காந்தியும் தலித் அரசியலும் – 7

  1. இரு நாயகர்கள்

காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு குறைவாகவே ஆய்வுகள் வந்துள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் ஏதேனும் ஒருபக்கம் சாய்ந்தவை, மறுபக்கத்தை காண மறுப்பவை. சமீபகாலமாக மறுபக்கத்தை வசைபாடக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வந்துகோண்டிருக்கின்றன. காந்திதான் அதன் களப்பலி.

அரசியல் உள்நோக்கத்தை தவிர்த்துப் பார்த்தால் இத்தகைய ஆய்வுகளின் மிகப்பெரிய பிரச்சினை வரலாற்றை ஒற்றைப்படையான ஒரு நகர்வாக மட்டுமே பார்க்கக்கூடிய அனுகுமுறைதான். இது கிட்டத்தட்ட பழங்குடிகளின் வம்சவரலாறு போன்றது. சொந்தக்குல வீரர்கள் X மாற்றுக்குல கொடியோர்கள் என அந்த மொழிபு [Narration ] விரியும். இது ஒருபோதும் வரலாற்றின் முழுச்சித்திரத்தையும் அளிப்பதில்லை. என்னுடைய வரலாறு வரலாறு, உன்னுடையது பொய் என்ற எளிய சூத்திரமே இதன் இயக்கவிசை

வரலாற்றை ஒரு உரைமாற்றாடல் வரலாற்று [Dialogic history] மொழிபாக அணுகும்போதுதான் வரலாற்றில் இயங்கும் முரணியக்கங்களை நாம் காண முடியும். வரலாறு என்பது பல்வேறு சக்திகள் மோதி முயங்கி ஒன்றை ஒன்று நிரப்பிக்கொண்டு, ஒன்றை ஒன்று முன்னகர்த்திக்கொண்டு, இயங்கக்கூடியது. அத்தகைய ஓர் முரணியக்க வரலாற்று நோக்கு இருந்தாகவேண்டிய மார்க்ஸியர்கள் கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அபத்தமான குலமுறை வரலாற்று நோக்கை திராவிட இயக்கங்களிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்குள்ள பரிதாபம்.

வரலாறு என்பது ஒரு மாபெரும் உரையாடல். ஒரு மாபெரும் விவாதம். ஒரு மாபெரும் பண்டமாற்று. ஒரு மாபெரும் கூட்டுக்கலவி! இருபதாம் நூற்றாண்டின் உச்சத்தில் மானுடம் உணர்ந்த வரலாற்றுத் தரிசனம் இதுவே. பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்துக்கும் பொதுவாக உள்ள முக்கியமான கூறு இந்த வரலாற்றுப்பார்வைதான். அந்தப்பார்வையிலேயே இன்று காந்தி மீட்டு எழுதபப்டுகிறார்

ஒரு வரலாற்றுக்காலகட்டத்தில் ஒரே இலட்சியவாதத்தின் இருவேறு அணுகுமுறைகளை வெளிபப்டுத்தியவர்கள் அம்பேத்காரும் காந்தியும். அம்பேத்காரின் அணுகுமுறை மைய அதிகாரம் சார்ந்து செயல்படுவது. அறிவார்ந்த இலட்சியவாத நோக்கு கொண்டது. காந்தியின் அணுகுமுறை என்பது மக்களின் அதிகாரம் சார்ந்தது. உரையாடல்தன்மை கொண்டது. அம்பேத்கார் நவீனத்துவர். காந்தி நவீனத்துவத்தை தாண்டி சிந்தனை செய்தவர்

அம்பேத்கார் என்ற இந்திய முன்னோடி

அம்பேத்காரைப்பற்றிய என் சொந்த மதிப்பீட்டை இங்கே சொல்லிவிட்டே முன்னே செல்ல முடியும். இத்தகைய ஒரு விவாதத்தை ஒருவர் கீழ்நிலையில் எதிர்கொள்வதற்கான வழிமுறை என்பது சொற்களை திரித்து நான் அம்பேத்காரை அல்லது வேறு எவரையாவது அவமதிக்கிறேன் என்று காட்டுவதே. அதைத்தான் பலவருடங்களாக இங்கே அறிவுச்செயல்பாடாகச் செய்து வருகிறார்கள்.

நவீன இந்தியாவின் ஆளுமைகளில் காந்திக்குப் பின் என்னை மிக அதிகமாகக் கவர்ந்தவர் அம்பேத்காரே. காந்திக்கு பின் எவரது எழுத்துக்களையாவது வருடக்கணக்காக பின் தொடர்ந்து வாசித்திருக்கிறேன் என்றால் அது அம்பேத்காரின் எழுத்துக்களையே. அவரது பங்களிப்பை நான் மூன்று நிலைகளில் மதிப்பிடுவேன்

இந்திய மண்ணில் காலூன்றி நின்று இந்தியசிந்தனையையும் பண்பாட்டையும் ஆராயக்கூடிய தன்னம்பிக்கை கொண்ட ஒரு மரபை உருவாக்கிய முன்னோடி என்று நான் அம்பேத்காரை நினைக்கிறேன். அவரது ‘புத்தரும் அவரது தம்மமும்’ அவ்வகையில் ஒரு மாபெரும் செவ்வியல் நூல் என்பதே என் எண்ணம். [தமிழில் பெரியார்தாசன்] என் வரையில் இந்திய சிந்தனைகுறித்த என் ஏராளமான தடுமாற்றங்களை சரிசெய்த நூல் அது. அந்நூலை நேருவின் ‘இந்தியாவைக் கண்டடைதல்’ போன்ற மேலைவாடை வீசும் ஒரு நூலுடன் ஒப்பிட்டால் மட்டுமே அது முன்வைக்கும் இந்திய அணுகுமுறையின் பிரமிக்கவைக்கும் தனித்தன்மை நமக்குப் புரியும். அந்நூலையும் அம்பேத்காரையும் அவ்வகையில் எனக்கு விளக்கியமைக்காக நான் என் குரு நித்ய சைதன்ய யதிக்கு எப்போதும் கடமைப்பட்டவன்

இந்தியப் பண்பாட்டையும் வரலாற்றையும் புறவயமான நவீன ஆய்வுநோக்கில் சமூகவியல், தத்துவப்பரிணாமக் கருத்துக்களைக் கருவிகளாகக் கொண்டு, ஆராய்வதில் முன்னுதாரணமாக அமைந்த மூன்று பேரறிஞர்கள் எம்.என்.ராய், அம்பேத்கார், டி.டி.கோஸாம்பி. [அவர்களை வாசித்திருப்பதனால்தான் அறிஞர் என்ற அடைமொழியை நான் கவனமாகப் பயன்படுத்துகிறேன் ]அவர்களின் கருத்துக்களுடன் முரண்படவும் , முடிவுகளை ஐயப்படவும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஆய்வுமுறையே நவீன மனம் பின்பற்றக்கூடிய ஒன்று. இந்த விவாதத்தின் எல்லைக்குள் அம்பேத்காரின் அந்த மாபெரும் பங்களிப்புகளைப்பற்றி பேச வாய்ப்பு அமையவில்லை.

அம்பேத்காரின் அரசியல் பங்களிப்பு இந்திய சமூக உருவாக்கத்துக்கு மிக முக்கியமானது என்பது என் எண்ணம். இந்திய சமூகம் தலித்துக்களுக்கு இழைத்த வரலாற்றுக்கொடுமையை ஆணித்தரமாக சமூக மனசாட்சிக்கு முன் எடுத்து வைத்தவர் அவர். அதன் மூலம் நாம் நம் தேசத்தை நவீன அரசாகக் கட்டி எழுப்பிய தொடக்ககாலத்திலேயே அதற்கான பரிகாரங்களைச் செய்ய வைத்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அவரைப்போன்ற ஒரு பேரறிஞர் உருவானது இந்தியாவின் நல்லூழ். அவர் தன் போராட்டங்களுக்கு காந்திய வழிமுறைகளையே தேர்வு செய்தார். அதன் மூலம் இச்சமூகம் காழ்ப்பாலும் வன்முறையாலும் அழியாமல் காத்தார்.

அம்பேத்கார் இந்திய சமூகத்தின் பெருமக்களுள் ஒருவர். ஒரு தலித் மட்டுமல்ல, சிந்திக்கும் பழக்கம் கொண்ட எந்த இந்தியனும் அவரை தன்னவராக உணரமுடியும். தன் ஞான வழிகாட்டியாக ஏதேனும் ஒரு தளத்தில் அடையாளம் காணமுடியும். எனக்கு ராஜ்காட் புனித தலமாகும் என்றால் அதேயளவுக்கு மகத்துவம் வாய்ந்த புனிதத்தலமாகவே நவீனகால போதிசத்துவன் உறங்கும் மகாசமாதித்தலமும் இருக்க முடியும். நான் ராஜ்காட்டுக்கு சென்று நின்ற அதே மனநிலையில்தான் அங்கும் நின்றிருக்கிறேன்.

ஆனால் இந்த பெருமதிப்பு அம்பேத்காரை புறவயமாக மதிப்பிட எனக்கு தடையாக அமையக்கூடாது என எண்ணிக்கொள்கிறேன். நான் அம்பேத்காருடன் முரண்படும் இடங்கள் எல்லாமே அவரது அது நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களே. மையப்படுத்தல், மத்திய அதிகாரம், கருத்துக்களை நிர்வாகத்தின் ஆதிக்கம் மூலம் கீழே கொண்டுசெல்லுதல் ஆகியவற்றில் அவருக்கு இருந்த நம்பிக்கை எனக்கு ஏற்புடையதல்ல. அவர்காலகட்டத்து அறிவுஜீவிகளில் அனேகமாக அனைவருமே நம்பியதுதான். நேருவால் தோரோவை புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அம்பேத்கார் அவரது மேதமையால் தோரோவைக் கொஞ்சம் நெருங்கியிருக்கலாமே என்று எண்ணுகிறேன்.

அம்பேத்கார் ஒரு மாபெரும் அறிவுஜீவி. அவ்வகையில் அரசியலுக்கு பிரிட்ட்ஷாரால் கொண்டுவரப்பட்டவர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை மீறி அவர்களின் வெறும் கைப்பாவையாக நின்றுவிடாமல் தன் மக்களுக்கான போராளியாக மாறினார். தனக்கு வரலாறு விடுத்த சவாலை முழுமையுடன் எதிர்கொண்டார். தன் வரலாற்றுப்பாத்திரத்தை நிறைவேறினார். அச்செயலில் அவரது பலம் வெளியானதுபோலவே அவரது பலவீனமும் வெளியாகியது.

