மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை.
இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர். அந்த நிமிடத்தில் ஆரம்பித்த அரட்டையும் சிரிப்பும் தழுவிக்கொள்ளுதல்களும் இடைவெளியே இல்லாமல் மூன்றுநாட்கள் நீடித்தன. வாழ்க்கையில் நாம் எதுவோ அது மட்டுமாக நாம் இருக்கும் தருணங்களில் மட்டுமே நம்மில் நிறையும் குதூகலம் அது என உணரமுடியும். அப்படி உணரும் பலர் கொண்ட சூழலில் இருக்கும் ஆனந்தம் எளிதில் ஒவ்வொருவரையும் தொற்றிக்கொள்கிறது.
இக்காரணத்தாலேயே விஷ்ணுபுரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பொதுவிவாதங்களில் நேரடியான கடும் விமர்சனம் அனுமதிக்கப்படுவதில்லை. அது கட்டுப்படுத்தப்படுவதில்லை, அப்படி அனுமதிக்கப்படாது என அச்சூழலே சொல்லிவிடும். ஆகவே நிகழ்வதில்லை. வந்திருக்கும் எந்தப்படைப்பாளியும் மனச்சோர்வுடன் திரும்பக்கூடாதென்பதே பொதுவான எண்ணம். ஆகவே உரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே உயர்தர இலக்கிய அரட்டை என்ற அளவிலேயே நிகழவேண்டும் என்பது எங்கள் எண்ணம்.
இத்தகைய உரையாடல்கள் சிரிப்பு, அனுபவப்பகிர்வு என நீண்டு சட்டென்று இயல்பாக தீவிரமடைந்து மீண்டும் சகஜமடைவதை கண்டிருக்கிறேன். ஒன்பது மணிக்கு கல்யாணமண்டபக் கூடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். பதினொருமணிக்கு இந்திரா பார்த்தசாரதி வந்தார். அப்படியே அவருடனான வாசகர் சந்திப்பாக அந்த அமர்வை மாற்றிக்கொண்டோம். மதியம் இரண்டுமணிவரை மிக உற்சாகமாக இந்திரா பார்த்தசாரதி பேசினார்.
இந்திரா பார்த்தசாரதி கல்லூரி ஆசிரியராக இருந்தவர். உரையாடல் நிபுணரும்கூட. மேற்கோள்கள், வேடிக்கைநிகழ்ச்சிகள், அனுபவநினைவுகள் என மிகுந்த உத்வேகத்துடன் பேசினார். ஷேக்ஸ்பியர், கம்பன்,பாரதி மூவரும் அவரது அபிமான கவிஞர்கள். பேச்சில் தொடர்ச்சியாக அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நக்கல்களும் கிண்டல்களும்கூட அவர்களின் வரிகளை வைத்துத்தான். ஒரு மொழியில் கவிஞன் எந்த மாற்றத்தை நிகழ்த்துகிறான் என்று அவர்களை முன்வைத்து விவரித்தார். அவரது பேச்சின் நையாண்டி அவர் மீதிருந்து கவனத்தை எடுக்கவே விடவில்லை. [எங்கள் கணக்குவாத்தியார் ராமானுஜனின் சகமாணவர்– அன்று தமிழகத்திலிருந்த அத்தனை கணக்குவாத்தியார்களையும்போல]
ஐம்பது அறுபகளில் வாழ்ந்த பல ஏராளமான மனிதர்கள் உரையாடல்கள் புதியதலைமுறைக்கு முன் வந்து நின்றார்கள். இலக்கியவாதிகள், இசைவாணர்கள், எழுத்தாளர்கள். வழக்கமாக முதியவர்கள் நினைவுக்காக தடுமாறுவதைப்போல இந்திரா பார்த்தசாரதி தடுமாறவில்லை. நினைவுகள் ஒன்றிலிருந்து ஒன்றாக கொட்டிக்கொண்டே இருந்தன. ஏதேனும் ஒரு சுவாரசியம் இல்லாத நினைவு என எதையும் அவர் சொல்லவுமில்லை. காந்தி கொலைசெய்யப்பட்டபோது இந்திரா பார்த்தசாரதி மாணவர். மாணவர் அமைப்புகள் ஒரு கண்டனக்கூட்டம் நடத்த திட்டமிட்டன. ’யாருக்கு எதிரான கண்டனம்? முதலில் இரங்கல்கூட்டம் நடத்துவோம்’ என்றாராம் இ.பா.
