மபொசி கண்ட ஒருமைப்பாடு

நண்பர்களே,

நான் செய்திகளை வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே ம.பொ.சி அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவராக, மேல்சபைத் தலைவராக இருந்தார். அன்று திமுக மேடைப்பேச்சாளர்களின் துடிப்பான நக்கல்கள் சூழலை ஆட்சி செய்துகொண்டிருந்தன. ம.பொ.சி அவர்களின் கிண்டல்கள் வழியாகவே என் நினைவில் பதிந்தார்.

ஆனால் திமுக மேடைப்பேச்சாளர்கள் ம.பொ.சி அவர்களை கடுமையாகத் தாக்கமாட்டார்கள். ஓய்வுபெற்று திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடமிருக்கும் கிண்டல் அது. அன்றெல்லாம் ம.பொ.சி ஓய்வுபெற்றுவிட்ட கிழச்சிங்கம் என்றே அறியப்பட்டார். குமரிமாவட்டத்தில் அவருக்கென ஓர் இடமிருந்தது. குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்காக நிகழ்ந்த போராட்டங்களில் அவரது முக்கியமான பங்களிப்பு இருந்தது. தொடர்ந்து குமரிமாவட்ட இணைப்பு நாள் கூட்டங்களில் அவர் வந்து பேசிவந்தார்.

நான் ம.பொ.சி அவர்களின் உரையை நாகர்கோயிலில் ஒருமுறை கேட்டேன். அன்றைய மேடைப்பேச்சாளர்களில் அவரும் குன்றக்குடி அடிகளாரும்தான் தலைசிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டார்கள். என்னை இருவர் உரைகளுமே கவரவில்லை. நான் அன்று சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட மிகச்சிறந்த உரைகளை வாசித்திருந்தேன். ம.பொ.சி அவர்களின் உரை மேலோட்டமான கருத்துக்களுடன் சாதாரணமக்களைக் கவரும்படி இருப்பதாகவே எனக்குப்பட்டது

ம.பொ.சி அவர்களின் ’வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூல்தான் அவரது மிகச்சிறந்த படைப்பு என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அதற்குக்கிடைத்த சாகித்ய அகாதமி விருது இலக்கியத்தளத்தில் எதிர்விமர்சனத்தையே உருவாக்கியிருந்தது. நான் முதலில் வாசித்த ம.பொ.சி அவர்களின் நூல் அதுதான். ம.பொ.சி அவர்களின் உரைநடை என்பது மேடைப்பேச்சில் இருந்து இறங்கி வந்தது. மேடைப்பேச்சுக்குரிய சொல்மிகையும் பொருள்மிகையும் கொண்டது. எழுத்துவடிவில் அதை வாசிக்கையில் சலிப்பே எஞ்சியது.

அதன்பின் அவரது முக்கியமான நூல்கள் என்று சொல்லப்பட்ட சிலவற்றை அக்காலத்தில் வாசித்திருக்கிறேன். வள்ளலாரும் பாரதியும், சிலப்பதிகாரமும் தமிழரும் போன்ற நூல்கள். ஓர் நூலாசிரியராக அவர் என்னிடம் எந்தவிதமான சாதகமான மனப்பதிவையும் உருவாக்கவில்லை. அவரது நூல்களில் முக்கியமான ஆராய்ச்சித் தகவல்கள் அனேகமாக இருப்பதில்லை. தமிழின் தமிழாய்வாளர்களில் ஒருவரல்ல அவர்.

இலக்கியத்தை சமூகவியல், தத்துவம் ,அரசியல் தளங்களில் உள்ள புதியசிந்தனைகளுடன் இணைத்துப்பார்க்குமளவுக்கு அவருக்கு உலகசிந்தனைகளில் அறிமுகம் இல்லை. இந்திய சிந்தனைமரபின் தத்துவக்கூறுகளைக்கூட அவர் எங்கும் கண்டறிந்து விவாதித்ததில்லை. அவர் பழந்தமிழிலக்கியத்தில் கவிதையை உணரும் நுண்ணுணர்வுகொண்டிருந்தாரா என்றால் அதற்கும் நான் இல்லை என்ற பதிலையே சொல்வேன்.