அவற்றை நான் இவ்வாறு வரையறைசெய்துகொள்கிறேன். ஒன்று, அம்பேத்கார் எந்நிலையிலும் தன்னை ஒரு தலித் தலைவராக மட்டுமே எண்ணிக்கொண்டார். அந்த தரப்பின் குரலாக மட்டுமே ஒலித்தார். அந்நிலைபாட்டில் இருந்தே பேரங்களில் ஈடுபட்டார். ஒரு தருணத்திலும் அவர் ஒட்டு மொத்த மக்களுக்கான அரசியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அந்த ஒட்டுமொத்தத் தரப்பு எப்போதும் அவருக்கு எதிரிநிலையில்தான் இருந்தது. ஆகவே அம்பேத்காரின் அனைத்துக் கருத்துக்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் குரலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல விவாதங்களை இன்று தலித் அல்லாத ஒருவர் வாசிப்பாரென்றால் அம்பேத்கார் ஒரு மூர்க்கமான ஒற்றைப்படை நிலைப்பாட்டில் நின்றுகொண்டு பரவலான யதார்த்ததை புரிந்துகொள்ள மறுத்து வாதிடுகிறார் என்றே நினைப்பார். அவரது மொத்த விவாதமும் மாற்றுச் சமூகங்கள் மேல் அவர்கொண்ட ஆழமான அவநம்பிக்கையில் இருந்து மட்டுமே உருவாகியிருப்பதாகவும் தோன்றும்.

மேலும் இந்திய சமூகமே தன் நூற்றாண்டுக்கால அடிமைத்தளையில் இருந்து விடுபடுவதற்காகப் போராடும்போது தன் சமூக நலனுக்காக அந்த ஒட்டுமொத்தப் போக்குக்கு எதிரான நிலைபாடு எடுத்தார் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர்தான் இந்திய சமூகத்தில் கல்வியும் பொருளியலும் மலர்ச்சி அடைந்தன என்னும்போது, ஏன் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையில் இன்றுள்ள எல்லா முன்னேற்றங்களும் இந்திய தேசிய சுதந்திரத்தின் விளைவுகள் மட்டுமே என்னும்போது, அம்பேத்கார் எதற்கு எதிராக போரிட்டார் என்ற வினா அவன் நெஞ்சில் எழும்

இந்த கோணத்தை விரிவாக்கியே இன்று அம்பேத்கார் மீதான கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் இக்கோணத்தில்தான் திரட்டப்படுகின்றன. நான் இந்தத் தரப்பை காந்தி மீதான தலித்தியர்களின் அவதூறுகளுக்கு கொடுக்கும் அதே மதிப்பை அளித்துக் குப்பைக்கூடைக்குத்தள்ள தயங்க மாட்டேன்.

அம்பேத்கார் உருவாகி வந்த சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். நூற்றாண்டுக்கால சுரண்டல் மற்றும் இழிவில் இருந்து மெல்லக் கண்விழித்து உரிமைகளுக்காக எண்ணமிடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரல் அவர். அந்தக்குரல் அன்று மிகமிக சிறுபான்மையினரால் எழுப்பப்பட்டது. ஆகவே எத்தனை உக்கிரமாக அது ஒலிக்கிறதோ அந்த அளவுக்கு மட்டுமே அது பயனுள்ளதாக இருக்க முடியும்.

ஒருசமூகத்தின் பரிணாம மாற்றம் என்பது அதன் பல்வேறு தரப்புகளின் முரணியக்கம் மூலம் நிகழும் என்று தெரிந்த ஒருவருக்கு அம்பேத்கார் அவரது தரப்பை தீவிரமாக முன்வைத்ததன்மூலம் ஆக்கபூர்வ விளைவே உருவானது என்று ஊகிக்கச் சிரமம் இருக்காது. இந்திய சமூகம் மேம்பட்ட நீதியுணர்வுடன் இருப்பதற்கு அவரது பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

தன் உக்கிரத்தால், அதை விரிவாக விளக்கும் சமரசமற்ற வாதத்திறனால், அவர் காந்தியின் கருத்தியல்நிலைபாட்டையே மாற்றியமைத்தார். அவரது மனசாட்சியை தன் தரப்பின் பிரதான போராளியாக சேர்த்துக்கொண்டார். அவ்வகையில் காங்கிரஸ் உருவாக்கிய மாபெரும் ஹரிஜன் இயக்கத்துக்கும் அது பிரச்சாரம் செய்த நீதியுணர்வுக்கும் அம்பேத்காரே காரணகர்த்தா. அவரில்லாமல் இந்திய வரலாறு இல்லை.

அம்பேத்காரின் அரசியல் ஆசைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. அம்பேத்கார் பதவிகளை, அதிகாரத்தை நாடியவர். ஆனால் அது அவருக்காக அல்ல என்பதை அவரது தனிவாழ்க்கையை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். வாசிப்பதிலும் ஆய்வுசெய்வதிலும் தவிர பிற எதிலுமே அவர் மெய்மறந்து ஈடுபட்டவரல்ல. அவருக்கு தாழ்த்தப்பட்டோர் அரசியல் சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் அவர் கோஸாம்பியைப்போல ஒரு பேராசிரியராக இருப்பதை மட்டுமே விரும்பியிருப்பார்.

அம்பேத்கார் பதவிகளையும் அதிகாரத்தையும் விரும்பியது மேலிருந்து அதிகாரம் மூலம் சமூக மாற்றத்தை கீழே கொண்டுசெல்ல முடியும் என்ற அவரது நம்பிக்கையினாலேயே. அதற்காகவே அவர் அரசியலை நாடினார். மக்களிடையே அரசியல்மூலம் உருவாக்கும் கருத்தியல் மாற்றத்தை அவர் பெரிதாக நம்பியவரல்ல. ஆனால் அரசியல் மூலம் அவர் நாடிய அதிகாரத்தை அவர் அடையவேயில்லை. அவர் அடைந்த ஆகப்பெரிய பதவி இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் பதவியே. அதை பயன்படுத்திக்கொண்டு அவரால் செய்ய முடிந்ததன் அதிகபட்சத்தை அவர் செய்தார். அந்தப்பதவி அவருக்கு அவரது எதிர்தரப்பான காங்கிரசால் அளிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மை எத்தனை மழுப்பினாலும் திட்டவட்டமாக கண்முன் நிற்கிறது

.

ஜனநாயகமும் அம்பேத்காரும்

அம்பேத்காரின் ஆளுமையில் உள்ள மிக முக்கியமான குறைபாட்டை அவரது ஆதரவாளர்களே எப்போதாவது விவாதிக்கும் காலம் வரக்கூடும். அவர் எந்த அளவுக்கு ஜனநாயகத்தை புரிந்து கொண்டிருந்தார் என்ற கேள்விதான் அது. அம்பேத்கார் பதவி வெறியர் அல்ல. அவர் தன்மைய நோக்கு கொண்ட அதிகாரவிரும்பியும் அல்ல. உறுதியான ஜனநாயகவாதி என்பதிலும் ஐயமில்லை

ஆனால் அவர் ஜனநாயகத்தின் நடைமுறை இயல்பை உள்வாங்கிக் கொண்டிருந்தாரா என்பது ஐயத்திற்குரியதே. ஜனநாயகம் என்பது தகுதியுடையவ்ர்களின் அதிகாரம் அல்ல, பெரும்பான்மையின் அதிகாரம். அதில் தகுதிகொண்டவர்கள் பெரும்பான்மைக்குக் கட்டுப்பட நேரலாம். சரியானது பெரும்பான்மையால் நிராகரிக்கப்படலாம். ஜனநாயகத்தில் எந்தக்கருத்தும் ஒரு தரப்பு மட்டுமே. சரியான கருத்தும் தவறான கருத்தும், முற்போக்கான கருத்தும் பிற்போக்கான கருத்தும்.

ஒரு கருத்து பிற்போக்கானது என்பதற்காக அது நிராகரிக்கபப்டும் என்றால் அது ஜனநாயகமே அல்ல. அதன் குரலும் ஒலித்தாகவேன்டும். அதுவும் பரிசீலிக்கப்பட்டாக வேண்டும்.ஜனநாயகம் முற்போக்கானது, ஆனால் அதன் விளைவுகல் எப்போதும் முற்போக்கானவையாக இருக்கவேன்டும் என்றில்லை.அந்த தரப்புகள் நடுவே உள்ல முரணியக்கமே முன்னகரும் சக்தி

ஆகவே ஜனநாயகத்தில் எதிர்க்கப்படாத ஒரு கருத்து இருக்க இயலாது. விவாதமில்லாது எதுவும் நிகழாது. அதனாலேயே ஜனநாயகத்தில் எந்த ஒரு மாற்றமும் அதற்கான வளர்சிதை மாற்றம் மூலம் மெல்லவே நிகழமுடியும். ஜனநாயகத்தின் செயல்பாடுகளை பொறுமையுடன், மாற்றுத்தரப்பின் நியாயங்களை புரிந்துகொள்ளும் சமநிலையுடன், அணுகுபவரால் மட்டுமே வெற்றிகரமாக நிகழ்த்த முடியும். தத்துவ சிந்தனையாளரும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் தரப்புமான அம்பேத்காரால் ஜனநாயகத்தின் முரணியக்கத்தை அதன் விரிவுடன் உள்வாங்க இயலவில்லை. அவரது கோபங்கள், கசப்புகள், காந்தி உட்பட பிறர் மீது அவர் கொட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் காரணம் அதுவே.

முக்கியமான ஓர் உதாரணம் மூலம் இதைப்பற்றிப் பேசலாம். நேருவும் அம்பேத்காரும் இணைந்து 1950-51 ஆம் ஆண்டுகளில் இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவந்து அதை சட்டமாக ஆக்க முனைந்தார்கள். 1950ல் இந்து குடிமை மசோதாக்கள் [ Hindu Code Bills] என்றபேரில் நான்கு சட்டங்களுக்கான முன்வரைவை அம்பேத்கார் முன்வைத்தார். நேரு அம்பேத்கார் இருவருக்கும் அதன் உட்கூறுகளில் நூறுசதவீத ஒருமித்த கருத்து நிலவியது.

அதற்கு முன்பு இருந்த பிரிட்டிஷ் இந்து குடிமைச்சட்டத்தில் இந்திய நடைமுறைகள் தொகுக்கப்பட்டிருந்தன. மானுடமேன்மை சார்ந்த மைய வழிகாட்டுதல்கள் இருக்கவில்லை, நிர்வாக வழிகாட்டல்கள் மட்டுமே இருந்தன. அம்பேத்கார் அச்சட்டத்தை நவீன மானுட உரிமை நோக்கின் அடிப்படையில் மறு ஆக்கம்செய்து தொகுத்திருந்தார். உண்மையில் அந்த மசோதா இந்து சமூகத்தைப்பொறுத்தவரை ஒரு பிரம்மாண்டமான முன் அடிவைப்பு. அதை தொகுத்தளித்தமைக்காக இந்து சமூகம் என்றென்றும் அம்பேத்காருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

மறைந்த வழக்கறிஞர் நண்பர் சோதிப்பிரகாசம் அவர்களுடன் அச்சட்டத்தின் பல பகுதிகளை படித்து விவாதித்திருக்கிறேன். மூன்றுவகைகளில் அச்சட்டம் மகத்தானது. ஒன்று அதன் அற்புதமான இலட்சியவாத நோக்கு. அவ்வகையில் பிரெஞ்சு,அமெரிக்க குடிமைச் சட்டங்களின் மகத்தான மானுடக்கனவுகளை ஒத்தது அது. மானுட சமத்துவம், அடிப்படை அறம், ஒழுக்கம் என்ற மூன்று அம்சங்களையும் அது தன் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக ஒவ்வொரு நுண்ணிய விஷயத்தையும் அது கணக்கில் கொண்டிருக்கும் விதம். மூன்றாவதாக அதன் அற்புதமான ஆங்கில நடை. பலசமயம் அது ஒரு மானுட சாசனம் போலவே ஒலிக்கிறது.

