வெளியே செல்லும் வழி – 1

Barabas

எல்லா தேவாலய மணிகளும் தெய்வீகமாக ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியன் மூழ்கிக் கொண்டிருந்தது. தொன்மையான நகரமான ரூவனில் மணிமுடிகளாக நின்ற அழகான சாம்பல்நிற கோபுரங்களில் இருந்து அந்தப் புனிதமான ரீங்காரம் அலையலையாக எழுந்து வந்தது. இனிமையானதும் வெவ்வேறு சுதிகொண்டதுமான மணியோசை பெருகி வந்து இளவெம்மையான இலையுதிர்கால காற்றை நிறைத்தது…

ரூவனில் சந்தைக்குப்போய் வந்த கிராமத்துப்பெண்களிடம் ஒரு புதிய பரபரப்பு இருந்தது. அன்று அந்நகருக்கு ஒரு புனிதர் வருகை தந்திருக்கிறார். ·ப்ரான்ஸின் மறக்கப்பட்ட தொலைதூரத்து தேவாலய நகரம் ஒன்றின் கார்டினல் அவர். தன் உளத்தூய்மைக்காகவும் எளிமைக்காகவும் புகழ்பெற்றவர்.

கார்டினல் ·பெலிக்ஸ் போன்·ப்ரே வாட்டிகனால் மெல்லிய கிண்டலுடன் ‘புனித ·பெலிக்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டுவந்தார். உயரமான, அசாதாரணமாக மெலிந்த, தூய்மையும் மென்மையும் கொண்ட பாவனைகள் உடைய, முதிய மனிதர். பொதுவாக கார்டினல்கள் ஆர்ச் பிஷப்புகள் ஆகியோரிடம் உள்ள அறிஞருக்கான தோற்றமும் பாவனையும் அவரிடம் இல்லை. அவரது தோற்றத்தில் இருந்த பணிவும், தெளிவான நீலக்கண்களின் ஒளியும் அறிவை விட அன்பில் அவர் கடவுளைக் காண்பவர் என்பதைக் காட்டின. ஆத்மதூய்மைக்கான கடும் விரதங்களாலும் சாத்தானை விரட்டுவதற்கான ஓயாத பிரார்த்தனைகளாலும் உருவான கடுமையான தோற்றமே பொதுவாக தூயவர்கள் எனப்பட்ட பாதிரிகளிடம் இருப்பது. போன்·ப்ரே நேர் மாறாக ஒவ்வொருவரின் குரலையும் கேட்கும் பொறுமையும் ஒவ்வொருவர் துயரிலும் பங்குபெறும் சொற்களும் கொண்டவராக இருந்தார்.

ரூவன் நகரத்து மக்களுக்கு சற்றே ஐயம்தான். கிறிஸ்துவுக்கு நெருக்கமானவர்களை அவர்கள் கண்டு வருகிறார்கள்– தலைமுறைகளாக. அவர்களெல்லாம் இப்படி இருப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் ஆசி நிரம்பப் பெற்றவர்கள். அந்த அருளை பட்டாகவும் பொன்னாகவும் பல்லக்குகளாகும் மாளிகைகளாகவும் அடையப்பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய உள்ளுணர்வு ஒன்று சொன்னது, இந்த மனிதர் இன்னும் வலிமையானவர் என்று. இந்த மனிதரின் சொற்களுக்கு இன்னும் ஆழம் உண்டு என்று. ஆகவே அவரைப்பற்றி அவர்கள் பேசினார்கள். அவருக்காக அவர்கள் தேவாலயத்துக்கு வந்தார்கள்.

போன்·ப்ரே ஒரு ஒவ்வாத யுகத்தின் நடுவே வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தார். வாட்டிகனின் உச்சகட்ட அதிகாரம் ஓங்கி நின்ற காலகட்டம். பொற்சிம்மாசனங்களில் அமர்ந்த ஆர்ச் பிஷப்புகள் மன்னர்களை ஆண்டார்கள். போகங்களில் திளைத்தார்கள். உள்ளூர ஐயமில்லாத எவரேனும் இருப்பார்கள் என எவருமே நம்பவில்லை. ஓயாது ஆத்மா பற்றிப் பேசப்பட்டது, ஒவ்வொரு கணமும் உடலே பேணப்பட்டது. வெறும் அறுபதுவருடம் வாழ்ந்து அழியப்போகும் உடல். அதன் இறுதிக்கணமான மரணம். அதற்கு அப்பால்? ஒவ்வொருவரும் அதற்கு அப்பால் கண்டது இருளையே.

ரூவன் நகரத்து தேவாலயத்தில் ஆழ்ந்த பிராத்தனை ஒன்றில் இருந்தபோது அங்கிருந்த மாபெரும் ஆர்கன் எழுப்பிய பேரிசையை போன்·ப்ரே கேட்டார். அதுவரை கேட்டிராத வகையான தேவாலய இசை அது. நெஞ்சை நிறைத்து சிந்தனையை வானம்போல விரியச்செய்த இசை. அந்த இசை ஒரு சொற்றொடராக ஆனதுபோல அவ்வெண்ணம் எழுந்து வந்தது. அச்சொற்கள் போன்·ப்ரேயின் அகத்தை உலுக்கின. ”மனித குமாரன் மண்ணுக்கு மீண்டும் வரும்போது இங்கே சற்றேனும் விசுவாசத்தைக் காண நேருமா என்ன?”

அவரது ஆத்மாவில் ஓயாது முழங்கும் அலைகடலின் ஒலியாக எழுந்த சொற்கள். ஒவ்வொரு நாளும் அவர் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் சொற்கள். ஒருகணத்தில் எழுந்த மனவேகத்தால் அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். ”ஆம், சிலரேனும். வெகுசிலரேனும் இருப்பார்கள். கண்டிப்பாக”. ஆனால் பிறர்? அன்றாட வாழ்வில் அமிழ்ந்து போராடிப்போராடி அமிழ்ந்து போகும் கோடிகள்? அவர்கள் நிரந்தரவாழ்க்கையை அறிவதில்லையா? இல்லையென்றால் எத்தனை மகத்தான விரயம்! அப்படி கோடிக்கணக்கானோர் அடையாத மீட்பை சிலர் மட்டுமே அடைவார்களென்றால் அது மீட்புதானா?

போன்·ப்ரே ரூவன் நகரில் ஓட்டல் பாய்ட்டீர்சில் தங்கியிருந்தார். மிக எளிய குறுகிய விடுதி அது. தோட்டக்காரரான ஜீன் பாட்டக்ஸ¤ம் அவர் மனைவியும் அதை நடத்திவந்தார்கள். அவர்களுக்கு இரு குழந்தைகள் ஹென்றி, பாபேட். ஒரு கார்டினல் தோட்டக்காரர் நடத்தும் விடுதியில் தங்குவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. குறும்புக்கு பேர்போன குழந்தைகளை மிரட்டி அடக்கி வைத்திருந்தாள் திருமதி பாட்டக்ஸ். ஆனால் சில நாட்களிலேயே குழந்தைகள் போன்·ப்ரே ஒரு அதிகாரியல்ல, தங்களுடன் எப்போதும் விளையாடத்தயாராக இருக்கும் தோழர் என்பதைக் கண்டு கொண்டன. பெரியவர்களுக்கு அது திகிலாக இருந்தது. எந்நேரமும் ஏதோ தவறு நிகழ்ந்துவிடக்கூடும் என அவர்கள் கிலி கொண்டார்கள்.

