«

»


Print this Post

காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]


அரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள்.

இவர் தேசியவிடுமுறை நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று குஜராத்தில் போர்பந்தர் ஊரில் ஒரு பனியா குடும்பத்தில் 1822ல் பிறக்க நேர்ந்தது. இவர்களின் குடும்பத்தில் சமணத்தாக்கம் இருந்தமையால் சின்ன வயதில் இவர் யாரோ சமணத்துறவியை சாகும்நிலையில் கண்டதாகவும் அவர் மிகவும் கஷ்டப்படுவதனால் அவர் மகாத்மாதான் என்று சொல்லிக்கேள்விப்பட்டதாகவும் அன்றிலிருந்து அவர் தானும் ஒரு மகாத்மாவாக ஆவதற்காக மிஞ்சின வாழ்நாள் முழுக்க அல்லும்பகலும் பாடுபட்டதாகவும் தெரியவருகிறது.

 

File:Young Gandhi.jpg

சிறுவயதில் இவர் அதற்கான பரிசோதனைகளை ஆரம்பித்துவிட்டார். கெட்டில் என்ற சொல்லை தப்பாக எழுதி காதைப்பிடித்து திருகும் கலையில் வல்லவரான ஆசிரியரிடம் சிலேட்டைக் காட்டியது இவர் செய்த முதல் சோதனை. வேகாத ஆட்டிறைச்சியை தின்று அஜீர்ணத்தில் சிரமப்பட்டிருக்கிறார். மனைவிக்கு எழுத்தறிவித்தல்கூட சிறந்த வழிதான் என்று உணர்ந்தாலும் அதை இவரால் அதிக நாள் நீட்டிக்க முடியவில்லை. கல்விக்கும் மகாத்மாக்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை

அதன்பின்னர்தான் லண்டன் தன் சோதனைகளுக்கு மிகச்சிறந்த ஊர் என்று கேள்விப்பட்டு கிளம்பிச்சென்றார். லண்டனின் கடும் குளிரில் இவர் தினமும் காலையில் கொஞ்சம் கொஞ்சமாக மகாத்மாவாக மாறுவதை உணர்ந்து கொண்டிருந்தார். அதற்கேற்ப இவரது அன்னையிடம் கிளம்பும்போதே இரு சத்தியங்களை அளித்திருந்தார். மாமிச உணவை தொடுவதில்லை என்பது முதல் சத்தியம். இது இவர் மகாத்மாவாக ஆவதற்காக. பிறபெண்டிரை தீண்டுவதில்லை என்பது இரண்டாவது சத்தியம், இது அவர்களும் மகாத்மாக்களாக ஆவதை தடுப்பதற்காக.

