காந்தி கடிதங்கள்

அண்ணன்,
காந்தியின்மீதான நேசத்திற்கு எனக்குரிய காரணங்கள் உண்டென்றாலும் வேறு சில வகைகளிலும் அவரை நியாயப்படுத்திக்கொள்வதற்கான வலுவான காரணங்களை உங்கள் தொடர்கட்டுரை அளித்தது.
அரசியல்குறித்து நீங்கள் தனிக்கட்டுரைகள் எழுதி நான் கண்டதில்லை. அரசியலின்மீது பறந்துபார்த்து அப்படி ஒன்றை எழுதுவதற்கான உங்கள் தகுதி பின் தொடரும் நிழலின் குரலில் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது.
கையூட்டாக வழங்கப்படுகிற சலுகைகளின் இழிமையும் சனநாயகத்தில் எல்லாமே தரப்புகளாகமட்டுமே கால் கொள்கிற நிலையும்…
வேலை நெருக்கடிகள் காரணமாகச் சில காலம் உங்கள் இணையப் பக்கத்தை நீங்கியிருந்தேன். வசந்தகுமாரிடம் அசோகவனத்தை விசாரித்தபோது, காந்தியைப்பற்றி ஜெயன் எழுதிய நூல் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக அவர் சொன்னதையிட்டு நேரம் பிதுக்கி இணையத்தை எட்டிப்பார்த்தேன். இதை எழுதிய உங்கள் கைகளுக்கு முத்தம். காந்தியை என் நெஞ்சுக்கு இன்னும் நெருக்கியது உங்கள் கட்டுரை

கரு ஆறுமுகத்தமிழன்

 

அன்புள்ள ஆறுமுகத்தமிழன்

நலம்தானே? கடுமையான வேலைநெருகக்டியில் இருக்கிறீர்கள் என்று வசந்தகுமார் சொன்னார். அதர்கிடையிலும் கட்டுரைகளை வாசித்தமைக்கு நன்றி. வசந்தகுமார் நூலாக வெளியிடவிருக்கிறார்.

பல்வேறு எழுத்துவேலைகள் திட்டமிட்டிருந்தும் நடுவே காந்தி புகுந்துகொண்டு அவர் பாட்டுக்கு வளர ஆரம்பித்தார். என்ன செய்வது?
ஜெ

Dஎஅர் J,

அன்புள்ள ஜெ

காந்தியைப்பற்றிய கட்டுரை மிகச்சிறப்பான அலசல். நல்ல தமிழில் தர்க்கபூர்வமாக முன்வைத்திருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறதென ஆச்சரியமாக இருக்கிறது. உங்கல் அன்றாட வாழ்க்கை, அலுவலகம், இலக்கியம் பயணங்கள் நடுவே இத்தனை நூல்களை வாசித்து ஆராய்ந்து எழுத எபப்டி முடிகிறது. 24 மணிநேரம் போதாது என்று படுகிறது

வாழ்த்துக்கள்

jas diaz

அன்புள்ள jas diaz

உண்மைதான். என்னுடைய எழுத்துத் திட்டங்களில் ஆய்வு என்பதற்கு நேரமே கிடையாது. எழுத்தாளன் கற்பனையை ஓட்டவே நேரம்செலவிடவேண்டும், தகவல் ரீதியான ஆய்வுகளில் அதிக நேரம்செலவிடக்கூடாது என்பதே என் கொள்கை. நான் எப்போதோ வாசித்தவற்றைச் சார்ந்தே எழுதுகிறேன். அதாவது இவற்றை வாசித்தமையால்தான் நான் காந்தியை விரும்புகிறேன், இவற்றை இப்போது வாசிக்கவில்லை. ஆகவே தகவல்பிழைகள் நினைவுப்பிழைகள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மையத்தகவல்களை பெரும்பாலும்

ச்ரிபார்த்தே எழுதினேன்.  எழுதும்படியான ஒரு மன எழுச்சி இருந்ததுதான் காரணம்

ஜெ

 

