காந்தியும் தலித் அரசியலும் – 2

 2.காந்தியின் வரலாற்றுப்பாத்திரம்

பூனா ஒப்பந்தம் மற்றும் தலித் அரசியலைப்பற்றிபேசுவதற்கு முன்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பெரிய வரைவில் அந்த சந்தர்ப்பத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். இந்தியா என்ற பெருநிலத்தின் பற்பல பிரிவுகள் கொண்ட பலகோடி மக்களின் நலன்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் வல்லமை வாய்ந்த ஒரு பேரரசின் மகத்தான ராஜதந்திர விளையாட்டுக்களுடன் சம்பந்தமுள்ளதாகவும் அச்சித்திரத்தை அணுக வேண்டும்.

தலைவன் வருகை

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் பார்த்தால் சுதந்திரம் குறித்த காங்கிரஸின் கருத்துக்கள் படிப்படியாக மாறிவருவதைப் பார்க்கலாம். 1885 ல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் அரசில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பிற வணிக வாய்ப்புகளைப் பற்றி உருவாகிவரும் சிறிய அதிருப்திகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என்பதற்காகவே.

பின்னர் அந்த இந்தியசுதந்திரம் என்ற கருத்து மெல்ல மெல்ல வலுப்பெறலாயிற்று. இந்தியாவில் இந்தியர்களுக்கு அதிக உரிமைகள் தேவை என்றும் இந்திய மக்களின் அடிப்படைத்தேவைகளை பிரிட்டிஷ் அரசு கவனிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. திலகர் போன்றவர்களின் தலைமையில் தீவிரவாத அணி ஒன்று தேசவிடுதலை என்ற கோணத்தில் சிந்திக்க, கோகலே போன்றவர்களின் தலைமையில் மிதவாத அணி மேலும் ஆட்சி உரிமைகள் என்ற கோணத்தில் சிந்தித்தது.

இக்கால காங்கிரஸ் இவ்விரு தரப்புக்கும் இடையேயான கடும் மோதல்களின் முரணியக்கம் மூலம் கொஞ்சம் கொஞ்ச்மாக கருத்துதளத்தில் முன்னகர்ந்தது என்று சொல்லலாம்.  காங்கிரஸ் பொதுவாக மிதவாதிகளின்  கையிலேயெ இருந்தது. ஆனால் கருத்தியல் ரீதியாக தீவிரவாதிகள் காங்கிரஸை படிப்படியாக மேலே இட்டுச்சென்றார்கள்.

ஆனால் இக்காலகட்டத்தில் காங்கிரஸ் கிட்டத்தட்ட செயலிழந்தே இருந்தது. அதற்குக் காரணம் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலே. உருப்படியாக ஒன்றுமே நிகழவில்லை. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தயாரிப்புநிலைக் காலம் என்றே இதைச் சொல்ல முடியும்.

 

இந்த மோதலை உருவாக்கி நிலைநாட்டியதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என இன்று ஏராளமான ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிதவாதிகளில் பலர் ரகசியமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார்கள். பலர் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் இலாபங்களை பெருமளவில் பெற்றார்கள். பாரதி உள்ளிட்ட தீவிரவாதிகள் இதையே காரணமாக காட்டி ஒட்டுமொத்த மிதவாதிகளையே நடிப்புச் சுதேசிகள் என்று வசைபாடினார்கள்.

 

இச்சூழலில்தான் 1915 ல் காந்தி காங்கிரஸ¤க்குள் வருகிறார். 1918ல் சம்பாரன் சத்யாகிரகம் மூலமே அவரது பங்களிப்பு உருவாகிறது. காந்தியின் வருகை உருவாக்கிய நம்பிக்கையையும் அலையையும் பாரதி முதலிய தீவிரவாதிகள்கூட  காந்தி கவனிக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் 1920லேயே அவரை வாழ்க நீ எம்மான்என்று வாழ்த்தி வரவேற்றதில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.

 

காந்திக்கான இடம் காங்கிரஸில் காலியாக இருந்தது என்றே சொல்லவேண்டும். ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசின் நல்லெண்ணத்தை இழக்காதவரும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்பவரும் நிதானமானவருமான கோகலே. ஆனால் அவரால் மக்களை எழுச்சி கொள்ளச்செய்ய முடியாது. மறுபக்கம் தீவிரமான எண்ணங்கள் கொண்டவரும் பூசலிடுபவருமான திலகர். ஆனால் அவரே மக்கள்சக்தி. இவ்விரு ஆற்றல்களையும் இணைக்கும் மையமாக வந்தார் காந்தி

 

காந்தியிடம் அன்று இந்திய காங்கிரஸ் தேடிய அந்த அபூர்வமான இணைப்பு இருந்தது. இந்தியா போன்ற மாபெரும் தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த காங்கிரஸின் பலநூறு உட்பிரிவுகள்கொண்ட அமைப்பை இடைவெளி இல்லாத சமரசம் மூலம் முன்னெடுத்துச்செல்லும் நிதானமான அணுகுமுறை அவரிடம் இருந்தது. பிரிட்டிஷ் ராஜதந்திரத்துடன் உரையாடவும் அதை கையாளவும்கூடியவராக அவர் இருந்தார். மறுபக்கம் மிதவாதிகளைப்போல பிரிட்டிஷாரிடமிருந்து சில உரிமைகளை வாங்கினால் போதும் என அவர் எண்ணவில்லை.அவருக்கு இந்தியாவின் சுதந்திரம் குறித்த ஒரு கனவு இருந்தது. அதில் சமரசமற்றவராக அவர் இருந்தார்.

 

அதாவது காந்தி தீவிரவாதிகளின் சுதந்திரக் கனவை மிதவாதிகளின் ஜனநாயக வழிமுறைகள் மூலம் வென்றெடுக்க முனைந்தார். அந்த இணைப்பே அவரை தலைமைக்குக் கொண்டுவந்தது. அவர் வந்ததுமே காங்கிரஸ் சட்டென்று அபாரமான ஓர் ஒருங்கிணைவை அடைந்ததை வரலாறு காட்டுகிறது. அதன் வழியாக காங்கிரஸ் சம்பிரதாயமான கருத்தரங்குகளை நடத்தும் அமைப்பு என்ற நிலையில் இருந்து மீறி எழுந்து செயலூக்கம் கொண்ட ஒரு போராட்ட அமைப்பாக மாறியது. அவர் மையப்பொறுப்புக்குவந்த மூன்றுவருடங்களுக்குள், 1921ல், காங்கிரஸ் சுயராஜ்யத்தை தன் அடிப்படை இலக்காக பிரகடனப்படுத்தியது.

