‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8

பகுதி இரண்டு : பொற்கதவம்

[ 3 ]

அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று உணர்ந்தனர். சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். அவனைக் கண்டபின் அஸ்தினபுரியின் மக்கள் தங்கள் கனவுகளில் கண்ட அத்தனை பிதாமகர்களுக்கும் அவனது முகமே இருந்தது.

தேவவிரதன் என தந்தையால் அழைக்கப்பட்ட பீஷ்மர் தவசீலர்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டிருந்தார்.மலையுச்சியின் ஒற்றைமரத்தில் கூடும் தனிமை அவரிடம் எப்போதுமிருந்தது. ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார். அஸ்தினபுரியின் நகரெல்லையில் அவரது ஆயுதசாலை இருந்தது. அங்குதான் அவர் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார்.

பிரம்மமுகூர்த்தத்தில் காஞ்சனத்தின் மணியோசை கேட்டு எழுந்து நீராடி வழிபாடுகளை முடித்துவிட்டு ஆயுதசாலைக்கு வந்து வெயில் வெளுப்பதுவரை தன்னந்தனியாக பயிற்சி செய்வது பீஷ்மரின் வழக்கம். ஆயுதப்பயிற்சியே அவரது யோகம் என்று அறிந்திருப்பதனால் அவரை அப்போது எவரும் அணுகுவதில்லை. விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார். குறிப்பலகையின்கீழே பிளவுண்ட அம்புகள் குவிந்துகொண்டே இருந்தன. அப்போது உள்ளே வந்த சேவகன் வணங்கி முகமன் சொன்னான். கையில் சிற்றம்புடன் பீஷ்மர் அவனை திரும்பிப்பார்த்தார். அந்நேரத்தில் அவரை என்றால் அது சிற்றன்னை சத்யவதியின் அழைப்பாகவே இருக்கமுடியும்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

மீண்டும் நீராடி வெண்ணிற அந்தரீயமும் உத்தரீயமும் அணிந்து பீஷ்மர் பேரரசியின் அந்தப்புரச்சபைக்கு சென்றார். அரண்மனையின் இடப்புறத்து நீட்சியாக அமைந்திருந்த அந்தப்புரத்தின் முற்றத்தில் செந்நிறக் கற்கள் பரப்பப்பட்டிருந்தன. ரதமிறங்கி அவர் படிகளில் ஏறியபோது காவலர்கள் வேல் தாழ்த்தி சிரம் குனிந்தனர். சிம்மங்கள் நாற்புறமும் விழித்து நின்ற மரச்சிற்பத்தூண்கள் வரிசையாக அணிவகுத்த நீண்ட இடைநாழியில் இருந்து உள்ளறை வாசல்கள் திறந்து திறந்து சென்றன. அறைகளைக் குளிர்விக்கும் நீரோடைகள் மெல்லிய நீரொலியுடன் வழிந்தன. அரண்மனைக்குள் வாழும் மயில்களும் கிருஷ்ணமிருகங்களும் ஒலிகேட்டு அழகிய கழுத்தை வளைத்துநோக்கின.

தன்னுள் ஆழ்ந்தபடி நடந்த அவருக்கு முன்னால் அவரது வருகையை சைகையால் அறிவித்தபடி சேவகன் ஓடினான். அவரது உயரத்துக்கு அரண்மனையின் அத்தனை நிலைவாயில்களும் சிறியவை என்பதனால் ஒவ்வொரு வாயிலுக்கும் அவர் குனிந்துகொள்ள வேண்டியிருந்தது.

பேரரசியின் முன்னால் செல்வதனால் அவர் தலைப்பாகையை அணிந்திருக்கவில்லை. காகபட்சமாக வெட்டப்பட்ட கூந்தலின் நரையோடிய கரிய கற்றைகள் நரம்புகள் புடைத்த பெரிய தோள்களில் விழுந்துகிடந்தன. கரிய கனத்த தாடி மார்பைத்தொட்டது. பீஷ்மர் நகைகளேதும் அணிவதில்லை. காதுகளில் கிளிஞ்சல்குண்டலங்களும் கழுத்தில் குதிரைவால் சரடில் கோர்க்கப்பட்ட வெள்ளியாலான குருகுலத்து இலச்சினையும் மட்டும் அவர் உடலில் இருந்தன. சரிகைகளற்ற வெண்ணிற ஆடைக்குமேல் கட்டப்பட்ட மான்தோல் கச்சையில் அவர் ஆயுதமேதும் வைத்திருக்கவுமில்லை.

அந்தப்புரவாசலில் நின்று தன்னை வணங்கிய பெண்காவலரிடம் அரசியைப் பார்க்க அவர் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னார். தலைமைக்காவல்பெண் வெளியே வந்து தலைவணங்கி “குருகுலத்து இளவரசர் பீஷ்மரை பேரரசி சத்யவதிதேவி வரவேற்கிறார்..” என்று அறிவித்து உள்ளே அழைத்தாள். தலைகுனிந்தபடி பீஷ்மர் உள்ளே சென்றார்.