லண்டனில் இவர் சைவ உணவுகளில் ஆராய்ச்சிகள் செய்தார். உணவை எந்த அளவுக்கு சகிக்க முடியாததாகச் செய்கிறோமோ அந்த அளவுக்கு அது ஆன்ம விடுதலையை அளிக்கிறது என்று இவர் கண்டுபிடித்தார். ‘ 1/உணவின்சுவை = ஆன்மீக விடுதலை’ என்ற இவரது தேற்றம் காந்தித்தேற்றம் எனப்படுகிறது. இது பின்னர் ரயில்வே கேண்டீன்களின் விதியாக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பலவகையான சோதனைகளுக்குப் பின்னர் ‘மகாத்மா இன் மேக்கிங்’ ஆக இவர் இந்தியா திரும்பி பம்பாயில் வாடகை வீடு பிடித்தார். அப்போது அது இன்றைபோல மகாத்மா ஆவதற்கான வழியாக அமையவில்லை. அதன்பின்னர் நீதிமன்றங்களுக்குச் சென்று சிவில் வழக்குகளைக் கவனித்து,  ஆவணங்களை வாசித்து, பலவகையான கடும் ஆன்ம சோதனைகளுக்கு தன்னை ஆளாக்கிக்கொண்டார். தான் மேற்கொண்ட எல்லா வழக்குகளிலும் இவர் மகாத்மா சோதனைகளைச் செய்தாலும்கூட அவை நீதிமன்றங்களில் வெற்றிபெற்றன. இதை மகாத்மாக்களுக்கு  இறைவன் கொடுக்கும் சோதனை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே இவர் இந்திய வழக்கறிஞர்கள் தாக்கப்படும் நிகழ்ச்சிகள் நிறைந்த தென்னாப்ரிக்காவுக்கு சென்று சேர்ந்தார். அங்கும் வழக்குகள் இவரது ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவவில்லை. இந்நிலையில் இவர் கறுப்பர்களுக்கு தடைசெய்யப்பட்ட முதல்வகுப்பில் இவர் ஏறி அமர்ந்திருந்தார். டிக்கெட் பரிசோதகரிடம் இவர் அந்த ஸ்டேஷனின் பெயரான  Pietermaritzburg என்பதை குஜராத்தி உச்சரிப்பில் சொல்லி அவரை வன்கொடுமைக்கு ஆளாக்கியமையால் தூக்கி ஸ்டேஷனில் கடாசப்பட்டார். அங்கே அமர்ந்து காந்தி ஆனந்தக் கண்ணீர்விட்டார். எப்படியும் மகாத்மா ஆகிவிடுவோம் என்பது அங்கேதான் அவருக்கு உறுதிப்பட்டது.

அடிவாங்கி அமரர் ஆவதற்கான போராட்டமுறையாக இவர் சத்யாக்கிரகம் என்ற போராட்ட முறையை உருவாக்கினார். சத்யம் என்றால் உண்மை. மகாத்மா ஆவதே அவரது உண்மையான ஆசை என நாம் அறிந்திருக்கிறோம். ஆக்ரகம் என்பது ஆசை. மேற்படி ஆசையுடன் இவர் ஆயுதப்படைகள் முன் வெறுங்கைகளை வீசிக்கொண்டு சென்றார்.  ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிமரபு என்பது எது முன்னுதாரணமோ அதைச் செய்வதாகும். முன்னுதாரணம் இல்லாத விஷயம் முன்னால் வந்தால் பிரிட்டிஷ் அரசு இயந்திரம் ஸ்தம்பித்துவிடும். இது சத்யாக்கிரகத்தின் பெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் இக்காலகட்டத்தில் காந்தி ஒரு பனியாவை பிறர் கழுவேற்றுவதற்கு தேவையான காரணங்களான எல்லாவற்றையும் செய்தார். தானே செருப்பு தைத்தார்,முடிவெட்டினார். உயிர்த்தியாகத் துணிவுடன் பிறருக்கும் இவர் முடிவெட்டிவிட்டதாகத் தெரிகிறது. தாழ்ந்த சாதிகளை தன்னுடன் சேர்ந்து தங்கவைத்தார். அவர்களின் மலத்தை அள்ளுமாறு மனைவியிடம் சொல்லிப்பார்த்தார். விளைவு நிகழவில்லை, அந்த அம்மையார் ஒரு அப்புராணி.

பெரும்புகழுடன் காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தார். காங்கிரஸ் மாநாட்டில் மதியச்சாப்பாட்டுக்குப் பின்னர் சுகமாக தாம்பூலம் மென்று மல்லாந்திருந்த பிரதிநிதிகள் நடுவே அவர்கள் ஏன் கக்கூஸ் கழுவக்கூடாது என்று அவர் பேசினார். அவர் எதிர்பார்த்ததுபோல அவரை மகாத்மாவாக ஆக்காமல் அவர்கள் திகைத்து வாய்பிளந்து நின்றுவிட்டார்கள். ஏன் என்றால் அவர்களெல்லாம் பிரிட்டிஷ் கைடு புத்தகங்களை வாசித்து தேர்வு எழுதி ஜெயித்தவர்கள். கைடுபுத்தகத்தில் இல்லாத விஷயங்களை அவர்கள் கேட்டால் வாய் திறந்து கண் பிதுங்கிவிடும்.

