காந்தியும் தலித் அரசியலும் – 5

5. உரிமை என்னும் அதிகாரச் சமநிலை

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்து இன்று உருவாக்கப்படும் பிரமைகளில் கடைசியானது இந்திய தலித்துக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை உருவாக்கி அவர்களை எங்கோ கொண்டுபோயிருக்கக் கூடிய ஒரு மாபெரும் திட்டம் அது என்பதாகும். அதை காந்தி கெடுத்ததனாலேயே இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் படும் எல்லா துயரங்களுக்கும் காரணம் காந்தியே என்று சொல்ல அதுவே அடிப்படை

பூனா ஒப்பந்தத்தைப்பற்றி இன்று புறவயமாகச் சிந்திக்கும் ஒருவர் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை எவ்வாறு அடையப்பெற்றது? அதற்குப்பின்னால் உள்ள ஜனநாயகக் காரணிகள் என்ன? எந்த ஒரு உரிமையும் அதிகாரத்துக்கான போராட்டத்தாலும் சமரசத்தாலும் அடையப்பெறுவதே என்னும்போது தாழ்த்தப்பட்டோரின் அதிகாரம் யாருடன் போராடி, யாருடன் சமரசம்செய்து அடையப்பட்டது?

இக்கேள்விகளுக்கான பதில்களை இதுவரை பேசிய வரலாற்றுப்பின்னணியில் வைத்து நோக்கினால் மட்டுமே இந்த விஷயம் சார்ந்த ஒரு தெளிவை நாம் அடைய முடியும்..

ஏன் அளிக்கப்பட்டது இரட்டை வாக்குரிமை?

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை என்பது அம்பேத்காரோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினரோ ஜனநாயக முறைப்படி ‘போராடி’ப் பெற்ற உரிமை அல்ல அது என்பது முக்கியமாகக் கவனிக்கபப்டவேண்டிய வரலாற்று உண்மை. அது அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு வழங்க முன்வந்த ஒரு சலுகை மட்டுமே. இன்று கோரிக்கை விட்டதை ஒரு போராட்டமாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அதை பிரிட்டிஷ் அரசு  வழங்க முன்வந்த காலகட்டத்தில் தலித்துக்களோ அம்பேத்காரோ இந்திய அரசியலில் ஒரு பொருட்படுத்தத் தக்க சக்தியே அல்ல.

ஏன் அதை பிரிட்டிஷார் வழங்க முன்வந்தார்கள்? இந்தியாவில் 1750 முதல் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்ற ஆரம்பித்தது. 1800களில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை முழுக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டது. 1919 வரை ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களின் கண்ணுக்குப் படவில்லை? இஸ்லாமியர்களையும் சீக்கியர்களையும் ‘ஒடுக்கப்படும் சிறுபான்மையினராக’ எண்ணிய பிரிட்டிஷார் கண்களுக்கு ஏன் தாழ்த்தப்பட்டோர் படவிலை? அதை அம்பேத்காரே முதல் வட்டமேஜை மாநாட்டில் ஆணித்தரமாகக் கேட்டிருக்கிறார்.

இந்திய சமூகத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டலையும் தடுக்க எந்த முயற்சியையும் பிரிட்டிஷ் ஆட்சி எடுக்கவில்லை என்பதே வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சியை கிட்டத்தட்ட ஆட்சியை ‘அவுட் சோர்ஸிங்’ விடுதல் என்றே சொல்லவேண்டும். சமஸ்தான மன்னர்கள், நவாபுகள்,ஜமீந்தார்கள் ஆகியவர்களே பிரிட்டிஷாருக்காக ஆட்சியை நடத்தினர்.  அவர்களிடம் வரிவசூல் செய்தலை மட்டுமே ஆட்சியாகச் செய்து வந்தது பிரிட்டன்.

அந்த ஆட்சியாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே முந்தைய மன்னராட்சிக்காலத்தின் பாரம்பரியங்களால் அதிகாரம் கொண்டிருந்தவர்கள். ஆகவே மரபாக என்ன ஆசாரங்களும் நம்பிக்கைகளும் பேணப்பட்டனவோ அதையே அவர்களும் பேணினார்கள். அதில் சாதிமுறை முதன்மையானது. இந்தியாவின் பாரம்பரிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட இந்தியப்பெருநிலத்தின் பெரும்பகுதியில் பிரிட்டிஷ் மேலிடத்தில் இருந்து எந்தவிதமான தலையீடும் இல்லாமல் சாதிய ஒடுக்குமுறை கடைப்பிடிக்கப் பட்டது.

அதை பிரிட்டிஷ் ஆட்சி ஏன் ஆதரித்தது என்பதைக் காண நம்முடைய வேளாண்மைப் பொருளியலை கவனிக்கவேண்டும். மிகக் குறைவான ஊதியத்தில் தலித் மற்றும் பிற குடியானவ சாதியினரை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் மட்டுமே லாபகரமாக வேளாண்மையைச் செய்ய முடியும் என்ற நிலை இந்தியாவில் இருந்தது. தலித்துக்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவானபின்னரே இந்திய வேளாண்மை பொருளியல் ரீதியாகச் சரிந்தது.

காரணம் இந்திய வேளாண்மை உடலுழைப்பை அதிகமாக நம்பி இருப்பது. சில பகுதிகள் தவிர பிற இடங்களில் மேடும் சரிவுமான நிலம் வயலாக ஆக்கப்பட்டிருப்பதனால் இந்திய வயல்வெளிகளில் வண்டிகள் பயன்படுத்தப்படுவது இயலாது. சேறுமிக்க வயல்கள் கொண்ட இந்தியாவில் இயந்திரப் பயன்பாடு அன்று அனேகமாக சாத்தியமில்லை. இந்தியாவின் பல பகுதிகளில் நீர்பாசனம் கடுமையான மானுட உழைப்பு மூலமே செய்யப்பட்டது.

இந்தியாவின் நிலவரியை மட்டுமே நம்பி உலகளாவிய பேரரசுப் பரவலை நிகழ்த்திக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு இங்கிருந்த சாதியச் சுரண்டலை அனுமதித்து, ஊக்குவித்து, தன் பொருளியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது. அது முதலாளித்துவ அரசின் ஆதார மனநிலை.உற்பத்தியையும் லாபத்தையும் பெருக்குவதற்காக மட்டுமே அது சமூக மாற்றங்களில் ஈடுபடும். பிரிட்டனின் சுரங்கத்தொழிலாளர்கள் இந்திய தலித்துக்களைப்போலவே கேவலமான சுரண்டல் சூழலில் வாழ்ந்த காலம் அது என்பதை நாம் மறக்கக் கூடாது.

இக்காரணத்தால்தான் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கிறித்தவ மதத்தைப் பரப்ப பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. கத்தோலிக்கர்கள் மட்டும் அல்ல, லண்டன்மிஷன் கூட ஆங்கில ஆட்சியாளர்களின் பெரிய ஊக்குவித்தலை அடையவில்லை. அவர்கள் நகர்ப்புறங்களில் கல்விச்சேவைசெய்து குமாஸ்தாக்களை உற்பத்திசெய்தால்போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷார் வேரூன்றி ஒருநூற்றாண்டுக்காலத்துக்கு பிரிட்டிஷ் மிஷனரிகள் இந்தியாவுக்கு வராமல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பார்த்துக்கொண்டது. அதன்பின்னர் பிரிட்டன் பாராளுமன்றத்தின் தலையீட்டினாலேயே லண்டன் மிஷன் இந்தியாவுக்கு வந்தது. காரணம் மிஷனரிகள் சமூக அமைப்பை மாற்றுவார்கள் என ஆட்சியாளர் அஞ்சினார்கள். கடைசிக்காலம் வரை மிஷனரிகளுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் பூசல்தான் நிலவியது.

