பகுதி நான்கு : அணையாச்சிதை
[ 1 ]
‘சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான்! எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி! சண்டி, பிரசண்டி, திரிதண்டி! அண்டங்களை அழிக்கும் அம்பிகை! நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’
நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். காலகாலங்களுக்கு அப்பால் என்றோ செம்மண்கலந்த சாணி மெழுகி, சக்கரக்கோலமிட்டு, மேருபீடத்தில் நவகாளியன்னையரை அமைத்து, ஊன்பலிகொடுத்து கொண்டாடும் விழவு ஒன்றில் முள்ளிருக்கையில் அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடி முழவைமீட்டி, பாடிக்கொண்டிருந்த சூதர்களில் வெறியாட்டெழுந்தது. எழுந்து கைநீட்டி கூந்தல்கற்றைகள் சுழன்று மார்பிலும் தோளிலும் தெறிக்க, விழிவெறிக்க, மதகரியின் முழக்கமென குருதியுண்ட சிம்மம் என வெறிக்குரலெழுப்பி அந்தக்கதையைப் பாடினர்.
‘சைலஜை, பிரம்மை, சந்திரகந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தை, கார்த்யாயினி, காலராத்ரி, சித்திதாத்ரி, மகாகௌரி! ஓருருவம் ஒன்பதாவதைக் கண்டேன்! ஒன்பதும் ஒருத்தியே எனத் தெளிந்தேன்.அம்பாதேவி! அழியாச் சினம் கொண்ட கொற்றவை! காலகாலக்கனல்! அன்னை! அன்னை! அன்னை!’ எனக் கூவி தாண்டவமாடினர். அங்கே அமர்ந்திருந்தவர்கள் கைகூப்பி ‘அவள் வாழ்க! எங்கள் சிரம் மீது அவள் பொற்பாதங்கள் அமர்க!’ என்று கூவினர்.
அரண்மனை கதவைத் திறந்து வெளியே சென்ற அம்பை விரிந்து பறந்த கூந்தலும் கலைந்து சரிந்த ஆடையும் வெறியெழுந்து விரிந்த சிவந்த கண்களும் கொண்டிருந்தாள். குறுவாட்கள் என பத்து கைவிரல்களும் விரிந்திருக்க, சினம்கொண்ட பிடியானை போல மண்ணில் காலதிர நடந்தபோது அரண்மனைச்சேவகர் அஞ்சி சிதறியோடினர். காவல் வீரர்கள் வாட்களையும் வேல்களையும் வீசிவிட்டு மண்ணில் விழுந்து வணங்கினர்.
சுழல்காற்றுபோல அவள் நகரத்துத் தெருவில் ஒடியபோது அஞ்சியலறிய குழந்தைகளை அள்ளியணைத்தபடி அன்னையர் இல்லத்து இருளுக்குள் பாய்ந்தோடினர். பசுக்கள் பதறி தொழுவங்களில் சுழன்றன. நாய்கள் பதுங்கி ஊளையிட்டன. நகரமெங்கும் யானைகள் கொந்தளித்தெழுந்து மத்தகங்களால் மரங்களை முட்டி பேரொலி எழுப்பின. கருக்குழந்தைகள் சுருண்டு குமிழியிட்டன. வீடுகளின் கதவுகள் மூடப்பட்டன. தெய்வங்களின் கருவறை தீபங்கள் கருகியணைந்தன.
எரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. நகரை அவள் நீங்கும்தருணம் எதிரே ஓடிவந்த முதியவள் ஒருத்தி முழங்காலுடைபட மண்ணில் விழுந்து இருகைகளையும் நீட்டி “அன்னையே! எங்கள் குலம்மீது உன் சாபம் விழலாகாது தாயே” என்று கூவினாள். “பெற்றபிள்ளைகளுடன் எங்கள் இல்லம் வாழவிடு காளீ.”
