இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

காசிரங்கா சரணாலயத்தில் ஒரு ஆண்யானை இறந்தது விரிவான அலைகளை ஊடகங்களில் உருவாக்கியது இயல்பே. ஏனென்றால் அந்த யானை ‘ஆதிமூலமே’ என்று அலறியபடி விழுந்து உயிர்துறந்திருந்தது. அதற்குச் சாட்சியாக இருந்த நான்கு வனக்காவலர்கள் தொலைக்காட்சித்திரையில் கண்ணீரும் கைகூப்பலுமாகத் தோன்றி அக்காட்சியை வருணித்தபோது நாடெங்கும் ஆத்திகர்கள் அழுதார்கள்.

காசிரங்கா காட்டுஅலுவலகம் சென்று அந்த யானையை தரிசனம்செய்ய தில்லியிலிருந்து தனிரயில்கள் விடப்பட்டன. அந்த யானை முக்தியடைந்த ஒரு ரிஷி என்று மதத்தலைவர் மகந்த் விஸ்வமோகன் மகாபாத்ரா கருத்துரைத்தார். யானைகள் ஒருபோதும் ஆதிமூலமே என்று அலறுவதில்லை என்பதை தில்லியைச் சேர்ந்த நாத்திகவாத அமைப்பான யுக்திவாத் சங்ஹடன் விரிவான ஆதாரங்களுடன் நிரூபித்தது. இந்திய பாரம்பரிய மருத்துவர் சங்கம் அந்தயானைக்கு மூலவியாதி இருந்ததா என்று ஆராயவேண்டும் என்று அரசைக் கேட்டு கொண்டது. ‘அறுவைசிகிழ்ச்சை தேவையில்லை’ என்ற தலைப்பில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அகில இந்திய அலோபதி கழகம் யானைக்கு மூலநோய் வருவதில்லை, அதிக எடை காரணமாக ரத்த அழுத்தம் மட்டுமே வர வாய்ப்புள்ளது என்றது.

அந்த யானை திரேதாயுகத்தில் ஆங்கிரீஸ முனிவரின் சாபத்தால் யானையாக ஆன ஒரு யட்சன் என்று வேம்பட்டி ஸ்ரீனிவாஸய்யா என்ற புராண அறிஞர் சொன்னபோது பிரச்சினை சூடு பிடித்தது. யானையை அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்ற கேள்வியே பிரதானமாக எழுந்து தேசிய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகளும் தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளில் விவாதமும் நடைபெற்றது. அமெரிக்க நிதியுதவி பெற்ற நவீன ஆய்வுகளின்படி திராவிடத் தமிழ்நாட்டில் யானைகளே கிடையாது, அவை ஆரிய இறக்குமதிகள், ஆகவே இப்பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பே இல்லை என்று எஸ்.எம்.பாண்டியராஜா என்ற ஆய்வாளர் சொன்ன கருத்து வழக்கம் போல தேசிய அளவில் அனைவரையும் விரிவாக மகிழ வைத்தது. இந்து அமைப்புகள் மத்திய அரசு பதவி விலகவெண்டுமென கோரி ஆர்ப்பாட்டம் கண்டன ஊர்வலம் முதலியவற்றை நிகழ்த்த இந்து அமைப்புகளை இடதுசாரிகள் கண்டித்தனர். பிரச்சினை சிக்கலானபோது அரசு வழமைப்போல ஒரு கருத்தறிவாளர் குழுவை அமைத்தது.

கருத்தறிவாளர் குழுவில் இந்துமெய்ஞான மரபைச் சேர்ந்த எல்லா தரப்பினரும் பங்குகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப ஒன்பது பேர் கொண்ட குழுவாக அது உருவாக்கப்பட்டது. அவர்கள் தனி ரயில்மூலம் காசிரங்கா காட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் வேதஞானியாகிய வாரணாசி கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரிஜி மஹராஜ் பல்லக்கு அன்றி எந்த வாகனத்திலும் ஏறுவதில்லை என்பதனால் அவரை பல்லக்கில் இருத்தி அதை அப்படியே சுமந்தபடி போகிகள் ஒரு கூட்ஸ் ரயில் பெட்டியில் ஏறி மெல்ல முன்னும்பின்னும் நடந்தபடி இருக்க ரயில் விரைந்து காசிரங்கா காட்டை அடைந்தது. அவருடன் அதே ரயிலில் வேதகோஷம் எழுப்பும் மாணவர்கள், ஒரு நாட்டுயானை, ஒட்டகம், கோவேறு கழுதை, பால் மற்றும் கோமூத்திரம் அளிக்கும் காராம்பசு, பின்பக்கத்தை பூசைக்குக் காட்டும் வெள்ளைப்பசு, பதாகை ஏந்திகள், பந்தமேந்திகள் முதலிய உயிரினங்களும் பயணம்செய்தன. அவர்களும் ரயிலுக்குள் நடந்துதான் சென்றார்கள்.