ஆகவே ம.பொ.சி அவர்களைப்பற்றி என்னிடமிருந்த மனப்பதிவென்பது எதிர்மறையானதுதான். தமிழகத்தின் ஒருகாலத்திய மேடையரசியல்வாதிகளில் ஒருவர் என்றவகையில் மட்டுமே அவரை நான் மதிப்பிட்டிருந்தேன். அந்த மதிப்பீட்டை நான் சந்தித்த நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் மேலும் உறுதிப்படுத்தினார்கள்.

அந்த நோக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது 2007ல் பேரா.மா.ரா.பொ.குருசாமி அவர்களைச் சந்தித்தபோதுதான். மா.ரா.பொ அவர்கள் ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் இணைந்து செயலாற்றியவர். பேரறிஞர். ம.பொ.சி அவர்கள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். ஓர் உரையாடலில் அவர் சொன்னார். ‘அறிவுஜீவிகளை இரண்டா பிரிச்சுப் பாக்கணும். அறிவுத்தளத்திலே புதிய விஷயங்களை உண்டுபண்ணினவங்க ஒருபக்கம். ஒரு காலகட்டத்தில மக்கள்கிட்ட பண்பாட்டுமாற்றங்கள உண்டுபண்ணினவங்க இன்னொரு பக்கம். ரெண்டுபேரும் தேவையானவங்க. ம.பொ.சி ரெண்டாவது வகை’

தமிழ்ப்பண்பாடு நவீனயுகத்தில் தன்னைக் கண்டடைந்து அடையாளப்படுத்தி வரையறை செய்து கொண்ட ஒரு நீண்ட காலகட்டம் உள்ளது. தமிழிலக்கியத்தின் பொதுக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன. தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் தொகுக்கப்பட்டன. தமிழ் விழுமியங்கள் கண்டடைந்து முன்வைக்கப்பட்டன. தமிழ்நிலத்தின் எல்லைகள் வரையறைசெய்யப்பட்டன.

இந்தப் பண்பாட்டியக்கத்தை ‘தமிழிய இயக்கம்’ என்று சொல்லலாம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பழந்தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பித்த முன்னோடி அறிஞர்களான சௌரிபெருமாள் அரங்கன், உ.வே.சாமிநாதய்யர், ந.மு.வேங்கடசாமிநாட்டார், சி.வைதாமோதரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.உ.சி போன்றவர்கள் இவ்வியக்கத்தின் தொடக்கப்புள்ளிகள். மூன்று தலைமுறைக்காலம் நீடித்த அவ்வியக்கத்தின் கடைசிக்குரல் ம.பொ.சி. அதன் நிறைவுப்புள்ளி. அதுவே அவரது அடையாளம். அவரது மொத்தப்பணிகளையும் இந்த விரிந்த பின்புலத்தில் வைத்துத்தான் அணுகவேண்டும் என்றார் மா.ரா.பொ.குருசாமி அவர்கள்.

அந்நோக்கில் நான் மபொசி அவர்களின் ஆக்கங்களை ஓரளவு வாசித்தேன். ம.பொ.சி அவர்களை விரிவாக வாசித்து புரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லவரவில்லை. என்னுடைய தெரிவுகளும் பாதையும் வேறாகவே இருந்திருக்கின்றன. இந்த உரையில் என்னுடைய தொடக்கநிலை எண்ணங்களையும் மனப்பதிவுகளையும் மட்டுமே பதிவுசெய்யவிரும்புகிறேன். இது நான் யோசிப்பதற்கான ஒரு முன்வரைவு மட்டுமே.

*

நவீன இந்திய தேசியம் பற்றிய கருத்துருவாக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்த அதேகாலகட்டத்தில்தான் இந்தியாவின் வட்டாரதேசியங்கள் பற்றிய எண்ணங்களும் வலுப்பெற ஆரம்பித்தன. இந்தியதேசியம் என்பது இந்தியா என்ற நிலப்பகுதி, அதில் பொதுவாக இருந்த மத, பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே நவீன அரசியல் தேசியமாக வரையறைசெய்யப்பட்டது.