அம்பையின் வாயிலிருந்து நூறு சிம்மங்களின் உறுமல் எழுந்தது. முதியவள் அஞ்சி மெய்சிலிர்த்து அப்படியே மண்ணில் சரிந்தாள். அவள் சென்றவழியில் நின்ற அத்தனை மரங்களும் பட்டுக்கருகின. அவளை அப்போது பார்த்தவர்களனைவரும் குருடாயினர். அவள் சென்ற வழியில் பின்னர் மனிதர்கள் காலடிவைக்கவில்லை.
சூதர்கள் பாடினர். அவள் நகரை நீங்கி புறங்காடுவழியாக சென்றாள்.அவளை அன்று கண்ட மிருகங்களும் பறவைகளும்கூட தலைமுறை தலைமுறையாக அவளை நினைத்திருந்தன. அங்குள்ள அத்தனை உயிர்களும் ‘மா!’என்ற ஒலியைமட்டுமே எழுப்பின. பின்னர் கவிஞர் அதை மாத்ருவனம் என்று அழைத்தனர். பெண்குழந்தைகளை அங்கு கொண்டுவந்து அங்கே சுழித்தோடும் பாஹுதா என்னும் செந்நீர் ஆற்றில் மூழ்கச்செய்து முடிகளைந்து முதல்காதணி அணிவிக்கலாயினர். அங்கே அன்னைக்குக் கோயில்கள் இல்லை, அந்த வனமே ஒரு கருவறை என்றனர் நிமித்திகர்.
அம்பை சென்றதை அகக்கண்ணால் கண்டனர் சூதர்கள். காட்டை ஊடுருவி செல்லச்செல்ல முள்ளில் கிழிந்து, கிளைகளில் தொடுத்து அவளுடலில் இருந்து உடைகள் விலகின. பொற்சருமம் எங்கும் முட்கள் கிழித்த குருதிக்கோடுகள் விழுந்தன. அவற்றின் மீது புழுதிப்படலம் படிந்தது. கூந்தலெங்கும் மண்ணும் சருகுகளும் பரவின. இரவும் பகலும் அந்தியும் மாலையும் சென்று மறைய அவள் சென்றுகொண்டிருந்தாள். அவள் உடல்தீண்டிய காட்டு இலைகள் கருகிச்சுருண்டன.
காலைக்குளிர் உறைந்து சொட்டுவதுபோன்ற மலையருவியில் சென்று அவள் நின்றாள். அவளுடல் பட்டதும் அருவியில் நீராவி எழுந்து மேகமாகியது. மலைச்சரிவின் வானம் சுழித்த பொழில்களில் அவளிறங்கினாள். அவை கொதித்துக்குமிழியிட்டன. ஆங்காரம்கொண்டு மலைப்பாறைகளை ஓங்கி அறைந்தாள். அவை உடைந்து சரிந்தன. ஆலமர விழுதுகள் அவளைக்கண்டு அஞ்சி நெளிந்தாடின. மதவேழங்கள் மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்பிறக்கின. ஊன்வாய் சிம்மங்கள் பதுங்கிக் கண்களை மூடிக்கொண்டன.
அவளுடைய உடல்வற்றிச்சிறுத்தது. சருமம் சுருங்கிக் கறுத்தது. பதினெட்டாம் நாள் ஹ்ருஸ்வகிரி என்னும் மலையின் விளிம்பில் ஏறிநின்று ஒரு பிடாரி தொலைதூரத்தில் வசுக்கள் உருவிபோட்ட வைரமோதிரம்போல கிடந்த அஸ்தினபுரியைப்பார்த்தது. அதன் கரிய வாயில் இருந்து காடதிரும் பெருங்குரல் வெளிவந்து மதம்பொழிந்த யானைகளை நடுங்கச்செய்தது.‘சொல்லெனும் தீ!பழியெனும் தீ!ஆலகாலம் அஞ்சும் பெண்ணெனும் பெருந்தீ!’ பாடினர் சூதர்.
அவளைப்பற்றிய கதைகள் ஜனபதங்களெங்கும் பரவின. அவள் வனம்சென்று தவத்தில் ஆழ்ந்திருந்த பரசுராமனின் முன்னால் தன் கையால் ஓங்கியறைந்து எழுப்பி முறையிட்டாள் என்றனர். ‘ஊழியூழியெனப்பிறக்கும் அத்தனைபெண்களும் நின்றெரிந்த அந்த விஷக்கணத்தை வெல்லவேண்டும் நான். என் கையில் பீஷ்மனின் வெங்குருதி வழியவேண்டும். அவன் பிடர்தலை என் காலடியில் விழவேண்டும்’ என்றாள்.