குவாஹாத்தியைச் சேர்ந்த ஏழு சோதிடர்கள் சேர்ந்து நன்னாள் குறிக்கையில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டமையால் தலைமைச்செயலர் தலைமையில் ஏற்பட்ட சமரசத்திட்டத்தின்படி மார்ச் ஏழாம் தேதிக்கும் எட்டாம் தேதிக்கும் நடுவே நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அலஹாபாதிலிருந்து இதற்கென வந்திருந்த வைதீகர்கள் கணபதி ஹோமத்தை தொடங்கி மறுநாள் வரை நீட்டி மங்கலமாக விவாதத்தை தொடங்கி வைத்தார்கள். அஸ்ஸாமியக் கலைமற்றும் பண்பாட்டு அமைச்சர் சந்திரதர பரூவா இந்தியப் பண்பாடு மிகவும் ஆழமானது என்று உரையாற்றி விவாதத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். விவாதத்தை ஒட்டி கலாமந்திர் சுஜாதா பாணிக்ராஹியின் கீதோபதேசத்தைச் சித்தரிக்கும் ஒடிஸி நடனமும் அஸ்ஸாமிய பழங்குடி நடனமும் நடைபெற்றது.

வேதஞானியாகிய கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்கள் பலசாதியினருக்கும் தரிசனம் கொடுக்க நேரும் தருணங்களில் மாட்டுத்தொழுவிலேயே தங்குபவராதலால் அவருக்காக காசிரங்கா காட்டில் இருபத்திரண்டு லட்ச ரூபாய் செலவில் டெல்லியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி வசீம் பதம்ஜி அவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழுவம் அச்சு அசல் தொழுவம்போலவே இருந்ததாக பாராட்டப்பட்டது. அதில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டப்பட்டு அதன் சாணியை உடனடியாக அள்ளி அகற்ற இரண்டு சேவகர்கள் நியமிக்கப்பட்டார்கள். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தொழுவுக்குள் விருந்தினர் அமர திண்டுகளும், அதிநவீன உலர்கழிப்பறைகளும், ஓய்வெடுக்க படுக்கையும், தொலைக்காட்சிப்பெட்டியும், கணிப்பொறியில் இணைய வசதியும் இருந்தன. ஏ.ஸி குளிரில் பசு நடுங்கியதனால் அதற்கு காஷ்மீரக் கம்பிளி போர்த்தப்பட்டிருந்தது.

நன்னாளில் வேதஞானியாகிய கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்கள் ஸ்தலத்துக்கு எழுந்தருளி தங்க சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவருக்கு அவரது ஏழு சீடர்களும் முப்பது உயரதிகாரிகளும் பதினேழு தொழிலதிபர்களும் அவர்தம் மனைவியரும் கால்கழுவி பாதபூசை செய்தனர். அந்த நீர் பக்தர்களுக்கு வினியோகம் செய்யபப்ட்டது. ஏழைகளின் தேவையை கருதி அத்துடன் பலகுடங்கள் நீர் மேலும் சேர்க்கப்பட்டு குறைந்தவிலையில் விற்கப்பட்டது. அதன் பின்னர் ‘கர்மதர்ம விதிகளின் பிரகாரம் அவரவர்களுக்கு விதிக்கப்பட்டவற்றை அவரவர் திறமைக்கேற்றபடி செய்து அவரவருக்குரிய முக்தியை அடையப்பெறுவது அவரவர் கடமையாகும்’ என்ற கருத்தை தன் முன்னோடியிடமிருந்து கற்றுக் கொண்டதன்படி நான்குமணி நேரம் உபன்யாசம் செய்து கேட்டவர்களுக்கு காணிக்கையாக வந்த வாழைப்பழங்களை எடுத்து எறிந்து கொடுத்த பின்னர் மகாராஜ் ஓய்வெடுக்கச் சென்றமையால் அன்றைய கூட்டம் அத்துடன் ஒத்திவைக்கப்பட்டது.

லூங்கா குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட கண்ணாடிபேழைக்குள் துதிக்கை சுருட்டி குறுகிப் படுத்திருக்க அதற்கு மத்திய காவல்படைப் பாதுகாப்பு இருந்தது. இரண்டாம்நாள் வழக்கம்போல ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அவர்கள் தனது பூஜை தரிசனங்களை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமானதனால் மதியத்தில்தான் விவாதம் ஆரம்பித்தது. முதலில் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அவர்கள் வேத மந்திரம் ஓதினார். பின்னர் மலர்ந்த முகத்துடன் ”இங்கே ஒரு திவ்யமான ஆத்மாவின் பரிசுத்தமான பரிபூரணத்தின் பொருட்டு நாம் கூடியிருக்கிறோம். அந்த ஆத்மா ராமநாமம் மூலம் முக்தியடைந்துள்ளது என்பதனால் அதன் உடலை நாம் முறைப்படி சம்ஸ்காரம் செய்து அந்த இடத்தில் ஒரு சமாதிஸ்தானம் அமைக்க வேண்டுமென்பதே சாஸ்திர விதியாகும்” என்று சொல்லி ”இதை வேதங்களில் இவ்வாறு சொல்லியிருக்கிறது. ‘ரிஜீஷனனே நீ சோமத்தைப் பருக இந்த தர்ப்பைக்கு விண்ணிலிருந்தோ வானிலிருந்தோ வா. உன்னுடைய குதிரைகள் நீ எங்கள் துதிகளைக் கேட்கவும் இன்பமாகவும் உன்னை இங்கு எங்களிடம் ஏந்தி வருவதாக!’ என்று… ”என்றார். உடனே இரு சீடர்கள் பக்தியுடன் கண்ணீர் மல்கி அவரை வணங்கினர்.