போன்·ப்ரே இல்லாத உணவறையில் குழந்தைகள் தாயிடம் வாதிட்டன. ”அம்மா எங்கள் பள்ளியில் ஒரு பையன் சொல்கிறான், கடவுளே இல்லையாம். பாதிரியார்கள் கார்டினல்கள் எல்லாருமே திருடர்களாம்” ”அடப்பாவி…அந்த பையன் எதிர்காலத்தில் திருடனோ போக்கிரியோதான் ஆகப்போகிறான்” குழந்தைகளுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கார்டினல் உண்மையிலேயே திருடர் இல்லையா? ”அவர் ஒரு புனிதர்!” என்றாள் திருமதி பாட்டக்ஸ். ”அவர் புனிதர் என்றால் ஒரு அற்புதம் செய்யட்டும்…அப்போது நான் நம்புகிறேன்” ஹென்றி. பாபேட் சொன்னாள் ”எங்கள் பள்ளியில் படிக்கும் அந்த ·பேபியன் டௌஸெட் இருக்கிறானே…அவன் இருகால்களும் தளர்ந்த ஊனமுற்ற குழந்தை. இந்த கார்டினல் புனிதர் என்றால் அவனைக் குணப்படுத்தட்டுமே”

”பிதாவே, இந்த பிசாசுக்களை நான் எபப்டி கட்டுப்படுத்துவேன்!” என்று திருமதி பாட்டக்ஸ் அலறினாள். ”நீ சொல்லாவிட்டால் வேண்டாம். நாங்களே அவரிடம் பேசுகிறோம்…” என்றாள் பாபேட். ”அய்யோ, நீங்களே அவரிடம் பேசுவதா? கொன்று போடுவேன்!” திருமதி பாட்டக்ஸால் அதைக் கற்பனைசெய்யவே முடியவில்லை. ”ஒரு நல்ல பையனை நொண்டியாக வைத்திருக்கும் கடவுள் என்ன பெரிய கடவுள்?” என்று ஹென்றி சொல்ல பாப்பேட் ”ஆமாம்” என்றாள் ”கடவுளே!” என்று திருமதி பாட்டக்ஸ் அழுதாள்

குழந்தைகள் நிஜமாகவே பிசாசுகள். வந்ததுமே அவரிடம் கேட்டுவிட்டன. திருமதி பாட்டக்ஸ் வாயடைந்து போய்விட்டாள். ஆனால் போன்·ப்ரே மெல்லிய புன்னகையுடன் ”ஆமாம் குழந்தைகளே, நான் புனிதரே அல்ல. அப்படி சும்மா சொல்கிறார்கள். நானும் எளிமையான மனிதனே. பாவங்களில் வாழும் பாமரனே…..ஆனால் நான் அந்தப் பையனுக்காக பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் வணங்கும் ஜீவனுள்ள தேவனிடம் அவனுக்காக மன்றாடுகிறேன்…அதை மட்டுமே நான் செய்ய முடியும்….” என்றார்

அன்றிரவு போன்·ப்ரேயைப் பார்க்க ரூவன் நகரத்து ஆர்ச் பிஷப் வந்தார். போன்·ப்ரே அந்த சிறு குடிலில் தங்குவது சரியல்ல என்று வாதிட்டார். ”இத்தகைய எளிமை, போராட்டம் இதெல்லாம் சோஷலிச சிந்தனை. சிந்திப்பவர்கள் பெரும்பாலும் சோஷலிஸ்டுகள். அவர்கள் தேவாலயத்துக்கு எதிரிகள்’ என்று அவர் சொல்ல போன்·ப்ரே ”நம் மீட்பரும் சிந்தித்தார். அவரும் எளிமையாக இருந்தார்” என்றார். ”உங்களில் முதன்மையானவன் எவனோ அவன் சேவகனாக இருக்கவேண்டும் என்றல்லவா நம் மீட்பர் சொனனர்?” என்றார். ”துரதிருஷ்டவசமாக நம் தேவனின் சொற்களை நாம் எப்போதும் அப்படியே பயன்படுத்த முடிவதில்லை” என்றார் ஆர்ச்பிஷப்.

ஆர்ச்பிஷப் சொன்ன ஒரு சொல் போன்·ப்ரேவை சீண்டியது. ”தேவாலயத்தின் பிரபுக்கள்” என்று அவர் பாதிரியார்களைச் சொன்னார். ”ஏசுவின் சபையில் பிரபுக்களென எவருமில்லை. அனைவருமே சமமானவர்களே” என்று சொன்ன போன்·ப்ரே ”தரப்பிரிவினை என்ற கருத்தாக்கமே அடிப்படையில் கிறித்தவத்துக்கு எதிரானது” என்றார். ”நீங்கள் அதிகமாகச் சிந்திக்கிறீர்கள். இவையெல்லாம் தேவ தூஷணம் என்றே பொருள்படும்” என்றார் ஆர்ச்பிஷப்.

”இன்றுநான் தேவாலயத்திலிருக்கையில் அந்த மாபெரும் ஆர்கனின் ஒலியைக் கேட்டேன்” என்று போன்·ப்ரே சொன்னபோது ஆர்ச் பிஷப் துணுக்குற்றார்.” மாபெரும் ஆர்கனா? கண்டிப்பாக இருக்காது…அது பலவருடங்களுக்கு முன்னரே உடைந்து செயலிழந்துவிட்ட ஒன்று…” போன்·ப்ரே வியப்படைந்தார். ”உண்மையா?” என்று கேட்டர். அது தனது மனப்பிராந்தியா என்ன? ஆனால் அப்படி இருக்கவில்லை அது. ”நான் நாளை மாலை பாரீஸுக்குச் செல்கிறேன். அங்கிருந்து என் மருமகள் அஞ்செலா சௌரானியுடன் ரோமுக்குச்செல்லவிருக்கிறேன். போப்பாண்டவரை சந்திக்கக் கூடும்” என்றார் போன்·ப்ரே.

அவரை விட்டு செல்லும் ஆர்ச் பிஷப் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார், ”இந்த மனிதன் ஒரு புனிதன் அல்லது பைத்தியக்காரன்…”

அன்றிரவு போன்·ப்ரே ஒரு கனவு கண்டார். விசித்திரமான கனவு அது. இருளின் மொத்த உருவையும் அவர் அதில் கண்டது போலிருந்தது. உலகமே காலியாக இருக்கிறது. இருளன்றி ஏதுமில்லை. அவர் ஆத்மாவே உருகுவதுபோல பிராத்தனை செய்தார். அந்த இருட்சுவரை ஊடுருவி வந்தது ஒரு சொற்றொடர். ஓர் ஆசி அது. அது வெறும் மனப்பிரமையா? ஆனால் அந்த கனிந்த குரலை அவர் தன் செவியருகே கேட்டார். ”உனது பிரார்த்தனை கேட்கப்பட்டது. இதோ மீண்டும் மௌனம் உடைபடுகிறது. ஒன்றை நினைவுகொள், விளக்கு இருளில்தான் ஒளிவிடுகிறது. ஆனால் இருளால் அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை” அது ஒரு கனவு என்று எண்ணியபடி மீண்டும் ஜெபச்சொற்களைச் சொல்லிக் கொண்டு படுத்தபோதுதான் போன்·ப்ரே அந்த அழுகுரலைக் கேட்டார்.

மிகத்தீனமான ஒரு அழுகை. பசியும் குளிரும் கொண்டு நலிந்த எளிய உயிரொன்றின் மன்றாட்டு. குளிரில் போன்·ப்ரே வெளியே இறங்கிச்சென்று அக்குரலைத் தேடிச் சென்றார். ”அது கண்டிப்பாக ஒரு பசித்த உயிரின் குரல். கருணையில்லாது கைவிடப்பட்ட உயிர். இவ்வுலகம் காலியாக இருக்கிறது, ஏனென்றால் உலகை விட்டு கடவுள் பின்வாங்கிச் சென்றுவிட்டிருக்கிறார்”

மூடிய தேவாலய வாசலில் இருளுக்குள் ஒரு பன்னிரண்டு வயதான சிறுவன் நின்றுக் கொண்டிருந்தான். பசித்துக் களைத்து மெலிந்த சிறுவன். ”குழந்தை, ஏன் இங்கே நின்று அழுகிறாய்?” என்றார் போன்·ப்ரே.தேவாலய மணிகளின் இசையொலிக்கும் குரலில் சிறுவன் சொன்னான், ”ஏனென்றால் நான் இங்கே தனித்து நின்று அழும்படி விடப்பட்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இவ்வுலகமே காலியாக இருக்கிறது..”

