ஜெமோ
அன்புள்ள இலவசக்கொத்தனார்
சிலவருடங்கள் முன்புவரை யுனெஸ்கோ கூரியர் என்ற தமிழ் இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. யுனெஸ்கோ நிறுவனத்தின் இதழ் அது. மிக முக்கியமான சர்வதேச இதழ். உலகத்தின் பலகணி என்றே சொல்லவேண்டும். மிக மிக அருமையான படங்கள். நேர்த்தியான அச்சு. உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்கள் எழுதும் மதிப்பு மிக்க கட்டுரைகள். கதைகள்.
இப்படி ஒரு இதழ் தமிழில் வெளிவந்ததன் தடையத்தை நீங்கள் இன்றுவரை தமிழ்ச் சிந்தனை தொடர்பான விவாதங்கள் எதிலாவது கண்டிருக்கிறீர்களா? ஒருவராவது ஒரு கட்டுரையிலாவது அதை மேற்கோள் காட்டி ஏதேனும் சொல்லிக் கேள்விபப்ட்டிருக்கிறீர்களா?
இருக்காது. ஏனென்றால் கால்நூற்றாண்டுக்காலம் வந்த அந்த இதழ் முழுக்க முழுக்க பயன்ற்றுப்போன ஒன்று. நான் பலவருடங்கள் அதன் சந்தாதாரர். ஆனால் ஒரு கட்டுரையைக்கூட நான் முழுக்க வாசித்ததில்லை. காரணம் அதன் ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபா என்ற தனிமனிதர். மொழி குறித்த அடிப்படைவாத கோட்பாடு ஒன்றை அவர் வைத்திருந்தார். அவ்விதழில் யார் என்ன மொழியாக்கம் செய்தாலும் அவர் அமர்ந்து அதை திருத்துவார். ஏற்கனவே என்ன கலைச்சொல் இருந்தாலும் அவர் புதிய கலைச்சொல்லை உருவாக்கி அதை மார்றியமைப்பார். மொத்தத்தில் அந்தக்கால சைவசித்தாந்த நூல்களைப்போல ஒரு இரும்புக்கடலை அது.
மணவை முஸ்தபாவிடம் இதைப்பற்றி பலர் குறை சொன்னார்கள். தான் தமிழுக்கு சேவை செய்வதாக அவர் சொன்னார். பத்தாயிரம் கலைச்சொற்களை உருவாக்கிவிட்டதாக பெருமை கொள்வார். ஆனால் எந்த ஒரு துறையிலும் புதிய சிந்தனைகளில் ஆரம்ப அறிமுகம்கூட அவருக்கு இல்லை. ஆதி மனிதன் ஆதமின் கல்லறை தமிழ்நாட்டில் இருக்கிறது என்று ‘ஆய்வு’க்கட்டுரை எழுதும் அறிவுஜீவி அவர்
இது தமிழ்நாட்டின் ஒரு போக்கு. ஒன்றுமே செய்ய முடியாது. வேறு கலைக்களஞ்சியத்தை உருவாக்குங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
‘தமிழ் விக்கி’ பற்றிய செல்வா என்பவற்றின் பதிவை பார்த்தேன். கலைக்களஞ்சியம் என்பது நமக்கு தெரியாத, புரியாத விசயங்களை புரிந்துகொள்ள பயன்படும் ஒரு தொகுப்பு. ஒரு கலைகளஞ்சியத்தை படித்தால், அதில் உள்ள தமிழை புரிந்து கொள்ள இன்னொரு எளிய தமிழ் அகராதி வேண்டும் என்றால் கலைக்களஞ்சியம் எதற்கு? ஆங்கில விக்கியை ‘thou’, ‘thee’ என்று தொன்மையான, இலக்கிய வடிவ ஆங்கிலத்திலா எழுதுகிறார்கள் என்று கேட்டால், ஆங்கிலம் குப்பை மொழி, தமிழ் புனிதமாக்கும் என்பார்கள். சுத்தத் தமிழில் எழுதுகிறேன் என்று தமிழ் விக்கியை ‘ஜோல்னா பையர்கள்’ எழுதி ‘ஜோல்னா பையர்கள்’ மட்டுமே படிக்கும் (புரிந்து கொள்ளும் என்று சொல்ல இயலாது) மற்றொரு குப்பையாக மாற்றப்போகிறார்கள்.