சிலவாழ்க்கைகள் புனைவை விட உக்கிரமானவை.குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்த ரயிலில் இருந்து இறங்கி காணாமல் போன வி.வி.சடகோபன் என்ற இசைவாணரைப்பற்றி இந்திரா பார்த்தசாரதி அளித்த சித்திரம். நடிகர், பாடகர், இசைநிபுணர் என பலதளங்களில் சாதனைபுரிந்தவர் சடகோபன். ஒரு மேதை. ஒருவகை மேதைகளே அத்தகைய நாடகார்த்தமான முடிவை நோக்கியும் செல்கிறார்கள் என்று சொன்னார் இ.பா. அவ்வாறு கிளம்பிச்செல்வதைப்பற்றி யுவன் எழுதிய ‘வெளியேற்றம்’ என்னும் நாவலைப்பற்றி விவாதம் திரும்பியது
சில நினைவுகள் வரலாற்றை நுணுக்கமாக நிறைப்பவை. டெல்லியை களமாக்க்கி தந்திரபூமி என்ற நாவலை எழுதும்பொருட்டு வந்த நா.பார்த்தசாரதி திரும்பும்போது அந்நாவலை இந்திரா பார்த்தசாரதி எழுதும்படி கோரினார் என்றார் இ.பா. தலைப்பைத்தவிர வேறு எதுவும் கைவசம் இல்லாமல் இ.பா தடுமாறினார். அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கும்பகோணம் போவதற்காக டெல்லியில் இருந்து சென்னைவந்து தீபம் அலுவலகம் சென்றிருந்தார். ‘உடனே முதல் அத்தியாயத்தை கொடுத்துவிட்டுப்போங்கள்’ என்றாராம் நா.பா. அப்போது எந்த திட்டமும் இல்லாமல் எழுத ஆரம்பித்த அத்தியாயம் அதுவே வளர்ந்து நாவலாக ஆனது என்றார் இ.பார்த்தசாரதி.
காலைமுதல் மறுநாள் இரவு வரை எட்டு வேளை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஒருவேளைக்குச் சராசரியாக நூறுபேர் வரை சாப்பிட்டார்கள். கிட்டத்தட்ட கல்யாணப்பந்தி போன்றுதான். இலக்கியத்துக்காக இத்தனைபேர் கூடுவது ஒரு பெரிய விஷயமென்றாலும் சேர்ந்து உண்ணும் காட்சிதான் இன்னும் மன எழுச்சியை உருவாக்குவதாக இருந்தது. தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாசகர்களுடன் கூடியிருந்து உண்பதைக் காணும்போது இலக்கியம் ஓர் இயக்கமாக ஆனதைக் கண்டதுபோல உணர்ந்தேன்.
மதியத்துக்குமேல் இந்திரா பார்த்தசாரதி சாப்பிட்டு ஓய்வெடுக்கச் சென்றார். நாஞ்சில்நாடனுடன் அடுத்த அமர்வு ஆரம்பித்தது. நாஞ்சில் எழுதி தமிழினி வெளியீடாக வந்திருக்கும் சிற்றிலக்கியங்களைப்பற்றிய நூல் பற்றி ஆரம்பித்தது உரையாடல். சிற்றிலக்கிய இயக்கம் பற்றி வையாபுரிப்பிள்ளை முதல் ப.சிங்காரம் வரை பலர் முன்வைத்த எதிர்மறை கருத்துக்கள் வழியாக நீண்டது விவாதம். தமிழில் மனச்சுணக்கமில்லாமல் சிற்றிலக்கியங்களைப்பற்றிப் பேசுவதற்கு இத்தனை காலமாகியிருக்கிறது. தமிழ்க்கவிதையில் சந்தத்தின் இடம் பற்றி, நவீனக்கவிதையின் ஒலிநயம் பற்றிய விவாதமாக அது மாறியது. நவீனக் கவிதை சந்தத்தை ஏன் உதறியது என்ற வினாவுக்கு பலவிடைகள் எழுந்துவந்தன. ஆனால் சந்தம் அல்லது ஒலியொழுங்கு உள்ள வரிகளே நினைவில் நிற்கின்றன என்றார் நாஞ்சில்நாடன்.
மாலையில் மீண்டும் இந்திரா பார்த்தசாரதி வந்து சேர்ந்தார். இலக்கியத்துக்கும் சமகால அரசியல்சிந்தனைகளுக்கும் இடையேயான உறவைப்பற்றி விரிவாக பேசினார். இந்திரா பார்த்தசாரதிவுக்கு செவிக்கருவி சரியாக வேலைசெய்யவில்லை. ஆகவே கேள்விகளை எழுதிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஒருவர் எழுதிக்கொடுத்த கேள்விக்கு அவர் பதிலையும் எழுதியே கொடுத்துவிட்டார். அதை வாசிக்கும்படி சொன்னேன். ‘நான் உங்களுடைய ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன வாசித்தேன். உங்கள் மனைவி மற்றும் காதல்வாழ்க்கை பற்றி சொல்லமுடியுமா?’ இந்திரா பார்த்தசாரதி ‘சினிமா நடிகரிடம் கேட்கவேண்டிய கேள்வி’ என பதில் சொல்லியிருந்தார். விஷமத்தனமான கேள்வி. ஆனால் அந்தக்கதையை வாசித்தவர்கள் மிகக்குறிப்பான விஷமத்தனம் என்பதையும் உணர்ந்திருந்தனர்.
