வரலாற்றெழுத்தின் வரையறைகள் 2

இந்திய வரலாற்றெழுத்தின் வரலாறு

வரலாறு என்று நாம் சொல்வது சென்றகாலத்தில் நடந்தவற்றின் வரிசையை அல்ல. மாறாக சென்றகாலத்தில் நடந்தவற்றில் இருந்து நாம் இன்று வரிசைப்படுத்தி எழுதிக்கொள்பவற்றைத்தான்.அதாவது ஒரே சமூகம் வெவ்வேறு காலகட்டத்தில் தனக்கு வெவ்வேறு வரலாறுகளை எழுதிக்கொள்கிறது. நாம் இன்று தமிழ் வரலாறு என்று முன்வைக்கும் வரலாற்று வடிவமானது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

நம்மிடம் தொல்வரலாறு இருக்கவில்லையா என்ன? இருந்தது, ஆனால் நவீனவரலாறு என நாம் சொல்வது முற்றிலும் வேறு. பழமையான வரலாறுகளுக்கும் நவீன வரலாற்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

நவீன அரசியல்தேசியம் பற்றிய பிரக்ஞை நமக்கு பதினெட்டாம்நூற்றாண்டுக்குப்பின்னரே உருவானது. இந்தியா என்றும் தமிழகம் என்றும் அதன்பின்புதான் நாம் அடையாளப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தோம். அவ்வாறு அரசியல்தேசிய அடையாளங்களும் அதையொட்டிய நிலவியல் எல்லைகளும் உருவானபின்னர் எழுதப்பட்ட வரலாற்றையே நாம் நவீன வரலாறு என்கிறோம்.

முந்தைய வரலாறை உண்மையில் வரலாறுகள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு குழுவுக்கு, ஒரு பகுதிக்கு என எழுதப்பட்ட தனிவரலாறுகள் அவை. அந்தக்குழுவும் அப்பகுதியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரலாற்றுச்சித்திரங்கள் . அவ்வரலாறுகள் மூலம் அக்குழுவோ அப்பகுதியோ ஒருங்கிணைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

இத்தகைய வரலாறுகளுக்குரிய இரண்டு இயல்புகள் இரண்டு. இவற்றுக்கு புறவயத்தன்மை கிடையாது. அவ்வரலாற்றை எழுதிக்கொண்டவர்கள் அதை நம்புகிறார்கள், அவ்வளவுதான். உதாரணமாக, தமிழகத்தின் கணிசமான சாதியினர் அவர்கள் காவேரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அதற்குப்புறவய ஆதாரமே இல்லை

இன்னொன்று, அவற்றுக்கு பிறவரலாறுகளுடன் இசைவு கிடையாது என்பது அவை தங்கள் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக, திருவிதாங்கூர் அரசு நூறுவருடம் முன்புவரை வெளியிட்ட வரலாற்றுநூல்களில் எல்லாவற்றிலும் திருவிதாங்கூர் ராணுவம் அடைந்த ராணுவத்தோல்விகள் எல்லாமே வெற்றிகளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.

நவீனவரலாற்றின் இரண்டு அடிப்படை விதிகள் இவற்றுக்கு நேர் எதிரானவை. புறவயமாக நிரூபிக்கப்படமுடியாதவை வரலாறே அல்ல. ஒருவரலாறு பிற வரலாறுகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதுதான் அதை மதிப்பிடும் அளவுகோல். ஒரு வட்டார வரலாறு அப்பகுதியின் பொதுவரலாற்றுடன், உலகவரலாற்றுடன் ஒத்துப்போயாகவேண்டும். உலகளாவிய ஒரே மானுடவரலாற்றின் பகுதியாக எது அமைகிறதோ அதுவே நவீன வரலாறு.

அத்தகைய நவீன வரலாறு நமக்கு பதினெட்டாம்நூற்றாண்டில்தான் உருவாகியது. நம்மிடமிருந்த பழைய வரலாறுகளை மதவரலாறுகள், குலவரலாறுகள் என்று பிரித்துக்கொள்ளலாம்.

