விஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு

முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில ”திடீர் தமிழுணர்வாளர்கள்” விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. விரிவாக விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டையும் கச்சிதமாகவே செய்து முடித்தோம். குறைந்த பட்சம் 400 பேர்களாவது விழாவிற்கு வரவழைப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அரங்கத்திலிருந்த 540 இருக்கைகள் போக மண்டபத்திற்கு வெளியேயும் சுமார் 100 பேர் வரை பார்வையாளர்கள் இருந்தனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க விஜயசூரியன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையே சேரும். அத்தனை உழைத்திருந்தனர்.

***

இஃதொர் விருது விழா மட்டுமல்ல. மொழியின் மூத்த படைப்பாளர்கள் முதல் இளம் தலைமுறை படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், ஓவியம், புகைப்படம், நாடகம், இசை, சினிமா போன்ற பிற கலைகளில் பெயர்பெற்றவர்கள், வாசகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விவாதித்து, சந்தேகங்கள் அபிப்ராயங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, கவிதைகளை வாசித்து, ஒன்றாக உண்டு, உறங்கி, நடை பயின்று இரண்டு நாட்கள் நிகழும் மாபெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் அல்லது ஊடகங்கள் பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து நடத்துகிற லிட்ரரி ஃபெஸ்டுகளுக்கு இணையானதொரு கலாச்சார நிகழ்வு.

இந்த ஆண்டு மேலும் கூடுதலாகப் புதிய நண்பர்கள். இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால், தேவதேவன், பிரேதன், சாம்ராஜ், ரவி சுப்ரமணியம், சுரேஷ்குமார் இந்திரஜித், மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மொழிபெயர்ப்பாளர்கள் நிர்மால்யா, விஜயராகவன், எம்.ஏ.சுசீலா, பதிப்பாளர்கள் எழுத்து அலெக்ஸ், நற்றிணை யுகன், சொல்புதிது சீனு, காந்தி டுடே சுனீல் கிருஷ்ணன் என இந்தாண்டு பலரையும் சந்தித்து அளவளாவுகிற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் ஒன்றுகூடுகிற வேறு விழா ஏதேனும் இருக்கிறதா என்ன?!

 

***


இந்திரா பார்த்தசாரதிக்கு 84 வயதாகிறது. தெளிவத்தைக்கு 80 வயது. நாஞ்சில் எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், இரண்டு நாட்களும் உற்சாகம் குன்றாமல் சளைக்காமல் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தனர். இந்த அசாத்திய எனர்ஜியை வியந்தோதிக்கொண்டிருந்தபோது ஜெ ஒரு அப்சர்வேஷனைச் சொன்னார். பொதுவாக அறுபதைக் கடந்தவர்களெல்லாம் மிகப்பெரிய அனத்தல்களாக, விட்டால் போதுமென நம்மைத் தெறித்து ஓடச் செய்பவர்களாக, யாரையும் கடித்து துப்பக்கூடியவர்களாகத்தான் பெரும்பாலும் காணக்கிடைக்கிறார்கள். ஆனால், இலக்கியத்தை துறையாகக் கொண்டியங்கியவர்களில் பெரும்பான்மையானோர் இந்த வயதிலும் கச்சிதமாக இயங்கக்கூடியவர்களாகவும், உரையாடக்கூடியவர்களாகவும் இருப்பதைக் குறிப்பிட்டார். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், ஞானி, ஆ.மாதவன் போன்றவர்கள் மேலதிக உதாரணங்கள்.

***

 

ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் இப்பெரும் படைப்பாளிகள் மீது மறுவாசிப்பை ஏற்படுத்தியது என்றால் தெளிவத்தைக்கு வழங்கப்பட்ட விருது அவருக்கு புதுவாசிப்பை ஏற்படுத்தியது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட குழும நண்பர்கள் வரவழைக்கப்பட்ட அவரது படைப்புகளை ஊன்றி வாசித்திருந்தனர் என்பது இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்தும், அவருடன் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு புதிய நல்லெழுத்துக்காரனைக் கண்டடைந்த பரவசத்தினை அனைவரிடமுமே காண முடிந்தது. குறிப்பாக கோபி, சுனீல் கிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோரது கட்டுரைகளும், வி.சுரேஷின் வாழ்த்துரையும் மிக முக்கியமான ஆக்கங்கள்.

தெளிவத்தை எழுதிய, எழுதி இன்னும் அச்சு வடிவம் காணாத படைப்புகள் தமிழில் வெளி வந்திருப்பதும் வரவிருப்பதுமே இவ்விழாவின் மிக முக்கியமான மற்றொரு அம்சம்.

***

மேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் முன் வரிசையில் அமர்ந்து கொள்கிறேன் என்ற இயக்குநர் பாலாவின் கோரிக்கையை முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் ’நான் பேசல’ என வைத்த கோரிக்கையைப் போலவே இரக்கமற்று நிராகரித்தேன். எழுத்தாளர்கள் அமர்ந்திருக்கிற சபையில் சினிமாவுலகின் பிரதிநிதிகளாகத் தாம் இருப்பதில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் கூச்சம் கொள்கிறார்கள். அப்படி கூச்சமடைய வேண்டிய எவ்வளவோ மண்ணாந்தைகள் நாட்டில் வெட்கமில்லாமல் மேடைகளில் முன்நின்று சொல் வென்றவர்களாக இருக்கையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான படைப்புகளை உருவாக்கும் இந்த தனிக்குரல்களுக்கென்ன தயக்கமென்பதே என்னுடைய அபிப்ராயமாக உள்ளது.