அதையும் மீறி இந்தியாவில் சமூக விழிப்புணர்ச்சிக்கான விதைகள் பரவியமைக்குக் காரணங்களாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, இந்தியாவில் தங்களுக்கு ஆட்சியில் உதவும் வற்கத்தை உருவாக்கும் பொருட்டு பிரிட்டிஷார் பரப்பிய ஆங்கிலக் கல்வி. அக்கல்வி மேலைநாட்டு நவீனத்துவத்தை இங்கே அறிமுகம் செய்தது. அதுவே இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களை உருவாக்கியது.

இரண்டு, இந்தியாவில் பரவிய அர்ப்பணிப்புள்ள கிறித்தவ மிஷனரிகள். அவர்கள் சாதிய அடிமைத்தனத்தில் இருந்து அடித்தள மக்கள் தப்பிப்பதற்கு ஒரு வாசலை திறந்து வைத்தார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு சமூகப்பாதுகாப்பையும் பொருளியல் உறுதிப்பாட்டையும் அளித்தார்கள். அதில் அவர்களின் நீதியுணர்ச்சி பெரிதும் செயல்பட்டது. அந்த வாய்ப்பை பலர் பயன்படுத்திக்கொண்டு முன்னேறி பிறருக்கு அதற்கான விழிப்பை அளித்தார்கள். அந்த சாத்தியக்கூறே இந்துக்கள் மத்தியில் சாதிய ஒடுக்குமுறையைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய வைத்தது.

மூன்று, இந்தியாவில் பிரிட்டிஷார் அவர்களின் தேவைக்காக உருவாக்கிய இன்றியமையாத நவீனமயமாக்கம். ராணுவம், துறைமுகம், ரயில்வே ஆகியவற்றில் உழைப்பாளர்களுக்கு உருவான தேவையானது  ஏராளமான மக்களை அவர்கள் வாழ்ந்த சாதிமையக் கிராம அமைப்பை விட்டு வெளியேறவும் வேறு சாத்தியக்கூறுகளை கண்டடையவும் செய்தது.

இம்மூன்று காரணிகளின் உருவாக்கமே அம்பேத்கார். அவரது தந்தை ஒரு ராணுவ வீரர். அவரது கல்வியில் ஆங்கில மிஷனரிகளும் இந்து சீர்திருத்தவாதிகளும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அம்பேத்கார் தாழ்த்தபப்ட்ட சமூகத்தை விழிப்புணர்வுசெய்ய வைத்தவர் மட்டுமல்ல அதற்கு முன்பே இந்து சமூக சீர்திருத்த இயக்கங்களால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்ச்சியின் விளைவும்கூட!

அந்த இந்து விழிப்புணர்ச்சி இயக்கங்களுக்கு அப்பால், சுரண்டல் அமைப்பாக, அச்சுரண்டலுக்கு இந்தியாவின் பேதங்களை திறம்பட பயன்படுத்திக்கொள்ளும் மையமாக, மட்டுமே பிரிட்டிஷ் அரசு இருந்தது. அது இந்து சீர்திருத்த இயக்கங்களை மட்டுமல்ல கிறித்தவ சீர்திருத்த இயக்கங்கலையும் ஊக்குவிக்கவில்லை. அதன் ஆதரவு இந்திய நிலப்பிரப்புத்துவ சக்திகளுக்கே இருந்தது.

அத்தகைய பிரிட்டிஷ் அரசு சட்டென்று தாழ்த்தப்பட்டவர்களின் நலனை அக்கறை எடுத்துக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தமைக்குக் காரணம் அதன் மூலம் இந்திய சமூகத்தை பிளவுபடுத்தும் வாய்ப்பு ஒன்று உள்ளது என்பதே. ஏற்கனவே அதே உத்திமூலம் இஸ்லாமியர்களை பிரிப்பதில் அவர்கள் வெற்றிபெற்றிருந்தார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முதல் உப்புசத்தியாக்ரகம் வரையிலான போராட்டங்களில் இருந்த மாபெரும் மக்கள் பங்கேற்பைக் கண்டு அஞ்சித்தான் படிப்படியாக அம்முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

இரட்டைவாக்குரிமை எதுவரை? 

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையைப் பற்றிய விவாதங்களில் நாம் முதலில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி 1932க்குப் பின்னர் எந்தெந்த தருணங்களில் அம்பேத்கார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையைப்பற்றிப் பேசியிருக்கிறார், என்ன போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்பதே.

அம்பேத்கார் அவரது பிற்காலத்தில் சிற்சில இடங்களில் காந்தி குறித்து மனக்கசப்புடன் பேசியிருக்கிறார். அதுவும் அவர் ஆரம்பித்த அரசியல் இயக்கம் வெற்றிபெறமுடியாத நிலையை கண்டபின்பு  தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை இருந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்ற அளவில் சில சொல்லியிருக்கிறார். அவ்வரிகளை மேற்கோளாக்கி இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையை  அம்பேத்கார் கடைசிவரை கைவிடவில்லை என்றும், அது காந்தியால் முறியடிக்கப்பட்டமை ஒரு மாபெரும் தீங்கு என்று எண்ணினார் என்றும் ஒரு பாடம் உருவாக்கப்படுகிறது.

முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல்சட்டக்குழுவின் தலைவராகவும்  பணியாற்றிய காலங்களிலும் சரி, பின்னர் தலித் அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க முயன்ற காலத்திலும் சரி  தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமைக்காக எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அறைகூவல் எதையும் விடுக்கவில்லை. எவ்வகையிலும் அதை ஓர் ஜனநாயகக்கோரிக்கையாக முன்னிறுத்தவில்லை. ஏன்?

இரட்டை வாக்குரிமையின் எல்லைகளை அறிந்திருந்தால் இதற்கான பதில் எளிதில் கிடைக்கும். 1982 ல் மறைந்த தாணுலிங்கநாடார் அவர்களிடம் இந்திய அரசின் நாற்பதாண்டுக்கால சாதனை என்ன என்று கேட்டேன். சிந்தித்துவிட்டு‘தலையெண்ணி ஓட்டுதான் தம்பி. இல்லாட்டா இந்த ஜனநாயகத்திலே பனைஏறுதவனையும் மண்ணுசுமக்குதவனையும் தேடி எவனாவது வருவானா? அவனுக்காக ஏதாவதுசெய்யணும்னு நெனைப்பானா? அங்கேருந்துதான் எல்லாமே தொடங்குது” என்றார்.

ஆம் அது ஒரு மாபெரும் ஜனநாயக பாய்ச்சல். மன்னாராட்சியில் வெறும்பெயர்களாக வாழ்ந்த மக்களுக்கு அதிகாரம் உண்மையிலேயெ அதன் மூலம்தான் கைக்குக் கிடைத்தது. தங்கள் கிராமத்துக்கு வெளியே எதுவுமே தெரியாத மக்களுக்கு தேசத்தை தீர்மானிக்கும் வல்லமை கிடைத்தது. தன் தலையெழுத்தையே சாதிக்குழுவுக்கும் ஆண்டைகளுக்கும் கொடுத்துவிட்டு வாழ்ந்த மக்களுக்கு தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்புவந்து சேர்ந்தது

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. மக்களில் யார் வரிகட்டுகிறார்களோ, யாருக்கு கல்வித்தகுதி இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தாழ்த்தப்பட்டவர்களில் எத்தனை சதவீதம்பேர் அதில் வாக்களக்க முடியும், அத்தகைய தேர்தல்மூலம் தாழ்த்தப்பட்டவர்களில் எந்த தரப்பினர் பதவிக்கு வரமுடியும் என்று  எவரும் ஊகிக்கலாம். தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற பிரிட்டிஷார் ‘முனைந்த’ இக்காலகட்டத்தில் தலித் நில அடிமைகள், மலைவாழ்மக்கள் போன்ற கோடானுகோடி எளிய மக்களுக்கு எந்தவகையான ஜனநாயக உரிமையும் சலுகையும் இல்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட, எளிய மக்களுக்கான விடுதலையை பிரிட்டிஷார் மனதில் கொண்டிருந்தால் வயதுவந்தோர் வாக்குரிமையைச் சட்டமாக்கியிருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கே தயங்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தன்னை ஆதரிக்கும் உயர்மட்டம் மட்டுமே வாக்களித்து உருவாக்கும் அரசுகளையே பிரிட்டிஷ் அரசு உத்தேசித்தது.

