பொதுவாக நல்ல படைப்பாளிகளின் தலைப்புகள் சோடை போவதில்லை என்று ஒரு கூற்று உண்டு. பலசமயம் படைப்பை மீறி அவை நினைவில் நிற்கும். படைப்பை விடவும் ஆழமான மன அதிர்வுகளை உருவாக்கும். இதற்கு முக்கியமான உதாரணம் ஜெயகாந்தனின் தலைப்புகள். ‘யுகசந்தி’ ,’புதிய வார்ப்புகள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற தலைப்புகள் அவற்றை சூட்டிக் கொண்ட படைப்புகளின் துணை இல்லாமலேயே தமிழில் நீடித்திருக்கின்றன. அவை பல தளங்களில் இன்று மொழியில் பயன்படுத்தவும் படுகின்றன
படைப்பில் பிற அனைத்தையும் விட தேய்வழக்கு அதிகமாக நிகழ வாய்ப்புள்ளது தலைப்பில்தான். ‘கள்’ விகுதி சேர்த்த தலைப்புகள் எத்தனை மோசமாக நம் எழுத்தாளர்களுக்குப் பழகிவிட்டிருக்கின்றன என்று பாருங்கள். கதாநாயகி ஒரு தியாக தீபம். ஆகவே தலைப்பு ‘மெழுகுவர்த்திகள்’. இங்கே பன்மை எப்படி வந்தது? பெரும்பாலும் மோசமான குறிப்புருவகத்தை தலைப்பாகச் சூட்டுவது இங்கே வழக்கம். சிறகொடிந்த பறவை, பறக்க முடியாத கோழிகள், அலையில்லாத கடல் என்றெல்லாம்.
தலைப்பு படைப்பை விளக்காமல் இருந்தால் நல்லது. அது ஒரு வெறும் பெயராக இருக்கலாம் குறைந்த பட்சம். ‘அகிலா’ அவ்வளவுதான், போதும். அப்படைப்பினை உருவாக்கிய அடிப்படை உத்வேகம் வெளிப்படுவாதாக அது அமையலாம்.’தவறுகள் குற்றங்கள் அல்ல’ போல. அல்லது படைப்பில் இருந்து மேலேறி ஒரு தனி மன எழுச்சியின் வெளிப்பாடாக அது இருக்க வேண்டும் ‘பொன்னகரம்’ போல.
படைப்புக்கு பெயரை முன்னரே சிந்தித்து அதைச் சொல்லிச் சொல்லி பிற மன எழுச்சிகளை உருவாக்கிக் கொள்ளும் வழிமுறை உண்டு– புதுமைப்பித்தன் நாள்கணக்கில் ‘நாசகார கும்பல்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக சொல்வார்கள். எழுதிய பிற்பாடு தலைப்பு போடப்போனால் பெரும்பாலும் கற்பனை தரை தட்டி நிற்கும். அப்படைப்பு அடைந்துள்ள பல தளங்கள் அப்போது எழுத்தாளருக்கே தெரியாதவையாக இருக்கும் என்பதே முதல் காரணம்.
சிலசமயம் எத்தனை யோசித்தாலும் வராத தலைப்பு சட்டென்று வந்து நிற்கும். கு.ப.ராஜ.கோபாலன் அச்சிலேறும் நிலையில் இருந்த கதைக்கு ‘ஆற்றாமை’ என்று தலைப்பை தந்தியாக அனுப்பினாராம். பிறர் போடும் தலைப்புகள் உண்டு. மௌனியின் கதைகளுக்கு ‘அழியாச்சுடர்’,’எங்கிருந்தோ வந்தான்’ போன்ற அரிய தலைப்புகளை பி.எஸ்.ராமையாதான் போட்டார். ‘இந்நேரம் இந்நேரம்’ எம்.வி.வெங்கட் ராம் போட்ட தலைப்பு.
