‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12

பகுதி மூன்று : எரியிதழ்

[ 3 ]

காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.

பீடத்தில் அமர்ந்த பீஷ்மர் தன் இடக்காலை வலதுகால் மீது போட்டு அமர்ந்துகொண்டு வேட்டைக்குருதிபடிந்த தன் வில்லை மடிமீது வைத்துக்கொண்டார். நிமிர்ந்த தலையுடன் அவையைநோக்கி அமர்ந்திருந்த அவரை ஷத்ரியமன்னர்கள் ஓரக்கண்களால் பார்த்தபின் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். தமகோஷன் குனிந்து சால்வனிடம் “வயோதிகம் ஆசைக்குத் தடையல்ல என்று இதோ பிதாமகர் நிரூபிக்கிறார்” என்றான். சால்வன் “அவர் ஏன் வந்திருக்கிறார் என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “எங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியவில்லையா என்ன?நைஷ்டிகபிரம்மசாரி என்று அவரைச் சொன்னார்கள். இளவரசியரின் பேரழகு விஸ்வாமித்திரரை மேனகை வென்றதுபோல அவரையும் வென்றுவிட்டது” என்று சிரித்தான். ஷத்ரியர்களில் பலர் சிரித்துக்கொண்டு பீஷ்மரைப் பார்த்தனர்.

அரண்மனைச்சேடியர் மூன்று தட்டுகளில் மலர்மாலைகளை எடுத்துக்கொண்டுசென்று இளவரசியர் கைகளில் அளித்தனர். அவற்றை கையிலெடுத்துக்கொண்டு மூவரும் முன்னால் நடந்தனர். தலைகுனிந்து நடந்த அம்பிகையும் அம்பாலிகையும் நடுங்கும் கரங்களில் மாலையைப் பற்றியிருந்தனர். வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.

நாணொலி கிளப்பியபடி பீஷ்மர் எழுந்தார். “பீமதேவா, இதோ உன் கன்னியர் மூவரையும் நான் சிறையெடுத்துச் செல்லப்போகிறேன்…” என்று அரங்கெல்லாம் எதிரொலிக்கும் பெருங்குரலில் சொன்னார். “இந்த மூன்று பெண்களையும் அஸ்தினபுரியின் அரசியராக இதோ நான் கவர்ந்துசெல்கிறேன். உன்னுடைய படைகளோ காவல்தெய்வங்களோ என்னைத் தடுக்கமுடியுமென்றால் தடுக்கலாம்” என்றபடி இடக்கையில் தூக்கிய வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக மணமேடைக்கு முன்னால் வந்து நின்றார்.

பீமதேவன் காதுகளில் விழுந்த அக்குரலை உள்ளம் வாங்கிக்கொள்ளாதவர் என அப்படியே சிலகணங்கள் சிலைத்து அமர்ந்திருந்தார். கோசலமன்னன் மகாபலன் எழுந்து சினத்தால் நடுங்கும் கைகளை நீட்டி “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே? இது சுயம்வரப்பந்தல். இங்கே இளவரசியரின் விருப்பப்படி மணம் நிறைவுறவேண்டும்” என்றான்.

“அந்த சுயம்வரத்தை நான் இதோ தடைசெய்திருக்கிறேன். இங்கே இனி நடைபெறப்போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம். இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன” என்றவாறு ஷத்ரியர்களை நோக்கித் திரும்பி “இங்கே என் விருப்பப்படி அனைத்தும் நிகழவேண்டுமென நான் என் வில்லால் ஆணையிடுகிறேன். வில்லால் அதை எவரும் தடுக்கலாம்” என்றபின் பீஷ்மர் இளவரசியரை நோக்கி நடந்து ஒருகணம் தயங்கி, திரும்பி வாசலைநோக்கி “உள்ளே வாருங்கள்” என உரக்க குரல்கொடுத்தார். அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் விற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.