அன்புடன்,
கணேசன்.
அன்புள்ள கணேசன்,
உங்கள் கருத்துக்களை வலிமையாகச் சொல்கிறீர்கள். ஆனால் சிலவற்றை நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். தமிழில் பொதுவாக நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாசிப்பவர்கள் அறிவார்ந்த எதை வாசித்தாலும் அது ஜோல்னாப்பையர்களுக்கான குழூக்குறி என்று குற்றம்சாட்டுவதே நாம் கண்டு வருவது. ஏன் என்றால் கடந்த ஐம்பதாண்டுகளில் உலக மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் நிகழ்ந்த அறிவுப்பாய்ச்சல்களை தமிழுக்குக் கொண்டுவர நாம் தவறிவிட்டோம்.
ஆகவே தமிழின் பொதுவான தளத்துச் சொற்றொடர் அமைப்பும் சரி சொற்களும்சரி புத்துலகின் சிந்தனைகளில் இருந்து மிக விலகி நிற்கிறது. அதாவது அவை ‘டீக்கடை’ அரட்டையின் தளத்தை தாண்டவில்லை. இந்நிலையில் தமிழின் சிறந்த சிந்தனையாளர்கள் தங்கள் சுய முயற்சியினால் கலைச்சொல்லாக்கம் நிகழ்த்தியும் மொழியாக்கம் செய்தும் சுயமாக எழுதியும் தமிழைச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக ஆக்கியிருக்கிறார்கள். ஆகவேஒரு பொதுவாசகன் இன்று தமிழின் எந்த ஒரு சிந்தனைத்தளத்துக்குள் நுழைந்தாலும் அவன் கொஞ்சம் சிரமப்படவேண்டியிருக்கும். அந்த சிரமத்தை அளிக்க தயாராக இல்லாதவர்களால் எதையுமே தமிழில் தீவிரமாக வாசிக்க முடியாது.
ஆகவே விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தை விரிவான அளவில் உருவாக்குவது என்றால் அதில் ஒருபகுதி பலவகையான புரிதல் சிக்கல்களை அளிக்கத்தான் செய்யும். அதற்காக நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்ளவே வேண்டும். சிந்தனைகள் நம் வாசலில் வந்து விழவேண்டுமென எதிர்பார்க்கலாகாது
மறுபக்கம் விக்கி போன்ற முதல்கட்ட பொது கலைக்கலஞ்சியங்கள் கூடுமானவரை ‘மக்கள் மொழியிலேயே’ அமைந்திருக்க வேண்டும். மக்கள் மொழி எப்போதுமே தூயதமிழல்ல. திசைச்சொற்கள் மேவியதாகவே அது இருக்க முடியும். ஆங்கிலக் கலைக்களஞ்சியங்களிலேயே பிற ஐரோப்பியச் சொற்கள் மட்டுமல்லாமல் இந்தியச் சொற்கள் வரை உள்ளன.
விக்கியின் ஆசிரியர் குழு மொழியை ஒரு குறைந்தஅளவு தரத்துக்குள் வைக்க வேண்டும் என்று முயன்றால் அதில் தவறில்லை என்றே சொல்வேன். ஆனால் அவர்கள் தனித்தமிழ் வாதம் போன்ற முரட்டு நடைமுறையை அங்கே மேற்கொண்டால் அம்முயற்சி தனித்தமிழ்வாதத்துக்கான ஒரு தடயமாக, இடிந்த கோட்டை போல, கிடக்கும்–பயனற்று. அதையே அவர்களுக்குச் சொல்கிறேன்
ஜெ
வணக்கம் திரு. ஜெயமோகன்,
முதலில், தமிழ் விக்கித் திட்டங்களில் நீங்கள் பங்களிப்பது கண்டு மிகவும் மகிழ்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் பங்களிப்பது மிகவும் நல்ல ஒரு முன்மாதிரியாக அமையும்.