கனவில்கண்ட அதே விஷயம். அதே சொற்களை கனவாகக் கண்டாரா அவர்? ”இந்த தேவாலயத்திற்குள் நான் தூங்க வேண்டும். ஆனால் என்னை வெளியே தள்ளி இதைச் சாத்திவிட்டிருக்கிறார்கள்” போன்·ப்ரே அந்தக் கனநேர மனமயக்கத்திலிருந்து மீண்டு சொன்னார், ”குழந்தை, இரவில் தேவாலயத்தை மூடுவது வழக்கம். நீ என்னுடன் வா .உன்னை நான் என்னுடன் தங்க வைக்கிறேன்”

சிறுவனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை விரிந்தது. கோபுரமுகடின் நிழலிருளுக்குள் இருந்து அவன் முன்னகர்ந்து நிலவொளியில் நின்றான். நீலக்கண்களால் அவரைப் பார்த்து கேட்டான் ”நான் உங்களுடன் வருவதா? இல்லை, உங்களைப் பார்த்தால் ஒரு கார்டினல் போலிருக்கிறீர்கள். ‘என்னை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று நான் கேட்கவேண்டும். நான் இவ்வுலகில் எனக்கென யாருமில்லாதவன். என்னை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நானும் நான் யாரென்று சொல்ல முடியாதவன். உங்களுக்கு பதிலுக்குத்தர இந்த உலகில் என்னுடையதென எதுவுமே இல்லை” . அத்தனை துல்லியமான உச்சரிப்புடன் சொன்னான் அவன். தன் அழகிய முகத்தை நிலவொளிக்குத் தூக்கி மகத்தானதோர் ஓவியம் போல முகம் சுடர அவரை நோக்கினான்.

”என்னுடன் வா. என் படுக்கையில் தூங்கு. இப்போது உனக்குத்தேவை நல்ல தூக்கம் மட்டுமே” என்றார் போன்·ப்ரே. அவனை தன்னுடன் அழைத்துச் சென்றார். தன் படுக்கையில் அவனைப் படுக்கச் செய்தார். ”..அப்படியானால் உங்கள் வசதியை எனக்காக நீங்கள் துறக்கிறீர்கள்…இதுவல்ல உலகில் பொதுவான வழக்கம்” என்றான் சிறுவன்.

”நீ கண்ட உலகம் மட்டுமல்ல இவ்வுலகம் என் இளம் நண்பனே…தூங்கு…” சிறுவன் அவரது கைகளை மெல்ல பிடித்தான். ”…நீங்கள் நான் யாரென்று அறிய மாட்டீர்கள். நான் கெட்ட பையனாக இருந்தால்?  நாளை நான் உங்களுக்கு நன்றி காட்டாவிட்டால்? என் பெயரைக்கூட நீங்கள் கேட்கவில்லை”

போன்·ப்ரே புன்னகைசெய்தார் ”குழந்தை, அதெல்லாம் பிதாவின் கையில் இருக்கிறது. தூங்கு. உன் பெயர் எனக்கு முக்கியமல்ல. உன் எதிர்காலத்தைப் பற்றி நாளை பேசுவோம்…” சிறுவன் புன்னகைசெய்தான். ”…அப்படியானால் நான் ஒரு நண்பரை இவ்வுலகில் கண்டு கொண்டிருக்கிறேன்…நீங்கள் என்பெயரை அறிந்து கொள்ள வேண்டும்… என் பெயர் மானுவேல்.” ”அவ்வளவுதானா?”. ”அவ்வளவேதான். என்னைப்போன்ற ஒரு தெருப்பொறுக்கிப்பையனுக்கு ஒருபெயரே அதிகம்…”. அவனை மெல்ல போர்த்தி ”தூங்கு” என்று சொல்லி போன்·ப்ரே வெளியேறினார்.

மறுநாள் அவர் அவனைப்பற்றி குழந்தைகளிடமும் விடுதிக்காரர்களிடமும் சொன்னார். ”அவனுக்கு யாருமில்லை. அவனுக்கு நான் அனைத்தையும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் உங்களில் கடையோருக்கு நீங்கள் செய்தது எதுவோ அது எனக்குச் செய்தது’ என்றுதான் நம் மீட்பர் சொல்லியிருக்கிறார்…”

ஆனால் விடுதிக்காரிக்கு அது ஒரு நல்ல விஷயமாகப் படவில்லை ”ஒரு பொறுக்கிச்சிறுவனுக்கு உங்கள் உணவையும் படுக்கையையும் கொடுத்தீர்கள். அது உங்கள் கருணையைக் காட்டுகிறது. ஆனால் இந்த வகையான கருணைக்கு என்றுமே நன்றியின்மையே பதிலுக்குக் கிடைக்கிறது. அவனைத் துரத்திவிடுங்கள்…”

அப்போது சிறுவன் மானுவேல் தூங்கி எழுந்து வருகிறான். அவனைக் கண்டதுமே ஒருகணம் விடுதிக்காரி மனம் மலர்ந்தாள். மறுகணம் அவளே புரிந்துகொள்ள முடியாத மாபெரும் மனநெகிழ்வு ஒன்று அவளுக்குள் எழுந்தது. கண்கள் நிறைந்ததை மறைக்க அவள் வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

”நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றார் போன்·ப்ரே. ‘அதை நான் சொல்லமட்டேன்” என்றான் சிறுவன். ”சொல்ல விரும்பவில்லை இல்லையா?” ”சொல்ல முடியாது…ஆனால் நீங்கள் என்னை விரும்பவில்லை என்றால் அக்கணமே உங்களை விட்டு போய்விடுவேன்…” .

போன்·ப்ரே ”இவ்வுலகில் உனக்கென யாருமே இல்லையா?” என்றார் ”இல்லை” அதைக்கேட்டு விடுதிக்காரிக்கு வியப்பு ஏற்பட்டது. ”ஆனால் அவன் பேசுவதைக்கேட்டால் தெருப்பையன் போல இல்லை. மிக நன்றாக கல்விகற்றவன் போலிருக்கிறான்…” மானுவேல் இனிய புன்னகையுடன் ”நான் என் கல்வியை சுயமாகவே கற்றேன்…மரங்களிலிருந்தும் ஓடைகளில் இருந்தும் மேகங்களில் இருந்தும் கற்றுகொண்டேன்… கடவுள் சொன்ன அனைத்தையும் அவை எனக்குச் சொல்லின” என்றான்.

”பாவம் சிறுவன்…அவனுக்கு பிரார்த்தனைகூட தெரியவில்லை போலிருக்கிறது” என்றாள் விடுதிக்காரி திருமதி பாட்டெக்ஸ். ”ஆமாம். பிராத்தனை நல்ல விஷயம்தான்….நாம் இறைவனுக்கு முடிவிலாது நன்றி சொல்வதென்பது மிக இயல்பானதே” என்றான் மானுவேல். ”..அருமையாகச் சொன்னாய் குழந்தை. பெரும்பாலானவர்கள் பரிசுகளைப் பற்றியே எண்ணுகிறோம். பரிசளிப்பவனை எண்ணுவதில்லை. அவனுக்கு நன்றி சொல்வதுமில்லை” என்றார் போன்·ப்ரே

மாலை பள்ளிவிட்டு வந்த குழந்தைகள் நேராக சந்தையில் கோழி விற்ற மார்ட்டினி டௌஸெட்டைக் காணச்சென்றன. அவளது குழந்தை ·பேபியன் டௌஸெட்டை தங்களுடன் அனுப்பும்படி பாப்பேட் கேட்டாள். தடித்த மாநிறப்பெண்ணான மார்ட்டினி டௌஸேட் பொங்கிவிட்டாள். ”பாதிரியாவது மதமாவது. இந்த தேவாலயம் எனக்கு என்ன செய்தது? என் கோழி விற்ற காசில் பங்குபெற்றதைத்தவிர? விண்ணில் ஏதோ கடவுள் இருப்பதாகச் சொல்லிப் பசப்புகிறார்கள். விண்ணகம் காலியாக இருக்கிறது. அங்கே யாருமில்லை. இருந்திருந்தால் ஏன் நான் கணவன் போரில் கொல்லப்பட்டு அனாதையாக இந்த மண்ணில் விடப்படவேண்டும்? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? நான் அல்லும் பகலும் பிரார்த்தனை செய்தேனே? யார் கேட்டார்கள் அதை? என் ஒரே மகன் இதோ நொண்டியாக என் முன் உட்கார்ந்திருக்கிறான்… கடவுளாவது ஒன்றாவது? எல்லாம் பாதிரிகள் சொல்லும் பொய்கள்”

lazarus-come-forth-ole-buddy

மார்ட்டினியின் நாத்திகமும் கோபமும் ரூவனில் பிரசித்தம். பாதிரியார்கள் அவளிடமிருந்து தப்பி ஓடுவார்கள். ஆனால் பாபேட்டை யாரும் பேசி ஜெயிக்க முடியாது. ”நாம் அந்த கிழட்டு கார்டினலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே” என்றாள் அவள். மார்ட்டினி இளகவில்லை. ஆனால் மெல்ல ·பேபியன் மனம் மாறினான். ”நான் போய்த்தான் பார்க்கிறேனே அம்மா” என்றான். ”எங்கே போகிறாய் என் செல்வமே” என்று மார்ட்டினி வீரிட்டாள். ”இந்த புனிதர்கள் உனக்கு ஒன்றும் செய்யமுடியாது என் கண்ணே…இவர்களெல்லாம் வெறும் பொய்யர்கள். பலவீனமான மனிதர்கள். உன் இயலாமையை வைத்து அவர்கள் நடிக்கிறார்கள்” ·பேபியன் ”எனக்கு என்னவோ போக வேண்டும் போலிருக்கிறது அம்மா”என்றான்.

