‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9

பகுதி இரண்டு : பொற்கதவம்

[ 4 ]

கங்கைநதி மண்ணைத்தொடும் இடத்தில் பனியணிந்த இமயமலைமுடிகள் அடிவானில் தெரியுமிடத்தில் இருந்த குறுங்காடு வேதவனமென்று அழைக்கப்பட்டது. அங்குதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் இருபதாண்டுக்காலம் தன் மாணவர்களுடன் அமர்ந்து வேதங்களை தொகுத்து சம்ஹிதைகளாக ஆக்கினார். அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை கூரையிட்டு மரப்பட்டைகளைக் கொண்டு கட்டப்பட்ட சிறுகுடில்கள் இருந்தன. அவற்றின் நடுவே பகவா கொடிபறக்கும் பெரியகுடிலில் வேதவியாசர் வாழ்ந்தார்.

அந்த இளங்குளிர்காலையில் இமையமலையிறங்கி வந்த பசித்த சிம்மம் ஒன்று வேதவனத்துக்குள் புகுந்தது. பருந்தின் அலகு போன்ற நகங்கள் கொண்ட சிவந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்து, கங்கைநீர் ஓடித்தேய்ந்து பளபளத்த பாறைகளைத் தாண்டி, நாணல்கள் நடுவே காய்ந்த நாணல்போன்ற செம்பிடரி காற்றிலாட, சிப்பிவிழிகளால் வேதவனத்தைப் பார்த்து நின்றது. சித்ரகர்ணி என்று பெயர்கொண்ட அந்த முதிய சிம்மம் அதற்கு விதி வகுத்த பாதையில் நடந்து வந்து வியாசனின் தவச்சாலையை நோக்கியபடி ஒரு பாறைமீது நின்றுகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மர் அவ்வழியே சென்றார்.

பீஷ்மரின் உடலெங்கும் செம்புழுதிபடிந்து வியர்வையில் வழிந்து கொண்டிருந்தது. சிறகுகள் போல அவரது பட்டுச்சால்வை பின்னால் எழுந்து பறக்க, சிம்மப்பிடரி என அவர் தாடியும் சிகையும் காற்றில் ததும்பின. குதிரைக்குளம்படிகளில் கூழாங்கற்கள் பறக்க ரதம் தன்னைத்தாண்டிச்சென்றதைக் கண்ட சித்ரகர்ணி குதிரைகளின் வியர்வைத்துளிகள் விழுந்த தடத்தை முகர்ந்து பிடரி சிலுப்பிக்கொண்டு, நாக்கால் உதடுகளை சப்பிக்கொண்டு, மெத்தென்ற காலடிகளை தூக்கிவைத்து அவரைப்பின்தொடர்ந்து சென்றது.

வியாசரின் குருகுலத்துக்குள் ரதம் சென்று நின்றதும் அங்கிருந்த சீடர்கள் ஓடிவந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி பீஷ்மரை வணங்கி நின்றனர். ரதமோட்டியிடம் தன் அம்பறாத்தூணியையும் வில்லையும் அளித்துவிட்டு நெடிய கால்களை நிலத்தில் வைத்து பீஷ்மர் மண்ணிலிறங்கி வியாசரைப் பார்க்கவேண்டுமென்று சீடர்களிடம் சொன்னார். அவர்களில் மூவர் ஓடிச்சென்று தன் குடிலில் மாணவர்களுக்கு நூல்நடத்திக்கொண்டிருந்த வியாசரிடம் பீஷ்மரின் வருகையைத் தெரிவித்தனர். பாடம் முடிந்தபின்னர் மையக்குடிலில் சந்திப்பு என ஆணை வந்தது.

பீஷ்மர் கங்கையில் நீராடும்போது மிக அருகே நாணல்களுக்குள் அமர்ந்து வாய்திறந்து நாக்கு தொங்க மூச்சிரைத்தபடி சித்ரகர்ணி அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. அதற்குள் வாசல்கள் ஒவ்வொன்றாக திறந்துகொண்டிருந்தன. ‘இவனை நானறிவேன்…இவன் முகமோ உடலோ நானறியாதது. ஆனால் இவனை நானறிவேன்….என் ஆன்மா இவனைக்கண்டதும் எழுகிறது’ என்று அது திரும்பத்திரும்ப தனக்குள் சொல்லிக்கொண்டது.