Tamildict தளம் பற்றி அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். அதே போல் தமிழ் விக்சனரி ( http://ta.wiktionary.org ) என்ற விக்கி கட்டற்ற அகரமுதலித் தளமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதில் ஏறக்குறைய ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. இந்தத் தளத்தின் மேம்பாடு பற்றிய தங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறோம்.
**
http://jeyamohan.in/?p=130 என்ற கட்டுரையில் தாங்களே தமிழின் சொல் வளம் குறித்து எழுதி உள்ளீர்கள். தங்களின் இந்த மடலே கூட அருமையான தமிழில் உள்ளது. துரதிர்ஷ்டம் என்பதைக் காட்டிலும் தீயூழ் என்பது எவ்வளவு அருமையான சொல்! தங்களின் பல கலைச்சொற்களும் இன்று சிற்றிதழ் வட்டம் தாண்டி பொதுப்பரப்பில் பயன்படத் தொடங்கி உள்ளன. ஆக, தனிப்பட்ட முறையில் ஒருவர் நல்ல தமிழில் எழுத முற்படுவது உங்களுக்கு முழு ஏற்பே என்று அறிகிறோம்.
தமிழ் விக்கி ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் எல்லா கட்டுரைகளிலும் சீரான நடை இருப்பது முக்கியம். இதை பள்ளிக்கூட மாணவர்கள் பயன்படுத்துவதால் இயன்ற அளவு நல்ல தமிழில் எழுதுவதும் அவசியம்.
சோவியத் யூனியன் -> சோவியத் ஒன்றியம்
இராணுவ ஆப்பரே ஷன் – > இராணுவ நடவடிக்கை
என்று மாற்றி எழுதினால் கூட தனிதமிழ்த் திணிப்பு என்று விமர்சிக்கிறார்கள்.
சமசுக்கிருதத்தை நீக்கினால் தான் சாதிக் காழ்ப்பு என்கிறார்கள். தேவையற்ற ஆங்கிலத்தை நீக்குவது என்ன பரங்கிக் காழ்ப்பா? ஒன்றியம், நடவடிக்கை என்பது தனித்தமிழ்த் திணிப்புச் சொற்களா? வழக்கத்தில் இல்லாதவையா? இந்த முறைப்பாட்டின் நியாயம் என்ன என்று நீங்களே சொல்லுங்கள்.
ஒரு சாரார் தமிழை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து, தேவையற்று ஆங்கிலம் கலந்து எழுதினாலும் அப்படியே விட்டு விட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். சாதாரண தமிழ்ச் சொற்களைக் கூட அறியாமை, தமிழைக் கிள்ளுக்கீரையாக நினைப்பதே இதற்கு காரணம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
விக்கி போன்ற பொதுத் தளங்களில் இரு தரப்பும் இணங்கும் சமரசப் பரப்பில் இயங்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் உடன்படுகிறோம். ஆனால், கிரந்தம், பிற மொழிக் கலப்பை ஆதரிப்போர் எந்த விதமான உரையாடல், சமரசத்துக்கும் இணங்க மறுக்கின்றனர் என்பது தான் பிரச்சினை. நீங்கள் நினைப்பது போல் தமிழ் விக்கியில் பக்கம் பக்கமாக தனித்தமிழுக்கு மாற்றும் எந்த செயல்திட்டமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. எத்தனையோ ஆயிரம் பக்கங்களில் பிற மொழிக் கலப்பு, கிரந்தம் உள்ளன. இது வரை தமிழ் விக்கியில் நிகழ்ந்தவை உரையாடல்கள் மட்டுமே. ஒரு கருத்து வேறுபாடு குறித்து உரையாடக் கூடவா கூடாது?
