அன்புள்ள ஜெயமோகன்,
மேரி கொரெல்லி எழுதிய ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ என்ற நாவலை நீங்கள் சுருக்கிக் கொடுத்திருப்பதை படித்தேன். முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். மிக அருமையாகச் சுருக்கியிருக்கிறீர்கள். மூலநாவலையே எந்த இழப்பும் இல்லாமல் வாசிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கியது. இறுதிக்கட்டத்தில் போப்பாண்டவரிடம் கிறிஸ்து பேசும் வசனங்கள் தீவிரமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். முக்கியமான நாவலை அறிமுகம்செய்தமைக்கு நன்றி.
நாவலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லும்போது நீங்கள் மதம் என்ற அமைப்புக்கு அப்பால் செல்லக்கூடிய ஒரு ஆன்மீகத்தைப்பற்றி கற்பனைசெய்கிறீர்கள். இந்த மாதிரியான கற்பனையானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலிமையாக எழுந்த ஒன்றாகும். உங்களுக்கு தல்ஸ்தோய் மீதான ஈடுபாடும்கூட இப்படி உருவானது என்று நினைக்கிறேன். பொதுவாக மதம் உருவாக்கும் பண்பாட்டு விஷயங்கள் மேல் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. ‘பின் தொடரும் நிழலின் குரலி’ல் இறுதியில் உள்ள கிறிஸ்து வருகையும் இப்படிபப்ட்டதே.
முகஸ்துதியாகத் தோன்றவில்லை என்றால் சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலில் உள்ள கிறிஸ்து மேரி கொரெல்லியின் கிறிஸ்துவை விட ஆன்மீகமான சித்திரம். நீங்கள் புனித தாமஸின் அக்னாஸ்டிக் சவிசேஷத்தை தமிழக்கம் செய்ததிலும் இந்த தேடலையே காண்கிறேன். ஆனால் இந்த அணுகுமுறையானது முழுக்க முழுக்க கற்பனையானது, மண்ணில் கால் படியாத இலட்சியவாதத் தன்மை கொண்டது. இப்படி பேசியவர்கள் எல்லாமே இன்னொரு மதத்தை உருவாக்கும் இடத்தில்தான் சென்று நின்றார்கள். மேரி கொரெல்லி உள்பட. தல்ஸ்தோய் கூட ஒரு கட்டத்தில் ருஷ்ய தேசியச் சார்புள்ள ஆர்தடாக்ஸ் சர்ச்சின் நீட்டிப்புக்காக பேச ஆரம்பித்தார். அவர்கள் சொன்னதையே நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது அமைப்பு இல்லாத ஒரு மதத்துக்காக பேசுகிறீர்கள். டைனமிக் ரிலிஜியன் என்று அதை மேலைநாட்டு சிந்தனையாளர்கள் சொன்னார்கள். ஏன் என்றால் மதம் என்பது நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல தனிமனித ஆன்மீக கடைந்தேற்றத்துக்கான ஒரு பாதை மட்டும் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. மதம் என்பது மக்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே. பாரம்பரிய நினைவுகள் அவற்றில் இருந்து உருவான படிமங்கள் நம்பிக்கைகள் ஆகியவை அவ்வாறாக மக்களை ஒன்று சேர்க்க பயன்படுகின்றன.
உலகம் முழுக்க மதத்தின் முக்கியமான பங்களிப்பு என்பது இபப்டி ஒன்றுசேர்வதற்கான அடிப்படையாக அமைவதேயாகும். இதை தவிர்த்தால் பிறகு மதத்தில் என்ன மிஞ்சும்? மதம் மக்களை ஒன்று சேர்க்கிறது என்றால் அதற்கு மறுபக்கமும் உண்டு, கண்டிப்பாக அது மக்களை பிரிக்கவும் செய்யும். ஒருவரோடொருவர் மோதவும் வைக்கும். ஏனென்றால் பாரம்பரியங்களும் அமைப்புகளும் ஒவ்வொரு மதத்துக்கும் வேறு வேறானவை. யோசித்துப் பாருங்கள், நீங்கள் ஆன்மீகத்துக்கான அடிப்படைப் படிமங்களாக ஏற்றுக் கோண்டிருக்கும் அனைத்தையும் மத அமைப்புதானே காப்பாற்றி உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தது?
நீங்கள் உள்பட உள்ள தனிமனித ஆன்மீக வாதிகளுக்கு ‘சுத்த கிறிஸ்து’ ஒரு பெரிய படிமம். அவரைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள். ஆனால் அந்த உருவகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கபப்ட்டது. அதற்கு முன் அபப்டி ஒரு படிமமே இல்லை. அந்த படிமத்தை அவர்கள் கத்தோலிக்க மதம் அளித்த சித்திரத்தில் இருந்துதானே உருவாக்கினார்கள். அதை கத்தோலிக்க மதம்தானே நூல்கள் வழியாகவும் ஓவியங்கள் சிற்பங்கள் வழியாகவும் உருவாக்கி நூற்றாண்டுகளாக நிலைநிறுத்தி காப்பாற்றிக் கொண்டுவந்தது? நான் போப்பாண்டவராக இருந்திருந்தால் மானுவேலிடம் என்ன சொல்லியிருப்பேன்? ”நீ இதையெல்லாம் பேச என் முன் இப்படி வந்து நிற்பதே நான் உட்பட உள்ள கத்தோலிக்க திருச்சபையின் நூற்றாண்டுக்கால பொதுக்கனவால்தான். நாங்கள் கண்ட கனவிலிருந்துதான் நீ உருவானாய். நீ எங்கள் நெஞ்சுக்குள் இருந்துதான் முளைத்து வந்தாய்… நீ திரும்பியும் அங்கேதான் போவாய்…” என்று சொல்வேன்.
கத்தோலிக்க திருச்சபை செய்தது எல்லாம் நல்லவை, சிறந்தவை என்று சொல்லமாட்டேன். [நான் அதன் அங்கி அணிந்த உறுப்பினர் ஆனாலும்] நீங்கள் அமைப்பின் தீமைகளைப்பற்றி சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அமைப்பு இல்லாமல் மதம் இல்லை. மதம் இல்லாமல் பாரம்பரியமே இல்லை. சமூக தீமைகள் எல்லாமே சமூகம் என்ற அமைப்பின் விளைவுகள். ஆகவே சமூகமே தேவை இல்லை என்று சொல்லி விடலாமா என்ன? இதை நான் எல்லா மதங்களுக்கும் பொதுவாக சொல்ல விரும்புகிறேன்.
கிளீட்டஸ். [தமிழாக்கம்]
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)