வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை திறந்திருப்பதைக்கண்ட க்ளெமெண்டிஸ் தன் பனிக்குல்லாயைக் கழற்றி கோட்வால்டின் தலையில் அணிவித்தார்.

கிளெமெண்ட் கோட்வால்ட்

அந்த உப்பரிகையில் இருந்துதான் பொஹீமிய மாநிலக் கம்யூனிஸ்டுக்கட்சி பிறந்தது என்று சொல்லப்பட்டது. ஆகவே கம்யூனிஸ்டுப் பிரச்சார இயந்திரம் அந்தப்படத்தை பல்லாயிரம் பிரதிகள் எடுத்து நாடெங்கும் கொண்டுசென்றது. பள்ளிப்பாடங்கள் அருங்காட்சியகங்கள் எங்கும் அந்தப்படம் காணப்பட்டது.

நான்குவருடங்களுக்குப்பின் அன்று கம்யூனிஸ்டுக் கட்சியின் வலுவான வெளியுறவு அமைச்சராக இருந்த விளாடிமிர் கிளெமெண்டிஸ் கம்யூனிஸத் துரோகி என குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரைப்பற்றிய அனைத்து தகவல்களும் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டன. கலைக்களஞ்சியங்கள் திருத்தப்பட்டன. புகைப்படங்கள் அனைத்திலும் அவர் இல்லாமலாக்கப்பட்டார். வரலாற்றுப்புகழ்பெற்ற அந்தப்புகைப்படத்தில் க்ளெமென்டிஸ் இருந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு அங்கே சுவர் இருந்தது, ஆனால் கோட்வால்டின் தலைமேல் க்ளெமென்டிஸ்  வைத்த அந்தக்குல்லாய் அங்கேதான் இருந்தது.

மிலன் குந்தேரா குறிப்பிடும் அந்தப்புகைப்படங்கள். கிளமெண்டிஸ் மறைந்துவிட்டிருக்கிறார்

அதே கதையை சிலநாட்கள் முன் பிபிசி செய்தியில் வாசித்தேன். 2011ல் வடகொரிய கம்யூனிச அரசின் அதிபர் கிம் ஜோங் இல் இறந்தபோது அவரது சகோதரியின் கணவனான சாங்க் சோங் தாயேங் என்பவர் கிம் ஜோங்கின் மகனும் புதிய தலைவருமான கிம் ஜோங் உன் பதவிக்கு வந்து அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தார். வடகொரிய அரசின் உண்மையான அதிகாரமையமாக சாங்க் சோங் தாயேக் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சாங்க் சோங் தாயேங் எல்லா பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் டிசம்பர் மாத இறுதியில் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியவந்தது. அவரும் அவரது ஆதரவாளர்களும் சென்ற நவம்பரிலேயே பொது இடத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டார்ககள் என்ற செய்தி பிறகு வந்தது.

இச்செய்தியை வடகொரியா எவ்வகையிலும் உறுதிப்படுத்தவில்லை. சென்ற டிசம்பர் 9 ஆம் தேதி சாங்க் சோங் தாயேங் கொல்லப்பட்டதை வடகொரியா தனக்கே உரியமுறையில் உறுதிப்படுத்தியது. அதிபரின் நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து புகைப்படங்களிலும் அனைத்து ஆவணப்படங்களிலும் சாங்க் சோங் தாயேக் முழுமையாக அகற்றப்பட்டார். பிபிசி வெளியிட்ட செய்தியில் அனைத்துப் புகைப்படங்களிலும் அவர் ’கண்ணுக்குத்தெரியாமலானதை’ காணமுடிகிறது. இயல்பாக மறைந்திருந்தால் அவர் கொஞ்சகாலத்தில் நினைவுகளில் இருந்து அழிந்திருப்பார். இனிமேல் அவர் என்றென்றும் கொரிய வரலாற்றில் இருந்துகொண்டிருப்பார்

