வெள்ளையானை – கடிதங்கள்

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறியுள்ளீர்கள்: //இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். வெள்ளை யானைக்கு எழுதப்பட்ட கடுமையான எதிர்விமர்சனம் அது.//

என் கட்டுரை ’வெள்ளை யானை’ குறித்த விமர்சன கட்டுரை அல்ல. நிச்சயமாக ‘கடுமையான எதிர் விமர்சனமும்’ அல்ல. மாறாக அது ஒரு வாசகனாக என்னுள் உருவாக்கிய வரலாற்றுப்பார்வை குறித்த தேடலில் எனக்கு கிடைத்த தரவுகளின் கோர்வை. இதை அந்தக் கட்டுரையிலேயே தெளிவாக கூறியிருக்கிறேன்.

கிறிஸ்தவ இறையியலாளர் என்பது வசை என்பது செய்தி. ஆனால் அவர் கிறிஸ்தவ இறையியல் பயின்றவர். கிறிஸ்தவ இறையியலாளர்களுள் முக்கியமானவர்கள் குறித்து நானே கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு முக்கியமான கிறிஸ்தவ இறையியலாளருக்கு அஞ்சலிக் கட்டுரை நான் எழுதி தமிழ்ஹிந்துவில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒருவரை கிறிஸ்தவ இறையியலாளர் என நான் கூறுவதே வசை என்று நீங்கள் கூறுவது தவறானது.

பணிவுடன்
அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்

விளக்கத்துக்கு நன்றி. கிறித்தவ இறையியலாளர் என்பதைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதையும் வசையாக அல்லாமல்தான் சொல்லியிருப்பீர்கள் என நம்புகிறேன்

ஜெ

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வெள்ளை யானை நாவலை இன்னும் வாசிக்கவில்லை.ஆனால் அது குறித்த இந்துத்துவவாதிகளின் விமர்சனங்களை வாசித்தேன்.தீவிர இந்துதுவவாதிகளுக்கு வெள்ளை யானை மதயானையாக மாறிவிட்டது போன்று தென்படுகிறது.1870 இல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சம் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் பெரும்பாலானோர் சாதிய அடுக்கில் கீழ் இருந்த தலித்துகள்.

இந்தப் பேரழிவு தலித் அல்லாத இந்துக்களின் மனச்சாட்சியைத் தீண்டவில்லை.குறைந்த அளவிலாவது மானுட அறத்துடன் நடந்துகொண்டவர்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்,ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் அமெரிக்க வர்த்தகர்களுமே என்று வெள்ளை யானை காட்டுவதாகவும் அது தவறானதெனவும் இந்துவவாதிகள் எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.வெள்ளை யானை அவ்வாறு விவரித்திருந்தால் அதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.இந்துக்களை பொறுத்தவரை மதரீதியான ஒற்றுமை என்பது ஒரு புறப்பூச்சாக மட்டுமே இருக்கிறது.சாதிய நலன்களை மூடிமறைக்கும் ஒரு தந்திரமாகவே இன்றைய காலகட்டத்தில்கூட பெருமளவிற்கு இந்து என்ற கோசம் இருக்கிறது.எனவே ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அது எந்த நிலையில் இருந்திருக்கும் என்று ஊகிப்பது ஒன்றும் கடினமானதல்ல.

எமது காலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பார்த்த மானிடப்பேரழிவின் போது இந்த இந்துத்துவசக்திகள் எவ்வாறு நடந்துகொண்டன என்பது அனைவருக்கும் தெரியும்.இன்றைய இந்த பேரழிவின் பரிமாணத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது கூட ஒரு கத்தோலிக்க ஆயரான ராயப்பு ஜோசப் அவர்கள்தான்.இன்று அப்பேரழிவை உலகத்தின் பார்வைக்கு எடுத்து வைத்து மனச்சாட்சியை உலுக்குவதும் சானல்- 4 என்ற மேற்கத்திய ஊடகம்தான்.புண்ணில் புளிபட்டால் வேதனையாகத்தான் இருக்கும்.வெள்ளை யானை வாசித்த இந்துத்துவவாதிகளினது நிலை அதுவேதான்.அவர்கள் புளியைக் குறை சொல்வதை விடுத்து புண்ணைக் குணப்படுத்த முயற்சித்தால் நன்று.

