்கேயே இருந்து என்னை இதமாக வழியனுப்பிவிட்டுச் செல்லவேண்டும் என்று கோருகிறேன்” என்றான். அகத்தியர் “ஆம், அதுவே மனம் முதிரும் நிலை. ஒரு துளி உதிர்வதற்கு அப்பால் இதில் ஏதும் இல்லை. இத்துளி இங்கே இவ்வடிவில் இந்த ஒளியுடன் இருப்பதென்பது நிகழ்வுகளின் தகவெனும் முடிவின்மையில் ஒரு கணம். துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்’”என்றார்.
விசித்திரவீரியன் “அந்நிலையை நான் இன்னும் அடையவில்லை சித்தரே. நான் இறுதிநீரை விழுங்கும்போதெனினும் என்னில் அந்நிலை கூடவேண்டும். அதற்கெனவே தென்திசையில் இருந்து நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்” என்றான்.
“அரசே, எங்கள் குருமரபின் முதல்குரு கல்லால மரத்தடியில் அமர்ந்து அருளுரைக்கும் தென்றிசைமுதல்வன். அவனிடமிருந்து மெய்ஞானமடைந்த என் முதல்குரு அந்த பெருநீர்க்கடலை உண்டு தன்னுள் அடக்கிய குறுமுனி. இந்தக் கமண்டலத்தில் நான் வைத்திருப்பது அவர் உண்ட கடலில் அள்ளிய கைப்பிடி. இதில் ஒரு துளி நீர் உனக்கும் உரியது” என அகத்தியர் விசித்திரவீரியன் தலையில் கை வைத்து ஆசியளித்தார். “அரசே, அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும் சிமிழ்தலைப் பட்டு உயிர் போகின்றவாறும் அறிய எந்த ஞானமும் உதவாது என்றறிக. அஞ்சனமேனி அரிவை ஓர் பாகத்தன் கழலையே எண்ணிக்கொண்டிரு. ஓம் ஓம் ஓம்” என்று அகத்தியர் சொன்னார். விசித்திரவீரியன் கைகூப்பினான்.
கருநிலவு நாளில் விசித்திரவீரியன் அரண்மனைக்கு தேரிலேறிச் சென்றான். அங்கே அவனை பாங்கர் நறுமணநீரால் நீராட்டினர். கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் அணிவித்தனர். இரவுக்குரிய வெண்பட்டாடை அணிவித்து சந்திரகலைக்குறி நெற்றியிலிட்டு சிகையில் தாழம்பூம்பொடி தூவினர். அவன் உள்ளறைக்குச் சென்று இரவமுது உண்ண அமர்ந்தபோது முதிய பாங்கன் உள்ளே வந்து வணங்கி “அரசே, உணவுக்கு முன் அருந்தவேண்டிய மருந்தொன்று உள்ளது” என்றான். அவனுடைய கண்கள் சிறிய செம்மணிகள் போலிருந்தன. “உன் பெயரென்ன?” என்றான் விசித்திரவீரியன். அவன் சற்று தயங்கியபின் “சங்குகர்ணன்” என்றான்.
விசித்திரவீரியன் சற்று வியந்து “நீ நாகனா?” என்றான். “ஆம் அரசே, நான் அரண்மனை விடகாரி. என்னிடம் பேரரசியார் இங்கே தங்களை பேணச் சொல்லி ஆணையிட்டார்கள்.” அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த விசித்திரவீரியன் அதிலிருந்த அச்சமூட்டும் கூறு என்ன என்பதை கண்டுகொண்டான். அவை இமையாவிழிகள். சங்குகர்ணன் கொடுத்த சிமிழை வாங்கி அதைத்திறந்து பார்த்தான். உள்ளே நீலநிறமான திரவத்தின் சில துளிகள் இருந்தன. அதை பீடத்தின்மேல் வைத்துவிட்டு “சங்குகர்ணா, உன் குலப்பாடலொன்றைப் பாடு” என்றான் விசித்திரவீரியன்.
“இது பாடுவதற்கான இடமோ சூழலோ அல்ல அரசே” என்றான் சங்குகர்ணன். “இன்னும் நேரமிருக்கிறது. பாடு” என்றான் விசித்திரவீரியன். “எதைப்பாடுவது?” என்று முதுநாகன் கேட்டான். “இக்கணத்தில் உன் குலமூதாதையர் உன் சொற்களில் எதைக்கொண்டுவந்து வைக்கிறார்களோ அதை” என்று விசித்திரவீரியன் சொன்னான். சங்குகர்ண முதுநாகன் தரையில் அமர்ந்தான்.