நான் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின்பின்னணியில் எழுதப்பட்ட அரசியல் நாவல். முக்கால்நூற்றாண்டுக்கால ருஷ்யக் கம்யூனிசப் பரிசோதனையின் பெறுமதியை ஆராய்வது. கருத்தியல் மனித அறத்துடன் எவ்வாறெல்லாம் முரண்படுகிறது என்பதை விவாதிப்பது. அந்நாவலுக்குள் ஒரு சிறுகதை வரும். ’இறுதி யந்திரம்’ என்ற அச்சிறுகதை ஒரு மிகுபுனைவு. ஸ்டாலினைப் பார்க்க அழைத்துச்செல்லப்படும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாளரின் கதை அது.

அவர் ஒரு ஜிப்ஸி. வரலாற்றின் பக்கங்களில் மறைந்து திரிந்த அனுபவங்களைக்கொண்டு அவர் ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த இயந்திரம் மனிதர்களை இல்லாமலாக்கிவிடும். நேரிலும், வரலாற்றிலும் ,நினைவுகளிலும் எல்லாம். அவர் இறக்கமாட்டார், பிறக்காமலேயே ஆகிவிடுவார். இயந்திரத்தை ஸ்டாலின் வாங்கிக்கொள்கிறார். பல அதிகாரிகளை உடனுக்குடன் இல்லாமலாக்கி அதை சோதனைசெய்து நிறைவடைகிறார். பணம் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பும் அந்த அறிவியல்கண்டுபிடிப்பாளர் ஒரு ரகசியத்தை அறிவார் என கதைமுடியும். இல்லாமலான அனைவரும் அந்த இயந்திரத்துக்குள் இருப்பார்கள். அந்த இயந்திரம் ஸ்டாலினின் தலைமாட்டில் இருந்துகொண்டிருக்கும்

ஸ்டாலின்

வரலாற்றில் புதியதாக ஏதும் நிகழ்வதில்லை போலும். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாயச் சக்கரவர்த்தி அக்பரின் மாமன் பைராம் கானின் கதையும் இதுவே. பைராம்கான் ஹுமாயூனுக்கு மிக நெருக்கமான ராணுவத்தளபதி. ஹுமாயூன் பாரசீகத்தில் நாடிழந்து அலைந்தபோது துணைநின்றவர். மீண்டும் டெல்லியை ஹுமாயூன் கைப்பற்ற காரணமாக அமைந்தவர்.

ஹுமாயூன் இறந்தபோது 13 வயதாக இருந்த அக்பர் ஆட்சிக்கு வருவதற்கு பைராம்கான் தான் காரணம். பல்வேறு அதிகாரப்போட்டிகளையும் சதிகளையும் சமாளித்து அக்பரை அரியணையில் அமர்த்தி அவர் பாதுகாவலராக இருந்து ஆட்சிசெய்தவர் அவர். வலுவான இந்து அரசர்கள் ஹெமுவின் தலைமையில் அக்பரை எதிர்த்தபோது அவர்களைத் தோற்கடித்து அக்பரின் அரசை காப்பாற்றியவர் பைராம்கான்தான்.

அக்பர்

பைராம்கான் ஷியா முஸ்லீம். சுன்னி முஸ்லீமான ஹுமாயூன் பாரசீகத்தில் நாடிழந்து அலைந்தபோது ஹுமாயூன் ஷியாவாக மாறினால் படைபலம் கொடுத்து ஆதரிப்பதாக பாரசீக மன்னர் சொன்னார். அதை ஏற்று ஹுமாயூன் ஷியாவாக மாறினார். பாரசீகப்படைகளின் உதவியுடன் ஹுமாயூன் டெல்லியைக் கைப்பற்றினார். டெல்லியைப்பிடித்ததும் அவர் மீண்டும் சுன்னியாக மாறினார். ஆப்கானில் பிறந்த ஷியா முஸ்லீமான பைராம்கான்தான் ஹுமாயூனுக்கும் பாரசீகமன்னருக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்.