 

காந்தி அரசியலுக்கு வந்தது சமநிலையிழந்து செயல்ற்றுக்கிடந்த ஒரு அமைப்புக்கு ஓர் அச்சு, ஒரு சமநிலைப்புள்ளி தேவையாக இருந்த காலகட்டத்தில். அவர் அந்த மையமாக இருந்தார், கடைசிவரை.  

 

ஜனநாயகவாதியின் சிலுவை 

 

அம்பேத்காருடனான உரையாடலில் தன்னம்பிக்கையுடன் காந்தி சொனனர், நான் என் முழுவாழ்க்கையிலும் ஜனநாயகவதியாகவே இருந்து வந்திருக்கிறேன். என் மரணத்துக்குப் பின்பு கங்கையில் என் சாம்பல் கரைந்தபின்பு ஜனநாயகவாதிகளில் தலையாயவன் நான் என்பதை இந்த உலகம் ஏற்றுக்கோள்ளும். நான் இதை பெருமைக்காகச் சொல்லவில்லை. பணிவோடு சொல்கிறேன்….

 

கடைசிவரை காங்கிரஸ¤க்குள் மிதவாதி , தீவிரவாதி என்ற பிரிவினை இருந்துகொண்டுதான் இருந்தது. சுபாஷ் சந்திரபோசுக்கும் காந்திக்குமான முரண்பாட்டின் உள்ளுறைகூட அதுதான். ஆனால் அந்த வகையான உள்மோதல்கள் காங்கிரஸை ஸ்தம்பிக்க வைத்த காலம் முடிந்துவிட்டது. காங்கிரஸை காந்தி தன் தலைமையில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அந்த அதிகாரம் அவருக்கு இருந்த அபாரமான மக்கள்செல்வாக்கால் உருவானது. அவர் வந்தபின் காங்கிரஸ¤க்குள் அவரன்றி  எவருமே முக்கியமில்லை என்ற நிலையை மக்கள் உருவாக்கினார்கள்.

ஆனால் காந்தி அந்தச் செல்வாக்கை சர்வாதிகாரத்தனமாக உபயோகித்துக் கொள்ளவில்லை. காங்கிரஸின் அன்றைய வரலாற்றை வாசிக்கும் எவருக்குமே அது தெரியும். காந்தி அன்று காங்கிரஸில் இருந்த அத்தனை தலைவர்களையும் தூக்கி வீசியிருந்தால்கூட காங்கிரஸ¤க்கு ஒரு இழப்பும் ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை. காந்தியை எதிர்த்து வெளியே சென்ற ஒருவர் கூட பெயரளவுக்குகூட மகக்ளாதரவை திரட்டமுடியவில்லை. அவரது இறப்புவரை காந்தி என்றால் காங்கிரஸ்தான், காங்கிரஸ் என்றால் காந்தி தான். ஆனால் ஒருபோதும் எவரையும் இழக்க காந்தி தயாராக இருக்கவில்லை. எப்போதுமே முடிந்தவரை அணைத்துப்போகவே அவர் முயன்றிருக்கிறார்.

ஏன் என்றால் அவர்களின் மக்கள் செல்வாக்குக்காக அல்ல. இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் பலநூறு சமூகங்கள் பலவகையான கருத்தோட்டங்கள் உள்ளன என்று காந்தி உணர்ந்திருந்தார். அந்த எல்லா தரப்புக்கும் காங்கிரஸ¤க்குள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர் எண்ணினார். அப்போது மட்டுமே காங்கிரஸ் தேசத்தின் பிரதிநிதியாக நின்று தேசத்துக்காக போராட முடியும் என அவர் நம்பினார்.

ஆகவே மதன்மோகன் மாளவியா, புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த், கெ.எம்.முன்ஷி போன்ற மரபுவாதிகள் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற நவீனத்துவர்கள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், கான் அப்துல் கா·பார் கான் போன்ற இஸ்லாமியவாதிகள் ஆகிய அனைவருக்குமே இடமுள்ளதும் அவர்கள் அனைவருடைய அணுகுமுறைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாடி ஒரு பொதுத்தளத்தைச் சென்றடையக்கூடியதுமான ஒரு ஜனநாயகக் காங்கிரசையே அவர் கனவுகண்டார். எனவே சமரசம் செய்துகொண்டே இருந்தார்

காந்தியின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களை கூர்ந்து வாசிக்கும் ஒருவர் அவர் ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல்வேறு கருத்துநிலைகளை உரையாடச்செய்யவே தன் வாழ்நாளை முழுக்கச் செலவழித்தார் என்று புரிந்துகொள்வார். ஒருவரை ஒருவர் ஐயப்பட்ட, ஒருவர் நலன்களுடன் இன்னொருவர் நலன் முரண்பட்ட, பல்வேறு தரப்புகள் நடுவே ஒரு சமரச மையமாக அவர் இருந்துகொண்டே இருந்தார். அவர்களை தன் நிதானத்தாலும் மதிவன்மையாலும் கட்டுக்குள் வைத்திருந்தார். தேவையான போது அவர் உண்ணாவிரதம் போன்ற சுயதண்டனை முறைகள் மூலமும் அவர்களை கட்டுப்படுத்தினார்.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் மீது மனக்குறைகள் இருந்தன. பாரபட்சங்களை அவர்கள் கண்டடைந்தபடியே இருந்தார்கள். ஒரு அப்பத்தை ஒன்பது பசித்த குழந்தைகளுக்குப் பங்கிட்ட தந்தையாக இருந்தார் அவர். அவரை முழுமனத்துடன் ஏற்க எந்தக்குழுவின் தலைவராலும் இயலவில்லை. உண்மையிலேயே சில பாரபட்சங்கள் நடந்திருக்கலாம். ஏன் என்றால் இத்தகைய ஒரு பீடத்தில் இருப்பவர் ஒருநூறு தட்டுகள் கொண்ட ஒரு தராசின் மையமுள் போன்றவர். அவற்றின் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் எடைச்சமநிலைகள் நடுவே  ஒரு சமரசப்புள்ளியாகவே அவர் இருக்க முடியும்.