’ஆம், இன்றே, இப்போதே’ என பரசுராமன் மழுவுடன் எழுந்தார். குருஷேத்ரப்போர்க்களத்தில் பீஷ்மரை அவர் எதிர்கொண்டார். மூன்று வாரங்கள் விண்ணிலும் மண்ணிலும் நடந்தபோரில் இருவரும் வெல்லவில்லை. பூமி அதிர்வதைக் கண்ட நாரதர் வந்திறங்கி ‘பரசுராமா, அவன் அன்னை கங்கைக்கு பிரம்மன் அளித்த வரம் உள்ளது. அவனைக்கொல்ல அவனால் மட்டுமே முடியும்’ என்றார். மழுதாழ்த்தி பரசுராமன் திரும்பிச்சென்றார்.
எரியெழுந்த நெஞ்சுடன் அவள் யமுனைக்கரைக்குச் சென்று அதன் நீரடியில் கிடந்து தவம்செய்தாள். ஒற்றைக்கால்விரலில் நின்று உண்ணாமல் உறங்காமல் தவம்செய்தாள். பீஷ்மனைக்கொல்லும் வரம் கேட்டு மும்மூர்த்திகளின் வாசல்களையும் முட்டினாள். அவள் உருகியழியும் கணத்தில் தோன்றிய கங்கை அன்னை ‘பீஷ்மனைக்கொல்ல உன்னால் இயலாது அம்பை. அவன் என் வரத்தால் காக்கப்படுபவன்’ என்றாள்.
‘அவ்வரத்தை வெல்வேன்’ என்று அம்பை தன் நுனிவிரலால் காட்டை எரித்து ஐந்துதிசை நெருப்புக்கு நடுவே நின்று தவம் செய்தாள். அவளைச்சுற்றி கரும்பாறைகள் உருகிவழிந்தன. செந்நெருப்பு நடுவே வெள்ளெலும்புருவாக நின்றாள். அவள் தவம் கண்டு இறங்கிவந்த சிவனிடம் தன் ஆறாநெஞ்சில் ஓங்கி அறைந்து அவள் கேட்டாள். ‘கருப்பை ஈன்று மண்ணுக்கு வரும் ஒவ்வொரு ஆண்மகனும் வணங்கியாகவேண்டிய பெண்மையின் அருங்கணம் ஒன்று உள்ளது. அதை அவமதித்தவனை நான் பலிகொண்டாகவேண்டும். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல்நெருப்பில் எரிந்தாகவேண்டும். ஆணை! ஆணை!ஆணை!’
‘அவ்வண்ணமே ஆகுக! அது என்றும் வாழ்வின் விதியாகுக!’ என்று சிவன் வரம் கொடுத்தார். ‘உன் கனலை முற்றிலும் பெறுபவன் எவனோ அவனால் பீஷ்மன் கொல்லப்படுவான்’ என்றார்.உச்சிமலை ஏறி பெருஞ்சுடராக எரிந்தெழுந்து அவள் ஆர்ப்பரித்தாள். தொலைதூர நகர்களெங்கும் அந்நெருப்பு தெரிந்தது என்றனர் பெயர்த்தியரை மடியிலிட்டு கதை சொல்லிய மூதன்னையர்.
அவள் நெஞ்சக்கனல் கெடுவதற்காக குளிர்விழியன்னை மீனாட்சியின் கோயில்களில் பெண்கள் நோன்பிருந்தனர். அவள் மூதன்னையர் வந்து அவளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று முக்கண் முதல்வன் ஆலயத்தில் குலமூத்தவர் வழிபாடுகள் செய்தனர் என்றனர் சூதர்.