**
தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் தங்களைப் போன்ற எழுத்தாளர்களின் பங்கு அளப்பரிது. ஆனால், ஒரு மொழியின் இலக்கணம், எழுத்து ஆகியவற்றைப் பாதிக்கும் முடிவுகள் வரும் போது அந்தந்த மொழி அறிஞர்களின் கருத்தும் மிகவும் முக்கியம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு செருமன் மொழியில் இருந்து சில எழுத்துகளை நீக்கினார்கள். இதனை அதற்கென அதிகாரமுள்ள மொழி அறிஞர்கள் உள்ள அமைப்பே முடிவு செய்ய இயலும். கண்டிப்பாக ஊடகங்கள் மட்டுமோ எழுத்தாளர்கள் மட்டுமோ முடிவு செய்ய இயலாது. இது கிட்டத்தட்ட எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால், தமிழில் மட்டுமே தமிழ் மொழி குறித்த தமிழறிஞர்களின் கருத்து எள்ளி நகையாடப்படுவது ஏன்?
தனித்தமிழ் அறிஞர்கள் புதுமைப்பித்தனை படித்தார்களா அசோகமித்திரனைப் படித்தார்களா என்று கேட்கிறீர்கள். ஆனால், படிப்பறிவே அற்ற கோடிக்கணக்கான நாட்டுப்புற மக்கள் இயல்பாகவே கிரந்த ஒலி தவிர்த்தும் நல்ல தமிழ்ச் சொற்களைக் கொண்டும் தானே பேசி வருகிறார்கள்? இந்த இயல்பான தமிழ் முறையை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமா கூடாதா? வலிந்து கிரந்தத்தைத் திணித்து அவர்கள் அதை உச்சரிக்க வலியுறுத்தவதன் மூலம் அவர்களை நாகரிகம் தெரியா காட்டான்களாகச் சித்தரித்து நையாண்டி செய்யும் போக்கே தொடர்கிறது.
இது வரை சில தனித்தமிழ்ச் சொற்கள், நீங்கள் கூறுவது போல் சமகால இலக்கிய அறிவும் துறை அறிவும் இல்லா சில தமிழறிஞர்களால் முன்வைக்கப்பட்டமையால் ஒரு சில இடங்களில் ஒரு வகை வறட்டுத் தன்மை இருப்பது உண்மையே. கலைச்சொல் பட்டியல்களில் உள்ள பல பரிந்துரைகள் பொருத்தமற்று இருக்கின்றன. ஆனால், இணையத்தின் பயனாக துறை வல்லுனர்கள், தமிழறிஞர்கள் ஒன்று கூடி நல்ல சொற்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
என் பெயரை ரவிசங்கர் என்று எழுதித் தந்தாலும் குங்குமம் இதழ் ரவிஷங்கர் என்று பதிப்பிக்கிறது. ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ என்று ஏற்கனவே கிரந்த எழுத்துகள் இருப்பதால், dha, ba, ga ஒலிகளுக்கு என்று புதிய தமிழ் கிரந்த எழுத்துகளை அறிமுகப்படுத்தலாமே என்று பரப்புரை தினமணியில் காணக் நடக்கிறது. இது போல் அச்சு ஊடகங்கள் தேவையற்று கிரந்தத்தையும் பிற மொழிச் சொற்களையும் புகுத்தி பிறகு அதையே இயல்பான தமிழ் நடையாக வலியுறுத்துவது சரியா?
பிற மொழிச் சொற்கள், கிரந்தத்தை முற்றிலும் ஒதுக்காமலும் அதே வேளை கண்மூடித்தனமாகவும் கேள்வியே இன்றியும் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருக்குமாறு ஒரு வழிகாட்டுக் கொள்கையை விரைவில் பரிந்துரைக்க இருக்கிறோம். தங்களைப் போன்றோரின் கருத்தையும், உள்ளீட்டையும் பெற்று கண்டிப்பாக இக்கொள்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்.