‘நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது. தன் பிடரிமயிரில் மொய்த்த பூச்சிகளை விரட்ட சடைத்தலையை குலைத்துக்கொண்ட அசைவை புதருக்குள் காற்றுபுகுந்ததாக எண்ணினார் பீஷ்மர்.

நீராடி மரவுரி ஆடை அணிந்து, புல்லரிசியை பாலுடன் சேர்த்து சமைத்த கஞ்சியும் பழங்களும் உண்டு, வியாசரைக்காண்பதற்காக பீஷ்மர் மையக்குடிலுக்குள் சென்றார். களிமண் பூசப்பட்ட மரப்பட்டைகளால் ஆன பெரிய குடிலுக்கு முன்னால் ஒரு வெண்பசு கட்டப்பட்டிருந்தது. கருங்கல்சில்லுகள் போல ஈரம் மின்னிய பெரியகண்களால் அந்தப் பசு தன்னிடம் எதையோ சொல்லமுற்படுவதுபோல பீஷ்மர் உணர்ந்தார். ஒருகணம் நின்று அதன் முன்னோக்கிக் குவிந்த காதுகளையும் விறகுக்கரிமீது தீச்சுடர்போல நாசியை நக்கிச்சென்ற நாக்கையும் பார்த்தபின் உள்ளே சென்றார். பசு அடிவயிற்றை எக்கி ‘ம்பே’ என்று குரலெழுப்பியது.

பீஷ்மர் காவியரிஷியான வேதவியாசரை இருமுறை ஞானசபைகளில் தொலைவிலிருந்து பார்த்திருந்தார். மெலிந்த வலிமையான கரிய உடல் மீது நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டவை போலிருந்தன. கருமையும் வெண்மையும் இடைகலந்த தாடியும் நீண்ட சாம்பல்நிறச்சடைகளும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கண்கள் மீன்விழிகள் போலத் தோன்றின. வியாசரின் பாதங்களை வணங்கிய பீஷ்மரின் தலைமேல் கைவைத்து “வெற்றியும் ஆயுளும் புகழும் அமைவதாக!” என்று வியாசர் வாழ்த்தினார்.

பீஷ்மர் மெல்லியகுரலில் அவர் வியாசரை இளையவன் என்ற முறையில்தான் தேடிவந்திருப்பதாகச் சொன்னார். “ஆம், நான் என்றும் உனக்கு அந்த இடத்தில் இருப்பவன்” என்று வியாசர் கனிந்த புன்னகையுடன் சொன்னார். “நீ என் குருதி…”

பீஷ்மர் முதல்முறையாக தன்னைச்சூழ்ந்திருந்த அழியாத்தனிமை முற்றிலும் கரைய, இன்னொரு மனித உயிரிடம் பேரன்பை உணர்ந்தார்.எழுந்து அந்த சடைமுடிகளுக்குள், கரையிலா ஞானத்துக்குள், ஞானமுருவாக்கிய அகங்காரத்துக்குள் இருந்த முதியவனை நெஞ்சோடு ஆரத்தழுவி இறுக்கவேண்டுமென அவர் தோள்களில் விம்மல் எழுந்தது. கண்களில் ஈரமெனக் கசிந்த அந்த மன எழுச்சியை அடக்க வியாசனின் மெலிந்த கால்களில் சுருண்டிருந்த மண்நெறிந்த நகங்களை நோக்கி தன் பார்வையை விலக்கிக்கொண்டார். ‘இவர் ஒருவரன்றி எவரும் என்னை அறிந்திருக்கவில்லை. அலையலையென வரப்போகும் முடிவற்ற காலங்களிலும் எவரும் அறியப்போவதில்லை’

பீஷ்மரின் உயரத்தை அண்ணாந்து பார்த்து மகிழ்ந்து சிரித்து “தம்பி அஸ்தினபுரிக்குமேல் உயர்ந்திருக்கும் ஹஸ்தியின் அரண்மனை முகடுபோலிருக்கிறாய் நீ” என்றார் வியாசர். “ஆனால் உன்னை அனைவரும் பார்க்கிறார்கள். நீ எவரையும் அணுகிப்பார்க்க முடிவதில்லை” அவரது சிரிப்பைப் பார்த்தபடி பீஷ்மர் புன்னகை புரிந்தார். சிரித்தபடி “வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார் வியாசர்.

