ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு ஐம்பது முதல் அதிகபட்சம் நூறுபேர் வரை வருவதே வழக்கம். இக்கூட்டத்துக்கு ஏறத்தாழ இருநூற்றைம்பதுபேர் வந்திருந்தார்கள் .அத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததனால் அநைவருக்கும் அமரவசதி செய்யமுடியாமல் போனது.

‘உயிரியக்கம் ‘ , ‘அப்பாவின் அத்தை ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதிய கி அ. சச்சிதானந்தம் தலைமை வகித்தார். தமிழினி வெளியீட்டகம் தன் பணியைதுவங்கி ஐந்து ஆண்டுகளே ஆகின்றது என்றபோதிலும் இன்று தமிழின் முக்கியமான வெளியீட்டகமாக ஆகியுள்ளது என்றார். இதுவரை 25 புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது என்பது ஒரு சாதனையே என்று குறிப்பிட்டார்.

‘அப்படியே நிற்கட்டும் அந்தமரம்‘ போன்ற கவிதை நூல்களையும் ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்‘ போன்ற விமரிசன நூல்களையும் எழுதிய ராஜமார்த்தாண்டன் வரவேற்புரை அளித்து பேச்சாளர்களை அறிமுகம் செய்தார். உடல்நலம் குன்றியிருந்தமையால் முதியவரான லா.ச.ராமாமிர்தம் வரவில்லை.

முதலில் நூல்கள் வெளியிடப்பட்டன. ‘காடு‘ நாவலை ஜெயகாந்தன் வெளியிட சோதிப்பிரகாசமும் ஆர்.குப்புசாமியும் பெற்றுக் கொண்டார்கள். ஏழு விமரிசனநூல்களையும் ஒரு தொகையாக அசோகமித்திரன் வெளியிட கந்தர்வனும் க மோகனரங்கனும் பெற்றுக் கொண்டார்கள்.

முதலில் பேசிய சோதிப்பிரகாசம் [மனதின் விடுதலை, வரலாற்றின் முரண் இயக்கம், திராவிடர் வரலாறு போன்ற நூல்களின் ஆசிரியர்] காடு நாவல் தன்னை பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார். பலவருடங்களுக்கு முன் சிவகாமியின் ‘பழையன கழிதலும் ‘ என்ற நாவலைப் படித்த போது அதில் சொல்லப்பட்டுள்ள தலித் எழுச்சியின் சித்திரம் ஏன் அன்றுவரை தமிழில் எழுதப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது என்றும் இப்போது இந்நாவலில் தலித்மெழுச்சியின் சித்திரமும் சாதி என்ற அமைப்பின் உள்ளீடற்ற அபத்தமும் திவிரமாக சொல்லப்பட்டுள்ளதைக் கண்டதாகவும் இது சிவகாமி உருவாக்கிய இலக்கிய அலையின் நீட்சியே என்றும் சொன்னார். திண்ணியம் மலம் ஊட்டு நிகழ்ச்சியை குறிப்பிட்டு அந்த மலம் நம் அனைவர் வாயிலும் ஊட்டப்பட்ட ஒன்றுதான் என்று பேசிய சோதிப்பிரகாசம் அந்த யதார்த்தத்தை மறைத்து அல்லது புறக்கணித்து யாரும் எழுதமுடியாது என்றார். இந்நாவல் நகைச்சுவையும் கவித்துவமும் கலந்த நடையில் மனதைக் கவரும்படி எழுதப்பட்டுள்ளது என்றார்.