அம்மாவிடம் அனுமதிபெற்று குழந்தைகளுடன் ·பேபியன் போன்·ப்ரேவைக் காணவந்தான். போன்·ப்ரே தன் அறையில் மானுவேலுடன் பேசிக் கோண்டிருக்கையில் உள்ளே வந்த பாபேட் அவரை ‘அய்யா’ [மான்ஸீர்] என்று கூப்பிட்டு அவரிடம் பேசவேண்டும் என்றாள். திருமதி பாட்டக்ஸ் பதறினாள். ”நீ என்னை புனிதரே என்றும் தந்தையே என்றும் கூப்பிடாததில் எனக்கு மகிழ்ச்சியே” என்றார் போன்·ப்ரே. ”ஒவ்வொரு நாளும் நான் உணர்வது என் இயலாமையையும் இழிவையும் மட்டுமே” .பாபேட் ”உங்களை இவர்கள் புனிதர் என்கிறார்கள். நீங்கள் புனிதர் என்றால் இவனைக் குணப்படுத்துங்கள்…” என்றாள் .

”என்னால் எவரையுமே குணப்படுத்த முடியாது…”என்றார் போன்·ப்ரே. ”நான் இவனுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இவனுக்காக என் தேவனிடம் மன்றாடுகிறேன். அதைமட்டுமே என்னால் செய்ய முடியும்…”. பாபேட் உதடுகளை அலட்சியமாக பிதுக்கினாள். போன்·ப்ரே ·பேபியனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிராத்தனை செய்தார். அவனது விதியை மாற்றும்படி விதிகள் நிறைந்த பெருவெளியின் இறைவனிடம் மனமுருகி வேண்டினார். அதன் பின் அவனை மெல்ல இறக்கி விட்டார். பாபேட் இகழ்ச்சியுடன் ”அவ்வளவுதானா?” என்றாள். ”நீ வேறு என்ன எதிர்பார்த்தாய்? நான் எளிய மனிதன் அம்மா”என்றார் போன்·ப்ரே.

”நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். உங்களால் முடியாதென்றால் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்?” என்றான் ஹென்றி. துளிர்த்திருந்த கண்ணீரை துடைத்துவிட்டு  ·பேபியன் சொன்னான், ”நன்றி தந்தையே. நீங்கள் பிராத்தனை செய்தபோது ஒருகணம் என் நோயெல்லாம் தீர்ந்துவிட்டதாகவே உணர்ந்தேன்…. உங்களால் முடிந்ததைச் செய்தீர்கள்.” அவன் பெருமூச்சுவிட்டான். ”ஆனால் அதனால் எந்தப்பயனும் இல்லை. இப்பூவுலகில் எத்தனையோ துயரங்கள். எத்தையோ ஊனமுற்றவர்கள். என் ஒருவன் பிரார்த்தனையை மட்டும் எப்படி இறைவன் கேட்பார்? நான் எனக்காக மட்டும் அப்படி பிரார்த்தனை செய்வதும் பிழையோ? பரவாயில்லை”

மானுவேல் முன்னால் வந்து அவன் தோள்களை மெல்ல அணைத்தான் ”நம்பிக்கை இழக்காதிரு சகோதரா. பொறுமையாக இரு. பிரார்த்தனைசெய். இந்த பிரபஞ்ச வெளியில் கோடானுகோடி உலகங்களில் எங்கும் எப்போதும் ஒரு சுயநலமில்லாத உண்மையான பிரார்த்தனை கடவுளால் கேட்கப்படாது போனதில்லை”

”எங்கிருக்கிறார் கடவுள்? கடவுள் இருந்திருந்தால் ஏன் இத்தனை வலி? ஏன் இத்தனை வதைகள்? உன் எளிய சோதரனுக்காக உன்னிடமிருப்பதில் பாதியை பங்கிட்டுக்கொடு என்கிறது வேதம். போப் எதை கொடுக்கிறார்? ஆனால் இதோ நாம் ஒரு கிழவருக்காக கடவுள் அற்புதங்களை எல்லாம் நிகழ்த்துவார் என்று நம்பி நின்றிருக்கிறோம்…” ஹென்றி கூவினான். ”…மானுவேல் நான் உன்னைக் கேட்கிறேன்.. நீ தெருவில் அலைந்தவன். கைவிடப்பட்டவன். உனக்கு என்ன தந்தார் கடவுள்?” மானுவேல் புன்னகையுடன் சொன்னான்” கடவுள் அன்பே மயமானவர். கருணையின் வடிவம். அங்கே துயரம் இல்லை. கடவுளின் கருணையை வாங்கிக் கொள்ள முடியாத மனிதர்களின் வாழ்க்கையிலேயே துயரம் உள்ளது…”

அன்றிரவே மானுவேலை தன்னுடன் அழைத்துக் கொண்டு போன்·ப்ரே பாரீஸுக்குச் சென்றார். திருமதி பாடெக்ஸுக்கு அங்கே நடந்தவை அவள் வாழ்க்கையின் குழப்பமான நிகழ்வுகள். அவள் மனம் அதையே எண்ணிக் கொண்டிருந்தது. அப்போது மார்ட்டினி உடைபறக்க பாய்ந்து ஓடிவந்தாள். அவளால் பேசமுடியவில்லை. அழுகையும் விம்மலுமாக அவள் தவித்தாள். ”என்ன ஆயிற்று?” என்றாள் திருமதி பாடெக்ஸ். ”என் குழந்தை…·பேபியன்….” கண்ணீர் அவளிடமிருந்து சிதறியது.

”போய்விட்டானா?” என்று இடிந்துபோய் கேட்டாள் திருமதி பாடெக்ஸ். ”இல்லை…அற்புதம்..அற்புதம் நிகழ்ந்துவிட்டது…அங்கே பாருங்கள்…. என் மகன்…” அவள் கைகாட்டிய திசையில் ·பேபியன் இருகால்களையும் வேகமாக தூக்கிவைத்து மற்ற இரு குழந்தைகளையும் விட வேகமாக பாய்ந்து வந்துகொண்டிருந்தான்.

****

போன்·ப்ரேயும் மானுவேலும் பாரீஸை வந்தடைந்தனர். அங்கே அன்ஜெலா ஸௌரானி அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். போன்·ப்ரேயின் சகோதரியின் மகள். உலகம் முழுக்க அறியப்பட்டவளாக மாறிக் கொண்டிருந்த மாபெரும் ஓவியர் அவள். அவளது காதலன் ·ப்ளோரியன் அவளது அழகாலும் கலையாலும் புகழாலும் அவளுக்கு அடிமையாக இருந்தான். அவனும் புகழ்பெற்ற ஓவியன்.

‘இவன் என் இளம் நண்பன்’ என்று மானுவேலை அறிமுகம் செய்தார் போன்·ப்ரே. அன்ஜெலா அந்த அழகிற சிறுவனை நோக்கிப் புன்னகைசெய்தாள். ‘என் அழகிய தோழனே, இனிமேல் இவர் இருக்கும் இடமே உன் வீடு’ என்றாள். ‘ஆம் அதை நான் உணர்கிறேன். நேற்றுவரை இப்பூமியில் எனக்கென எவருமில்லை. இப்போது இந்த உலகமே என்னுடையதாக இருக்கிறது” என்றன் மானுவேல்

அவனது அழகை அன்ஜெலா வியப்புடன் பார்த்தாள். இலக்கணப்படி அவனது முகத்தை அழகானது என்று சொல்ல முடியாது. அழகானவை அந்த நீலக் கண்கள் மட்டுமே. எப்போதும் அக்கண்களில் ஒளிரும் தீவிரம். அதைவிட அவற்றில் உள்ள கருணை. அவன் பேசும்போது அக்கண்கள் அவனது எல்லா சொற்களையும் அளவிடமுடியாத கருணையால் அடிக்கோடிடுகின்றன. ”என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வீட்டுக்குள் ஏதோ புனிதமான ஒன்று குடியேறிவிட்டிருப்பது போலிருக்கிறது….” அன்ஜெலா கூவினாள். ”…மாமா வரும்போதெல்லாம் இதை உணர்கிறேன்…ஆனால் இன்று அதை பரிபூரணமாக அறிகிறேன்…இதயம் தாங்கமுடியாத அளவுக்கு…”