அன்புடன்,
ரவி
அன்புள்ள ரவிசங்கர்
ஒரு பொதுவான புரிதலை அடைவதற்கான வழிமுறைகளை தேடுகிறீர்கள் என்றால் அதைவிடச் சிறப்பான விஷயம் வேறொன்றும் இல்லை. உரையாடலுக்கு திறந்திருக்கும் ஒரு இடமே இப்போது நமக்குத்தேவை
பலசமயம் மொழிப்பற்று அளவுக்கே மொழியறிவோ அல்லது மொழிவரலாற்றறிவோ இல்லாமை நமக்கு ஒரு சிக்கலாக உள்ளது. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். கிரந்த எழுத்துக்கள் ‘வடக்கே’ இருந்து ஆரியனால் கொண்டு வந்து திணிக்கப்பட்டவை அல்ல. கிரந்த லிபி என்பது முழுக்கமுழுக்க தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதை நீங்கள் விக்கியிலேயே பார்த்துக்கொள்ளலாம். கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் சமணர்களால் உருவாக்கப்பட்டது அது என நான் நினைக்கிறேன். பிராம்மி எழுத்துருவில் இருந்து வடிவமைக்கப்பட்டது இது. தமிழில் சம்ஸ்கிருத நூல்களும் கருத்துக்களும் அதிகமாகப் பேசப்பட்டபோது அந்த எழுத்துரு தேவைப்பட்டது. அவற்றில் சில எழுத்துக்களை இன்றைய தமிழும் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கான தேவை இருந்தமையாலேயே அப்படி எடுத்தாளப்பட்டது. இது நடந்தது கிபி எட்டாம் நூற்றாண்டு வாக்கில்
இன்றும் அந்த தேவை உள்ளது, இன்று ஆங்கில எழுத்துக்களை தமிழில் எழுதியே ஆக வேண்டியிருக்கிறது. கிரந்த எழுத்துக்களில் எவற்றை தமிழ் தன்னதாக ஏற்றுக்கொண்டிருக்கிறதோ அவற்றை தமிழ் எழுத்துக்களாகவே கொள்ளலாம் என்றே நான் நினைக்கிரேன். அவை ஆங்கில பெயர்களை எழுதுவதற்கு தமிழில் தமிழின் பதினைந்து நூற்றாண்டுக்கால வரலாறு அளிக்கும் ஒரு வசதி. அதை தூய்மைபப்டுத்தி தமிழை ஐந்தாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்வதையே நான் மறுக்கிறேன். கிரந்த எழுத்துக்கள் திணிக்கப்பட்டவை அல்ல. ஏனென்றால் தமிழில் இன்று உள்ள எல்லா எழுத்துக்களும் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழுக்கு வந்தவையே.
தமிழ் எழுத்துக்களில் நூறு வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன. அச்சு வந்தபோதே தமிழ் மாறிவிட்டது. இலக்கணமும் வரியமைப்பும் எல்லாமே. அதற்கு முன் தமிழில் கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி எதுவுமே இல்லை. ஆகவே தமிழை தூய்மைப் படுத்த அவற்றை நீக்கவேண்டும் என்று ஒரு குழு கிளம்பினாலும் கிளம்பலாம். முன்பு தமிழில் மணிமொழி என்ற சிற்றிதழ் ஒன்று வந்தது. செந்தமிழ் இதழ். நான் அதில் நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் ஆசிரியர் எல்லா குறியடையாளங்களையும் எடுத்துவிட்டே அச்சிடுவார். அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. என் குறியை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம்தான். காலத்தில் பின்னகர்வதற்குப் பெயர் சீர்திருத்தம் அல்ல.