சற்று நேரம் அமைதி நிலவியது. சாங்கிய தரிசனத்தில் முனைவர் பட்டம்பெற்றவரும், இருபது நூல்களின் ஆசிரியருமான பிரதீஷ் பட்டாச்சாரியா மெல்ல தொண்டையைக் கனைத்தபடி ”…இந்த வேதவரிகளுக்கும் நாம் இங்கே பேசவிருக்கும் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று அறியலாமா?” என்றார்.

”வேதம் அனைத்துடனும் சம்பந்தமுடையது. ஆகவே அதற்கு சர்வஸ்வம் என்று பெயர். அது அனாதி. அனந்தம். சர்வ வியாபி. ரிக்வேதத்தில் ஏழாம் மண்டலத்தில் இருபத்துமூன்றாம் சூக்தத்திலே ரிஷி மைத்ராவருணி வசிஷ்டன் இவ்வாறு சொல்கிறான், ‘இந்திரனே மதமளிக்கும் இந்த பானங்கள் உன்னை போதைப்படுத்துக. துதிக்கும் எனக்கு வலியவனும் மிக்க செல்வனுமாகிய புதல்வனைக் கொடு. நீ ஒருவனே தேவர்கள் நடுவே மனிதர்களிடம் கருணையுடன் இருக்கிறாய். இந்த வேள்வியில் உனக்கு நல்ல போதையுண்டாகட்டும்’ என்று…”

சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியா திக்பிரமையடைந்து நியாயவைசேஷிக சிறப்பு அறிஞரான கோனேரி லட்சுமிநரசிம்மையாவை ஒருமுறை நோக்கியபின் எச்சிலை விழுங்கி ”…இந்த வரிகளின் சம்பந்தம் எனக்கு மேலும் புரியவில்லை” என்றார்.

”வேதங்களின் பொருளைக் கேட்பது வேதநிந்தை. வேதம் என்பது சப்தம். சப்தத்தை மட்டுமே கேட்கவேண்டும்…” என்றார் பூர்வ மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர்.

”அதெப்படி” என்று பிரதீஷ் பட்டாச்சாரியா ஆரம்பிக்க, கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் ”ரீமிக்ஸ் பாட்டையெல்லாம் கேட்கிறீர்கள் அல்லவா? அதுபோலத்தான்” என்று விளக்கி ”வேதத்தை சுருதி என்று சொல்கிறார்கள். வேதம் சுருதி என்றால் மீமாம்சமே நாயனமாகும். நாதஸ்வரத்தை கேளுங்கள், வம்பாக சுருதியைத்தான் கேட்பேன் என்று அடம்பிடிக்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார்.

”வேதநிந்தை ஆயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்துக்கு நிகர். வைதீகரை நிந்தை செய்தல் ஆயிரம் வேதங்களை பகுத்து ஆராய்ச்சி செய்த பாவத்துக்கு நிகர்” என்றார் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி சாந்தமாக.

”நாம் விவாதத்துக்கு திரும்புவோமா?” என்றார் அத்வைதியும் கவிஞருமான யதீந்திரநாத் கோத்தாரி ”இந்தக் காட்டில் ஒரு யானையை அனைவரும் தங்கள் ஐம்புலன்களால் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அந்த யானை ·பாஸம். அதைப்பற்றிய ஒட்டுமொத்தமான மனச்சித்திரம் பிரதி·பாஸம். அப்படியானால் இதோ கண்ணாடிக் கூண்டில் இருப்பது என்ன? இதுதான் இங்கே நாம் சந்திக்க வேண்டிய கேள்வி…”

‘செத்த பிணம் வேறு என்ன, ஆபாஸம்தான்” என்றார் வைசேஷிகரான மைசூரைச் சேர்ந்த கோனேரி லட்சுமிநரசிம்மையா.

”சாங்க்ய தத்துவத்தின்படி பிரபஞ்சம் என்பது ஐந்து பருப்பொருட்களின் கலவை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டு மென்றால் சிவப்பாக தாம்பூலம் உருவாவதுபோல நீர், நிலம், நெருப்பு,காற்று, வானம் என்ற ஐந்து பொருட்களின் கலவையால்தான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது…” பிரதீஷ் பட்டாச்சாரியா சொன்னார்.

”அப்படியானால் ஈஸ்வரன்?”என்றார் மீமாம்சகர் கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் பீதியுடன்.