சைவம், வைணவம் ஆகிய இரு பெருமதங்களுக்கு தெளிவாகவே எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள் இருந்தன. புராணம் என்பவை ஒருவகை வரலாறுகளே. புராணம் என்ற சொல்லுக்கே பழையவரலாறு என்றுதான் பொருள். சைவநாயன்மார்களின் கதைகளும் தலபுரணங்களும் சைவத்தின் வரலாறு . குருபரபம்பரைக் கதைகளும் கோயிலொழுகுகளும் வைணவத்தின் வரலாறு.

அதேபோல தமிழகத்தின் குறிப்பிடத்தக்க குலங்களுக்கெல்லாம் ஒருவகையான குலவரிசை வரலாறுகள் நூல் வடிவிலோ வாய்மொழியாகவோ பேணப்பட்டன. இவ்வளவுதான் நமக்கிருந்த வரலாறு

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நமக்கு மேலைநாட்டு பாணியிலான வரலாற்றெழுத்துமுறை அறிமுகமானது. அந்த வரலாற்றெழுத்துமுறையின் வழிமுறைகள் நான்கு. .

1. ஒரு நிலப்பரப்பின் வரலாற்றை ஒட்டுமொத்தமாக எழுதுவது. குலவரலாறுகள், மதவரலாறுகள் போன்ற அனைத்தையும் அதை எழுதுவதற்கான அடிப்படைத்தரவுகளாக மட்டுமே கருத்தில்கொள்வது

2. புறவயமான ஆதாரங்களின் அடிப்படையில் பொதுவான வரலாற்றை அளிப்பது. ஊகங்கள், வாதங்கள் அனைத்துமே புறவயத்தன்மைகொண்ட தரவுகளைச் சார்ந்தே நிகழவேண்டுமென விதித்துக்கொள்வது

3. அரசியல் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பண்பாட்டுவரலாற்றை அதன் ஒரு பகுதியாகவே காண்பது. வரலாற்றை ஒரு தனித்த துறையாகக் காண்பது. ஆகவே வரலாற்றுடன் அறவியலையோ தத்துவத்தையோ கலக்காமலிருப்பது

4. ஒரு வரலாறு என்பது ஒட்டுமொத்த உலகவரலாற்றின் பகுதி என்ற பிரக்ஞையுடன் வரலாறுகளை இணைத்துக்கொண்டே செல்வது.

இந்த நான்கு அடிப்படைகளுடன் தமிழ்பேசிய நிலத்தின் ஒட்டுமொத்தமான வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிளை ஆரம்பத்தில் தமிழ்நாட்டை ஆட்சிசெய்யவந்த வெள்ளைய அதிகாரிகள்தான் மேற்கொண்டார்கள். தாங்கள் ஆளும் நிலத்தின் வரலாற்றை புறவயமாக எழுதி தொகுத்துக்கொள்வது ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது. ஒவ்வொரு மாகாண ஆட்சியாளரும் தன்னுடைய அடுத்த ஆட்சியாளரின் புரிதலுக்காக ஒரு ஆட்சிக்க்குறிப்பு எழுதி விட்டுச்செல்லும் வழக்கம் இருந்தது. அவ்வாறு எழுதப்பட்ட குறிப்புகளிலேயே தமிழக வரலாற்றை நவீன அணுகுமுறையுடன் தொகுத்து எழுதுவதற்கான தொடக்க கால முயற்சிகள் உள்ளன.

தமிழகத்தின் முக்கியமான மாகாண ஆட்சிக்குறிப்புகளில் முதலில் வந்தது 1868ல் ஜெ.எச்.நெல்சன் எழுதிய மதுரை மாவட்ட ஆட்சிக்குறிப்பு [J.H.Nelson in 1868] ஆகும்.தென்னாற்காடு -ஜெ.எச்.ஹாரிசன் [ J.H.Garstin 1878] திருச்சி- லூயுஸ் மூர் [Lewis Moore 1878] செங்கல்பட்டு -சி.எஸ் கரோல் [C.S.Crole 1879] திருநெல்வேலி -ஏ.ஜே.ஸ்டுவர்ட் [A.J.Stuart 1879] நீலகிரி -எச்.பி. கிரிக் [H.B.Grigg 1880] வட ஆற்காடு -ஆர்தர் எஃப் ஃகாக்ஸ் [Arthur F.Cox 1881] சேலம்- எச் . ஃபானு [H.Le Fanu 1883] தஞ்சை -டி.வெங்கடசாமி [(T.Venkataswamy 1883] கோவை- எஃப் ஏ நிக்கல்சன் [F.A.Nicholson 1887] ஆகியோரின் ஆட்சிக்குறிப்புகள் வெளிவந்தன.