‘உயிர்த்திரு‘ என்ற கவிதை நூலை இயற்றியவரான ஆர்குப்புசாமி [ஆர்.கெ] காடு நாவல் நமது வளமான அகமரபின் நவீனகால நீட்சியாக உருவாகி வந்துள்ளது என்றார். குறிஞ்சிதிணையின் அழகையும் கவித்துவநுட்பங்களையும் காட்டும் நாவல் இது. அதன் பின்புலமாக குரூரமான வாழ்க்கையின் சித்திரம் உள்ளது. இரண்டையும் இணைத்தபடி வாழ்க்கையின் அடிப்படை என்ன என்ற தேடல் சென்றுகொண்டிருக்கிறது என்றார்.பல வருடங்கள் முன்பு சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயித்தபோது அண்ணாதுரை காட்டவேண்டியதைக் காட்டி பெறவேண்டியதை பெற்றோம் என சினிமா மூலம் வென்றதை குறிப்பிட்டார். அப்போது அதற்கு எதிராக எழுந்த தார்மீகக்குரலாக ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு என்ற கதை வந்தது. எழுத்தாளனின் தார்மீகச்சார்பு சமூக அக்கறை எப்போதும் முக்கியமானது இதை ஜெயமோகன் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார். நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் பெரும் நாவல்கள் உண்டு. உலக இலக்கியத்தின் சிகரங்கள் அவை.அம்மாதிரி ஒரு பெரும்படைப்பை உருவக்குவதே இனிமேல் ஜெயமோகனின் இலக்காக இருக்கவேண்டும் என்றார் ஆர்.கெ.

அசோகமித்திரன் அவர் வெளியிட்ட நூல்களை முழுமையாக படிக்கவில்லை , அவை மிக அழகானமுறையில் அமைக்கப்பட்டுள்ளன என்றார். ஜெயமோகனின் தீவிரமான இயக்கத்தைபலகாலமாக அவர் கவனித்து வருவதாகவும் அவரது விமரிசனங்கள் நேர்மையும் சமரசமின்மையும் கொண்டவை என்றும் சொன்னார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரான கந்தர்வன் பூவுக்கு கீழே ஒவ்வொரு கல்லாய்ஆகிய சிறுகதை தொகுதிகள் கந்தர்வன் கவிதைகள்ளென்ற கவிதை நூல் ஆகியவற்றின் ஆசிரியர். ஏழுவிமரிசன நூல்கள் மீதான விரிவான விமரிசனக்கட்டுைரையை கந்தர்வன்முன்வைத்தார். அத்தனை விரிவான அர்ப்பணிப்புள்ள விமரிசன ஆய்வு அதற்கு முன் வந்தது இல்லை என்றும் , இவ்விமரிசன நூல்கள் இன்றைய அவசியத்தேவைகள் என்றும் அவர் சொன்னார். இக்கட்டுரைகள் க.நா.சுப்ரமணியம் , சுந்தர ராமசாமி ஆகியோரின் இலக்கிய விமரிசனக் கருத்துக்களின் வளர்ச்சிப்போக்ககவே உள்ளன. அதேசமயம் அவர்கள் உருவாக்கிய பலமுடிவுகள் மறுக்கப்பட்டும் மீறப்பட்டும் உள்ளன. ஜெயகாந்தனின் இலக்கியப்பங்களிப்பு குறித்து சிறப்பான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது , ஆனால் இன்னும்கூட அம்மதிப்பீடு சிறப்பாக இருந்திருக்கலாம் என்றார் கந்தர்வன். ஜெயகாந்தனின் இந்தியவகை முற்போக்கு நோக்கு குறித்தும் அவரது கதைகளின்வெளியே தெரியாத அடித்தள ஓட்டம் குறித்தும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக முக்கியமானவை, வழிகாட்டியாக அமையக் கூடியவை. அவற்றைமேலும் விரிவாக்கி ஜெயகாந்தனைப்பற்றிமேலும் எழுதவேண்டியுள்ளது.

மெளனியை க.நா.சு வழிநின்று துதிபாடியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன் படித்ததாகவும் ஆனால் ஆச்சரியமாக மெளனியை கறாராகவும் சிறப்பாகவும் மதிப்பீடு செய்திருப்பதாகவும் சொன்ன கந்தர்வன் அதேபோல ஜி.நாகராஜனைப்பற்றிய ஜெயமோகனின் மதிப்பீடு மிக கறாரானது பொருத்தமானது என்றார். ஜி நாகராஜனைப்போன்றவர்கள் சிலரால் உள்நோக்கத்துடன் சிறப்பிக்கப்பட்ட படைப்பாளிகள். சுந்தர ராம்சாமி அடிப்படையில் ஒரு மனிதாபிமான எழுத்தாளர்தான் என்றும் மார்க்ஸிய முரணியக்க நோக்கை மேற்கொண்டு அவர் மேலும் சென்றிருந்தால் விரிவாக அவரால் எழுதியிருக்க முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது சிறந்த கருத்துதான் என்றார். நகுலன் புதுமைப்பித்தன் போன்றவர்களைப்பற்றிய ஆய்வுகளும் பொருத்தமானவைதான்.