மலையிலிறங்கிய காட்டாறு என அவள் சென்றுகொண்டே இருந்தபோது பிறைநிலவுகள் போல வெண் கோரைப்பற்களும் மதமெரிந்த சிறுவிழிகளும் செண்பகமலர்போல சிறிய காதுகளும் கொண்ட பன்றிமுகத்துடன், புல்முளைத்த கரும்பாறைபோன்ற மாபெரும் மேனியுடன் வராஹி தேவி அவள் முன் வந்து நின்றாள். அவர்களின் கண்கள் சந்தித்துக்கொண்டன. வராஹியின் உறுமலுக்கு அம்பை உறுமலால் பதிலளித்தாள். ‘ஆம் ஆம் ஆம்’ என்றது மரங்களிலோடிய காற்று.
உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின. அவன் முகத்தை நோக்கியபடி காலமின்றி உடலின்றி மனமின்றி அவள் அமர்ந்திருந்தாள். பின்பு விழித்தெழுந்து அச்சிலையில் எவரோ மலைக்குடிகள் போட்டுச்சென்றிருந்த செங்காந்தள் மாலையொன்றை கையில் எடுத்துக்கொண்டாள்.
மூன்றுமாதம் கழித்து சிம்மப்பிடரியும், பன்றிமுகமும், தீவிழிகளுமாக கையில்குருதிநிறம் கொண்ட காந்தள்மாலையுடன் அவள் கேகயமன்னனின் கோட்டைவாசலில் வந்து நின்றாள். அவளைக்கண்டு அஞ்சிய காவலர்கள் கோட்டைச்சுவரை மூடிக்கொண்டனர். கோட்டையின் கதவின்மேல் ஓங்கியறைந்து அவள் குரலெழுப்பினாள். “என் கண்ணீரைக் காண வாருங்கள் ஷத்ரியர்களே! என் நிறைகாக்க எழுந்துவாருங்கள்!” கரியகைகளைத் தூக்கி விரிசடை சுழலக் கூவினாள் “என்பொருட்டு பீஷ்மனின் மார்பை மிதித்து அவன் சிரத்தைக் கொய்தெடுக்கும் வீரன் உங்களில் எவன்?”
அவள் குரலைக்கேட்ட கேகயன் அரண்மனைக்குள் அஞ்சி ஒடுங்கிக்கொண்டான். படைகள் ஆயுதங்களுடன் தலை கவிழ்ந்து நின்றன. குலமூத்தோர் உள்ளறைகளுக்குள் பெருமூச்சுவிட்டனர். “உங்கள் விளைநிலங்களில் இனி உப்பு பாரிக்கும். உங்கள் களஞ்சியங்களில் ஒட்டடை நிறையும். உங்கள் தொட்டில்களில் காற்று இருந்து ஆடும்…வருக! எழுந்து வருக!” என்று ஓலமிட்டாள்.
மாகதனின் கோட்டைமுன் அவள் சென்று அந்த செங்காந்தள் மாலையை நீட்டியபோது அவன் தொழுத கைகளுடன் வந்து நின்று “இளவரசி, என்னையும் என் மக்களையும் காத்தருளுங்கள். என் சின்னஞ்சிறிய தேசம் பீஷ்மரின் கோபத்தைத் தாங்காது” என்றான். கண்கள் எரிய, பற்கள் தெரிய ஓசையிட்டுச் சிரித்து அவள் திரும்பிச்சென்றாள். சேதிநாட்டு மன்னன் அவள் வருவதைக்கண்டு கோட்டையை அடைக்கச்சொல்லி நகரைவிட்டே சென்றான். அவள் வரும் செய்தி ஷத்ரியர்களின் பிடரியைக் குளிரச்செய்தது. அத்தனை ஷத்ரியர்களின் வாசல்களிலும் அவள் நின்று அறைகூவினாள். ’என் அடிவயிற்று வேகத்துக்கு கதி சொல்லுங்கள். என் கொங்கைநெருப்புக்கு நீதி சொல்லுங்கள்’
உத்தரபாஞ்சாலநாட்டில் சத்ராவதி மாநகரின் புறங்கோட்டை வாசலில் அவள் குரல் எழுந்தபோது அமைச்சரின் ஆணைப்படி கோட்டைவாசல் மூடப்பட்டது. மந்திரசாலையில் தளபதிகளுடனிருந்த பாஞ்சாலமன்னன் சோமகசேனன் சிம்மத்திலேறிய துர்க்கை போல காற்றிலேறிவந்த அவளுடைய இடிக்குரலை கேட்டுக்கொண்டிருந்தான். ஒருகணத்தில் உடைவாளை உருவிக்கொண்டு “இனி பொறுக்கமாட்டேன் அமைச்சரே, இதோ இதற்காக உயிர்துறக்கவே நான் படைக்கப்பட்டிருக்கிறேன்…” என்று எழுந்தான்.