இந்தஆட்சிக்குறிப்புகளில் இந்த ஆட்சியாளர்கள் அந்தந்த இடங்களின் சுருக்கமான வரலாறை அங்கே கிடைத்த நூல்களில் இருந்தும் பல்வேறு வட்டார வரலாறுகளில் இருந்தும் தொகுத்து எழுதியிருந்தார்கள். தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் மொத்த தமிழ்நிலத்தையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக அணுகி எழுதப்பட்ட அரசியல் வரலாறு என்பது இந்த ஆட்சிக்குறிப்புகள் வழியாக உருவாக்கப்பட்ட வரலாறுதான். சொல்லப்போனால் அதன்பின்னர் தமிழகத்தில் இன்றுவரை எழுதப்படும் எல்லா வரலாறுகளும் இந்த முன்னோடிகள் உருவாக்கிய ஒட்டுமொத்த வரலாற்று வரைபடத்தை மேலும் துல்லியமாக்கவும் முழுமையாக்கவும்தான் முயல்கின்றன

இந்திய வரலாற்றெழுத்தின் இரு முகங்கள்

இந்திய வரலாற்றெழுத்தின் இரு முகங்கள் எப்போதும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றை கருத்தில்கொண்டபடித்தான் நம் வரலாற்றைப்புரிந்துகொள்ள முயலவேண்டும்.

ஆரம்பகால இந்தியவரலாறு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகளாலும், ஆய்வாளர்களாலும், சில மதப்பரப்புநர்களாலும் எழுதப்பட்டது. அவர்கள்தான் புறவயமான வரலாற்றின் ஒரு முன்வரைவை உருவாக்கினார்கள். அவர்களுடைய பார்வையில் ஆதிக்கநோக்கு இயல்பாகவே கலந்திருந்தது. பெரும்புகழ்பெற்ற ஜே.எச்.நெல்சனின் வரலாற்றுக்குறிப்புகளில் கூட இந்தியப் பண்பாட்டைப்பற்றிய மெல்லிய கிண்டலையும் சிற்சில சாதிகளைப்பற்றியும் ஆசாரங்களைப்பற்றியும் இடக்கையும் காணமுடிகிறது.

இந்த ஆதிக்கவரலாற்றுக்கு எதிரான மனநிலை இந்திய வரலாற்றாசிரியர்களிடம் உருவானது. அதற்கு இந்தியாவில் உருவாகி வந்த தேசிய இயக்கம் ஊக்கம் அளித்தது. இந்தியாவின் வரலாற்றை இந்தியர்களின் கோணத்தில் எழுதவேண்டும் என்ற எண்ணம் 1900த்தின் தொடக்கத்தில் இந்தியா முழுக்க பரவலாகவே உருவானது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பார்வையை காலனியாதிக்க வரலாறு என்றும் இந்திய வரலாற்றாசிரியர்களின் பார்வையை தேசியவரலாறு என்றும் குறிப்பிடும் வழக்கம் உருவானது

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் கடந்தகால வரலாற்றை ஆதிக்கம்,போராட்டம் ஆகியவற்றின் களமாகவே கண்டார்கள். இந்தியப்பெருநிலம் ஆரியர்கள, குஷானர்கள், ஹூணர்கள், மங்கோலியர்கள், ஆப்கானியர், முகலாயர் ஆகிய அன்னியப்படையெடுப்பாளர்களின் வேட்டைக்காடாகவே எப்போதும் இருந்தது என்பது அவர்களின் பார்வை. இங்கிருந்த மக்கள் சமூக ரீதியாக பல இனங்களாகவும் சாதிகளாகவும் சிற்றரசுகளாகவும் பிரிந்து அந்த உட்பூசல்கள் காரணமாக படைஎடுப்புகளை தடுக்கும் திராணியற்றவர்களாக இருந்தனர் என்று அவர்கள் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய வரலாறே அன்னிய ஆதிக்கத்தின் வரலாறுதான் என்ற பார்வை அவர்களிடமிருப்பதைக் காணலாம்

நேர்மாறாக தேசியவரலாற்றாசிரியர்கள் இந்தியாவிலிருந்தது ஒரு பெரிய ஒருங்கிணைவுப்போக்கு என்று வாதிட்டார்கள். வெவ்வேறு அன்னிய ஊடுருவல்கள் இங்கே நிகழ்ந்திருந்தாலும் அனைத்தையும் உள்ளிழுத்து ஒருங்கிணைத்துக்கொள்ளும் வல்லமை இந்தியப்பண்பாட்டுக்கு இருந்தது என்று சொன்னார்கள். ஒருங்கிணைவு என்ற நோக்கில் அவர்கள் இந்தியவரலாற்றை அணுகினார்கள்.