அக்காலத்தில் கடுமையான பஞ்சத்தால் கிராமவாசிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கும் சாப்பாடு இல்லை. பிரிட்டிஷார் அவர்களுக்கு மேலும் வரிகளை விதித்தார்கள். ஆகவே காந்தி அங்கே சென்று அவர்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை கற்பித்தார். அவர்கள் மிக எளிதாக அதைக் கற்றுக்கொண்டு போராடியபோதிலும் அவர்கள் போராடுகிறார்களா இல்லை வழக்கமான பட்டினியா என்பது அரசுக்கு தெரியவில்லை.

ஆகவே அரசுக்கு அவர்கள் கிளர்ந்து எழுந்துவிட்டார்கள் என்பதை தெரிவிப்பதற்காக காந்தி ஒரு போராட்டவழியை மேற்கொண்டார். அவர்கள் தங்கள் தெருக்களில் வீட்டருகே மலம் கழிக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டு கக்கூஸ்களை தோண்டி அதிலே மலம் கழிக்கச் செய்தார். மாறுதலை தெற்றென உணர்ந்த அரசு சமூக ஒழுங்கைக் குலைப்பதாகச் சொல்லி காந்தியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

காந்தி அதை மறுத்து சிறைக்குப்போனார். அங்கே அவர் தனக்குத்தானே எனிமா கொடுத்துக்கொள்வதைக் கண்ட அரசு அஞ்சி அவருடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. போராட்டம் வெற்றிபெற்றதும் காந்தியை அம்மக்கள் மகாத்மா என்று அழைக்கத்தலைப்பட்டார்கள். காந்தி உடனே அங்கிருந்து நேராக இமயமலைக்குப் போவதற்காக தயாரானார்.

அப்போது அவரைச் சந்தித்த ஒரு காங்கிரஸ்காரர் அவரை வெறுமே காந்தி என்று அழைத்ததாகவும் ஆகவே பயணத்தை ஒத்திபோட்டுவிட்டு மிச்சபேரையும் மகாத்மா என்று அழைக்க வைப்பதற்காக அவர் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. சர்க்கார் சொல்வதில் முக்கியமில்லாத விஷயங்களைச் செய்ய மறுப்பதே ஒத்துழையாமைப் போராட்டமாகும். அதாவது ரயிலில் ஏறலாம், அரசாங்கவேலைக்குப் போகக்கூடாது.

காந்தி அன்னியத் துணிகளை தீயிலே போடும்படி சொன்னார். தீ கட்டுக்கடங்காமல் போகுமென்றால் அதை அணைப்பதற்காக கதர் என்ற துணிவகையை இவர் கண்டுபிடித்தார். அதை உற்பத்திசெய்ய அனைவரும் சர்க்காவை சுற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்காலகட்டத்தில் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சுதந்திரப்போராட்டத்தை நடத்த முன் வந்தார்கள். நேருவும் அவரது நண்பர் கிருஷ்ணமேனனும் நாட்டுஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினால் வெள்ளையன் ஓடாமல் இருக்கமாட்டான் என்றார்கள். சுபாஷ் சந்திரபோஸ் வீட்டுக் கறிகாய்கத்தியால் துரையின் குஞ்சாமணியை நறுக்குவது ஒரு நல்ல வழிமுறை என்றார். சந்திரசேகர ஆசாத் பகத்சிங் போன்றவர்கள் ரயில் தண்டவாளத்தை பெயர்க்கலாம், வெள்ளைக்காரந்தானே ரயிலை விட்டது என்று வாதாடினார்கள்.