ஆக இரட்டை வாக்குரிமை உட்பட எந்த தேர்தல் சலுகையும் உண்மையான மக்களுக்கு அளிக்கப்பட்டவையல்ல. அவை ஜனநாயகபூர்வமானவையும் அல்ல. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமை சலுகை மூலம் பிரிட்டிஷ் அரசின் மத்திய மத்திய சபைகலில் அத்தனை இருக்கைகளையும் வென்று சென்று அமர்ந்திருந்தாலும்கூட அதற்கும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்களுக்கும் ஜனநாயகபூர்வமான உறவு எதுவுமே இல்லை!

அரசியலுக்கு வந்தது முதல் த்ன் கோரிக்கைகளில் எல்லாமே அம்பேத்கார் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்பதையே கோருகிறார். அவ்வாறு அளிக்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாகவே தனித்தொகுதி முதலிய சலுகைகளை கோருவதாகச் சொல்கிறார். சைமன் கமிஷன் முன்பாக அம்பேத்கார் முன்வைத்த கோரிக்கை மனுவில் வலுவாகவே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே வயதுவந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வந்துவிட்டது. அதை அம்பேத்காரே அவரது கைகளால் எழுதி அரசியல் சட்டமாக்கினார். 1952ல் இந்தியாவில் வயதுவந்தோர் அனைவரும் வாக்களிக்கும் முதல் தேர்தல் நடந்தது.  மாபெரும் இந்தியச்சூதாட்டம் என டைம் இதழ் வருணித்த அந்தத் தேர்தலில் தேர்தல் என்றால் என்ன என்றே மக்களுக்குக் கற்பிக்கவேண்டியிருந்தது.

அந்தத் தேர்தலின் முக்கியமான பிரச்சினை அதில் இருந்த உண்மையான சவாலை நமக்குக் காட்டுகிறது. இந்தியாவின் பல லட்சம் பெண்கள் தங்கள் பெயர்களை கணக்கெடுப்பின்போது சொல்ல மறுத்துவிட்டார்கள். இன்னாருடைய அம்மா இன்னாருடைய மனைவி என்றே சொன்னாரக்ள். அதுவே அவர்களின் பெயர், அடையாளம். அதேபோல ஏராளமான தலித் மக்கள் தங்கள் ஞமான் அல்லது குலக்குழுத்தலைவன் பெயரை மட்டுமே சொன்னார்கள். பழங்குடிகள் தங்கள் குலப்பெயரை தங்கள் பெயராகச் சொன்னார்கள்.

இந்த சிகக்லை என்னசெய்வது என பல மாதங்கள் விவாதம் நடந்தது. ஆம், அன்று இந்தியாவின் கோடானுகோடி பேருக்கு தனியடையாளமே இல்லை. அவர்கள் உண்மையில் தனிமனிதர்களே அல்ல. குழுக்கள். அவர்களுக்குத்தான் தேசத்தைத் தீர்மானிக்கும் வாக்குரிமை  அளிக்கப்பட்டது. இந்தியாவின் ஈராயிரம் வருட வரலாற்றில் மாபெரும் புரட்சி என்பது அதுவே.

தேர்தல்முறைகளைப் பற்றி பலகோடி ரூபாய் செலவில் கிராமம் கிராமமாக பிரச்சாரம்செய்யப்பட்டது.வேட்பாளர்களுக்குச் சின்னங்கள், கையில் அமிலத்தில் தோய்த்த அடையாள மை , கட்சிக்கு தனி நிறமுள்ள பெட்டி என்று இந்தியாவுக்கே உரிய உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நேரு தேசம் எங்கும் பல்லாயிரம் கிலோமீட்டர் விமானத்திலும் ரயிலிலும் காரிலும் படகிலும் கழுதைமேலும்கூட பயணம்செய்து ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசினார். காங்கிரசின் பல லட்சம் தொண்டர்கள் கிராமம் கிராமமாக அனுப்பப்பட்டார்கள்.ஆதுவே இந்தியாவை நவீன யுகம் வந்து உசுப்பி எழுப்பிய முதல் தருணம்.

அக்காலத்தில் படிப்பறிவில்லாத, சாதி இன மொழி பேதங்களால் எளிதில் தூண்டப்படக்கூடிய, அடித்தள மக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமை குறித்த கடுமையான அச்சம் இருந்தது. வயதுவந்தோர் வாக்குரிமைக்காக போராடிய, அதைச் சட்டமாக்கிய  நேருவுக்கே அந்த அச்சம் உள்ளூர இருந்தது. அதற்கேற்ப அந்த தேர்தலில் இனவாத மதவாத பிராந்தியவாத அமைப்புகள் புதியவீறுடன் எழுந்து தேர்தலைச் சந்தித்தன. குறிப்பாக மொழிவாரி மாநிலக்கோரிக்கை இந்தியாவைவே ஒன்றை ஒன்று வெறுக்கும் பிராந்திய உணர்வுகளின் குவியலாக ஆக்கிவிட்டிருந்தது.

ஆனால் மக்களை பிரிக்கும் சக்திகளைவிட இணைக்கும் சக்தியான காங்கிரஸ் அன்று வல்லமையோடிருந்தமையால் அந்த ஆரம்ப கட்டச் சோதனையில் இந்தியா வென்றது. அதன்பின்னரே இந்தியாவில் உண்மையான ஜனநாயக அரசியல் ஆரம்பித்தது. அதற்கு உதவியது நேருவின் மீதிருந்த ஈடிணையற்ற கவர்ச்சி. அதை  அக்கால இந்தியா குறித்த நூல்களில் பெரும் வியப்புடன் வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த கவர்ச்சியை அவருக்களித்தது அவர் காந்தியின் சீடர் என்ற முத்திரை. அதையே இந்தியாவெங்கும் கோடிக்கணக்கான மகக்ளிடம் அவர் மீண்டும் மீண்டும் சொன்னார்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. வயதுவந்தோர் தேர்தல்முறைக்காக கோரிக்கை விடுத்தவராகவும் , அதை ‘வாங்கித்தந்தவராகவும்’ அம்பேத்காரை இன்று சில தலித் சிந்தனையாளர்கள் புகழ்கிறார்கள். வயதுவந்தோர் உரிமையை அளிக்க மறுத்த பிரிட்டிஷாரிடம் இந்திய சுதந்திரத்தை  போராடிப்பெற்று ,அதற்கான மாபெரும் ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கிய காங்கிரஸை அதற்கு எதிரான சக்தியாக சித்தரிக்கிறார்கள். வயதுவந்தோர் வாக்குரிமையின் சிற்பிகளான நேருவும் படேலும் எதிரிகளாகிவிடுகிறார்கள்.

ஆனால் அதே மூச்சில் வயதுவந்தோர் வாக்குரிமை மூலம் தாழ்த்தப்பட்டோரின்  இரட்டை வாக்குரிமையைப் பறித்தவர்களாகவும் அவர்களையே குற்றம் சாட்டுகிறார்கள். ஏன் என்றால் அம்பேத்கார் கூடவே இரட்டை வாக்குரிமையையும் ஆசைப்பட்டாராம். ஆனால் அவரே அரசியல் சட்ட வரைவாளராக இருந்தும்கூட அதற்காக  போராடவில்லையாம்!