”அது ஜரிதா. வேண்டுபவர்கள் வைத்துக் கொள்ளலாம். கும்மென்றிருக்கும்…”என்று சொன்ன பிரதீஷ் பட்டாச்சாரியா ”யானை என்பது ஐந்து பூதங்களினாலானது. ஐந்துபூதங்கள் தங்களுக்குள் சமநிலையில் இருந்தபோது பெருவெடிப்பு ஏற்பட்டு அவை–”

”மன்னிக்கவும்” என்று குழுவின் கால்நடை மருத்துவர் இடைபுகுந்தார் ”….யானை பெருவெடிப்பால் இறக்கவில்லை. அதன் பிருஷ்டத்தில் ஒரு வெடிப்பு இருந்தது உண்மைதான் என்றாலும்…”

குழுவில் ஏற்பட்ட பேரமைதியைக் கண்டு மருத்துவர் தயங்க சூழியலாளர் டேவிட் தருமன்  ”…உண்மையில் இயற்கையில் ஐந்து யானைகள் ஒருபோதும் சமநிலையில் இருப்பதில்லை. கொம்பனும் பிடியுமாக இரண்டு யானைகள்தான் சமநிலையில் ஈடுபடும். அதற்கு டிசம்பர் மாதம்தான் உரிய பருவகாலம். மேலும் அப்போது…..” என்றார்.

இரு உதவியாளர்கள் வந்து நிபுணர்களை அமைதிப்படுத்திய பிறகு விவாதம் நீடித்தது. ”பெருவெடிப்பில் அவற்றின் சமநிலை கலைந்து அவை ஒன்றோடொன்று தழுவியும் இணைந்தும் உருவாக்கிய கோடானுகோடி பருவடிவங்களில் ஒன்றே யானை என்பது. ஆகவே யானையை நாம் மீண்டும் பஞ்சபூதங்களுக்கு திருப்பியனுப்புவதே சிறந்த வழியாகும்” பிரதீஷ் மீண்டும் தொடர்ந்தார்.

”அதில் உள்ள ஈஸ்வரன்?” என்று மீமாம்சகர் கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் கடும்சினம் கொண்டு தொடையில் ஓங்கி அறைந்து கேட்டார்.

”அதை அதனிடமே மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிடலாம்.” என்றார் சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியா .

”யானை என்பது பல்லாயிரம் கோடி நுண்ணணுக்களினால் ஆனது. ஒவ்வொரு அணுவுக்கும் யானைத்தன்மை உண்டு. அதற்கு விசேஷாத் குணபர்யதை என்று சொல்வோம்…” என்று நியாயவைசேஷிகரான கோனேரி லட்சுமி நரசிம்மையா ஆரம்பிக்கவும் துவைதியான புல்லள்ளி பீமாச்சாரியார் உள்ளே புகுந்து ”யானைப்பிண்டம் யானையணுக்களினாலானதா இல்லை பிண்டாணுக்களாலானதா?” என்றார். விக்கித்துப்போன நியாய வைசேஷிகரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

மத்வ துவைதியான புல்லள்ளி பீமாச்சாரியார் புன்னகையுடன் ”யானையானது பிண்டத்தை உற்பத்தி செய்வது போல பிரம்மசொரூபனாகிய பெருமான் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்கிறார். போட்டுவிட்டு யானை தன் வழிக்கு போவதுபோல அவர் வேறு லீலைக்குப் போய்விடுகிறார். பிண்டத்தில் உருவாகும் பல்லாயிரம் பூச்சிகள் கிருமிகள் போன்றவை ஜீவாத்மாக்கள்….”

”நாம் நம் சுயசரிதையை விவாதிக்க இங்கே கூடியிருக்கவில்லை..”என்று சொன்ன அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி ”யானையன்றி வேறு எதுவுமே இல்லை. யானை மெய், பிண்டம் மாயை என்பதே உண்மையாகும்” என்றார். ”இதை பிண்டமாயை என்று சொல்லலாம். ‘கஜசத்ய:பிண்டமாயா’ என்று சூத்திரம்.”

”அந்த யானையை உரித்து அதன் தோலைப் போர்த்தியவர் எம்பிரான்…”என்றார் சைவசித்தாந்த சாகரம் தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளை.

”அந்த யானை ஆதிமூலமே என்று எங்கள் பெருமானை மட்டுமே அழைத்தது. சுடலைக்காட்டுப் பிச்சைக்காரர்களை அழைக்கவில்லை. சக்கரமேந்தி அவன் தோன்றி முதலைவாயிலிருந்து மீட்டான்” என்ற விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் .”அந்த முதலை ருத்ராட்சக் கொட்டை போட்டு முதலைக் கண்ணீர் வடித்ததாகவும் பேச்சு உண்டு” என்று தெளிவாகவே முணுமுணுத்தது பிள்ளைவாளுக்குக் கேட்டது.

