அன்புள்ள கள்ளபிரான்
நீங்கள் என் கட்டுரையின் தலைப்பை அல்லது முடிவையும் சேர்த்து வாசித்திருக்கவேண்டும். தலைப்பில் காந்தியும் தலித்தியமும் 1 என்று இருக்கிறது, கட்டுரை முடிவில் மேலும் என்று இருக்கிறது. என் கட்டுரை ஏழு பகுதிகள் கொண்ட ஒரு விளக்கத்தின் முதல் அத்தியாயம் அதாவது முன்னுரை மட்டுமே. முடிவுவரை படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பொருத்திப் பார்க்கவும். அதுவே முறை.
ஜெ
நான் நேற்று காந்தி பிறப்பன்று ஓஸிபிஸாவின் பழைய ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை இணையத்தில் கண்டெடுத்தேன். எண்பதுகளில் மும்பையிலோ சென்னையிலோ இந்தப் பாடல் பாடப்பட்டிருக்கிறது. மேடையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அது அவர்கள் தங்கள் படைப்பூக்கத்தின் உச்சத்தில் நின்ற காலகட்டம். அந்த குரல்களில் உள்ள ஆப்ரிக்காவுக்கே உரிய ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பையும் உச்சத்தில் எழும் தன்மையையும் நான் மிகமிக விரும்பினேன். இந்தப்பாடலை உரக்கவைத்துக் கேளுங்கள். உங்கள் ரத்தத்தில் அதை உணர்வீர்கள்
http://www.youtube.com/watch?v=xzT_vvA8Igk
ஓப்லா விஸ்வேஷ்
ஜெயமோகன், முதல் தடவையாக தமிழிலும் மற்றும் உங்கள் பகுதியிலும் ஒரு செய்தி எழுத முயற்சித்து அனுப்புகிறேன்.நிறைய தப்பு இருக்கக் கூடும்.காந்தி பற்றி உங்கள் கருத்து எப்பொழுதும் போல தெளிவும் ஆழமும் கொண்டிருக்கிறது. படிக்கும் போது கண்ணில் நீர் ததும்புகிறது. அறிவு ரீதியாக காந்தியை தெரிந்து கொள்ள ஆஷிஷ் நந்தியை விட இவ்வுலகில் வேறு யாரும் உண்டா என்று எனக்கு தெரிய வில்லை. நேற்று(2/10/2009) கூட நீவ் இண்டியன் எஃஸ்ப்ரெஸ்ஸில் சிவ் விஸ்வனாதன் எழுதிய நடுப்பக்க கட்டுரையை படிக்க தமிழ் கூரும் நல்லுலகம் முயற்சித்தால் நல்லது. மனதின் கதவை இன்னும் எத்தனை நாள் சீல் போட்டு பூட்டி வைப்போம் என்று தெரியவில்லை. திறந்த மனப்பான்மை இன்றி இவ்வுலகில் எதைப்பற்றி படிக்க, சிந்திக்க மற்றும் பேச முடியும். மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டெலா, ஆங் சான் சு கீ, கணக்கற்ற சுற்றுப்புற மற்றும் தனி இயக்க வாதிகள் காந்தியின் கருத்தால் எழுச்சி யும் பாதிப்பும் பெற்றார்கள் என்றால் நாம் நம்புவோமா. காந்தியில் ஒரே நல்ல விசயம் என்னவென்றால் அவர் இன்னும் புனிதப் படவில்லை. எந்த ஜாதியும், கட்சியும், ஊரும் மற்றும் மாநிலமும் அவருக்காக வரிந்து வருதில்லை. அவரோடு புனிதம் என்ற வார்த்தை சேர்க்கப் பட்டாலும் அவர் இன்னும் புனித பீடத்தில் இடம் பிடிக்க வில்லை. யாரும் திட்டலாம். கிண்டல் செய்யலாம். இந்தியா இன்னும் அவரை வாழ வைத்திருக்கிறது. தன் உடலோடு அவர் போராடியதுபோல வேரு எந்த சமூக சீர்திருத்த வாதி இவ்வுலகில் உண்டா என்று எனக்கு தெரிய வில்லை. ஆர்வம் உடையவர்கள் ராஜ் மோஹன் காந்தியின் காந்தி பற்றிய சமீபத்திய புத்தகம் படிக்கலாம்
செங்கதிர், சென்னை
அன்புள்ள செங்கதிர்,