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் மீதான அன்னிய சக்திகளின் மேலாதிக்கத்துக்கு அதிக இடமளித்தபோது தேசிய வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் பழங்கால வரலாற்றில் பொற்காலங்களைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். இந்தியா கடந்தகாலத்தில் அரசியலிலும் பொருளியலிலும் பண்பாட்டிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியது என்றும் அந்த வெற்றிகளைக்கொண்டே இந்திய வரலாறு மதிப்பிடப்படவேண்டும் என்றும் சொன்னார்கள்.

ஒரே வரலாறு மீதான இரண்டு பார்வைக்கு உதாரணமாகச் சொல்லப்படவேண்டிய இரு நூல்கள் உள்ளன. விஜயநகரப்பேரரசின் எழுச்சி வீழ்ச்சி பற்றி ராபர்ட் சீவெல் Robert Sewell எழுதிய A Forgotten Empire – Vijayanagar: A Contribution to the History of India. விஜயநகரப்பேரரசு எப்படி தக்காண சுல்தான்களால் அழிக்கப்பட்டது என்பதை விரிவாகப்பேசுகிறது. ஆனால் சூரியநாராயண ராவ்[ B. Surya Narayana Rao ]எழுதிய The unforgotabel empire – History of Vijayanagar முதன்மையாக விஜயநகரரப்பேரசின் பண்பாட்டுச் சாதனைகளைப்பற்றிப் பேசுகிறது.

ஆங்கிலவரலாற்றாசிரியர்கள் தமிழகத்தைப்பற்றி எழுதியபின்னர் அவர்களின் ஆய்வை விரிவாக்கியும் பார்வையை மறுத்தும் எழுதப்பட்ட தேசிய வரலாறுகள் இங்கே எழுதப்பட்டன. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், சீனிவாச சாஸ்திரி, சத்தியநாத அய்யர் போன்றவர்களின் வரலாறுகளில் தேசிய வரலாற்று நோக்கின் அம்சங்கள் உள்ளன. பல்லவர்கள் ஆட்சிக்காலமும் பிற்கால சோழர்களின் ஆட்சிக்காலமும் இவர்களால் பொற்காலங்களாக முன்வைக்கப்பட்டன

1930 களுக்குப்பின் இந்த தேசிய வரலாற்றுப்பரப்பில் இருந்து வட்டாரதேசிய வரலாறுகள் உருவாகி வந்தன. இந்தியதேசியபெருமிதத்தின் ஒரு பகுதியாக தமிழ் தேசியபெருமிதம் கட்டமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தேசியவாதியும் சுதந்திரப்போராட்ட தியாகியுமாகிய எழுத்தாளர் கல்கியே இதன் முன்னோடி என்பதைக் காணலாம். அவர் நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்களின் வரலாற்றுநூல்களில் இருந்து தமிழகத்தின் பொற்காலங்களை புனைவுகளில் சித்தரித்தார். பல்லவர் காலத்தை பொற்காலமாகச் சித்தரிக்கும் சிவகாமியின் சபதம், சோழர்காலத்தைப் பொற்காலமாகச் சித்தரிக்கும் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் போன்ற புனைகதைகள் பெரும்புகழ்பெற்றன.

இந்தப்புனைவுகளில் அண்டைமாநில பேரரசர்கள் எதிரிகளாகவும் கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தாகள். உதாரணமாக கர்நாடகதேசியவரலாற்றின் மாபெரும் நாயகனாகிய இரண்டாம்புலிகேசி சிவகாமியின் சபதம் நாவலில் வில்லனாக காட்டப்பட்டார்.