காங்கிரஸ் எக்காலத்திலும் உட்பூசல்களின் பெரும் தொகையாகவே இருந்திருக்கிறது. காங்கிரஸ¤க்குள் இருந்த பல்வேறு குழுக்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் இருந்த அதிகாரமையங்களை பிரதிநிதித்துவம் செய்தன. வடக்கு தெற்கு பிரிவினை இருந்தது. அவற்றுக்குள் மாநிலவாரி, மொழிவாரி குழுக்கள். அவற்றுக்குள் சாதிவாரிக்குழுக்கள். காந்தி அவற்றுக்கு இடையே சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தார்.

இந்தச்சமரசத்தில் பிழைகள் இருந்தனவா? பலவகையிலும் அன்றாடப் பிழைகள் நிகழத்தான் செய்யும். பாரபட்சங்கள் நிகழ்ந்தனவா? நிகழாமலிருக்க வழியே இல்லை. வல்லமைகொண்ட ஒரு குழுவின் ஆதிக்கத்தை ஒரு ஜனநாயக அமைப்பு ஒருபோதும் தவிர்க்க முடியாது. குழுக்கள் இணைந்தும் பிரிந்தும் உருவாகும் அதிகாரச் சமவாக்கியங்கள் எந்த மேதையாலும் எந்த சக்ரவர்த்தியாலும் முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தக்கூடியவை அல்ல. இந்தியாவின் மாபெரும் பேரரசுகளின் வரலாற்றிலேயே இதுதான் நிலை.

ஆக, ஒருவேளை அன்றைய காங்கிரஸ், அதன் தலைவராக இருந்த காந்தி ஏதேனும் ஒரு குழுவுக்கு அல்லது சாதிக்கு பாரபட்சம் இழைத்திருக்கக் கூடுமா? சாத்தியம் உண்டு. அவ்வாறு பல மனக்குறைகள் நீடிக்கின்றன. இந்திய அரசியலில் வங்கத்தின் மேலாண்மையை காந்தி திட்டமிட்டு ஒழித்தார் என்று இன்றும் பலநூறு வங்க அரசியலெழுத்தாளர்கள் சொல்கிறார்கள். வங்கம் தன்னை என்றுமே இந்தியாவின் தலைமைமாநிலமாக கற்பனை செய்துகொள்வது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கையில் ஏமாற்றமும், விளைவாக பாரபட்சம் காட்டப்பட்ட உணர்ச்சியும் எழுகிறது.

எந்த ஒரு தரப்பும் இத்தகைய சிக்கலான கூட்டமைப்புக்குள் தனக்கு சாதகமான முறையில் அனைத்தும் நிகழவேண்டும் என எதிர்பார்க்க இயலாது. தன் எதிர்பார்ப்புகள் நூறுவிழுக்காடு நிறைவேறவேண்டும் என சொல்ல முடியாது. சிலசமயம் ஏமாற்றங்கள் கடுமையாக இருக்கலாம். அந்த அதிகாரப்பகிர்வு ஆட்டத்தின் விதிகளை மட்டுமே குற்றம்சாட்ட இயலும். ஜனநாயகம் என்றுமே எண்ணிக்கையின் ஆட்டம். அதில் ஏமாற்றம் கொண்ட ஒரு தரப்பு மொத்த அமைப்புமே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சொல்வதும் சரி, அதன் தலைமையை ஒரு அபப்ட்டமான சதிகாரனாகவோ துரோகியாகவோ சித்தரிப்பதும் சரி வரலாற்றுக்குச் செய்யும் நியாயம் அல்ல.

காந்தியின் செயல்பாடுகளில் பிழைகளே நேரவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. இந்தியாவின் அரசியல் அத்தனைதூரம் சிடுக்கானது. ஆனால் அவரது நோக்கத்தையும் நேர்மையையும் ஐயப்படுவதற்கு வரலாறு ஆதாரம் அளிக்கவில்லை. அவரது தலைமையிலான சுதந்திரபோராட்டத்தில் அதன் பகுதியாக இருந்த அதிகாரப் பகிர்வில் ஏமாற்றம் கொண்ட எந்த தரப்புமே அவரை துரோகி என்று சொல்லலாம். அது அவர்களின் அரசியலே ஒழிய வரலாற்று உண்மை அல்ல.

இந்தியா போன்ற ஒரு தேசத்தில் எந்த ஒரு பெரும் மக்கள்அமைப்பை நடத்துவரும் அத்தகைய பழிகளைச் சுமக்க நேரும். ஒருவேளை அம்பேத்கார் இந்திய அளவில் ஒரு தலித் அமைப்பை நிறுவி அதை அனைத்து தலித்துக்களுக்கும் உரிய ஜனநாயக அமைப்பாக முன்னெடுத்திருந்தால் அவருக்கு  எதிராகவும் இதே போன்ற குரல்கள் அதற்குள் இருந்து எழுந்திருக்கும். அந்த யதார்த்தத்திலிருந்தே நாம் சிந்திக்கவேண்டும்.

