புல்வெளிதேசம் 19,மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் பயணம்செய்யும்போது வழிதவற வாய்ப்பே இல்லை. துல்லியமாக வழிகள் வகுக்கபப்ட்டு ஆவணபப்டுத்தப்பட்ட நாடு. பிரம்மாண்டமான ஒரு வரைபடம் போன்றது அது. வழிதவற முடியாத சாலையின் சோர்வூட்டும் அம்சம் என்னவென்றால் அதில் புதியவை என எதுவுமே நிகழ முடியாதென்பதே. அந்நிலையில் பயணத்தின் கவர்ச்சிகளில் முக்கியமான ஒன்று இல்லாமலாகி விடுகிறது. வழி தவறுவதென்பது நமக்கு முன் உள்ள சாத்தியக் கூறுகளில் நாம் முற்றிலும் அறிந்திராத ஒன்று திறந்து கொள்கிறது என்பதுதான்

14-4-2009 அன்று மெல்பர்னில் பேராசிரியர் காசிநாதன் எங்களை அழைத்துச் செல்ல வந்தார். இலங்கையில் பேராதனை பல்கலையில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். விட்கென்ஸ்டீனின் தத்துவத்தில் ஆராய்ச்சி செய்தவர். அவரது மைய ஆர்வமே தத்துவமும் விட்கென்ஸ்டீனும்தான். வழிதவறுவதற்காக மட்டுமே ஒரு பயணத்தை அவருடன் மேற்கொண்டோம்.

எந்த விதமான இலக்கும் இல்லாமல் ஒரு கார்ப்பயணம். மையச்சாலைகளை தவிர்த்தார். செயற்கைக்கோள் வழிகாட்டியை மூடினார். ஓட்ட ஆரம்பித்தார். விட்கென்ஸ்டீன் குறித்து நான் சந்தேகங்களாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவரது விளக்கங்கள் கச்சிதமாக இருந்தன. நடுவே இந்திய சிந்தனை குறித்த விவாதங்கள்.

சாலையோரமாக ஒரு பண்ணை. குதிரைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. குதிரைகள் மேய்வதைப் பார்க்கும்போது ஒருவகையான ஏக்கம் மனதில் எழுகிறது. என்ன ஒரு கம்பீரமான உடல். இறுகிய தசைகள். சிலிர்க்கும் பிடரி. பட்டுமின்னும் மயிர்ப்பரப்பு. காலடி தூக்கி வைப்பதில் தலை திருப்புவதில் நிற்பதில் மேடேறுவதில் என்ன ஒரு ஆண்மை. ஒரு ஆணழகன் அமர்ந்து அரிசியில் கல்பொறுக்குவதைக் காணும்போது ஏற்படுவது போல ஓர் ஒவ்வாமை.

மெல்பர்ன் நகரைச் சுற்றியுள்ள சிறிய கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். ஆஸ்திரேலியாவின் நகரங்கள் அமெரிக்காவை நகல்செய்கின்றன என்றால் கிராமங்கள் பிரிட்டனை நகல்செய்தவை என்று பட்டது. ஆனால் மிகவும் ‘புளோ அப்’ செய்யப்பட்ட பிரிட்டன்.ஒவ்வொரு வீடும் ஒன்றில் இருந்து பத்துபதினைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ‘கிராமம்’.

அந்த கிராமத்தை இணைப்பது, அந்த வீடுகளை ஒரு கிராமமாக உணரசெய்வது நடுவில் இருக்கும் கடைவீதி. அனேகமாக ஒரு கிலோமீட்டர் கூட நீளமில்லாத தெருக்கள். ஆனால் அகலமானவை, சுத்தமானவை, வசதியானவை. நாங்கள் சென்றபோது இலையுதிர்காலத்தின் ஆரம்பம் போல இலைகள் உதிர்ந்து கருங்கல் பாவப்பட்ட சாலையோரப்பாதையில் பறந்தன. கொஞ்சம் குளிர் கலந்த காற்று வீச ஸ்கர்ட்டை பற்றிக்கொண்டு ஒரு பெண் ஒடுங்கி நடந்து சென்றாள். காற்றில் கொஞ்சம் தூசி கலந்திருந்தது.