”உங்காள் பிண்டத்துக்குக் காவல்னுதானே வேய் இப்ப உடுப்பிக்காரன் சொல்லிட்டுப்போனான். அவனைப்போயி கேளும்வே” என்று பிள்ளைவாள் தமிழில் எகிறியபோது ”நேர்ப்பேச்சு வாணாம்….நேர்ப்பேச்சு வாணாம். நேக்கு பயமா இருக்கு” என்றார் விசிஷ்டாத்வைதியான அய்யங்கார். பிற ஞானிகள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது.

”அணுக்கொள்கைப்படி யானை என்ற குணவிசேஷத்துக்கு யானை என்ற பருவடிவம் கிடைத்தது. அப்பருவடிவம் இல்லாமலானதனால் அதை என்ன செய்தாலும் யானையை ஒன்றும் செய்ததாக ஆகாது…” என்றார் கோனேரி லட்சுமிநரசிம்மையா. ”தன்மாத்ரைகளான விசேஷ குணங்கள் நிரந்தரமானவை.”

”குணவிசேஷம் அப்படி சரீரபூதத்தை விட்டுப் போவதில்லை. அது அழியாத கறைபோல எப்போதுமே படிந்திருக்கும் என்று மத்வர் மகாபாஷ்யத்திலே சொல்கிறார்” மத்வ துவைதியான புல்லள்ளி பீமாச்சாரியார் சொல்ல, ”அதைச் சொல்லணுமாக்கும்? உடுப்பி ஓட்டல் காபி டபராவைப் பாத்தாலே தெரியுமே” என்று பிள்ளைவாள் முணுமுணுக்க மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் அவரைப்பார்த்து லேசாகக் கண்ணடித்துச் சிரித்தார்.

”இப்படி தனித்தனியாக பேசவேண்டிய அவசியமே இல்லை. எல்லாவற்றையும் வேதங்களிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறது” என்றார் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ். ”பலவானாகிய மகவானே, நீ தாகமடைந்த மானைப்போல சோமரசம் இருக்கும் இடத்துக்கு துள்ளி ஓடி வா. விருப்பம் போல அள்ளிக் குடி….”

சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியா கண்ணீர் மல்கி உதடு துடிக்க நியாயவைசேஷிகரான கோனேரி லட்சுமிநரசிம்மையாவைப் பார்த்துவிட்டு ”எனக்கு இதன் இப்போதைய பொருத்தம் என்ன என்று எத்தனை யோசித்தாலும்…”என்று தழுதழுத்தார்.

”ரிக் வேதம் எட்டாம் பாதத்தில் ரிஷி தேவாதிதி கண்வன் சொல்லும் அந்த வரி ஆழமான தத்துவ அர்த்தம் கொண்டது. யக்ஞாதி கர்மங்கள் பிரபஞ்ச அனுஷ்டானங்களுக்கான ஸுக்ஷ்மதலத்துக்கான திருஷ்டாந்தங்களாக இருப்பதனால் அவற்றை நாம் ஓஜஸுள்ள ரஸம் அல்லது மது அல்லது அதிசூக்ஷ்மமான வியாக்யானத்திலே சொன்னோமென்றால் திவ்யமான ஆனந்தமாக எடுத்துக் கொள்ளும் போதுதான் சத்சித்ஆனந்தம் என்று சொல்லும் திரிமுக ஸ்வரூபநிலையில் பகவானை காண்கிறோம் என்று இந்தவரியிலே ரிஷி தாத்பரியப்படுத்துகிறார் என்பதோடு…” என மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் ஆரம்பிக்கவும் அத்தனைபேரும் பாய்ந்து அவரை முழுமையாக ஆமோதித்து அவர் பேச்சை நிறுத்தி ஆசுவாசப்பட ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் மென்மையாகப் புன்னகைசெய்தார்.

”ஆனந்தத்தைப் பற்றி பேசுவதானால் பிரம்மஸ்வரூபன் அக்கார அடிசிலிலே நெய் போல பரவி சர்வ மதுரமாய் நிற்கிறான் என்று பதினாறாயிரத்தெட்டாம் படியிலே சொல்லியிருக்கிறது…” விசிஷ்டாத்வைதியான ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் ஆரம்பித்தார்.

”ஏன், புளியோதரையிலே புளின்னு சொல்றது?” என்றார் பிள்ளைவாள், அய்யங்கார் காதில் விழும்படி.

”நேரில பேச வாணாம்னு சொல்லுங்கோ. நேக்கு பயம்மா இருக்கு ”என்றார் அய்யங்கார்.

அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி ”இதை இன்னொரு கோணத்திலே சொல்லலாம். யானையைப் பார்த்த ஒன்பது வெள்ளைத் தத்துவ ஞானிகளின் கதையை நாம் பள்ளிகூடத்தில் படித்திருப்போம். ஒருவர் அதன் வாலைத்தொட்டு கயிறு என்றார். இன்னொருவர் அதன் கால்களைப் பார்த்து தூண் என்றார். இன்னொருவர் அதன் தலையையும் தும்பிக்கையையும் பார்த்துவிட்டு மாபெரும் வாக்வம் கிளீனர் என்றார். பிண்டத்தை மிதித்துப் பார்த்துவிட்டு பிட்ஸா என்றவரும் உண்டு. ஆகவே ஒருபோதும் யானையை நம்மால் முழுதாகப் பார்த்துவிட முடியாது….”