ஆச்சரியம் என்னவென்றால், தன்னை சாதாரணமாக எதிர்த்தவர்களைக்கூட கொன்றழித்த தலைவர்களை நியாயப்படுத்தி அவர்களின் வரலாற்று இடத்தை வலியுறுத்துபவர்கள்தான் காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். அவர் தன் கருத்தை பிறர்மேல் ஏற்றியது மாபெரும் குற்றம் என்கிறார்கள். இந்தியாவில் அரசியல் சிந்தனைகளில் உள்ள வேடிக்கைகளுக்கு அளவே கிடையாது! ஒரு ஜனநாயக அமைப்பில் ஜனநாயகத்தின் எல்லைகளுக்குள் முரண்பாடுகளை கட்டுப்படுத்திக்கொள்ளச்செய்ய அதன் தலைவன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த வழிமுறை காந்தி முன்வைத்த சுயத்தியாகம் அன்றி வேறல்ல

காந்தி தன் அமைப்புக்குள் எல்லா வகையான விவாதங்களையும் அங்கீகரித்தார். எப்போதுமே  காங்கிரஸ¤க்குள் அவருக்கு எதிரான கடுமையான குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை அவர் ஊக்குவித்தார் என்றே சொல்லலாம். அவர் அவர்களுடன் சாத்வீகமாக உரையாடுபவராகவே இருந்தார். ஆனால் அவர்கள் எல்லை மீறுவார்கள் என்றால் அவர்களுக்கு ஆணித்தரமாக ஒன்றைச் சொன்னார், காங்கிரஸில் மக்கள் ஆதரவு அவருக்கே. அவர்தான் காங்கிரஸ். ஓர் உண்ணாவிரதம் சட்டென்று அந்தத் தலைவர்களுக்கு அதைச் சுட்டிக்காட்டிவிடும். அவர்கள் தங்கள் எல்லைகளை உணர்வார்கள்.

காந்தி ஒருங்கிணைக்கும் தலைவர். சமரசம் செய்யும் தலைவர். பேதங்கள் நடுவே மையக்கோடாக ஒரு இலட்சியத்தை நிலைநிறுத்த முனைந்தவர். அதேசமயம் தன் விழுமியங்களில் ஆழமான பிடிவாதத்துடன் இருந்தவர். அவ்விழழுமியங்களுக்காக எந்நேரமும் உயிர்விடச் சித்தமாக வாழ்ந்தார். உயிர்விட்டவர்.

உண்ணாவிரதம் , தலைவனின் ஆயுதம்

காந்தி தன்னுடைய உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தினார் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தன்னால் வழிநடத்தப்பட்ட அமைப்பினை தன்னுடைய தார்மீகமான பிடிக்குள் வைத்திருக்கவே அவர் உண்ணாவிரதத்தை அதிகமும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை.

அவரது முதல் உண்ணாவிரதம் 1918ல் அகம்மதாபாதில் நடந்தது. அவர் அம்பாலால் சாராபாயின் நெசவுஆலையில் தொழிலாளர்களைத் திரட்டி ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் தொழிற்சங்கங்கள் ஏதும் உருவாகியிருக்கவில்லை. வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்கள் அப்போது எவருக்கும் பெரிதாக அறிமுகமும் இல்லை. போராட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே ஊழியர்களில் ஒருசாரார் முதலாளியின் வாக்குறுதிகளை நம்பி வேலைக்குத் திரும்பினர். அந்த ‘கருங்காலி ‘தனத்துக்கு எதிராகவே காந்தி அவரது உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னர் காந்தி மேற்கொண்ட முக்கியமான உண்ணாவிரதங்கள் ஐந்து. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவிய மனக்கசப்புகளைக் களையும்பொருட்டும் காங்கிரஸ¤க்குள் இருந்த உட்பூசல்களைக் களையும்பொருட்டும் காந்தி முகமது அலியின் டெல்லி இல்லத்தில்  1924ல் மூன்றுவார உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.  1932ல் பூனா ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்திய ஆறுநாள் உண்ணாவிரதம் அடுத்தது.  1933ல் தன்னுடைய ஹரிஜன இயக்கத்தை ஆரம்பிக்கும் முன்னர் தன்னை ‘தூய்மைப்படுத்தி’க் கொள்வதற்காக அவர் நடத்திய 21 நாள் உண்ணாவிரதம். 1947ல் மத ஒற்றுமையை கோரி அவர் நவ்காளியில் மேற்கொண்ட உண்ணாவிரதம். கடைசியாக 1948ல் கஜானாவைப் பங்கிட்டு பாகிஸ்தானுக்குக் கொடுக்கவேண்டிய  550 கோடி ரூபாயைக் கொடுக்கச்சொல்லி நடத்திய கடைசி உண்ணாவிரதம்.

இந்த உண்ணாவிரதங்களில் மிக நீளமான மூன்று உண்ணாவிரதங்களும் சொந்தக் கட்சியான காங்கிரசை எதித்து அவர் மேற்கொண்டவை என்பதை கவனிக்கவேண்டும். இந்திய அரசியலில் அவர் நுழைந்தபோதே இங்கே மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் போன்ற ராஜதந்திரங்கள்மூலம் இந்துமுஸ்லீம் காழ்ப்புக்கான ஆழமான விதை ஊன்றப்பட்டிருந்ததை உணர்ந்தார். அவரது முதல் கவலையே அதுவாக தான் இருந்தது.

சித்தரஞ்சன்தாஸ் மோதிலால்நேரு போன்றவர்கள் பிரிட்டிஷ் பிரித்தாளும் சதிக்குப் பலியானபோது காங்கிரசுக்கு எதிரான முதல் உண்ணாவிரதத்தை அவர் செய்தார். அதேபோல காங்கிரஸின் உயர்சாதிப்பெரும்பான்மையை தன்னுடைய ஹரிஜனசேவைத்திட்டத்துக்கு கொண்டுவரும்பொருட்டே காந்தி 1933ல் தன் நீண்ட உண்ணாவிரத்தை நடத்தினார் என்பது வெளிப்படை.

சாதி, வர்ணம் குறித்த காந்தியின் கருத்துக்களில் வந்த மாற்றம் காங்கிரஸின் பழைமைவாதிகளால் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. கடும் சாதியவாதிகளான புருஷோத்தம்தாஸ் டான்டன் போன்றவர்கள்கூட காந்தியின் தார்மீக அதிகாரத்துக்கு முன் பணிந்தார்கள்.

