அனல்காற்றின் குளுமை

வாழ்த்துக்கள் சார்,

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்.

பாலு மகேந்திரா அவர்களுக்காக எழுத பட்ட உங்கள் அனல் காற்று நாவலை வாசித்தேன்.

அருண், அருணின் அம்மா, சந்திரா, சுசி சில இடத்தில் மட்டும் வரும் அருணின்
தந்தை, நவீன் மற்றும் ஜோ என்று இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
அனைவரையும் கையாண்ட விதம் மிகவும் நன்றாக இருந்தது.

அருணின் எண்ணங்கள் நேரம் போக போக குரூரத்தின் உச்சத்திற்கே சென்று பின்
மட மட வென சரிந்து, பண்பட்டு,மீண்டும் உச்சம், சரிவு என்று வாசகனை கனக்க
வைக்கும் பல அத்தியாயங்கள் இந்த நாவலில் உண்டு.

கன்னியாகுமரி நாவலில் பிரவீணா வருகை எப்படியோ, அதையும் தாண்டி
படைக்கப்பட்டவள் தான் இந்த சந்திரா. தவறு என்று தெரிந்தும் விட்டு
கொடுக்க முடியாத அந்த கணத்தில் நவீனின் சுத்தமான வார்த்தையில் எல்லாமே
ஒரு முடிவுக்கு வருவது நாவலை அர்த்தப்படுத்திவிட்டது.

நம்மில் பல சுசி கடந்து சென்று கொண்டே இருப்பார்கள். அது நிச்சயமான உண்மை.

எனக்கு இந்த நாவலில் மிகமும் பிடித்தது அருணின் அப்பா மற்றும் அம்மா
பாத்திரம் தான்.
.
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, மனிதனின் மனதில் அடி ஆழம் வரை சென்று பின்
கீழ் இருந்து அந்த மனிதனின் குரூர தன்மையை அழித்து அவனை மேலே கொண்டு
வரும் செயல் போலவே உள்ளது. ? இந்த நடையை தெரிந்தே தெரிவு செய்தீர்களா ?

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார்.

நன்றி,
பிறைசூடி இ.

அன்புள்ள பிறைசூடி

ஒருநாவலை எழுதும்போது அதற்கான மொழிநடையை தன்னிச்சையாகவே அடைகிறோம். பலசமயம் அது அமைவதில்லை. அப்போது ஓரிரு அத்தியாயங்களிலேயே நாவல் நின்றுவிடும்

புனைவு என்பது எப்படியோ மனிதன் சொல்லாத சொல்லவிரும்பாத விஷயங்களைச் சொல்லும் கலைதான்

ஜெ

ஜெ

சமீபத்தில் அனல்காற்று வாசித்தேன். தமிழின் சாதாரணமான வணிக எழுத்தின் ஃபார்மாட்டுக்குள் எழுதியிருக்கிறீர்கள். ஒரு ரொமான்ஸ் என்ற அளவிலேயே நின்றிருக்கும். கடைசியில் பாவம் பற்றி, ஆணுக்குள் இருக்கும் இயல்பான மீறலைப்பற்றி சில இடங்கள் வலுவாக அமைந்து இலக்கியமாக்கிவிட்டன

வாழ்த்துக்கள்

சபரி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 26
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27