சிலசமயம் தலைப்புகள் மிகச் சாதாரணமாக இருக்கும். சொல்லச் சொல்ல அவை வலிமை பெறும்.’சாதாரணமான தலைப்பு’ என்ற கோட்பாட்டில் சுந்தர ராமசாமிக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே.சில குறிப்புகள் எல்லாம் சாதாரணமான தலைப்புகளே. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ தலைப்பை என்னிடம் சொன்னபோது நான் அதை எதிர்த்தேன். ஆனால் சொல்லிச் சொல்லி அது நிலைபெற்று விடும் என்றார் சுந்தர ராமசாமி. அதுவே நிகழ்ந்தது. ஆனால் இது நாவல்களுக்குத்தான். சிறுகதைகளில் அல்ல. சுந்தர ராமசாமியின் பல சிறுகதைத் தலைப்புகள் நினைவிலேயே நிற்பதில்லை.’கோயில் காளையும் உழவுமாடும்’ விதி விலக்கு.குழந்தைகள் ஆண்கள் பெண்கள் தலைப்பையே சரியான வரிசையில் சொல்வது கஷ்டம்.நான் சொல்வதே சரியாகத்தானா?
புது எழுத்தாளர்களில் தலைப்பு போடுவதில் முக்கியமானவர் எஸ்.ராமகிருஷ்ணன். ‘உறுபசி’ ‘ நெடுங்குருதி’ ‘விழித்திருப்பவனின் இரவு’ எல்லாமே மிக முக்கியமான தலைப்புகள். என் மனதில் இத்தலைப்புகள் அந்த ஆக்கங்களையும் மீறி வளர்ந்திருக்கின்றன. யுவன் சந்திரசேகரின் ‘கடல்கொண்ட நிலம்’ ‘நச்சுப்பொய்கை’ போன்றவை நல்ல தலைப்புகள். ஆனல் மிதமிஞ்சி உருவகத்தன்மை கொண்ட ‘புகைச்சுவருக்கு அப்பால்’ போன்ற தலைப்புகளைப் போட்டு நினைவில் நிற்காமல் அடிக்கும் இயல்பும் அவருக்கு உண்டு.
ஆங்கிலம் வழியாகக் கிடைக்கும் நூல்களில் நினைவில் நிற்கும் தலைப்புக்கள் எவை என எண்ணிப்பார்க்கிறேன். தல்ஸ்தோய் தஸ்தயேவ்ச்கி இருவருமே சர்வசாதாரணமான தலைப்புக்களில் நம்பிக்கை கொண்டவர்கள். Anna Karenina, War and Peace இரண்டுமே சாதாரணமானவை.Crime and Punishment ,The Brothers Karamazovகூட அப்படித்தான். உருவகத் தலைப்புக்கள் உண்டு.Moby-Dickபோல. தலைப்புகளின் மன்னன் ஹெமிங்வே. A Farewell to Arms, For Whom the Bell Tolls எல்லாம் கவிதைத்துளிகள். ஆனால் அவருடைய பெரும்படைப்பாகச் சொல்லப்படும் The Old Man and the Sea. சாதாரணமான தலைப்பு கொண்டது. மார்க்யூஸின் One Hundred Years of Solitude உம்பர்ட்டோ ஈக்கோவின் The Name of the Rose குந்தேராவின் The Book of Laughter and Forgetting போன்றவை எனக்கு சொல்லச்சொல்ல வளர்ந்த தலைப்புக்கள். பல தலைப்புக்கள் சாதாரணமானவை, அந்நூலால் வளர்ந்தவை. Magic Mountain போல. சாலிங்கரின் The Catcher in the Ryeஎன்ன அர்த்தமென்று இன்றுவரை தெளிவாகவில்லை. மறக்கவுமில்லை.