சிவராமனுடன்

தெருவில் பழைய பல கட்டிடங்களை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். அதன்மூலம்தான் அந்த தெருக்களுக்கு ஒரு வரலாற்றுத்தோற்றம் அல்லது தனித்தன்மை இருக்கிறது. நூறு வருடம் முன்பு அப்படியே ஏதோ பிரிட்டானியக் கட்டிடத்தை நகல்செய்து கட்டப்பட்ட மதுக்கடை ஒன்றின் முன் நிற்கையில் நினைத்துக்கொண்டேன், மனிதர்களுக்கு வரலாறு ஓர் ஆறுதலை அளிக்கிறது என்று. இங்கே எனக்குமுன் என் முன்னோர் வாழ்ந்தார்கள் என எண்ணுவது ஓர் இதமான உணர்வு. அது நமது தனிமையில் நமக்குத்தேவையாக இருக்கிறது!சிநாதன் அங்கும் ஒரு புத்தகக் கடையைக் கண்டுபிடித்தார். அந்தகிராமத்தின் நிறுவனங்கள் என்பவை சிலவே. நாலைந்து ‘பப்’கள். மதுக்கடை ஒன்று. மூன்று ஓட்டல்கள். வேளாண்மைப்பொருட்கள் விற்கும் சில கடைகள். உடைகள் பழுதுபார்க்கும் புராதனமான நிறுவனம் ஒன்று. ஒரு பலசரக்குக் கடை. அவ்வளவுதான். ஆனால் புத்தகக் கடை இருந்தது! அந்த பரந்த நிலவெளியின் தனிமையில் உயிர்வாழ புத்தகங்கள் இன்றியமைதவை போல. அவையும் முன்னோர் வாழ்ந்துசென்றதன் தடையங்கள் அல்லவா?

அது பழைய புத்தகக் கடை. வாசித்த புத்தகங்களை சில காசுகளுக்கு அங்கே கொண்டு விற்கலாம் . புதியவற்றை வாங்கிக் கொள்ளலாம். சின்னஞ்சிறு கிராமமானாலும்கூட அங்கே அத்தனை புத்தகங்கள் புழக்கத்தில் இருந்தன. நாவல்கள் மட்டுமல்ல பலவகையான துறைநூல்களும்கூட. காசிநாதன் அங்கும் நூல்கள் விட்கென்ஸ்டீன் ஏதேனும் உண்டா என்று பார்த்தார். இருந்தன! நான் புத்தகங்களை மேய்ந்தேன். வழக்கம்போல கொஞ்சம் தொடக்கங்களை வாசித்துப்பார்த்தேன். குடியேறலின் [எமிக்ரேஷன்] அவசியம் குறித்து ஒரு நூல்.

<br/><a href="http://i35.tinypic.com/6h7y3l.jpg" mce_href="http://i35.tinypic.com/6h7y3l.jpg" target="_blank">View Raw Image</a>

தொடக்க அத்தியாயத்தில் ஆசிரியர் குடியேறல்மூலம் குடியேறப்படும் நாடும் குடியனுப்பும் நாடும் எவ்வாறு பொருளியல் மேன்மை அடைகின்றன என்று விளக்கியிருந்தார். பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு வருடமும் முக்கியமான தேசிய விருது அந்நாட்டைவிட்டு வேறுநாடுகளில் குடியேரி பணம் சம்பாதித்து ஊருக்கு அனுப்புபவருக்கு அளிக்கப்படுகிறது என்று சொல்லி அவ்விழாவை விவரித்தபடி ஆரம்பிக்கிறது நூல். அதற்குள் காசிநாதன் திரும்பிவிட்டார். நான் அதை அங்கேயே விட்டு கிளம்பினேன்.

காரிலேயே மாலைவரை கிராமச்சாலைகளில் சுற்றிவந்தோம். ஒருகட்டத்தில் உண்மையாகவே வழி தவறி சம்பந்தமில்லாத இடங்களுக்கெல்லாம் சென்றோம். செங்குத்தான சரிவாக இறங்கும் சாலைகள். சருகுபரவிய சிறிய சாலைகள். ஆனால் எங்கும் காலியாகக் கிடக்கும் பெரும் நிலவெளியையும் அவ்வப்போது தனித்து கதவுகள் மூடி தியானத்தில் ஆழ்ந்திருக்கும் வீடுகளையும் மட்டுமே கண்டேன். கிராமம் என்றால் மக்களின் வாழ்க்கையால் உயிர் துடிக்கும் ஒரு பகுதி என்று எண்ணும் இந்தியக் கண்ணுக்கு அது ஏமாற்றம் அளிப்பதே.