அதாவது இந்தியாவில் அடையப்பெற்ற எல்லா ஜனநாயக உர்¢மைகளும் வெறும் கோரிக்கை மூலமே அம்பேத்கார் பெற்றுத்தந்தவை , பிரம்மாண்டமான மக்களியக்கமான காங்கிரஸ் அவற்றுக்கு எதிரான கோட்டை , கிடைக்காத எல்லா உரிமைகளும் காங்கிரஸின் துரோகம் மூலம் மறுக்கப்பட்டவை! இந்த அப்பட்டமான, அபத்தமான வெறுப்புப் பிரச்சாரம் இந்நூற்றாண்டில் வேறு எந்த தேசத்திலாவது இந்த அளவுக்கு ஆதரவை ஈட்டியிருக்குமா என்பதே ஐயம்தான்

அம்பேத்கார் கோரியபடி எப்போது வயதுவந்தோர் வாக்குரிமை வந்ததோ அப்போதே தேர்தல் சலுகைகளின் காலம் முடிந்துவிட்டது. ஆகவேதான் அம்பேத்காரை தலைவராகக் கொண்ட இந்திய அரசியல்சட்ட நிர்ணய சபை அன்றுவரை பிரிட்டிஷ் அரசு முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்ட எல்லா தேர்தல் சலுகைகளையும் முழுமையாக ரத்து செய்தது. அதை நியாயப்படுத்தி அம்பேத்கார் பேசிய உரைகளை அரசியல்சட்ட நிர்ணயக்குழு விவாதங்களில் எவரும் இன்று வாசிக்கலாம்.

அரசியல் நிர்ணய சபையில் முஸ்லீம்களின் சலுகைகளை கோரிய பி.பாக்கர் பகதூர் முதலிய இஸ்லாமிய பிரதிநிதிகள் இருந்தனர். பெண்களுக்கும் வேறு பல சிறுபான்மையினருக்கும் தனிச்சலுகைகள் கோரப்பட்டன.  அகாலிகள் மாஸ்டர் தாராசிங் தலைமையில் தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த தேர்தல் சலுகைகளுக்காக கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தியக்குடிகள் அனைவரும் சமம் என்ற முறையில் அவை ஏற்கப்படவில்லை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும் பிற சலுகைகளும் மட்டும் ‘மகாத்மாவின் எண்ணங்களுக்கு பணிந்தும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த நெடுங்காலத் துன்பங்களை கருத்தில் கொண்டும்’ அளிக்கப்பட்டது. நேருவால் தலைமை தாங்கப்பட்ட காங்கிரஸ் அந்த சிபாரிசை சிறுபான்மையினர் உட்பட அத்தனை உறுப்பினர்களைக் கொண்டும் அங்கீகரிக்கச் செய்தது. அதற்கு அது காந்தியின் ஆணை என்ற மந்திரச் சொல்லே பயன்பட்டது.

இன்றுவரை அம்பேத்கார் பெற்றுத்தந்த வெற்றி என்று சொல்லப்படும் எல்லா சலுகைகளும் வந்த விதம் இதுவே. இன்று வரை தலித்துக்கள் அடைந்த எல்லா சமூகப் பொருளியல் வெற்றிகளுக்கும் இன்றைய அவர்களின் அரசியல் எழுச்சிக்கும் காரணம் இதுவே.

1929 வரை இரட்டை வாக்குரிமைக்காக அம்பேத்கார் கோரவில்லை என்பதுடன் அன்று முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்கள் பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே வாக்களித்து தேர்வுசெய்யும் முறை இருந்ததை அம்பேத்கார் எதிர்த்தார். சில வகுப்பாருக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வேண்டுமெ ந்று நான் கேட்கிறபோதிலும் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் அந்த பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை நான் எதிர்க்கிறேன்” என் று  பம்பாய் ராஜதானி கமிட்டியில் சொன்னார் அம்பேத்கார். பொன்னான வழிமுறை  என்பது தனித்தொகுதி உடன்பாட்டுடன் கூடிய பொது வாக்காளர் தொகுதிகளே. இதற்கு குறைவானது போதுமானதல்ல. இதற்கு அதிகமானது நல்ல அரசாங்கத்தின் நோக்கங்களை தோற்கடித்துவிடும்”

பூனா ஒப்பந்நதத்திற்கு வெறும் இரண்டு வருடம் மின்பு ஆணித்தரமாக இப்படிச் சொன்ன அம்பேத்கார் எதை பொன்னான வழிமுறை [The golden mean] என்று சொன்னார் தெரியுமா, அது தான் பூனா ஒப்பந்தம் மூலம் அவர் பெற்றது, சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்ட வரைவாளராக அமர்ந்து அவர் உருவாக்கியது, இன்றும் நீடிப்பது!

இரட்டை வாக்குரிமை கோரும்படி அம்பேத்காரை நிர்ப்பந்தித்ததும் அவர் அம்முடிவை எடுக்கவைத்ததும் தென்னக தாழ்த்தப்பட்டோர் தலைவராக இருந்த எம்.சி.ராஜா. ஆனால் 1932 தேர்தலில் பூனா ஒப்பந்தத்துக்கு முன்னர் அவரே இந்துமகாசபையுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தனித்தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்தார். அவர் எடுத்த அந்த முடிவையே பூனா ஒப்பந்தமும் அவர்களுகு அளித்தது.   அம்பேத்கார் உட்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்கு பூனா ஒப்பந்தம் வெற்றி என்ற எண்ணமே உள்ளூர இருந்தது.

காங்கிரசுடன் முறித்துக்கொண்டபின்னர் தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி  1952 ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில்  போட்டியிட்ட அம்பேத்கார் காங்கிரஸ் வேட்பாளர் கஜ்ரோல்கர் என்பவரிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னரே அம்பேத்கார் பொதுவாக்குரிமையின் ‘எல்லைகளை’ பற்றி உணர ஆரம்பித்தார். அதற்குப்பின்னரே மீண்டும் இரட்டை வாக்குரிமையைப்பற்றிய சொற்களை ஆங்காங்கே சொல்ல ஆரம்பித்தார்.

 

உரிமையை உண்மையிலேயே அளித்தது யார்?

எந்த ஓர் அரசியலுரிமையும் எப்படி அடையப்படும்? அதற்குரியவர்கள் தங்கள் ஒற்றுமை மூலமும் தங்கள் தரப்பு நியாயங்கள் மூலமும் தங்களின் தொடர்போராட்டம் மூலமும் மாற்றுத்தரப்புக்கு அளிக்கும் அழுத்தத்தின் வழியாகவே அதை அடைவார்கள். அந்த உரிமை என்பது எப்போதுமே அந்த இரு தரப்புக்கும் நடுவே உள்ள ஓரு சமரசப்புள்ளியாகவே இருக்கும். இருபக்கமும் உள்ள நியாயங்களை இரு தரப்புமே புரிந்து கொண்டு சாத்தியமானவரை விட்டுக்கொடுத்து அந்த முடிவை எட்டுவார்கள். ஜனநாயகப்போராட்டத்துக்கு மட்டுமல்ல ஆயுதப்போராட்டத்துக்கும் இதுவே விதி.