இரவு தெளிவத்தை ஜோசப் வந்தார். தெளிவத்தை ஜோசப்பின் மலையகநண்பர் ஒருவர் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு கோத்தகிரியில் இருந்து வந்தார். அவரை தெளிவத்தை பிறகு பார்க்கவில்லை. அவர் கோத்தகிரியிலேயே மறைந்துவிட்டார். அவரது கல்லறையைப்பார்க்க தெளிவத்தை ஆசைப்பட்டார். தெளிவத்தையை அழைத்துவந்த திலகர் என்ற நண்பர் தெளிவத்தையை கோத்தகிரிக்கு அழைத்துச்சென்றார். கல்லறைத்தோட்ட காவலாளி குன்னூரில் இருந்து வரவேண்டியிருந்தது. அவர் வந்தபின் கல்லறைத் தோட்டத்தை திறந்து நண்பரின் மீது முளைத்த புல்மேட்டைக் கண்டு அஞ்சலி செலுத்தியபின் தெளிவத்தை வந்திருந்தார்.
தெளிவத்தையுடனான உரையாடல் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடித்தது. தெளிவத்தை உற்சாகமான உரத்தகுரலில் நிறைய கையசைவுகளுடன் பேசக்கூடியவர். மலையக மக்களின் அடையாளத்தேடல், மலையக இலக்கியத்தின் போராட்டம் பற்றி விரிவாகவும் நுணுக்கமான நகைச்சுவையுடனும் பேசினார். ஓர் இலங்கை அரசியல்வாதியின் மனைவி மலையாளி. தெளிவத்தையை அவருக்கு அறிமுகம்செய்தபோது நீங்கள் மலையாளியா என்று கேட்டாராம். ஏனென்றால் ஊர்ப்பெயரை பேருடன் சேர்த்து இலங்கையில் எவரும் அன்று எழுதுவதில்லை.
தெளிவத்தை அதற்கான காரணத்தை சொன்னார். தங்களை தோட்டத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லவே அன்றெல்லாம் படித்த மலையகமக்கள் கூச்சப்படுவார்கள். தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று அவர்கள் இழிவுபடுத்தப்பட்ட காலம். ஆகவே ‘நான் தோட்டக்காட்டான், அந்த மக்களைப்பற்றி எழுதுபவன்’ என்று பிரகடனம் செய்யவே அப்படிப் பெயரை வைத்துக்கொண்டதாக தெளிவத்தை சொன்னார். தெளிவத்தை என்பது ஆயிரம் ஏக்கருக்குமேல் பரப்புள்ள ஒரு தோட்டத்தின் பெயர்.
இலங்கையின் தோட்டங்கள் வெள்ளையர் கைவசமிருந்தன. சுதந்திரத்துக்குப்பின் அங்கே வாழ்ந்த பாதிக்குமேல் தொழிலாளர்களை இலங்கை அரசு அடித்துத் துரத்தியது. அந்நிலங்களை கையகப்படுத்தியது. மலையகமக்கள் ஒருசாரார் இந்தியாவந்தனர். இங்கே தோட்டக்கூலிகளானார்கள். மீதிப்பேர் கிழக்குப்பகுதியில் காடுகளின் குடியேறி கூலி உழைப்பாளிகளானார்கள். காடுதிருத்தி விவசாயம் செய்தனர். அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. உழைப்பதற்கான உரிமை மட்டும்தான் உண்டு.
உள்நாட்டுப்போர் மூண்டபோது அவர்களில் பாதிப்பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். இருநாட்டிலும் குடியுரிமை இல்லாத மக்களாக அகதிமுகாம்களில் ஒன்றரை லட்சம்பேர் இன்றும் வாழ்கிறார்கள். அங்கேயே நீடித்த மலையகமக்கள்தான் அங்கே கடைசிப்போரில் போர்நடுவே சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். நாடிழந்து இலங்கைக்குச் சென்று நாடில்லாதவர்களாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்து இருநூறாண்டுகளாக நாடில்லாதவர்களாக இன்றும் வாழும் ஒரு மக்கள்கூட்டம். இந்த மாபெரும் அபத்தநாடகத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா என்ற பிரமிப்பு உருவானது
இன்றைய தோட்டநிலைமைகளைப்பற்றிப் பேச்சுவந்தது. இன்றும் வாழ்க்கை போராட்டமானதுதான் என்றார். ஆனால் இன்று கல்விகற்கும் வேட்கை அதிகரித்திருக்கிறது. அதற்கான வசதிகளும் கூடியிருக்கின்றன. இன்று தோட்டங்களின் உரிமை எவரிடம் என எவரோ கேட்க சிரித்தபடி ‘இந்தியாவிடம்’ என்றார் தெளிவத்தை . ஆம், பெரும்பாலான தோட்டங்கள் டாட்டா முதலிய இந்தியப் பெருமுதலாளிகளுக்கு உரிமையானவையாக உள்ளன இன்று. அரங்கில் உருவான ஒருவகை அதிர்ச்சியை உணரமுடிந்தது.