“ஆம்…அது உண்மை” என்றார் பீஷ்மர். “நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

வியாசர் சிரித்து “வெகுதொலைவு வந்துவிட்டாய்” என்றார். மாசற்ற வெண்பற்கள் மின்னிய அச்சிரிப்பு ஐந்துவயதுக் குழந்தைக்குரியது என்று எண்ணியதும் பீஷ்மரின் கரைகள் உடைந்தன. “மூத்தவரே” என்றழைத்தபோது ஒரு கணம் நெஞ்சு விம்மி நா தளர்ந்து அடுத்த சொற்றொடர்களை மறந்தார் பீஷ்மர். தொண்டையிலிருந்த இறுக்கத்தை விழுங்கிவிட்டு “மூத்தவரே, விண்ணிலிருக்கும் தூய ஒலிகளை தேடிச்சென்றுகொண்டிருப்பவர் நீங்கள். நான் மண்ணின் எளியசிக்கல்களுடன் போரிட்டுக்கொண்டிருப்பவன். எனக்கு சொற்கள் கைகூடவேயில்லை. ஆகவே அம்புகளை பயிற்சிசெய்கிறேன்” என்றார்.

“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” பீஷ்மர் தொடர்ந்தார். “நான் என்னை மிகமிகக்கூரிய ஓர் ஆயுதம் என்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை. இவர்கள் சொல்லும் அன்பு, பாசம், நெகிழ்ச்சி என்பதெல்லாம் எனக்கு என் முன் வந்துசேரும் மானுடப் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கான வெறும் அடையாளங்களாகவே தெரிகின்றன…அச்சொற்களை நான் சதுரங்கக் காய்களென நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கிறேன்”

“இப்போது உன் தரப்பின் காய்களே ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் திகைத்து நிற்கின்றன இல்லையா?” என்றார் வியாசர். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”

பீஷ்மர் அச்சொல்லை உடல்நடுங்கும் மனக்கிளர்ச்சியுடன் கேட்டு கைகூப்பினார். அதற்குமேல் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் திரும்பிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டார். ஆனால் வியாசர் தொடர்ந்து பேசினார். “நீ என்னைத்தேடிவந்த சிக்கல் என்ன?”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]

அதைக் கேட்டதும் தொலைதூரத்தில் இருந்து திரும்பி வந்து அரைக்கணம் திகைத்தபின் பெருமூச்சுடன் சொல்லத்தொடங்கினார் பீஷ்மர். “மூத்தவரே, இன்று என் தந்தை என்னிடம் ஒப்படைத்துச்சென்ற நாடான அஸ்தினபுரம் ஆபத்தில் இருக்கிறது. அதை எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அதை தாக்குவார்களென்றால் அது நியாயமென்று எண்ணும் மக்கள் அஸ்தினபுரியிலும் இருக்கிறார்கள். அஸ்தினபுரிக்கு இன்று மன்னன் இல்லை… மன்னனைக் கண்டடையும் வழியோ சிக்கலாக உள்ளது.”

நிலைமையை அரை இமை மூடி வியாசர் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு புன்னகையுடன் “இது மீண்டும் மீண்டும் நிகழும் வரலாறுதான். அரியணை இயல்பாக கைமாறுவது அரிதாகவே நிகழ்கிறது. அஸ்தினபுரிக்குக் காவலனாக நீ இருக்கையில் அதை எவரும் வெல்லமுடியாது. உன் தோள்களின் உறுதியை சிந்தனையிலும் கொண்டுவந்தால்போதும்” என்றார். “…நான் எதற்கும் துணிந்திருக்கிறேன் மூத்தவரே. என் கண்முன் இந்த நாடு அழிவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்றார் பீஷ்மர்.

வியாசர் புன்னகையுடன் “ஆம், அது உன் தர்மம். மண்ணாசையால் மானுடன் ஷத்ரியனாகிறான்” என்றார். பீஷ்மர் “நான் தங்களிடம் கேட்கவிழையும் வினா ஒன்றே. ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எதுவாக இருக்கும்? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப்பிழைகளும் மன்னிக்கப்படும்?” என்றார். அப்போது மரப்பட்டைச்சுவர்களுக்கு அப்பால் சித்ரகர்ணி தன் காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி கேட்டது.