அப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை அடையப்பட்டதா? கண்டிப்பாக இல்லை. அந்த உரிமையைக் கோரிய அம்பேத்கார் போன்றவவர்களால் தங்கள் தரப்பில் மிக எளிமையான ஒரு மக்கள் ஆதரவைக்கூட தொகுக்க முடியவில்லை. அதை அளித்தவர்களோ அந்த பிரச்சினையுடன் சம்பந்தமே இல்லாத ஓர் அன்னியத்தரப்பு. எந்தவகையான ஜனநாயக நடவடிக்கை அல்லது உரிமைப் போராட்டம் மூலமும் அடையப்பட்ட ஒன்றல்ல அந்த சலுகை. ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தங்களுக்குக் கிடைத்த வாய்ப்ப்பு ஒன்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்பேத்கார் முதலியோர் அடைந்த ஒரு வாக்குறுதிமட்டும்தான் அது.

ஒருபேச்சுக்கு கேட்போமே. தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு தரப்புடன் பிரிட்டிஷ் அரசு போட்டுக்கொண்ட ஓர் ஒப்பந்தத்தை ஏன் காங்கிரஸ் பொருட்படுத்தவேண்டும்? காங்கிரஸின் முதன்மையான எதிரி அந்த அன்னிய அரசு. காங்கிரஸின் போராட்டங்களை பொய்யான வாக்குறுதிகள் மூலமும் ரௌலட் சட்டம் போன்ற கொடிய அடக்குமுறைகள் மூலமும் ஒடுக்கியவர்கள் அவர்கள். காங்கிரஸ் ஒட்டுமொத்தமாகவே அம்பேத்காரையும் அவரது அரசியல் திட்டங்களையும் நிராகரித்திருந்தால் என்ன? உலகின் எந்த அரசியலியக்கமும் அதைத்தானே செய்யும்? சொல்லப்போனால் காங்கிரஸிலேயே கணிசமானவர்களுக்கு அந்த எண்ணமே இருந்தது.

ஏன் காங்கிரஸ் அதைச் செய்யவில்லை என்றால்  அம்பேத்கார் சொன்ன நியாயங்களை காந்தி தன் மனசாட்சியின் அடிப்படையில் புரிந்துகொண்டார் என்பதனாலேயே. நூற்றாண்டுகளாக தங்கள் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்போது பிராயச்சித்தம் செய்யப்படவேண்டும் என்றார் அம்பேத்கார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை சம்பந்தமாக தாழ்த்தப்பட்டோர் தரப்பின் ஏதேனும் ஒரு நியாயவாதம் சொல்லப்படமுடியும் என்றால் அது இது மட்டுமே. அதை முழுமையாக, உணர்ச்சிகரமாக, ஏற்றுக்கொண்டார் காந்தி. ஆகவேதான் அவர் அம்பேத்காரிடம் பேசினார். மீண்டும் மீண்டும்.

எளிமையான ஒரு கேள்வியை இங்கு எவருமே இந்த சந்தர்ப்பத்தில் விவாதிப்பதில்லை. இந்தியத் தேர்தல்களில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தலித்துக்களுக்கும் சலுகை கொடுக்க பிரிட்டிஷாருக்கு என்ன உரிமை என்ற கேள்விதான் அது. அவர்கள் இந்த மண்ணுக்கோ இங்கிருந்த மக்களுக்கோ உரிமையாளர்கள் அல்ல. இங்குள்ள சமூகக் கட்டுமானத்தில் அவர்கள் இடம்பெறவில்லை. இந்த நாட்டின் மேலும் இங்குள்ள சமூகத்தின் மேலும் வன்முறை மூலம் அதிகாரத்தைச் செலுத்திய ஒரு சாம்ராஜ்ய சக்தி மட்டும்தான் அவர்கள்.

பின்னர் பூனா ஒப்பந்தம் குறித்துப் பேசும்போது இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் இந்த விஷயத்தை அழுத்தமாகச் சொல்கிறார்.  ஆதிக்க சக்தியிடம் அடிபணிந்து சிலர் பெறும் சலுகைகள் சமூக மாற்றத்தை உருவாக்காது, பரவலான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமே பயனளிக்கும் என்று. [கிட்டத்தட்ட இ.எம்.எஸ் சொன்ன விஷயங்கலையே மார்க்சிய ஆய்வாளர் அருணன் அவரது ‘காந்தி அம்பேத்கார், மோதலும் சமரசமும்’ என்ற சிறு நூலில் சொல்கிறார். பாரதி புத்தகாலயம் பிரசுரம்]

அப்படியானால் அச்சலுகையைக் கொடுக்க உரிமை கொண்டவர்கள் யார்? இந்திய சமூகம்! இங்குள்ள கோடானுகோடி மக்கள். அம்மக்களின் பிரதிநிதியாக உள்ள ஓர் அமைப்பு. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு. அது அன்றும் இன்றும் காங்கிரஸ். அந்த அமைப்பின் தலைவராக அமர்ந்துதான் அம்பேத்காருடன் பேசினார் காந்தி. அதுவன்றி இன்று சொல்லப்படுவதுபோல அந்தப் பேச்சுவார்த்தை காந்தியின் விருப்புவெறுப்புகள் சார்ந்தது அல்ல.

காந்தியுடனான பேச்சுவார்த்தையின்போது அம்பேத்காரே அதைச் சொல்கிறார் ”– நீங்கள் இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக நின்று பேசுகிறீர்கள் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரலாகப் பேசுகிறேன்” என்று. இந்திய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் அன்னிய சக்தியிடம் ஒரு தவறான பேரத்தால் பெற்ற ஒரு சலுகைக்கு இந்திய சமூகத்தின் உண்மையான அங்கீகாரத்தைப் பெற்ற ஓர் அமைப்பின் ஆமோதிப்¨ப்ப பெறவே அம்பேத்கார் காந்தியிடம் பேசினார்.

காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்த அந்த சமூகம் எப்படிப்பட்டது? நூற்றுக்கணக்கான சமூக அதிகார மையங்களின் ஒட்டுமொத்தம் அது. ஆயிரக்கணக்கான சாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பேர் பங்கு கொண்ட அமைப்பு. அவர்களில் பலர் தலித் சாதிகளின் அதே வாழ்க்கைத்தரத்தில் வாழ்ந்தவர்கள். அனைத்துக்கும் மேலாக நூற்றாண்டுகளாக இருந்துவந்த சாதிய அமைப்பில் பிறந்து அதிலேயே வாழ்ந்து வந்தவர்கள்

அந்த அமைப்பு தன் கோரிக்கைகளை அங்கீகரிக்கும்படிச்செய்ய அம்பேத்கார் என்ன செய்தார்? அவர் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களிடம் எப்போதாவது பேசியிருக்கிறாரா? தன் நியாயங்களை அவர்களுக்குச் சொல்லி அவர்கள் ஏற்கச்செய்திருக்கிறாரா? தன் சமூகத்துக்கு மட்டும் ஒரு தனிச்சலுகை தேவை என்ற அவரது கோரிக்கைகளை அவர்கள் எப்படி  ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்போதாவது அவர் சிந்தனைசெய்திருக்கிறாரா?

மாறாக வகுப்புவாரி அளிக்கை வந்தபோது பொருளியல், சமூக ரீதியாக தங்கள் வாழ்க்கைநிலையிலேயே இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்  தங்களையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகக் கருதவேண்டும் என்று கோரிய எளிய மிகவும்பிற்படுத்தபப்ட்ட மக்களை அவர் எதிர்களாகவே கண்டார். அவர்களைப்பற்றி கடும் விமரிசனத்தையே பதிவுசெய்கிறார். 1930ல் தமிழகத்தின் வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும்  என்ன பெரிய வேறுபாடு இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். இருசாராருமே பஞ்சம் பிழைக்க கண்டிக்கும் மலாயாவுக்கும் கப்பலேறிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையில் இந்திய சமூகத்திற்குப் பதிலாக அம்பேத்கார் பிரிட்டிஷ் ஆட்சியின் சர்வ வல்லமையையே நம்பினார். அதன் ஆதிக்கம் ஒருபோதும் இந்தியாவை விட்டு நீங்காது என்று எண்ணினார். 1932ல்  நவீனத்துவத்தில் நம்பிக்கை கொண்ட எல்லா சராசரி அறிவுஜீவிகளும் அதையே நம்பினார்கள். அம்பேத்கார் தன் சாதிக்கான உரிமையை பிரிட்டிஷார் அளித்து அதை பாதுகாப்பார்கள் என்றே எண்ணியிருந்தார்.