அதேபோல பாகிஸ்தானுக்குரிய கஜானாப்பங்கைக் கொடுக்க காங்கிரஸ் எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த பணம் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எதிரான ராணுவநடவடிக்கைக்கே செலவழிக்கப்படும் என பட்டேல் அஞ்சினார், அது உண்மையும் ஆயிற்று. காஷ்மீர் மீதான படையெடுப்பு அதனால்தான் நிகழ்ந்தது. மௌண்ட் பேட்டனும் ஒப்புக்கொள்ளவில்லை.  நேருவும் அப்படி பணம் கொடுத்தால் அதை இந்துமகாசபையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்யும் என நினைத்தார்.

ஆனால் காந்தி வேறு வகையாகவே நினைத்தார். இந்தியா என்ற புதிய தேசம் ராஜதந்திர மோசடிகளின் மூலம் தன் தொடக்கத்தை நிகழ்த்தக் கூடாது என்று அவர் கருதினார். அழிவை நிகழ்த்தும் பிழையாகவே இருந்தாலும் தேசத்தின் தொடக்கம் அறத்தில் அமையவேண்டும் என விரும்பினார். பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பல லட்சம் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கான பணம் அது என்று அவர் சொன்னார். அவரது தார்மீகமான அதிகாரம் வழக்கம்போல வென்றது. காங்கிரஸ் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ், இந்துமகாசபை இயக்கங்கள் கூட வன்முறைசார்ந்த போராட்டத்தை கைவிடுவதாக அவரிடம் உறுதி அளித்தார்கள்.

இதுவே காந்தியின் வழிமுறையாக இருந்தது. இந்த ஆயுதத்தை மிரட்டல் என்று முத்திரை குத்துபவர்கள் அவர் வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு தலைவன் தன் அமைப்பின் மீது தன் தார்மீகமான அதிகாரத்தை உணர்ச்சிகரமான செல்வாக்கைச் செலுத்துவதே இயல்பானது, நியாயமானது.  கோடானுகோடி மக்களுக்கு அந்தத் தலைவன் மீதுள்ள பிடிப்பே அவனை தலைவனாக்குகிறது. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல்வேறு தரப்புகளினால் ஆன ஓரு பேரமைப்பை  முன்னோக்கி இட்டுச்செல்ல அவனுக்கு வேறு வழியே இல்லை. 

அகிம்சைப்போராட்டத்தின் விதிமுறைகள்

காந்தி இந்திய சுதந்திரப்போராட்டத்தை அதுவரை முன்னுதாரணம் இல்லாத ஒரு வழியில் இட்டுச்சென்றார். அகிம்சைப்போராட்டம் என்று அவர் சொன்ன வழியை அவர் சிறு சிறு சோதனைகள் மூலம் படிப்படியாகச் செய்துபார்த்து, நடைமுறையில் உருவாகும் பிழைகளைக் கண்டடைந்து, அவற்றைச் சரிசெய்து முன்னகர்ந்தார். போராட்டமும் சமரசமும் ஒரு செயல்பாட்டின் இரு பக்கங்களாகவே அவர் கண்டார். கிடைத்த லாபங்களைத் தக்கவைத்துக்கொண்டு அந்த லாபங்களைப் பயன்படுத்தும்விதமாக நம்மை மேம்படுத்திக்கொண்டு மேலும் போராடுவதே அவரது வழி.

1918ல் சம்பாரனில் தன் முதல் அகிம்சைப்போராட்டத்தைச் செய்து பார்த்தார் காந்தி. அது ஒரு வெற்றி. பிரிட்டிஷ் ஆட்சி என்பது அதன் மீது மக்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்றும், ஆகவே மக்கள் கருத்தை பிரிட்டிஷார் அஞ்சுகிறார்கள் என்றும் கண்டுகொண்டார். ஆகவே மக்களை பெருந்திரளாகத் திரட்டி அவர்களின் பொதுக்கருத்தை ஆயுதமாக பயன்படுத்தி செய்யப்படும் போராட்டவடிவத்தை காந்தி வடித்தெடுத்தார்

ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை வழியாக பிரிட்டிஷ் ஆட்சியின் இன்னொரு முகத்தை காந்தி கண்டார். பிரிட்டிஷ் சிவில் ஆட்சி வேறு பிரிட்டிஷ் ராணுவம் வேறு என்ற ஆழமான புரிதல் அவருக்கு உருவாகியது. அதன்பின் காந்தி இந்தியச் சுதந்திரப்போர் பிரிட்டிஷ் சிவில் சிவில்அரசாங்கத்தின் கையில் இருந்து வெளியே போக விடவேயில்லை. மொத்தப்போராட்டமும் எந்நிலையிலும் ஒரு சிவில்செயல்பாடாகவே இருக்க வேண்டும் என்பதில் அபாரமான கவனம் கொண்டிருந்தார்

1922ல் சௌரி சௌராவில் வன்முறை வெடித்தபோது உடனே அவர் அப்போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். காந்தி யாரெனத் தெரிந்தவர்களுக்கு அதன் காரணம் எளிதில் புரியும். ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கப்போவதில்லை என்றும் எந்நிலையிலும் போராட்டத்தை வாபஸ் வாங்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் அதனூடாக திட்டவட்டமாக் அறிவுறுத்தினார்.

காந்தி போராட்டங்கள் வன்முறைநோக்கி அத்து மீறும்போதெல்லாம் வாபஸ் பெற்றதை குறைகூறும் ஒரு தரப்பு இன்றும் உண்டு. அவர்கள் பிரிட்டிஷாருக்குச் சாதகமாக மக்கள் போராட்டத்தை ‘மழுப்பிய’ துரோகியாக காந்தியைச் சித்தரிக்கிறார்கள். அவர் தன்னிச்சையான உருவான மக்கள் எழுச்சியை வெளியே இருந்து வந்து குளிர்விக்கவில்லை. மாறாக குளிர்ந்துகிடந்த தேசத்தில் அந்த மக்கள் போராட்டத்தை அவரேதான் திட்டமிட்டு உருவாக்கினார். ஆகவே அதன் விளைவுகளை கட்டுப்படுத்த அவருக்கே முழு உரிமை உண்டு என்ற எளிய விஷயத்தை அவர்கள் காண்பதில்லை.