பீஷ்மர் “நான் கற்ற நூல்களின்படி ஒரு ஷத்ரியன் நாட்டுக்காக உயிரைவிடவேண்டியவன்…அவனுடைய சுகங்களையும் குடும்பத்தையும் எல்லாவற்றையும் அவன் நாட்டுக்காக அர்ப்பணிக்கவேண்டும்.அவன் தொழிலோ வணிகமோ செய்யக்கூடாது. அவன் பூசைகளும் வழிபாடுகளும் செய்யவேண்டியதில்லை. தன்னுடைய நலனைப்பற்றி ஒரு கணம்கூட நினைக்காத வீரமும் தன்னவர்களுக்காக உயிர்விடும் தியாகமுமே ஷத்ரியனை உருவாக்குகின்றன. ஷத்ரியப்பெண்ணுக்கும் அதே நீதிதான். அவளுக்கு தனக்கான ஆசைகள் எதுவும் இருக்கலாகாது. நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதற்காக அவள் எதை வேண்டுமானாலும் இழந்தாகவேண்டும்…” என்றார்.

பீஷ்மர் நெடுமூச்சுயிர்த்து “ஆம், ஷத்ரிய தர்மப்படி சொந்த நாட்டின் நன்மைக்காக ஷத்ரியன் ஷத்ரியப்பெண்ணை தூக்கிவருவதில் தவறே இல்லை….பிற குலத்துப்பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் தூக்கிவந்தால்தான் பெரிய பாவம்…” என்றார்.

வியாசர் புன்னகையுடன் “பிறகென்ன?” என்றார். பீஷ்மர் “ஆனால் ..என் மனம் சஞ்சலமாகவே இருக்கிறது…ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது….” என்றார். “இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது மூத்தவரே. அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?”

“அந்தச் சிந்தனை வந்தபின் நீ வெறும் ஷத்ரியனல்ல…ரிஷிகளின் பாதையில் செல்கிறாய்” என்றார் வியாசர் “நீ ஒருபக்கம் ஷத்ரியனாக பேசுகிறாய். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண மனிதனாகவும் சிந்திக்கிறாய். போரில் நீ அறுத்தெறியும் தலைக்குரியவனின் குழந்தைகளின் கண்ணீரை ஒருகணமேனும் எண்ணிப்பார்த்ததுண்டா?”

“எண்ணிப்பார்க்கவும்கூடும் என்று இப்போது நினைக்கிறேன் மூத்தவரே….சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்” என்றார் பீஷ்மர்.

வியாசர் சிலகணங்கள் அமைதியாக இருந்துவிட்டு பின்பு “தேவவிரதா, உன் குலமூதாதையொருவனின் கதையைச் சொல்கிறேன். அவன் பெயர் சிபி. பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, அனுத்ருஹ்யன், சபாநரன், காலநரன், சிருஞ்சயன், உசீநரன் என்பது அவனுடைய வம்சவரிசை. பாரதவர்ஷத்தின் அறம் விளையும் மண் என்று அவனுடைய நகரமான சந்திரபுரி அழைக்கப்பட்டது. அவனுடைய வாழ்க்கையையே அறநூலாகக் கொள்ளலாமென்றனர் முனிவர்கள். அந்நாளில் ஒருமுறை இக்கதை நிகழ்ந்தது என்பார்கள்” என்றார்.

சந்திரவம்சத்து சிபி தன் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கையில் வெண்பஞ்சுச் சுருள் போன்ற சின்னஞ்சிறு வெண்புறா ஒன்று சிறகடித்து வந்து அவன் ஆடைக்குள் புகுந்துகொண்டது. அவன் எழுந்து அதை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டான். இதயம் நடுங்க, சிறகுகள் பிரிந்து உலைய அவன் கைவெம்மையில் ஒடுங்கியிருந்தது. அதன் முதுகிலிருந்த ரத்தக்காயத்தில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. அப்போது சாமரம்போன்ற சிறகுகள் வீசி ஒலிக்க எரித்துளிகள் போன்ற கண்களும், போரில் பின்னிக்கொண்ட குத்துவாட்களைப் போன்ற அலகுகளும், ஆற்றுக்கரை மரத்தின் வேர்ப்பிடிப்பு போன்ற கால்களும் கொண்ட செம்பருந்து ஒன்று வந்து அவன் உப்பரிகை விளிம்பிலமர்ந்தது.