இதற்குமேல் என்னுடைய தனிப்பட்ட மொழிப்போதம் காரணமாக நான் கூடுமானவரை கிரந்த எழுத்துக்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் தவிர்ப்பேன். மலையாளத்திலும் கூடுமானவரை சம்ஸ்கிருதத்தை தவிர்ப்பதே நான் முன்னோடியாகக் கொண்ட எம்.கோவிந்தன் மரபின் வழக்கம். அதற்குக் காரணம் ஒரு மொழியின் ஒலியமைப்பு நேர்த்தியாக இல்லாவிட்டால் அழகியல் ரீதியாக அது சிதைவுறுகிறது என்பதனாலேயே. அதிருஷ்டம் என்பதைவிட தீயூழ் என்பது தமிழின் அழகு கொண்டது.
ஆனால் ஒரு பொதுமுயற்சியில் ஒருபோதும் அடிப்படைவாத வேகத்துடன் இந்த உணர்வை கலப்பதை நான் ஏற்க மாட்டேன். இதற்கான அளவுகோல் என்ன என்றால் ஒன்றே. அம்முயற்சியை பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்காதபடி அது ஆகிறதா என்பதே. ஓர் அகராதியை அல்லது கலைக்களஞ்சியத்தை பயன்படுத்துபவர்கள் சொல்லும் குறை என்பது எப்போதும் பரிசீலிக்கத்தக்கதே.
விக்கியை உங்கள் மறுகுழு கைப்பற்றிக்கொண்டு எல்லாவற்றையும் ஜஸஷவாக மாற்றிக்கொண்டிருந்தால் அதையும் அடிப்படைவாதம் என்றே சொல்வேன்
ஜெ
இணைய ஆவணகம் (Internet Archive) அல்லது இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, கட்டற்ற (திறமூல) அணுக்கம் கொண்ட கணினிவழி மின்னூலகம் மற்றும் உலகளாவிய இணைய தள ஆவணப்படுத்தல் ஆகியவற்றை கட்டமைத்து பேணும் ஓர் இலாப நோக்கமில்லா நிறுவனமாகும்
The Internet Archive (IA) is a nonprofit organization dedicated to building and maintaining a free and openly accessible online digital library, including an archive of the World Wide Web.
வெங்கட்
ஆனால் கம்ப்யூட்டரை கணிப்பொறி என்றோ கணனி என்றோதான் எழுதவேண்டும் என்பேன். மெட·பிஸிக்ஸ் என்பதை மீபொருண்மைவாதம் என்றே எழுத வேண்டும் என்பேன். சர்வாஸ்திவாதம் சமணக்கலைச்சொல்லை அனைத்திருப்புவாதம் என்ற தமிழ்ச்சொல்லால் மூலச்சொல்லை அப்படியே அடைப்புக்குள் கொடுத்து அளிக்கவேண்டும் என்பேன்.
இந்த விஷயத்தில் இரு பக்கமும் பிடிவாதங்கள் இருக்கின்றன என்பதே என் தரப்பு. ஆனால் ஒருதரப்பு பயனர்களாக இருக்கும்போது அவர்கள் தங்கள் குறைகளைச் சொல்லவேண்டிய இடத்தை அடைகிறார்கள்.
ஜெ
அன்புள்ள கள்ளபிரான்
நல்ல கருத்து.
ஒரு விஷயம் உதைக்கிறது. தனித்தமிழ் என்பதற்கும் ஈழம் போன்ற அயலகத் தமிழுக்கும் என்ன தொடர்பு? விஷயத்தை விடயம் என்றால் அது தனித்தமிழா? ட தமிழுக்கு வந்த அதே காலகட்டத்தில் ஷ வும் வந்து விட்டதே.
மேலும் ஈழ இதழ்களில் மலையாளத்தைவிட சம்ஸ்கிருதம் அதிகம் என்பதே நான் கண்டது. இன்றும் சமஷ்டி பிரதான பிரேரணை போன்ற சொற்களை தாராளமாகவே பாவிக்கிறார்கள்
ஜெ