ஆனால் அத்தகைய ஒரு சட்டத்தை அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதாக நிறைவேற்றிவிடமுடியாது என்பதே இந்திய யதார்த்தம். ஏன் என்றால் பாரம்பரியமான இந்து சட்டங்கள் என்பவை மிகமிகச் சிக்கலானவை. மேல்தளத்தில் இந்து தர்மசாஸ்திரங்களின் ஒருங்கிணைந்த நீதி இருக்கும். அதேசமயம் கீழ்த்தளத்தில் பழங்குடிச்சட்டங்களும் , சாதி ஆசாரங்களும் நிலவும். ஒவ்வொரு தளத்திலும் இந்த முரணியக்கம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தர்ம சாஸ்திரங்களே பலவகையானவை.

ஆகவே இந்தியாவில் பிராந்தியத்துக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதிதான் நிலவியது. தமிழகத்துச் சாதிகளின் விவாகரத்து முறையை மட்டும் எடுத்துப்பார்த்தால் தெரியும். தேவர் போன்ற போரிடும் சமூகங்களில் பெண் நினைத்தால் உடனே விவாகரத்து உண்டு. பிராமணர், வெள்ளாளர் போன்றவர்களில் பெண் நினைத்தால் அனேகமாக விவாகரத்தே கிடையாது. இந்துசட்டம் அமலாகி அரைநூற்றாண்டுகழிந்த பின்னரும் பல இடங்களில் சாதிப்பஞ்சாயத்துகளில் இந்த பழங்குடிச்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்த மாபெரும் இடியாப்பச்சிக்கலை இருபதாம் நூற்றாண்டின் மானுட உரிமை, சமத்துவம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சீர்திருத்த முயன்றனர் அம்பேத்காரும் நேருவும். ஏற்கனவே நேருவுக்கு கட்சிக்குள் மதச்சார்புகொண்ட மரபுவாதிகளின் கடும் எதிர்ப்பு இருந்தது. காந்தியின் ஆசி ஒன்றே அவரை காப்பாற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் நேருவை வீழ்த்த இந்து குடிமைச்சட்ட சிபாரிசுகளைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். 1952 தேர்தலில் அவர்கள் அதை இந்தியா முழுக்கப் பிரச்சாரம் செய்தார்கள்.

அந்தத் தரப்பில் காங்கிரஸின் பெருந்தலைவரும் இந்திய ஜனாதிபதியாக ஆகவிருந்தவருமான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் இருந்தார். புருஷோத்தம் தாஸ் தாண்டன் போன்றவர்கள் கட்சிக்குள் ஒரு தீவிரக்குழுவை உருவாக்கினார்கள். ஆச்சாரிய கிருபளானி போன்றவர்கள் தனிக்கட்சி உருவாக்கினார்கள் . ஒரு வகையில் அதுவும் ஜனநாயகமே. பல ஆயிரம் வருடங்களாக நிலவிவந்த ஆசாரங்களை மாற்றியமைக்கையில் முன்னரே நிலவிவரும் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்யும். அதன்பின்னரும் எல்லா சமூக சீர்திருத்த நோக்குள்ள சட்டங்களுக்கும் அமைப்பின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பதும் வருவதும், பழமைவாதக் கருத்தும் முற்போக்கு கருத்தும், முரண்பட்டு விவாதித்து முன்னகரும் நகர்வே ஜனநாயகத்தின் மிகச்சிறந்த வழிமுறை.

அன்று எதற்கெல்லாம் விவாதம் நடந்தது என்றுபார்த்தால் இந்திய சமூகத்தின் நிலை புரியும். அம்பேத்காரின் இந்து குடிமைச்சட்டத்தில் இருந்த பலதாரத்தடை இந்து சமூகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், அது மதச்சுதந்திரத்தின் மீதான அடி என்றார்கள். சுவாமி கற்பாத்திரி மகராஜ், பிரபுதத் பிரம்மசாரி போன்றவர்களின் தலைமையில் இந்துத்துவ சக்திகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் ஜீவனாம்சம் ஆகிய சட்டக்கூறுகள் நாடெங்கும் நிலஉடைமைச்சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நடுவே கொந்தளிப்பைக் கிளப்பின. சொத்து பிரிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

நேருவும் அம்பேத்காரும் வசைபாடப்பட்டார்கள். இந்து குடிமைச் சட்ட எதிர்ப்பாளர் தரப்புக்கு கணிசமான ஆதரவு இருந்தது, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும். ஆகவே நேருவால் அம்பேத்கார் அமைத்த வடிவில் அச்சட்டத்தை அன்று கொண்டுவர முடியவில்லை. நேருவின் ஆதரவு தனக்கு இருப்பதை உணர்ந்தாலும் அவரால் தான் கைவிடப்பட்டதாக எண்ணி பொறுமையிழந்தார் அம்பேத்கார். 1951ல் தன் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்.

இந்த உதாரணம் அம்பேத்காரின் ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ளாத மனநிலைக்கு உதாரணம். பழமைவாதிகளாக இருந்தாலும் அவர்களும் மக்களில் ஒரு தரப்பே. அவர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சட்டத்தை அவர்களின் சம்மதமில்லாமல் அவர்கள் மேல் மேலிருந்து திணிக்க முடியாது. எந்த ஒரு ஜனநாயகச்செயல்பாடும் அதன் முரண்படும் சக்திகள் நடுவே உள்ள ஒரு புரிதல் வழியாகவே நடைமுறைக்கு வரமுடியும். நேரு மூர்க்கமாக தன் தரப்பை அவர்கள் மேல் சுமத்த விரும்பவில்லை. மேலும் விவாதிக்க விரும்பினார். ஆனால் அதைக்கூட தாங்கிக்கொள்ளாமல் பதவி விலகினார் அம்பேத்கார்.

1952 தேர்தலில் இந்து குடிமைச்சட்டம் நேருவுக்கு எதிராக பெரும் ஆயுதமாக நாடெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் தேர்தலில் நேரு மிகப்பெரும்பான்மை பெற்று வென்று வந்தார். அதற்கு அவருக்குப் பயன்பட்டது காந்தியின் பெயரே. புருஷோத்தம்தாஸ் தாண்டன் போன்றவர்கள் காந்திக்கு எதிரான மதவாதக்கூட்டணியில் நிற்பதாகவும் தான் காந்தி சொன்ன விழுமியங்களைச் சார்ந்து நிற்பதாகவும் சொல்லி ஓட்டுகேட்டார் நேரு. அதன் விளைவாக தேசமே அவருடன் நின்றது. வென்றுவந்ததும் தான்டனை மரியாதையாக அரசியல் ஓய்வுக்கு அனுப்பினார் நேரு.அதன் பின்னர் கட்சியில் அவருக்கு எதிரான முணுமுணுப்பே எழாமல் ஆகியது.

அம்பேத்கார் எழுதியபடியே 1955,56ல் இந்து குடிமை மசோதாவை ஐந்து தனிச்சட்டங்களாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார் நேரு.. இந்து திருமணச்சட்டம் [ Hindu Marriage Act 1955] இந்து வாரிசுரிமைச் சட்டம் [Hindu Succession Act 1956] இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம் [Hindu Minority and Guardianship Act 1956] இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் [ Hindu Adoptions and Maintenance Act 1956] அச்சட்டங்கள் தன் கண்ணெதிரே தான் எழுதியவடிவிலேயே நிறைவேறுவதை அம்பேத்காரே கண்டார். சட்டமேல்சபை உறுப்பினராக எதிர்தரப்பில் அமர்ந்து ஒரு சொல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

”இந்தச்சட்டத்தில் கண்டுள்ள விஷயங்களின் விரிவும் புதுமைப்போக்கில் காட்டப்பட்டுள்ள தைரியமும் நெப்போலியனின் சட்டத்துடன் மட்டுமே ஒப்பிடுவதற்குரியவை” என்று பிரிட்டிஷ் அறிஞர்களால் பாராட்டப்பட்டது இந்து குடிமைச்சட்டம். [ இந்தச் சட்டம் நிறைவேறிய சித்திரத்தை முழுமையாக ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப்பின் இந்தியவரலாறு’ நூலில் பார்க்கலாம். கிழக்கு பிரசுரம்] அம்பேத்காருக்கு பின்னர் அஞ்சலி செலுத்திய நேரு ”அவர் இந்து சமூகத்தை அடக்கிவைக்கும் சக்திகளுக்கு எதிரான புரட்சியின் சின்னம் .இந்து சட்ட சீர்திருத்த விஷயத்தில் அவர் காட்டிய ஆர்வத்துக்கும் செய்த தொண்டுகளுக்கும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். பெருமளவுக்கு அவர் எழுதியபடியே அந்தச் சட்டம் நிறைவேறியதை அவர் நேரில் கண்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஆனால் அதற்கு பத்தாண்டுக்காலம் தேவைப்பட்டது. பலநூறுபாராளுமன்ற உறுப்பினர்கள், சிந்தனையாளர்கள், பழமைவாதிகள், புரட்சியாளார்கள், மதகுருக்கள், சமூகச்செயல்வீரகள் அதைப்பற்றி விவாதித்து விவாதித்து பொதுக்கருத்தை எட்டவேண்டியிருந்தது. அதுவே ஜனநாயகத்தின் பாதை. ஆனால் அதற்குள் அம்பேத்கார் மனம் கசந்து வெளியேறி, நேருவை வசைபாடி, அவருக்கு எதிரான அணியில் சென்று அமர்ந்திருந்தார். அதுதான் அம்பேத்காரின் குணச்சித்திரம்.

இந்து சட்டம் மேலும் மேலும் திருத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு அம்பேத்கார் அளித்த இலட்சியக்கனவை நெருங்க மேலும் பல வருடங்கள் தேவைப்பட்டன. அதன் பல கூறுகள் வருடக்கணக்காக விவாதித்த பின்னரே ஏற்கப்பட்டன. பல துணைப்பகுதிகளை இந்திய மாநில அரசுகள் சட்டங்கள் வழியாக ரத்து செய்து வைத்திருந்தன. சில இடங்களில் சமூக அமைப்பே தலைகீழாகக் கவிழ்ந்து பெரும் மானுடச்சிக்கல்கள் உருவாயின. உதாரணம் கேரளத்தில் இருந்த பெண்வழி நிலஉரிமையை ஒட்டுமொத்தமாக கவிழ்த்துவிட்டது அச்சட்டம். அதன் விளைவுகள் சீரடைய மேலும் பதினைந்து வருடம் ஆகியது.

