‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2

பகுதி ஒன்று : வேள்விமுகம்

[ 2 ]

வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.

ஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் விழிவிரித்து பார்த்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.

ஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பெருக்கை படகில் கடந்து சென்றான். அன்றிரவு கிருஷ்ணநகரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கினான். அங்கிருந்து மறுநாள் கிளம்பி வடக்குநோக்கி செல்ல ஆரம்பித்தான். பாரதத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் செல்லும் ஒரு பாதை இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மழைபெய்யும்போது கோயில்மண்டபங்களிலும் கழித்தபடி கால்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் வெந்து கருக அவன் நடந்து சென்றுகொண்டே இருந்தான். மரவுரியணிந்த முனிகுமாரனை ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வணங்கி உணவும் நீரும் இடமும் அளித்து வழியனுப்பிவைத்தனர்.

அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன. கிருஷ்ணையும் நர்மதையும் விந்தியமும் அங்கமும் மகதமும் எல்லாம் அவனுக்குள் அறிதல்களாக மாறிக்கொண்டே இருந்தன. காளைகள் இழுக்கும் உப்புவண்டிகள் சேற்றில் சகடம் சிக்கி ஓசையிட்டு நகரும் பெருவணிகப்பாதைகள், இருபக்கமும் முட்புதர்கள் அரணிட்ட கானகப்பாதைகள், செந்நிற மழைநீர் சுழித்தோடும் காட்டாறுகள், கருமேகம்போல் திரண்டெழுந்த பாறைக்கட்டுக்கள், கால்நடைகள் கூடிய பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழாக்கொண்டாடிய ஆலயமுற்றங்கள் அனைத்தையும் கடந்து சென்றுகொண்டிருந்தான்.

இருநூற்றெழுபது நாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பெருமதில்வளைவை சிறிய செம்மண்குன்று ஒன்றின் மேல் நின்று பார்த்தான். அவன் நடந்து வந்த ரதசாலை கீழே செந்நிறமாகச் சுழித்து காட்டை ஊடுருவிச்சென்றுகொண்டிருந்தது. புராணங்கள் வழியாக பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு குழந்தையும் மொழியறியும் நாளிலேயே அறிந்துகொண்ட அஸ்தினபுரியை அவன் கண்டான். இக்‌ஷுவாகு வம்சத்தின் மூதாதையான குருவில் இருந்து உருவாகிவந்த குருவம்சத்தின் தலைநகரம். நூற்றாண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ஹஸ்தியால் மயன் வழிவந்த சிற்பிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது.

சிலகணங்கள் பார்த்துவிட்டு கீழே இறங்கி ரதசாலை வழியாக நடந்து கோட்டைவாசலை அடைந்தான். மேலே எழுந்து அத்திசையை முற்றாகவே மறைத்துக்கொண்டது சுவர். அவன் கண்ட நகரங்களில் எதிலும் அதற்கிணையான கோட்டை இருந்ததில்லை. பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. கோட்டைக்கு முன்னாலிருந்த அகழிக்குள் முளைத்தெழுந்த நீர்மரங்கள் பசும்கிளைகளை கோர்த்துக்கொண்டு பச்சைத்தழைப்பு செறிந்து நின்றன. பாதை சற்றே எழுந்து விரியத் திறந்துகிடந்த கோட்டைவாசலுக்குள் சென்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமான கோட்டைக்கதவுகள் திறந்து மண்ணில் புதைந்திருந்தன. கதவின் மரத்தடிகளை இணைத்த இரும்புப்பட்டைகள் துருவேறியிருந்தன. மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் கதவை மோதும் பகையானை மத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன.

CV
ஓவியம்: ஷண்முகவேல்

கோட்டைவாசலிலும் உள்ளே ரதவீதியிலும் எங்கும் காவல் இருக்கவில்லை.காலைவெயிலில் இளமழை பொழிந்துகொண்டிருக்க அவன் புறச்சாலையில் நடந்தபோது நகரமே அமைதியாக இருக்கக் கேட்டு பிரம்மசாபத்தால் தூங்கிக்கொண்டிருக்கும் பெருநகரமோ அது என ஐயம் கொண்டான். மழைப்பிசிர்கள் நின்று, நனைந்த கல்பரப்புகளும் இலைகளும் ஒளி விட்டுக்கொண்டிருப்பதைக் கண்டபடி அவன் நகரத்தெருக்கள் வழியாக சென்றான். சுண்ணம்சேர்த்துக்கட்டிய சுவர்களும் செவ்வரக்கு பூசிய மரப்பட்டைக்கூரைகளும் கொண்ட மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. வீட்டுத்திண்ணைகளில் யாழ்களுடன் இருந்தவர்கள், தயிர்கொண்டுசென்ற ஆய்ச்சியர் அனைவரும் கனவுருக்கள் போல அமைதியாக அசைந்துகொண்டிருந்தனர்.