இப்படிச் சொல்பவர்களின் தரப்பு என்னவென்றால் ஒரு பெரும் அராஜகம் உருவாகி பல லட்சம்பேர் இறந்து நிலைமை கட்டுக்குள் நிற்காமல் சென்றிருந்தால் இந்தியாவைவிட்டு பிரிட்டிஷார் ஓடியிருப்பார்கள் என்பதே. தேசவிடுதலைக்காக ‘கொஞ்சபேர்’ இறந்தால் அதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். கம்யூனிசம் என்ற ஒரு கற்பனையான சமூக அமைப்புக்காக ஒருகோடிப்பேரை பலியிட்டு அதற்கான குற்றவுணர்ச்சியே இல்லாமல் ‘கம்யூனிச அமலாக்கத்தில் ஒரு சிறு தவறு நடந்துவிட்டது’ என்று சாதாரணமாக சொல்பவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள்.

ஆனால் உலகை வென்ற பிரிட்டிஷ் ராணுவத்தின் வல்லமைக்கு முன் ஏழை இந்திய மக்களை தூண்டிவிட்டு பலிகொடுக்க காந்தி விரும்பவில்லை. இந்தியாவில் எப்போதெல்லாம் சிறிய அளவில் அராஜகம் எழுகிறதோ அப்போதெல்லாம் அது மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் கலவரமாகவே மாறும் என அவர் அறிந்திருந்தார். ஆகவே ஒருபோதும் நிலைமை சிவில் பிரசினை என்ற நிலைமையை மீறுவதை அவர் அனுமதித்ததில்லை. தன்னை நம்பிய எளிய மக்கள் மேல் ஒரு தலைவன் கொண்ட அபாரமான கருணையையே நாம் அதில் காண்கிறோம்

ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சிக்கு எதிராக காந்தி தொடங்கிய மக்கள் இயக்கம் வன்முறைக்குத் திரும்பியபோது, பிரிட்டிஷ் ராணுவம் அதை கையாள ஆரம்பிப்பதற்கான முகாந்திரம் உருவாகிறதென தெரிந்ததுமே, அவர் அந்தப்போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார். அந்தப்போராட்டத்துக்கு தெருவுக்கு வந்த மக்கள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத எளிய மக்கள்கூட்டம். இந்திய மக்கள் அறிந்ததெல்லாம் மன்னராட்சியும் கூட்டம் கூட்டமாகச் சென்று போராடிச் சாகும் களங்களும்தான். நிதானமான சிவில் போராட்டத்தை அவர்களுக்கு அவர் கற்பிக்க வேண்டியிருந்தது. அதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளில் காந்தி ஈடுபாட்டார்.

இரண்டுவருடம் அந்த பயிற்சிப் பணியை தீவிரமாகவே செய்தார்.லட்சக்கணக்கான மக்களை காங்கிரஸ் உறுப்பினர்களாக்கினார். ‘காலணா மெம்பர்’ என அழைக்கப்பட்ட இந்த தொண்டர் படைக்கு பல்வெறு ஆசிரமங்கள் முகாம்கள் வழியாக எளிய வாழ்க்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு, எந்நிலையிலும் நிதானம் தவறாமல் இருக்கும் தன்மை ஆகியவை கற்பிக்கப்பட்டன. அந்த தொண்டர்படை காந்திக்கு பின்னர் வந்த போராட்டங்களில் பெரும் வல்லமையாக அமைந்தது.

காந்தி மக்களை கிளப்பிவிட்டு வரலாற்றழிவுகளை உருவாக்கி அவற்றின்மேல் பயணித்து அதிகாரத்தைக் கனவுகண்ட தலைவர் அல்ல. மாறாக அம்மக்களின் குறைகளைப் பற்றி அவர்களிடமே பேசியவர். அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதன் மூலமே உரிமைகளை அடைய முடியும் என்று கற்பித்தவர்.

காந்தியின் போராட்டம் மக்களை ஜனநாயகத்துக்கு பண்படுத்துவதாகவே இருந்தது. ஜனநாயக போராட்டத்தை, ஜனநாயக அமைப்புகளை கட்டி எழுப்புவதை, ஜனநாயக ஆட்சியை கற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை நோக்கி நகரமுடியும் என அவர் கற்பித்தார். ஒரேவரியில் சொன்னால், எந்த இயல்புகளால் இந்தியா வெள்ளையருக்கு அடிமையாகியதோ அந்த இயல்புகளை வென்று செல்லுவதையே உண்மையான விடுதலைப்போர் என்றார் அவர். 

பிளவுபடுத்தலுக்கு எதிரான போர்

1920 முதல் நடந்த காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டமே பிரிட்டிஷ் அரசு கண்ட இந்திய சிவில்சமூகத்தின்  உண்மையான எதிர்ப்பு என்று சொல்லலாம். அதுவரை அவர்கள் உண்மையில் இந்திய தேசியப்போராட்டத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. போராட்டத்தின் நோக்கமாக சுயராஜ்யக் கோரிக்கை முன்வைக்கபப்ட்டது என்பது ஒரு பெரிய திருப்புமுனை. காந்தி கடுமையாக தண்டிக்கப்பட்டார்.

அவர் சிறையிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸை வெற்றிகரமாகப் பிளந்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல்  மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் சிபாரிசுகளின்படி இந்தியர்களுக்கு மாகாணாசபை தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. அது ஒரு மாபெரும் தூண்டில். பதவியாசைமூலம் காங்கிரஸ¤க்கு எதிரான சக்திகளை தங்களுக்குச்சாதகமாக திரட்டினார்கள். காங்கிரஸின் மிதவாதிகளை சபலப்படுத்தினார்கள்.

காங்கிரஸில் இருந்த மோதிலால் நேரு போன்ற மூத்த தலைவர்கள் பதவிகளுக்கான ரகசிய ஏக்கத்துடன் இருந்தார்கள். சித்தரன்தாஸ் , மோதிலால் நேரு போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பி காங்கிரஸை உடைத்து ‘சுயராஜ்யா’ என்ற கட்சியை நிறுவினார்கள்.அவர்கள் பிரிந்துசெல்வதை தடுக்க காந்தி நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அவர்கள் இசையவில்லை.