இந்தியா என்ற பண்பாட்டுத்தேசியம் மிகத்தொன்மையானது. தமிழில் நாமறியும் மிகத்தொன்மையான புறநாநூற்றுப்பாடலிலேயே இந்தியா என்ற பண்பாட்டுத்தேசியத்தின் நில எல்லைகள் துல்லியமாக வரையறை செய்யப்பட்டு கிடைத்துள்ளன.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

என காரிக்கிழார் அதை வரையறைசெய்கிறார். முந்நூறாண்டுகளுக்குள் தமிழகம் என்னும் பண்பாட்டுத்தேசியத்தின் வரையறை வந்துவிடுகிறது

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம்

என்று பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.

இந்தியா முழுக்க பெரும்பாலான வட்டார தேசியங்கள் பத்தாம்நூற்றாண்டுக்குள் திட்டவட்டமாகவே வரையறைசெய்யப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம். ஒப்புநோக்க பிந்தையது கேரள தேசியம். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த துஞ்சத்து எழுத்தச்சனின் காவியத்தில் அந்த வரையறை வந்துவிட்டது. ஐம்பத்தாறு சிறுநாடுகளின் தொகுதி என கேரளத்தை எழுத்தச்சன் வகுக்கிறார்

இந்தியச்சுதந்திரப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த அதேகாலகட்டத்தில்தான் இந்தியாவெங்கும் வட்டாரதேசியங்கள் திரண்டு வந்தன என்ற முரணியக்கத்தை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழில் மட்டுமல்ல வங்கம்,கன்னடம்,தெலுங்கு, ஒரியா,மராட்டி, குஜராத்தி,பஞ்சாபி என எல்லா மொழிகளிலும் அவர்களின் பழைய இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு அச்சில் வெளிவந்தன. அந்த வட்டாரத்தின் அரசியல், பண்பாட்டு வரலாற்றின் முன்வடிவம் எழுதப்பட்டது.கன்னடமும் ஆந்திரமும் பிராகிருதத்தில் தங்கள் பழைமையைத் தேடிச்சென்றன.

1930 களில் காங்கிரஸ் இந்தியாவெங்கும் தேசியக்கல்வியை பரவலாகக் கொண்டுசென்றது. அது வட்டாரமொழிகளில் அமைந்திருந்தது. அம்முயற்சி மொழிசார்ந்த பண்பாட்டுத்தேசிய உணர்ச்சியை வேகம் கொள்ளச்செய்தது. இந்தியமொழிகளில் எல்லாம் அக்காலகட்டத்தில்தான் நவீன இலக்கியம் வேகம் கொண்டது. அச்சு ஊடகம் முக்கியமான தொடர்புமுறையாக மாறியது. அவையெல்லாம் இணைந்து வட்டாரத் தேசியங்களை வளர்த்தெடுத்தன.

இந்த எழுச்சியில் இரண்டு போக்குகள் இருந்தன. ஒன்று இந்திய தேசியத்துக்கு எதிரானதாக வட்டாரதேசியத்தை முன்னிறுத்துவது. அதற்கு முதல்முன்னோடியாக அமைந்தது பஞ்சாப். பின்னர் தமிழகத்திலும் அந்த மனநிலை ஓங்கியது. இரண்டாவது போக்கு இந்தியதேசியம் என்ற ஒருமைக்குள் வட்டாரதேசியத்தை அதன் தனித்தன்மையும் முழுமையும் கெடாமல் வளர்த்தெடுக்கும் நோக்கு.

முதல்வகை நோக்கு இங்கே திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது நோக்குக்கு தமிழில் முதற்பெரும் குரலாக அமைந்ததே ம.பொ.சி அவர்களின் பங்களிப்பாகும் . சொல்லப்போனால் ஒரு பெரிய பரப்புவாத அரசியல் இயக்கத்துக்கு எதிரான ஒற்றைப்பெரும் சக்தியாக நிலைகொண்டார் ம.பொ.சி.