சிபியிடம் அப்பருந்து சொன்னது “மன்னனே உன்னை வணங்குகிறேன். சைத்ரகம் என்னும் செம்பருந்துக்குலத்தின் அரசனாகிய என்பெயர் சித்ரகன். பிறப்பால் நானும் உன்னைப்போன்றே ஷத்ரியன். இந்தப் புறாவை நான் விண்ணில் பார்த்தேன். எனக்கும், நேற்றுமாலை முட்டை விட்டிறங்கிய என் குஞ்சுகளுக்கும் சிறந்த உணவாகும் இது என்று இதைத் தொடர்ந்து சென்று தாக்கினேன். காயத்துடன் அவள் உன்னருகே வந்திருக்கிறாள். அவளை என்னிடம் விட்டுவிடு. மண்ணில் உள்ள மானுடர்களுக்குத்தான் நீ அரசன். விண்ணிலும் நீரிலும் கோடானுகோடி உயிரினங்கள் வேட்டையாடியும் வேட்டையாடப்பட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வாழ்க்கைக்குள் நுழைய உனக்கு அனுமதியில்லை”

“ஆம், நானறிவேன். என் காலடிக்கீழ் ஒவ்வொருகணமும் பல்லாயிரம் சிற்றுயிர்கள் அழிவதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த வெண்புறா என்னிடம் அடைக்கலம் தேடியிருக்கிறது. இதைக் காப்பது ஷத்ரியனாகிய என் கடமை. அக்கடமையிலிருந்து நான் வழுவமுடியாது” என்றான் சிபி.

சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது.

“என்னுடைய அரண்மனை வளாகத்திற்குள் என் கைகளுக்குள் வந்த ஒவ்வொன்றுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதே என் தன்னறம்” என்றான் சிபி. அலகைவிரித்து சீறிச் சிறகடித்த சித்ரகன் “அப்படியென்றால் நானும் என்குழந்தைகளும் பசித்துச் சாகவேண்டுமென நினைக்கிறாயா? உன் நீதியின் துலாக்கோலில் எனக்கு இடமே இல்லையா?” என்றது.

சிபி ஆழ்ந்த மனக்குழப்பத்துக்குள்ளானான். “உனக்கும் உன் குலத்துக்குமான உணவை நான் அளிக்கலாமா?” என்றான். “அறியாதவனாகப் பேசுகிறாய். நான் ஷத்ரியன். பட்டினியால் இறக்கும்போதும் கொடைபெற்று வாழமாட்டேன். நான் என் வீரத்தால் ஈட்டாத எதுவும் எனக்கு உணவல்ல” என்றது சித்ரகன்.

“மன்னனே உண்ணப்படாத ஏதும் இப்பிரபஞ்சத்திலில்லை என்பதை நீ கற்றறிந்த நூல்கள் உனக்குச் சொல்லவில்லையா என்ன? என்னை இந்த அலகுடனும் இந்த நகங்களுடனும் இப்பெரும்பசியுடனும் படைத்த ஆற்றல் அல்லவா என்னை கொன்று உண்பவனாக ஆக்கியது? இந்தச் சின்னஞ்சிறு வெண்புறா இன்று காலையில் மட்டும் ஆயிரம் சிறுபூச்சிகளை கொத்தி உண்டிருக்கிறதென்பதை நீ அறிவாயா? அந்த ஆயிரம் புழுக்கள் பல்லாயிரம் சகப்புழுக்களை விழுங்கி நெளிந்துகொண்டிருந்தன என்பதை அறிவாயா? இதை விட்டுவிடு. இதைக் காப்பாற்ற முயலும்போது நீ இப்பிரபஞ்சத்தை நிகழ்த்தும் முதல்மனதுடன் போட்டிபோடுகிறாய்” என்று சித்ரகன் சொன்னது.

“உண்மை….ஆனால் படைப்புடன் போட்டியிடுவதனாலேயே மன்னனை தெய்வம் என்கின்றன வேதங்கள். ஆகவேதான் காப்பதற்கும் அழிப்பதற்கும் மன்னிப்பதற்கும் அவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் சிபி. சித்ரகன் சலிப்புடன் “நம்மிடையே விவாதம் எதற்கு? நீ என் பசிக்கு மட்டும் பதில்சொல்” என்றது.