இந்தப்பிரிவினையைத் தவிர்க்க காந்தி வருடக்கணக்காக முயன்றார் என்பதை நாம் காணலாம். இக்காலகட்டத்தில்தான் காந்தி  தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கி அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தில் சென்று தங்கினார். இரு தரப்பினருக்கும் இடையே ஒற்றுமை உருவாக ஓயாமல் முயன்றார். சித்தரஞ்சன்தாஸ¤ம் மோதிலால் நேருவும் ஒன்றும் பெரிய தலைவர்கள் இல்லை. அவர்களை உதறிவிட்டு காந்தியால் எளிதில் கட்சியை கொண்டுசெல்ல முடியும். ஆனால் காந்தி காங்கிரஸ¤க்குள் பிளவை விரும்பவில்லை. இந்தியர்களின் குரல் ஒன்றாகவே ஒலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அதற்காக காங்கிரஸ் தலைமைப்பொறுப்பைகூட விட்டுக்கொடுக்க தயராகா இருந்தார்.

ஏன் என்றால் காந்திக்கு மிக நன்றாகவே பிரிட்டிஷாரை தெரியும். ஆப்ரிக்காவிலும் உலகமெங்கும் அவர்கள் எப்படி தேசங்களைப் பிடித்தார்கள் என்று தெரியும். சொல்லப்போனால் காந்தி தவிர எவருக்குமே அந்த பிரக்ஞை அன்று இருக்கவில்லை. இந்தியா, ஆப்ரிக்கா போன்ற நிலநடுக்கோட்டுப்பகுதிகள் செறிவான மக்கள்தொகை கொண்டவை. நெடுங்கால வரலாறு கொண்டவை. ஆகவே உள்பிரிவுகளும் பேதங்களும் நிரம்பியவை. இந்தபேதங்களே அவற்றை அடிமைகளாக்கிய பலவீனங்கள்.

தொழிற்புரட்சியின் விளைவாக தங்களை ஓர் இயந்திரம் போல ஒற்றைப்படையாக தொகுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் மக்களுக்குள் இருந்த உட்பிரிவுகள் நடுவே ஐயத்தை ஊட்டி பிளவை உருவாக்கியே அவர்களை வென்றார்கள். பிளவுபடுத்தியே ஆண்டார்கள். முதன்முறையாக இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்பைச் சந்தித்த பிரிட்டிஷாரின் ஆகச்சிறந்த ஆயுதம் பிளவுபடுத்தலாகவே இருக்கும் என காந்தி மிக நன்றாகவே அறிந்திருந்தார். ஆகவே அதை எவ்விலை கொடுத்தும் தவிர்க்க முயன்றார்.

அதே காலகட்டத்தில்தான் காந்தி முஸ்லீம்களுக்கு இரட்டைவாக்குமுறை மூலம் பிரிட்டிஷார் இந்திய சமூகத்தில் உருவாக்கியிருந்த இந்துமுஸ்லீம் கசப்புக்கு எதிராக ஒருமைப்பாட்டை அடைய கடுமையாக முயன்றார். உண்ணாவிரதம் இருந்தார். கிலாபத் கூட்டங்களில் தேசம் முழுக்கச் சென்று பங்கெடுத்தார்.

அதன்பின்னர் காந்தி போராட்டக்களத்துக்கு வருவது 1928 ல் சைமன் கமிஷனின் சிபாரிசுகளுக்கு எதிராக. இக்காலகட்டத்தில் காந்தி காங்கிரஸை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வருடம் கூடிய கல்கத்தா காங்கிரஸில் காந்தி முழுச்சுதந்திரத்தை உடனடியான இலக்காக முன்வைத்து ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே டொமினியன் அந்தஸ்து உள்ள ஒரு நாடாக விளங்கவேண்டும் என்று கோரினார் காந்தி.

1930ல் எதிர்கால இந்திய தேசத்தின் கொடி அறிவிக்கப்பட்டது. லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஜனவரி 26 இந்தியாவின் சுதந்திரநாளாக அறிவிக்கப்பட்டு வருடம் தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அதேவருடம் காந்தி உப்புசத்யாகிரகத்தை ஆரம்பித்தார். அன்றைய உணர்ச்சிவேகம் காரணமாக அது ஒரு மாபெரும் மக்களியக்கமாக எழுச்சி கொண்டது. காந்தி நடத்திய போராட்டங்களிலேயே மிகப்பெரியது அதுதான்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மிகமிக அஞ்சியது பொதுமக்களின் அதிருப்தியையே. ஏன் என்றால் மிகச்சிறுபான்மையினரான வெள்ளையர் இந்நாட்டை இங்குள்ள மக்களின் ஆதரவாலேயே ஆண்டிருந்தார்கள். ஆகவே பிரிட்டிஷ் அரசு இறங்கிவந்தது. 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவாகியது. அதைத்தொடர்ந்த பேச்சுவார்த்தைக்காக 1932ல் லண்டனில் நடக்கும் வட்டமேஜை மாநாட்டில் காந்தி  அழைக்கப்பட்டார்.

*

இந்த வரலாற்றுப் பரிணாமச் சந்தர்ப்பத்தில்தான் இரட்டை வாக்குரிமை பிரச்சினை உருவாகி வருகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். காந்தி தலித் பிரச்சினையை எந்த வரலாற்றுத்தருணத்தில் வைத்துப் பார்த்தார் என்று உணர இந்த வரலாற்று நோக்கு அவசியம். இதுவரை சொல்லிவந்த பரிணாமகதியின் முக்கியமான கூறுகளை இவ்வகையில் தொகுத்துச் சொல்கிறேன். 