கங்கைக்கரைப் பெருமரப்பலகைகளால் செய்யப்பட்டு வெண்களிமண் பூசி வண்ணக்கோலமிடப்பட்ட சுவர்கள் கொண்ட அரண்மனை அறைக்குள் வெண்பட்டு மூடிய ஆசனத்தில் சத்யவதி அமர்ந்திருந்தாள். வெண்பட்டாலான ஆடைக்குமேல் செம்பட்டுக் கச்சையில் வைரங்கள் பதிக்கப்பட்ட மீன்வடிவப்பிடி கொண்ட குத்துவாளும் தலையில் அணிந்திருந்த சிறிய மணிமுடியும் அரச சின்னங்களாக இருந்தன. மெல்லிய பூங்கொடியை வளைத்துக்கட்டியது போன்ற அமைப்புகொண்ட மணிமுடியின் முகப்பில் அமுதகலசச் சின்னமிருந்தது.

முகமன் கூறி வணங்கிய பீஷ்மரை வாழ்த்தி அருகே அமரச்செய்தாள் சத்யவதி. அறுபத்தைந்து வயதிலும் மூப்பின் தடங்களில்லாத அவளுடைய அழகிய கரியமுகத்தில் எப்போதும் எங்கும் தலைவணங்கியிராதவர்களுக்குரிய பாவனை இருந்தது. அரசி கையசைக்க சேடி அருகே இருந்த பொற்பிடிகள் கொண்ட கடலாமை ஓடால் மூடியிடப்பட்ட பெட்டியிலிருந்து ஓலையொன்றை எடுத்து பீஷ்மரிடம் கொடுத்தாள். “இன்று காலை பேரமைச்சர் இதைக்கொண்டுவந்து என்னிடம் அளித்தார். பலபத்ரரின் ஒற்றன் நாகரதேசத்துக்குச் சென்ற ஒரு தூதனைக் கொன்று இதை கைப்பற்றியிருக்கிறான்.”

பீஷ்மர் சுவடியை வாசிக்கையில் அரசி பெருமூச்சுவிட்டு “இதன் மொழியைக்கொண்டு பார்த்தால் இத்தகைய ஓலைகள் பாரதமெங்கும் சென்றிருக்கின்றன என்று தெரிகிறது” என்றாள். “ஆம்” என்றபடி அதை பீஷ்மர் குழலில் இட்டு மூடினார். அரசி பேசுவதற்காகக் காத்திருந்தார்.

“என்னைப்பற்றி சூதர்களின் கதைகள் சொல்வதைக் கேட்டால் எனக்கே அச்சமாக இருக்கிறது. அக்கதைகளைக் கேட்கும் எவரும் அஸ்தினபுரியின் அரசனை மாயத்தால் கைப்பற்றிய தீயதேவதை என்றுதான் என்னைப்பற்றி எண்ணுவார்கள்.சென்ற இருபதாண்டுகாலமாக இக்கதைகள் கிளைவிட்டு வளர்ந்துகொண்டே இருக்கின்றன. என் குலத்தின் காரணமாக பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவரும் என்னை வெறுக்கிறார்கள். நம்முடைய குடிமக்கள்கூட என்னை அஞ்சுகிறார்கள். இந்த அரியணையில் நான் இருப்பதன்மூலம் அவர்களுக்கு ஏதோ பெருந்தீங்குவந்து சேரும் என எண்ணுகிறார்கள்…”

ஏதோ சொல்லவந்த பீஷ்மரை கையமர்த்தி சத்யவதி தொடர்ந்தாள். “எனக்கு எல்லாம் தெரியும். எனக்கும் ஒற்றர்கள் இருக்கிறார்கள். ஆயர்குடிகளும் வேளாண்குடிகளும் கடலவர்களும் எதை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நான் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.”

“அன்னையே, பல தலைமுறைகளுக்கு முன்பு மாமன்னர் ஹஸ்தி இந்த ஐம்பத்தைந்து நாடுகளையும் வென்று அஸ்தினபுரியை பார்தவர்ஷத்தின் தலைநகராக அமைத்த நாள்முதலாக ஷத்ரிய மன்னர்கள் அஞ்சிவருகிறார்கள். அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது” என்றார்.

