பொன்னிறப்பாதை- வண்ணதாசன் கடிதம்

அன்புமிக்க ஜெயமோகன்,

வணக்கம்.

பிரஸாத் பாலாஜி சாம்ராஜுவுக்கும் நண்பர் போல. சாம்ராஜ் தான் ‘பொன்னிறப்பாதை’ தொகுப்பு பற்றிச் சொன்னார். எதனாலோ அதை எனக்கு உடனே வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தருவதற்கு ஒன்றை, அல்லது நான் பெற்றுக்கொள்வதற்கான ஒன்றை அந்தப் புத்தகம் தன் பக்கங்களிடை வைத்திருப்பதாக நான் நம்பினேன்.

சாம்ராஜ் அனுப்பித் தரும்வரை காத்திருக்கவில்லை. இதில் என்ன தயக்கம் வேண்டியது இருக்கிறது என பிரஸாத்திடமே கேட்டு எழுதினேன். அவரால் உடனடியாக அனுப்பமுடியவில்லை. பிரதி கைவசம் இருந்திருக்காது. அக்டோபர் கடைசியில்தான் , (26 என்று தேதியிட்டிருக்கிறேன்) கிடைத்தது.

ஒரு சிறிய இடைவெளியின் பின் இன்றுதான் வாசித்து முடித்தேன். ‘பிழைத்தல், இருத்தல், வாழ்தல்’ என்ற பகுதிதான் பொன்னிறப் பாதையை வாசிக்கவேண்டும் என்ற ஒரு அருவமான தூண்டுதலை, அழைப்பை எனக்குத் தந்திருக்க வேண்டும். இந்தப் பகுதி எனக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருக்கிறது.

என் நெருக்கத்தை விட, நீங்கள் உங்கள் சொல்லுக்கு மிக நெருக்கமான மன எழுச்சியுடன் அதை அந்தக் கலிஃபோர்னியா கூட்டத்தில் பேசும் போது இருந்திருக்க வேண்டும். உங்கள் மேடைப்பேச்சு முறையை நான் அதிகம் அறிந்தவன் இல்லை. இது முன் தயாரிப்பின்றி, முன்வரைவில்லாது அக்கணத்தில் பொங்கியும் பிரவகித்தும் பெருகிய ஒன்றாகவே இருக்கவேண்டும் என, அதனுடைய மொழியின் உயிர்ப்பும் விகாசமும் உணர்த்துகிறது.

நீங்கள் சுட்டுகிற சாஸ்தா மலையையோ, திருவண்ணாமலை அருணகிரியாக நெருப்பெனத் தூணாகி நிற்பதையோ, கைலாய மலையையோ ( அதற்கு ‘பெருவலி’ வாசிக்கவேண்டும்) நான் பருண்மையாகக் கூட அறிந்தவன் இல்லை. ஆனால், உங்களின் எரிமலை பெயர்ந்துருண்டு குளிர்ந்திறுகிய ஏதோ ஒரு கூழாங்கல்லை நான் கண்டும் உணர்ந்தும் இருக்கிறேன். அதன் குரலில் அல்லது குரலின்மையில், இந்த உரையை நிகழ்த்துகையில் நீங்கள் அடைந்திருந்து இருக்கக்கூடிய உங்களின் துல்லியமானதொரு, இசை நிகர்த்த, குரலினையும் நான் கேட்கமுடிகிறவனாக இருக்கிறேன்.

பிழைக்கிறேனா, இருக்கிறேனா, வாழ்கிறேனா என்றெல்லாம் தெரியாது. ஆனால் உங்கள் குரலை என்னால் கேட்க முடிகிறது.

ஆமாம், ஒரு புல்லின் இதழே போதும்.

சி.க.
[வண்ணதாசன்]

வண்ணதாசனும் சாம்ராஜும்

அன்புள்ள வண்ணதாசன் அவர்களுக்கு,

உங்கள் கடிதங்கள் வழக்கம்போல அளிக்கும் அந்தரங்கமான ஒரு நிறைவு. உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை, நான் 1985 ஜனவரி மாதம் உங்களுடைய முதல் கடிதத்தைப் பெற்றேன்.

சமீபத்தில் உங்களை நினைத்துக்கொண்டேன். கிளெர் டெனிஸ் என்ற அம்மையாரின் ஒரு படத்தைப்பார்த்தேன். படு குரூரமான படம். காமத்தில் மாமிசம் தின்னும் இச்சை ஊடுருவுவதைப்பற்றியது. திரும்பி வரும்போது அஜிதனிடம் சொன்னேன், நம்முடைய ‘மாஸ்டர் ரைட்டர்ஸ்’ இந்தக்குரூரங்களை அறிந்திருந்தார்களா, கணக்கில் கொண்டார்களா என்று. டிக்கன்ஸ், தி.ஜானகிராமன் என்று ஆரம்பித்து பேச்சு உங்களில் வந்து நின்றது

அஜிதன் சொன்னான், உலக சினிமாவில் மிகமிக மென்மையான படங்களை எடுத்தவர்கள்தான் இந்தவகையான வன்மையான படங்களை விட அதிகமாக மனித ஆழங்களுக்குள் சென்று அங்குள்ள காமத்தையும் வன்முறையையும் தொட்டிருக்கிறார்கள். மேலே தெரியவருவதை மேலும் விரித்துச் சொல்வதே கிளேர் போன்றவர்கள் செய்வது. உங்களைப்போன்றவர்கள் செய்வது அதை ஊடுருவிசெல்வது. எனக்க்கு பல கதைகள் நினைவில் வந்தன

இந்த நாளில் உங்களை மீண்டும் நினைத்துக்கொள்கிறேன், பொன்னிறப்பாதை என்ற சொற்றொடருடன் இணைத்து

ஜெ

முந்தைய கட்டுரைநம்மாழ்வார், அஞ்சலி
அடுத்த கட்டுரைமகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)