*

இந்தக்கோணத்தில் ம.பொ.சி அவர்களின் நூல்களை வாசிக்கையில் அவர் பேசியதென்ன என்பது திரண்டு வருகிறது. அவர் முதன்மையாக முன்வைத்த இரு கவிஞர்கள் இளங்கோவும் பாரதியும்.

மூவேந்தர் ஆளும் நாடு என்ற தெளிவான அடையாளத்துடன் தமிழ்ப்பண்பாட்டுத் தேசியத்தை வரையறைசெய்தவர் என்பதுதான் இளங்கோவடிகளின் சிறப்பு.

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

என தமிழகத்தை அடையாளப்படுத்தியவர் இளங்கோ. ம.பொ.சி அவர்கள் இளங்கோவடிகளை தொடர்ந்து முன்வைத்தமைக்கான முதற்காரணம் இது என்று சொல்லலாம்.

தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைக்கூறுகள் அனைத்தையுமே தன்னுள்கொண்ட பெருங்காவியம் சிலம்பு. இந்நாட்டின் தாய்வழிபாட்டிலிருந்து முளைத்தது அதன் ஆழ்படிமம். தமிழரின் நிலம் அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தமிழரின் தத்துவசிந்தனைகள், கலைகள், இசை அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கிறது. ஒருபண்பாடு முற்றாக அழிந்துபோனபின்னரும் ஒரு நூலில் இருந்து அதை மீட்டெடுக்கமுடியுமானால் அதுவே அப்பண்பாட்டின் தேசியக்காப்பியம் என்று நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னார். தமிழின் தேசியக்காப்பியம் சிலம்புதான். ஆகவேதான் அதை முன்வைத்தார் ம.பொ.சி

சிலம்புபற்றிய ம.பொ.சி அவர்களின் அத்தனை நூல்களிலும் சிலம்பில் இருந்து தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளைக் கண்டடைந்து தொகுக்கும்போக்கு இருப்பதைக் காணலாம். சிலம்பில் இருந்து கண்டடைந்த பண்பாட்டுக்கூறுகளை சமகாலத்தில் வலியுறுத்தவும் சமகாலத்தின் பண்பாட்டு அம்சங்களை சிலம்பில் கண்டடையவும்தான் ம.பொ.சி அவர்களின் மொத்தக் கவனமும் செயல்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் இசைச்செய்திகள் உட்பட ஏராளமான தகவல்களை ம.பொ.சி தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.அது ஆய்வு என்பதை விட சிலம்பை ஒரு தமிழ்த்தேசியக் காப்பியமாக தமிழ்மக்களிடையே நிலைநாட்டும் பிரச்சாரப்போர் என்றுதான் சொல்லவேண்டும். தன் வாழ்நாள்காலத்தில் அவ்வாறு சிலம்பை நிலைநாட்டவும் அவரால் முடிந்தது.

ம.பொ.சியின் இரண்டாவது ஆதர்சமான பாரதி தமிழ்ப்பண்பாட்டுத்தேசியத்துக்கும் இந்தியத்தேசியத்துக்கும் நடுவே இணைப்பாக அமைந்தவன்.’வாழிய பாரத மணித்திருநாடு’ என்று பாடும்போதே ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவன். இந்த இணைவு ம.பொ.சியின் ஆதர்சமாக அமைந்ததில் வியப்பில்லை..பாரதியின் துடிப்பு , கோபம் எல்லாம் ம.பொ.சியை ஆட்கொண்டிருப்பதைக் காணலாம்.

இளங்கோவும் பாரதியும் ம.பொ.சிக்கு இரு எல்லைகள். இளங்கோ அவருக்கு பழந்தமிழின் முகம். பாரதி நவீனத்தமிழின் முகம். தமிழின் என்றுமுள இளமையை இளங்கோவிலும் அழியாபெரும்பழைமையை பாரதியிலும் ம.பொ.சி கண்டார். இளங்கோவை மூதாதையர் குரலாக பதிவுசெய்கையில் பாரதியை நவீனகாலகட்டத்தின் புதியகருத்துக்களின் அடையாளமாக முன்னிறுத்துகிறார் ம.பொ.சி