சத்யவதி “ஆம், இந்த வம்சம் அழியும் என்று நினைக்கிறார்கள்…அஸ்தினபுரம் அவர்கள் கையில் பழுத்த கனிபோல போய் விழும் என்று கணிக்கிறார்கள்… அது நடக்கக் கூடாது..” என்றாள்.
.
“அஸ்தினபுரி அதன் வீரப்புதல்வர்களை இன்னும் இழந்துவிடவில்லை” என்று உள்ளெழுந்த சினத்தை அடக்கியபடி சொன்னார் பீஷ்மர். சத்யவதி “ஆனால் இப்போது அஸ்தினபுரத்துக்கு மன்னன் இல்லை…என் மகன் சித்ராங்கதன் இறந்து ஒருவருடம் முடியப்போகிறது…சித்ராங்கதனின் நீர்க்கடன்நாளுக்குள் விசித்திரவீரியன் மன்னனாக வேண்டும்….இன்னும் அதிக நாட்களில்லை நமக்கு” என்றாள். “ஆம் அன்னையே. அதை உடனடியாகச் செய்துவிடுவோம். நான் ஆவனசெய்கிறேன்” என்றார் பீஷ்மர்.

சத்யவதி “நெறிநூல்களின்படி மணமுடிக்காதவன் மன்னனாக முடியாது….விசித்திரவீரியனுக்கு ஏதேனுமொரு ஷத்ரிய மன்னன் பெண்கொடுக்காமல் எப்படி அவன் கிரஹஸ்தனாக முடியும்?” என்றாள். “அஸ்தினபுரத்தின் அதிபன் கேட்டால் மறுக்கக்கூடியவர்கள் யார் என்று பார்ப்போம்…” என்றார் பீஷ்மர்.

சத்யவதி அவளுடலில் திடீரென்று கூடிய வேகத்துடன் எழுந்து தன் கையருகே இருந்த ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டியைத்திறந்து உள்ளிருந்த ஓலைகளை அள்ளி பீஷ்மன் முன்வைத்தாள். “பார்….எல்லாம் அரசத் திருமுகங்கள்… தேவவிரதா, உனக்குத் தெரியாமல் நான் பாரதநாட்டின் ஐம்பத்தைந்து மன்னர்களுக்கும் எழுதினேன்…ஆசைகாட்டினேன்… கெஞ்சினேன்… அச்சுறுத்தவும் செய்தேன். ஒருவர்கூட பெண் கொடுக்க முன்வரவில்லை… வீண்காரணங்கள் சொல்கிறார்கள்… ஏளனம் செய்கிறார்கள்….இதோபார்…” என்று ஓர் ஓலையைக் காட்டினாள். “படித்துப்பார்….காசிநாட்டு மன்னன் எழுதியிருக்கிறான்… விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”

பீஷ்மர் கடும்சினத்துடன் எழுந்துவிட்டார். “அந்தச் சிற்றரசனுக்கு அத்தனை ஆணவமா? அஸ்தினபுரத்துக்கே இப்படி ஒரு ஓலையை எழுதுகிறான் என்றால்….” என்றார். சத்யவதி பெருமூச்சுடன் “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்” என்றாள்.

பீஷ்மர் “அன்னையே யானை எங்கும் சிக்கிவிடவில்லை. அஸ்தினபுரிக்கு நான் இருக்கிறேன்..” என்றார். சத்யவதி, “ஆம்,அந்த நம்பிக்கையில்தான் சொல்கிறேன்….அதற்காகத்தான் உன்னை வரவழைத்தேன்…” என்றாள். “சொல்லுங்கள்…நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் பீஷ்மர்.

“காசிமன்னன் பீமதேவன் அவனுடைய மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.’அம்பை அம்பிகை அம்பாலிகை என்ற அந்த மூன்று இளவரசிகளும்தான் இன்று பாரதவர்ஷத்தின் பேரழகிகள் என்று சூதர்களின் பாடல்கள் சொல்கின்றன. ஐம்பத்தைந்து ஷத்ரியமன்னர்களும் அவர்களை மணம்செய்யும் கனவுடனிருக்கிறார்கள். இன்னும் பன்னிரு நாட்களுக்குப்பின் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் காசிநகரில் சுயம்வரக்கொடி ஏறவிருக்கிறது.”

பீஷ்மரை கூர்ந்து நோக்கி சத்யவதி சொன்னாள். “அந்த விழாவுக்கு நம்மைத்தவிர பாரதநாட்டில் உள்ள அத்தனை அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறான் பீமதேவன்…நம்மை அவமானப்படுத்துவதற்காகவே இதைச் செய்திருக்கிறான்.  நாம் அவனிடம் பெண்கேட்டதற்காகவே இதைச்செய்கிறான்…”

பீஷ்மர் “அன்னையே, விசித்திரவீரியன் அந்த சுயம்வரத்துக்குச் செல்லட்டும். நானும் உடன் செல்கிறேன். அஸ்தினபுரியின் மன்னனை அழைக்காததற்கு காசிமன்னனை நமக்கு திறைகட்டச்சொல்வோம். அவனுடைய சுயம்வரப்பந்தலில் அஸ்தினபுரிக்கென ஓர் ஆசனம் போடச்செய்வோம்” என்றார்.