கண்களை மூடிக்கொண்டு மெல்ல ஆடிக்கொண்டிருந்தவன் அவர்களின் பாணியில் பேச்சென பாடத் தொடங்கினான். “அரசே, ஏழு காடு ஏழு மலைக்கு அப்பால், நீலமலை உச்சியில் ஒரு இருண்ட பெருங்குழி உள்ளது. அது ஆயிரம் காதம் ஆழம் கொண்டது. அதற்குள் சேறும் சகதியும் நிறைந்திருக்கும். சேற்றில் வளரும் கிழங்குகளும் சிறியகனிச்செடிகளும் மட்டுமே அங்கே வளரும். அதன் ஆழத்தின் இருட்டுக்குள் ஒளியே செல்வதில்லை.
“தீராக்கடனுடன் இறந்தவர்களுக்கும்,தீராச்சினத்துடன் இறந்தவர்களுக்கும், தீராத்துயரில் இறந்தவர்களுக்கும் விண்ணிலிருக்கும் மூதாதையரின் உலகில் இடமில்லை என்பதனால் அவர்களை பாடைகட்டி தூக்கிவந்து அந்தக்குழிக்குள் போட்டுவிடுவார்கள். முன்பொரு காலத்தில் ஒருபெண் கணவன் மீது கொண்ட தீராவன்மத்துடன் உயிர் துறந்தாள். அவளை மூதாதையர் ஏற்கவில்லை என்பது அவளருகே எரிந்த தீபம் அணைந்ததிலிருந்து தெரிந்தது. அவளைத்தூக்கிக் கொண்டுசென்று அந்தப் பெருங்குழியில் போட்டுவிட்டார்கள். அரசே. அவள் வயிற்றுக்குள் குழந்தை இருந்ததை அவர்கள் பார்க்கவில்லை.
“குழியில் விழுந்த இறந்த உடலைத் திறந்து வெளிவந்த குழந்தை அங்கேயே மூன்று வயதுவரை வாழ்ந்தது. ஒருநாள் பெருமின்னல் ஒன்று வெட்டியபோது மேலே வானமிருப்பதைக் கண்டது. அங்கே ஏறிச்செல்ல அது விரும்பியது. ஒவ்வொருநாளும் குழியின் விளிம்புகளில் தொற்றி ஏற முயன்றுகொண்டிருந்தது. அவ்வாறு நான்காண்டுகாலம் அது முயன்று தோற்றபோதிலும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் இடியோசை கேட்டு பயந்த பாதாளப் பெருநாகம் ஒன்று அக்குழிக்குள் தன் வாலைவிட்டுக்கொண்டு படுத்திருந்தது. குழந்தை அந்த நாகத்தின் உடலில் தொற்றி மேலே ஏறமுயன்றது. நாகத்தோலின் வழுவழுப்பில் சறுக்கிச்சறுக்கி விழுந்துகொண்டே இருந்தது.
“அவ்வாறு எட்டாண்டுகாலம் அது சறுக்கிவிழுந்தபின்னர் நாகப்பாம்பிடம் ஒரு வரம் கேட்டது. உன் தலையை உள்ளே விட்டு வாலை வெளியே விட்டு படுத்திருக்கமுடியுமா என்று. நாகம் அதை ஏற்றுக்கொண்டது. குழந்தை அந்த நாகத்தின் திறந்த பெருவாய்க்குள் தானே புகுந்துகொண்டது. நாகத்தின் வயிற்றுக்குள் மூன்று ஊர்கள் இருந்தன. முதல் ஊரில் நூறு அரண்மனைகள் நடுவே ஊர்மன்றில் ஒரு கலசத்தில் நீலநிறமான ஆலகால விஷம் இருந்தது. அதை உண்டதும் அக்குழந்தை நீலநிறமாக ஆனது. இரண்டாவது ஊரில் ஐம்பது அரண்மனைகள் நடுவே இருந்த ஊர்மன்றில் பால்குடம் இருந்தது. அதை உண்டு வெண்ணிறமானாது. மூன்றாவது ஊரில் ஒற்றை அரண்மனைக்குள் தேன் இருந்தது. அதை உண்டு அது மனித நிறம் கொண்டது. நாகம் வாலைத் திறந்து குழந்தையை வெளியே விட்டது. குழந்தை வெளிவந்து தன் குலத்துடன் சென்று சேர்ந்தது.”
