வரலாற்றெழுத்தின் வரையறைகள் 3

இலங்கை வரலாற்றை எழுதும்போது…

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்தின் வரலாறும் அதன் இன்றைய போக்குகளும் இலங்கையின் வரலாற்றெழுத்துக்கும் பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கும். என்னுடைய எல்லைக்குட்பட்ட வாசிப்பில் இருந்து அத்தகைய ஒரு முன்வரைவையே நான் கொண்டிருக்கிறேன்.

இந்தியப் பெருநிலத்திற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இலங்கைக்கு உண்டு. தெளிவாக எழுதப்பட்ட ஒரு குலவரலாற்று நூல் இலங்கைக்கு உள்ளது. இந்தியாவின் வரலாற்றிலேயே கணிசமான தருணங்களில் காலநிர்ணயம் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், மகாவம்சம் ஒரு குலவரலாறு மட்டுமே. ஒரு குலம் தனக்காக எழுதிக்கொண்ட வரலாறு அது. சைவ நாயன்மார் வரலாறு போல. வைணவ குருபரம்பரை வரலாறு போல. அது நவீனவரலாறாக நீடிக்கமுடியாது. நவீன வரலாற்றின் மூலப்பொருளாக மட்டுமே அதைக் கணக்கில்கொள்ள முடியும். அதிலிருந்து நவீன வரலாறு எவ்வகையில் உருவாக்கப்பட்டது என்பது எப்போதும் முக்கியமான ஒன்று.

இலங்கையின் நவீன வரலாற்றெழுத்து அதைக் கைப்பற்றிய ஐரோப்பிய ஆட்சியாளர்களின் குறிப்புகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கில ஆட்சியாளர்கள் இலங்கையை நிர்வாகம் செய்யும் நோக்குடன் அதை ஒற்றை ஆட்சிப்பரப்பாகக் கண்டு பொதுவரலாற்றை உருவாக்க முயன்று நவீன வரலாற்றுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

இந்திய தேசிய இயக்கத்துக்கு நிகரானது என பலவகையிலும் சொல்லப்படவேண்டியது அநகாரிக தம்மபாலவின் தலைமையில் ஆரம்பித்த பௌத்த ஒருங்கிணைப்பு மற்றும் சீர்திருத்த இயக்கம். உலகமெங்கும் ஆரம்பித்த ‘செயல்படும் பௌத்தம்’ என்ற இயக்கத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். சிங்களதேசியத்தின் தொடக்கம் அது. அது அடிப்படையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் கொண்டிருந்தமையால் பிற மத,இன மக்களை உள்ளடக்க முடியாத குறுகிய தேசியவாதமாக ஆகியது.

இந்த சிங்களதேசியவாத நோக்கு இலங்கையின் வரலாற்றை எவ்வாறு எழுதியது என்பது இலங்கைவரலாற்றை ஆராயும்போது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. அந்த சிங்களத் தேசியவாதத்துக்கு மாற்றாக எழுதப்பட்டது தமிழ்த்தேசியவாத வரலாறு. அது தமிழ்த்தொன்மையின் அடையாளங்கள், சோழர்காலப்படையெடுப்பு குறித்த வரலாற்றுத்தரவுகள் மற்றும் பிற்கால இலங்கைத் தமிழ் மன்னர்களின் வரலாற்றைத் தொகுத்து தனக்குரிய வரலாற்றை எழுதிக்கொண்டது

இன்றைய சூழலில் இவ்விரு வரலாறுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாதவையாக, மறுப்பவையாகவே உள்ளன. அரசியல்நோக்குடன் உருவாக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட வரலாறுகள் என்றே இவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு நவீன வரலாறு மேலும் மேலும் புறவயமானதாக ஆகிக்கொண்டிருக்கும் என்றும் அதன்வழியாக பிறவரலாறுகளுடனும் பொதுவான மானுடவரலாற்றுடனும் அதன் ஒத்திசைவு வலுப்பெற்றபடியே செல்லும் என்றும் நாம் நினைவில்கொள்ளவேண்டியிருக்கிறது.