அதன் பின்னர்தான் பீமதேவன் உடல் பதற வேகம் கொண்டு எழுந்தார். சினத்தால் வழிந்த கண்ணீருடன் தன் வில்லை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார். அக்கணமே அவர் கை வில்லை பீஷ்மர் தன் அம்புகளால் உடைத்தார். அவரது மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். ‘இவள் குருகுலத்து சக்கரவர்த்தினி’ என்று அவருக்குள் ஓர் எண்ணம் ஓடியது. மேலும் இரு சீடர்கள் வெட்டுண்டு விழுவதைக்கண்டதும் தன் அம்பறாத்தூணியிலிருந்து ஆலஸ்ய அஸ்திரத்தை எடுத்து அம்பை மேல் எய்தார். அம்புபட்டு அவள் மயங்கி விழுந்ததும் மாணவர்கள் அவளை தூக்கிக் கொண்டனர்.

அதற்குள் அத்தனை ஷத்ரியர்களும் தங்கள் வாட்களும் அம்புகளுமாக கூச்சலிட்டபடி எழுந்தனர். அவர்களின் காவல்படைகள் விற்களும் அம்புகளுமாக உள்ளே நுழைந்தன. சுயம்வரப்பந்தலெங்கும் ஆயுத ஒலி நிறைந்தது. வைதிகர்களும் சூதர்களும் பந்தலின் ஓரமாக ஓடினர். தன் மகள்களைக் காப்பாற்ற வாளுடன் ஓடிவந்த பீமதேவனை நரம்புமுடிச்சுகளில் எய்யப்பட்ட ஒற்றை அம்பால் செயலற்று விழச்செய்தார் பீஷ்மர். அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர்.

ஆயுதங்களை இழந்து சிதறியோடிப்பதுங்கிய ஷத்ரியர்களின் நடுவே ஓடிச்சென்ற சீடர்கள் மயங்கிக் கிடந்த மூன்று இளவரசிகளையும் கொண்டுசென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த போருக்கான வேகரதங்களில் ஏற்றிக்கொண்டதும் பீஷ்மர் அம்பு எய்வதை நிறுத்தாமலேயே அவரும் வந்து ஏறிக்கொண்டார். அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். ரதங்கள் புழுதி கிளப்பி குளம்பொலியும் சகட ஒலியும் எழ விலகிச்சென்றபோது திரைவிலகியதுபோல அவள் விரும்பியதும் அதுவே என்பதை அறிந்தாள்.

சால்வன் தன் கையிலிருந்த உடைந்த வில்லை வீசிவிட்டு தமகோஷனிடம் “நமது படைவீரர்களை பந்தல்முன் வரச்சொல்க….ரதங்கள் அணிவகுக்கட்டும்….” என்றபடி பந்தல்முன்னால் ஓடினான். சேதிமன்னன் தமகோஷன் தன் வீரர்களுக்கு ஆணையிட்டபடி பின்னால் ஓட சால்வனுடைய பத்து தோழர்களும் ஆயுதங்களுடன் அவனுக்குப்பின்னால் ஓடினார்கள். மற்ற ஷத்ரியர்கள் அந்தப்போர் தங்களுடையதல்ல என்பதுபோல பின்னகர்ந்தனர்.

கங்கைக்கரையிலிருந்து அரண்மனை முகப்பை நோக்கி வரும் சாலைகளில் இருந்து சால்வனின் படைகள் ஏறிய ரதங்கள் ஓடிவந்தன. மாகத மன்னன் ஸ்ரீகரன் ஓடிவந்து ஃபால்குனரிடம் “காசியின் படைகளை எங்களுக்குக் கொடுங்கள். நாங்களெல்லாம் எங்கள் காவல்படைகளுடன் மட்டுமே வந்திருக்கிறோம்” என்றான்.

ஃபால்குனர் அமைதியாக “ஆணையிடவேண்டியவர் அரசர்…அவர் இன்னும் ஆலஸ்யத்திலிருந்து மீளவில்லை” என்றார். புராவதியின் கைகளில் கண்மூடிக்கிடந்த காசிமன்னனை மருத்துவர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். மாகதன் சினத்துடன் “மன்னன் படைக்களத்தில் வீழ்ந்தால் நீங்கள் அவன் படைகளுக்கு பொறுப்பேற்கலாம்” என்றான். “ஆம், ஆனால் அம்முடிவை நான் எடுக்கமுடியாது. ஏனென்றால் இப்போது நெறிகளின்படி காசியின் கன்னியருக்கு மணம் முடிந்துவிட்டது. இனி போர் எங்களுடையதல்ல, உங்களுடையது” என்றார்.