அஸ்தினபுரியில் மாமன்னன் ஜனமேஜயன் பலகட்டங்களாக ஐந்துமாதங்களாக நடத்திவந்த மாபெரும் பூதயாகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. நகரமெங்கும் பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வைதிகர்களும் முனிவர்களும் நிறைந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக நகருக்கு வெளியே உபவனத்தில் குடில்கள் கட்டப்பட்டிருந்தன.

ஆஸ்திகன் அங்கே தன்னை வரவேற்றுச் சென்ற சிற்றமைச்சனிடம் ”யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தன் நான். நைஷ்டிக பிரம்மசாரி. என் பெயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். அவர் அவனை வணங்கி அழைத்துச்சென்று, ஈச்சைஓலைகளால் கூரை வேய்ந்து மரப்பட்டைகளால் சுவரமைக்கப்பட்ட அழகிய சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்செய்தார். அங்கேயே ஓடிய சிறுநதியில் நீராடி புத்தாடை அணிந்து வழிபாடுகளை முடித்துக்கொண்டு ஆஸ்திகன் ஜனமேஜயனின் வேள்விச்சாலைக்குச் சென்றான்.

அன்று வேள்வியின் இறுதிநாள் என்பதனால் நகரமே வேள்விச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பொன்னூல் பின்னல்கள் கொண்ட வண்ண ஆடைகள் அணிந்து பொன்னணிகளாலும் மலர்களாலும் அலங்கரித்துக்கொண்ட பெண்கள். சிகையில் மயிற்பீலிவைத்து மலர்சுற்றிக்கட்டி பீதாம்பரம் அணிந்த குழந்தைகள். கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். மெல்ல கனைத்து வழிகேட்ட மாந்தளிர்நிறமான குதிரைகள் சாமரவாலைச் சுழற்றியபடி இறுகி அசையும் தசைகளுடன் குளம்புகள் தடதடக்க கடந்துசென்றன.

விதவிதமான சிறிய வண்டிகளில் ஏதேதோ பொருட்கள் சென்றுகொண்டிருந்ததை ஆஸ்திகன் கண்டான். தாமிர உருளி திறந்த கவந்த வாயுடன் கணகணத்து ஒரு கைவண்டியில் இழுபட்டுச் சென்றது. பெரிய நிலவாய் நிறைய நெய் மூடியிலிருந்த சிறிய ஓட்டைவழியாக அவ்வப்போது சற்று கொப்பளித்துத் துப்பியபடி ஒற்றைமாட்டுவண்டியில் சென்றது. இன்னொரு பெரிய பாத்திரத்தின் இரு காதுகள் வழியாகவும் மூங்கிலைச் செலுத்தி இருவர் தூக்கிக்கொண்டு சென்றனர். தலைச்சுமையாக ஐந்துபேர் தாமரைமலர்களை கட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்களின் தோள்களில் தாமரைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.

வானத்தில் எழுந்ததுபோல ஜனமேஜயனின் அரண்மனைமுகடு தெரிந்தது. மரப்பலகையால் செய்யப்பட்டு வெண்சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட கவிழ்ந்த தாமரைவடிவமான கூரைக்குவை, மண்ணிலிறங்கிய மேகக்குமிழ்போல. அதன் மேல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்தைத் தாங்கிய பெரிய பொன்னிறக்கொடி துவண்டு அசைந்தது. அதைச்சுற்றி தாமரைக்கூட்டங்கள் போல வெண்ணிறமான சிறியமுகடுகள். அரண்மனையின் உள்கோட்டை செம்மண் நிறத்தில் வட்டமாக சுற்றிவளைத்திருக்க அதன் நுழைவாசலின் மரத்தாலான தோரண வளைவுக்குமேல் தொங்கிய காவல்மணியாகிய காஞ்சனம் தாலிச்சின்னம்போல பொன்னிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