“தேவவிரதா, நான் என் மைந்தனை அறிவேன். அவனை சுயம்வரப்பந்தலில் சேடிப்பெண்கூட நாடமாட்டாள்” என்றாள் சத்யவதி. “நீ காசிநாட்டின் மீது படையெடுத்துப்போ…அந்த மூன்று பெண்களையும் சிறையெடுத்து வா…”

பீஷ்மர் திகைத்து எழுந்து பதறும் குரலில் “அன்னையே நீங்கள் சொல்வது அறப்பிழை….ஒருபோதும் செய்யக்கூடாதது அது…” என்றார். “அஸ்தினபுரியின் அரசி ஒருபோதும் எண்ணக்கூடாத திசை. வேண்டாம்” என்றார்.

“நான் எட்டுத்திசைகளிலும் எண்ணியபின்புதான் இதைச் சொல்கிறேன்… இதுவன்றி இப்போது வேறுவழியே இல்லை” என்று அகவேகத்தால் சிறுத்த முகத்துடன் சத்யவதி சொன்னாள். “உன்னால் மட்டுமே இதைச் செய்யமுடியும்…ஷத்ரியர் கூடிய சபையில் ஆட்டுமந்தையில் சிம்மம் போல சென்று நிற்கமுடியும் உன்னால்…தேவவிரதா, நீ செய்தேயாகவேண்டியது இது…இது என் ஆணை”

பீஷ்மர் அந்நிகழ்ச்சியை தன் சித்தத்தில் ஒருகணம் ஓட்டிப்பார்த்து உடல்நடுங்கி “அன்னையே, நெறிநூல்களின்படி அந்தப்பெண்கள் என்னை விரும்பினால், அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்…அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…ஷத்ரியன் அதைச்செய்வதென்பது தன் முன்னோரை அவமதிப்பதன்றி வேறல்ல.”

”நீ நைஷ்டிக பிரம்மசாரி…உனக்கு அவர்கள் தேவையில்லை. என் மகனுக்கு அவர்கள் தேவை. அந்த மூன்று பெண்களையும் என் மகனுக்கு திருமணம் செய்து வைப்போம். அப்பெண்கள் இங்கே வந்தால் அஸ்தினபுரி பிழைக்கும். இல்லையேல் அழியும். தேவவிரதா, நீ செல்லாமல் அவன் அவர்களை அடைவது நிகழவேமுடியாது.”

பீஷ்மரின் எண்ணங்களை உணர்ந்தவளாக சத்தியவதி சொன்னாள். “விசித்திரவீரியன் நோயாளி என்பதை நான் மறக்கவில்லை. அவன் திருமணமாகி அரியணையில் அமர்ந்துவிட்டானென்றால் மேலும் பத்துப்பதினைந்து வருடங்களுக்கு எந்தச்சிக்கலுமில்லை. ஷத்ரியர்களும் குடிமக்களும் எதுவும் சொல்லமுடியாது. அதற்குள் பாரதநாட்டில் இருக்கும் அனைத்து வைத்தியர்களையும் வரவழைப்போம்…திராவிடநாட்டில் இருந்து அகத்தியமுனிவரையே கொண்டுவர ஆளனுப்பியிருக்கிறேன். அவனுக்கு நோய் தீர்ந்தால் குழந்தைகள் பிறக்கும்…குருவம்சம் வாழும்…”

பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றார். யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.

கடும் சினத்துடன் அவரை நோக்கித் திரும்பிய சத்யவதி “தேவவிரதா, நீ கொள்ளவேண்டிய முதல்நெறி ஷத்ரிய நெறிதான். தன்னை நம்பியிருக்கும் நாட்டையும் குடிமக்களையும் காப்பதுதான் அது” என்றாள். “தன் குடிமக்களுக்காக மும்மூர்த்திகளையும் எதிர்க்கத்துணிபவனே உண்மையான ஷத்ரியன் என்று நீ கற்றதில்லையா என்ன? கடமையைத் தவிர்ப்பதற்காகவா நீ நெறிநூல்களைக் கற்றாய்? களம் நெருங்கும்போது பின்திரும்பவா ஆயுதவித்தையை பயின்றாய்?” என்றாள்.

பீஷ்மர் “அன்னையே, ஷத்ரியதர்மம் என்னவென்று நானறிவேன். ஆனால் மானுடதர்மத்தை அது மீறலாமா என்று எனக்குப் புரியவில்லை. தன் மனதுக்குகந்த கணவர்களைப் பெற எந்தப்பெண்ணுக்கும் உரிமையுண்டு…அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது….அன்னையே, புராணங்களனைத்தும் சொல்லும் உண்மை ஒன்றே. பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை….” என்றார்

“நீ இதைச் செய்யாவிட்டால் அஸ்தினபுரியை போர் சூழும். பல்லாயிரம்பேர் களத்தில் விழுவார்கள். பல்லாயிரம் பெண்கள் விதவைகளாவார்கள்” என்றாள் சத்தியவதி. பீஷ்மர் உணர்ச்சியுடன் நெஞ்சில் கரம்வைத்து “அதைத்தடுக்கும்பொருட்டு நான் உயிர்விடுகிறேன் அன்னையே. ஆனால் பெண்பழியை நான் இக்குடிகளின் மீது சுமத்தினேனென்றால் என்னை அவர்களின் தலைமுறைகள் வெறுக்கும்…”