வட்டாரவரலாறுகளின் காலம்

தமிழகவரலாறு இன்றுகூட மூன்றில் ஒன்றே எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சங்ககாலத்தைப்பற்றி நமக்கு இலக்கியச்சித்தரிப்புகளை ஒட்டிய ஒரு மனச்சித்திரம் மட்டுமே உள்ளது. மிகச்சில கல்வெட்டு ஆதாரங்கள்தான் கிடைத்துள்ளன. சிலமன்னர்களின் பெயர்களைக்கொண்டு ஒருசில வம்சவரிசைகள் போடப்பட்டுள்ளன. அதன்பின் களப்பிரர்காலம், இன்றும் ஆய்வாளர்களால் விளக்கப்படாத ஒன்றாகவே எஞ்சுகிறது. சரியாகச் சொல்லப்போனால் தமிழக வரலாறு ஆதார பூர்வமாக எழுதப்படுவது சிம்மவிஷ்ணுப் பல்லவனின் காலத்துக்குப்பிறகுர்தான்.

அதன்பின்னர்கூட சேரர் வரலாறு எழுதப்படாததாகவே கிடக்கிறது. பிற்காலப் பாண்டியர் வரலாறின் பல பகுதிகள் முறையாக எழுதப்படவில்லை. இஸ்லாமியப்படைஎடுப்புக்குப்பின்புள்ள சுல்தானிய ஆட்சிக்காலம் எழுதப்படவில்லை. இந்த இடைவெளிகள் தமிழகவரலாற்றை எழுதிய ஆரம்பகால முன்னோடிகள் போதிய தரவுகள் இல்லாதகாரணத்தால் விட்டுவிட்டவை. அவை நிரப்பப்படவேயில்லை. தமிழகவரலாற்றாய்வு ஒரு முட்டுச்சந்தில் முட்டி நிற்கிறது என்ற உணர்வே பண்பாட்டுக்களத்தில் செயல்படுபவர்களுக்கு இருக்கிறது

இந்தத் தேக்கத்தை உடைப்பதற்கான முக்கியமான வழிகள் மூன்று. ஒன்று, தமிழக வரலாற்றை இந்தியாவின் பிறபகுதிகளில் எழுதப்படும் வரலாற்றெழுத்துடன் இணைத்து விரிவாக்கம் செய்வது. உதாரணமாக நம்முடைய வரலாற்றில் இருநூறாண்டுக்காலத்தை நிறைத்திருந்த களப்பிரர் ஆட்சிக்காலத்தை பிராகிருத மொழி இலக்கியங்களுடனும் சமணர்களின் ஆவணங்களுடனும் ஆந்திரத்தின் சாதவாகனர் ஆட்சிக்கால வரலாற்றுடனும் இணைத்து விரிவான ஆய்வுகள் செய்வதன்மூலம் எழுதிவிடமுடியும்.

இரண்டாவதாக, இன்றைய நவீன ஊடகவசதிகள் மூலம் கிடைக்கும் சர்வதேச ஆவணங்களைக்கொண்டு தமிழக வரலாற்றை முழுமைசெய்ய முடியும். இன்று பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட ஜெசூட் பாதிரியார்களின் குறிப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன. இவற்றைக்கொண்டு தமிழகவரலாற்றின் விளக்கப்படாத இடங்களை விளக்கும் பெரும்பணி எஞ்சியிருக்கிறது

மூன்றாவதாக, வட்டாரவரலாறுகளைக் கொண்டு தமிழகவரலாற்றின் இடைவெளிகளை முழுமை செய்யமுடியும். வட்டாரவரலாறுகளை நுண்தகவல்களைக்கொண்டு உருவாக்கி அவற்றை மையவரலாற்றுடன் பொருத்துவது இன்றைய வரலாற்றெழுத்தின் முக்கியமாக செயல்பாடாகும். நுண்வரலாறுகளைக்க்கொண்டு [micro history] பெருவரலாற்றை பரிசோதிப்பதும் விளக்குவதும் இன்று உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேகம்பிடித்தாகவேண்டிய ஒரு அறிவுத்துறை இது.