“இந்தக்கதைக்கு என்ன பொருள்?” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அரசே, பொருளுள்ள கதைகளை சொல்பவர்கள் சூதர்கள். கதைகளை மட்டுமே சொல்பவர்கள் நாங்கள். எங்கள் கதைகள் கடலென்றால் உங்கள் கதைகள் நதிகள்போல. எங்கள் நீரிலிருந்து பிறந்து எங்களிடமே வந்து சேர்பவை உங்கள் கதைகள்” என்றான் நாகன். பின்பு அவன் அந்த மருந்தை விசித்திரவீரியனிடம் அருந்தச்சொன்னான். “உங்கள் உடலில் நாகரசம் சேரும். போகவல்லமை கூடும்” என்றான். கடும் கசப்புகொண்டிருந்த அந்த மருந்தை ஒரே மிடறில் விசித்திரவீரியன் விழுங்கினான். அது தீயென எரிந்து குடலை அடைந்தது. வெம்மையாக ஊறி ஊறி குருதியில் கலந்து உடலில் ஓடியது. சற்று நேரத்தில் விசித்திரவீரியனின் காதுமடல்கள் வெம்மை கொண்டன. மூக்கு நுனியும் கண்களும் சிவந்து எரிந்தன.
நாகன் அவன் வலக்குதிகால் மீது பின்பக்கத்தை வைத்து இடக்காலை மடக்கி அமர்ந்து தன் இடையில் இருந்து சிறு மகுடி ஒன்றை எடுத்தான். அதை இருமுறை ஊதிப்பார்த்தபின் வாசிக்க ஆரம்பித்தான். பெரிய தேனீ ஒன்று அறைக்குள் சுழன்று சுழன்று பறப்பதுபோல அந்த இசை ஒலித்தது. திரும்பத்திரும்ப ஒரே பண்ணில் வானில்சுழலும் புள்போல அது நிகழ்ந்துகொண்டே இருக்க அதற்கேற்ப சங்குகர்ணன் இடை நெளிய ஆரம்பித்தான்.
நெளிந்தாடிய சங்குகர்ணன் உடல் சற்று நேரத்தில் கயிறைப்போல வளைந்தது. படமெடுத்தாடும் நாகம்போல அவன் தரையில் வளைந்து சுருண்டு எழுந்து தழல்போல ஆடிக்குழைந்தான். மகுடி அவன் கையிலிருந்து விழுந்தது. அறைநடுவே எழுந்து கைகள் படமாக இரு கட்டைவிரல் நுனிகளில் நின்றாடினான். அவனுடைய இமையா மணிக்கண்கள் விசித்திரவீரியனைப் பார்க்காமல் அப்பால் நோக்கின.
“என் பெயர் சங்குகர்ணன்..வானமென கறுத்துவிரிந்த என் அன்னை கத்ரு நான் விரிந்து வந்த முட்டையை பிரியமுள்ள கண்களுடன் குனிந்து நோக்கி என்னை அவ்வாறு அழைத்தாள். காலங்கள் என் மீது காற்றென ஒழுகிச்செல்கின்றன. அரசே கேள், நான் அழியாதவன். என்னை குருகுலத்து இளவரசன் அர்ஜுனன் என்பவன் காண்டவ வனத்தில் எரிப்பான். அவன் பெரும்பேரன் ஜனமேஜயன் என்பவன் என்னை சர்ப்பசத்ர வேள்வியில் எரிப்பான். நான் அழிவின்மையின் இருளில் இருந்து தோல்சட்டையைக் கழற்றிவிட்டு புதியதாகப் பிறந்தெழுவேன்…”
மெல்லிய சீறல் ஒலிகளை விசித்திரவீரியன் கேட்டான். சாளரத்திரைச்சீலைகள் பாம்புகளாக நெளிந்தன. வெளியே நின்ற மரங்களின் அடிகளும் கிளைகளும் பாம்புகளாக மாறி நடமிட்டன. இலைப்பரப்புகள் படமெடுக்க தளிர்முனைகள் சர்ப்ப நாவுகளாகத் துடித்தன. அறைத்தூண்கள் கருநாக உடல்களாயின. பின் அவன் அமர்ந்திருந்த மஞ்சத்தின் கால்களும் நாகங்களாயின.