சிவேந்திரன்

அன்புள்ள ஜெ,
வெள்ளை யானை மூன்று நாட்களில் படித்து முடித்தேன் . ஜெயமோகன் நாவல் மூன்றே நாட்களில் முடிக்க முடிகிறதா ?. எங்கும் எளிமை . இத்தகைய நாவல் எளிமையுடன் படைக்க வேண்டும் . இந்நாவல் எல்லோரிடத்தில் போய் சேர வேண்டும் .இதை நினைத்தே நீங்கள் எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . என் மனதில் விழுந்த அறை , பலர் மனதில் விழுந்து மனித மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பது என் எண்ணம் . நாவல் எனக்கு ஒரு சித்திரத்தை வரைந்து அதன் வழியே சமூக அமைப்பு அதன் அவலங்களையும் என்னால் உணர முடிந்தது . நாவலின் எளிமையின் எழுத்தால் இது சாத்தியமானது என்று எண்ணம் .இன்னும் ‘madras’ என்று சொல்லி பெருமிதம் கொள்ளும் என்னைப்போல் உள்ள பல சென்னை வாசிகளுக்கு இது ஒரு சவுக்கடி . சில வேலைகளில் சிலர் சில மனிதர்களிடத்தில் தோற்று போனால் அவர் முகம் வசை பாடும் . அவளவு உக்கிரம் முகத்தில் தெரியும் .அதற்க்கான காரணம் நாவல் படித்த பின்பே உணர முடிந்தது .

உதயசூரியன்

அன்புள்ள சிவேந்திரன், உதயசூரியன்

உங்கள் கடிதத்துக்கு நன்றி. வெள்ளையானை உருவாக்க விழைவது ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனையைத்தான். நாம் ஏன் அப்படி இருந்தோம், நம்முடைய மனசாட்சிக்குமேல் ஒரு பெரிய கருந்திரையைப்போட்டுமூடிய நம்பிக்கைகள் ஆசாரங்கள் தத்துவங்கள் என்ன என்பதே அந்நாவலின் கேள்வி. நம்மை நாமே மறுபரிசீலனைசெய்ய, மேம்படுத்திக்கொள்ள, இன்னும் ஜனநாயக உணர்வும் ஒருமையுணர்வும் கொண்ட சமூகமாக ஆக அந்த மறுபரிசீலனை தேவை என்ற எண்ணமே அந்நாவலை எழுதத்தூண்டியது.

ஆனால் இன்றுகூட அந்த சுயபரிசீலனை சற்றும் சாத்தியமில்லை என்பதையே அரவிந்தன் போன்றவர்களின் பொதுவான எதிர்வினையின் மூர்க்கம் காட்டுகிறது. அவரது கட்டுரை மட்டுமல்ல அதற்கான அடிக்குறிப்புகள் கூட ஒரே குரலைக்கொண்டவை.

சென்றகாலத்தில் இங்கிருந்த சாதிய ஒடுக்குமுறை, அதற்கான மனநிலையும் சமூக அமைப்பும் உருவாக்கிய அழிவுகள் அத்தனைக்கும் பழியாக அன்னியரை மட்டுமே சுட்டிக்காட்டவேண்டும், அவர்களின் சிறிய அளவிலான ஜனநாயக உணர்வைக்கூட சுட்டிக்காட்டலாகாது, அதேசமயம் நம்முடைய அத்தனை பிழைகளையும் குறைகளையும் மறைத்து நம்மிடமிருக்கும் மிகமிகக்குறைவான சில மனிதாபிமானக்குரல்களை மட்டுமே சொல்லவேண்டும் என அவர்கள் கொள்ளும் வெறியைக் காண்கையில் முரஹரி அய்யங்கார் போன்றவர்கள் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருப்பார்கள் என ஊகிக்கமுடிகிறது.

இவர்களின் மனதில் சென்ற நூற்றாண்டு முழுக்கப் பேசப்பட்ட எந்த மனிதாபிமானக்கருத்தும் சென்று சேரவில்லை. வரலாற்றிலிருந்து வெறுப்பரசியலுக்கான தர்க்கங்களுக்கு அப்பால் சுயமறுபரிசீலனைக்கான ஒருவரியைக்கூட இவர்கள் கற்றுக்கொண்டதில்லை என்ற எண்ணம் உருவாகிறது.

இலக்கியங்கள் எப்போதுமே விமர்சனத்தைத்தான் முன்வைக்கின்றன. மறுபரிசீலனைக்காக கோருகின்றன. அதற்காக மனசாட்சியை நோக்கிப்பேசுகின்றன. அதை அன்றும் இன்றும் பழைமைவாதிகள் தர்க்கங்களால்தான் மூடிவைத்திருக்கிறார்கள்.

ஜெ

ஜனவரியில் நீங்கள் வெளியிட உத்தேசித்தது தவறுதலாக 2013 என போட்டதால் ஏற்கனவே வெளிவந்துவிட்டது என நினைக்கிறேன். இல்லை 2013 டிசம்பரில் வரும் கடிதத்தை 2013 ஜனவரியிலேயே வெளியிடும் கால இயந்திரத்தை கண்டுபிடித்திருந்தால் வாழ்த்துகள்.