தமிழில் ஜெயகாந்தனின் தலைப்புகளே அவர் படைப்புகளுக்கும் மேலாக நிற்பவை. சிலநேரங்களில் சில மனிதர்கள்தான் தமிழில் இதுவரை ஒரு புனைவுக்கு வைக்கப்பட்ட தலைப்புக்களிலேயே சிறந்தது.. ஆனால் அற்புதமான இந்தத் தலைப்புக்கு இன்றுவரை ஒரு நல்ல வரிவடிவமோ அட்டைப்படமோ அமையவில்லை .மோகமுள் ரொம்பவே உருவகமாக ஆகிவிட்டது. அதற்கு அம்மா வந்தாள் பரவாயில்லை, ஆனால் ஒருவகையில் அர்த்தமற்ற தலைப்பு அது.
மலையாளத் தலைப்புக்களில் எனக்குப் பிடித்தமான தலைப்பு ‘இனியும் புழயொழுகும்’ [சி.ராதாகிருஷ்ணன் ] எம்.டி.வாசுதேவன்நாயர் நல்ல பல தலைப்புக்களை அடைந்தவர். சொர்க்கவாதில் துறக்குந்ந சமயம். ஆள்கூட்டத்தில் தனியே என்னும் இரு தலைப்புக்களும் என் நினைவில் அடிக்கடி வந்துகொண்டிருப்பவை. மிகப்பிரம்மாண்டமான இருநாவல்கள் சாதாரணமான தலைப்பு கொண்டவை. தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘கயர்’ விலாசினியின் ‘அவகாசிகள்’
என் நூல்களுக்கு நான் முதலிலேயே தலைப்புகளை உருவாக்கி விடுவேன். குறிப்பாக நாவல்களுக்கு. தலைப்புகள் பலகாலம் என் நினைவில் தியான மந்திரம் போல ஓடிக் கொண்டிருக்கும். விஷ்ணுபுரம் பத்துவருடங்களாக. அசோகவனம், கொற்றவை எல்லாம் இன்னும் அதிக வருடங்கள். அத்தலைப்புகள் விதைகள் போல. அவையே நாவலை உருவாக்குகின்றன.
எனக்கு தலைப்பில் நிகழ்ந்த முக்கியமான பிழை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தான். அந்நாவலை எழுதிய பிறகு அக்கருவுக்குப் பொருத்தமாக சூட்டிய பெயர் அது. நாவலில் இரு இடங்களில் அந்த உருவகம் வருகிறது. அப்படி வந்த இன்னொரு தலைப்பு ‘ஏழாம் உலகம்’. பிந்தையது பரவலாக ஏற்றுக் கொள்ளபப்ட்டபோது முதல் தலைப்புக்கு ஏராளமான சிக்கல்கள். அந்நாவலைப் படித்தவர்கள் கூட தலைப்பை சரியாகச் சொல்வதில்லை. பின்தொடரும் நிழல், நிழலின் குரல், பின்தொடரும் குரல் என எதையாவது சொல்வார்கள். ஆகவே நான் உருவகத்தலைப்புகளை விட்டுவிட்டு ‘காடு’ போன்ற நேரடியான தலைப்புகளைச் சூட்டினேன்.
ஆனால் இப்போது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பின்தொடரும் நிழலின் குரல் என்ற தலைப்பை மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் பலர் எழுதிக் கண்டு கொண்டிருக்கிறேன். அந்த தலைப்பு மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்றே படுகிறது. மே 2008 மாத வார்த்தை இதழில் இரு தலைப்புகள். வெளிரங்கராஜனின் கட்டுரையின் தலைப்பு ‘பின் தொடரும் நிழல்கள்’ .ஜெயந்தி சங்கரின் தலைப்பு ‘நிழலின் குரல்’ . தமிழின் பல படைப்பாளிகள் இவ்வாறு அத்தலைப்பை வேறு உருவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நண்பர் சொன்னார். அந்த தலைப்பின் சிக்கலே இதுதான். அது வேறு தலைப்புகளை உருவாக்குகிறது. வேறுவகையான மனச்சித்திரங்களை பிறப்பிக்கிறது. அந்தவகையில் அது வெற்றிகரமானது. அந்நாவலை அது சுட்டுவதில்லை, அவ்வகையில் அது ஒரு தோல்விதான் என்று. உண்மைதான்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 13, 2008