அம்பேத்கார் இந்து சட்டத்தை மாற்றியமைத்தார். அதற்கு எழுந்த எதிர்ப்பை இன்று அம்பேத்காருக்கு எதிரான எதிர்ப்பாக சொல்லிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர் இஸ்லாமிய ‘சரி அத்’ சட்டங்களைத் தொடவில்லை. அதன் சில அம்சங்கலைப்பற்றிய குறித்த மிகமிகக் கடுமையான கண்டனங்கள் அவருக்கு இருந்தன. ஆனால் அச்சமூகம் அதை ஏற்காது என அவர் அறிவார். ஏன் கிறித்தவ குடிமைச்சட்டமேகூட மேலும் முப்பது வருடம் கழிந்து பல்வேறு மத அமைப்புகளின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் நடைமுறைக்கு வர முடிந்தது. அரசியல் சட்ட வரைவுக்குழுவில் சரி அத் சட்டங்களை அப்படியே இஸ்லாமிய சட்டமாக ஆக்கியமைக்காக அம்பேத்காருக்கு இஸ்லாமிய உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்கள்!

அம்பேத்கார் தன்னை இந்து அல்ல என்று அறிவித்து பின்னர் மதம் மாறியவர். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லும் இன்றைய சிந்தனையாளர்கள் இந்த ஒருவிஷயத்தையே மீள மீள மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால் அவர் இந்து என உள்ளூர உணர்ந்திருந்த காரணத்தால்தான் இந்து சட்டத்தை மறு அமைப்புசெய்தார். இஸ்லாமிய கிறித்தவச் சட்டங்களில் அவரால் கையை வைக்க முடியவில்லை. அவரே அதைச் சொல்லியும் இருக்கிறார்.

அவர் என்ன எண்ணினாலும் அவரை இந்து என்றே இந்து சமூகம் அங்கீகரித்தது. தன் மரபின் ஈராயிரம் வருட சட்டங்களை அவர் மாற்றியமைத்தபோது ஒரு அன்னியன் வந்து எபப்டி தன் சட்டத்தை தீண்டலாம் என்ற குரலே எழவில்லை. மிகமிகக் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் வந்தன. குல ஆசாரங்கள் கெடுகின்றனவே என்று மக்கள் தெருவிலிறங்கினார்கள். ஆனால் இதே சீர்திருத்தங்களை ஒரு முஸ்லீம் அல்லது கிறித்தவர் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் அன்று அந்த இந்து வெறியர்கள்கூட அம்பேத்காரை இந்து என்றே பார்த்தார்கள் என்று புரியும். இன்றும் அதே எண்ணம்தான் அவரைப்பற்றி இந்திய மனத்தில் உள்ளது. என்றும் அது அப்படித்தான் இருக்கும்.

இன்று யோசித்தால் ஆச்சரியம்தான். இரண்டாயிரம் வருடக்கால குடிமைமுறை, பல்லாயிரம் சாதிகளின் பல்லாயிரம் ஆசாரங்களினால் ஆன நடைமுறை பத்தே வருடங்களில் புரட்சிகரமாக தலைகீழாக்கப்பட்டது! இதற்கிணையான நிகழ்வே உலகில் குறைவுதான். முப்பதுகோடிக்குமேல் இந்துக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டத்தை அவர்களில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட சாதியின் நாயகர் உருவாக்கி அளித்தார். அதற்கு இந்திய சமூகத்தின் வாக்கை நேரு பெற்றபின் அது சட்டமாகியது

ஜனநாயகத்தை புரிந்துகொண்ட எவருமே இதுதானே இயல்பான நடைமுறை என்று எண்ணுவார்கள். பல்லாயிரமாண்டு வழக்கங்களை மாற்றிக்கொண்டு ஒரு சமூகம் புதிய காலகட்டத்திற்குச் செல்லும்போது எதிர்ப்புதரப்புகள் எழுவதில் என்ன தவறிருக்கிறது? அவர்களை விவாதித்து சமரசம்செய்து பொதுப்புரிதலுக்குக் கொண்டு வருவதல்லவா ஜனநாயகம்?

ஆனால் 1951 முதல் 1956ல் இந்து சட்டம் நிறைவேறும்வரை நேருவைப்பற்றி அம்பேத்கார் சொன்ன விமரிசனங்களை இன்று வாசித்துப்பார்த்தால் ஆச்சரியமும் வருத்தமுமே மிஞ்சுகிறது. நேருவை சாதியவாதிகள், மதவாதிகள் முன் மண்டியிட்டவர் என்கிறார் அம்பேத்கார். நேருவின் தனிப்பட்ட நாணயம், நல்லெண்ணம் அனைத்தையுமே ஐயப்படுகிறார்.

அம்மேற்கோள்களைப் பிடுங்கி தொகுத்து நேரு உண்மையில் இந்துத்துவக் கையாள் என்று இப்போது சிலர் வாதிடும் அபத்தமும் நிகழ்கிறது. (பார்க்க எஸ்.வி ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியா’ என்ற கீழ்த்தரமான அவதூறு நூல்.) தர்மசாஸ்திரங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு வகுப்பின் தலைமகனிடம் அச்சமூகத்துக்கான புதிய தர்மசாஸ்திரத்தை அமைக்கும் பொறுப்பை அளித்த நேருவை மதவாதி என்று நம்பவைக்க நாளை தலித்தியர்களும் கிளம்பி வரலாம்

அம்பேத்காரின் இந்த மனநிலையை அவரது நவீனத்துவம் சார்ந்த அணுகுமுறையை வைத்துத்தான் விளக்கிக்கொள்ள வேண்டும். அன்று உலகமெங்கும் பிரபலமாக இருந்தது நல்லெண்ணம் கொண்ட சர்வாதிகாரம் என்ற கவற்சிகரமான கருத்தே. துருக்கியின் முஸ்தபா கமால் பாஷா உலகம் எங்கும் பேசப்பட்டார். ஸ்டாலின் சீர்திருத்தங்கள் உலகமெங்குள் உள்ள முற்போக்காளர் நடுவே பெரும் கவற்சியை அளித்திருந்தன. ஆட்சியைப் பிடித்தபின் மேலிருந்து அதிகாரம் மூலம் சீர்திருத்தங்களை எளிதில் நடைமுறைப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையே உலகை ஆண்டது.

அந்த நம்பிக்கையை தானும் கொண்டிருந்தார் அம்பேத்கார். கிராமசுயராஜ்யம் குறித்த அரசியல் சட்ட நிர்ணயக்குழு விவாதங்களில் அரசதிகாரத்தைக் கொண்டு இறுகிப்போன கிராமங்களை உடைத்தெறிவதைப்பற்றி பேசுகிறார். மாற்றங்கள் மக்களின் மனநிலையில் உருவாகவேண்டும் என்றும், அவை ஜனநாயகபூர்வமாக உருவாகவேண்டும் என்றால் கருத்துக்களின் முரணியக்கம் நடந்து மெல்லமெல்லத்தான் மாற்றம் கண்ணுக்குப்படும் என்றும் அவர் நம்பவில்லை. அத்தகைய மாற்றமே அழிவுகளை உருவாக்காமல் என்றும் நீடிக்கும் விளைவுகளை உருவாக்கும் என்பதை வரலாறு காட்டியது.

ஆனால் அம்பேத்கார் மிகச்சீக்கிரத்திலேயே பொறுமையிழந்தார். பல்லாயிரம் வருட மனநிலைகளும் வாழ்நிலைகளும் கண்ணெதிரே புரண்டு மறிய வேண்டும் என எதிர்பார்த்தார். அரசாங்கம் அதை இரும்புக்கையால் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும், வேண்டுமென்றேதான் செய்யவில்லை என்று எண்ணினார். ஆகவே கசப்பும் கோபமும் கொண்டார். அவை அவரது கடைசிக்காலத்துச் சொற்களில் வந்தபடியே இருந்தன. அக்கசப்பையே இன்று தலித் சிந்தனையாளர் சிலர் அள்ளி தங்கள் பிளவுவாதக் காழ்ப்புகளுக்கு ஆதாரமாக ஆக்குகிறார்கள்.

பூனா ஒப்பந்தமும் இந்த வெளிச்சத்தில் பார்க்க வேண்டியதே. ஒரு சமூக மாற்றத்தில் சமூகத்தின் பங்கை முற்றாக நிராகரித்து, மேலிட அதிகாரத்தை பேரங்கள் மூலம் அடைந்து தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்து விடலாமென எண்ணினார் அம்பேத்கார். அந்தச்செயல்பாட்டில் ஒரு ஜனநாயகம் அளிக்கும் தடைகளை, மறுதரப்புகளை, அவர் புரிந்துகொள்ளவில்லை. அவற்றைக் கண்டு அவர் பொறுமையிழந்தார். அவற்றை ஆயிரமாண்டுக்காலம் தன் வகுப்புக்கு எதிராக நடந்த சதியின் பகுதியாக விளங்கிக்கொண்டார். அவர் மக்களிடையே இறங்கி வேலைசெய்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த மனநிலை.

பூனா ஒப்பந்தத்திலும் சரி, காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, அம்பேத்கார் வைத்த கடும் விமரிசனங்கள் சமூக மாற்றத்தின் முரணியக்கத்தை அவர் புரிந்து கொள்ளாமல் பொறுமை இழந்ததையே காட்டுகின்றன. ஒருவேளை அம்பேத்கார் இந்திய அளவில் தன் சமூகத்தை ஒருங்கிணைக்க ஒரு கட்சியை ஆரம்பித்து மக்களிடையே நேரடியாக சென்று செயல்படுபவராக இருந்திருந்தால் அவர் அதைப் புரிந்து கொண்டிருப்பார். தமிழ்நாட்டுப் பள்ளர் வீட்டுத் திண்ணையில் சக்கிலியரை அமரச்செய்யவே அவருக்கு முப்பதாண்டுக்கால பொறுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.

ஏடுகளின் வழியாக இலட்சியக் கனவுகளை உருவாக்கியவராக இருந்தார் அம்பேத்கார். இலட்சியவாதிகளுக்குரிய தீர்க்கதரிசிகளுக்குரிய இறுதிக்காலம் அவருக்கும் வாய்த்தது. பொறுமையிழந்தவராக, கசப்படைந்தவராக, தனிமைப்பட்டவராக இருந்தார். அவரது எதிர்பார்ப்புகளுக்கும் நடைமுறைக்கும் இடையே இருந்த மாபெரும் வேறுபாடு அவரை துயரத்தில் ஆழ்த்தியது. அது காந்தியும் சந்தித்த முடிவுதான். அவர்கள் இருவரின் வாழ்க்கைகள் இணைகோடுகள் போல.