சட்டென்று நான் மேடைக்கழைத்த அதிருப்தி பாலாவின் முகத்தில் தெரிந்தது. ஆனால், பிரமாதமாகப் பேசினார். தன்னுடைய படைப்புகள் எந்தெந்த சிறுகதைகள்/நாவல்களின் பாதிப்பில் உருவானவை என்பதைப் பற்றி, தன் படங்களில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பங்களிப்பதைப் பற்றி, எழுத்தாளர்கள் தயக்கம் தவிர்த்து சினிமாவில் அதிகம் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கே உரித்தான குறைவான சொற்களில் நிறைவாகப் பேசியமர்ந்தார்.

உண்மையில் அவர் தெளிவத்தையின் கதைகளை கேட்டுப்பெற்று வாசித்திருந்தார். தான் மேடைப்பேச்சாளனோ அல்லது இலக்கியப் பேச்சாளனோ இல்லையென்பதால் அதிகம் பேசவில்லை. நேர்பேச்செனில் இன்னமும் விரிவாக உங்களிடம் என் அபிப்ராயங்களைச் சொல்லியிருப்பேன் என தெளிவத்தையிடம் சொன்னார். பாலாவுடன் ஒளிப்பதிவாளரும் கவிஞருமான செழியனும் விழாவிற்கு வந்திருந்தார்.

 

***

இந்திரா பார்த்தசாரதியின் தலைமையுரையும், வி.சுரேஷின் வாசகானுபவமும், ஜெயமோகனின் வாழ்த்துரையும், ஆகியன விழாவின் ஹைலைட். ரவி சுப்ரமண்யம் சுள்ளிக்காடின் கவிதைகளுக்கு (மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்) தானே மெட்டமைத்துப் பாடினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஜோசப்பின் நான்கு கதைகளைக் குறித்த தன் திறனாய்வைப் பேசினார். தெளிவத்தையின் நெடிய ஏற்புரை ஈழ இலக்கிய சூழலைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்கியது.

***

ஒவ்வொரு முறை விழா முடிந்ததும் கவனிப்பேன் அரங்கசாமிக்குப் புதிதாக ஒரு ஐம்பது நண்பர்கள் உருவாகியிருப்பார்கள். இது என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இணைய தளங்களில் ஜெயமோகனை யாராவது வசைபாடுகிறார்களென்றால் அங்கே களமாடப் போவது நானும் அரங்கனும்தான். ஜெயனை ஓர் இழிசொல் சொன்னார்களெனில் நான் அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவர் மானசீகமான என் எதிரியாக மனதிற்குள் உருவெடுத்து விடுவார். என்னைக் காட்டிலும் அதிகம் முட்டி மோதுகிற அரங்கனுக்கு அவர்கள் பிற்பாடு நெருங்கிய நண்பர்களாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். எவரோடும் நல்லுறவை உருவாக்கிக்கொள்ளக்கூடிய கலை அறிந்தவர் அவர்.

விழா முடிந்ததும் ஓர் இலங்கை எழுத்தாளர் அரங்கனின் கையைப் பிடித்து ‘எங்கட நாட்டிலருந்து ஆரேனும் இந்தியாவிற்கு வந்தா அரங்கசாமின்னு நம்மட ஆளு ஒருத்தர் உண்டுன்னு சொல்லியனுப்புவோமென’ கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார்.

***

 

நான்தான் விழாத்தொகுப்பாளன் என்பதில் இளவெயினிக்கு உடன்பாடில்லை. நண்பர்களே என முதல் வார்த்தையை துவங்கியதும் அழுது கூப்பாடு போட்டு அரங்கத்தை விட்டு அம்மாவுடன் வெளியேறினாள். அவளாவது பரவாயில்லை. கும்பகோணக் கவிராயன் சென்ஷியின் மகன் விழாவிற்கு வந்த குழந்தைகள் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவில்லையென தன் அதிருப்தியை விழா முழுக்க வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தான்.

***

விழாவிற்கான அனுமதிகளைப் பெற காவல்துறையை அணுகிய போதும், ஊடகங்களைச் சந்தித்த போதும், விழாவிற்கு அழைக்க கல்லூரிகளுக்கு, உள்ளூர் அமைப்புகளுக்குச் சென்ற போதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கென்று தனியான அறிமுகம் ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியிருப்பதை உணர்ந்தோம். உண்மையான அக்கறையுடனும், சரியான திட்டமிடலுடனும், மனம் ஒப்பி செய்கிறப் பணிகளுக்கு சமூகத்தில் உருவாகிற அங்கீகாரமும் மரியாதையும் அது.

சகல விதங்களிலும் விழா சிறப்புற நிகழ்ந்தேற உழைத்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் மானசீகமான நன்றியைச் சொல்லி நிறைந்த மனத்துடன் உறங்கச் செல்கிறேன்.

 

முந்தைய கட்டுரைதெளிவத்தையின் மீன்கள் பற்றி…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2013 – புகைப்பட தொகுப்பு