இரவு வீடுதிரும்புவர்கள் சென்றபின் ஐம்பதுக்குமேற்பட்டவர்கள் மண்டபத்திலேயே தங்கினர். அனைவரும் ஜமுக்காளங்களை விரித்து கூடத்தில் படுத்துக்கொண்டோம். நான் படுத்து கேட்டுக்கொண்டிருந்தேன் பல இடங்களில் முணுமுணுவென பேச்சொலிகள். எழுந்து சென்று பார்த்தபோது பல முனைகளில் பலர் பேசிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
இந்தமுறை எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தாலும் நான் குறையாக உணர்ந்தது அந்தக் கல்யாணமண்டபத் தங்கலைத்தான். செலவு அதிகமாகிவிடக்கூடாதென்பதனாலும் அனைவரும் ஒரே இடத்தில் தங்கவேண்டும் என்பதனாலும் அதை ஏற்பாடு செய்திருந்தோம். விருந்தினர்கள். எழுத்தாளர்கள் அனைவருக்கும் நல்ல விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்திருந்தோம். சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்ரமணியம், யுவன், ரமேஷ் அனைவரும் ஒரு விடுதி.தெளிவத்தை ஜோசப் மற்றும் அவருடன் வந்திருந்த இலங்கைநண்பர்கள் திலகர், அல் அஸுமத் போன்றவர்களுக்கும் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்தவர்களுக்கும் இன்னொரு விடுதி.
நான் நண்பர்களுடன் மண்டபத்தில் தங்குவதுதான் வழக்கம். என்னுடன் கூடத்தில் படுத்த எவருமே இரவு சரியாகத் தூங்கமுடியவில்லை. கடுமையான குளிரும் கொசுக்கடியும். அதை எவரும் குறையாகச் சொல்லாவிட்டாலும் நான் குறையாக உணர்ந்தேன். என்னால் அரைமணிநேரம்கூட கண்ணயரமுடியவில்லை. அடுத்தமுறை இன்னும் வசதியான தங்குமிடங்கள் ஏற்பாடுசெய்யவேண்டும். ஆனால் அதற்கான செலவு விஷ்ணுபுரம் அமைப்பால் கையாளப்படக்கூடியதாக இல்லை. என்ன செய்வதென்று யோசிக்கவேண்டும்
[ 2 ]
சென்ற மூன்று வருட நிகழ்ச்சிகளைவிட இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் நிகழ்ச்சியின் மிகச்சிறந்த அம்சம் இரண்டுநாட்களிலாக கிட்டத்தட்ட 17 மணிநேரம் நடந்த இலக்கிய உரையாடல்தான். 21 ஆம்தேதி இரவில் யுவன் சந்திரசேகர் வந்தான். மறுநாள் காலையில் மதுரையில் இருந்து சுரேஷ்குமார இந்திரஜித்தும் பாண்டிச்சேரியில் இருந்து ரமேஷ்பிரேதனும் வந்தார்கள். சு.வேணுகோபால், நாஞ்சில்நாடன், தேவதேவன், சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்], க.மோகனரங்கன், சாம்ராஜ், இசை, இளங்கோ கிருஷ்ணன் என பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் வந்தனர்.
காலையில் யுவன் சந்திரசேகரும் , ரமேஷ் பிரேதனும், சுரேஷ்குமார இந்திரஜித்தும் கலந்துகொண்ட உரையாடல் நிகழ்ந்தது. கதைகளில் விவரணையற்ற கூறுமுறையை எப்படி அடைந்தேன் என்றும் அதிலிருந்து எப்படி வெளியேறினேன் என்றும் சுரேஷ்குமார இந்திரஜித் விரிவாகப் பேசினார். அத்தகைய நடைக்கான அறைகூவலை முதலில் எழுப்பிய ஜி.நாகராஜன் மற்றும் அதை எழுதிய அசோகமித்திரன் ஆகியோரில் இருந்து பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள் வரை பேசப்பட்டது.
தன் கதைகளுடைய கதையற்றகதை என்ற அமைப்பைப் பற்றியும் கதையை வாசகன் கட்டமைத்துக்கொள்வதைப்பற்றியும் யுவன் சந்திரசேகரும் பிரேதனும் பேசினார்கள். வாசகர்களின் கேள்விக்கான பதில் என்ற அளவிலேயே உரையாடல்கள் இருந்தன.ஆனால் ஒருகட்டத்தில் அவை எழுத்தாளர்களின் நீண்ட தன்னுரைகளாகவும் மாறின
பதினொரு மணிக்கு இந்திரா பார்த்தசாரதி வந்தார். தெளிவத்தை ஜோசப்பும் வந்தார். அவர்கள் இருவரும் வந்ததும் உரையாடல் அவர்களை மையம் கொண்டதாக ஆகியது. தெளிவத்தையின் தந்திரபூமி வெளியான தீபம் இதழை தன் நண்பர் ஒருவர் கொண்டுவந்து காட்டியபோது ‘பார்த்தசாரதி எழுதியதை நான் வாசிக்கமாட்டேன்’ என்று தெளிவத்தை சொன்னாராம். ’இவர் வேறு பார்த்தசாரதி’ என்று அந்த நண்பர் சொன்னதைத் தொடர்ந்து வாசித்து அவரது எழுத்துடன் அறிமுகம் கொண்டதைப்பற்றி தெளிவத்தை சொன்னார். உற்சாகமான உரையாடல் பல தளங்களை நோக்கிச் சென்றது. கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை ஒரு சிறுகதையில் இருந்து பின்னகர்ந்துசென்று அமைத்ததைப்பற்றி இந்திரா பார்த்தசாரதி சுவாரசியமாகச் சொனனர்.