தானறிந்த அனைத்து நெறிநூல்களையும் நினைவில் ஓட்டிய சிபி அதற்கான வழியைக் கண்டுகொண்டான். ஷத்ரியன் எதையும் தன் குருதியால்தான் ஈடுகட்டவேண்டும் என்றன நூல்கள். அவனுடைய ஆயுதம் அவனுடைய உடலே. அவனுடைய தர்மம் தியாகம்.

“இப்புறாவை நான் காத்தாகவேண்டும். ஆனால் உன் பசியைப்போக்குவதும் எனக்கு விதிக்கப்பட்ட அறமேயாகும்” என்றான் சிபி. “தர்மநூல்களின்படி நான் எந்தச்சிக்கலையும் என் மாமிசத்தாலும் குருதியாலும்தான் தீர்க்கவேண்டும். இதற்குப் பதிலாக நீ என்னைப்பெற்றுக்கொள்வது ஷத்ரிய முறையே. இதோ இப்புறாவின் அளவுக்கே என் தொடைச்சதையை அறுத்து உன் முன்வைக்கிறேன்” என்றபடி தன் உடைவாளை உருவி தொடைச்சதையை வெட்டி அப்புறா அமர்ந்திருந்த ஊஞ்சல்தட்டின் மறுநுனியில் வைத்தான். ஆனால் புறாவின் எடை தாழ்ந்தே இருந்தது. மேலும் சதையைவெட்டி அங்கே வைத்தபோதும் புறாவின் எடைக்கு நிகராகவில்லை

புறா தன் சிறுமணிக் கண்களைச் சுழற்றி “மன்னனே, மலையஜம் என்னும் பாறையிடுக்கில் வாழும் புறாக்குலத்தைச் சேர்ந்த என் பெயர் பிரபை. அன்னையரை அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடவேண்டும். இன்னும் நூறாண்டுக்காலம் என் முட்டைகளிலிருந்து விரிந்து வரப்போகும் அத்தனை புறாக்களின் எடையும் என்னில் உள்ளது” என்றது. சிபி சித்ரகனை நோக்கி “அப்படியென்றால் நான் என்னை முழுமையாகவே உனக்கு அளிக்கிறேன்” என்று சொல்லி குருதிபடிந்த நகங்கள் கொண்ட அதன் பாதங்கள் முன் தன் தலையை காணிக்கையாக வைத்தான்.

சித்ரகன் சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “மன்னனே நீ என் காலடியில் தலைகுனிந்ததனாலேயே என்னிடம் அடைக்கலம் கோரியவனாகிறாய். உன்னை உண்பதை விட நானும் என்குலமும் பட்டினியில் மடிவதே அறமாகும்” என்று சொல்லி பறந்துசென்றது.

“சிபி ‘நீயும் உன் குலங்களும் வாழ்வதாக’ என்று சொல்லி வாழ்த்தி அந்த வெண்புறாவை வானில் விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்று வானில் வந்தமர்ந்து நோக்கிய அவன் முன்னோர்கள் ஆரவாரம்செய்தனர்” என்று சொல்லி முடித்த வியாசர் பீஷ்மரிடம் “ஷத்ரியனான சித்ரகன் சொன்னதை நினைவுகொள்க. உன் முன் தலைவணங்கும் ஒவ்வொருவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களே… மன்னனிடம் குடிகள் தலைபணிவது அதன்பொருட்டே” என்றார்.

வெளியே நின்றிருந்த சித்ரகர்ணி ‘ஆம், அது நானே’ என்று சொல்லிக்கொண்டது. ‘இப்போது அறிகிறேன். முற்பிறவிகளிலொன்றில் நீ சிபியாக இருந்தாய், உன் முன் அன்று சித்ரகனாக வந்தவன் நான்’ அது மூச்செறிந்த ஒலி பாம்பு சீறுவதுபோல ஒலித்தது.

வியாசர் “இளையவனே, சிபி அறிந்த உண்மையே ஒவ்வொரு ஷத்ரியனுக்குமுரிய நெறியாகும். அரசன் தன் குருதியால் அனைத்தையும் ஆற்றுவதற்குக் கடமைப்பட்டவன். அந்தக்குருதியால் அவன் அனைத்தையும் ஈடுகட்டிவிடவும் முடியும்” என்றார்.

அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.