நீங்கள் சொல்வது உண்மை. இப்போது வாசிக்கும்தோறும் தெரியும் ஒருவிஷயம் இருக்கிறது — இந்தியாவில் கடந்த பல வருடங்களில் உள்நோக்கம்கொண்ட ஆய்வுகள் மட்டுமே மலைமலையாக வந்து நம் சூழலை நிரப்பியிருக்கின்றன. குறிப்பாக காழ்ப்புகொண்ட வங்காளத்தினரின் குரல்கள். வங்கத்துக்கு வெளியே எதையுமே காணமறுக்கும் அவர்களின் மூர்க்கம். நம் அறிவூச்சூழலை வங்க வண்டலில் இருந்து பெயர்த்தெடுப்பதே பெரிய வேலை. இப்போதாவது அது தொடங்கியிருப்பது மிக மிக முக்கியமான ஒன்று
ஜெ
அன்புள்ள ஜெமோ,
காந்தியை பற்றிய உங்களது கட்டுரை/பதில்களுக்கு நன்றி என்ற வார்த்தையை என் உள்ளத்திலிருந்து சொல்வதை தவிர வேறு ஒன்றும் எனக்கு தோன்றவில்லை. அதை இன்று (OCT-2) சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காந்தியை அவருக்கு எதிரான கருத்துகள் மூலம் அறிந்தவர்களே இன்றைய தலைமுறையில் அதிகம் என நீங்கள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். சிறு வயதில், சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்ற ஒற்றை காரணத்தை (மேலும் அவரது நற்குணங்கள் வரிசைபடுத்தப் பட்டன, அட்டவணை போல்) சொல்லி அவரை பற்றிய அதீத புகழ்ச்சியையும், ஆராதனையையும் கண்டு வளர்ந்ததாலே அவரை பற்றிய எதிர்மறையான கருத்துக்களால் எளிதாக ஒரு தலைமுறை ஈர்க்கபடுகிறதோ?
அன்புடன்,
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்
காந்தியைப் புரிந்துகொள்வதென்பது நாம் நம்முடைய தேசத்துக்கென வரித்துக்கொண்ட இலட்சியங்களை புரிந்துகொள்வதே. எந்த தேசத்துக்கும் அதற்கான இலட்சியம் ஒன்றிருக்கும். நடைமூறையும் இருக்கும். இலட்சியம் அந்த நடைமுறையை எங்கேனும் வழிநடத்த வேண்டும். புஷ் ஆண்டபோதும் அமெரிக்காவை வழிநடத்தியது எமர்சனும் தோரோவும் விட்மானும் ஜெ·பர்சனும் லிங்கனும் உருவாக்கிய அமெரிக்க இலட்சியவாதமே. இலட்சியவாததை இழந்த தேசம் நடைமுறையில் அநீதியை மட்டுமே உருவாக்கும். ஆகவே தான் மீண்டும் மிண்டும் காந்திக்குச் செல்லவேண்டியிருக்கிறது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீண்ட நாட்களாக நீங்கள் காந்தியைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் அனைத்தையும் படித்து வருகிறேன். அவருடைய கொள்கைகள் குறித்து மேலோட்டமாக எழுப்பப்படும் கேள்விகளால் எழும் பல சந்தேகங்களை அவை தீர்த்தன. ஜாதி, மொழி, தொழில்நுட்பம், கட்டிடக்கலை என்று ஒவ்வொன்றிலும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் மேலோட்டமாக பார்க்கையில் பிற்போக்குத்தனமாகவும், ஒருசார்புடையதாகவும் தோன்றினாலும், அதை அவர் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகே சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சத்யாக்ரகம் என்பது எதிர்ப்பு ஏதும் இன்றி அடி வாங்குவது என்றும், அது பிரிடிஷ் போன்ற ஜனநாயகம் இருந்த நாட்டுடன் பயன்படலாம் ஆனால் யூதர்களைக் கொல்வதையே கொள்கையாக வைத்திருந்த ஹிட்லர் போன்றவர்க்கு எதிராக எப்படி பயன்படும் என்ற புரிதலை, சத்யாக்ரகம் என்பது அநீதிக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பது என விளக்கிய “ஹிட்லரும் காந்தியும்” கட்டுரை மாற்றியது. அந்த கட்டுரை படித்த பொழுதே எழுத நினைத்த கடிதம் இப்பொழுதுதான் எழுதுகிறேன்.
