பனுவல் விவாத அரங்கு

டிசம்பர் ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கு சென்னை பனுவல் நூல் விற்பனை நிலையத்தில்நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. குறிப்பிட்ட தலைப்பேதும் இல்லாமல் பொதுவாக பேசிக்கொண்டிருப்பது. நண்பர் கே.பி.வினோதின் காரில் ராதாஸ் ரீஜன்ஸியில் இருந்து கிளம்பி திருவான்மியூர் சென்று அங்கே சில இடங்களில் தடுமாறி திரும்பிவந்து மீண்டும் திருவான்மியூருக்கே சென்று பனுவலை அடைந்தபோது அரைமணிநேரம் தாமதம்.

சிறிய இடம். மிகச்சிறிய சந்திப்புகளுக்குத்தான் சரிவரும். அதிகமான நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரும் அமர இடமில்லை. ஆகவே நாற்காலிகளை அகற்றிவிட்டு தரையில் அமரவேண்டியிருந்தது.அப்போதும் இடமில்லாமல் பாதிப்பேர் நின்றுகொண்டிருக்கநேர்ந்தது. எல்லாருக்கும் என் முகம் தெரிவதற்காக எனினும் நான் நாற்காலியில் அமர்ந்தது சங்கடமளித்தது.

ஆனால் எப்போதுமே குறைவான வசதிகளுடன் தரையில் அமர்ந்துபேசும்போது ஒரு நிறைவு உருவாகிறது. அது அப்போது உருவாகும் ஒரு குடும்பச் சூழல் காரணமாகவா என்று தெரியவில்லை. அல்லது வெளியே இயங்கும் பெருநகருக்கு மாற்றாக ஒரு ‘பார்ட்டிசான்’ தன்மை அந்த சந்திப்புக்கு வருவதனால்கூட இருக்கலாம்

நண்பர் சிவராமன் முதல் வினாவைக் கேட்டு உரையாடலை ஆரம்பித்துவைத்தார். ஏற்கனவே அறிமுகமான பல நண்பர்கள் இருந்தனர். படைப்புகளைப்பற்றி பொதுவான விஷயங்களைப்பற்றி பலகோணங்களில் வினாக்கள் வந்தன.நான் கூடுமானவரை நேர்மையாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னேன் என்று நினைக்கிறேன். எழுத்துக்கள் வழியாகவே அறிமுகமாகியிருந்த யுவகிருஷ்ணா. அதிஷா போன்றவர்களைச் சந்தித்தது மகிழ்வளித்தது.

பனுவல்

முந்தைய கட்டுரைஜோ டி குரூஸுக்கு சாகித்ய அகாடமி
அடுத்த கட்டுரைமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனில் கிருஷ்ணன்