வெறும் பதினைந்தே வருடத்தில் பிரிட்டனின் ஆட்சி இந்தியாவை விட்டு தூக்கி எறியப்பட்டது என்ற உண்மையில் இருந்தே நாம் சிந்திக்கவேண்டும். அந்த யதார்த்தம் காந்திக்கு தெரிந்திருந்தது. உருவாகிவிட்ட மக்கள் எழுச்சி இந்திய சிவில்சமூகம் பிரிட்டிஷாருக்கு அளித்த அங்கீகாரத்தை ரத்து செய்துவிடும் என அவர் அறிந்திருந்தார். அதை அவரது எழுத்துக்களில் செயல்பாடுகளில் தெளிவாகவே காணலாம். உப்புசத்யாகிரகத்தையே காந்தி கடைசிப்போர்  என்றுதான் சொன்னார்.

1920ல் காந்தி காங்கிரஸ் மாகாணசபை தேர்தல்களில் பங்குகொள்வதை அதி தீவிரமாக எதிர்த்தார் . அது காங்கிரஸை அதன் போராட்டகுணத்தை இழக்கச்செய்துவிடும் என எண்ணினார். ஆனால் 1932ல் அவர் பிரிட்டிஷார் அளித்த வாய்ப்¨ப்ப பயன்படுத்தி தேர்தலரசியலில் ஈடுபட சம்மதித்தார். காங்கிரஸ் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குப் பழக்கப்படவேண்டும் என எண்ணினார். காரணம் அதிகாரக் கைமாற்றம் நெருங்குவதை அவர் உணர்ந்திருந்தார்.

பிரிட்டனின் அடக்குமுறையேகூட அந்த உண்மையை அவர்கள் அறிந்திருந்ததனால்தான் என அவர் ஊகித்திருந்தார். விட்டுச்செல்வதற்கு முன்பாக பிரிட்டிஷார் செய்யும் கடைசி தந்திரமே பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் அதை மட்டும் தாக்குப்பிடித்தால் அனேகமாக வரலாறு அதன் இயல்பான பரிணாமமாக இந்திய விடுதலையை அடையும் என்றும் அவர் நினைத்தார்.

அம்பேத்காரின் கோரிக்கைகளை செவிகொள்ள வேண்டிய, அங்கீகரிக்கவேண்டிய, உண்மையான அதிகார அமைப்பு காங்கிரஸே. மக்களின் அமைப்பு அது. அந்த அமைப்பின் அங்கீகாரத்தை எப்படி அம்பேத்கார் பெற்றார்? அவர் ஒரே ஒரு நபரை தன் வாதத்தால் வென்றெடுத்தார். ஒரே ஒரு நபரின் மனசாட்சியை தன் அழுத்தமான நியாயங்களால் தொட்டார். அந்த மனிதர் காங்கிரஸையே அம்பேத்காரை நோக்கி திருப்பினார். அவர் கோரிய தனித்தொகுதிமுறைக்கு அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

அதற்காக காந்தி காங்கிரஸின் பழமைவாத அடித்தளம் மீது தன் முழு ஆன்ம வலிமையாலும் மோதினார். தன் வாழ்நாளின் ஆகப்பெரிய உண்ணாவிரதத்தை நிகழ்த்தினார். இந்தியாவெங்கும் பயணம்செய்து அந்தத் தரப்பை சாதியில் ஊறிய இந்திய மக்கள் முன் எடுத்துரைத்தார். அதன் பொருட்டு தன் உயிரையே பணயம் வைத்தார். தலித்துக்கள் அளவுக்கே வறுமையில் இருந்த மக்கள், சாதிநோக்கை தங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டமாகக் கொண்ட மக்கள், அவர் சொன்னதன் பேரிலேயே தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றனர். அந்த மக்கள் ஏற்காமல் எந்த ஆதிக்க அரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவ்வுரிமையை கொடுத்துவிட முடியாது.

1909 முதல் இந்தியாவில் இட ஒதுக்கீடு பிரிட்டிஷாரால் சில வழிகளில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவையெல்லாமே மிகக்குறைவான அரசாங்கப்பணிகளில் உள்ள ஒதுக்கீடுகள் மட்டுமே. 1918 ல் மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி மாகாண அரசுகள் அமைய வாய்ப்பு வந்தபோதுதான் இட ஒதுக்கீடு ஒரு அதிகாரப்பகிர்வுப்பிரச்சினையாக எழுந்து வந்தது. ஆனால் அப்போதுகூட அது இந்தியசமூகத்தின் மிகச்சிறிய அதிகார வர்க்கத்திற்குள்ளேயே பேசப்பட்டது

1932 ல் இரட்டை வாக்குரிமை முதலிய தேர்தல் ஒதுக்கீடுகள் வந்தபோதுதான் இந்திய சமூகத்தில் முதல்முறையாக இட ஒதுக்கீடு ஓரு முக்கியமான அரசியல் பிரச்சினையாக ஆகியது. அப்போதே பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் பேசப்பட ஆரம்பித்தன. தேர்தல்கள் நிகழ ஆரம்பித்த பின்னர்தான் வெகுமக்கள் அதிகார அரசியலைப் பற்றிய நேரடியான பிரக்ஞையை அடைந்தார்கள்.

அந்தச்சூழலில் இந்தியசமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அமைப்பின் தலைவரின் நிலைபாடு ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட சாதியின் நலன்களை மட்டும்  பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தலைவரின் நிலைபாட்டுக்கு முழுமுற்றாக ஒத்துப்போவதாக இருக்க இயலாது. இன்று, இத்தனை வருடங்களுக்குப் பின்னர்கூட, தனித்தொகுதிமுறைக்கு இருக்கும் எதிர்ப்பை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதாவது அம்பேத்கார் காங்கிரஸ¤டன் நிகழ்த்திய பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் உண்மையில் தலித் அல்லாத மொத்த பிறசமூகத்தினருடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும்தான். அந்த பேச்சுவார்த்தையில் அவரது மறுதரப்பில் இந்திய சமூகத்தின் மனசாட்சியின் குரலாக காந்தி இருந்தமையால்தான் காங்கிரஸின் நிலைபாடு தலித்துக்களுக்குச் சாதகமானதாக அமைந்தது.

ஆம், பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்த சலுகைகளினால் அல்ல, காங்கிரஸ் கொடுத்த சலுகைகளினாலேயே தலித்துக்கள் அவர்களுக்கான அரசியல் பங்களிப்பைப் பெற்றனர். காங்கிரஸ் கொடுக்காமல் ஒருபோதும் அந்தச் சலுகைகள் நடைமுறைக்கு வந்திருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸை எதிர்த்து அச்சலுகைகளைக் கொடுத்திருந்தால்கூட வெறும் பதினைந்துவருடம் மட்டுமே அவற்றால் நீடித்திருக்க முடியும்.

ஆனால் காங்கிரஸ் பூனா ஒப்பந்தம் மூலம் அளித்த சலுகைகள் இன்றுவரை நீடிக்கின்றன. இன்றுகூட அச்சலுகைகளை போராடிப்பெறும் அரசியல் ஒற்றுமையுடன் தலித்துக்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான பிற்பட்டோரின் அரசியல் ஆதிக்கத்துக்குப் பின்னர் அந்த கோரிக்கை ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது என எவரும் அறிவார். அன்று அது சாத்தியமானதற்குக் காரணம் காந்தியே.