பைராம்கானுக்கு எதிராக டெல்லியின் சுன்னி முஸ்லீம் படைத்தலைவர்களும் பிரபுக்களும் காழ்ப்புகொண்டிருந்தனர். அக்பர் பதவிக்கு வந்ததும் அவர்களின் குரல் ஓங்கியது. அக்பரை கொன்று ஆட்சியைக்கைப்பற்ற பைராம்கான் சதிசெய்வதாக அக்பர் நம்பவைக்கப்பட்டார். அதன்விளைவாக 1560ல் அக்பர் பைராம்கானை பதவிநீக்கம்செய்து கைதுசெய்தார். மெக்காவுக்குச் செல்லும்படி ஆணையிடப்பட்ட பைராம்கான் அவ்வாறு செல்லும் வழியில் குஜராத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

வேறுவகை வரலாறு எங்காவது உள்ளதா என்று மூளை நமநமத்தது. சட்டென்று நினைவுக்கு வந்தது, அருண்நேரு. இந்திரா காந்தியின் மருமகன் அவர். ராஜீவ் காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்தபோது அவருக்குத்துணையாக இருக்கும்படி அருண் நேருவை கோரினார் இந்திரா காந்தி. ஜென்ஸன் ஆண்ட் நிக்கல்சன் சாயநிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அருண்நேருவை அரசியலுக்குக் கொண்டுவந்தார்.

இந்திரா காந்தி 1984ல் கொல்லப்பட்டபோது இளைஞராகவும் அனுபவமற்றவராகவும் இருந்த ராஜீவ் காந்தி இந்தியப்பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கவும் செயல்படவும் உறுதுணையாக அமைந்தவர் ஒருவர் அருண்நேரு. நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான ரே-பரேலியில் இருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக பணியாற்றினார்.

ராஜீவ் ஆட்சிக்காலத்தில் அனைத்துவல்லமைகளும் கொண்டிருந்த அருண் நேரு அக்காலத்தில் ராஜீவ் அரசுமீது சுமத்தப்பட்ட பல ஊழல்வழக்குகளிலும் குற்றவாளி எனறு சுட்டிக்காட்டப்பட்டார். முக்கியமாக செக்கோஸ்லாவாகிய கைத்துப்பாக்கி ஊழலில் அவரே முதற்குற்றவாளி என்று சொல்லப்பட்டது. பின்னர் அவர் ராஜீவ்காந்தியிடம் கருத்துவேறுபாடு கொண்டார். ராஜீவின் ஆலோசகர்களும் அடிப்பொடிகளும் மாறினார்கள். அருண்நேரு வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அருண் நேரு அழித்தொழிக்கப்படவில்லை, மாறாக எதிர்கட்சியில் சென்று சேர்ந்தார். ஜனதாதளத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சராகவும் பணியாற்றினார். அரசியல் கட்டுரையாளராக தொடர்ந்து செயல்பட்ட அருண் நேரு 2013 ஜூலையில் மரணமடைந்தார்.

அருண் நேரு

அரசதிகாரம் என்பது எப்போதும் கடைசியில் ஒரு சிறு குழுவினராலேயே நேரடியாகக் கையாளப்படுகிறது. மன்னராட்சியாக இருந்தாலும் சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும் ஜனநாயகமாக இருந்தாலும். உடனடி முடிவுகளை எடுப்பதும் செயல்படுத்துவதும் அவர்களே. அந்தச் சிறுகுழுவுக்குள் கடுமையான அதிகாரப்போட்டி ஒன்று நடந்துகொண்டிருப்பதைத் தவிர்க்கமுடியாது. அது அந்த மனிதர்களின் உலகப்பார்வை சார்ந்த மோதலாக இருக்கலாம். அகங்காரப்போட்டியாக இருக்கலாம். அவற்றைவிட முக்கியமாக அம்மனிதர்கள் பிரதிநிதித்துவம்செய்யும் அதிகாரவிசைகளின் மோதலாக இருக்கலாம். உள்மோதலே அந்தக்குழு செயல்படும் வழிமுறை.