குரோதம் மீதூறுகையில் சத்யவதியின் கண்கள் இமைப்பை இழந்து மீன்விழிகளாவதை அதற்கு முன் பீஷ்மர் கண்டிருந்தாரென்றாலும் அவர் அஞ்சி சற்றே பின்னடைந்தார். “தேவவிரதா, உன்னுடைய உள்நோக்கம் என்ன? என் மகன் அரியணை ஏறக்கூடாதென்று எண்ணுகிறாயா? உனக்கு மணிமுடிமேல் ஆசை வந்துவிட்டதா என்ன?”

பீஷ்மர் இரு கைகளையும் முன்னால் நீட்டி “அன்னையே, என்ன கேட்டுவிட்டீர்கள்! நான் என் நோன்பை அணுவளவும் மீறுபவனல்ல” என்றார். “அப்படியென்றால் நான் ஆணையிட்டதைச் செய்…” என்றாள் சத்யவதி. கூர்வாள் தசையில் பாய்வதுபோல “இது உன் தந்தை சந்தனுவின் மீது ஆணையாக நான் உனக்குப் பணிக்கும் கடமை.”
.
மறுசொல் இல்லாமல் தலைவணங்கி தன் ஆயுதசாலைக்கே திரும்பினார் பீஷ்மர். பெரும்பாறைகளைத் தூக்கி தன் எண்ணங்கள் மீது வைத்தது போல தளர்ந்திருந்தார். அனலையே ஆடையாக அணிந்ததுபோல எரிந்துகொண்டிருந்தார். தன் மாணவர்கள் எண்மரிடம் எட்டு கூரிய வாள்களைக்கொடுத்து எட்டுத்திசையிலிருந்தும் தாக்கச்சொல்லிவிட்டு வெறும் கைகளுடன் அவர்களை எதிர்கொண்டார். எட்டுமுனைகளிலும் கூர்மைகொண்ட சித்தத்துக்கு அப்பால் ஒன்பதாவது சித்தம் ‘என்ன செய்வேன் என்ன செய்வேன்’ என்று புலம்பிக்கொண்டிருப்பதை உணர்ந்து நிறுத்திக்கொண்டார்.

வியர்வையும் மூச்சுமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அருகே வந்து நின்ற மாணவனிடம் தலைதூக்காமல் “சூதரை வரச்சொல்” என ஆணையிட்டார். அவர் வரச்சொல்வது எவரை என மாணவன் அறிந்திருந்தான். அவன் சூதர்சேரிக்குச் சென்று தீர்க்கசியாமர் என்னும் முதிய சூதரை ரதத்தில் அழைத்துவந்தான்.

பிறவியிலிருந்தே விழியற்றவராகையால் தந்தையால் முடிவிலா இருள் எனப் பெயரிடப்பட்ட தீர்க்கசியாமருக்கு அப்போது நூறுவயது தாண்டியிருந்தது. மொத்தப்பிரபஞ்சத்தையும் மொழியாக மட்டுமே அறியும் பேரருளைப் பெற்றவர் அவர் என்றது சூதர்குலம். படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர். தன்னுடைய சிறிய கிணைப்பறையை தோளில் தொங்கவிட்டு செவிகூர்வதற்காக முகத்தைச் சற்று திருப்பி, வெண்சோழிகள் போன்ற கண்கள் உருள, உதடுகளைத் துருத்திக்கொண்டு தீர்க்கசியாமர் அமர்ந்திருந்தார். ஒலிகளாகவே அஸ்தினபுரியின் ஒவ்வொரு அணுவையும் அறிந்தவர். ரதம் பீஷ்மரின் ஆயுதசாலை வாசலை அடைந்ததும் இறங்கிக்கொண்டு தன்னுடைய மெல்லிய மூங்கில்கோலை முன்னால் நீட்டி தட்டியபடி உள்ளே நுழைந்தார்.

சூதரை வரவேற்று முகமன் சொல்லி அமரச்செய்தபின் பீஷ்மர் தன் மனக்குழப்பத்தைச் சொன்னார். “சூதரே, அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார். சுருங்கிய உதடுகளுடன் தலையைத் திருப்பி தீர்க்கசியாமர் கேட்டிருந்தார். “என் சித்தம் கலங்குகிறது சூதரே. என்ன முடிவெடுப்பதென்று நீங்கள்தான் சொல்லவேண்டும்” என்றார் பீஷ்மர். தீர்க்கசியாமர் கைநீட்டி தன் கிணைப்பறையை எடுத்து இரு விரல்களால் அதன் சிறிய தோல்பரப்பை மீட்டி ‘ஓம்’ என்றார். அவர் பாடலாக மட்டுமே பேசுபவர் என்பதை பீஷ்மர் அறிந்திருந்தார்.