பின்னர் தமிழகத்தில் ஏராளமான வரலாற்றுப்புனைகதைகள் எழுதப்பட்டன. 1980கள் வரை கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் தமிழகத்தில் வரலாற்றுப்புனைகதைகளை வாசிக்க மக்கள் பேரார்வம் காட்டினர். வரலாற்றுப்புனைவுகளை எழுதும் ஆசிரியர்கள் நட்சத்திரங்களாக கருதப்பட்டார்கள். அப்புனைவுகளில் பெரிதும் பேசப்பட்டவர்கள் சோழர்களே. பல்லவர்களும் பாண்டியர்களும் அடுத்தபடியாக பாராட்டப்பட்டனர்.

ஆனால் சேரர்களின் கதைகள் குறைவாகவே எழுதபப்ட்டன. தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்ட நாயக்கமன்னர்கள் இன்று தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் ஏரிகள் நகரங்கள் சாலைகள் என பலவற்றையும் அமைத்து நவீன தமிழகத்தின் சிற்பிகளாகவே இருந்தாலும்கூட அவர்களைப்பற்றி தமிழில் பெரிய அளவில் புனைகதைகள் எழுதப்பட்டதில்லை. காரணம் சேரநாடு இன்று கேரளமாக தனிமாநிலமாக மாறிவிட்டது. நாயக்கர்கள் ஆந்திரப்பகுதியில் இருந்து வந்தவர்கள்

இந்தப்புனைகதைகள் அன்று இருந்த பொதுவான அரசியல்சூழலை காட்டுகின்றன. அன்று இந்தியதேசிய அடையாளத்தில் இருந்து தமிழடையாளத்தை பிரித்து எடுப்பதற்கான அரசியல் முயற்சி பெரிய அலையாக எழுந்து தமிழகத்தை நிறைத்திருந்தது. தமிழகத்தை திராவிட இன அடிப்படையில் தமிழ் மொழி அடைபப்டையிலும் அடையாளப்படுத்தும் போக்கு அரசியல் பண்பாட்டுத்தளத்தில் வலுவாக இருந்தது. அந்த அரசியலுடன் இந்தப்புனைகதைகள் இணைந்துகொண்டன. இவை தமிழ் மக்க்ளுக்கு அவர்களின் கடந்த கால வரலாற்றில் பொற்காலங்களை கண்டுபிடித்து சித்தரித்துக்காட்டின

இந்த அரசியல் 1900த்தின் தொடக்கத்தில் தமிழின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டபோது ஆரம்பித்தது. தமிழ்ப்பண்டைய இலக்கியங்கள் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் கிடைக்கும் பண்டை இலக்கியங்களுக்கு நிகரான தகுதிகொண்டவை என்றும் அவற்றின் அளவுக்கே பழைமையானவை என்றும் பரவலாக வாதிடப்பட்டது. ஆகவே தமிழரின் சுயஅடையாளம் தனித்துவம் கொண்டது, தொன்மையானது என்ற வாதம் வலுப்பெற்று அரசியல் பண்பாட்டுத்தளத்தில் வலுப்பெற்றது.

ஆகவே தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையையும் தனித்தன்மையையும் கண்டுபிடித்து நிறுவவேண்டும் என்ற நோக்கிலேயே சங்க இலக்கியங்களும் பிற வரலாற்றுச்சான்றுகளும் ஆராயப்பட்டன. அந்த நோக்கத்தை நிறைவேற்றும்தன்மை கொண்ட முடிவுகளே வலுவாக முன்வைக்கப்பட்டன. இன்றும் நம் வரலாற்றாய்வுத்துறையில் வலுவாக இருக்கும் பொதுப் பார்வை இதுதான்

சமநிலை கொண்ட வரலாற்றுநோக்கு என்பது இந்தவகையான முன்முடிவுகள் இல்லாமல் வரலாற்றை அணுகுவதாகவே இருக்கும். இந்திய வரலாற்றை இன்று நாம் ஆராயும்போது எப்படி ஆங்கில ஆதிக்கச்சார்புடைய பார்வையையும் மறுபக்கம் தேசியச்சார்புடைய பார்வைகளை அடையாளம் கண்டுகொண்டு நடுநிலை பார்வையை எடுக்கிறோமோ அப்படியே தமிழகவரலாற்றை ஆராயும்போதும் தமிழ்ப்பெருமிதநோக்குள்ள பார்வையையும் கூடுதலாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்

[மேலும்]

முந்தைய கட்டுரைபுறப்பாடு பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19