“அரசே, ஐந்து குழந்தைகள் கொண்டவர்களே வீட்டை பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஐந்துலட்சம் குழந்தைகளின் தந்தை நீங்கள்” என்றார் அமைச்சர் பார்கவர். “இப்பழியை பீஷ்மர் ஒருநாளும் பொறுக்கப்போவதில்லை. அஸ்தினபுரமெனும் யானையின் காலடியில் நாம் வெறும் குழிமுயல்கள்.”
“இன்று நின்றுவிட்டால் இனி ஒருநாளும் என் தந்தையை நான் நினைக்கமுடியாது அமைச்சரே” என்றான் சோமகசேனன். “இக்கணத்தில் மடியாமல் எப்படி இறந்தாலும் எனக்கு நரகம்தான்.”
”அரசே, வீரமரணம் ஷத்ரியர்களின் விதி. ஆனால் தேசம் களத்தில் அழிய நெறிநூல்கள் விதிசொல்லவில்லை. என் குலக்கடமை உங்களிடமல்ல, இந்தநாட்டு மக்களிடம்..” என்று பார்கவர் அவன் வழியை மறித்தார். “இதனால் உங்களுக்கு புகழ்வரப்போவதில்லை. தங்கள் குடியையும் குலத்தையும் அழித்தவர் என உங்களை உங்கள் மக்கள் பழிசொல்வார்கள். தலைமுறைகளுக்கு சொல்லிவைப்பார்கள். தனியொரு பழிக்காக தேசம் அழியலாகாது என்பதே அரசநீதி.”
“அமாத்யரே, தர்மம் தவறிய மன்னன் ஆளும் நாடு எப்படி இருக்கும்?” என்றான் பாஞ்சாலன். “அங்கே நடுப்பகலில் நரியோடும். வீட்டுமுற்றத்தில் வெள்ளெருக்கு வளரும். உள்ளறையில் சேடன் குடிபுகுவான் என்று சொல்கின்றன நூல்கள். நான் தர்மம் தவறினால் என் நாடு எப்படி வாழும்? பஞ்சத்திலழிவதைவிட அது நீதிக்காக அழியட்டும்…” என்ற பாஞ்சாலன் வாளை எடுத்துக்கொண்டான்.
”கிளம்புங்கள் வீரர்களே, நான்கு அக்குரோணிகளையும் ஷீரபதம் வழியாக நாளை இரவுக்குள் அஸ்தினபுரத்துக்குக் கொண்டு போவோம்… நம்முடைய படைகளை நான் பீதவனம் வழியாகக் கொண்டுபோகிறேன்… சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்…” என்று ஆணையிட்டபடி கவசங்களணிந்து பாஞ்சாலன் கிளம்பினான். அவனுடைய தளபதிகள் வாளும் கேடயமுமாக எழுந்தனர்.
“அரசே…இந்த மண்ணை அழிக்கவேண்டாம்……மக்களுக்காக நான் உங்கள் காலில் விழுகிறேன்” என்றார் பார்கவர். “தளகர்த்தர்களே, உங்கள் இச்சைப்படி செய்யலாம்…படைகளும் தேவையில்லை. நான் மட்டுமே சென்று களம்படுகிறேன்” என்றான் பாஞ்சாலன்.
“அரசே, எங்கள் குலமூதாதையர் அனைவரும் செருகளத்தில் வீழ்ந்தவர்கள். இங்கே நாங்கள் மடிந்துவிழுந்தால் அவர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள். ஆணைக்கேற்ப அரண்மனையில் நாங்கள் இருந்தோமென்றால் ஆயிரம் பிறவிகளில் அக்கடனை தீர்க்கவேண்டியிருக்கும்” என்றனர் அவர்கள்.