அம்பேத்காரின் விமரிசனங்களும் எதிர்விமரிசனங்களும்

ஏன் அம்பேத்கார் அரசியலில் தோற்றார்? அவர் அறிவுஜீவி என்பதனால்தான். அறிவுஜீவிகள் அல்லது தத்துவ சிந்தனையாளர்கள் நேரடியாக அரசியலில் வெல்ல முடியாதென்றே நான் எண்ணுகிறேன். எளிய மக்கள் அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரும் தடை இருக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்காரைப்போலவே அசாதாரண மேதையான எம்.என்.ராய். மக்கள் இயக்கங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை நேரடியாகவே ஐரோப்பிய- ருஷ்ய கம்யூனிஸ்டுகளிடமிருந்து பெற்றவர். மாபெரும் சாகசக்காரர். ”கீழைநாட்டில் இருந்து வந்த மேதை” என்று லெனினால் பாராட்டப்பட்டவர். ஆனால் இந்திய அரசியல் சூழலில் அவரது ராடிகல் ஹ்யூமனிஸ்டுக் கட்சி ஒரு பெரும் தோல்வி.

மக்களிடையே செல்லும் அறிவுஜீவி அரசியல்வாதிகள் இன்னொரு மக்கள்தலைவரின் தோளில் ஏறிச்சென்றால்தான் சென்றுசேர முடியும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இ.எம்.எஸ். மக்கள்தலைவரான ஏ.கே.கோபாலன் இல்லையேல் அவரை சாதாரண மக்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். காந்தி இல்லையேல் ஒருபோதும் நேருவுக்கு மக்களாதரவு உருவாகியிருக்காது. ஒருவேளை கல்வி வளர்ச்சி உள்ள முதல் உலகத்தில் நிலைமை வேறாக இருக்கலாம்.

காந்தி மக்கள்தலைவராக ஆனது ஏன் என்றால் அவரது மொழி அறிவுஜீவியுடையதல்ல என்பதனாலேயே. காந்தியை ஓர் அறிவுஜீவி என்று சாதாரண அர்த்தத்தில் சொல்லிவிட முடியாது. அவருக்கு அம்பேத்கார் அல்லது எம்.என்.ராய் போல விரிவான வரலாற்றுப் புரிதலோ சமூகப்பரிணாமம் குறித்த கொள்கைகளோ இருக்கவில்லை. அவரால் தன் தரப்பை ஒருபோதும் தர்க்கபூர்வமாக விளக்கவும் முடிந்ததில்லை. காந்தி தன் அபாரமான உள்ளுணர்வாலும், நடைமுறை விவேகத்தாலும், புறவயமான ஆராய்ச்சிமனப்பான்மையினாலும் சமூக, அரசியல் தரிசனங்களை அடைந்த தத்துவஞானி. அவற்றை நடைமுறைவாழ்க்கையாக முன்வைக்க முயன்ற முயன்ற கர்ம யோகி. அவரது மொழி தர்க்கம் அல்ல படிமங்களே. அப்படிமங்கள் மிக எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்குச் சென்று சேர்ந்தன.

அம்பேத்கார் அவரது அரசியல் தோல்விகளால் கடைசிக்காலத்தில் ஆழமான மனச்சோர்வை அடைந்தார். குறிப்பாக அரசியல்நிர்ணயசபையில் இருந்து விலகிக் கொண்டபின்பு. அத்துடன் அவருக்கு தூக்கமின்மையும் மனச்சோர்வுநோயும் இருந்தது. அவருக்கிருந்த நீரிழிவுடன் அது இணைந்துகொண்டது. உடல்நலம் குறித்து கவலையே படாமல் அறிவியக்கத்தில் மட்டுமே மூழ்கி வாழும் பழையபாணி அறிவுஜீவி அவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகச்சிந்தனையாளர்களின் வழித்தோன்றல் அவர். அவர்கள் அனைவருமே அடைந்த அந்த மரணமே அவருக்கும் வாய்த்தது.

அரசியல் வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் அம்பேத்கார் அவரது தகுதிக்கேற்ற அரசியல் வாழ்க்கை கிடைக்கவில்லை என எண்ணியிருந்தார். அது உண்மை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களை அவர் அதற்காக மனச்சோர்வுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரை கடைசிநிமிடம் வரை ஆதரித்து நின்ற நேருவைக்கூட அவர் குறைசொல்லியிருக்கிறார். காந்தியையும் குறைசொல்லியிருக்கிறார். இரட்டை வாக்குரிமை கிடைத்திருந்தால் தனது கட்சி ஒரு வலிமையான அமைப்பாக ஆகியிருக்குமோ என அவர் எண்ணியிருக்கலாம். அவரது கசப்பை அப்படித்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்.

அம்பேத்காரின் கசப்புகளை நாம் இன்று தேசியப்பிரச்சினையாக ஆக்கியிருக்கிறோம். ஆனால் அவர் காந்திபோல என்றாவது அதிகாரத்தின் சின்னமாக வருவாரென்றால் அவர்மீதான கசப்புகளும் கண்டிப்பாக முன்னணிக்கு வரும். அவற்றை அறிவது இப்பிரச்சினையின் மாற்றுமுகங்களை உணர்வதற்கு உதவும்.

இந்திய அரசியல் நிர்ணயசபையின் தலைவராக அமர்ந்து முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இருந்துவந்த தனித்தொகுதிச் சலுகைகளை முற்றாகவே ரத்து செய்தவர் அம்பேத்கார். அரசியல் நிர்ணய சபையில் பி.பாக்கர் பகதூர் என்ற உறுப்பினர் இஸ்லாமியருக்கு பிரிட்டிஷார் அளித்துவந்த தனிவாக்குரிமைச்சலுகை தொடரவேண்டும் என்று கோரியபோது அம்பேத்கார் உள்ளிட்டவர்கள் அதை நிராகரித்தார்கள். அம்பேத்கார் வயதுவந்தோர் வாக்குரிமை அளிக்கப்பட்டுவிட்டமையால் அதற்கான தேவை இல்லை என்று அவர் வாதிட்டார்.

ஆனால் அவர் தலைமைதாங்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எல்லாவகையான சலுகைகளையும் காங்கிரஸ் அளித்ததை அம்பேத்கார்பெற்றுக்கொண்டார். இது அவரது பாரபட்ச நோக்கையும் சுயநலத்தையும் மட்டுமே காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக டார்ஜிலிங் போராட்டம் உருவானபோது கூர்க்காக்களின் தலைவரான சுபாஷ் கிஷியாங் அதை குறிப்பிட்டிருக்கிறார். மலைவாழ் மக்களான கூர்க்காக்களுக்கு இந்திய அரசு சலுகைகளை வழங்கவில்லை. முன்பு பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்திருந்த இரட்டை வாக்குரிமை அல்லது தனித்தொகுதி கூட அம்பேத்காரால்தான் இல்லாமலாக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது மகாவீர் தியாகி என்ற காந்தியவாதி தாழ்த்தப்பட்ட சாதிகளிலேயே எல்லாரும் சமம் அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொன்னார். அவர்களில் ஒப்புநோக்க முன்னேறிய தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி,பதவி இரண்டிலும் எல்லா வாய்ப்புகளையும் பெறும்போது அவர்களால் கீழ்வகுப்பாராக கருதப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எதையுமே அடையாமல் போகலாம் என்றார். ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சாதிவாரியான உள் ஒதுக்கீடு அல்லது அதற்கான வழிகாட்டு நெறி இருக்கலாம் என்றார்.

ஆனால் அம்பேத்காரை அந்தக்கோரிக்கை எரிச்சலூட்டியது. அவர் அந்த வாதத்தை தன் வாதங்களால் முறியடித்தார். அப்படி ஒரு உள் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு அழிய வழிவகுக்கும் என்றும் எண்ணினார். அதாவது பூனா ஒப்பந்தத்தைப்பற்றி பேசும்போது காந்தி சொன்ன அதே வரிகள். அம்பேத்காரின் சாதியான மஹர்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியவர்கள். அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே அவர் உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்று இன்று ராஜஸ்தானிலும் அஸாமிலும் எல்லாம் குற்றச்சாட்டு எழுகிறது. அம்பேத்கார் உயிருடனிருந்தபோதே மகாராஷ்டிரத்தில் அவ்வாறு அவ்ர் விமர்சிக்கப்பட்டார்.

இன்னும் சிக்கலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. 1947 ன் இறுதியில் தனித்தொதி, இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளுக்கான முதல் அறிவிக்கை வெளியான போது அம்பேத்காரின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட அந்த அறிவிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே தனித்தொதி, இடஒதுக்கீடு உட்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பழங்குடிகள் முற்றாகவே விடப்பட்டிருந்தனர்! இந்த மாபெரும் சமூக அநீதியை அப்போது அரசியல்நிர்ணய சபையில் காங்கிரஸின் நியமன உறுப்பினராக இருந்த ஜெய்பால்சிங் என்ற பழங்குடியினர்தான் சுட்டிக்காட்டி கடும் வருத்தம் தெரிவித்தார். அதன்பின்னரே அவர்கள் சேர்க்கபப்ட்டார்கள்.

இன்று இந்திய இட ஒதுக்கீட்டு விகிதத்தில் பழங்குடிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கருதுபவர்கள் அம்பேத்காரின் பாரபட்சத்தை அதற்கு குற்றம்சாட்டுகிறார்கள். ‘டிப்ரஸ்ட் கிளாஸஸ்’ என்ற சொல்லையே அம்பேத்கார் எப்போதும் தன் கோரிக்கைகளில் பயன்படுத்தி வந்தார். அவர் உத்தேசித்தது தன் சாதியினரான தாழ்த்தப்பட்டோரை மட்டுமே என்றும் பழங்குடியினரை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பொதுச்சொல்லைப் போர்த்தி அவர் பழங்குடிகளின் மீது தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டவர்கள் நடத்தும் சுரண்டலை மறைக்க முயன்றார் என்று குற்றம் சுமத்துகிறார்கள். முன்பு வடகிழக்கு மாநிலங்களில் பேசப்பட்ட இக்குற்றச்சாட்டு இன்று ஜார்கண்டிலும் ஒலிக்கிறது.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்துமே அம்பேத்கார் என்ற மாமனிதனின் நோக்கம் மீது களங்கம் கற்பிப்பவை என்றே நான் நினைக்கிறேன். காந்தியின் நோக்கம் மீது கற்பிக்கப்படும் களங்கத்துக்கு நிகரானது இது. இத்தகைய சிறுமைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இலட்சியவாதி அவர். டிப்ரஸ்ட் கிளாஸஸ் என்ற சொல்லை மிக விரிந்த ஒரு இலட்சியவாத அர்த்தத்தில் மட்டுமே அவர் கையாண்டார். அந்த மக்களிடையே உருவாகும் பேதம் அவர்களின் போராட்ட வல்லமையைக் குறைக்கும் என்று எண்ணினார்.

உரிமைக்காகப் போராடிய முன்னோடிகள் அனைவர் மேலும் இலாபங்கள் பங்கு வைக்கப்படுகையில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு எழும் என்று படுகிறது. பங்குவைக்கவேண்டியவை பெருகும்தோறும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறும். காந்தியும் அதன் விளைவாகவே கரிபூசப்படுகிறார்.

பூனா ஒப்பந்தம் உயிர்த்தெழுந்ததன் காரணம்

என்ன காரணத்தால் இப்போது பூனா ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் வீரியத்துடன் முன்வைக்கப்படுகிறது? ஏற்கனவே சொன்னதுபோல காங்கிரசின் குடைக்கீழ் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை வென்றெடுக்கும் அரசியல்தேவையே அதற்கான முதல் காரணம். காந்தி மீதான முதல்தலைமுறை தலித் மக்களின் நம்பிக்கையைத் தாக்குதல் என்பது இரண்டாம் தலைமுறையை வென்றெடுப்பதாகவே முடியும். அது ஓரளவு வெற்றியும் பெற்ற ஒரு திட்டம். அதற்கு மிக வசதியாக வாய்த்தது பூனா ஒப்பந்தம். ஏன் என்றால் பூனா ஒப்பந்தம் குறித்து அம்பேத்கார் கசப்புடன் சொல்லிய விஷயங்கள் எளிய மேற்கோள்களாக கிடைக்கின்றன.

இரண்டாவதாக, தலித்துக்கள் இந்துக்களே அல்ல என்ற ஒற்றை வாக்கியத்தை இந்திய தலித் மனத்தில் நிறுவ முனையும் கிறித்தவ மதமாற்ற சக்திகளின் நெடுநாள்திட்டம். அவர்கள் தலித் அமைப்புகளுக்கு அளிக்கும் மறைமுகமான வழிகாட்ட, ஊக்குவித்தல். அந்த வாதத்தை நிறுவ காந்தியில் நல்லெண்ணத்தை ஐயப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு பூனா ஒப்பந்தம் ஒரு வரலாற்று சாக்கு.

ஆகவே மண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் மூலம் முன்வைக்கப்பட்ட இரட்டை வாக்குரிமைத்திட்டம் ஒரேயடியாக தலித்துக்களின் வாழ்க்கையை மலரச்செய்திருக்கும் என்றும் அதை தடுத்ததன் மூலம் காந்தி தலித்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பூனா ஒப்பந்தம் மூலம் கிடைத்ததும் இன்றும் தலித்துக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதுமான இட ஒதுக்கீடுக்கு காந்தியின் காங்கிரஸே முக்கியமான காரணம் என்பது முற்றாக மறுக்கப்பட்டது. பதிலுக்கு அது அம்பேத்கர் போராடிப்பெற்றதே என்று விளக்கப்பட்டது. ஹரிஜன் இயக்கத்தின் ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பும் வெறும் அரசியல் சமாளிப்பே என்று ஒதுக்கப்பட்டது. இது அரசியல் நோக்குடன் செய்யப்படும் அப்பட்டமான வரலாற்றுத்திரிபு மட்டுமே.

‘காந்தியும் காங்கிரஸ¤ம் தலித்துக்களுக்கு செய்தது என்ன’ என்ற அம்பேத்காரின் நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு ஏறத்தாழ துண்டுபிரசுரம்போல வினியோகிக்கப்பட்டது. அந்நூலை எழுதியபின்னர்தான் அம்பேத்கார் காந்தி வாங்கித்தந்த சுதந்திரத்தை ஏற்று அவரது கட்சியால் நியமிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபை தலைவராக பணியாற்றி தன் ஒதுக்கீடு கோரிக்கைகளை தானே சட்டமாக்கினார் என்பது மறைக்கப்படுகிறது. அல்லது அவர் காங்கிரஸை எதிர்த்து போராடி சட்ட அமைச்சராக ஆகி அதையெல்லாம் செய்தார் என்று திரிக்கப்படுகிறது.

இந்திய தலித்துக்கள் அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்குரிய பங்கைப் பெற்றிருக்கிறார்களா? கண்டிப்பாக இல்லை என்பதே என் கருத்து. அது இன்றியமையாதது என்பதும் அதன் மூலமே அவர்களின் சமூக அதிகாரத்தில் அடுத்த படி நிகழ முடியும் என்றும் நான் நினைக்கிறேன். அதை இந்திய ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்புகளினூடாக அரசியல் செயல்பாடுகள்மூலமாக மட்டுமே அவரக்ள் அடைய முடியும்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கு முன்னேற தலித்துக்களால் முடியவில்லை என்பது ஓர் கண்கூடான உண்மை. இந்திய சாதிகளில் சுதந்திரத்துக்குப் பின்னர் இட ஒதுக்கீட்டின் வலிமையால் வலிமையான பொருளியல் சக்திகளாக மாறிய பல சாதிகள் உண்டு. தலித்துக்களிலேயே கூட சில சாதிகள் ஒப்புநோக்க அதிகபட்ச வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. ஆனால் சீரான ஒரு வளர்ச்சி சாத்தியமாகவில்லை.

காரணம் எங்குமே தலித்துக்கள் ஒரு அரசியல் சக்தியாகத் திரளமுடியவில்லை. இந்தியசாதிகளில் பிற எதற்கும் இல்லாத ஒரு வாய்ப்பு தலித்துக்களுக்கு உள்ளது. அவர்கள் அதே அடையாளத்தில் தேசிய அளவில் இணைய முடியும். அபப்டி இணைந்தால் பெரும் நிர்ணாயக சக்தியாக அமையவும் முடியும். ஆனால் இன்றுவரை தேசிய அளவிலான ஒற்றுமை சாத்தியப்படவில்லை. அதற்கான காரணங்களை தலித்துக்களின் சமூகமனத்தில், பழக்க வழக்கங்களில் தேடலாம். அவர்கள் வாழும் சூழல்களில் தேடலாம். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் தேடலாம். அது இந்த நிமிடம் வரை நடக்கவில்லை. நடக்க நமது அறிவுலகின் அரசியல்சரிநிலைகள், இடக்கரடக்கல்கள் இன்றுவரை விடவில்லை.

இன்று தலித்துக்களின் எந்த ஒரு சிக்கலுக்கும் தலித்துக்களின் ஏதேனும் ஓர் இயல்பு காரணமாக இருக்க முடியுமோ என்று ஐயப்படக்கூட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர் மீது சாதிவெறியின் மொத்த முத்திரைகளும் வந்துவிழும், அவரது குரல் கூச்சல்களில் அமுங்கி மறையும். எப்போதாவதுதான் ஓர் அரசியல்வாதி மென்மையாகச் சொல்ல முற்படுகிறார். அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிவிடும்.

மிகமிக துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இன்றும்கூட, அம்பேத்கார் மறைந்து அரைநூற்றாண்டு தாண்டியும்கூட, தலித்துக்களின் சிந்தனையை பிறர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த கட்டுரையாளர்கள், மத அமைப்புகள் தங்கள் தூண்டிவிடும் எழுத்துக்கள் மற்றும் திரிபுகள் மூலம் தலித்துக்களை காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக ஆக்குகின்றனர். அக்காழ்ப்பின் விளைவுகளில் தங்கள் லாபங்களை நோக்கி நகர்கின்றனர்.

காழ்ப்பு இருமுனை கொண்டது. உங்களுக்கு மேலே உள்ளவர்களின் மீது கொள்ளும் காழ்ப்பு அப்படியே கீழே உள்ளவர் மீதும் பாயும் என்பதே மானுட இயற்கை. ஏனென்றால் நான் என்ற சுய அடையாளத்தில் இருந்தே காழ்ப்பு உருவாகிறது. பிராமணர் மீதான காழ்ப்புடன் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதோர்- பிற்படுத்தப்பட்டோர் அரசியல் அப்படியே தலித்துக்கள் மீதான காழ்ப்பாக மாறியிருப்பதை இதை வாசிக்கும் எந்த ஒரு தலித்தும் தன் அனுபவத்தில் உணர்ந்திருப்பார். அரசியல் இடக்கரடக்கல் காரணமாக அவை சொற்களாக ஆகாமலிருக்கலாம். படோடோபமான சாதி ஒழிப்பு பேச்சுக்கள் பொதுச்சூழலில் ஒலிக்கலாம். உண்மை இதுவே.

தமிழகத்தில் இன்று நடக்கும் மலம் ஊட்டுதல், சுவர் கட்டுதல், சாணிப்பால் கொடுத்தல் முதலிய அடக்குமுறைகள் அனைத்துமே திராவிட இயக்கம் ஆழ வேரூன்றிய இடங்களில், இன்றும் திராவிட இயக்கக் கோட்டைகளாக திகழும் இடங்களில் நடக்கின்றன என்பது இந்த மனநிலை ஒரு சமூக உண்மை என்பதையே காட்டுகின்றது.

காழ்ப்பு கொள்வதென்பது தலித்தியர்களுக்கு அவர்களின் மாபெரும் இலட்சியத்துக்கு குந்தகமே விளைவிக்கும். அக்காழ்ப்பினால் அவர்கள் அவர்களை விட கீழாக இருப்பவர்களிடம் கசப்பை வளர்த்துக்கொள்ளவே நேரும். இன்று எல்லையில்லாத பொறுமையும், ஒவ்வொரு கணமும் சமரசம் செய்துகொள்ளும் ஜனநாயகப்பண்பும், மீண்டும் மீண்டும் ஒருங்கிணைப்பை மட்டுமே நாடும் மனநிலையும் கொண்டு செய்யப்படும் இலட்சியவாதச் செயல்பாடுகளே தலித் சாதிகளின் ஒருங்கிணைப்புக்கு அவசியம்.

அதற்கு அவர்களுக்கு உதவக்கூடியவர் காந்தியே. அஷிஷ் நந்தி கூறும் நாலாவது காந்தி. மார்ட்டின் லூதருக்கும், நெல்சன் மன்டேலாவுக்கும், ஆங் சான் சூகிக்கும் வழிகாட்டியாக இருக்கும் காந்தி. அம்பேத்காரின் இலட்சியமும் காந்திய வழிமுறைகளும் இணைவது மட்டுமே அவர்களை வழிநடத்தமுடியும். அதைத்தான் இந்நிலத்தின் முக்கியமான சிந்தனையாளர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். டி.ஆர்.நாகராஜ் முதல் ராமச்சந்திர குகா வரை.

காந்திய வழி என்பது ‘பிறனை’ உருவாக்கி வெறுப்பை திரட்டிக்கொள்ளும் வழி அல்ல. வாழ்நாள் முழுக்க ஆங்கிலேயரை எதிர்த்தாலும் அவர்களையும் விரும்பிய வழி அது. காந்தியப்போராட்டம் என்பது உண்மையில் தனக்கு எதிரான போராட்டமே. தன் பலவீனங்களுக்கு எதிரான போராட்டம். தன்னை அடிமைப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக தன்னை ஆன்மீகமாக தார்மீகமாக வளர்த்துக்கொள்ளும் போராட்டம். அது எளிய வழி அல்ல. அஷிஷ் நந்தி சொல்வது போல காந்தி மிகமிக அபாயகரமானவர், ஏனென்றால் அவரிடம் குறுக்குவழிகள் இல்லை.