தீர்க்கசியாமர் யமுனையைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார். “சூரியனின் மகளாகிய யமுனை பாரதவர்ஷத்தின் குழலில் சூட்டப்பட்ட மயிலிறகு. கரியநிறம் கொண்டவளாதலால் யமுனையை காளிந்தி என்றனர் கவிஞர்கள். கங்கைக்கு இளையவள். வடக்கே கரிய கோபுரம் போலெழுந்து நிற்கும் களிந்தமலையில் தோன்றி மண்ணிலிறங்கி ஒருபோதும் கரைகள் மீறாதொழுகி தன் தமக்கையின் கைகள் கோர்ப்பவள். அவள் வாழ்க” என்றார். அவரது சொற்களின் வழியாக பீஷ்மர் யமுனையின் மரகதப்பச்சை நிறம்கொண்ட அலைகளைக் காண ஆரம்பித்தார். கடுந்தவச்சீலரான பராசரர் யமுனைக்கரைக்கு வந்து நின்றதை விழியற்ற சூதரின் பாடல் வழியாக பார்க்கலானார்.

ஆதிவசிட்டரின் நூறாவது மைந்தனின் பெயர் சக்தி. அவனை முனிகுமாரியாகிய அதிர்ஸ்யந்தி மணம் புரிந்துகொண்டாள். கிங்கரன் என்ற அரக்கன் சக்தியைத்தவிர மீதி அத்தனை வசிட்டகுமாரர்களையும் பிடித்து உண்டுவிட்டான். துயரத்தால் நீலம்பாரித்து கருமையடைந்த வசிட்டர் ஆயிரத்தெட்டு தீர்த்தங்களில் நீராடினார். புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார். இச்சைப்படி உயிர்துறக்கும் வரம்கொண்டவராதலால் தர்ப்பைப்புல்லைப் பரப்பி அமர்ந்து கண்மூடி தியானித்து தன் உடலில் இருந்து ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.

அதன் முதல்படியாக அவர் தன் நாவை அடைந்த நாள் முதல் கற்கத் தொடங்கிய வேதங்களை ஒவ்வொரு மந்திரமாக மறக்கத்தொடங்கினார். அப்போது அவரது தவக்குடிலில் அவருக்குப் பணிவிடை செய்பவளாக அதிர்ஸ்யந்தி இருந்தாள். தான் மறந்த வேதமந்திரங்கள் வெளியே ஒலிப்பதைக் கேட்டு வசிட்டர் கண்விழித்து அதிர்ஸ்யந்தியிடம் வியப்புடன் “வேதத்தை நீ எப்படி கற்றாய்?” என்று கேட்டார். “நான் பாடவில்லை, என் நிறைவயிற்றுக்குள் வாழும் குழந்தை அதை பாடுகிறது” என்றாள் அதிர்ஸ்யந்தி.

பெருகிய வியப்புடன் எழுந்து அவள் வயிற்றருகே குனிந்து அக்குழந்தையைப் பார்த்தார் வசிட்டர். தன்னிலிருந்து விலகும் மெய்ஞானமெல்லாம் அதைச் சென்றடைவதைக் கண்டார். நூறு மைந்தர்களின் ஆயிரம் பேரர்கள் அடையவேண்டியவை அனைத்தும் அந்த ஒரே குழந்தைக்குச் செல்வதை உணர்ந்தார். “நீ புகழுடன் இருப்பாயாக” என அதை ஆசீர்வதித்தார்.

உடனே நிமித்திகரை வரவழைத்து அக்குழந்தையின் வாழ்க்கையை கணிக்கச் சொன்னார். “விதிப்படி இக்குழந்தையும் கிங்கரனால் உண்ணப்படும். அவன் இதை இந்த வனமெங்கும் தேடி அலைந்துகொண்டிருக்கிறான்” என்றார் நிமித்திகர். “எங்கு எப்படி தப்பிச்சென்றாலும் குழந்தையை கிங்கரன் கண்டுபிடிப்பதை தடுக்கவியலாது” என்றார்.

கடும் துயருடன் தவக்குடில் வாசலில் கையில் தர்ப்பையுடன் காவலிருந்தார். கிங்கரன் வருவானென்றால் தன்னுடைய அனைத்துத் தவவலிமையாலும் தன் மூதாதையரின் தவவலிமைகளாலும் அவனை சபிக்கவேண்டுமென நினைத்தார். அக்குழந்தை ஞானவானாக மண்ணுலகில் வாழ்வதற்காக தானும் தன் ஏழுதலைமுறை மூதாதையரும் நரகத்தில் உழல்வதே முறை என்று எண்ணினார்.