அந்த உள்மோதலை ஒற்றுமையின்மை என்று எளிமையாகப் புரிந்துகொள்ளமுடியாது. உண்மையில் அதுவும் ஒருவகை ஜனநாயகமே. உதாரணமாக ராஜீவின் அதிகார உள்வட்டத்துக்குள் அருண்நேரு தாராளவாத பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முழு ஆதரவளிப்பவராக இருந்தபோது வி.பி.சிங் அரசதிகாரத்தின் கட்டுப்பாட்டை விரும்பக்கூடியவராக இருந்தார். இவ்வாறு பலவகையான கருத்துநிலைகளைக் கொண்டவர்கள், தேசத்தின் பலவகையான அதிகாரசக்திகளின் பின்புலம் கொண்டவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டு ஒரு பொதுமுடிவை அடையும்போதுதான் அது உண்மையான அதிகாரச் சமநிலையை உருவாக்குகிறது. ஜனநாயகம் என்பதே பல்வேறு அதிகாரங்கள் நடுவே சரியான சமநிலைப்புள்ளியைக் கண்டுகொள்வதில்தான் உள்ளது.

எந்த ஒரு அதிகார அமைப்பிலும் அந்த உள்வட்ட மோதல் இருந்துகொண்டேதான் இருக்கும். உதாரணமாக ராஜராஜ சோழனின் அதிகார உள்வட்டத்தில் மறவர், வேளாளர் முரண்பாடு மிக வலுவாக இருந்திருக்கிறது. முகலாய உள்வட்டத்தில் ஷியா- சுன்னி போராட்டமும், ஆப்கானிய- பாரசீக வம்சாவளியினரின் உள்முரணும் வலுவாக இருந்துள்ளது. மன்னராட்சி என்பது ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டது. ஆசாரநம்பிக்கைகளே மன்னர்களை அந்த பீடத்தில் அமரச்செய்கின்றன. ஒவ்வொருவரையும் அவரவருக்கான இடங்களில் நிலைநிறுத்துகின்றன. ஆகவே ஆசாரங்கள் அனுமதித்த ஒரு சுதந்திரம் உள்வட்ட அதிகாரசக்திகளுக்கு உண்டு. அதை மன்னர்கள் பறிக்கமுடியாது. ஆசாரமீறல் நிகழ்ந்தால் மக்களின் எதிர்ப்பு உருவாகநேரிடும். ராஜராஜசோழனின் அதிகாரம் என்பது அவருக்கு கட்டுப்பட்ட குறுநிலமன்னர்களின் கூட்டு அங்கீகாரம் வழியாக அவருக்குக் கிடைப்பது. அந்த மன்னர்கள் அவர்களின் குல ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

சர்வாதிகார ஆட்சிகளுக்கு மக்கள் ஒரு பொருட்டே அல்ல. வலிமையான ஆயுதங்கள் மூலம், சுயமான வளங்கள் மூலம் உலகநாடுகளின் எதிர்ப்பை அலட்சியப்படுத்த முடிந்தால் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. ஆகவே அங்குள்ள உள்வட்ட அதிகார மோதல் எப்போதுமே அழித்தொழிப்பில்தான் முடிகிறது. ரஷ்யா, சீனா, கம்போடியா, கொரியா போன்ற கம்யூனிச அரசுகள் ஹிட்லர் ,முசோலினி போன்றவர்களின் நாசிச, ஃபாசிச அரசுகள் செயல்பட்ட விதம் அதுதான். வடகொரியாவில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. வென்ற தரப்பு தோற்ற தரப்பை முழுமையாகவே இல்லாமலாக்குகிறது. அவர்களை துரோகிகள் என்று அடையாளப்படுத்துகிறது. சர்வாதிகாரத்தின் இயங்குமுறையை இப்படி வரையறுக்கலாம்—அது துரோகிகளையும் தியாகிகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கும். தியாகிகள் துரோகிகளாக ஆவது அதன் ஒரு பகுதிதான். நாளையே இன்றைய வடகொரிய அதிகர் அடுத்துவருபவரால் துரோகியாக அறிவிக்கப்ப்ட்டால், தூக்கிலிடப்பட்டால் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.

