பின்னூட்டங்கள் பற்றி…

காந்தியம் என்றால் என்ன கட்டுரைக்கான எதிர்வினைகளைக் கண்டேன்.

எனக்கென்னவோ தமிழில் வாசக மற்றும் சிந்தனை உலகில் இன்று மிக அதிகம் வெறுக்கப்படும் நபர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் வாசகன் என்று யாரேனும் பொது வெளியில் சொன்னால் கீழ்த்தரமாக வசைபாடப்படுவோமோ என்ற பயத்துடன் இருக்கிறார்கள் எனத் தோன்றுகிற. எனக்கும் இது பீடிக்கும் போல.

ஏற்கனவே உங்கள் நண்பர்களை துதிபாடிகள் என்கிறார்கள், இப்போது சமீபகாலமாக இதுவும் கூட.

இரண்டு சந்தேகங்கள் வருகிறது. இந்த வசைகள் எல்லாம் நீங்களே ஆள் வைத்து வைது கொண்டவைகளா, அதேபோல ஆதரவு இடுகைகள் எல்லாம் நமது நண்பர்கள் வேறுபெயரில் இடுவதா?

ரொம்ப கஷ்டம், ஏதேனும் மலையாள மாந்த்ரீகரை/ ஜோசியரைப் பார்ப்பது நல்லது.

துதிபாடியாகவும், வாசகனாகவும் தொடர்வதில் அச்சப்படும்!

கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

இந்த இரண்டு இலக்கிய வாசகர்கள் ”வெள்ளை யானை”-யை படிப்பது (இன்னமும் படித்திருக்கமாட்டார்கள் என்ற அனுமானத்தில்) எழுத்தாளனாக உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பெரும் ஆசி.

இவர்களது முன்னோட்ட பின்னூட்டங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது எனக்கு கிட்டிய பேறு.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன், முத்துக்குமார்,

பின்னூட்டங்களை நான் எப்போதுமே கூர்ந்து வாசிப்பவன். அவற்றால் எரிச்சலடைய வேண்டியதில்லை. அவை நம்முடைய சமூகத்தின் பொதுவான மனநிலைகளை சரியாக வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பின்னூட்டங்களையே பாருங்கள். காந்தியம் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் தெரிவது எரிச்சல். அவர்கள் ஒருவிஷயத்தை நம்பியிருக்கிறார்கள். அந்த விஷயம் மறுக்கப்படும்போது அடையும் எரிச்சலும் கோபமும்தான் அது. அவ்வாறு மறுக்கப்படும்போது அதை தர்க்கபூர்வமாக எதிர்கொள்ளும் அறிவும் சிந்தனையும் அவர்களிடமிருப்பதில்லை. ஆகவே ‘என்னென்னமோ சொல்றே. நீளமா சொல்றே….பெரிய இவன்னு நினைப்பு’ என்று எதிர்வினையாற்றுகிறார்கள்.

ஒரு டீக்கடையில் ஒருவர் தன் சாதி, மத, அரசியல் நம்பிக்கைகள் மறுக்கப்படும்போது இப்படியேதான் எதிர்வினையாற்றுகிறார். நாம் தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக பதில் சொல்வதுதான் அவரை இன்னும் பதற்றமடையச் செய்யும். அவரைப்போலவே மூர்க்கமான நம்பிக்கையை மட்டும் முன்வைத்தால் ஒண்டிக்கொண்டி சண்டைபோடமுடியும். தர்க்கத்தை எதிர்கொள்ளும் வாசிப்போ சிந்தனையோ இல்லை. அதனால் அவர் நாம் சொல்வதை காதுகொடுக்க மாட்டார். நம் வார்த்தைகளை புரிந்துகொள்ளவும் மாட்டார். ஆகவே ‘புரியாம பேசினா பெரிய ஆள்னு நெனைப்பா’ என்று எகிறுவார். ஆனால் வேறுவழியே இல்லை, இவர்களைப் போன்றவர்களிடம்தான் மீண்டும் மீண்டும் பேசியாகவேண்டும்.

திண்ணை எதிர்வினைகளில் தெரிவது நம் சூழலில் உள்ள பாமரத்தனமான மனப்பதிவுகள்தான். இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். ஒன்று, தலித்துக்கள் ஏழைகள், பரிதாபம் கொள்ளவேண்டியவர்கள், அவர்களுக்கு மரபு, அறிவு ஒன்றும் கிடையாது. வரலாறு இலக்கியம் எல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை. சோறு போட்டு பணம் கொடுத்தால்போதும் என்ற சிந்தனை. நம் சூழலில் உள்ள அப்பட்டமான சாதிமேட்டிமைநோக்கு இது.

இன்னொன்று இலக்கியம் என்றால் காசு சம்பாதிக்கும் ஒருவேலை என்ற புரிதல். நம்மூர் பாமரர்கள் இதை சொல்லிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். ‘அதை எழுதி காசு பார்க்கிறார்கள்’ என்று அடிக்கடி கண்ணில் படுகிறது. நான் இந்துவில் பயணம் பற்றி எழுதியபோது ஒரு ஆசாமி எழுத்தாளர்கள் பயண இலக்கியம் எழுதி பணம்பார்ப்பதற்காக பயணம்செய்கிறார்கள் என எழுதியிருந்தார். இந்த அசடுகளுக்கு எழுத்து என்றால் என்ன, அது எப்படி நடக்கிறது என்ற எதுவும் தெரியாது. இவர்கள் செய்யும் பிழைப்புத்தொழில் மட்டுமே தெரியும். அதைப்போன்ற ஒன்றுதான் எழுத்து என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் வணிக எழுத்தேகூட ஒரு தொழிலாக, பிழைப்பாக இருக்கமுடியாதென்ற எளிய விஷயம் இந்த ஆசாமிகளின் மண்டையின் மீதுள்ள இரும்பு உறையைத்தாண்டி உள்ளே செல்வது சாத்தியமே இல்லை. இலக்கியத்தளத்திலோ கருத்துத்தளத்திலோ செயல்படுபவர்கள் பணமென எதையும் இங்கே எதிர்பார்க்கமுடியாது.

பணம் பண்ணுகிறார்கள், அவர்கள் அன்னிய நிதியமைப்புகளுடன் ஒத்துப்போய் வெளியே தெரியாமல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கே எழுத்தாளர்கள் என அறியப்படுவதேயில்லை.

இந்தப்பின்னூட்டங்கள் காட்டுவது இதுதான், இன்றும் நம் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் எல்லாவகையிலும் பாமரர்கள். அறியாமையால் பாமரர்கள் அல்ல, அறியவிருப்பமின்மையால் பாமரர்கள். அவர்களின் அறிவின்மையின் முகங்களைக் காண பின்னூட்டங்கள் மிகமிக முக்கியமானவை.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28