ஆனால் சிலரைப்பற்றி அதிக கவனம் இல்லாமல் விமரிசனம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ந.பிச்சமூர்த்தியைச் சொல்லலாம். எம், எஸ் கல்யாணசுந்தரம் எந்த அடிப்படையில் இலக்கிய முன்னோடியாக சொல்லலாம் என்று தெளிவாகவில்லை. முற்போக்கு இலக்கியத்தின் மூத்தபடைப்பாளிகள் பலர் இப்பட்டியலில் இல்லை. ஒரு குறிப்பிட்ட கோணம் கொண்டவர்களுக்கு எவர் இலக்கிய முன்னோடிகளோ அவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றார் கந்தர்வன். ஆயினும் தீவிரமான ஆழமான முயற்சி , நல்ல சுவாரஸியமான வாசிப்பனுபவம் அளிக்கும் நடை ஆகியவற்றுக்காக இந்நூல்களை பாராட்டுவதாக சொன்னார்.

க.மோகனரங்கன் தன் கட்டுரையை வாசித்தார். உதிரிவரிகளாகவும் பட்டியல்களாகவும்தான் தமிழில் முக்கியமான இலக்கியவாதிகளைப்பற்றிக்கூட அபிப்பிராயங்கள் வந்துள்ளன. ஒரு படைப்பாளியைப்பற்றி முழுமையாக நோக்கி எழுதும் அணுகுமுறையே குறைவு. அவ்வகையில் இந்த கட்டுரைநூல்கள் சிறப்பான புதுவரவுகள் என்றார். இக்கட்டுரைநூல்களில் பல புதிய முடிவுகள் உள்ளன. புதுமைப்பித்தன் தமிழின் முதன்மையான படைப்பாளியாக முன்னிறுத்தப்படுகிறார். அடுத்தபடியாக அசோகமித்திரன் . மிக விரிவான ஆழமான விஷயங்களை தன்னுள் தரித்தவராக புதுமைப்பித்தன் குறிப்பிடப்ப்படுகையில் தரித்தவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தமுடிந்த கலைஞராக அசோகமித்திரன் சொல்லப்படுகிறார். ஜெயகாந்தன், லா.ச.ராமாமிர்தம் , ப.சிங்காரம், ஆ.மாதவன், எம் எஸ் கல்யாணசுந்தரம் ஆகியோர் புதிய வாசிப்புகள் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். மெளனி, ஜி நாகரஞன் ஆகியோர் குறுகிய படைப்புத்தளத்தில் செயல்பட்டவர்களாக அடையாளம்காணப்படுகையில் சுந்தர ராமசாமி , தி ஜானகிராமன் ஆகியோரின் சாதனைகள் அடையாளம்காணப்பட்டு அவர்களுடைய எல்லைகள் வகுத்துரைக்கப்படுகின்றன.

இறுதியாக ஜெயகாந்தன் பேருரை ஆற்றினார். இவ்வரங்கில் ஜெயகாந்தனின் உரை மிகுந்த நிதானமும் கனிவும் கொண்டதாக இருந்தது என்று அரங்கினர் பலர் சொன்னார்கள். ஜெயமோகன் ஏற்புரை வழங்கினார் . செந்தூரம் ஜெகதீஷ் நன்றி சொன்னார்

தற்செயலாக ஜெயகாந்தனின் உரையும் ஜெயமோகன் ஏற்புரையும் பலவகையான பெரும் விவாதங்களை உருவாக்கிவிட்டன. ஆகவே அவை தனியாக தரப்பட்டுள்ளன

தமிழினி நூல்கள்
130/2 அவ்வை சன்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை 86
[email protected]

முந்தைய கட்டுரைஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்
அடுத்த கட்டுரைபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை