விழா எதிர்வினைகள்

இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம்.

சாம்ராஜ்,[என்றுதானே சொன்னார்கள் கவிதைத்தொகுதி] சுனீல் கிருஷ்ணன், டோக்கியோ செந்தில்

படைப்பிலக்கியலில் உள்ள அரசியல் சாயையகள், அரசியலை மையமாக கொண்டு புனையப்படும் ஆக்கங்களின் ஆயுட்காலம் என்ன? அவைகளுக்கு தற்கால அரசியல் முக்கியத்துவம் தாண்டி காலாதீத தன்மை என ஏதும் உண்டா? என பல தளங்களில் விவாதம் விரிந்தது. தெளிவத்தை, இ.பா படைப்புலகங்கள் என்றில்லாமல் யுவனின் படைப்புலகம் குறித்தும், சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் படைப்புலகம் குறித்தும் கூட விவாதங்கள் நடந்தன.

ரமேஷ் பிரேதன் தெளிவத்தையுடன்

தெளிவத்தையும் சரி இ.பாவும் சரி உற்சாகமான மனிதர்கள், இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன? எனும் கேள்வி மீண்டும் மீண்டும், வாசிப்பவர்களாலும் வேடிக்கை பார்ப்பவர்களாலும் எழுப்பப் பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய மூத்த படைப்பாளிகளின் உற்சாகத்தையும், நகைச்சுவை உணர்வையும் அருகில் நின்று காணும் போது அதில் தான் இதற்கான விடை பொதிந்திருக்கிறதோ என தோன்றியது. இது ஒரு வாழ்நாள் வாய்ப்பாக கூட இருக்கலாம், இனியும் தெளிவத்தையையும், இ.பாவையும் நாம் மீண்டும் சந்திக்க இயலுமா என தெரியவில்லை. தேடிச்சென்று சந்திப்பதர்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தான். காத்திரமான உரையாடல்கள் யாவும் அசைபோட்டு அசைபோட்டு மெதுவாக செரித்துகொள்ள வேண்டும்.

இறைவணக்கம் பாடல்

ஜெ அற்புதமான பேச்சாளராகவும் பிரமிக்க தக்க அளவில் உருமாறி வருகிறார். roots நாவலை முன்வைத்து, இடம்பெயர்ந்தவரின் வலியை அவர் பேசிய விதம் நெகிழ்வை தந்தது. படைபிலக்கியம் எனும் யானையை மேய்க்க அன்றாடம் கொலைசோறு உண்டுகொண்டிருக்கும் ஒவ்வொரு படைப்பாளுமையையும் எண்ணி மனம் உவகை கொண்டது. உணர்ச்சியும் தர்க்கமும் (அப்படிப்பட்ட பகுப்பு கூட வெறும் சொற்கள் தான்) முயங்கி உருபெற்ற உரை. நமது குழும நண்பர் சுரேஷ்அற்புதமான கன்னி உரை நிகழ்த்தினார். ரவி சுப்பிரமணியன் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைக்கு மெட்டமைத்து கணீரென்று பாடியது மற்றுமொரு மறக்கவியலா அனுபவம். செல்வேந்திரனின் நன்றியுரை முடியும் வரை பெரும்பாலான மக்கள் அமர்ந்திருந்ததது ஆச்சரியம் தான். பாலாவிடம் கையொப்பம் வாங்க மக்கள் காத்து கிடக்க, அவரோ நம் வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார்.

சேலம் பிரசாத் ,காலப்ரதீப் சுப்ரமணியன், யுவன் சந்திரசேகர்

அரங்க அமைப்புகளை கவனித்த ராதா, விஜய், உள்ளூர் விவாகாரங்களை கவனித்த செல்வா, அரங்கா, உணவை கவனித்த ராம், ராஜமாணிக்கம் என சுழன்று இயங்கிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எழுத்தாளர்களையும் படைப்புகளையும் அடையாளம் காட்டிய இவ்விருது, இதுவரை அறியப்படாத ஒரு எழுத்திய கதையே தெளிவத்தையின் வழியாக நமக்கு காட்டி தருகிறது.

ஜெ தன்னுடைய வாழ்த்துரையில் லெனின் மதிவாணன் பதிவு செய்த ஒரு மலையக நாட்டுப்புற பாடலை பற்றி சொன்னார். ஊரில் வயல வரப்புகளும், நெல்லு சோறும் இருக்க ஏன் வந்து இந்த கண்டிசீமையில் மாட்டிக்கொண்டோம் என்பதாக வரும் ஒரு நான்கு வரிகள். தெளிவத்தை தனது ஏற்புரையில் மலையக நாட்டுப்புற பாடல்கள் பற்றி சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இத்தகைய மலையக நாட்டுப்புற பாடல்கள் எளிய மக்கள் தங்களை சுரண்டும் சாராருக்கு எதிராக கிண்டலுதானும் கேலியுடனும் ஒலிப்பவை. அவர்களின் இயலாமையை நொந்து கொள்பவை. ஆனால் அவைகளை பாடக்கூடாது என்று வெள்ளை துரைமார்கள் ஆணையிட்டார்கள். கொழுந்தேடுக்கும் பாடல்கள் என வெள்ளையர்கள் தங்களுக்கு வாழ்வளித்த வள்ளல்கள் எனும் ரீதியில் விரியும் பாடல் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அப்பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் எனும் விதிமுறை இருந்ததாக சொன்னார். ஒடுக்குமுறையின் மிகக் கொடிய சித்திரம் இது..

சுனீல் கிருஷ்ண்ன்

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ,

நான் விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு (2013) சனிக்கிழமை 21-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வந்தேன், இது போன்ற விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை, பொதுவாக அதிகம் கூச்ச சுபாவம் உள்ள நான் இது போன்று எங்கும் சென்றதில்லை, எங்காவது செல்ல நேர்ந்தாலும் கூட என் இதய துடிப்பை நானே உணரும் அளவு ஒரு பயம் கலந்த உணர்வு என்னை தொற்றிகொள்ளும் (கொல்லும்). ஆனால் இங்கு மிக இயல்பாக உணர்தேன், உணவு கூடத்தில் உங்களை அருகில் பார்த்ததும், என்னை அறிமுகம் செய்து கொண்டதும், நீங்கள் என் தோளில் தட்டி சாப்பிடுங்க என்றதும் என் வாழ்வில் மறக்க முடியாத மிகவும் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தருணங்கள்,

நாஞ்சில், கோபாலகிருஷ்ணன், தியாகுபுத்தகநிலையம் தியாகு

மற்றும் நாஞ்சில் நாடன், தேவதேவன், இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், ரமேஷ், போன்ற இலக்கிய ஆளுமைகளை நேரில் பார்த்தது பரவசமான ஒன்று, ஆனால் இவர்கள் எவரையுமே நான் வாசித்ததில்லை என்பதால் நாகரீகம் கருதி அவர்களிடம் நான் நெருங்கவில்லை, உங்களை வாசித்திருந்ததால் உங்களிடம் மட்டும் அறிமுகம் செய்து கொண்டேன். உணவு மற்றும் கலந்துரையாடல் என மாறி மாறி ஞாயிறு மாலை விழா துவங்கும் வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகுந்த பயனுள்ளவையாக, நினைவில் என்றும் இருப்பவையாக அமைந்தன

நிர்மால்யா மணி

இறுதியாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் குறிப்பாக செல்வேந்திரன் மற்றும் அரங்கசாமி ஆகியோரின் அத்தனை உழைப்பும் விழாவில் தெரிந்தது, பாராட்டுக்குரிய மிக சிறப்பான ஏற்பாடு என்று தான் சொல்ல வேண்டும், விழாவில் இ.பா. அவர்களின் தலைமையுரையும், சுரேஷ் அவர்களின் வாழ்த்துரை, ரவி சுப்பரமணியம் அவர்களின் கவிதை பாடுதல், தெளிவத்தை அவர்களின் ஏற்புரை ஆகியவை மிகவும் அருமை, முத்தாய்ப்பாக என்னை மிகவும் கவர்ந்தது தங்களின் வாழ்த்துரை (கொலச்சோறு) மட்டுமே, ஏனெனில் அது சிநேகிச்சிரும் சார், உங்களை வாசிப்பவர்களை கண்டிப்பாக உங்களுடன் சிநேகிச்சிரும் அதில் சந்தேகமேயில்லை. இது போன்ற ஒரு வாய்ப்பை தந்ததற்கு நன்றிகள் பல, என்னை போன்ற வாசகர்கள் பல திறப்புக்களை அடையவும், இலக்கியத்தில் தங்கள் பணி சிறக்கவும் எல்லாம் வல்ல அந்த அலகிலா ஆற்றல் தங்களுக்கு ஆற்றலை வழங்கட்டும், நன்றி நன்றி நன்றி.

என்றும் அன்புடன்,

விஸ்வநாதன்.

சு.வேணுகோபால்

பெருமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்களுக்கு எழுதும் அளவிற்கு நான் தங்களை வாசித்திருக்கிறேனா என்ற தயக்கத்துடன் இக்கடிதம். .

இரண்டாண்டுகாலமாக தங்களின் இணையப்படைப்புகள் மற்றும் நூல்கள் வழியாக தங்கள் ஆளுமையைக் கண்டு வியந்திருக்கும் கடை நிலை வாசகன் நான். கோவையைப் பிறப்பிடமாகக்கொண்டவன். தனியார் நிறுவனத்தில் இயந்திரவியல் துறையில் வடிவமைப்பு பொறியாளனாக கோவையிலேயே பணிபுரிபவன்.

பெருவாரியான வாசகர்களைப் போன்றே ராஜேஷ்குமார், சுபா, பிகேபி நாவல்களில் வாசிப்பைப் பயின்று, சுஜாதாவில் சிறிது இளைப்பாறி, பா ராகவனில் ஒரு புதிய வாசிப்பு உலகத்தைக் கண்டடைந்தவன் நான்.

விஜய் சூரியன் இ.பாவுடன்

ங்களின் அனல் காற்றே நான் வாசித்து அதிர்ந்த முதல் படைப்பு. மனித மனதின் உக்கிரமும், அப்பட்டமும் கூடிய நான் கண்ட முதல் படைப்பு. பின்பு ஏழாம் உலகம் மற்றும் இணையத்தில் வெளியாகியுள்ள சிறு கதைகள் வழியாக தங்களிடம் கட்டுண்டேன்.

தங்களின் ஒவ்வொரு வரிகளும், வர்ணனைகளும் வாசிக்க வாசிக்க ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தியவண்ணமே இருக்கின்றன. எத்தனை முறை வாசித்தாலும் எங்கோ ஒரு வாசல் திறந்து என்னை உள்ளிழுத்துக்கொள்கிறது.செறிவு மிகுந்த வரிகள் கூர்ந்த வாசிப்பை கோருகின்றன. வாசித்தவையோ விவாதிக்கத்தூண்டுகின்றன.

ராதாகிருஷ்ணன் ,சுரேஷ் ,டோக்கியோ, செந்தில் விஜய் சூரியன்

22-12-13 அன்று கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில்தான் தங்களை முதன் முறையாக நேரில் சந்தித்தேன். வெள்ளை யானையில் தங்கள் கையெழுத்தையும் பெற்றேன். நெருப்பு போல பற்றிக்கொள்ளும் எழுத்துகளின் படைப்பாளியைக்கண்டு பரவசமடைந்ததின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே இக்கடிதம்.

தற்போது இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாசித்து கொண்டிருக்கிறேன். வெள்ளை யானையைத்தொடங்க உள்ளேன். படித்ததை மனதில் தொகுக்க இயலாததால் விஷ்ணுபுரத்தை பாதியில் நிறுத்தியுள்ளேன். மீண்டும் முதலில் இருந்த வாசிக்க வேண்டும். தங்களின் பல புனைவுகள் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்து அந்த தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்.

தங்களின் பணிச்சுமையைக் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

நன்றி,
என்றும் அன்புடன்,
பூபதி துரைசாமி.

கோவை ஞானி இ.பா ஓர் உரையாடல்

அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே,

கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்கு திரு.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஒரு மிக பெரிய காரணம். ஆனால் எல்லோருடனும் சொல்லிக்கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு என்னை மன்னிக்கவும். தெளிவத்தை அவர்களின் ஏற்புரை முடிந்தவுடன் நேரம் ஆனதால் பெங்களுருக்கு பஸ் எடுக்க கிளம்பிவிட்டேன்.

ஜெ அவர்களின் வலைதளத்தை கடந்த சில மாதங்களாக பின்பற்றி வருகிறேன். விழா அறிவிக்கபட்ட உடன் கட்டாயம் செல்லவேண்டும் ஒரு எண்ணம் இருந்தது. வாசகர்கூட்டத்திற்கு வருவதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. புதன்க்கிழமை அன்று சேலம் ப்ரசாதிற்கு டெலிபோன் செய்தபிறகு அந்த அச்சம் உடைந்தது.

செழியன் நாஞ்சில்

நான் சனிக்கிழமை மாலை சீனு வழிகாட்டுதலுடன் s.v.n கல்யாண மண்டம் சேர்ந்தேன். பிறகு, திரு ஜெ மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் அனைவரும் கலந்துரையாடிக்கொண்டு இருப்பதில் பங்கேற்றது எனக்கு ஒரு புது அனுபவம். இதுப்போல் அனைவரும் கேட்ட ஆழமான கேள்விகளும் அவர்களின் நுண்வாசிப்புதனை எனக்கு காண்பித்தது. உண்மையில் நான் அவ்வளவு உன்னிப்பாக வாசித்தது இல்லை. ஆனால் அப்படிபட்ட நுண்வாசிப்பு மிக முக்கியம் இல்லையேல் முளைக்கு ஒரு பயிற்சியாக வாசிப்பு அமையும் என்றென்பதை மறுபடியும் உணர்ந்தேன்.