உரையாடல்களைப் பதிவுசெய்யவில்லை. பதிவுசெய்து நமக்குக் கிடைப்பவை உரையாடல்கள் அல்ல. படைப்பாளிகளை நேரில்கண்டு அவர்களின் உணர்ச்சிவேகங்களுடன் அவர்கள் உரையாடல்களை கேட்பதுதான் உண்மையான அனுபவம். அவற்றின் மதிப்பு பின்னாளில்தான் மேலும் மேலும் நமக்குத் தெளிவாகும். நான் க.நா.சுவை ஒரேஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன். அந்தச் சந்திப்பின் ஒவ்வொரு நுட்பத்தையும் நான் இன்றும் நினைவுகூரமுடியும். காலம் செல்லச்செல்ல அவை என் மனதில் மேலும் துல்லியம் கொள்கின்றன.
மதிய உணவுக்குப்பின் மீண்டும் நாஞ்சில்நாடனுடன் ஒரு சந்திப்பு. இரண்டு மணிக்குமேல் அனைவரும் விழாவுக்குச் செல்லக்கூடிய மனநிலையை அடைந்துவிட்டிருந்தனர். இம்முறை விழாவுக்கு முந்தைய உரையாடல்கள் அற்புதமாக அமைந்துவிட்டமையால் விழாவுக்கு பெரிய வேகம் இல்லாமல் ஆகிவிடும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அரங்கசாமியும் அதையே சொன்னார்.
பாலாவும் ஒளிப்பதிவாளர் செழியனும் மதியம் வந்து விடுதியில் இருந்தனர். பாலசந்திரன் சுள்ளிக்காடு பைபாஸ் அறுவைசிகிழ்ச்சைக்கு ஆளானதனால் வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். திருமணமண்டபத்தில் இருந்தவர்களை சிறுபேருந்தில் விழா நடந்த மணி பள்ளியின் நானி கலையரங்குக்குக் கூட்டிச்சென்றோம். ஐநூற்றைம்பது இருக்கைகள் கொண்ட கூடம். அறுநூறுபேருக்குமேல் விழாவுக்கு வந்திருந்தனர். சொல்புதிது, எழுத்து, நற்றிணை, வம்சி நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பதிப்பக நண்பர்கள் சொல்புதிது சீனு, எழுத்து வே.அலெக்ஸ், நற்றிணை யுகன் ஆகியோர் வந்திருந்தார்கள்.
வழக்கம்போல செல்வேந்திரன் இயல்பான நகைச்சுவையுடன் மிகையில்லாத விவரிப்புடன் விருந்தினரை அழைத்து பேசவைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு விருந்தினரைப்பற்றியும் சுருக்கமான அறிமுகம் அளித்தார்.
அரங்கசாமி விஷ்ணுபுரம் அமைப்பின் நோக்கத்தையும் கடந்தகாலச் செயல்பாடுகளையும் விவரித்து வரவேற்புரை வழங்கினார். விஷ்ணுபுரம் விருதுகளை முன்பு பெற்ற ஆ.மாதவன்,பூமணி,தேவதேவன் ஆகியோருக்கு வணக்கத்தைத் தெரிவித்தார்.
விருதை இந்திரா பார்த்தசாரதியும் பாலாவும் சேர்ந்து வழங்கினார்கள். விருது ஒருலட்சம்ரூபாயும் சிற்பமும் கொண்டது. மரம் உலோகம் மற்றும் படிகத்தால் ஆனது
தெளிவத்தையின் மீன்கள் தொகுதியை சுரேஷ்குமார இந்திரஜித் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். நற்றிணைப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தெளிவத்தையின் பத்து சிறுகதைகள் கொண்டது. நான் இதற்கு ஒருமுன்னுரை எழுதியிருக்கிறேன்
குடைநிழல் நாவலை பாலா வெளியிட யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். தெளிவத்தையின் முக்கியமான சிறிய நாவல் இது. எண்பத்துமூன்றுக்குப் பிறகு இலங்கையில் நிகழ்ந்த அடக்குமுறைச் சூழலை விவரிக்கும் முக்கியமான புனைவு இது. பேசியபலரும் இந்த நாவலையே மேற்கோள்காட்டியிருந்தனர். எழுத்து பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.