‘இந்த அறியாச் சுழல்பாதையில் மீண்டும் மீண்டும் நான் உன்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். நம்மை வைத்து ஆடுபவர்களுக்கு சலிக்கும்வரை இதை நாம் ஆடியே ஆகவேண்டும்’ என்றது சித்ரகர்ணி. ‘அழு…ஓலமிடு. நான் கர்ஜிக்கிறேன். ஆடத்தொடங்குவோம்’

புயலில் பெருமரம் சரியும் ஒலியுடன் சிம்மம் பசுவின் மேல் பாய்ந்தது. பசு கதறி ஓலமிட அதன் கழுத்தைக்கவ்வி அள்ளித்தூக்கி தன் தோள்மேல் போட்டுக்கொண்டு பாய்ந்து மரப்பட்டை வேலியைத் தாண்டி புதர்களுக்குள் மறைந்தது.

சீடர்கள் “சிங்கம்…சிங்கம் பசுவைப் பிடிக்கிறது…சிங்கம்…ஓடிவாருங்கள்…கல்லை எடுத்து எறி…. தடி! தடி எங்கே? சிங்கம்!” என்று கூட்டமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்தனர். தடிகளையும் கற்களையும் அந்தப்புதர்களை நோக்கி வீசினார்கள். வியாசரும் பீஷ்மரும் வெளியே ஓடிவந்தனர்.வெளியே பசு கிடந்த இடத்தில் கொழுத்த ரத்தத்துளிகள் சொட்டிப்பரவிக்கிடந்தன. ரத்தத்தின் பாதை ஒன்று புதர்கள் வரை சென்றிருந்தது.

பீஷ்மர் குனிந்து அந்தப் புழுதியில் இருக்கும் சிங்கத்தின் காலடித்தடங்களைப் பார்த்துவிட்டு “வயதான பெரிய சிங்கம். நகங்கள் மழுங்கியிருக்கின்றன. அதனால் வேட்டையாட முடியவில்லை.ஆகவேதான் வீட்டுப்பசுவை தேடி வந்திருக்கிறது” என்றார். வியாசரின் மாணவனாகிய சுதாமன் அழுகையும் ஆவேசமுமாக “பெற்றதாய் மாதிரி இருந்தாளே… இக்குடிலுக்கு லட்சுமியாக விளங்கினாளே….அவளை தூக்கிக்கொண்டு போய்விட்டதே…” என்றான். இன்னொரு மாணவனாகிய சுதன் குனிந்து கைப்பிடி மண்ணை அள்ளி ஓங்கி வேதமந்திரத்தைச் சொன்னபடி ஆங்காரமாக ‘கருவுற்ற பசுவைக் கொன்ற பாவி…உனக்கு –‘ என்று தீச்சொல் விடுக்கப்போனான்.

வியாசர் புன்னகையுடன் அவனை கைதூக்கித்தடுத்து “நில் சுதனே….பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்றார். பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார். அதன்பின் அவர் ஒரு சொல்லும் பேசவில்லை. வியாசருக்குத் தலைவணங்கியபின் நேராக தன் ரதத்தை நோக்கிச் சென்றார்.

கங்கைக்கரையில் நீத்தார்சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் புனிதமான படித்துறைக்கு கந்தினியைக் கொண்டு சென்று போட்டு அதன் வயிற்றைக்கிழித்து கருவை எடுத்து தலையை அசைத்தபடியும் உறுமியபடியும் சுவைத்து உண்டது சித்ரகர்ணி. மனமும் வயிறும் நிறைந்தபின் தொங்கும் உதடுகளிலும் மோவாய் மயிர்முட்களிலும் குருதிமணிகள் சிலிர்த்து நிற்க அருகே இருந்த பாறைமேல் ஏறி நின்று வலது முன்காலால் பாறையை ஓங்கி அறைந்து காடுகள் விறைக்க, மலையடுக்குகள் எதிரொலிக்க, கர்ஜனை செய்தது. அப்பால் ஒரு கடம்பமரத்தடியில் யாழுடன் நின்று அதைப் பார்த்து பிரமித்த சூதனின் பாடலுக்குள் புகுந்து அழிவின்மையை அடைந்தது.

முந்தைய கட்டுரைவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி
அடுத்த கட்டுரைநல்லுச்சாமிப்பிள்ளை