பகலில் இருளிறங்கியதுபோல எட்டுகைகளிலும் ஆயுதங்களுடன், மானுடநிணமும் குருதியும் கொட்டும் வாயுடன், மண்டையோட்டு மாலையசைய, கிங்கரன் தவக்குடிலின் முற்றத்தை வந்தடைந்தான். கையில் தர்ப்பையுடன் அக்குழந்தை வாழ்ந்த கருவறைக்கும் அவனுக்கும் நடுவே நின்றார் வசிட்டர். கிங்கரன் அருகே நெருங்கியதும் தர்ப்பையை தலைமேல்தூக்கி தன்னையறியாமல் “கிங்கரனே, இதோ நீ செய்த அனைத்துப் பாவங்களையும் நான் மன்னிக்கிறேன். விடுதலை அடைவாயாக!” என்று சொன்னார்.

விரிந்த செவ்விழிகளில் இருந்து கண்ணீர் வழிய கிங்கரன் அவர் முன் மண்டியிட்டான். அவன் உடல் வலப்பக்கமாகச் சரிந்து விழ இடப்பக்கமாக ஒரு கந்தர்வன் மேலெழுந்துவந்தான். “ஐயனே, என் தீவினைதீர்த்து என்னை என் மேலுலகுக்கு அனுப்பினீர்கள். உங்கள் மருமகளின் வயிற்றில் வாழும் அக்குழந்தை ஞானத்தை முழுதுணர்ந்தவனாவான்” என்றபின் வானத்திலேறி மறைந்தான்.

அன்னையின் கருவிலிருக்கையிலேயே நால்வேதமும் அறுவகை தரிசனங்களும் ஆறுமதங்களும் மும்மைத் தத்துவங்களும் கற்று மண்ணுக்குப்பிறந்து வந்தவர் பராசரமுனிவர். கைலாயமலைச்சரிவில் பீதவனத்தில் தங்கி தவமியற்றிய பராசரர் புலஸ்திய மாமுனிவரின் ஆசியின்படி பாரதவர்ஷத்தின் அனைத்துப் புராணங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றைப்பெருநூலாக யாக்கத் தொடங்கினார். புராணசம்ஹிதையை இயற்றிமுடிந்ததும் புலஸ்தியர் முதலான நூறு முனிவர்களை அழைத்து பீதவனத்திலிருந்த சுருதமானசம் என்னும் தடாகத்தின் கரையில் நின்ற வனவேங்கை மரத்தடியில் ஒரு சபைகூட்டி அந்நூலை வாசித்துக்காட்டினார். அனைவரும் அது மண்ணுலகில் எழுந்த மாபெரும் மெய்ஞானநூல் என்று அவரைப்புகழ்ந்தனர். மனம் உவகையில் பொங்கி நுரைக்க அன்றிரவு துயின்றார்.

மறுநாள் அதிகாலையில் காலைவழிபாடுகளுக்காக தடாகத்துக்கு அவர் சென்றபோது அந்த வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது.

கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்தார் நாரதர். “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” என்றார். தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.

யமுனையின் கரையில் வந்து நின்ற பராசரர் மறுகரைக்குச் செல்ல படகு வேண்டுமென்று கோரினார். நிலவெழுந்துவிட்டதனால் படகைக் கொண்டுவர தங்கள் குலநியதி அனுமதிப்பதில்லை என்று சத்யவான் சொல்லிவிட்டான். களைப்புடன் யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.

அப்போது யமுனைக்கரையோரமாக பதினைந்து வயதுப்பெண்ணொருத்தி காற்றில் அலைபாயும் புகைச்சுருள் போல கைகளை வீசிக் குதித்து நடனமிட்டபடி வருவதை பராசரர் கண்டார். எழுந்து அவளருகே நெருங்கியபோதும் அவள் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை. “பெண்ணே நீ யார்?” என அவர் அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லாமல் யமுனையை சுட்டிக்காட்டிச் சிரித்தாள். “உன் பெயரென்ன? நீ இந்த மச்சகுலத்தவளா?” என்றார் பராசரர். அவளிடம் சிரிப்பன்றி மொழியேதுமிருக்கவில்லை. அவள் பித்துப்பிடித்தவள் என்பதை அவர் உணர்ந்தார். யமுனையை அன்றி எதையும் அவள் உணரவில்லை என்று தெரிந்தது. அவள் கரையோரப்படகு ஒன்றை எடுத்தபோது “பெண்ணே உன்னைப்பார்த்தால் செம்படவப்பெண் போலிருக்கிறாய். என்னை மறுகரை சேர்க்கமுடியுமா?” என்று கேட்டார்.