மாகதன் தன் படைவீரர்களை நோக்கி கூச்சலிட்டபடி வெளியே ஓடினான். ஃபால்குனர் “இது போர்விளையாட்டுதான் மாகதரே. படைகளைக் களமிறக்கினால் நீங்கள் அஸ்தினபுரியின் படைகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்…” என்றார். மாகதன் திகைத்து நின்றான். “உங்கள் ரதங்களில் நீங்கள் செல்லலாம்…இது படைகளின் போரல்ல, மன்னர்கள் மட்டுமே நிகழ்த்தும் போர். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஃபால்குனர்.

படைகளை கையசைத்து பின்னால் நிறுத்திவிட்டு தன் ரதத்தில் ஏறி முன்னால் விரைந்த சால்வனைத் தொடர்ந்தான் மாகதன். வழியில் உடைந்த ரதசக்கரங்களும் விழுந்த வீரர்களும் கிடந்தனர். ரதமோட்டியிடம் “செல்…செல்” என்று மாகதன் கூவினான். ரதம் அவற்றின்மேல் ஏறி துள்ளிச் சென்றது. பீஷ்மரின் அம்புகள் சிதறிக்கிடந்த பாதைகளினூடாகச் சென்ற மாகதன் முன்னால் செல்லும் சால்வனையும் கங்கனையும் வங்கனையும் பாண்டியனையும் சோழனையும் கண்டுகொண்டான். அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன.

காசியின் அகன்ற ரதவீதிகளில் பீஷ்மரின் ரதங்களை பிற ஷத்ரியர்களின் குதிரைகளும் ரதங்களும் தொடர்ந்தோடின. மாளிகைகளில் ஓடி ஏறி காசிமக்கள் அந்தக் காட்சியைக் கண்டனர். அது சினம்கொண்ட பறவைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. பீஷ்மர் சோழனின் ரதச்சக்கரத்தை உடைக்க அவன் தரையில் விழுந்தபோது அவன் ரதம் அவன் மேல் ஓடிச்சென்றது. ரதங்கள் ஒன்றுடனொன்று மோதி உடைந்து தெறித்த துண்டுகள் சிதறி பாதையோர இல்லங்களுக்குள் விழுந்தன.

அங்கனும் வங்கனும் நகரைத்தாண்டுவதற்குள்ளாகவே வீழ்ந்தனர். தெறித்துருண்ட ரதங்களில் ஒன்று சண்டியன்னையின் கோயிலுக்குள் பாய்ந்தேறியது. தெற்குத்திசை கோட்டை ஒருபக்கம் வந்துகொண்டே இருக்க ரதங்கள் புழுதித் திரையைக்கிழித்தபடி சென்றன. சால்வனின் ரதம் சக்கரக்குடம் சுவரில் உரச ஓலமிட்டுச்சென்றது. ஒவ்வொரு மன்னராக விழுந்தனர். பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன.

பீஷ்மரின் அம்புகள் தங்கள்மேல் படும்போது தங்களது ஒரு அம்புகூட பீஷ்மரை தொடவில்லை என்பதை சால்வன் கவனித்தான். தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான்.

கங்கைக்கரை குறுங்காட்டை அடைந்தபோது வனப்பாதையில் சால்வனின் ரதம் மட்டுமே பின்னாலிருந்தது. அவன் தேரின் தூணிலும் கூரையிலும் முழுக்க அம்புகள் தைத்து நின்று அதிர்ந்தன. அவன் கவசத்தில் தைத்த அம்புகள் வில்லின் நாண்பட்டு உதிர்ந்தன. மரணத்தையே மறந்துவிட்டவன் போல சால்வன் அம்புகள் நடுவே நெளிந்தும் வளைந்தும் கூந்தல் பறக்க விரைந்து வந்துகொண்டிருந்தான். அவன் ரதத்தின் கொடியும் முகடும் உடைந்து தெறித்தன. அவனுடைய மூன்று விற்கள் முறிந்தன. அவன் தோளிலும் தொடையிலும் இடையிலும் அம்புகள் இறங்கி குருதிவழிந்தது.