அவர்கள் முறையே ஜனநாயக சோஷலிசம், புரட்சிகர சோஷலிசம், புரட்சிகரபுரட்சிகரம் போன்ற பெரிய விஷயங்களைப் பேசியபோது மகாத்மா ஆவதற்கு இதுவே தருணம் என்று கண்ட காந்தி உப்புதான் உயிர்பிரச்சினை என்று சொல்லி ‘எல்லாரும் போய் ஆளுக்கொரு உப்பு அள்ளுங்கப்பூ’ என்றார். யாராவது ஒரு தரப்பு தன்னை போட்டுத்தள்ளும் என எதிர்பார்த்தார். அவர்கள் பிரிட்டிஷ் அரசு அதை செய்யட்டும் என்றார்கள். பிரிட்டிஷ் அரசு அவர்களே செய்வார்கள் என்று நினைத்தார்கள்.அதன் விளைவாக யாரும் ஒன்றும் செய்யாமல் உப்புசத்யாக்கிரகம் வெற்றிபெற்றது.

காந்தியும் இர்வினும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். அதன்படி இர்வின் காந்தியை மகாத்மா என்றும்,  காந்தி இர்வினை இர்வின் என்றும் ஒப்புக்கொண்டார்கள். வட்டமேஜைமாநாட்டுக்கு காந்தி கடும் குளிரில் சட்டையில்லாமல் சென்று, காலரா பரவியிருந்த வண்ணார்காலனியில் தங்கி, கோவணத்துடன் மகாராணியைப் பார்க்கச்சென்று, அவர்களின் விருந்தில் சாப்பிட்டு பல கோணங்களில் முயற்சிசெய்தும் அவரது மகாத்மா நோக்கம் நிறைவேறவில்லை.

ஆகவே அவர் அம்பேத்காருடன் போரில் ஈடுபட்டார். அம்பேத்கார் இந்தியச் சாதிமுறையினால் ஒடுக்கப்பட்டவர். ஒடுக்கியவர்கள் எங்கே என்று ஆவேசமாகத் தேடியபோது அவர்கள் செத்துப்போய் இருபது நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற தகவல்தெரிந்து கடுப்பில் இருந்தார். காந்தி நான் அவனே என்று அவர் முன் காட்சியளித்து மகாத்மாவாக முயன்றார். அம்பேத்கார் அதற்குத் தயங்கியபோது அவர் வந்து ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவேன் என்று உட்கார்ந்தும் பார்த்தார்.  அம்பேத்கார் ஊட்டி விடவும் தயாரானதனால் அந்த முயற்சியும் பாழ்பட்டது

காந்தி பலமுறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நடக்காத விஷயங்கள் நடக்கும்வரை சாப்பிடமாட்டேன் என்று சொல்வது அவரது பாணி.  ஆனால் அவரது உண்ணாவிரதங்களை திட்டமிட்டு பிறர் முறியடித்து அவரை பழரசம்  அருந்த வைத்திருக்கிறார்கள்.  ‘நாநூறுவழிகளில் பிறரைக் கடுப்பேற்றுவது எப்படி’ என்ற நூல் இவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சர்க்கார் வேலையை விட்டுவிடும்படிச் சொல்வதும் அதன் பின் அவர்கள் மனைவியரிடம்  கூப்பிட்டு நலம் விசாரிப்பதும் இவரது பாணி. மூவாயிரம் ரூபாய் கணக்குவழக்கில் மூன்று பைசாவுக்கு மூன்றுமனிநேரம் கணக்கு கோருவதும் உண்டு.