மாலையில் திரும்பி வீடுவந்துசேர்ந்தோம். எங்கே போனீர்கள் என்றார் டாக்டர். எங்கும் செல்லவில்லை, செல்வதை மட்டுமே செய்தோம் என்று விளக்கினேன். ‘காசிநாதர் அப்படிப்பட்ட ஆள்தான். தத்துவம் படிச்சவர் எண்டா அப்டித்தான்’ என்றார் நடேசன். வழிதவறுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு துறையாக தத்துவத்தைக் கருதுகிறார் போலும்!

மறுநாள் சிவராமனுடன் மெல்பர்ன் நகரைச் சுற்றினோம். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவராமன் ஒரு கட்டிட வரைகலைக்காரர். அவரது மனைவிக்கு குமரிமாவட்டத்தில் திருவட்டார் பக்கம் அடைப்பிரதமன் எல்லாம் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். டாக்டர் நடேசன் எங்களை கொண்டுவந்து மெல்பன் நகர் நடுவே அவரிடம் ஒப்படைத்தார்.

சிவராமன் தத்துவவாதிக்கு நேர் எதிர். துல்லியமான மனவரைபடம் உள்ள மனிதர். மொத்த மெல்பர்ன் நகரையும் அலசி ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்தார். அவர் செல்லும்போதே மெல்பர்ன் நகரை மாற்றிக்கட்டிக்கொண்டிருந்தாலொழிய வழிதவற வாய்ப்பே கிடையாது. நகரத்தைச் சுற்றி ஒரு டிராம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாகர்கோயில் பார்வதிபுரம் முதல் பார்வதிபுரம் வரை ஓடும் பேருந்து போல. அதில் ஏறி வேண்டிய இடத்தில் இறங்கி வேடிக்கை பார்த்து மீண்டும் ஏறிக்கொள்ள வேண்டியதுதான்.

இளமழை அவ்வப்போது பெய்தது. குளிரும் இருந்தது. மெல்பர்னின் மையநகர் பகுதியை காலாலேயே நடந்து சுற்றிப்பார்த்தோம். விக்டோரியா மாகாணத்தின் பாராளுமன்றம் முன்னால் நின்று நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட வங்கப்புலியின் பிணமருகே நின்று படம் எடுத்துக்கொள்ளும் காலனியாதிக்க பிரிட்டிஷ்காரர் போல ஓர் உணர்வு. கொஞ்சநாளில் அங்கே ஒரு தமிழர் ஆட்சி செய்யாமலா போய்விடுவார்?

மெல்பர்ன் நகரத்தில் நடுநடுவே மழையில் நனைந்தும் அவ்வப்போது ஓடியும் பெரும் கட்டிடங்களைச் சுற்றி வந்தோம். சாலை ஒன்றைக் கடக்கும்போது வரிசையாக ரோல்ஸ்ராய்ஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ் கார்கள் நின்றன. எலலமே பழைமையானவை. அன்று ஆன்ஸாக் நாள் என்றார் சிவராமன். ஆஸ்திரேலியாவின் படைகள் கலிபோலியில் கொல்லப்பட்ட நாள். ஆகவே போரில் பங்குபெற்றவர்களின் வாரிசுகளும் முன்னாள் படைவீரர்களும் கௌரவிக்கப்படுகிறார்கள். பல முக்கியமான ராணுவ அதிகாரிகள் அவர்களின் பழைய கார்களில் பழைய சீருடைகளுடன் வந்திருந்தார்கள். கார்கள் காலத்தில் மெல்ல கலைப்பொருட்களாக ஆகிவிட்டிருந்தன. அவற்றின் பளபளப்பு தங்கம் மின்னும் உட்பக்கம் போன்றவை சென்றகாலத்தின் கம்பீரத்தை நினைவுறுத்தின.

 

மெல்பர்னின்  உயரமான கட்டிடம் யுரேகா டவருக்குச் சென்றோம். நுழைவுச்சீட்டு எடுத்து  அதை பார்க்கப்போனோம். 2002ல் இதன் பணிகள் ஆரம்பமாயின. 2006ல் முடிந்தது. ·பெண்டர் கட்சாலசிடிஸ் [ Fender Katsalidis] நிறுவனத்தால் வரையப்பட்டு குரோகோன் [ Grocon] நிறுவனத்தால் கட்டப்பட்டது இது. அதன் பிரதான சிற்பியான நொண்டா கட்சாலிடிஸ்[ Nonda Katsalidis] ஒரு முக்கியமான கலைஞர் என்று சிவராமன் சொன்னார்

297 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் 91 அடுக்குகள் கொண்டது. கீழே உள்ள ஒன்பது அடுக்குகளும் கார் நிறுத்துமிடங்கள். மிச்சமுள்ள அடுக்குகள் எல்லாமே குடியிருப்புகள். தனித்தனி கான்கிரீட் துண்டுகளாக கீழே வைத்தே செய்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் தூக்கி வைத்து கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடம் இது.