தெளிவத்தையின் மனைவி ஃபிலோமினாவுக்கு சுதா ஸ்ரீனிவாசன் பொன்னாடைபோர்த்தினார். தெளிவத்தை தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இலக்கியவாழ்க்கைக்கும் தன் மனைவியின் உறுதுணையை மிகுந்த மன எழுச்சியுடன் சொல்வதுண்டு.
நாஞ்சில்நாடன் தெளிவத்தை ஜோசப்புக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தலைமையுரை ஆற்றிய இந்திரா பார்த்தசாரதி சுருக்கமாகவும் அழகாகவும் பேசினார். முந்தையநாளில் இருந்தே அவர் திரும்பத்திரும்ப வியந்து சொல்லிக்கொண்டிருந்தது, இலக்கியத்துக்கு இவ்வளவு இளம் வாசகர்கள் கூடியிருந்ததையும் அவர்கள் இவளவு கூர்ந்து வாசிக்கக்கூடியவர்களாகவும் இருந்ததையும்தான். மேடையிலும் அதைக்குறிப்பிட்டார்.
இந்திய இலக்கியம் உலக அளவில் அறியப்படவில்லை. இந்தச்சூழலில் தமிழ் இலக்கியமும் அடையாளம் காணப்படவில்லை. காரணம் இந்தியா தன் இலக்கியத்தை அடையாளம் காணவில்லை , தமிழர்கள் தங்கள் இலக்கியத்தை அடையாளம் காணவில்லை. சமீபத்தில் இருக்கும் இலங்கையின் மூத்த தமிழ்ப்படைப்பாளியைக்கூட நாம் அறிந்திருக்காத நிலையைச் சுட்டிக்காட்டினார் தெளிவத்தை ஜோசப்பின் கதைகளில் சமகாலவன்முறைக்கு எதிராக நிற்கும் சாமானியனைச் சித்தரிப்பவை என்றார்.
ரவி சுப்ரமணியம் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதையான ‘தாதவாக்யம்’ த்தின் மொழியாக்கமான ‘தந்தைசொல்’ லை அவரே இசையமைத்துப்பாடினார். பாட்டிடையிட்ட உரை என்பது நமக்கு அன்னியமல்ல. சிதம்பர ஜெயராமனை நினைவுறுத்தும் கம்பீரமான குரல். அழகிய உச்சரிப்பு. உணர்ச்சிகரமான கவிதையின் எல்லா உணர்ச்சிகளும் வெளிப்படும் ஆலாபனை. விழாவுக்கே ஓர் அழகைக் கொடுத்தது அக்கவிதை.
பாலசந்திரன் சுள்ளிக்காடின் கவிதை உணர்ச்சிகரமானது. நக்சலைட் இயக்கத்தின் தொண்டனாக 16 வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பியவர் சுள்ளிக்காடு. தந்தையும் தாயும் இறந்தபோதுகூட வரவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின் நரகத்திலிருந்து மலம்வழியும் உடலுடன் கவிஞன் கனவில் வந்த அவரது தந்தையின் கூரிய பேச்சாக அந்தக் கவிதை அமைந்திருந்தது.
பாலா சுருக்கமாகப் பேசினார். ’பரதேசி’யை ரெட் டீ என்ற நாவலை அடியொற்றி எடுத்ததையும் தன் படைப்புகளுக்குச் சாரமாக மலையாள தமிழ் சிறுகதைகள் இருந்ததையும் விவரித்தார். பரதேசி நாவலுக்காக நுவரேலியா சென்று அங்குள்ள மக்களிடம்பேசியபோது தோட்டச்சூழலில் இன்றும் பின் தங்கியநிலை நீடிப்பதைக் கண்டதாகச் சொன்னார். மலையகமக்களின் குரலாகிய தெளிவத்தை ஜோசப்பை வாழ்த்தினார்.
சுரேஷ்குமார இந்திரஜித் முதலில் மலையக அரசியல் மற்றும் பண்பாட்டுச்சூழலை சுருக்கமான தரவுகளுடன் விவரித்து அந்தச் சூழலைப் புரிந்துகொண்டால் மட்டுமே மலையக இலக்கியத்தைப் புரிந்துகொள்ளமுடியும் என்று விளக்கினார்
அதன்பின் தெளிவத்தையின் நான்கு சிறுகதைகளை முன்வைத்து விரிவான ஆய்வுரை ஒன்றை முன்வைத்தார். தெளிவத்தை ஜோசப்பின் கதைகளின் முக்கியத்துவமென்பது அவர் விரித்துரைப்பதில்லை, குறிப்பாலுணர்த்துவதை நம்பி எழுதுகிறார் என்பதுதான் என்றார். அவரது விவரணைகள் எளிய கச்சிதமான உவமைகள் கொண்டவை என்று சொல்லி பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார்
[சுரேஷ் உரையாற்றுகிறார்]
விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒவ்வொருமுறையும் பேசுவது வழக்கம். இம்முறை சுரேஷ் பேசினார். சுரேஷ் மிகச்சிறந்த வாசகர். ஆனால் முதல்முறையாக மேடையில் பேசுபவர். பேச்சை எழுதிவைத்து மனப்பாடம் செய்துகொண்டிருந்தார். ஆனால் பேச ஆரம்பித்த சிலகணங்களிலேயே பேச்சுக்குள் மூழ்கி சிறப்பாக தடையில்லாமல் பேசினார். விழாவின் சிறந்த உரைகளில் ஒன்று அது.