அவர்களைக் காண அபே வெரினியாட் என்ற மதப்பணியாளர் வருகிறார். கத்தோலிக்க மதத்தின் கோஷங்களினால் ஆன மனிதர். மண்ணில் மனுக்குலத்துக்கு மட்டுமே ஆத்மாவைக் காத்து கொள்ளும் புனிதகடமை விதிக்கப்பட்டுள்ளது என்று நம்புபவர். மானுடகுலத்தில் கிறித்தவ சமூகம் மட்டுமே அந்த பொறுப்பை நிறைவேற்றுகிறது என்றும் கிறித்தவ சமூகம் கத்தோலிக்க தேவாலயத்தால் வழிநடத்தப்படுகிறது என்றும் நினைப்பவர். அடிப்படையில் மானுட நல்லியல்புகள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர் அவர். அவரது ஐயமே அவரது வலிமை. அவரை தேர்ந்த நிர்வாகியாக ஆக்குவது அதுவே.

பெண்கள் ஏமாற்றுபவர்கள், அவர்களை தேர்ந்த ஆண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லும் அவர் ·ப்ளோரியன் அவளை ஏமாற்றுகிறான் என்கிறார். ஓர் ஆணுக்கு பெண் அவனைவிட திறமையுடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ‘நீங்கள் உங்களை எப்படி நம்புகிறீர்கள்?’ என்று அன்ஜெலா கேட்கிறாள். அவளது நண்பரும் மதச் சீர்த்திருத்தவாதியுமான ஆப்ரே லே அவளைத் தேடி வருகிறார். அவர் ஒரு பேச்சாளர். கல்விமான். நவீன அறிவியலில் நம்பிக்கை கொண்டவர். அவர்கள் ஸ்டுடியோவுக்குச் செல்கிறார்கள்.

அபே மானுவேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றி அதிகாரபூர்வமாக விசாரிக்க வந்திருக்கிறார். அபே போன்·ப்ரேயைக் கண்டு உரையாடுகிறார். அவரது அவநம்பிக்கைப் பேச்சுகளைக் கேட்டு கசப்புறும் போன்·ப்ரே ஒருகணம் மனம் நொந்து போகிறார். இவர்களா ஏசுவின் வலியை உலகமெங்கும் கொண்டு செல்லப் போகிறார்கள்? இந்த ஆணவத்தை இவர்கள் இறைவனின் பெயரால் உலகமெங்கும் பரப்பப் போகிறார்களா என்ன?

அப்போது ஒளிமிக்க புன்னகையுடன் அவர் அருகே வந்து நின்றான் மானுவேல் ”அழைத்தீர்களா?” ”இல்லையே” என்றார் போன்·ப்ரே. ”நீங்கள் அழைத்தது போல இருந்தது. நான் இதோ கூப்பிடு தொலைவில்தான் இருப்பேன்…” அவன் ஒரு கணம் அபேயை கூர்ந்து நோக்கினான். அவரது முகம் மாறியது. அவன் வெளியேறினான்.

குறுகுறுப்புடன் பார்த்த அபே புன்னகையுடன் ”விசித்திரமான சிறுவன்!” என்றார். ”என்ன விசித்திரம்? நான் இவனைக் கண்டடைந்ததா?” என்று போன்·ப்ரே கேட்டார். அபே ”ஆமாம். தேவாலய வாசலில் இவனைக் கண்டடைந்ததாக மொட்டையாக கூறப்படுகிறதே…” என்றார் . ”ஆமாம். அதுவே உண்மை. இவனைப்பற்றி எதுவும் எனக்குத்தெரியாது…” என்றார் போன்·ப்ரே.

”என்னை மன்னியுங்கள். நீங்கள் வழக்கமான பாதிரி அல்ல….அப்படி இருந்திருந்தால் இவனது அம்மா இருக்குமிடம் உங்களுக்குக் கண்டிப்பாக தெரியும் என்றே சொல்லியிருப்பேன்…ஆனாலும்…” போன்பிரே  ”அபே…” என்று கூவினார்.  ”என்னை மன்னியுங்கள். நான் நிர்வாகி… நிறையபேரை கண்டிருப்பவன்.. ஐயங்களில் வாழ்கிறவன்… உங்களை நான் அவமதிக்கவில்லை. இருந்தாலும்…”

மனக்கசப்பும் அவநம்பிக்கையும் கொண்ட மனிதர் அபே. ஆழ்ந்த வாழ்க்கைச்சிக்கல்கள் வழியாக அந்த இடத்துக்கு வந்துசேர்ந்திருக்கிறார். ஆழமான ஈடுபாட்டுடன் அங்கியை தரித்துக் கொண்டவர். ஆனால் நீந்துவதற்காக தன்னை தக்கையாக ஆக்கிக் கொண்டார். எங்கும் உண்மையான விசுவாசம் இல்லை. எங்கும் எளிமையான பிரார்த்தனை ஒலிப்பதில்லை என்று அவர் ஆவேசமாக வாதிட்டார்.

அப்போது தன் ஸ்டுடியோவிலிருந்து அன்ஜெலா பாடும் ஒலி கேட்டது. போன்·ப்ரே அபே இருவரும் ஸ்டுடியோவுக்குச் சென்றார்கள். அங்கே அன்ஜெலா ஓர் ஓவியம் வரைந்திருந்தாள். ‘கிறிஸ்துவின் ஊழியன்’. ஐயமும் தந்திரமும் குரூரமும் நிறைந்த முகம் கொண்ட ஒரு பாதிரியின் ஓவியம் அது.

போன்·ப்ரே மனம் நொந்து ” குழந்தை,என்னம்மா இது? இப்படி வரைந்திருக்கிறாய்?” என்றார். ”என்னை மன்னியுங்கள் மாமா. நான் உங்களைப் போன்றவர்களைச் சொல்லவில்லை. ஆனால் என் மனதில் இந்தச் சித்திரமே எழுகிறது…”என்றாள் அன்ஜெலா.

”இது தேவாலயத்தை வசைபாடுபவர்களுக்காகவே வரையப்பட்டது” என்றார் அபே. லே புன்னகைசெய்தார். போன்·ப்ரேயிடம் ”இந்த ஓவியம் உண்மையை சொல்லவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். போன்·ப்ரே தலைகுனியவே முடிந்தது.

லே சொற்களால் அவர்களை மூழ்கடித்தார். உலகம் அறிவின் ஒளி நோக்கி திரும்பி விட்டது. அனைத்தையும் அறிந்துவிடமுடியும் என்ற எக்களிப்பின் விளிம்பில் நிற்கிறது அது. கண்ணெதிரே உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்கே நிற்கிறது தேவாலயம்? மீண்டும் மீண்டும் அது நம்பிக்கை விசுவாசம் என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது…

தன் மகத்தான ஓவியம் ஒன்றைப்பற்றிய கனவை அவரிடம் அன்ஜெலா சொல்லியிருந்தாள். அதை லே நினைவூட்டினார். அற்புதமான ஓர் ஓவியத்தை அவள் வரைய வேண்டும். இன்றுவரை ஐரோப்பா ஆன்மீகம் என்று கண்டடைந்த அனைத்தும் அதில் ஒரே கணத்தில் ஒரு மாபெரும் கனவு திரைவிலகுவது போல வெளிப்படவேண்டும். அதன்பொருட்டு அவள் பிரஷ்டம் செய்யப்படலாம். வசைபாடப்படலாம். ஆனால் அவளது கலையின் நோக்கமே அதுவாகத்தான் இருக்க வேண்டும். கலை என்பது அழகிய பசப்பு அல்ல. அது எந்த பிரார்த்தனையை விடவும் மேலானது. அது எந்த புனிதரைவிடவும் நீடித்து வாழ்வது.அன்ஜெலா மனஎழுச்சியுடன் அவரையே நோக்கினாள்.