உண்ணாவிரதத்துக்கு முன்னால் எனிமா கொடுப்பதும் கொஞ்சம் மூத்திரம் அருந்துவதும் இவரது வழக்கம். பிறரும் மூத்திரம் அருந்தலாம் என்று இவர் சொன்னாலும் அதை காங்கிரஸ் காரியக்கமிட்டி முறைப்படி ஏற்கவில்லை. ராஜேந்திரபிரசாத்துக்கு அந்தச்சுவை பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. தொழுநோய்க்கு தண்ணீர்விட்டு கழுவுதல், காசநோய்க்கு தண்ணீர் விட்டு வாயைக் கழுவுதல், காலராவுக்கு தண்ணீரில் உப்பு போட்டு ஆசனவாயைக் கழுவுதல் போன்ற சிகிழ்ச்சை முறைகளை இவர் அந்நோய்கள் தனக்கு இல்லாதபோது தனக்கே வெற்றிகரமாக செய்து பலன் கண்டார். இவை காந்திய சிகிழ்ச்சை எனப்படுகின்றன.

காமத்தைப்பற்றி இவர் மகாத்மாத்தனமான கொள்கைகளைக் கொண்டிருந்தார். ஆணும்பெண்ணும் கடவுளை மனதில் நினைத்துக்கொண்டே அகிம்சை வழியில் கலவியில் ஈடுபட வேண்டும் என்று இவர் சொன்னார். அப்போது  பெண்கள் ரகுபதி ராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதோ போன்ற பாடல்களை பாடுவதும் நல்லது. வருடத்திற்கு ஒருமுறை உறவு கொண்டால் போதும். அதை அரை அரையாக ஆறுமாதத்துக்கு ஒருமுறை செய்யலாம்.

காமத்தை நினைவூட்டும் எதையுமே செய்யக்கூடாது என்று காந்தி சொன்னார். ஆகவே இசை, ஆடல், பாடல், ஓவியங்கள்,நாடகம், சினிமா போன்ற எல்லா நுண்கலைகளையும் இவர் விலக்கினார். ஏப்பம் விடுவது சாப்பாட்டை நினைவூட்டுவதனால் அதுவும் இவரால் தடைசெய்யப்பட்டது. உண்ணாவிரதத்தை சிறந்த காட்சிக்கலையாகவும் எனிமாகொடுத்தலை நிகழ்த்துகலையாகவும் இவர் கண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

தான் அம்பேத்காரால் ஊட்டப்பட்டதை மேல் ஜாதியினர் எதிர்க்கிறார்கள் என்று கண்டதும் இவர் உற்சாகம் அடைந்து சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதோடல்லாமல் மேல்சாதியினர் வாழும் இடங்களுக்கு மூன்றாம்வகுப்பு ரயிலில் பயணம் வேறுசெய்து பார்த்தார். அவர் மேல் குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் பயன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜின்னா என்பவர் உயர்சாதி முஸ்லீம்களுக்காக ஒருநாடு தேவை என்று நினைத்து பாகிஸ்தான் கோரிக்கையை எழுப்பினார். ஆகவே வழக்கம்போல தென்னாட்டை சேர்ந்த கீழ்சாதி முஸ்லீம்கள் அதை ஆதரித்து ஓட்டுபோட்டார்கள். நேரடி நடவடிக்கை அல்லது மறைமுக ஜிகாத் என்ற செயல்மூலம் அவர் பாகிஸ்தானை கொடுக்காவிட்டால் இந்தியா பாகிஸ்தான் ஆகும் என்று தெளிவாகக் காட்டினார். காந்தி அகிம்சை சத்தியம் தர்மம் என்றெல்லாம் பேசி ஜின்னாவை கொடுமைசெய்தாலும் அவரும் மகாத்மாநிலையை நோக்கி இவரை உயர்த்துமளவுக்கு துணியவில்லை

காந்தி  ‘சர்க்கா சர்க்கா’ என்று சொன்னதை ‘சர்க்கார் சர்க்கார்’ என்று புரிந்துகொண்டு மக்கள் ரகளைகளில் இறங்கவே தொல்லை தாங்கமுடியாமல் வெள்ளைக்காரர்கள் ஊரைவிட்டுப் போக முடிவுசெய்தார்கள். இந்தியாவில் இருந்த எல்லா ஜமீன்தார்களையும் கூப்பிட்டு ‘நாட்டை வைச்சுக்கங்க.ஜாலியா சமர்த்தா சண்டை போடணும் என்ன?’  என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