நான் வாழ்த்துரை வழங்கினேன். காரூர் நீலகண்டபிள்ளையின் கொலைச்சோறு என்ற கதையைச் சொன்னேன். யானைப்பாகனின் உணவு என்பது தூக்குத்தண்டனைக்கைதிக்கு அளிக்கப்படும் கடைசி உணவை ஒவ்வொருநாளும் உண்பது. இலக்கியவாதியின் வாழ்க்கையும் அதுவே. புகழ் இல்லை, பணம் இல்லை, அதிகாரத்தின் எதிர்ப்பு உண்டு, சமூகத்தின் அவமதிப்பு உண்டு. அதன் நடுவிலும் எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கிறான். அத்தகைய படைப்பாளிகளைக் கண்டடைந்து வணங்குவதே விருதின் நோக்கம் என்றேன்
கடைசியாக தெளிவத்தை பேசினார். இந்தவிருது புறக்கணிக்கப்பட்ட அவமதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவம், தனக்கு மட்டும் அளிக்கப்பட்டதாக இதை கருதவில்லை என்றார். தன் இலக்கியவாழ்க்கையை மலையகமக்களின் போராட்டத்துடன் இணைத்து விளக்கி அந்தப்பாதையில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொன்னார்.
செல்வேந்திரன் நன்றி சொல்ல விழா முடிவடைந்தது. விழாவுக்கு வந்த நண்பர்களைச் சந்தித்து பேசி பிரிய மேலும் ஒருமணிநேரமாகியது. பாலா இந்திரா பார்த்தசாரதி, ஞானி இருவரையும் சந்தித்து வணங்கினார். பாலா, வானவன் மாதேவி, இயலிசைவல்லபி இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டார். பாலாவைச்சுற்றி ஒரு கூட்டம் புகைப்படம் எடுத்துக்கொண்டது. என்னுடைய நூல்களும் மிகச்சிறப்பாக விற்பனையாயின.
மீண்டும் மண்டபத்துக்குவந்து இரவுணவு. ஒவ்வொரு நண்பராக கிளம்பிச்சென்றார்கள்.வருத்தமும் நிறைவும் கூடிய தருணங்கள் அவை. ஆறுதலாக இருப்பது உடனே அடுத்த கூட்டத்தைத் திட்டமிட்டுவிடுவோம் என்பதுதான். மார்ச்சில் ஊட்டியில் ஒரு சந்திப்பை நிகழ்த்துவது பற்றி பேசிக்கொண்டோம். எஞ்சிய நண்பர்கள் இருபதுபேருடன் ஒரு பாலமுரளி என்ற நண்பரின் விருந்தினர் விடுதிக்குச் சென்றோம்.
அனைவருமே தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் தூங்கமுடியவில்லை. பேசிப்பேசி ஒருவழியாகத் தூங்குவதற்கு இரவு ஒருமணி ஆகியது. மறுநாள் விழித்தெழுந்து பேசிக்கொண்டே இருந்தோம். விழாவைப்பற்றி, இலக்கியம் பற்றி. நிகழ்ச்சிக்குப்பின் வேகம் குறைந்து சோர்வு உருவாகவேண்டும். ஆனால் பிரியமான நண்பர்கள் கூடவே இருந்ததனால் அது நிகழவில்லை.
மறுநாள் காலையில் தெளிவத்தை ஜோசப்பையும் நண்பர்களையும் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று வழியனுப்பிவைத்தோம். அவர்கள் விமானத்தில் சென்னை சென்று இலங்கை செல்வதாகத் திட்டம். பாலாவும் செழியனும் விமானத்தில் கிளம்பினர். சிறில், இந்திராபார்த்தசாரதியை விமானத்தில் கூட்டிச்சென்று அவர் மகளிடம் ஒப்படைத்து தகவல் தெரிவிக்கவேண்டும் என ஏற்பாடு. ரவி சுப்ரமணியனும் சுரேஷ்குமார இந்திரஜித்தும் மதியம் கிளம்பினர்
மாலையில் நண்பர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிச்சென்றார்கள். கிருஷ்ணனும் நானும் செல்வேந்திரனும் அரங்காவும் சீனிவாசனும் மட்டும் எஞ்சினோம். இத்தகைய விழாக்களின் முடிவு ஒருவகை காவியத்துக்கம் கொண்டது. ஒவ்வொருவராகக் கிளம்பிச்சென்றபின் நாம் மட்டுமே இருக்கும் நிலை. ‘ஒவ்வொருமுறையும் நாம மட்டும்தான் மிச்சமிருக்கோம் இல்லியா கிருஷ்ணன்?’ என்றேன். ஆமாசார். அதான் இந்த வாட்டி முன்னாடியே போயிடலாம்னு நினைச்சேன், முடியலை’ என்றார் அவர்.