வெள்ளையானை – கடிதங்கள்

என் எதிர்வினை:

மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

1. //கிறித்தவ இறையியலாளர் என்பதைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதி //

பாணபத்திர ஓணாண்டி போல உணர்கிறேன். நான் இஸ்லாமிய அடிப்படைவாதி என அவரை கூறவில்லை.

//இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளர்//


என கூறியுள்ளேன். நிச்சயமாக அது வசை அல்ல. அவரது அரசியல் செயல்பாடுகளை அவதானித்தே அந்த வரியை எழுதினேன். அனைத்து திருமணங்களும் அரசு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அதில் முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் தொடங்கி அத்வானியை ‘அவன்’ ‘இவன்’ என ஏகவசனத்தில் மேடைகளில் முழங்குவது முதல் பழனிபாபாவை இலட்சிய மனிதராக முன்னிறுத்துவது வரை அவர் செய்வது இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல்தான். ஆனால் அவர் தனி வாழ்க்கையில் அடிப்படைவாதியா என்பது எனக்கு தெரியாது. குழந்தை திருமணத்தை ஆதரித்து, கோட்ஸேயை இலட்சிய மனிதனாக முன்னிறுத்தி, மகாத்மா காந்தியை ஏக வசனத்தில் பேசுகிற ஒரு அரசியல்வாதியை நான் இந்து அடிப்படைவாத அரசியல் செய்பவர் என குறிப்பிட தயங்கமாட்டேன். ’அடிப்படைவாத அரசியல் செய்பவர்’ என்பது உண்மை. வசை அல்ல.

2. மீண்டும் சொல்கிறேன். ஏற்கனவே கட்டுரையில் சொல்லியிருந்ததுதான்.

// இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.// —இந்த நாவல் உருவாக்கும் வரலாற்று உணர்வை தரவுகளின் அடிப்படையில் சரிபார்ப்பதே என் நோக்கம்.

//சென்றகாலத்தில் இங்கிருந்த சாதிய ஒடுக்குமுறை, அதற்கான மனநிலையும் சமூக அமைப்பும் உருவாக்கிய அழிவுகள் அத்தனைக்கும் பழியாக அன்னியரை மட்டுமே சுட்டிக்காட்டவேண்டும், அவர்களின் சிறிய அளவிலான ஜனநாயக உணர்வைக்கூட சுட்டிக்காட்டலாகாது, அதேசமயம் நம்முடைய அத்தனை பிழைகளையும் குறைகளையும் மறைத்து நம்மிடமிருக்கும் மிகமிகக்குறைவான சில மனிதாபிமானக்குரல்களை மட்டுமே சொல்லவேண்டும் என அவர்கள் கொள்ளும் வெறி//

— என சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் என் கட்டுரை தெளிவாகவே சொல்கிறது: //மாறாக 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் சமுதாய மக்களின் சுதந்திரமற்ற நிலை இங்குள்ள தலித் சமுதாயங்கள் மீது திணிக்கப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த சமுதாய எதிர்ப்பும் இருந்தது. ஏனெனில் தலித் சமுதாயத்தின் வீழ்ச்சி என்பது தென்னிந்திய விவசாய அமைப்பின் பெரும் வீழ்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. அந்த அமைப்பின் ஜனநாயகத்தன்மை கொண்ட சாத்தியங்கள் அழியவும், அந்த அமைப்பின் தேக்கநிலையால் அதில் இயல்பாக இருந்த சுரண்டலும் படிநிலைத்தன்மையும் தீண்டாமையும் அதிகரிக்கவுமான வழியை அது உருவாக்கியது.

// தீண்டாமையையும் படிநிலைத்தன்மையையும் –வெள்ளையர்கள் உருவாக்கியதாகவோ அதை பூசி மொழுகவோ கட்டுரை எந்த இடத்தில் முயற்சிக்கவில்லை.

ஆனால் இந்த எதிர்வினையைக் கூட ’பழைமைவாதி’யின் ’தர்க்கம்’ என ஒதுக்குவது தங்களுக்கு நியாயம் என்றிருந்தால் சந்தோஷமே. (நிச்சயமாக இந்த கட்டுரை விமர்சனமல்ல… ஏன் இவர்களை குறித்தெல்லாம் எழுதவில்லை என்றெல்லாம் இந்த கட்டுரை புனைவு எழுத்தாளரை வினவவில்லை என்பதை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள இயலும்.)

பணிவுடன்
அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைஅன்னியர்கள் அளித்த வரலாறு
அடுத்த கட்டுரைகடிதங்கள்