சென்னைப்பல்கலைகழகத்தால் 1956ல் வெளியிடப்பட்ட எம்.ஆரோக்கியசாமி அவர்கள் எழுதிய கொங்குவரலாறு [ M.Arokiaswamy ,The Kongu Country] தமிழகவரலாற்றில் ஒரு முக்கியமான நூல். அந்தக்காலகட்டத்தில்தான் தமிழகவரலாறே ஒருவாறாக இன்றையவடிவை நோக்கி எழுதப்பட்டு வந்து கொண்டிருந்தது. அக்காலகட்டத்திலேயே வட்டாரவரலாற்றை எழுதுவதற்கும் முன்னோடியாக அமைந்தது ஆரோக்கியசாமியின் நூல். அதற்குமுன்பு கால்டுவெல் எழுதிய திருநெல்வேலிவரலாறு வரலாறு [ Robert CaldwellA Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras. 1881] முக்கியமான ஒரு தொடக்கம் என்றாலும் ஆரோக்கியசாமியின் நூல் ஒட்டுமொத்தமான தேசிய வரலாற்றின் ஒரு பகுதியாகவும், அதை மேலும் நுட்பமாக ஆக்குவதாகவும் அமையக்கூடிய வட்டார வரலாற்றெழுத்துக்கான மிகச்சிறந்த முன்னுதாரணமாகும்.

ஆனால் அதன்பின்னர் அத்தகைய வட்டாரவரலாறுகள் அதிகம் எழுதப்படவில்லை. 2003ல் அ.கா.பெருமாள் குமரிமாவட்டத்தின் வரலாற்றை ஆய் மன்னர்களின் காலம்தொட்டு சுதந்திரம் வரை விரிவாக எழுதினார். தென்குமரியின் கதை என்ற பேரில் வெளிவந்த அந்நூலின் உருவாக்கத்துடன் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன் [தென்குமரியின் கதை, தமிழினி வெளியீடு] அதையொட்டி தமிழகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் அப்படியொரு வரலாற்றை எழுதி வெளியிட தமிழினி முயன்றதென்றாலும் எழுத ஆளில்லாமல் அம்முயற்சி தடைபட்டது.

வட்டார வரலாறுகளை எழுத நாட்டாரியல் பெரிதும் கைகொடுக்கிறது. வரலாற்றாய்வுக்கான கறாரான புறவய நோக்குடனும் வரலாற்றெழுத்தின் முழுமைநோக்குடனும் இணைகையில் வாய்மொழி வரலாறுகளும் தொன்மங்களும் எல்லாம் பயனுள்ள வெளிச்சங்களை அளிக்கமுடியும். அவ்வாறு இந்தியாவை ஆராய்வதற்கான கோட்பாட்டு ரீதியான வழிகாட்டலாக டி.டி.கோசாம்பியின் ஆய்வுகள் உள்ளன.

அதேபோல இனக்குழுக்களின் வரலாறுகளும் ஒரு விரிந்த கோட்பாட்டுப்பார்வையுடன் தொகுக்கப்பட்டால் பெருவரலாற்றின் இடைவெளிகளை நிறைவுபடுத்துபவையாக ஆகமுடியும். இப்படிச் சொல்லலாம். நவீன வரலாறு எழுதப்பட்ட தொடக்ககாலத்தில் வட்டாரவரலாறுகளும் இனக்குழு வரலாறுகளும் தொகுக்கப்பட்டு அவற்றின் பொதுவான அம்சங்கள் மட்டும் கருத்தில்கொள்ளப்பட்டு பொதுவரலாறு எழுதப்பட்டது. இன்று அந்தப்பொதுவரலாற்றின் விதிகளையும் வழிமுறைகளையும் கொண்டு வட்டார வரலாறுகளும் இனக்குழு வரலாறுகளும் மீண்டும் எழுதப்படவேண்டிய காலம் வந்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகள் வன்னி என்று சொல்லப்படுகின்றன. இப்பகுதிக்கு நெடுங்காலமாகவே சிங்கள அரசுகளுடன் தொடர்பற்று தனித்த ஆட்சிமுறை இருந்த வரலாறு உள்ளது. வன்னிமை என்று சொல்லப்படும் ஆட்சிமுறை இருந்தமையால் அப்பெயர் அதற்கு வழங்குகிறது. இது குமரிமாவட்டத்தில் இருந்த மாடம்பிகள் போன்ற சிறுநிலப்பிரபுக்களின் தனியதிகாரத்துக்குச் சமானமானது.