அதிவேக மின்தூக்கிவழியாக மேலே ஏறிச்சென்றோம். அங்கே நான்குபக்கமும் பார்ப்பதற்கான கண்ணாட்சிச்சாளரங்கள். வெளியே இளவெயில் பரவிய நகரம். அப்பால் யாரா உருகி வழியும் ஈயம் போல சென்று வளைந்து கிளைபிரிந்து கடலில் கலக்கும் காட்சி. உயரத்தில் இருந்து பார்க்கும்போது நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறோம். நகரங்களை, சமவெளிகளை. அப்போது சிறிய விஷயங்களில் இருந்து மனம் விலகிவிடுகிறது. ஒருவகையான அமைதியும் தியானநிலையும் கைகூடுகிறது.

பார்வைமேடையில் ஒரு வசதி. ஒரு கண்ணாடிப்பேழைக்குள் நாம் சென்றதும் அந்தப்பேழையை இயந்திரம் மூலம் தள்ளி கட்டிடத்தைவிட்டு வெளியே நீட்டச்செய்கிறார்கள். காலடியில் அதல பாதாளத்தில் பேன்கள் வரிசையாகச் செல்வது போல கார்கள். அவற்றின் கண்ணாடிகள் மின்னி சென்றன. வயிற்றை உயரத்தின்மீதான மானுட அச்சம் கவ்விப்பிடித்திருந்தது.

மேலிருந்து பார்க்கையில் தூரத்தில் ஒரு மைதானத்திலான்ஸாக் நாளுக்கான கொண்டாட்டங்கள் தொடங்குவது தெரிந்தது. ஒரு அணிவகுப்பு ஆரம்பமாகப் போகிறது. தாத்தாக்கள் தேமே என்றுதான் எல்லாவற்றையும் செய்தார்கள். கீழிறங்கி வந்தபோது உற்சாகமாக சிரிக்கும் தாத்தாக்கள் அணிவகுத்து சென்ற ஆன்சாக் பரேட் கடந்து செல்வதைப் பார்த்தோம்.

மெல்பர்ன் நகரின் மைய ஈர்ப்பான அருங்காட்சியகத்தையும் தேசியக்கலைக்கூடத்தையும் பார்த்தோம். கலைக்கூடத்தில்  முகப்பிலேயே குளோட் மோனேயின் பிரம்மாண்டமான வாட்டர்லில்லீஸ் ஓவிய வரிசையில் ஒன்று இருந்தது. ரெம்ப்ராண்ட், பிக்காஸோ போன்றவர்களின் ஓவியங்களுடன் ஆஸ்திரேலியாவின் முக்கியமான பல கலைஞர்களின் ஓவியங்கள் இருந்தன. ஹான்ஸ் ஹெய்ஸன், ·ப்ரெட் வில்லியம்ஸன் போன்றவர்களின் நிலக்காட்சி ஓவியங்களில் ஆஸ்திரேலியாவின் நிலத்தின் விரிவும் மௌனமும் அற்புதமாகப் பதிவாகியிருந்தன.

 

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நீளமான மண்சாலைகள். யாருமே நடக்காதபோது அவை தனிமையில் உறைந்து கிடக்கின்றன. சிலசமயம் ஒருவர் அதில் செல்லும்போது தனிமை இரட்டிப்பாகி விடுகிறது. அந்த மனிதர் சாலையின் தன்மையை இன்னும் துயரமான இனிமை கொண்டதாக ஆக்கிவிடுகிறார் என்று பட்டது.

ஆனால் நான் அங்கே கூர்ந்து கவனித்தது சர் சிட்னி நோலான் வரைந்த நெட் கெல்லி ஓவிய வரிசை. நெட்கெல்லி என்ற கலகக்காரனை விசித்திரமான காட்சிப்பிம்பங்கள் வழியாக சித்தரிக்க முயல்கிறார் நோலான். நெட்கெல்லி அவரே ஒரு இரும்புக்கவசத்தை தயாரித்து அதைப்போட்டுக்கொண்டு போலீஸிடம் போர் புரிந்தார். அந்த கவசத்தை அணிந்தபடியே அவர் நீதிபதிமுன் கொண்டுவரபப்ட்டார். அந்தக் கவசத்தை பலகோணங்களில் நோலான் நெட்கெல்லிக்கு குறியீடாக ஆக்கியிருந்தார். அந்த ஓவியங்கள் ஏன் என்னைக் கவர்ந்தன என்றே தெரியவில்லை.