அறையைவிட்டு திரும்பும்போது அவளது குழல்களை வருடிவிட்டு போன்·ப்ரே சொன்னார். ”உன் கலையை நீ உருவாக்கு குழந்தை… உன் ஆத்மா கண்ட உண்மையைச் சொல்லு. அதற்கு என்றுமே மதிப்பிருக்கும்…”

மறுநாள் மானுவேலுக்கு பாரீஸின் மாபெரும் தேவாலயங்களைக் காட்டுவதற்காகக் கொண்டுசென்றிருந்தார் போன்·ப்ரே. ஒரு தேவாலயத்தில் நிற்கும்போது வெளியே ஒரு நலிந்த பெண் இரு வறிய குழந்தைகளுடன் வந்து நின்று தன்னிடமுள்ள நகையை வாங்கிக் கொண்டு தேவாலயம் சிறிது பணத்தைத் தரமுடியுமா என்று கேட்பதாக ஏவலாள் வந்து சொன்னான்.

”அந்தப்பெண் வியாபார தந்திரம் அறிந்தவள்…தேவாலயத்தின் பணம் அப்படி வீசுவதற்கு உரியதல்ல” என்று பாதிரியார் பதில் சொல்லும்போது மானுவேல் ஊடே புகுந்தான். ”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பசித்த ஏழைக்குக் கொடுக்க முடியாத செல்வம் எதற்கு இந்த தேவாலயத்திற்கு? நமது மீட்பர் என்றைக்கு இந்த மண்ணின் செல்வங்களைப் பற்றி பேசியிருக்கிறார்? அவன் பேசியது விலைமதிப்பில்லாத முத்துக்களைப் பற்றி மட்டும் அல்லவா?”

”ஆம். ஆனால் அந்த முத்துக்களை தேவாலயமே உற்பத்தி செய்கிறது. அதற்கு பணம் தேவைப்படுகிறது” என்று சற்று நக்கலுடன் பதில் சொன்னார் பாதிரியார். ”…இந்த பையனைப்பற்றி கவனமாக இருங்கள் கார்டினல். இவனால் உங்களுக்குத் தொல்லைகள் நிகழலாம். இவன் பேசுவதில் பெரும்பகுதி தேவாலய தூஷணமாக இருக்கிறது…”

போன்·ப்ரே புன்னகையுடன் ”ஆனால் பலசமயம் அவன் சொல்வது சரியாகவே இருக்கிறது. அவன் அவரது சொற்களை மட்டுமே சொல்கிறான். அவன் அவற்றை விட்டு விலகுவதேயில்லை” என்றார். ஆனால் மானுவேல் அவற்றைக் கவனிக்கவில்லை. அவர் சென்றதும் அவன் அங்கே தொங்கிய பாதிரியாருக்குரிய பட்டு அங்கியை தொட்டுக் காட்டியபடிச் சொன்னான். ”பாருங்கள் இந்த அற்புதமான அங்கியை…எத்தனை வண்ண அலங்காரங்கள். எவ்வளவு ஜரிகை! எத்தனை மெல்லிய பெண் கரங்கள் எத்தனை இரவுகள் கண்விழித்து இவற்றை உருவாக்கியிருக்கும். அற்பமான கூலிக்காக எத்தனை பேர் கண்களை குருடாக்கி கைகளை ரணமாக்கிக் கொண்டிருப்பர்கள்…இந்த அழகு என்பது எவ்வளவு பெரிய வாதையின் வெளிப்பாடு… சிலுவையில் மாண்ட மனித குமாரனின் வார்த்தைகளைச் சொல்ல இந்த வலிமீது ஏறி நிற்கத்தான் வேண்டுமா?”

”நீ சற்றே அதிகமாகச் சிந்திக்கிறாய் குழந்தை..இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக உருவாகி வந்த விஷயங்கள். இவை மக்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்காக தேவையாகின்றன” என்றார் போன்·ப்ரே.

பாரீஸின் மாபெரும் தேவாலயங்களை அவர்கள் சுற்றிவந்தார்கள். அங்கே தேவாலயக் கோபுரத்தின் ஓவியங்களை சுற்றிக் காட்டும் இளம்துறவியிடம் கார்டினல் போன்·ப்ரே கேட்டார் அவனுக்குக் களைப்பாக இல்லையா என்று. ”ஆம் களைப்பாக இருக்கிறது. மிகமிகக் களைப்பாகவே இருக்கிறது. ஆனால் இங்கே நான் பிசாசுக்களின், பாபிகளின் உருவங்களைக் கண்டுகொண்டிருக்கிறேன்… அங்கே கீழே இருந்து நேரில்வரும் பிசாசுக்களையும் பாவிகளையும் காண்பதற்கு இது எவ்வளவோ மேல்.. இங்கே விசித்திரமானவர்கள் வருகிறார்கள். அவர்களிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொண்டிருக்கிறேன். பகலில் வருபவர்களை விட இரவில் வருபவர்களிடமிருந்து…அன்று ஒருநாள் ஒருவர் வந்தார்…” என்று அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அந்த இளம்பாதிரி நிலையற்றிருந்தார். தனக்குத்தானே பேசிக் கோண்டிருந்தார். இந்த மாபெரும் ஆலயம் நம்பிக்கையில்லாமையின் அடையாளமல்லவா? நம்பிக்கை இருந்தது என்றால் ஏன் இத்தனை பெரிய ஆலயம்? ஒவ்வொரு கணமும் நம்பிக்கை வற்றிக் கொண்டிருக்கிறது, விசுவாசத்தை இழந்த தேவாலயம் ஒரு மாபெரும் பூதம்போல நம் கண்முன் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளூர நானும் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறேன். என்னால் தேவனின் சொற்களை நம்ப முடியவில்லை. ஆனால் வானத்தை நிமிர்ந்து நோக்கி நட்சத்திரங்களை கவனிக்கும்போது எனக்குள் ஏதோ அசைகிறது. நான் தனியனல்ல என்று படுகிறது. என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் அவர் நேராக ஓடிப்போய் கோபுரச்சாளரம் வழியாக வெளியே குதித்தார். இளம்துறவி விவரித்தார்.

போன்·ப்ரே அதிர்ந்து போனார். நம்பிக்கையின்மையால் தற்கொலையா? அது ஒரு காலக்குறியீடா? ”தற்கொலை சொர்க்கத்துக்கான வழியே அல்ல” என்றார் அவர்.

அந்த கட்டிடத்தைவிட்டு வெளியே வரும்போது மானுவேல் கேட்டான் ”ஏன் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கண்டிப்பதற்குப் பதிலாக உதவிக்கொள்ளக் கூடாது?” போன்·ப்ரே பதில் சொல்லவில்லை. தேவாலயங்களைக் கண்டு நடக்கும்போது மானுவேல் கேட்டான், ”அவர் மீண்டும் வருவாரென்றால் தனது மக்களைக் கண்டு துயருறுவாரா? என்ன நினைக்கிறீர்கள்?”

போன்·ப்ரே பைபிள் வரிகளைச் சொன்னார் ”கவனமாக இருங்கள், அவர் எப்போது வருவாரென்று தெரியாது. களிகூருங்கள் எக்காள சத்ததோடு அவர் வருவார்” போன்·ப்ரே பெருமூச்சு விட்டார் ”…ஒன்று மட்டும் நிச்சயம்…அவர் மீண்டும் வந்தால் இந்த மாபெரும் தேவாலயங்கள் அனைத்தும் தளர்ந்து சரிந்து மண்ணில் விழுந்து நொறுங்கும்…”

மானுவேல் கனவு நிறைந்த கண்களுடன் மேலும் கேட்டான் ”அவர் எந்த வடிவில் வருவார் என்று நினைக்கிறீர்கள்?” போன்·ப்ரே தயங்காமல் சொன்னார் ”முதலில் வந்தது போலவே கைவிடப்பட்ட எளிய மனிதனாக. அதில் ஐயமே இல்லை. மீண்டும் அவர் உதாசீனம் செய்யப்படுவார். மீண்டும் அவர் வெறுக்கப்படுவார்…”

அவர்கள் மௌனமாக நடந்து வீட்டுக்குச் சென்றார்கள். களைத்துப்போய் தன் அறையில் அமர்ந்ததும் போன்·ப்ரே சொன்னார் ”ஏதாவது வாசி மானுவேல்…” பைபிளை எடுத்து வைத்துக் கொண்டு மானுவேல் கேட்டான் ”…ஒருவன் தேவாலயத்தைவிட கிறிஸ்துவை மேலாக நினைத்தான் என்றால் அவன் தேவாலயதூஷணம் செய்பவனா?”