சற்றே புன்னகைசெய்தபின் அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி தொடர்ந்தார் ”…அதாவது நாம் பார்க்கும் யானை யானையே அல்ல. ஆகவே யானையை நாம் பார்க்கவே முடியாது. ஆகவே யானையே இல்லை. இருப்பது யானையைப் பற்றிய நமது ·பாஸம்தான். நாம் யானையைப்பற்றி கேள்விப்பட்டவற்றையும் நாமே கற்பனை செய்து கொள்பவற்றையும் அந்த எளிய மிருகம் மீது ஏற்றுகிறோம். இதை நாங்கள் அத்யாரோபம் என்கிறோம்…” என்றார். ”பாவம், வாயில்லா ஜீவன். அத்தனை பெரிய அத்யாரோபத்தை அது எப்படித் தாங்கும்? எங்கள் மகாகுரு சங்கர பகவத்பாதரே சிஷ்யர்களின் அத்யாரோபம் தாங்காமல்தான் முப்பதுவயதிலே முக்தியடைந்தார் என்பார்கள்…”

”ஆகவே என்ன செய்வது?” என்றார் வைசேஷிகரான கோனேரி லட்சுமிநரசிம்மையா.

”உயிருள்ளவை அத்யாரோபத்தை தாங்காது. ஆனால் கல் தாங்கும். அதற்காகவே நமது முன்னோர்கள் கோயில்களில் கற்சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். இந்த சடலத்தை ஏதாவது செய்துவிட்டு இந்த யானைக்கு ஒரு நல்ல கற்சிலையை நிறுவலாம்…”

”அதைத்தானே நானும் சொல்கிறேன். அந்தச்சிலையைச் சுற்றி ஒரு கோயில் இருந்தால் சிலைக்குப் பாதுகாப்பு…” என்றார் மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர். ”அதைச்சுற்றி ஒருஅக்ரஹாரம் இருந்தால் கோயிலுக்கும் பாதுகாப்பு”

அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி ”அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் கோயிலுக்குப் போவதில்லை, மனைவிகளையே அனுப்புகிறோம்” என்றார்.

”ஆகவே நாம் மீண்டும் வேதஞானத்தையே வந்தடைந்திருக்கிறோம்…” என்றார் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ். ”ரிக்வேதம் எட்டாம் பாதத்தில் ரிஷி இந்திராதி கண்வன் பாடியதுபோல ‘அத்வர்யுவே நீ இந்திரனுக்கு சோமபானத்தை துரிதமாக ஊற்றிக்கொடு. அவன் தாகத்தோடு ஓடிவந்திருக்கிறான். அவன் தன் வலிமையான குதிரைகளை இணைத்து விருத்திரனைக் கொல்லப்போகிறான்’ என்பதல்லவா மெய்ஞானம்?”

சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியா கைகூப்பி கண்ணீர் வழிய ”என்னிடம் கருணை காட்ட வேண்டும். இந்த வரிகளுக்கு இங்கே என்ன பொருத்தம் என்பதை தயவு செய்து சொல்லியருளவேண்டும்” என்றார்.

மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் ஊடே புகுந்து, ”தெளிவாகத்தானே இருக்கிறது? ஸர்வகல்யாணசுகுண·பூஷிதனும் ஸர்வ மங்கலவி·பூஷிதனுமாகிய எம்பிரான் பிரபஞ்சாதி சிருஷ்டி ஜாலங்களையெல்லாம் காருண்யாதி அனுக்ரஹங்களினாலே போஷித்தும் ஜீவாம்ருதமாகிய ஊர்ஜம் வர்ஷித்தும் ஆண்டு கொண்டிருக்கிற தன் உஜ்வல மஹத்வ ஸ்வபாவத்தினாலே….”

பிரதீஷ் பட்டாச்சாரியா மீமாம்சகரான கும்பகோணம் ராமகிருஷ்ணய்யரின் காலடியில் போய் விழுந்தார். பிறர் அவரை தூக்கி ஆசுவாசப்படுத்த அவர் விம்மிக் கொண்டே இருந்தார். ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் தெய்வீகமாகப் புன்னகைசெய்தார்.

மத்வ துவைதியான உடுப்பி புல்லள்ளி பீமாச்சாரியார் ”துவைத சித்தாந்தத்தின்படி நாம் மரணத்தைப்பற்றி பொருட்படுத்தவேண்டிய தேவையே இல்லை. எம்பெருமானின் லீலையினாலே வாழும் ஜீவாத்மாக்களெல்லாம் பிறந்து இறந்து ஒன்று இன்னொன்றாக மாறிக் கோண்டே இருக்கின்றன…” என்றார்.

”உடுப்பி ஓட்டலிலே சோறு இட்லியா மாறுத மாதிரி…” என்றார் தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளை. கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் புன்னகை செய்தார்.

அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி உற்சாகமாக ”மரணமும் பிறப்பும் மாயை. ஏனென்றால் எது பிறப்பிறப்புக்கு ஆளாகிறதோ அது மாயை. அது ஏன் மாயை என்று கேட்டோமென்றால் அது மாயை இல்லை என்றால் அதை நம்மால் மாயை என்று சொல்லமுடியாது என்பதனால்தான். எது மாயை என்று உணரப்படுகிறதோ அதுவே மாயையாகும். மாயையை விஷயமாக அறிவதை ·பானம் என்கிறோம். விவேகசூடாமணியில் சங்கரபகவத்பாதர் என்ன சொல்கிறார் என்றால் பார்ப்பதெல்லாம் பார்க்கும் அறிவே. அறிவே அறியப்படுகிறது. அறிவே அறிவாக ஆகிறது. அறிவதும் அறியப்படுவதும் அறிபொருளாவதும் அறிவே. ஆகவே யானை என்பது தூயஅறிவேயாகும்…” என்றார். மேதமை தவழ புன்னகைசெய்து ”அறிவை அடக்கம் செய்வதா புதைப்பதா என்று என்ன பேச்சு? என்ன மதியீனம் இது?”

”பின்னே என்னதான் செய்வது?” என்றார் வைசேஷிகரான கோனேரி லட்சுமிநரசிம்மையா.

”அறிவை என்ன செய்ய வேண்டும்? அறிய வேண்டும். எப்படி? அறிவைப்பற்றி விவாதிப்பதன் மூலம்! அதைத்தான் நாம் செய்கிறோம். வேறு ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. அதுவே ஏதாவது செய்துகொள்ளும் வரை நாம் விவாதிக்க வேண்டியதுதான்…”

”வேதாந்தி ஒருவர் பிரம்மத்தைப் பார்த்தால் அதையும் வேதாந்த விவாதத்துக்கு அழைப்பார் என்பார்கள்” என்றார் கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர்.

”யானைக்கு ஏழறிவு. அதனால்தானே வினாயகப்பெருமானுக்கு துதிக்கை இருக்கிறது…” என்றார் பிள்ளைவாள் மையமாக. மேற்கொண்டு சொல்ல முனைந்து பிடி நிற்காமல் நழுவவே வழக்கமான சைவசித்தாத்ததிற்குள் சென்று அமைந்து ”பதி பசுவை மேய்க்கும் கோலே ஞானம். அதிலே முணு மலம் படிஞ்சிருக்கு…” என்றார்.

”சீச்சீ” என்றார் விசிஷ்டாத்வைதியான வரதாச்சாரியார் ”கைதவறி கீழ விழுந்துரிச்சோ?”

”டேய் குடுமி…உங்காளு மண்ண அள்ளி வாயில போட்ட மாதிரீண்ணு நெனைச்சியா? சைவத்த தொட்டே மவனே அசைவமாயிருவேன்…ஆமா” என்று பிள்ளைவாள் எகிற ”நேர்ப்பேச்சு வாணாம், நேக்கு பயமாருக்கு” என்று அய்யங்கார் அலறினார்.

”அமைதி அமைதி” என்றார் வேதஞானியாகிய கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்கள். ”…ஆகவே நமது விவாதம் இங்கே உரிய முடிவை அடைகிறது. சமாதியடைந்த பூஜ்ய கஜராஜனை வேதவிதிப்படி இங்கே பிரித்வி சம்ஸ்காரம்செய்து ஒரு ஆலயம் எழுப்பி வேதவிதிகளின்படி உரிய பூஜாதி கர்மங்கள் செய்து உலக க்ஷேமத்துக்கு ஆவன செய்ய வேண்டியது….”

”இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்று எண்ணுகிறேன்.. இதன் அடிப்படையில் நாம் உடனே இங்கு பேசப்பட்டவைக்கு ஒரு பதிவுக்குறிப்பு தயாரித்து மேலே அனுப்பி விடலாம்….” என்றபடி கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் ஓரக்கண்ணால் சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியாவைப் பார்த்தார். அவர் கண்ணீர்தளும்பிய கண்களுடன் வேதஞானி கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

”ஆகவே நாம் ஒரு மனதாக வேத விதிப்படி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்….” என்ற கும்பகோணம் ராமகிருஷ்ணய்யர் அனைவரையும் நோக்கினார்.

”அத்வைத வேதாந்தப்படி வேதம் பிரம்மம். பலிமிருகமும் பிரம்மம். ஹோதாவும் பிரம்மம். அக்னியும் பிரம்மம். பலி ஏற்கும் தேவனும் பிரம்மம். ஆகவே பிரம்மம் பிரம்மத்தைப்பற்றி என்ன சொன்னாலும் பிரம்மத்துக்கு அதனால் பிரச்சினை இல்லை. அதை நாம் தொந்தரவு செய்யாமலிருந்தால் போதும்…” என்றார் அத்வைதியான யதீந்திரநாத் கோத்தாரி.