[ஈரோடு கிருஷ்ணன்]
நானும் அஜிதனும் இரவு எட்டரை மணிக்கு கோவை-நாகர்கோயில் ரயிலில் ஏறினோம். தேவதேவனும் எங்களுடன் வந்தார். எட்டு இருபத்தொன்பதுக்கு ரயில் கிளம்புவதுவரை செல்வேந்திரனுடனும் ஸ்ரீனிவாசனுடனும் சுதாவுடனும் பிளாட்பாரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பேசிமுடிக்காமலேயே ரயிலில் ஏறிக்கொண்டேன். ரயில் கிளம்பியபோதுதான் இதோ விழா முடிகிறது என நினைத்துக்கொண்டேன்.
இந்தவிழாவில் விஷ்ணுபுரம் அமைப்பின் அனைத்துநண்பர்களும் ஏதேனும் வகையில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். பணம் தந்து, உழைப்பு தந்து. கோவையில் அனைத்து மக்கள்தொடர்புகளையும் கவனித்துக்கொண்டவர்கள் செல்வேந்திரனும் ராதாகிருஷ்ணனும் விஜய் சூரியனும். ராதாகிருஷ்ணன் கல்லூரிகள் தோறும் சென்று விழாவைப்பற்றிய விஷயங்களைக் கொண்டுசென்று சேர்த்தார். நிதிவிஷயங்களை நிர்வாகம் செய்தவர் ஈரோடு விஜயராகவன். [விஜயராகவன் மொழியாக்கம் செய்த ரேமண்ட் கார்வர் கதைகள் தொகுதி காலச்சுவடு வெளியிட்டாக 29 அன்று வெளியாகிறது]
சாப்பாடு ஏற்பாடுகள் அனைத்தையும் ராம் கவனித்துக்கொண்டார். அதனாலேயே மொத்த விழாவிலும் வேறெந்த நிகழ்ச்சியிலும் அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை. பயண ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டவர் ஸ்ரீனிவாசன் [குருநித்யா இணையதளம் இவரால்தான் நடத்தப்படுகிறது] சிவாத்மா விஷ்ணுபுரம் விருதுக்கான சின்னத்தை வடிவமைத்து தயாரித்துக் கொண்டுவந்தார். எம்.ஏ.சுசீலா கடிதத்தொடர்புகளை கவனித்துக்கொண்டார். வடகரைவேலன் இணையத்தொடர்புகளில் உதவினார்.
சிறில் அலெக்ஸ் இந்திராபார்த்தசாரதியை அழைத்துவந்து திரும்பக் கொண்டுவிடும் பொறுப்பைச் செய்தார். பாலாவுக்கான பயண ஏற்பாடுகள் தனசேகரால் செய்யப்பட்டன.கடைசியில் பாலாவுடன் அவரை விமானமேற அனுமதிக்கவில்லை அதிகாரிகள் — பாலாவை கிளப்பிக்கொண்டுசெல்லும் முயற்சியில் அவர் சற்று தாமதமாகச் சென்றமையால். சேலம்பிரசாத் பயண ஏற்பாடுகள் மற்றும் அரங்க ஏற்பாடுகளில் உதவினார்.
செந்தில்குமார் தேவன் மண்டபத்திலும் வெளியிலும் பணிகளை ஒருங்கிணைத்தார். ஈரோடு கிருஷ்ணன், சுனீல் கிருஷ்ணன், கடலூர் சீனு, நிர்மால்யா, தங்கவேல், மணிகண்டன், ராஜமாணிக்கம், ராஜகோபாலன்,ஷிமோகா ரவி, ஸ்டீல்ஸ் சிவா ஆகியோர் விழா ஏற்பாடுகளில் உதவினர். அனைத்திலும் இருந்தவர் அரங்கசாமி.
இந்த விழாவில் நிதி தவிர எவ்வகையிலும் பங்களிக்காதவன் நான் மட்டுமே. என்ன நடக்கிறது என அவ்வப்போது கேட்டுத்தெரிந்துகொள்வதுடன் சரி. 21 அன்று காலையில் சென்றிறங்கியபோது அனைத்தும் தயாராக இருந்தன. இந்திரா பார்த்தசாரதி சொன்னார் ‘என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இன்னொரு இலக்கியவிழாவை கண்டதில்லை. புதியதலைமுறை கார்ப்பரேட் துறைசார்ந்த பழக்கம் அடைந்திருப்பதைத்தான் இது காட்டுகிறது’ உண்மைதான். ஆனால் அங்கே இல்லாத ஒன்று இங்கே உள்ளது, நட்பு.
தினமணி செய்தி
[ விஷ்ணுபுரம் விழா 2013- புகைப்படங்கள் ]
புகைப்படங்கள் மேலும்