வன்னியின் வரலாற்றை எழுதும் முயற்சி என்பது உலகமெங்கும் நிகழ்ந்துவரும் வட்டாரவரலாற்றெழுத்து என்னும் மாபெரும் பண்பாட்டுநடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் விதிகள் மற்றும் நோக்குகளுக்கு ஏற்ப நிகழவேண்டும். அது இலங்கைவரலாற்றில் புதிய வெளிச்சத்தை உருவாக்கமுடியும். தொலைதூரப்பார்வையில் இந்தியவரலாற்றையும் ஆசியவரலாற்றையும் கூட விளக்கும்தகுதி பெறமுடியும்

வரலாற்றின் முன்

இன்றைய நவீன வரலாற்று மாணவன் ஒருவன் இலங்கையின் தொல்வரலாறு என்ன, அதன் நவீன வரலாறு அந்தத்தொல்வரலாற்றில் இருந்து எவ்வாறு பதினெட்டாம்நூற்றாண்டுக்குப்பின் உருவாக்கப்பட்டது, அதில் ஓங்கியிருக்கும் தரப்புகள் என்ன என்பதைக் கருத்தில்கொண்டே அவ்வரலாற்றை எழுதவேண்டும்.

கூடவே ஒரு வட்டாரத்தின், மக்கள்திரளின் வரலாறை எழுதும்போது வெறுமே அகவயமான காரணிகளை மட்டும் கண்டுகொள்வதும் பெருமிதங்களை பயிரிடுவதும் தவிர்க்கப்படவேண்டும். வரலாற்றை சமூக, அரசியல்,பொருளியல் காரணிகளுடன் இணைத்து முழுமைசெய்யும் பார்வை எப்போதும் செயல்பட்டாகவேண்டும். அந்த முழுமையான பார்வை இல்லாத வரலாற்றெழுத்துகளை ஒருபோதும் வரலாறு என ஏற்றுக்கொள்ளலாகாது

கடைசியாக, வரலாறு என்பது பலகோணங்களில் பலர் ஆராய்ந்து ஒருவரோடொருவர் முரண்பட்டும் முழுமைசெய்தும் உருவாக்கி எடுக்கக்கூடிய ஒன்று என்ற பிரக்ஞை நமக்கிருக்கவேண்டும். அந்நிலையில் வரலாற்றுவிவாதத்தில் வெற்று உணர்ச்சிவேகங்களுக்கு எந்தவகையிலும் இடமில்லை. எந்தவகையான வரலாற்றுக் கோணம் முன்வைக்கப்பட்டாலும் சரி, அது விவாதத்துக்குரியதே ஒழிய வெறுப்புக்குரியயதல்ல. வெறுப்பின், நிராகரிப்பின், கோபத்தின் குரலை எழுப்பும் எவரும் வரலாற்றுவிவாதங்களில் இருந்து முழுமையாகவே ஒதுக்கப்பட்டாகவேண்டும்.

அத்தகைய முழுமையான ,சமநிலைகொண்ட ஆய்வுகள் வழியாக நம் வரலாற்றை நாம் எழுதிக்கொள்வது நம்மை நாம் அறியமும் உலகசித்திரத்தில் நம்மை பொருத்திக்கொள்ளவும் இன்றியமையாதது.


[இலங்கை வன்னி பகுதியின் வரலாற்றை தொகுக்கும் முயற்சியாக 2014ல் வெளிவந்த ‘வன்னி வரலாற்று மலரில்’ வெளியான முகப்புக் கட்டுரை]

முந்தைய கட்டுரைஒரு லண்டன் கூட்டம்
அடுத்த கட்டுரைஇரு பறவைகள்