”வேதத்துக்கு நாங்க எதிரிகள் கெடையாது. ஏன்னாக்க, வேதமே அந்தக்காலத்திலே குமரிக்கண்டத்திலே இருந்த சைவப்பிள்ளைமார் செஞ்சதுதான்” என்று சைவ சித்தாந்தி தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளை தமிழில் சொன்னார்.” அங்கேருந்துதான் திருநவேலிக்கு வந்து குடியேறியிருக்காஹ. நம்மாளு ஒருத்தன் இன்னொருதனிட்டச் சொன்ன ‘வே, அது’ ங்கிற ரெண்டு வார்த்தையிலேருந்துதான் வேதமே வந்திருக்கு.சுவடி இருக்குவெ…”

நியாயவைசேஷிகரான நியாயவைசேஷிகரான கோனேரி லட்சுமிநரசிம்மையா ஓரக்கண்ணால் பிரதீஷ் பட்டாச்சாரியாவை பார்த்தார். குழப்பமாக இன்னும் ஒருமுறை பார்த்தபின் ”வேதம் என்பது வேத அணுக்களினாலும் சப்த தன்மாத்ரைகளினாலும் ஆனதினால்….” என்று ஏதோ ஆரம்பித்தார். பிரதீஷ் வெறித்த கண்களுடன் வேதஞானியையே நோக்கி அமர்ந்திருக்கக் கண்டார்.

”திருப்பதி லட்டை பிச்சுப்பிச்சு பூந்தியா மாத்தி இந்த கொள்கையக் கண்டுபிடிச்சான்போல” என்றார் பிள்ளைவாள்

கும்பகோணம் ராமகிருஷ்ணையர் பிள்ளைவாளிடம் புன்னகைசெய்துவிட்டு ”கடைசியாக என்னதான் சொல்கிறீர்கள்?”

”அதாவது இருபத்துநான்கு அடிப்படை தத்வங்களும் அவற்றுக்கான விசேஷகுணங்களும்…”

”சேத்து உருட்டினா லட்டு…” என்ற கும்பகோணம் ராமகிருஷ்ணையர் ”அப்புடு ஓக்கேன்னு செப்பேரா… ”

”ஓக்கே ஸ்வாமி, ஓக்கே” என்றார் கோனேரி லட்சுமிநரசிம்மையா.

”அப்படியானால் பிரச்சினை தீர்ந்தது” என்று கும்பகோணம் ராமகிருஷ்ணையர் வேகமாக எழுத ஆரம்பித்தார்.

சாங்கியரான பிரதீஷ் பட்டாச்சாரியா மெல்ல எழுந்து உடைந்த குரலில் ”மகராஜ், நான் என்ன கேட்கிறேன் என்றால்…”என்று ஆரம்பித்தார்.

”நீங்கள் கேட்பதை ரிக்வேதத்தின் எட்டாம் பாதத்தில் ரிஷி இம்பிஷ்டி காண்வர் விளக்கிச் சொல்கிறார் ”நான் சோமரஸத்தால் உன் வயிற்றை நிரப்புகிறேன். அது உன் அங்கங்கள் எல்லாம் பரவட்டும். உன் நாக்கால் இனிய சோமத்தை ருசித்துப்பார்’ என்று…”

பிரதீஷ் ”ஆ!!” என்று கூவியபின்னர் சட்டென்று தன் கால்சட்டையை கழற்ற ஆரம்பிக்க அவரை காவலர் பாய்ந்து பிடித்தார்கள்.

அவ்வாறாக தத்துவ விவாதம் முடிவுக்கு வந்தது. அறிக்கை மேலிடத்துக்கு சமர்ப்பணம் செய்யபப்ட்டது. பிரதீஷ் பட்டாசாரியாவுக்கான மருத்துவச்செலவை முழுமையாகவே மடம் ஏற்கும் என்று கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்கள் பெருங்கருணையுடன் அறிவித்தார்.

நான்குமாதம் கழித்து சைத்ரமாதம் புர்ணமி நன்னாளில் பரமபூஜனீய லூங்காஜி பரமஹம்ஸ மகாராஜ் அவர்களின் சமாதிஸ்தானில் கட்டவிருக்கும் பேராலயத்துக்கு கஸ்யப கோத்ரம் ஹரிராம்ஜி தீன்தயாள்ஜி அக்னிஹோத்ரி மஹராஜ் அவர்கள் அடிக்கல்நாட்டியருளினார். தொடர்ந்து வேள்விகளும் பூஜைகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளும் புராணப் பிரசங்கங்களும் நடைபெற்றன. நான்குவருடம் கழித்து ஜனாதிபதி தலைமையில் மகந்த் விஸ்வமோகன் மகாபாத்ரா உள்பட எட்டு மதத்தலைவர்கள் முன்னிலையில் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

 

 

 

முந்தைய கட்டுரைஇயற்கைவேளாண்மை, உலகமயம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமதம் , ஆன்மீகம், கிறித்தவம் : ஒரு கடிதம்