இந்தியாவில் ஜனநாயகம் இருந்ததனால் அருண்நேரு கடைசிவரை ராஜீவ்காந்தியின் வலுவான எதிர்தரப்பாக நீடித்து அரசியலில் செயல்பட்டார். தாராளவாதப் பொருளியல் சிர்திருத்தங்களுக்காக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தா. பைராம் கானை அகற்ற அக்பருக்கு ஒரு நுப்டமான நாடகம் தேவைப்பட்டது. ராஜராஜசோழனும் அவ்வாறு பல நுட்பமான நாடகங்கள் வழியாகவே செயல்பட்டிருப்பார். ஆனால் தென்கொரியாவில் சாங் சோன் தாயேக்க்கை மௌனமாக கிள்ளி அப்பால் போட்டிருக்கிறார்கள். இதுதான் அரசுகள் நடுவே உள்ள வேறுபாடு.

ஜனநாயகம் என்பது முரண்பாடுகள் வழியாக மட்டுமே செயல்படக்கூடிய ஓர் அரசமைப்பு என்பதை சிந்திப்பவர்களில்கூட பலர் புரிந்துகொள்வதில்லை. ஜனநாயகம் என்பது மக்களிடம் உருவாகி வந்திருக்கும் அதிகாரச் சமநிலையை அரசாங்கத்திலும் உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. மக்களிடம் இருக்கும் அத்தனை அதிகாரமோதல்களும், அத்தனை முரண்பாடுகளும் அரசாங்கத்தில் பிரதிபலித்தாகவேண்டும். சமூகத்தில் உருவாகிவரும் அதிகாரச் சமநிலை அரசில் பிரதிபலிக்கவேண்டும். காற்றுத்திசையைக் காட்டும் சேவல்பொம்மைபோன்றது ஜனநாயக அரசு. காற்றுக்கேற்ப அது மாறிக்கொண்டேதான் இருக்கும். காற்று நிலையற்றது என்பதனால் அதுவும் நிலையற்றதாகவே இருக்கமுடியும். எந்த அளவுக்கு கச்சிதமாக நிலையற்றிருக்கிறதோ அந்த அளவுக்கு அது நல்ல காற்றுமானி, நல்ல ஜனநாயக அரசு.

ஆகவே ஜனநாய்கம் இருக்குமிடத்தில் முரண்பாடும் மோதலும் எப்போதும் வெளியே தெரியும். டிசம்பரில் திடீரென்று சாங்க் சோங் தாயேக் அகற்றப்படும்வரை அது எவருக்கும் தெரிந்திருக்காது. ஜனநாயக அரசு இருந்திருந்தால் 2011 முதலே அவருக்கும் மருமகனுக்குமான மோதல்கள் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்திருக்கும். ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளாத ஒருவர் அந்தச் சர்வாதிகாரத்தை அமைதி என்றும் உறுதி என்றும் விளங்கிக்கொள்வார். ஜனநாயகத்தை கூச்சல் என்றும் என்றும் நினைப்பார். அத்தனை தடுமாற்றங்களுடனும் நிலையின்மையுடனும் ஜனநாயகம் சரியான பாதையில் செல்கிறது, அத்தனை உறுதியுடன் சர்வாதிகாரம் மக்களுக்கெதிரான பாதையில் செல்கிறது என்பதே அதற்கான பதிலாகும்.

http://www.bbc.co.uk/news/world-asia-25362732

[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் எழுதிவரும் தொடர். வீரகேசரி நாளிதழின் வெளியீடு]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
அடுத்த கட்டுரைமூணாறு