சால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்தசந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் “சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்…இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்” என வாழ்த்தினார். வில்லைத் தூக்கி நாணொலி எழுப்பி “நில் வயோதிகனே, எங்கே செல்கிறாய்? இதோ நீ என் கையால் மடியும் காலம் வந்துவிட்டது…” என்று சால்வன் கூவினான்.

“அரண்மனைக்குச் செல் குழந்தை…இது உனக்குரிய போரல்ல. என்னைக் கொல்பவன் இன்னும் பிறக்கவில்லை” என்றார் பீஷ்மர். “இந்த அவமதிப்புடன் நான் திரும்பிச்சென்றால் என் மூதாதையர் என்னைப் பழிப்பார்கள்” என்றபடி சால்வன் அம்புகளை எய்து பீஷ்மரின் தோளில் குருதிகொட்டச்செய்தான். பீஷ்மர் அக்கணமே தன்னுடைய வியாஹ்ர அஸ்திரத்தால் அவனை அடித்து ரதத்தில் இருந்து சிதறச்செய்தார். கையிலும் தோளிலும் குருதி வழிய சால்வன் மண்ணில் விழுந்து துடித்தான். உச்சவேகத்தில் இருந்த அவனுடைய ரதம் தறிகெட்டு ஓடி மரங்களில் முட்டிச்சரிந்தது. குதிரைக்குளம்புகள் அசைய ரதச்சக்கரங்கள் சுழல புழுதிக்காற்று அதன் மேல் படிந்தது.

கங்கைக்கரையோரமாக மரங்களில் கட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரும்படகுகளில் மூன்று இளவரசிகளையும் ஏற்றிக்கொண்டபின் பீஷ்மர் கிளம்பிச்சென்றார். வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

மூன்று இளவரசிகளும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். “அக்கா, வேண்டாம். மிருகங்கள் போல சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் செய்யக்கூடியதென ஏதுமில்லை” என்று அம்பிகை சொன்னாள். அம்பாலிகை வெளுத்த உதடுகளுடன் பெரிய கண்களை விழித்துப்பார்த்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை என்று தெரிந்தது.

“என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று அம்பை சீறினாள். “செய்வது ஒன்று இருக்கிறது அக்கா. நாம் இக்கணமே கங்கையில் குதித்து இறக்கலாம். ஆனால் அதன்பின் இந்த அரக்கன் நம் அரசை என்னசெய்வானென்றே சொல்லமுடியாது. நம் குடிகளுக்காக நாம் இதை தாங்கியே ஆகவேண்டும்” என்றாள் அம்பிகை. “எதைத்தாங்குவது? குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா? நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா?” என்றாள் அம்பை.

“நாம் ஷத்ரியப்பெண்கள்….ஷத்ரியனின் உடல் அவனுக்குச் சொந்தமில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் அம்பிகை. “ஆம்…ஆனால் எந்த உடலும் அதன் ஆன்மாவுக்குச் சொந்தம் என்பதை மறக்காதே. தன் உடலை ஆன்மா வெறுத்து அருவெறுக்குமென்றால் அதுவே அதன் நரகம் என்பது…சால்வரை எண்ணிய என்னால் இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்ளமுடியாது…நான் பீஷ்மரிடம் பேசுகிறேன்…” என்றாள் அம்பை.

ஆடும்படகில் கயிறுகளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்று படகின் மறுமுனையில் தாடியும் கூந்தலும் பறக்க முகத்தில் நீரொளி அலையடிக்க அமர்ந்திருந்த பீஷ்மரை அணுகி உரத்தகுரலில் “உங்களிடம் நான் பேசவேண்டும்” என்றாள். பீஷ்மர் திகைப்புடன் எழுந்து “என்ன?” என்றபின் பார்வையை விலக்கி, பின்னால் வந்து நின்ற சீடர்களிடம் “அஸ்தினபுரியின் அரசியர் எதை விரும்பினாலும் கொடுங்கள்” என்றார். “நான் விரும்புவது உங்களுடனான உரையாடலை மட்டுமே” என்றாள் அம்பை.