அரண்மனைக்குச் செல்லும் பாதையில் இருந்து பிரிந்து வலப்பக்கமாகச் சென்ற பாதை இருபக்கமும் மூங்கில்காடுகள் கொண்டதாக இருந்தது. மூங்கில்செறிவுக்கு அப்பால் பேச்சொலிகளும் உலோகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ண அசைவுகள் அலையடித்தன. வேள்விப்புகையின் வாசனை எழ ஆரம்பித்தது. ஈச்சை ஓலைகளைமுடைந்து செய்த தட்டிகளாலும் கோரைப்புல்பாய்களாலும் மரப்பட்டைநார் நெய்து செய்யப்பட்ட திரைகளாலும் கட்டப்பட்டிருந்த வேள்விக்கூடத்தின் வட்டவடிவமான மைய அரங்கை ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்களைத் தாங்கிய வண்ணம்பூசப்பட்ட மூங்கில்தூண்கள் ஈச்சங்குலைகளாலும் தளிரோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பசுங்காடுபோலச் செறிந்திருந்தன.

பந்தலின் மறுபக்கத்தில் கார்மிகர்கள் வரும் பாதை. அதன் வழியாக மூங்கில்களில் தொங்கிய கூடைகளில் மலர்களும் இலைகளும் நெய்யும் தூபங்களும் வந்துகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பாதை எதிரே இருந்தது. வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள். இடப்பக்கம் சங்குக்குவியல்கள் போல வெண்ணிற ஆடையணிந்த வைதிகர்கள். நடுவே சென்று மேலும் இரண்டாகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் செந்நிற தலைப்பாகைகள் அணிந்த ஷத்ரியர். மறுபக்கம் பொன்னிறத் தலைப்பாகைகள் அணிந்த வைசியர். அப்பால் நீலநிறத்தலைப்பாகை அணிந்த சூத்திரர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான இடம் தனியாக பகுக்கப்பட்டிருந்தது.

வேள்வியதிபரான வைசம்பாயனர் வேள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைமேல் விரிக்கப்பட்ட தர்ப்பைப்பரப்பு மேல் அமர்ந்திருந்தார். ஆஸ்திகன் அருகே சென்று அவரை வணங்கினான். தன் குலத்தையும் தந்தையின் பெயரையும் சொன்னபின்பு முனிவர்களின் இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டான். நாற்பதுநாட்களுக்கு முன்பு அரணிக்கட்டையைக் கடைந்து உருவாக்கப்பட்ட நெருப்பு வேள்விக்குளத்தில் ஹோதாக்களால் ஒவ்வொரு கணமும் ஊட்டப்பட்டு பொன்னிறத்தில் எழுந்தாடிக்கொண்டிருந்தது.

வெளியே மங்கல வாத்தியங்கள் முழங்கின. பல்லியமும் கொம்பும் பெருமுழவும் மணியும் சேர்ந்து கலந்த ஒலியுடன் வேதபண்டிதர்களின் வேதகோஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் சொல்லும் கோல்காரன் உள்ளே வந்தான். கையில் பெரிய பொன்னாலான தலைக்கோலை வைத்திருந்தான். மிடுக்குடன் உள்ளே வந்து அவைமேடை மேல் ஏறி நின்று தலைக்கோலை மேலே தூக்கி உரக்கக் கூவினான் “ஜெயவிஜயீபவ! அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரீட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார்!”

மங்கலவாத்தியக்குழு முதலில் உள்ளே வந்தது. அதைத்தொடர்ந்து பூரண கும்பம் ஏந்திய வைதிகர் நீர்தெளித்துக்கொண்டு வந்தனர். பின்னர் காவல் வீரர்கள் கவச உடை அணிந்து ஆயுதங்களுடன் வந்தனர். தம்பியரான சுதசேனரும் உக்ரசேனரும் பீமசேனரும் உருவிய வாட்களுடன் சூழ்ந்து வர, முன்னால் புரோகிதர்கள் வேதகோஷமிட்டு அட்சதை வீசி வாழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வீசி ஆசியளிக்க, ஆரங்களிலும் காதுகளின் குண்டலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கணங்களிலும் கச்சைமணியிலும் செம்மணிகள் சுடர்விட அக்னிதேவன் எழுந்தருளியது போல் ஜனமேஜய சக்ரவர்த்தி பட்டத்தரசி வபுஷ்டையுடன் உள்ளே வந்தார்.

முந்தைய கட்டுரைகலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நடை, அமைப்பு – ஒரு விளக்கம்