 

அன்பான ஜெ

உங்கள் காந்தி பற்றிய கட்டுரைத்தொடர்களைக் கூர்ந்து வாசித்து வருகிறேன். எதிர்பார்த்தது போலவே அவை அற்புதமாக உள்ளன. எழுத்தாலர்கள் பலர் கருத்துக்களை சொல்விளையாட்டுகளில் மறைப்பவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அதைச் செய்வதில்லை. உங்கள் சொற்கள் உங்கள் கருத்துக்களைப்போலவே நேர்மையாக இருக்கின்றன. கட்டுரைகள் மிகவும் சமநிலையுடனும் மிகவும் தகவல்பூர்வமாகவும் மிகவும் வாசிப்புத்தன்மையுடனும் உள்ளன

இத்தகைய முக்கியமான கட்டுரைகள் மிகச்சிலரால் மட்டுமே வாசிக்கபப்டுகின்றன என்பது துயரமனது. இவை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்யபப்ட்டு விரிவான வாசகர் வட்டத்துக்குச் சென்று சேரவேண்டும்

நீங்கல் மிகச்சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள்.ந் அம்பமுடியாத அளவுக்கு அதிகமான பேர் தமிழில் காந்தியை தீய நோக்கத்துடன் சித்தரித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் காந்தியை கீழாக காட்டுவதன் மூலம் தங்கள் தலைவரக்ளை மேலே தூக்குவது மட்டுமே. உங்கள் கட்டுரை அவர்களின் எழுத்துக்களுக்கு நல்ல பதிலாக உள்ளது

அன்புடன்
கிருஷ்ணன்

http://www.cellphone-advertising.com/

 

அன்புள்ள கிருஷ்ணன்
நன்றி. இத்தகைய கட்டுரைகளை சாதாரணமாகவே பலர் அறியக் கொன்டுசெல்ல முடியும். இணையத்தில் அது எலிது, பிறருக்கு நாம் அனுப்பிவைக்கலாம். பொதுவாக அச்சு ஊடக கட்டுரைகளை விட இணையக் கட்டுரைகள் எளிதாக பரவுகின்றன

மேலும் கருத்துக்கள் எப்படியோ பரவிக்கொண்டேதான் இருக்கும். நான் எழுதிய கட்டுரை அனைவரையும் சென்றடையாமல் போகலாம். என் கோணம் சென்றடையும், மெல்லமெல்ல. அதுபோதும்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

காந்தி-அம்பேத்கார் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொன்டிருக்கிறேன். அவற்றில் உள்ள தெளிவும் தர்க்க ஆழமும் எனக்கு பிரமிப்பையே அளித்தன. இப்போது இத்தனை விஷயங்களையும் சிந்தித்து உள்வாங்கி கோர்வையாக ஒரு பதிலைச் சொல்லிவிட என்னால் முடியாது. மனம் முழுக்க உங்கள் சொற்கள்தான் உள்ளன. அவற்றை சீராக்கி எடுப்பதற்கே நேரம் தேவை. ஆனால் சிந்தனைக்கு ஒரு பெரிய சவாலை வைத்திருக்கிறீர்கள்

ஜெயமோகன், இந்தக் கட்டுரைகளில் நீங்கள் செய்வது என்ன என்பதை நாங்கள் இங்கே விவாதித்தோம். இந்த மாதிரி விஷயங்களைப் பேசும்போது பொதுவாக அதை அந்த சந்தர்ப்பத்தில் வைத்து சரியா தப்பா என்று பேசும் வழக்கம்தான் உள்ளது. நீங்கள் அதை ஒரு பெரிய வரலாற்று பின்னணிக்கு வைத்து ஆராய்ச்சி செய்கிறீர்கள். மேலும் அந்தந்த மனிதர்களின் குணாதிசயங்களை வைத்தும் ஆராய்ச்சி செய்கிறீர்கள். அது நமக்கு புதிய ஒரு காட்சியை அளிக்கிறது. எல்லாவற்றையும் விரிந்த வரலாறாக பார்க்கும்போது கிடைக்கும் தெளிவே முக்கியமானது. உங்களால் எல்லாவற்றுக்கும் பின்னனீயை உருவாக்கி வரலாறாகச் சொல்லமுடிகிறது
வாழ்த்துக்கள்