நகர்த்தெருவில் மன்னனின் படைகள் இறங்கியதும் மூடிக்கிடந்த கதவுகள் அனைத்தும் ஒரேகணம் வெடித்துத் திறந்தன. பெருங்குரலெழுப்பியபடி மக்கள் ஓடிவந்து திண்ணைகளிலும் பலகணிகளிலும் திரண்டு வாழ்த்தி மலர்தூவினர். ‘எரியட்டும் பாஞ்சாலம்…பத்தினிக்காக எங்கள் தலைமுறைகளும் அழியட்டும்….’ என அவர்கள் முழங்கினர். கண்ணீருடன் வாளைத்தூக்கி ஆட்டியபடி நடந்த பாஞ்சாலன் கோட்டையைத் திறந்து வெளியே வந்தான்.
வெளியே நின்றிருந்த அம்பையின் கோலம் கண்டு அதிர்ந்து சொல்லிழந்து முழந்தாளிட்டுப் பணிந்தது அவன் படை. “அன்னையே இதோ என் உடைவாள்! இதோ என் சிரம்! ஒருபெண்ணின் நிறைகாக்க ஒருதேசமே அழியலாமென்றிருந்தேன். ஓருலகமே அழியலாமென இன்றறிந்தேன். உன் காலில் என் குலமும் குடியும் நாடும் வாரிசுகளும் இதோ அர்ப்பணம்” என்றான்.
சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள்.
அம்பை நகர் நீங்கிய செய்திகேட்டு ஆதுரசாலை விட்டு ஓடிவந்த விசித்திரவீரியன் படைகளுடன் அப்போதே காட்டுக்குள் சென்று அம்பையைத்தேட ஆரம்பித்தான் என்றனர் சூதர். அஸ்தினபுரியின் மூன்று படைப்பிரிவுகள் தளகர்த்தர்கள் உக்ரசேனன்,சத்ருஞ்சயன்,வியாஹ்ரதந்தன் தலைமையில் அவனை தொடர்ந்து சென்றன.தப்தவனத்தையும் தசவனத்தையும் கண்டகவனத்தையும் காலகவனத்தையும் அவர்கள் துழாவினர். நூறுநாட்கள் அவர்கள் மலைச்சரிவுகளிலும் வனச்செறிவுகளிலும் அவளுக்காக குரல்கொடுத்து அலைந்தனர். ’இளவரசி’ என அவர்கள் மலைச்சரிவுதோறும் முழங்கிய குரலை காடு வன்மத்துடன் வாங்கி தன் இருளுக்குள் வைத்துக்கொண்டது.
விசித்திரவீரியனின் உடல் களைத்துத் துவண்டது. அவன் பார்வை மங்கி கைகால்கள் நடுங்கத்தொடங்கின. காட்டுணவை அவன் வயிறு ஏற்கவில்லை. உக்ரசேனன் அவனை வணங்கி “அரசே, நீங்கள் அரண்மனைக்குத் திரும்புங்கள். இளவரசி இல்லாமல் இந்த வனம் விட்டு வரமாட்டேன் என நான் உறுதியளிக்கிறேன்” என்றான். “இது என் குலத்தின் கடன்…இங்கேயே நான் இறந்தால் என் தந்தை என்னை வாழ்த்துவார்” என்றான் விசித்திரவீரியன். என் சடலமும் இங்கே எரியட்டும்.”
நூறு நாட்களுக்குப்பின் மலைப்பாறை ஒன்றின் மீது அவர்கள் ஓய்வெடுக்கையில் குகைச்சிம்மத்தின் பேரொலி ஒன்றைக்கேட்டு அஞ்சி எழுந்து அம்புகளையும் விற்களையும் எடுத்துக்கொண்டார்கள். உக்ரசேனனும் சத்ருஞ்சயனும் வியாஹ்ரதந்தனும் அந்த ஒலிவந்த திசைநோக்கி எச்சரிக்கையுடன் நடக்க பின்னால் விசித்திரவீரியன் பாறைகளில் கால் வழுக்க நடந்தான். மலைமடிப்புகளில் எதிரொலி எழுப்பிய அந்த கர்ஜனையைக் கொண்டு அங்கிருப்பது ஒன்றல்ல நூறு சிம்மங்கள் என்று அவர்கள் எண்ணினர்.