நடைமுறை உதாரணம் ஒன்றைச் சொல்லலாம். தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு இன்றுவரை பெரும்தடையாக இருப்பது குடிப்பழக்கம். எல்லா காலத்திலும் சேரிகளில்தான் கள்ளுக்கடை இருந்திருக்கிறது, மிகவும்பிற்படுத்தப்பட்டவர்கள் அதை நடத்தி பணம் அள்ளியிருக்கிறார்கள். தலித்துக்களின் முன்னேற்றத்துக்கு அடுத்த பெரும் தடையாக இருப்பது கந்துவட்டிக்கு கடன் வாங்கும் வழக்கம். கணக்குகள் வைத்துக்கொள்ளாமல் செலவழிப்பது அவர்களை கடனாளியாக ஆக்குகிறது. குடிப்பழக்கமும் சேர்ந்துகொள்கிறது.

சென்ற நூறு வருடத்தில் இந்த நடைமுறைத்தடையை உணர்ந்து தலித்துக்கள் இவற்றில் இருந்து விடுபடவேண்டும் என ஓர் அரசியல் போரை நடத்தியது காந்தியின் ஹரிஜன இயக்கமே. தலித்துக்கள் பாரம்பரியமான தொழில்களில் கட்டுண்டுகிடப்பதும் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடை என உணர்ந்து அவர்களுக்கு மாற்றுக் கைத்தொழில்களை முன்வைத்ததும் அதுவே. அந்த இயக்கமே இன்று நினைவாக பழங்கதையாக ஆகிவிட்டிருக்கிறது. அதன்பின் சென்ற காலங்களில் அம்மக்களை நோக்கி அவர்களின் குறைகளைச் சீர்திருத்திக்கொள்ளும்படி, அவர்களின் சமூக இயக்கத்தை ஊக்குவிக்கும்படி, பேசிய அரசியல்தலைவர் யார்?

தலித் ஒற்றுமைக்கு வெளியே இருந்து என்ன தடை உள்ளது? தமிழ்நாட்டிலேயே தேவேந்திரகுல வேளாளர்களும் பறையர்களும் அருந்ததியர்களும் ஒரே அரசியல் சக்தியாக ஆக ஏன் முடியவில்லை? அது நினைப்பது போல் எளிய விஷயம் அல்ல. இந்தியா என்ற மாபெரும் பன்மை அமைப்பின் சிக்கல் அது. அம்பேத்காரே புரிந்துகொள்ள முடியாத புதைகுழி அது.

அதைப்புரிந்துகொள்ள சாதியை ஓர் ‘ உயர்சாதிச்சதியாக’ எண்ணும் எளிய வாய்ப்பாடுகள் உதவாது. சாதி என்பது ஒடுக்குமூறைக்கான ஆயுதமாக ஆகியிருக்கலாம். ஆனால் அது அம்மக்களின் அடையாளமும் பாரம்பரியமும் கூட. அந்நிலையில் போலியான சாதிய ஒழிப்புக்கூச்சல்கள் மேடைச்சத்தங்கலாக மட்டுமே நிற்கும். சாதியைப்பற்றிய புறவயமான யதார்த்தம் சார்ந்த புரிதல் தேவைப்படுகிறது.

அதற்கு கோஸாம்பியை நினைவுறுத்துகிறேன். சாதி அம்மக்களின் தொன்மையான குல அடையாளம். அவர்களின் பழங்குடி வேர் அது. அதை ஒருபோதும் அவர்களால் கைவிட முடியாது. எந்த சாதியடையாளத்தால் ஒருவன் அவமதிக்கப்படுகிறானோ அதே சாதியடையாளம் அவனுக்கு பெருமிதமளிக்கும் சுயமாகவும் இருக்க முடியும் என்ற விசித்திரம் அது.

நடைமுறையில் மீண்டும் மீண்டும் காண்கிற ஒன்றுண்டு. ஒரு பிராமணர் தலித் பெண்ணை மணக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பிராமணர் வீட்டில் என்ன அதிர்ச்சியும் எதிர்ப்பும் இருக்குமோ அதேயளவு அதிர்ச்சியும் எதிர்ப்பும் தலித் வீட்டிலும் இருக்கும். அவர்களுக்கு தங்கள் சாதி சம்பந்தமான இழிவு ஏதும் அந்தரங்கமாக இல்லை. அது அவர்களின் அடையாளம். அதை ஒருபோதும் விடமாட்டார்கள். அவர்கள் பொருளியல் வல்லமையாக ஆகும்தோறும் அவ்வடையாளம் மேலும் திடம் பெறும் என்பதே சமூக யதார்த்தம்.

தலித் என்ற பொது அடையாளத்தை ஏற்க இந்திய சாதிகளுக்கு அவர்களின் சுயமே தடையாக இருக்கிறது. அந்த சுயத்தை இழக்காமல், பரஸ்பரம் உள்ள அவநம்பிக்கைகளைக் களைந்து ஒரே அரங்கில் அவர்களை அமரச்செய்ய தேவைப்படுவது காந்தியம். அதன் இடைவிடாத சமரசப்போக்கு, சோர்வுறாத பேச்சுவார்த்தை, அடிப்படை விழுமியங்களில் பிடிவாதத்துடன் எத்தனை தூரம் போக முடியுமோ அத்தனை தூரம் போகும் நேசப்போக்கு…

அதைச்செய்யும் தலைமை இன்று அவர்களுக்கு இல்லை. காந்தியைப்போல நாக்கில் பிரக்ஞையின் முழுக்கட்டுப்பாடுள்ள தலைமை தேவைப்படுகிறது. எந்நிலையிலும் எந்த தரப்பையும் உதறிவிடாத பொறுமை தேவைப்படுகிறது. பூரணமான தியாகம் தேவைபப்டுகிறது. அது சாத்தியமாகவில்லை என்பதை இந்திய அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்கள் எளிதில் உணரலாம்.

இந்தப் பலவீனங்களுக்கான பொறுப்பை தாங்கள் ஏற்கத் தயங்கும் மனநிலையில் இருந்துதான் பூனா ஒப்பந்தம் குறித்த பேச்சுகள் மீண்டும் எழுகின்றன. 1932ன் மண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் இன்றைய தலித்துக்களின் நிலைமையை அன்றே மாற்றியிருந்திருக்கும் என்றும் காந்திதான் தடுத்தார் என்றும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

இத்தகைய வாதங்களுக்கு இந்திய அரசியல் சூழலில் பஞ்சமே இல்லை. ஒட்டுமொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது இதெல்லாம் எப்படித்தான் அறிவுபூர்வமாக முன்வைக்கப்படுகிறதோ என்ற பிரமிப்பே ஏற்படுகிறது. காந்தி தன் வாழ்நாளெல்லாம் மாறுபடும் பல்வேறு தரப்புகள் நடுவே சமரசத்தையும் ஒத்திசைவையும் உருவாக்கி ஒரு நவீன சமூகத்தை உருவாக்க ஓய்விலாது முயன்றார். ஆனால் அத்தனை தரப்பும் தங்கள் நலன்களைச் சார்ந்து ஒரு தீவிரநிலைபாடு எடுத்து அவருடன் உக்கிரமாக மோதுகின்றன. அவர் மேல் சேறுபூசி தங்களை நியாயப்படுத்திக்கொளிகின்றன.

தலித்தியமும் காந்தியமும் சுருக்கமாக

  1. காந்தி பிரிட்டிஷாரின் சலுகைகள் மூலம் சமூகமாற்றம் உருவாகும் என நம்பவில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் எவ்வித அதிகாரமும் இல்லாத மாகாணசபைப் பதவிகள், அதற்கான தேர்தல்கள், அதில் உள்ள சலுகைகள் ஆகியவற்றை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை
  2. ஆனால் அச்சலுகைகளுக்கான பரஸ்பரப்போராட்டத்தில் இந்திய சமூகம் பிளவுபடுவதைக் கண்டால். இஸ்லாமியர் மற்றும் சீக்கியகளுக்கான தனிவாக்குரிமை நாட்டை ஏற்கனவே பிளவுபடுத்தி விட்டதை உணர்ந்தார். அப்பிளவை சரிசெய்யவே அவர் கிபா·பத் இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை
  3. இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இரட்டைவாக்குரிமை அளித்து அவர்களையும் தேசத்திற்குள் ஒரு தனித்தேசம் போல நடத்த முனைந்த பிரிட்டிஷாரின் முயற்சியை தடுக்கவே காந்தி அதை எதிர்த்தார். உண்ணாவிரதம் இருந்து தன் தரப்பை அம்பேத்கார் ஏற்கச்செய்தார்
  4. அதன் மூலம் உருவான பூனா ஒப்பந்தம் இரட்டை வாக்குரிமை தவிர அம்பேத்கார் கோரிய எல்லா சலுகைகளையும் ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் உண்மையான அதிகாரத்தை கையில்வைத்திருந்த மக்கள் அமைப்பான காங்கிரஸ் அளித்த இச்சலுகைகளே உண்மையில் தாழ்த்தப்பட்டோர் அடைந்த சலுகைகள் எனலாம். அச்சலுகைகள் சுதந்திரத்துக்குப் பின்னரும் நீட்டிக்கப்பட்டன. இன்றுவரை தொடரும் சலுகைகளுக்கான தொடக்கமும் அதுவே

5 அச்சலுகைகளுக்கு எதிராக காங்கிரஸ¤க்குள் உருவான எதிர்ப்பை வெல்ல காந்தி 21 நாள் உண்ணாவிரதம் இருந்து அதை காங்கிரஸ¤ம் பெருவாரியான இந்தியர்களும் ஏற்கச் செய்தார். தாழ்த்தப்பட்டோருக்கு தனிச்சலுகை தேவை என்பதை அவரது வற்புறுத்தலால்தான் சாதியில் ஊறியிருந்த இந்திய தேசம் ஏற்றுக்கொண்டது