போன்·ப்ரே புன்னகை செய்தபடி சொன்னார் ”அப்படித்தான் கொள்ளப்படும். ஆனால் நான் அப்படி நோக்கினால் தேவலய தூஷகனே” பைபிளைப் பிரித்து மானுவேல் வாசிக்க ஆரம்பித்தான். ”..என்னைப் பின்தொடர்பவர்கள் தங்களை நிராகரித்துவிட்டு தங்கள் சிலுவைகளை சுமந்தபடி என் பின்னால் வருவார்களாக! தங்கள் உயிரைக் காத்துக் கொள்பவர்கள் அதை இழக்கிறார்கள். என்பொருட்டு உயிரை இழப்பவர்கள் அதைக் காத்துக் கொள்கிறார்கள்”

அபேயிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவர் மறுநாள் தேவாலயத்தில் ஓர் உரை ஆற்றவிருக்கிறார். அதற்கு போன்·ப்ரே அவசியம் வரவேண்டும், மானுவேலுடன். ‘அவன் அளித்த மலரை நான் வைத்திருக்கிறேன்’ அவர் எழுதியிருந்தார். போன்·ப்ரே கேட்டார் ‘அவருக்கு நீ ரோஜா பரிசளித்தாயா குழந்தை?”

மானுவேல் புன்னகையுடன் ”ஆமாம். அவை நம் பிதாவின் சொற்களை வேறு எதைவிடவும் தெளிவாகச் சொல்கின்றன” என்றான் ”அவரது ஆத்மா நம்பிக்கைக்காக தவித்தது. அதை நான் அவருக்கு அளித்தேன்”

”ஆம். அது நல்ல கற்பனையே. ஆனால் அழகுள்ளவை எல்லாம் நல்லவை என்பது ஓர் இளமைக்கால மனப்பிரமை. அழகுக்குப் பின் குரூரமும் ஆபாசமும் இருக்கக் கூடும்” என்றார் போன்·ப்ரே ”ஆம், ஆனால் அது சற்றுநாளைக்கு மட்டுமே. நாள் செல்லச் செல்ல தீமை தன்னை முகத்தில் வெளிப்படுத்தியே தீரும்”.

போன்·ப்ரே அவனை நோக்கிப் புன்னகைசெய்தார். அனைத்தும் அறிந்தவனைப்போல பேசுகிறாய். நீ வளர்ந்த பின் எப்படி இருப்பாய் என்று எண்ணிக் கொண்டேன்..” ”நான் வளாரமலே போய்விட்டால்?” ”அதெப்படி?”” ‘நான் இளமையிலேயே இறந்து விட்டால்?”

”அப்படியெல்லாம் பேசக்கூடாது. இறைவனின் சித்தம் அது. அதை நாம் விரும்புவதும் விலக்குவதும் பாவம்” என்றார் போன்·ப்ரே. ”ஏன்? மரணம் வாழ்வைவிட மகத்தானதல்லவா?” என்றான் மானுவேல். ”இல்லை குழந்தை. நீ வளர்ந்து பெரியவனாகி இவ்வுலகுக்கு எவ்வளவோ செய்யலாம். உன்னை இவ்வுலகுக்கு தேவையுள்ளது…”

”இல்லை!” என்றான் மானுவேல் உணர்ச்சி ஒளிர்ந்த நீலக் கண்களுடன். ”இல்லை. என்னை இவ்வுலகுக்குத் தேவையில்லை. ஆனால் நான் இந்த உலகை நேசிக்கிறேன். இந்தப் பிரபஞ்சவெளியில் கோடானுகோடி உலகங்கள் உள்ளன. தோட்டத்தில் முடிவற்ற மலர்கள். ஆனாலும் இதை நான் விரும்புகிறேன். காரணம் இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட உலகம். கைவிடப்பட்ட, துயருற்ற உலகம். இந்த உலகுக்கு என்னை தேவையில்லை. ஆனாலும் இதன் மீது நான் அன்புடனிருக்கிறேன்…”

அப்போது அவனைப்பார்க்க எல்லையில்லாத சோகத்தை மானுட உருவமாக்கியவன் போலிருந்தான். மனம் நெகிழ்ந்து போன்·ப்ரே அவன் கைகளைப் பற்றிக் கொண்டார். ”நான் உன்னுடன் இருக்கிறேன். நானிருக்கும்வரை நீ கைவிடப்பட்டவனல்ல” என்றார். ”நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள் கர்டினல்” என்றான் மானுவேல். மாலை வெயிலின் கிரணங்கள் செந்நிறக் கண்ணாடி வழியாக வந்து அவன் முகத்தில் பட்டதனால் அவன் முகம் தீ போல சுடர்விட்டுக் கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது.

அன்ஜெலா தன் அறையில் இருக்கையில் மானுவேல் அவளருகே வந்தான். ”மாமா என்ன செய்கிறார்?” என்று அவள் கேட்க அவர் ரோமுக்குக் கடிதங்கள் எழுதுகிறார் என்றான் மானுவேல். ”நீ காலை முதலே அலைகிறாயே, களைப்பாக இல்லையா?”என்று அவள் கேட்க ”ஆம். ஆனால் களைப்பு அலைச்சலினால் அல்ல. பொய்களினால்…”என்றான்

”என்ன பொய்?” ”இந்த நகரமெங்கும் நிறைந்துள்ள தேவாலயங்கள் என்னும் பொய். ஓங்கிய அக்கட்டிடங்களில் பரிதாபமான ஏழைமக்கள் வந்து கிறிஸ்துவைத் தேடி சலித்து திரும்பிச் செல்கிறார்கள்…” ”அவை ஏசுவை வணங்குவதற்காக கட்டப்பட்டவை அல்லவா? ஏன் அவற்றில் ஏசு இருக்கமாட்டார் என்கிறாய்?” ”ஒருபோதும் இருக்கமாட்டார். அவர் ஏழ்மையை வரித்துக் கொண்டவர். செல்வங்களை நிராகரித்தவர்” என்று மானுவேல் சொன்னான்.

அவனது சொற்களை, அப்போது நீலப்பூவென ஒளிரும் அவன் நயனங்களை அவள் பிரமையில் என நோக்கி இருந்தாள். யார் இவன்? சொர்க்கத்தின் சிறிய துளி போல இருக்கிறான். ”சொர்க்கம் என்பது கோடானுகோடி உலகங்கள் அடங்கியது. என் பிதாவின் உறைவிடம்”

அன்ஜெலா ”என் அம்மா அங்கேதான் இருக்கிறாள்… எங்கோ..” என்றாள் துயருடன். அவன் புன்னகை செய்தான் ”ஆம். ஆனால் மண்ணில் உள்ளவர்களும் விண்ணுடன் உரையாட முடியும்” ”எப்படி?” ”அன்பின் மூலம். எங்கும் எவரிடமும் உரையாடக்கூடிய தூய ஊடகம் தன்னலமற்ற அன்பேயாகும்…”

அன்ஜெலா கேட்டாள், ”எனது கண்ணீரும் பிரார்த்தனையும் மிக்க இந்த சொற்கள் என் தாயைச் சென்றடையுமா என்ன?”. மானுவேல் புன்னகைசெய்து ”சென்று சேர்ந்துவிட்டன” என்றான்.

”நீ அற்புதமாகப்பேசுகிறாய். உனது அருகாமை எந்த துயருற்ற மனதுக்கும் சாந்தியளிப்பது…” என்றாள் அன்ஜெலா நெகிழ்ச்சியுடன். ”அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் சாந்தியளிக்கும்” என்றான் அவன் ”உனக்கு இனிமேல் வரும் துயரங்களிலும்கூட…” அவள் உளம்நடுங்கி ”…எனக்கு துயரம் வருமா? என்ன சொல்கிறாய்?” என்றாள். ”நான் பொதுவாகச் சொன்னேன்” என்றான் மானுவேல் புன்னகையுடன்.

மென்மையான இலையுதிர்காலத்து காலைநேரம். மறுநாள் நாத்ரதாம் தேவாலயத்தில் அபே வெரினியாட் உரையாற்றினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க போன்·ப்ரே மானுவேலுடன் அங்கே சென்றார். கையில் புதிய ஏற்பாடு பைபிளுடன் நின்று உரத்த குரலில் அபே பேச ஆரம்பித்தார்.