பாறைகளின் நடுவே கவந்தனின் வாய் எனத் திறந்திருந்த இருட்குகை ஒன்றுக்குள் இருந்து அவ்வொலி எழுந்துகொண்டிருந்தது. ஆயுதங்களுடன் உள்ளே முதலில் நுழைந்த உக்ரசேனன் விதிர்த்து பின்னடைந்தான். சத்ருஞ்சயன் பெருங்குரலில் அலறினான். விசித்திரவீரியன் அவர்கள் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தபோது அங்கே பெரும்பிடாரியொன்று வெறும்கைகளால் சிம்மம் ஒன்றை கிழித்து உண்டுகொண்டிருப்பதைக் கண்டான். அது அம்பை என்றறிந்தான்.
விசித்திரவீரியனுடன் வந்த அனைவரும் எலிக்கூட்டம் போல பதறி ஓடி விலகிய போதும் கூப்பிய கைகளுடன் பதறா உடலுடன் அவன் அங்கேயே நின்றிருந்தான். கையில் ஊனுடன், உதிரம் வழியும் வாயுடன் அம்பை அவனை ஏறிட்டு நோக்கினாள். விசித்திரவீரியன் திடமான காலடிகளுடன் அவளை அணுகி, தன் உடைவாளை உருவி அவள் காலடியில் வைத்து மண்டியிட்டான். “அன்னையே, நான் விசித்திரவீரியன், அஸ்தினபுரியின் இளவரசன். என் குலம்செய்த பெரும்பிழைக்காக என்னை பலிகொள்ளுங்கள். என் நாட்டை பொறுத்தருளுங்கள்” என்று சொல்லி தலைதாழ்த்தினான்.
அவனை விட்டுச்சென்ற படைகள் திரும்பி ஓடிவந்து குகைவாயிலில் திகைத்து நின்றன. பாறை பிளக்கும் ஒலியுடன் உறுமியபடி தேவி எழுந்து நின்றாள். அவள் தெய்வ விழிகள் அவனைப் பார்த்தன. அவளுக்கு அப்பால் மதவிழிகளில் குவிந்த இருள் என நின்ற பெரும்பன்றி உறுமியது. கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது. பின்னர் அவள் திரும்பி குகையிருளுக்குள் மறைந்தாள்.
அவள் கால்பட்ட இடங்களெல்லாம் கோயில்கள் எழுந்தன. அவள் வந்த கோட்டைவாயில்களில் விழித்த கண்களும் செந்நிற உடலுமாக வராஹிக்குமேல் ஆரோகணித்து காவல்தெய்வமாக அவள் நின்றிருந்தாள். அங்கத்திலும் வங்கத்திலும் கலிங்கத்திலும் வேசரத்திலும் அப்பால் திருவிடத்திலும் அவள் பாதங்களை ஜனபதங்கள் தலையிலணிந்தனர். சக்கரவர்த்திகுமாரிகள் குருதிபலிகொடுத்து அவள்முன் வணங்கி முதல் ஆயுதத்தை கையில் எடுத்தனர். வீரகுடிப்பெண்கள் அவள் பெயர்சொல்லி இடையில் காப்பு அணிந்தனர்.
பிறிதொரு காலத்தில் திருவிடதேசத்தில் நீலமலைச்சரிவில் ஒரு கிராமத்தில், கருக்கிருட்டு செறிந்து சூழ்ந்த அதிகாலைநேரத்தில், மாதிகையன்னையின் ஆலயமுகப்பில் கன்னங்கரிய உடலும் சுரிகுழலும் எரிவிழியும் கொண்ட முதுபாணன் துடிப்பறையை கொட்டி நிறுத்தினான். விழிநீர் வடிய புலிபதுங்கிச்செல்லும் தாளநடையில் பாடினான்.
‘பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தன’