  1. மக்களின் மாற்றம் மூலமே உண்மையான அதிகார மாற்றம் வரும் என்ற தன் கொள்கையின்படி காந்தி தாழ்த்தப்பட்டோருக்காக ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைந்த முதல் வெகுஜன இயக்கம் அதுவே. அது அவர்களுக்கு உரிமை குறித்த உணர்வு, கல்வி, மாற்று வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளித்தது.
  2. கோடிக்கணக்கான பிறசாதியினரை தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிய பிரக்ஞை கொள்ளசெய்தது ஹரிஜன இயக்கமே. பலலட்சம்பேரை சேவைசெய்ய அது சேரிகளுக்கு அனுப்பியது. அந்த பிரக்ஞையே பின்னர் தாழ்த்தப்பட்டோர் எந்தபோராட்டமும் செய்யாமல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது
  3. அம்பேத்கார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக எந்தஒரு ஒட்டுமொத்த மக்கள் இயக்கத்தையும் போராட்டத்தையும் நடத்தவில்லை. அதிகாரம் மூலம் கொண்டுவரும் மாற்றமே அவரது இலக்காக இருந்தது. அம்முயற்சி அவருக்கு வெற்றியை அளிக்கவில்லை.
  4. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தியின் கொள்கைரீதியான செல்வாக்கின் காரணமாகவே காங்கிரஸையும் இந்தியாவின் சுதந்திரத்தையும் எதிர்த்துவந்த அம்பேத்கார் நேருவால் அழைக்கப்பட்டு சட்ட அமைச்சர் ஆக்கப்பட்டார். அரசியல் நிர்ணயக்குழு உறுப்பினர் ஆக்கபப்ட்டார்
  5. பிரிட்டிஷ் அரசு வழங்கிய எல்லா தேர்தல் சலுகைகளும் வயதுவந்த அனைவருக்கும் ஓட்டு என்ற உண்மையான ஜனநாயகத்தை மறுத்து அதற்குப் பதிலாக அளிக்கப்பட்டவையே. அதற்குப் பதிலாகவே அம்பேத்கார் சலுகைகளை கோரிவந்தார். சுதந்திர இந்தியாவில் நேருவின் விருப்பப்படி அம்பேத்காரே வயதுவந்தோர் வாக்குரிமையை சட்டமாக்கினார். அதனால் முஸ்லீம் சீக்கியர் உட்பட அனைவருக்கும் இருந்துவந்த இரட்டை வாக்குரிமை உட்பட்ட எல்லா சலுகைகளும் ரத்தாயின

11 ஆனால் காந்தியின் உணர்ச்சிகளையும் ஆணையையும் கருத்தில்கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் பலவகையான இட ஒதுக்கீடுகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன

  1. இலட்சியவாதியாக இருந்த அம்பேத்கார் ஜனநாயகம் என்பது பல்வேறு எதிர்தரப்புகளுடன் உரையாடி மெல்லமெல்லத்தான் முன்னேரும் என்ற உண்மையை உள்வாங்காதவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் உள்முரண்பாடுகளையும் சமூகச் சிக்கல்களையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. மேலிருந்து அதிகாரம் மூலம் மாற்றங்களை செய்யமுடியும் என நினைத்தார். அது நடைமுறைச்சாத்தியமல்ல. ஆகவே பொறுமை இழந்தார். பிறரை அதற்காகக் குற்றம் சாட்டி கசப்புகளை கொட்டினார்
  2. சுதந்திர இந்தியாவில் தலித்துக்கள் ஒரு ஒட்டுமொத்த சக்தியாக திரண்டு வாக்குவங்கி மூலமே எல்லா லாபங்களையும் அடைய முடியும். ஆனால் தங்கள் பாரம்பரியமான உள்முரண்பாடுகளாலும் பல்வேறு சமூக உளவியல் காரணங்களாலும் அவர்களுக்கு அது சாத்தியப்படவில்லை. அந்த உண்மையை மழுப்பும்பொருட்டே இன்று பூனா ஒப்பந்தம் மிகைப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு எல்லாவகையான முன்னேற்றங்களும் சாத்தியமாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
  3. தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சதவீதம் பேருக்குக் கூட வாக்களிக்க வாய்ப்பு அளிக்காத பிரிட்டிஷ் சீர்திருத்தமான இரட்டை வாக்குரிமையால் எவ்வித நலனும் சாத்தியமாகியிருக்காது என்பதே உண்மை. அதை முஸ்லீம்களின் விஷயத்தைப் பார்த்தாலே உணரலாம்
  4. இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் மேல் கொண்டிருக்கும் பற்றை களைந்து அவர்களை காங்கிரஸில் இருந்து பிரிக்கவே காந்தி கரி பூசப்படுகிறார்.
  5. அம்பேத்கார் மேலிருந்து சமூக மாற்றத்தைக் கொண்டுவர முனைந்தவர். பிரிந்து செயல்பட்டு முன்னேற முயன்றவ. காந்தி மக்களியக்கம் மூலம் முன்னேற வழிகாட்டியவர். இணைந்து செயல்படுவதன் மூலம் வெற்றி உள்ளது என்றவர். இருவரும் தங்கள் வழிகளில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அரும்பணி ஆற்றினார்கள்.

நமது பலவீனங்களைச் சுமக்கும் கிழவர்

காந்தியம் மீதான அவதூறுகளை உருவாக்கியதில் வங்க எழுத்தாளர்களுக்கு பெரும்பங்குண்டு. சுரேந்திரநாத் பானர்ஜி 1918ல் கட்சியைவிட்டுபோனபோது ஆரம்பித்த கசப்பு அது. பின்னர் சுபாஷ் சந்திர போஸ் வழியாக அது வளர்ந்து மார்க்ஸியம் மூலம் வலுப்பெற்றது.

தேசிய மொழிப் பிரச்சினையில் அவர் உருது சார்ந்த இந்துஸ்தானிக்குக்குச் சாதகமான நிற்கிறார் என தூய இந்தி வாதிகளுக்கு மனக்கசப்பு. உருது வாதிகளுக்கு அவர் இந்தி ஒழிக்கும்படிச் சொல்லவில்லை என்று கசப்பு. இந்துக்களுக்கு அவர் இந்து விரோதி. முஸ்லீம்களுக்கு அவர் இதுவெறியர்.இந்த எல்லா தனிக்குழுக்க்களும் இன்றும் தொடர்கின்றன. இவர்களை எல்லாம் இணைத்து ஒரு நவீன தேசத்தை உருவாக்கி இன்றுநாம் காணும் சிவில்சமூகத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கிய மனிதன் இவர்கள் அனைவராலும் வசைபாடப்படுகிறார்

இந்திய இடதுசாரிகளுக்கு காந்திமேல் கடும் கோபம். அந்த பனியா மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் அவர்கள் அன்றே புரட்சியை நடத்தி இந்தியாவின் வறுமைக்கு முழுத்தீர்வு கண்டிருப்பார்கள்! அவர் இந்திய முதலாளிகளின் ஆயுதம்! சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை சுபாஷ் தீவிரமான ஆயுதப்போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்திருப்பார். அகிம்சை பேசிய கிழவர்தான் தடுத்தார்! ஆங்கிலேயர்கள் உண்மையான சுதந்திரப்போராட்டம் உருவாகாமல் தடுப்பதற்காக உருவாக்கிய பொம்மை அவர். பகத் சிங் தூக்கிலே தொங்கவும் அவரே காரணம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர் இந்துவெறியர். ஆண்ட வம்சமாகிய இஸ்லாமியர் மீண்டும் ஆள முடியாமல் தடுத்த நயவஞ்சகர் அவர். திராவிடவாதிகளுக்கு திராவிட ஒற்றுமை உருவாகாமல் தடுத்த சதிகாரர்.

இந்துத்துவர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் ஷத்ரிய சக்தியையும் பிராமண சக்தியையும் அழித்தவர் அவர். வைசிய சக்தியை முதன்மைப்படுத்தி இந்தியாவின் ஆன்மீக வலிமையையும் போராடும் குணத்தையும் கெடுத்தவர். அதன் மூலம் இந்து சாம்ராஜ்யம் உருவாகாமல் தடுத்தவர். ஆங்கிலேயர்களால் இந்த காரணத்துகாகவே ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்திய சூழலில் வளர்க்கப்பட்டவர் காந்தி! தலித்தியர்கள் நோக்கில் ஆங்கில அரசு அவர்களுக்கு தட்டில்வைத்து நீட்டிய பொன்னுலகை தட்டிவிட்ட சாதி வெறியன்!

காங்கிரஸைப் பொறுத்தவரை அவர் ஒரு மகான், ஆனால் உபயோகம் இல்லாதவர். பெருதொழில்கள், பெருமுதலீடுகள், கமிஷன்கள், ஊழல்கள் ஆகிய நவீனக் கருத்துக்கள் எதையுமே புரிந்துகொள்ளாமல் அரைவேட்டியும் குச்சியுமாக நிற்கும் புராதனமான குலதெய்வம்.

சாமானியர்களுக்கு சாலைதோறும் சர்க்கார் நட்டுவைத்த எல்லைச்சாமி. ஆக, யாருக்குத்தான் காந்தி எதிரி இல்லை?

இவர்கள் எவருக்குமே இவர்களின் கருத்துக்களின் பலவீனங்கள் தெரிவதில்லை. இவர்கள் எதிர்கொண்டுள்ள சூழல்களின் சிக்கல்கள் கூடத் தெரிவதில்லை. இவர்களின் வரலாற்றுப்பாத்திரம் தெரிவதில்லை. இவர்களின் பலவீனமான மனங்களின் பிரமையின்படி இவர்களின் எல்லா தோல்விகளுக்கும் காந்தியே காரணம்.

நிகாஸ் கசந்த் ஸகீஸின் ‘ஏசுவின் இறுதிச் சபலம்’ [Last Temptation of Christ : Nikos Kazantzakis ] நாவலில் ஒரு உவமை வரும். பழங்காலத்தில் யூதர்களுக்கு ஒரு சடங்கு இருந்தது. வருடத்தில் ஒரு நாளில் ஒரு ஆட்டைப் பிடித்து தங்கள் அனைவரின் பேய்களையும் நோய்களையும் அதன் மீது ஏற்றி அதன் கழுத்தில் கொஞ்சம் நீரையும் வைக்கோலையும் கட்டிதொங்கவிட்டு பாலைவனத்தில் விட்டுவிடுவார்கள். பசித்து தாகித்து பாலையில் அலைந்து அது சாகும். அதனுடன் சென்ற எல்லா தீங்குகளும் பாலைவனத்திலேயே திசைதவறி நின்றுவிடும்! ஏசு அந்த ஆடுதான் என்கிறார் கசந்த் சக்கீஸ். நமக்குரிய ஏசு காந்தி. சிலுவையை கொடுக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

எப்பேற்பட்ட தெய்வம்! நமது சகல பாவங்களையும் தானே சிலுவையாகச் சுமந்தபடி கையில் குச்சியும் பொக்கை வாய்ச்சிரிப்புமாக நம் தெருமுனைகளில் நிற்கிறது. உங்கள் சுயநலத்தை பிறரின் சுயநலம் தடுக்கிறதா, உங்கள் சகோதரனுடன் நீங்கள் அமர்ந்து பேசமுடியவில்லையா, உங்கள் சொந்தபலவீனங்களை நீங்கள் வெல்லமுடியவில்லையா, உங்களுக்கு ஏமாற்றங்கள் இருக்கின்றனவா, கையாலாகாதவராக உணர்கிறீர்களா, வாருங்கள் வந்து வசைபாடுங்கள், செருப்பாலடியுங்கள்! அது இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தெய்வம்.

 [முற்றும்]

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்கள் இணையதளம்