இவ்விரு நாட்களின் உச்சமாக நான் பார்ப்பது எல்லோருடனுமான கலந்துரையாடல்கள் தான். ஜெ, இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ் இந்த்ரஜித், வேணுகோபால், யுவன், நாஞ்சில் ஆகியோரின் கலந்துரையாடல்கள் கவனித்தது ஒரு புதிய அனுபவத்தைத் தாண்டி மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வேன். இவ்வனுபவம் எமது வாசிப்பு ஆர்வத்தை அதிகப் படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஜெ வை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும் (இதுவரை வாசித்தது இல்லை) என்ற ஒரு உந்துதலை தந்த ஒரு வாசலாக இந்த வாசகர்க் கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

டோக்கியோ செந்தில், லண்டன் பிரபு, விஜயராகவன், திருமதி விஜயராகவன்

​​நான் முக்கியமாக சொல்ல நினைப்பது அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புசெலுத்தியதை பற்றித் தான். கூச்சம் காரணமாக நான் பொதுவாக ஒரு புதிய இடத்தில் முதற் சென்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசுபவன் அல்ல. ஆனால் என்னிடம் பலர் தாமாக வந்து அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடன் உரையாடி நம்முள் இருந்த பனியை உடைத்து உங்களின் உரையாடல்களில் என்னை சேர்த்துக்கொண்டது என்னை உங்களில் ஒருவன் போல் என்னச் செய்தது. அதேபோல் அனைவரும் ஒருவருகொருவர் உணவு பரிமாறிக் கொண்டு, இரவு தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்துக்கொண்டு, காலையில் டீ குடித்துக்கொண்டு வயது வித்யாசமின்றி பள்ளிக்கூட நண்பர்கள் போல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாரத ஒரு இன்ப அனுபவமாக இருந்தது. விழாவில் 84 வயாதான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு இரண்டு நாள் நான் என் வயசையே மறந்துவிட்டேன் என்று கூறும் போது அதற்கு காரணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்களை என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றென்பது அங்கு இருந்தவனாக என்னுடைய எண்ணம்.

சுதா சீனிவாசன், சீனிவாசன்

கலந்துரையாடல்களிளும் விழாவிலும் தெளிவத்தை அவர்களின் பேச்சு எனக்கு இலங்கை தமிழ் மக்களுக்குள்ளேயே உள்ள மற்றுமொரு மலையக தேசத்தை அறிமுகம் செய்தது. அது வருத்திற்க்குரிய அறிமுகமாகும். ஜெவின் வலைத்தில் உள்ள தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிமுகம் இல்லை என்று கூறியிருப்பார். ஏன் நமக்கு அறிமுகம் இல்லை என்று நான் அவ்வளவு நினைத்தது இல்லை. போர் சூழல் காரணாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அதற்கு காரணம் அரசியல் என்பது கண்டிக்கதக்க மிகப் பெரிய துயரமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து இலங்கை தமிழ் எழுத்துக்களுக்கு எனக்கு ஒரு நல்ல சாளரமாக அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதற்கு ஜெவிற்கும் வி.இ.வட்டதிற்கு நன்றி கூறுகிறேன். வரும் காலங்களில் நிரம்ப இலங்கை எழுத்துக்கள் இந்தியாவிற்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கும் வாசலாக வி.இ.வட்டம் இருக்கும் என்று என்னுகிறேன்.

தெளிவத்தையின் இலங்கை நண்பர் அல் அஸுமத் பொன்னாடை போர்த்துகிறார்

மொத்ததில், இந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த ஒரு உத்வேகத்தையும் மன நிறைவையும் அளிக்கிறது. இதைப்போன்று அடுத்து எங்குக் கூடினாலும் கலந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன். இத்தனை பெரிய விழாவையும், அற்புதமான கலந்துரையாடல்களையும் நான்காவது முறையாக சாத்தியப் படுத்திய ஜெ மற்றும் வி.இ.வட்டதிற்கு நன்றிப் பாராட்டுகிறேன்.

பேரன்புடன்
ராஜேஷ்.
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

எம்.ஏ.சுசீலாவும் இந்திராபார்த்தசாரதியும்

விஷ்ணுபுரம் விழா- எம்.ஏ.சுசீலாவின் பதிவுகள்

முந்தைய கட்டுரைவெள்ளையானை- இலக்கணம்
அடுத்த கட்டுரைவிழா 2013