அம்பேத்காரும் காங்கிரஸின் மனசாட்சியும்

1931 மார்ச் மாதம் கராச்சியில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. காந்திக்கும் லார்ட் இர்வினுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வது என்று அந்த மாநாடு முடிவுசெய்தது. கடந்த முப்பது வருடங்களாக காங்கிரஸ¤க்குள் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை தேவை என்ற வலுவான குரல் எழுந்துகொண்டிருந்தது. சிறுபான்மையினர் அதை எதிர்த்தனர். வயதுவந்தோர் வாக்குரிமைக்கான தேவையை வலியுறுத்தியவர்கள் காந்தியும், நேருவும், படேலும்.

மறுதரப்பில் சொல்லப்பட்ட வாதம் என்னவென்றால் போதிய கல்வியோ தேசிய உணர்ச்சியோ ஊட்டப்படாத அடித்தள மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால் அதை அவர்கள் தங்கள் இன,மத அடையாளம் சார்ந்தே பயன்படுத்துவார்கள் என்றும் ஜனநாயகம் அடிபட்டுப்போகும் என்றும்தான். அம்மக்களுக்கு அடிப்படைவசதிகளையும் கல்வியையும்தான் முதலில் அளிக்கவேண்டும் என்றனர் அவர்கள். அந்ததரப்பிலும் பல முற்போக்கான சிந்தனையாளர்கள் இருந்தார்கள்.

அதேசமயம் காந்தி பிரிட்டிஷார் அளிக்கும் சலுகையாக மாகாணாமத்திய அரசுகளில் ஒரு ‘டம்மி’ அரசை உருவாக்கி அமர்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே தேர்தல் சீர்திருத்தம் வாக்களிப்பு போன்ற விஷயங்களை அவர் பெரிதாக பொருட்படுத்தவுமில்லை. காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி காங்கிரஸ் பிரிட்டிஷாருடன் கூட்டாட்சிக்கு சம்மதிக்கும் நிலை உருவானதனால்தான் வாக்குரிமை குறித்த கேள்வி எழுந்தது. கடுமையான விவாதத்திற்குப் பின் வயது வந்த அனைவருக்கும் இன,மத,மொழி,பாலினப் பாகுபாடில்லாமல்ல் வாக்குரிமை தேவை என்ற கோரிக்கையை காங்கிரஸ் அதிகாரபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி ஏற்றது.

ஆனால் மோதிலால்நேரு போன்ற பழைய தலைவர்களால் உருவாக்கபப்ட்ட அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு அளிப்பதைப்பற்றி எதுவுமே பேசப்படவில்லை. அதிலிருந்தே காங்கிரஸின் ஒட்டுமொத்த அமைப்பு அத்தகைய சலுகைகளுக்காக அன்று தயாராக இல்லை என்று தெரிகிறது. ஏன் என்றால் அன்றைய காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களை இந்து சமூகத்திற்கு வெளியே இருப்பவர்களாக பார்க்கவில்லை என்பதே. ஒட்டுமொத்தமாக சுதந்திரம் பெறுவதேபோதும் சமூக மாற்றம் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

அதேபோல 1931 ஜூலையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடி எடுத்த தீர்மானங்களில்  எதிர்கால இந்தியாவில் வயதுவந்த அனைவருமே பொதுவாக்காளர் தொகுதியில் வாக்களிப்பார்கள் என்றும், பஞ்சாப் சிந்து வங்கம் பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் இருக்கைகள் வரும்படி தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதிலும் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லப்படவில்லை.

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு 1931 ஆகஸ்ட் 14 ஆம்தேதி அம்பேத்காரை காந்தி சந்தித்தார். அன்று காங்கிரஸின் முதன்மைத்தலைவராக இருந்த காந்தி, மகாத்மா என்று கோடிக்கணக்கானவர்களால் வழிபடப்பட்ட காந்தி, அம்பேத்கார் விரும்பிய நாளில் அவரை தான் வந்து சந்திப்பதாக எழுதினார். ‘இல்லை நானே வந்து சந்திக்கிறேன்’ என்று பதில் எழுதினார் அம்பேத்கார்

[இங்கே ஒரு வம்பு நினைவுக்கு வருகிறது. தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்காரின் வாழ்க்கை வரலார்றில் காந்தியை பூனா ஒப்பந்தப்பேச்சுவார்த்தைக்காக அம்பேத்கார் சந்திகக்ச் சென்றபோது காந்தி அவரை ‘பொருட்படுத்தாமல்’ பழங்களைத் தின்றவாறு தன் கட்சிக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றும் முஸ்லீம்களையும் ஐரோப்பியர்களையும் சந்திக்கும்போது தவிர பிற எவரைச் சந்தித்தாலும் காந்தி அவ்வாறு தான் நடப்பார் என்றும் , அந்த அவமானம் அம்பேத்காரை கொதிக்கச் செய்தது என்றும், கூட இருந்தவர்கள் அவரை சமாதானம்செய்தார்கள் என்றும் சொல்கிறார்.பல தலித் எழுத்தாளர்கள் இச்சம்பவத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதுன்டு.

ஆனால் அந்த உரையாடல் பதிவாகியிருக்கிறது. அதில் அம்பேத்கார் அம்மாதிரி கொதிப்புநிலையில் இருப்பதாக தெரியவில்லை. நல்ல வேளையாக தனஞ்சய் கீர் காந்தி அம்பேத்கார் ஒரு தலித் ஆகையால் அவரை அப்படி நடத்தியதாக எழுதவில்லை. எல்லா இந்துக்களையும் காந்தி அப்படி நடத்தியதாகவே எழுதுகிறார்

அது உண்மையாக இருந்தால்கூட அதில் காந்தி அம்பேத்காரை ஒரு சக இந்துவாக எண்ணியதாக மட்டுமே பொருள்படுகிறது. முஸ்லீம்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் தனியான உபசரிப்பு ஆசாரங்கள் இருப்பதனால் காந்தி அவற்றை பின்பற்றியிருக்கலாம். அது குஜராத்தி வணிகர்களின் வழிமுறை. பொய்யான உபசாரங்களை அவர்கள் நெருக்கமானவர்கலிடம் செயதில்லை. காந்தி எந்த இடத்திலும் அம்பேத்காரைப்பற்றி ஒரு சொல்கூட எதிர்மறையாக சொன்னதில்லை, கடிதங்களில் எழுதியதில்லை என்ற உண்மை இங்கே கருததக்கது

மேலும் ஒன்று, இன்று தலித் எழுத்தாளர்களால் அதிகமாக பேசபப்டும் தனஜ்சய்கீர் இந்துமகாசபை தலைவர் சவார்கக்ரின் வரலாற்றை எழுதியவர். இந்துமகாசபையின் ஆதரவு மனநிலையும் கடுமையான காந்திய வெறுப்பும் கொண்டவர்]

இந்தச் சந்திப்பில் காங்கிரஸின் நிலைபாட்டைப்பற்றி தன்னுடைய கடுமையான மனவேறுபாட்டை அம்பேத்கார் காந்தியிடம் சொன்னார். அம்பேத்காரின் உரையாடல் பதிவாகியிருக்கிறது. உங்களால் காங்கிரஸை தீண்டாமை ஒழிப்பை நோக்கி தள்ள முடியவில்லை, நீங்கள் எங்களுக்காக செய்த ஆத்மார்த்தமான முயற்சிகள் நடைமுறைப்பயன் அளிக்காமல் இருப்பதற்கு காங்கிரஸே காரணம் என்று அம்பேத்கார் சொன்னார். தன் தரப்பை ஆவேசமாகவும் உணர்வுபூர்வமாகவும் அம்பேத்கார் முன் வைத்தார்.