*

இந்தியாவின் வட்டாரத் தேசியங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவையெல்லாமே பக்தி இயக்கத்தினால் ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளர்ந்தவை. அவை முன்வைக்கும் தனிப்பண்பாட்டு அடையாளங்கள் பெரும்பாலும் பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை. இந்தியாவை இணைத்திருக்கும் பெரும்பண்பாட்டு வலை பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டதே. கூடவே இந்த தனியடையாளங்களையும் அதுதான் உருவாக்கியது

இந்த முரணியக்கம் நிகழ்வதற்கான காரணம் ஒன்றுதான். பக்தி இயக்கம் மக்களின் மொழியில் பேசி சாமானியர்களை ஒருங்கிணைத்தது.அதன் வழியாக அது வட்டாரமொழிகளில் இலக்கியப்பெருக்கம் நிகழவும் அதனூடாக அவற்றின் பண்பாட்டு ஒருங்கிணைவு எழவும் வழிவகுத்தது. மராட்டியமொழியில் ஞானேஸ்வரின் கீதை மொழியாக்கமே இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று சொல்லப்படுகிறது. மலையாளத்திலும் எழுத்தச்சன் பக்தியிலக்கியவாதியே.

ஆகவே நவீனகாலகட்டத்தில் வட்டாரதேசியங்கள் உருவானபோது பக்தி இயக்கத்தின் செல்வாக்கு அவற்றில் இருந்தது. கன்னடதேசியத்தில் வீரசைவ இயக்கத்தின் பங்கு என்ன என்றுமட்டும் பார்த்தாலே இதைப்புரிந்துகொள்ளமுடியும். ஒரு நவீனத் தேசியத்தில் மத இயக்கத்தின் செல்வாக்கு இருக்கலாகாது என்ற பிரக்ஞை ம.பொ.சி போன்றவர்களுக்கு இருந்திருக்கலாம். அவர்கள் கம்பராமாயணத்தை முன்னெடுக்காததற்கான காரணம் அதுவே. அது ராமாயணம் என்பதனால் அல்ல. ஏனென்றால் பெரியபுராணத்தையோ சீவகசிந்தாமணியையோகூட அவர்கள் முன்னெடுக்கவில்லை

சிலம்பு ஒரு சமணக்காவியம் என்று ஊகிக்கப்படுகிறது, அவ்வளவுதான். காரணம் அதில் கவுந்தி வருகிறாள். ஆனால் கவுந்தி பெரிய மதப்பேருரைகளை ஆற்றுவதில்லை. மாறாக கொற்றவையும், மாலும் விரிவாக வாழ்த்திப்பாடப்படுகிறார்கள். மாதவியும் மணிமேகலையும் பௌத்தத்தைத்தான் தழுவுகிறார்கள். அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற காப்பியம். ம.பொ.சி மதச்சார்பற்ற ஒரு நவீனப் பண்பாட்டுத்தேசியத்தையே சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து மக்கள்முன் வைத்தார்

மதச்சார்பின்மைதான் ம.பொ.சியை வள்ளலாரிடம் கொண்டு சேர்த்தது எனலாம். ம.பொ.சி பேசும் வள்ளலார் சைவசமயத்தின் குரலாக ஒலித்த ஆரம்பகால வள்ளலார் அல்ல. ஜோதி தரிசனத்தை அடைந்தபின் மதம் தாண்டிய ஞானத்தின் பீடத்திலமர்ந்து பேசும் பிற்கால வள்ளலாரை என்று காணலாம். வள்ளலாரை முழுக்கமுழுக்கத் தமிழ்ப்பண்பாட்டு மரபில் தோன்றிய நவீனகால ஞானி என்று ம.பொ.சி முன்வைப்பதை அவரது நூல்களில் காணமுடிகிறது.

*

இம்மூன்று ஆளுமைகளின் வழியாகவே ம.பொ.சி அவரைக் கவர்ந்த நான்காவது ஆளுமையை நோக்கிச் செல்கிறார். ஆச்சரியமளிக்கும் ஒரு பயணம் அது. காந்தி என்றுமே ம.பொ.சியின் நெஞ்சைக்கவர்ந்த தலைவராக இருந்திருக்கிறார். காந்திக்கு பாரதி வழியாக, வள்ளலார் வழியாக, இளங்கோ வழியாக ம.பொ.சி சென்று சேர்கிறார். அந்தப்பாதையை தெளிவாகக் காட்டுவது என்று வள்ளலாரும் காந்தியடிகளும் நூலைச் சுட்டலாம்.