நவினக்கலைகளின் காட்சியகத்தில் நவீன ஓவியக்கலையின் கிறுக்கும் மேதமையும் கலந்த பலவகையான ஓவியங்கள். விதவிதமான கலவைச்சித்திரங்கள். அபத்தமான வடிவங்கள். எல்லை மீறிப்பாயும் பிரக்ஞ்ஞை பொருள் வடிவம் கொண்டதன் தடையங்கள் அவை. சென்ற தலைமுறையில் கலை என்பது அடையாளம் என்ற வேருள்ள சொல்லாக ஒலித்தது. இன்று கலைத்தல் என்ற பொருளை நோக்கியே மனம் செல்கிறது

இயற்கை அருங்காட்சியகங்கள் நமக்குள் அபாரமான மன எழுச்சியை உருவாக்கக்கூடியவை. குறிப்பாக சிறுவயதில் அவை ஒரு மாபெரும் பிரபஞ்ச தரிசனமாகவே அமையக்கூடும். அங்கே கண்ணாடிக்கூண்டுக்குள் விதவிதமான ஆஸ்திரேலிய எறும்புகளின் உலகை அமைத்திருந்தார்கள். சின்னக்குழந்தைகள் கண்ணாடிக்குமி ஒன்றுக்குள் தலையை விட்டுக்கொண்டு எறும்புகளின் அன்றாட வாழ்க்கையை அருகே இருந்து பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவின் பல வகையான உயிரினங்களை அங்கே உறைந்த பொம்மைகளாகக் கண்டோம். மரணத்தின் கண்னாடித்திரைக்குதாப்பால் நின்றபடி அவை சத்தமில்லாமல் உறுமின

 

இரவில் அருண்மொழியும் சிவராமனும் ஒரு இந்திய ஓட்டலுக்குள் நுழைந்து சாப்பிட்டார்கள். நான் அந்த தெருவில் ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு நடந்தேன். மழையின் குளிர் இருந்தது. என்னைத்தாண்டிச் சென்றவர்கள் என்னைப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை. பெரும்பாலானவர்கள் கையில் புதிதாக வாங்கிய மதுக்குப்பிகளுடன் விரைந்து சென்றார்கள்.

சிவராமன் எங்களை டாக்ஸியில் ஏற்றிவிட்டார். டாக்டர் என்னிடம் நான் கிளம்பும்போது ஒரு கவரை தந்து அதில் பணம் இருப்பதாகவும் கவர் மீது விலாசம் எழுதப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார். தாமதமாகுமென்றால் டாக்ஸியில் வரும்படியும் பத்துடாலருக்குள் ஆகும் என்றும் சொன்னார். டாக்ஸி அவர் வீட்டுக்கு முன்னால் சென்று நின்றபோது நான் பார்த்தேன், 12 டாலர். உறைக்குள் இரு ஐந்து டாலர் மட்டுமே இருந்தது

நான் டாக்ஸிக்காரரிடம் இரு நோட்டுகளையும் கொடுத்துவிட்டு இரண்டு டாலரை இப்போது வீட்டுக்குள் போய் வாங்கிக்கொண்டு தருவதாகச் சொன்னேன். அவர் சம்மதித்தார். அருணாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள் இறங்கி நடந்து வீட்டுக்குள் போய் ஐந்து டாலருடன் வந்தாள். அதை டாக்ஸிக்காரரிடன் அளித்தேன். அவர் வாங்கிவிட்டு நோட்டுகளை கையால் தட்டியவர் நீங்கள் எவ்வளவு டாலர் கொடுத்தீர்கள் என்றார்.

பத்து என்றேன். இல்லை அவை ஐம்பது டாலர் நோட்டுகள் என்றார். நான் வாயைப்பிளந்தேன். மேற்கொண்டு  ஒருவருடம் அருண்மொழி அதைத்தான் சொல்லப்போகிறாள் என்றுதான் அப்போது மனம் ஓடியது. லூதியானாவைச்சேர்ந்தவர் டாக்ஸிக்காரர். தாடியில்லா சர்தார்ஜி. சிரித்தபடி பை சொல்லிவிட்டு கிளம்பினார். அருண்மொழி முகத்தைப்பார்க்காமல் நேராக வீட்டை நோக்கிச் சென்றேன்.

முந்தைய கட்டுரைகாந்தி,அம்பேத்கார், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறித்தவ விஜயதசமி