சிவராம்
சென்னை
அன்புள்ள சென்னை

எல்லார் பேசுவதும் வரலாறுதான். வரலாற்றில் பிடித்தமான தூன்டுகளை மட்டும் முன்வைக்கிறார்கள். நான் வரலாற்றில் கிடைத்த எல்லா துண்டுகளையும் சேர்த்து ஒரே விவரணையாக அளிக்கிறேன், அவ்வளவுதான்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் காந்தி அம்பேத்கர் கட்டுரையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் ந்டுவே ஒரு சமநிலையை எடுக்க நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். அம்பேத்கரின் சிறப்புகளையும் எதிர்த்தன்மைகளையும் சொல்கிறீர்கள். ஆனால் காந்தியைப்பற்றி பாராட்டி மட்டுமே சொல்கிறீர்கள். இந்த நிலைபாட்டில் இருந்துதான் நீங்கள் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இதற்கு பின்னால் உள்ள பார்வை இதுதான் என்று நினைக்கிறேன்

செல்வ வினாயகம்

அன்புள்ள செல்வ வினாயகம்

ஏறத்தாழ நூறு பக்கம் உள்ள கட்டுரை சொல்லாத விஷயத்தை கடிதம் எழுதி சொல்லிவிட முடியாது.  அக்கட்டுரை அளிக்கும் வரலாற்று வரைவுக்கு இதுதான் உங்கள் பதில் என்றால் உங்களை புரிந்துகொள்கிறேன்

அக்கட்டுரையை மீண்டும் படியுங்கல். அம்பேத்காரின் வரலாற்று , பண்பாட்டுப் புரிதல் இல்லாத ஒருவராகவே காந்தியைச் சொல்லியிருக்கிறேன். அவரது அனுபவ- உள்ளுணர்வு ஞானம் மட்டுமே. இந்தியப் பண்பாடு குறித்த ஒரு விஷயத்தில் காந்தியின் கோணத்தைவிட நான் அம்பேத்காரின் கோணத்தையே ஏற்பேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

காந்தியைப்பற்றிய கட்டுரையில் வேறு திக்குகளுக்கு நகரக்கூடிய பல விஷயங்கள் முக்கியமானவை. முதல் விஷயம் ‘தலையெண்ணி’ ஓட்டுரிமை கொடுத்தது சம்பந்தமான பகுதி. இரண்டாவது விஷயம் அம்பேத்கார் இந்து சட்டத்தை உருவாக்கியது பற்றிய விஷயம்.

நீங்கல் கவனித்தீர்களா? அம்பேத்கர் இந்து சட்டத்தை உருவாக்கியபோது எழுந்த அதே சண்டைகள்தான் முப்பது வருஷம் கழித்து ஷா பானு கேஸில் முஸ்லீம்களிடம் இருந்து எழுந்தது. பலதார மணத்தை பண்பாட்டுப் பிரச்சினையாகவும் மத உரிமையாகவும் சொல்லி முஸ்லீம்கள் தெருவிலிறங்கி கலாட்டா செய்து சட்டத்தையே மாற்றினார்கள். அதாவது மதம் எதுவானாலும் ஆண்கள் ஆண்கள்தான் இல்லையா?

செல்வி

அன்புள்ள செல்வி

உண்மை. ஆனால் அதைவிட முக்கியமானது பணம். ஷா பானு விவகாரத்தின் மையம் பெண்களின் சொத்துரிமை – குழந்தைப்பராமரிப்புச் செலவ்ருரிமை ஆகியவையே

ஜெ

முந்தைய கட்டுரைகனடா இலக்கிய நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைகளப்பிரர்