”….இது ஒரு மிகச்சிறிய நூல், நீங்களனைவரும் அறிந்துவிட்டதாக பாவனைசெய்வது. ஒரு மணிநேரத்தில் இதை நாம் படித்துவிடலாம். இது ஏசுவின் நற்செய்தி. உண்மையில் நாம் எவருமே இதை முழுக்கப்படித்ததில்லை, முழுமையாக உணர்ந்ததும் இல்லை… நீங்கள் இதை படிப்பதில்லை. அதற்கு நீங்கள் பாதிரிகளை நம்பியிருக்கிறீர்கள். அவர்களுக்கோ இதில் ஆர்வமே இல்லை…அவர்களின் சொற்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மேடையில் நானும் பல ஆண்டுகளாக இந்த நூலைப்பற்றி பேசியிருக்கிறேன். ஒரு சொல் கூட இதைப்பற்றிய உண்மையாக இருந்தது இல்லை ”அபே வெரினியாட் பைபிளை வைத்துவிட்டு மேஜைமீது கைகளை ஊன்றிக் கொண்டு ஆழமாக சபையினரை உற்று நோக்கினார்.

”கவனியுங்கள் நண்பர்களே ‘உனது கண்கள் தனியாக இருந்தால் உன் முழு உடலுமே ஒளிபெறுகிறது’ என்றார் கிறிஸ்து. அவரது ஒரு சொல் கூட வீணல்ல என்று உணருங்கள். அடுத்த வரி என்ன? ‘உனது கண்கள் தீமையானவையாக இருந்தால் உனது முழு உடலுமே இருளாக ஆகிறது’ என்கிறார், சிந்தித்துப்பாருங்கள். தனியாக என்பதற்கு எதிரீடாக அவர் தீமையை வைக்கிறார். நாம் என்றாவது உண்மையை நாமாகவே நின்று தனித்து நோக்கியிருக்கிறோமா? நம் உடலை ஒளிபெறச் செய்திருக்கிறோமா? அர்த்தமற்ற மந்தையாக அல்லவா நாம் எப்போதும் நம்மை உணர்ந்திருக்கிறோம்… நினைவுகூருங்கள், தனக்குள் தனித்திருப்பவனுக்கே ஒளி உள்ளது.”

கூட்டம் பிரமை பிடித்து அமர்ந்திருந்தது. முற்றிலும் எதிர்பாராத பேச்சு அது. அபே வெரினியாட் தொடர்ந்தார். ”நாம் நமக்குநாமே பொய் சொல்லிக் கொள்ள முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியாது. நமது பாவங்களை நன்கறிந்தவர்கள் நாமே. ஆகவேதான் கிறிஸ்து நமது கண்கள் தனித்திருக்கவேண்டும் என்றார். ஊனக்கண்களை அல்ல, நம்மை நாமே நோக்கும் நம் அகக்கண்களையே சொன்னார் அவர்…”

அபே வெரினியாட் அன்று தன் உச்சகட்ட நாவன்மையுடன் இருந்தார். தன்னையே கிழித்து மேடையில் வைத்தார் அவர். ஏதோ தெய்வீகமான வல்லமைக்கு ஆட்பட்டவர் போல. சட்டென்று ஒரு குண்டு வெடித்தது. ஆட்கள் சிதறி எழுந்து ஓலமிட அபே வெரினியாட் கூவினார் ”எனக்கு ஒன்றுமாகவில்லை. என்னை விட்டுவிடுங்கள்…என்னைக் காப்பாற்றியவன் அந்தச் சிறுவன்…குறுக்கே வந்தான்..அவனைப் பாருங்கள்…” .ஆனால் மானுவேலுக்கு ஒன்றும் ஆகவில்லை

ஆலயப்பணியாளர்கள் துரத்திச் சென்று கொலைகாரனைப் பிடித்து வந்தார்கள். இளைஞன் அவன். எதைப்பற்றியும் பயமில்லாமல் வெறுப்பு தவழும் முகத்துடன் நின்றான். ”அவனை விட்டுவிடுங்கள். அவன் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை…” அபே வெரினியாட் கூவினார். ”…அவன் என் மகன்.என் பாவங்களின் நிழல் அவன்”

****

images-jesus-christ-3

மெல்ல பாரீஸ் நகரத்து கத்தோலிக்க சபை விழித்தெழுந்தது. ஏதோ நடக்க ஆரம்பித்திருக்கிறது. இரு அற்புதங்கள் பேசப்படுகின்றன. இரு வகையானவை. ஒன்று, பாமர மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இன்னொன்று பாரீஸ் நகரத்து அறிவுஜீவிகள் நடுவே. இரண்டிலும் தொடர்புபட்டிருப்பவன் ஒரு விசித்திரமான சிறுவன், ஒரு அபூர்வமான பாதிரியார்.

சபை விசாரணையை தொடங்கியது. அபே விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அபே தன் நிலைபாட்டில் உறுதியாக நின்றார். ”ஆம் நான் தேவாலயத்தை விமரிசனம் செய்தேன், ஆனால் அப்படி விமரிசனம் செய்த முதல் நபரல்ல நான். முன்னர் ஏசுவும் அபப்டி விமரிசனம் செய்திருக்கிறார்…” போன்·ப்ரேயின் கரங்களைப்பற்றியபடி அபே சொன்னார். ”நான் கண்ட ஒரே உண்மையான கிறிஸ்தவ ஜீவன் நீங்கள்தான். என்னை மன்னியுங்கள் நண்பரே. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்…”

கார்டினல் போன்·ப்ரேயிடம் விசாரணை நடத்திய மோரெட்டி பாதிரியார் அபேயின் சபை விமரிசனங்களுக்கான பதிலை எதிர்பார்த்தார். ஆனால் தெளிவாகவே போன்·ப்ரே விலகி நின்றார். அவரால் எந்த சபை விமரிசனத்தையும் அதில் காண முடியவில்லை. நெடுங்கால ஆன்ம வதையில் இருந்து விடுபட்ட ஒரு மனத்தின் உக்கிரமான வெளிபபடுகளாக மட்டுமே அவர் அவற்றைக் கண்டார். ”இவற்றை நான் புனித தந்தைக்குத் தெரிவிப்பேன்.”என்றார் மோரெட்டி. ”…இவ்விசாரணையில் நீங்கள் எடுத்த நிலைபாட்டையும் சொல்ல வேண்டியிருக்கும்…” ”உங்கள் விருப்பம் அதுவானால் செய்யுங்கள்…”என்றார் போன்·ப்ரே. அபே தன் மகன் காலில் மண்டியிட்டு மன்னிப்பு கோரி அவனுடன் கிராமத்துக்குப் பயணமானார்.

மோரெட்டி ஐயத்துடன் மானுவேலை நோக்கினார். ”இவன் நமது திருச்சபையைச் சேர்ந்தவனா?” மானுவேல் ”இல்லை, எனக்கு சபை இல்லை” என்றான். ”ஆச்சரியம். பிதாவே நீங்கள் இவனுக்கு சபையைப் பற்றிச் சொல்லித்தரவேண்டும்.. இவன் சபையால் பெற்றுக் கொள்ளப்படவேண்டும்…” ”ஆம்” என்றான் மானுவேல் ”நான் சபைகளைப்பற்றி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது… உங்கள் திருச்சபை என்னை ஏற்றுக் கொண்டாகவேண்டும்…ஆனால் அது அத்தனை எளிய ஒன்று அல்ல”

சபை போன்·ப்ரேவை ரோமுக்கு அழைத்தது. ரோம் முழுக்க போன்·ப்ரே பற்றிய பேச்சு எழுந்திருந்தது. அவர் தன் கள்ள மகனை தன்னுடன் வைத்திருக்கிறார் என்று ஒரு தரப்பு. அவர் போப்பாண்டவரின் பதவிக்கே குறிவைக்கிறார் ,அந்த அற்புதங்கள் அவரால் அதன் பொருட்டு உருவாக்கப்பட்டவை என்பது அதிகாரவர்கத்தின் கருத்தாக இருந்தது. அதற்கு இணையாகவே வாட்டிகனைக் கவலைப்பட வைத்த விஷயம் மதச்சீர்திருத்தவாதியான ஆப்ரே லேவுடன் கார்டினல் போன்·ப்ரேக்கு இருப்பதாக சொல்லப்பட்டது. எங்கும் உருவாகிவரும் எதிர்ப்புக்குரலுடன் மதிக்கபப்டும் ஒரு துறவி இணைந்துகொள்கிறாரா என்ன?

[பகுதி 2 ]

மறுபிரசுரம் 2008

முந்தைய கட்டுரைவெளியே செல்லும் வழி– 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59