இச்சந்திப்பு காந்தியில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது என்று பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அம்பேத்காரின் நேர்மையும், உணர்வெழுச்சியும், மேதமையும் காந்தியை அக்கணமே அவர் தரப்புக்கு மாறச்செய்தன. உண்மையில் இந்த ஒரே சந்திப்பில் அம்பேத்கார் காந்தியின் ஆழத்துடன் உரையாடிவிட்டார். இந்தச் சந்திப்புக்குப் பின் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையில் எப்போதுமே காங்கிரஸ¤க்குள் அம்பேத்காரின் குரலாக ஒலித்திருக்கிறார் காந்தி. மொத்த காங்கிரஸையும் தாழ்த்தப்பட்டோர் தரப்பை நோக்கி இழுத்திருக்கிறார்.

காந்தி அதற்கு முன் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையைப்பற்றி என்ன நினைத்தார்? அவரது கோணத்தை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் ‘உயரிய தார்மீகத்தால் தூண்டப்பட்ட மக்கள் இணைந்து தங்கள் குறைகளை தாங்களே களைந்துகொள்வதே’ அவரைப்பொறுத்தவரை போராட்டம் என்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுவதென்பது இந்து சமூகத்தின் மாபெரும் இழிவு என்று எண்ணிய காந்தி அதற்கு எதிராக இந்து மனசாட்சி எழவேண்டும் என்றும் அது தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடவேண்டும் என்றும் சொன்னார்.

அம்பேத்காரைச் சந்தித்தபின் காந்தியின் மனதில் எழுந்த மாறுதல் என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்களும் உயர்சாதியினரும் இணைந்து நடத்தும் போரட்டம் தேவை என்பதே. அத்துடன் சாதி என்ற அமைப்பில் இருந்து ஏற்றதாழ்வை ஒருபோதும் களையமுடியாது, ஆகவே சாதியை கலைவதே நல்லது என்றும்தான். அவ்வெண்ணம் ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோது உருவாகி பதினைந்து வருடங்கலில் அவரில் ஆழமாக வேரூன்றியது

1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்திய அரசியல்சட்ட வரைவுக்குழுவின் தலைவராக அம்பேத்காரை அழைத்து பதவிஏற்கச் செய்தது காங்கிரஸ். அந்த நாள் வரை காங்கிரஸின் சுதந்திரப்போராட்டத்தை கடுமையாக விமரிசனம்செய்துவந்தவர் அவர். கடைசிக்கணம் வரை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைத்து பதவியில் இருந்தவர்.காந்தியும் காங்கிரஸ¤ம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதையுமே செய்யவில்லை என நூல்களை எழுதியவர். ஆனால் இந்திய தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் அவரது கருத்துக்களுக்கு மைய இடம் அளிக்கப்பட்டது.

அதற்குக் காரணம் காந்தி. எதிர்கால இந்தியாவின் குடிமைச் சட்டத்தை அம்பேத்கார் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். சுதந்திர இந்தியாவின்  அமைச்சர் பட்டியல் அவர் பார்த்து அங்கீகரித்த பிறகே வெளியாகியது. அரசியல் சாசன வரைவுக்குப் பின்னர் திட்டம் அல்லது வளர்ச்சித்துறை அளிக்கவேண்டும் என்றும் காந்தி எண்ணினார். ஏன், கிராமசுயராஜ்யம் குறித்த தன் இலட்சியத்தை அம்பேத்காரிடம் விவாதித்து அவரை ஏற்கச்செய்யலாமென்றும் காந்தி கனவுகண்டிருந்தார்!

அம்பேத்காரின் சொற்களிலேயே சொன்னால் உயர்சாதியினரின் கூடாரமாகிய ஒரு அமைப்பு, ஒரு சனாதனியால் வழிநடத்திக்கொண்டுவரப்பட்ட அமைப்பு, ஒரு நூற்றாண்டுக்கால போராட்டத்தின் விளைவாகப் பெற்ற ஓர் அரசியல் உரிமையை பகிர்ந்துகொள்ள அவரை அழைத்து சபைநடுவே அமரச் செய்தது. ஆயிரம் சொற்களில் மழுப்பினாலும் இந்த வரலாற்று உண்மை மறைந்து போய்விடாது. இதற்கு இணையான ஒரு வரலாற்று நிகழ்வை இன்னொரு தேசத்தின் வரலாற்றில் சுட்டிக்காட்டிவிடவும் முடியாது.

அரசியல்சட்டத்தின் வரைவில் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நிறுவினார். தேர்தல்கள், கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உட்பட அனைத்திலும் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்டோருக்கு அளித்த சலுகைகள் இருபது வருடங்களுக்கு மட்டுமே. காந்தி அளித்த சலுகை எக்காலத்துக்குமாக!  1947 முதல் மூன்றுவருடம் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த கடுமையான விவாதங்களில் பழமைவாதிகளின் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்தது நேருவின் ஈடிணையற்ற மக்களாதரவே ஒழிய வேறு எதுவுமே அல்ல. 1951ல் அரசியல்சட்டம் ஏற்கப்பட்டது.

அதை காங்கிரஸ் எப்படி ஏற்றுக்கொண்டது என்பதையே நாம் காணவேண்டும். அப்போதும் காங்கிரஸ் உயர்சாதியினர் அதிகமாகப் பங்குகொண்ட கட்சியே. அப்போதும் காங்கிரஸில் சாதியவாதிகள், பழமைவாதிகள் இருந்தார்கள். அவர்கள் வாய்மூடிக்கிடக்க நேர்ந்தது. ஏன் என்றால் அது காந்தியின் காங்கிரஸ். காந்தி அந்த இடத்தை நோக்கி காங்கிரஸைக் கொண்டு வந்து சேர்த்திருந்தார். நூற்றாண்டுக்கால சாதிப்பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த மக்களினால் ஆன ஓர் அமைப்பை அவர் ஆன்மீகமான வளர்த்தெடுத்து அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்துக்குத் தகுதியானதாக ஆக்கியிருந்தார்.

உண்மையில் இந்திய சமூகத்தில் 1952 தேர்தல்களுக்குப் பிறகு உருவான சாதி,சமூகங்களின் அதிகாரப்போட்டி அப்போது வலுவாக உருவாகியிருக்கவில்லை. இந்தியமக்கள் காந்தியின் நினைவு என்ற உணர்வெழுச்சியில் மூழ்கிக்கிடந்த காலம். தன் சொற்களை நேரு பேசுவார் என காந்தி சொன்ன சொற்கள் நேருவை தேசநாயகனாக நிறுத்திய காலம். ஆகவேதான் அந்த சலுகைகளைச் சட்டமாக்க முடிந்தது. 1952க்குப்பின் அதை சட்டமாக்க எந்த சக்தியாலும் முடிந்திருக்காது.

இன்று தலித்சிந்தனையாளர்களில் ஒருசாரார் எழுதும்போது இடஒதுக்கீடு அளித்த நன்மைகளைப் பட்டியலிட்டு அது அம்பேத்காரால் தலித்துக்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும்கொடை என்று மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறார்கள். கண்டிப்பாக அம்பேத்காரின் கோரிக்கையும் வடிவமைப்பில் அவரது பங்களிப்பும் இட ஒதுக்கீட்டில் முக்கியமான இடம் வகித்தன. ஆனால் அவர் அதை எந்தப் போராட்டத்தையும் நடத்தி அடையவில்லை. காங்கிரஸ் அவரை அழைத்தமைக்குக் காரணம் காங்கிரசின் மனசாட்சி அவரது தரப்பை ஏற்றுக்கொண்டிருந்தது என்பதே. அந்த மனசாட்சியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

[மேலும்]

முந்தைய கட்டுரை“தனி” குறும்படம்
அடுத்த கட்டுரைவ‌ல்லின‌ம்