1. இந்திய தேசிய காங்கிரஸ் காந்திக்கு முன்னர் மிதவாதிகளின் கையில் இருந்தது. அவர்கள் பிரிட்டிஷாரிடம் சில உரிமைகளை கோரி பெற எண்ணியவர்கள் மட்டுமே. இந்தியாவுக்கு முழு விடுதலை கோரிய தீவிரவாதிகள் அவர்களை எதிர்த்தார்கள். இம்மோதலால் கிட்டத்தட்ட செயலிழந்து கிடந்தது காங்கிரஸ்

2 காந்தி காங்கிரஸின் இவ்விரு தரப்புகளையும் ஆக்கபூர்வமாக இணைத்தவர். தீவிரவாதிகளின் சுயராஜ்ய கனவை அவர் மிதவாதிகளின் வழியில் அடைய முயன்றார். காங்கிரஸை சட்டென்று செயலூக்கம் கொண்டவராக ஆக்கினார் 

3. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல கூறுகள் கொண்ட இந்திய தேசியத்தின் எல்லா கூறுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக காங்கிரஸ்  இருக்கவேண்டும் என எண்ணினார் காந்தி. எல்லா உட்கூறுகளையும் தக்கவைத்துக்கொள்ளவும் அவை ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்யவும் முயன்றார் 

4. அதேசமயம் தன்னுடைய தார்மீகமான செல்வாக்கினால் அவற்றின் மோதலை கட்டுக்குள் வைத்திருந்தார். காங்கிரஸை தன்னுடைய இலட்சியம் நோக்கி கொண்டுசென்றார். 

5. காந்தி உண்ணாவிரதம் என்ற போராட்ட முறையை எப்போதும் பிளவுகளைத் தவிர்க்கவும், அவர் தவிர்க்கமுடியாதென்றும் உயர்வானதென்றும் கருதிய விழுமியங்களை பிறர் ஏற்கச் செய்யவுமே பயன்படுத்தினார் 

6. இந்திய சுதந்திரப்போராட்டத்தை காந்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக சோதனை செய்து புரிந்துகொண்ட புதிய வழியான அகிசைப்போராட்டம் வழியாக நடத்தினார். முதலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டினார். ஆனால் ஒருபோதும் அப்போராட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவம் நுழையும்படி நிகழலாகாது என எண்ணினார். ஆகவே வன்முறை உருவாவதை தடுக்க கவனமாக இருந்தார்

7. காந்தி உள்ளே வந்ததுமே இந்திய சுதந்திரப்போராட்டம் மக்கள் பங்களிப்புள்ள பெரும் இயக்கமாக மாறியது. பெரும் தொண்டர்படை சேர்க்கப்பட்டது.  1918ல் சுயராஜ்யக் கோரிக்கையை ஒரு கொள்கையாக மட்டும் முன்வைத்த காந்தி படிபப்டியாக அதை மக்கள் மனதிலே நிறுவுவதில் வெற்றி கண்டபின் 1930 ல் அதை ஒரு நடைமுறைபோராட்டமாக வளர்த்தெடுத்தார். 

8. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மிக வலிமையான போராட்டமாக ஒத்துழையாமை இயக்கமும் உப்புசத்யாகிரகமும் அமைந்தது. காங்கிரஸின் மக்கள் ஆதரவைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி அஞ்சியது 

9. காங்கிரஸின் ஆரம்பகாலம் முதலே பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் அரசு வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது. மிதவாதிகளில் பலரை அது தனக்காக பயன்படுத்தியது. பின்னர் மாகாண அரசு அமைக்கும் வாக்குறுதியை மூத்த தலைவர்களுக்கு அளித்து காங்கிரஸை பிளந்து சுயராஜ்ய கட்சி உருவாக வழியமைத்தது. 

10. காந்தி மிக அதிகமாக அஞ்சியதும், எதிர்த்துப் போராடியதும் காங்கிரஸையும் இந்திய தேசியப்போராட்டத்தையும் பிளவுபடுத்தும் முயற்சிகளைத்தான். அதற்காகவே சுயராஜ்யகட்சிக்கு எதிராக 1924ல் அவர் மூன்று வாரம் உண்ணாவிரதம் இருந்தார். கிட்டத்தட்ட ஐந்துவருடம் நடைமுறை அரசியலை விட்டே ஒதுங்கி சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த சமரசம் நிகழ்ந்தபின்னரே மீண்டும் அரசியலுக்கு வந்தார்.

ஆக ,காந்தி உத்தேசித்த போராட்ட வடிவம் இது. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் சிவில் சமூகத்தின் ஆதரவின் அடிப்படையிலேயே ஆட்சியில் இருந்தது. இந்திய மக்க¨ளுக்கு வரலாறு வழங்கியுள்ள பேதங்களை கரைத்து அவர்களை ஒரே சிவில் சமூகமாக ஆக்கி பிரிட்டிஷ் ஆட்சிக்கு அவர்கள் வழங்கிய அனுமதியை ரத்துசெய்வதும், அதை பிரிட்டிஷ் ராணுவத்தை பங்கெடுக்க வைக்காமல் செய்து முடிப்பதும் காந்தியின் திட்டம்.

ஆகவே கட்சிக்குள் வந்ததுமே காந்தி சுயராஜ்ய கோரிக்கையை ஏற்றாலும் அதை மக்கள் பரவலாக ஏற்கும் வரை பல்வேறு போராட்டங்கள் வழியாக அதை பிரச்சாரம் செய்தார். சத்யாகிரகம் போன்ற வழிமுறைகளை சோதனைசெய்து திருத்திக் கொண்டார். தொண்டர்படையை அமைத்தார். மாபெரும் சிவில் போராட்டங்களை அதன்பின்னரே உருவாக்கினார்.

அந்தப்போராட்டங்கள் விளைச்சலைத் தரும் காலகட்டத்தில் இந்திய சமூகத்தின் பேதங்களை முன்னிறுத்தி அவரது இயக்கத்தை உடைக்க முயன்றது ஆங்கில அரசு. அந்த முயற்சிகளை காந்தி தன் உயிரையே பணயமாக வைத்து எதிர்த்தார். இந்திய சமூகத்தின் சாதி,மத, இன பேதங்களை தவிர்ப்பதில் பெருமளவு அவர் வென்றார், மதப்பிரிவினை பேரழிவை உருவாக்கியதை மட்டும் அவரால் தவிர்க்கமுடியவில்லை. தன் வாழ்நாள் தோல்வியாக அதைக் கருதிய காந்தி மனமுடைந்த நிலையில் மரணம் அடைந்தார்

[மேலும்]

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஸ்டாலினியம், அழியாத எச்சரிக்கை.