இந்துக்களும் முஸ்லீம்களும் சண்டைபோட ஆரம்பித்தபோது கிட்டத்தட்ட காந்தி இங்கேதான் தனக்கு வாய்ப்பு என முடிவு கட்டினார். முஸ்லீம்கள் இந்துக்களைக் கொல்லும் இடத்துக்குப் போய் அகிம்சை பிரச்சாரம் செய்தால் முஸ்லீம்கள் மட்டுமே எதிரியாவார்கள், இந்துக்கள் ஆதரிப்பார்கள். இந்துக்கள் முஸ்லீம்களைக் கொல்லும் இடங்களுக்குப் போய் அகிம்சை பிரச்சாரம் செய்தால் இந்துக்கள் எதிரியாவார்கள், முஸ்லீம்களும் எதிரிகளாவார்கள் என்று உணர்ந்து நவகாளி என்ற ஊருக்குப்போய் அகிம்சை உபதேசம் செய்தார்.

நினைத்தது மாதிரியே இந்துக்கள் கடுப்பானார்கள். வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவர் விதியால் இதற்காக அனுப்பபட்டிருந்தார். இவர் பெண்கள் சம்பந்தமாக கட்டைப்பிரம்மசாரி. பிராமணர். ஆகவே காந்தியை கொல்ல இவர் துப்பாக்கியுடன் வந்து பிரார்த்தனை மண்டபத்தில் காத்திருந்தார். காந்தி கும்பிட்டபடி வந்ததும் இவர்  திருப்பிக் கும்பிட்டுவிட்டு சுட்டார்.

காந்தி ‘ஹேராம்’ என்று சொல்லிக்கொண்டே இறந்தார். இல்லை ‘ஹராம்’ என்றுதான் சொன்னார் என்று மதச்சார்பின்மை வாதிகளும் ‘அராம்’ என்றுதான் சொன்னார் என்று இந்திவாதிகளும் உண்மையில் அவர் ‘யாராம்?’ என்றுதான் கேட்டார் என்று தேவைநியாயப் பாவாணர் அவர்களும் சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் அவர் உடனடியாக மகாத்மாவாக ஆகி ரூபாய் நோட்டிலே சிரிக்கலானார்.

கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் கடுமையாக முயற்சி செய்து மகாத்மாவாக ஆன காந்தியின் கதை இளைய சமூகத்துக்கு முன்னுதாரணமாக ஆகத்தக்கது. முயற்சி திருவினை ஆக்கும் என செந்நாப்போதார் சொன்ன மொழிக்கு அண்ணல் அவர்களின் வாழ்க்கையே சிறந்த உதாரணம்.

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்/ Jul 20, 2009

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/4431

4 comments

3 pings

Skip to comment form

 1. vks

  உங்கள் தரத்திற்கு ஏற்ற எழுத்தாகத் தெரியவில்லை. ரசிக்க முடியவில்லை.
  உங்கள் எழுத்து ஜீவனைத் தொலைத்திருக்கின்றது.

 2. ananth

  ஓஷோ சொன்ன கதை, நீங்கள் தமிழில் மொழி பெயர்த்தீர்கள் என்று சொன்னால் நம்பி விடுவேன்.

 3. rengasamy

  gandhi”s date of birth is wrong

 4. Raj

  it shows ur freedom of expression ,ne ellam ethuku intha pomil poranthoyo

 1. jeyamohan.in » Blog Archive » காந்தி மேலும் கடிதங்கள்

  […] காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்பட… […]

 2. jeyamohan.in » Blog Archive » காந்தி, கடிதங்கள்

  […] காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்பட… […]

 3. jeyamohan.in » Blog Archive » காந்தி புதிய கடிதங்கள்

  […] காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்பட… […]

Comments have been disabled.