அவளுடன் படகில் செல்லும்போதுதான் அவர் தன் சித்தத்தை மயக்கி பித்தெழச்செய்வது எது என்று உணர்ந்தார். அது அவள் உடலில் இருந்து எழுந்த பிறிதொன்றிலாத மணம். காட்டில் எந்த மலரிலும் அதை அவர் உணர்ந்ததில்லை. பிறந்த குழந்தையிடமிருக்கும் கருவறை வாசனை போன்றது. அல்லது முலைப்பாலின் வாசனை. அல்லது புதுமீனின் வாசனை. யமுனையின் மையத்தை அடைந்தபோது அது நீராழத்தின் வாசனை என்று அவர் அறிந்தார். அவருடைய உள்ளும் புறமும் அவளன்றி வேறேதுமில்லாமலாக்கியது அவ்வாசனை.

நிலவில் ஒளிவிட்ட நீலநீர்வெளியை நோக்கிய மலர்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்த அவளிடமிருந்து நீலவண்டின் ரீங்காரம்போல ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. மிகமெல்லிய ஓசை காதில் கேட்கிறதா கனவுவழியாக வருகிறதா என்றே ஐயமெழுந்தது. ஆனால் சிறிதுநேரத்தில் அவர் யமுனையின் கரும்பளிங்கு நீர்ப்பரப்பெங்கும் லட்சக்கணக்கான மீன்விழிகள் சூழ்ந்து இசைகேட்டு பிரமித்து நிற்பதைக் கண்டார். அந்த மீன்கள் நீருக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பாடலே அவளிலும் ஒலிக்கிறது என்று உணர்ந்து கொண்டார். அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.

பித்தியாக இருந்த மச்சகந்தியை பராசரர் தன் கையின் கங்கணத்தை அவள் கையில் கட்டி படகிலேயே மணம் புரிந்துகொண்டார். அவர்களைச்சூழ்ந்த விடிகாலைப்பனி அறையாக அமைய அவளுடன் கூடினார். மறுகரைக்குச் சென்றதும் அவளை ஆசீர்வதித்துவிட்டு காட்டுக்குள் நடந்தபோது முளைத்து தளிர்விட்ட விதையின் வெறுமையையும் நிறைவையும் அவர் உணர்ந்தார். மச்சகந்தி பின்பு வீடு திரும்பவில்லை. அவளைத்தேடியலைந்த அவள்குலம் அவள் மறைந்துவிட்டாள் என எண்ணியது. அவள் யமுனையின் வெகுதூரத்தில் கரையோரத்து மரங்களின் கனிகளையும் நத்தைகளையும் நண்டுகளையும் உண்டு இரவும் பகலும் அந்தப் படகிலேயே வாழ்ந்தாள்.

மச்சகந்தி கருவுற்று உதரம் நிறைந்தபின் யமுனைக்குள் இருந்த மணல்தீவொன்றுக்குள் நாணலில் சிறுகுடிலைக் கட்டி அதில் தங்கிக்கொண்டாள். சித்திரை மாத முழுநிலவுநாளில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளைப்போலவே கருநிறமும் வைரம்போன்ற கண்களும் கொண்ட குழந்தை அது. நாற்பத்தொருநாள் அவள் அக்குழந்தையுடன் அந்தத் தீவிலேயே இருந்தாள். பிறகு அதன் கழுத்தில் அந்தக் கங்கணத்தை அணிவித்து படகிலேறி மச்சபுரிக்கு வந்தாள். அக்குழந்தையை தன் தந்தை சத்யவானிடம் ஒப்படைத்தாள். கருநிறம் கொண்டிருந்ததால் அதை அவர்கள் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.

பீஷ்மர் அந்தக்கதையை ஓரளவு முன்னரே அறிந்திருந்தார். கைகளைக்கூப்பி கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் வாழ்ந்த வடதிசை நோக்கித் தொழுதார். மீனவக்குடிலில் வளர்ந்த மகாவியாசனுக்கு குருதியிலேயே வேதங்கள் இருந்தன. தன் ஏழுவயதில் கிளம்பி பராசரமுனிவரிடம் சென்று சேர்ந்து முதல்மாணவனாக ஆகி கற்கவேண்டியவை அனைத்தையும் கற்றார். தன் இருபத்தைந்தாவது வயதில் வேதங்களை கிருஷ்ண சுக்லசாகைகளுடனும் வேதாங்கங்களுடனும் இணைத்துத் தொகுத்து மகாவியாசனென்று அறியப்படலானார்.

சூதர் பாடி முடித்ததும் பீஷ்மர் அவர் என்ன சொல்கிறார் என்று ஊகித்து கைகூப்பியபடி “அவ்வாறே செய்கிறேன் சூதரே. என் தமையன் என்ன சொல்கிறாரோ அதையே என் வழிகாட்டியெனக் கொள்கிறேன்” என்றார். சூதர் தன்னுள் அலையடித்த மொழிக்கடலுக்கு அடியில் எங்கோ இருந்தார். மீண்டும் மெல்ல கிணைத்தோலை வருடியபடி “அவரே தொடங்கி வைக்கட்டும். அவரே பொறுப்பேற்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக” என்றார்.

முந்தைய கட்டுரைரங்கசாமி இளங்கோ
அடுத்த கட்டுரைவிறலி