ஒரு பக்கம் மகாத்மா, தேசத்தந்தை என்ற புகழுரைகள், மறுபக்கம் ஜாதிவெறியர், வேடதாரி என்ற வசைகள் இவற்றுக்கு நடுவே தன்னுடைய ஒவ்வொரு கருத்தையும் சுய விமர்சனத்துக்கு உட்படுத்தி வாழ்நாள் முழுவதும் தன்னை மேம்படுத்திக்கொண்ட ஒரு மனிதரை அறியாமல் விட்டுவிட்டோம் என்றே நினைக்கத் தோன்றியது. காந்தியைப் பற்றிய புரிதல்களையும் தாண்டி அந்த கட்டுரைகள் ஆழ்ந்த சிந்தனையை தூண்டுகின்றன, குறிப்பாக லாரி பேக்கர் கட்டுரை. அருமை.
தில்லை நடராஜன்.
அன்புள்ள தில்லைநடராஜன்
சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியவரலாறு என்பது முட்டிமோதி பங்கிட்டுக்கொண்டு முன்னேறுவதற்கான மூவாயிரம் சாதிகளின் துடிப்பு மட்டுமே. அது இயல்பும் கூட. ஆனால் என்ன நடந்தது என்றால் சாதிகளுக்கு அப்பாற்பட்ட இலட்சியவாதங்கள் அனைத்துமே கைவிடப்பட்டன. சாதியை மீறிய தலைவர்கள் எல்லாருமே கைவிடபப்ட்டனர். சாதிகளின் நலன்களுக்குரியவர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அவர்களை முன்னிறுத்தி வரலாறுகள் உருவாக்கப்பட்டன. சாதித்தலைவர்களைப் பற்றி கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை பெரிய மிகைவரலாறுகளும் தொன்மங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். அவற்றை எளிய முறையில் உள்ளேபோய் உண்மையைப் பார்க்கும்துணிவு நம் அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் எவருக்கும் இல்லை என்பதல்லவா உண்மை?
ஆனால் அவர்கள் காந்தி போன்ற பொது தலைவர்களை ‘தோலுரிப்பார்கள்’ அப்போதுதான் அவர்கள் முற்போக்கு. தங்கள் சாதித்தலைவரை மேலே தூக்க காந்தியை மட்டம் தட்டுவார்கள். ஏன் என்றால் இந்த சாதித்தலைவர்கள் அனைவருமே தேசப்பொதுவில் இருந்து தங்கள் பங்குக்காக சண்டைபோட்டவர்கள். தேசத்துக்கு அவர்கள்செய்த பணி அதுவே. அதற்காகவே அவர்களை அவர்களின் சாதிகள் கும்பிடுகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பொது எதிரி காந்தி.
ஆகவேதான் காந்தியைப்பற்றி எதிர்மறையாகவே எப்போதும் கேள்விப்படுகிறோம். ஒரு குட்டி சாதித்தலைவனைப் பற்றி புகழ்மொழிகளை மட்டுமே கேள்விப்படுகிறோம்
j