இளம்பெண்களுடன் பேசியறியாத பீஷ்மர் பதற்றத்துடன் எழுந்து “எதுவானாலும் நாம் நம் நகரை அடைந்தபின் பேசலாம் இளவரசி. நான் உங்கள் பணியாள் என்றே கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கே செய்யப்படும்” என்றார். பார்வையை விலக்கியபடி “என்னை மன்னியுங்கள்…நான் உங்களைத் தீண்டவில்லை. இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது…இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறியமுடியாத எதிர்காலத்திலும் உள்ளன….என்னை மன்னியுங்கள் என்பதற்கு மேலாக நான் ஏதும் சொல்வதற்கற்றவன்…” என்றார்.

“என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே” என திடமான குரலில் அம்பை சொன்னாள். ஒரு பெண் அப்படிப்பேசி அப்போதுதான் பீஷ்மர் கேட்டார் என்பதனால் அவரது உடல் மெல்லநடுங்கிக் கொண்டே இருந்தது. படகின் நீட்டுகயிற்றைப் பற்றச்சென்ற கை அதைக் காணாமல் தவறி இடைமேல் விழுந்தது.

அம்பை “நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.”

“தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.

“நான் சால்வமன்னரை விரும்புகிறேன்” என்று உரக்கக் கூவினாள் அம்பை. “என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் மூச்சு பட்ட தாழைமலர் என் படுக்கையில் எத்தனையோமுறை இருந்திருக்கிறது. மானசவிவாகப்படி நான் இன்று அவர் மனைவி….இன்னொருவன் மனைவியை நீங்கள் கவர்ந்துசெல்ல நெறிநூல்கள் அனுமதியளிக்கின்றனவா?”

பீஷ்மர் கைகளை நீட்டி கயிற்றை பற்றிக்கொண்டார். “இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர்? இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”

“அவரை நான் அறிவேன்…எனக்காக அவர் இந்நேரம் படைதிரட்டிக்கொண்டிருப்பார்…என் மீதான காதலினால் உருகிக்கொண்டிருப்பார்” என்றாள் அம்பை. “தேவி, அவனை நானறிவேன். என்னை வெல்லமுடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்றபெயருக்காகவே என் பின்னால் வந்தவன் அவன். அதாவது சூதர்பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்ரியன்….இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.”

“நான் உங்களிடம் கெஞ்ச வரவில்லை…” என்றாள் அம்பை. “உங்கள் கருணையை நான் கோரவில்லை. நான் என் உரிமையைச் சொல்கிறேன். நான் பெண்ணென்பதனாலேயே அழியாத நாகினிகள் எனக்கு அளித்துள்ள உரிமை அது….” அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”

பீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.

படகு பாய்களை இறக்கியது. அதன் கொடி இறங்கியதும் கங்கைப்படித்துறை ஒன்றிலிருந்து இரு சிறு படகுகள் அதை நோக்கி வந்தன. பீஷ்மரின் மாணவன் “ஒரு படகு தேவை…இளவரசியார் அதில் கிளம்பவிருக்கிறார்கள்” என்றான்.

அம்பை திரும்பி அம்பிகையையும் அம்பாலிகையையும் பார்த்தாள். அம்பாலிகை அப்போதும் திகைப்பு மட்டுமே கொண்ட பெரிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்பிகை மெல்லத் தலையசைத்து விடைகொடுத்தாள். அம்பை கயிற்றில் தொற்றி சிறுபடகில் ஏறிக்கொண்டாள்.

மாணவர்கள் “சென்றுவருக தேவி!” என அவளை வணங்கி வழியனுப்பினர். படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டிருக்கையில் அம்பை முதன்மைச்சீடனிடம் தாழ்ந்த குரலில் “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு?” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன். முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும்படகில் உடலை சமநிலை செய்தபடி அம்பை ஏறிட்டுப்பார்த்தாள். அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின் முதுகைத்தான் அவள் பார்த்தாள். விலகிவிலகிச்சென்ற சிறிய படகிலிருந்தவளாக அம்பை அவரை பார்த்துக்கொண்டே சென்றாள்.

முந்தைய கட்டுரைவெள்ளையானை -கேசவமணி
அடுத்த கட்டுரைபுதிய வாசல்