இந்தியதேசியத்தின் முகமாகிய காந்தியை நோக்கி தமிழ்ப்பண்பாட்டுத்தேசியத்தின் குரலான ம.பொ.சி செல்வதில் முரண்பாடு உள்ளதா? காந்தியே கூட குஜராத்தி தேசியத்தின் வலுவான குரல் என்பதை மனதில்கொண்டால் இதை வியப்பில்லாமல் புரிந்துகொள்ளமுடியும். குஜராத்தி மொழியின் மீட்புக்காக, குஜராத்திப் பண்பாட்டின் தனித்தன்மை பேணப்படுவதற்காக எழுந்த முதற்குரல் காந்தியுடையது. குஜராத்தியாக இருந்தபடியே இந்தியனாக இருப்பதைத்தான் காந்தி இந்தியதேசியம் என்றா. ம.பொ.சிக்கு காந்தி உவப்பாக இருந்ததில் வியப்பில்லை.

*

இவ்வாறு நான்கு திசையில் நான்கு புள்ளிகளில் தன் எல்லைகளை பொருத்திவிட்டு அவற்றை இணைக்க வாழ்நாளெல்லாம் முயன்றுகொண்டே இருந்தவர் ம.பொ.சி. சிலந்தி வலைபின்னுவதுபோல.அது ஒரு பெரும்பயணம், ஆனால் வரையறுக்கப்பட்ட களத்தில் நிகழ்வது. ம.பொ.சிசியின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு இந்நான்குபுள்ளிகளை இணைத்து அவர் உருவாக்கிய அந்த சிந்தனைப்பள்ளிதான். அதை மபொசியம் என்றுகூடச் சொல்லலாம்

அதைச் சுட்ட ம.பொ.சியே உருவாக்கிய ஒரு அழகிய சொல்லாட்சி உள்ளது. ’ஒருமைப்பாடு’ .பல்வேறு உரைகளில் அச்சொல்லை ம.பொ.சி கையாண்டிருக்கிறார்.இரு நூல்களில் அச்சொல்லே தலைப்பு. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பாரதி கண்ட ஒருமைப்பாடு.முரண்பாடுகளைத் தாண்டி பொதுக்கூறுகளைக் கண்டடைந்து அவற்றில் இருந்து ஒரு கருத்துக்கட்டமைப்பை உருவாக்கும் ஒரு பயணம் அது.

தமிழ்ப்பண்பாட்டின் தனியடையாளத்தை, தனித்துவத்தைக் கண்டடைந்து முன்வைக்கும் ஒரு தமிழியக்கவாதி அதை இந்தியதேசியத்தின் ஒருபகுதியாக மானுடத்தின் பிரிக்கமுடியாத ஒருபகுதியாக விரித்துக்கொண்டே செல்வதை நாம் ம.பொ.சியின் நூல்களில் காண்கிறோம். அவரது ஒருமைப்பாட்டுத்தரிசனம் என்பது அதுவே.

அந்தத் தரிசனத்தை முற்றிலும் எதிர்மறையான சூழலில், வெறுப்பே முழங்கிக்கொண்டிருந்த மேடைகளில் ஏறி சலிக்காமல் சொல்லி நிலைநாட்டிய ம.பொ.சியை ஒரு மாமனிதர் என்றே நான் இன்று நினைக்கிறேன். அவர் சிந்தனையாளரோ ஆய்வாளரோ இலக்கியவாதியோ அல்ல. ஆனால் மகத்தான இலட்சியம் ஒன்றின் மகத்தான பிரச்சாரகர்.

[14-12-2013ல் மபொசி நூல்கள் வெளியீட்டுக்கூட்டத்தில் சென்னையில் ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைவெள்ளையானையும் இந்துத்துவமும்
அடுத்த கட்டுரைபிராமண ஞானம்