பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளன உங்களது சொல்லாடல்களும் விளக்கங்களும்! இவ்வளவு நாட்கள் உங்களது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு அறியாமைச் சூழலில் இருந்துவிட்டமைக்கு நான்பெரிதும் வருந்துகிறேன். உங்களுடைய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்களுக்கு நான் நன்றி கூற வேண்டும். உங்களுக்குஎன்னுடைய பாராட்டுதல்களும் நல்வாழ்த்துக்களும் உரியதாகுக.

இந்திய ஞானமரபுகள் என்று பொதுவாகப் பேசும்போதும் நீங்கள் பௌத்தம், சமணம் ஆகிய இரண்டு அவைதீக மரபுகளையும் ஒதுக்கிவிடுகிறீர்கள் ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் (அதாவது பிரஸ்தான திரயம்) ஆகியவற்றையே குறிப்பிடுகிறீர்கள். இந்து மதக் கோட்பாடுகள் மற்றகோட்பாடுகளுக்கு மேற்பட்டவை, உயர்ந்தவை, வேறு எந்தத் தத்துவம் கூறப்பட்டாலும் அது ஏற்கனவே வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ளதுதான்,வேதங்களிலிருந்தும் உபநிடதங்களிலிருந்தும் பரிணமித்தது தான் என்று நீங்கள் வாதிடுவதாக, இந்துத்துவா மனப்போக்குக் கொண்டிருப்பதாக எனக்குத்தோன்றுகின்றது. ஏனெனில், இந்திய தத்துவச் சிந்தனையை ரிக்வேதம் சிருஷ்டிகீதம் என்கிற புள்ளியில் இருந்துதான் விரித்தெடுத்துஆரம்பிக்க வேண்டும் என்றுகூறுகிறீர்கள். (இந்திய ஞானம் – தேடல்கள் புரிதல்கள், ப. 107). வேதாந்தமே இந்துமெய்ஞானத்தின் உச்சஉயரிய நிலை, சங்கரரின் அத்துவைத வாதம் பௌத்தத்தைவெற்றிகொண்டது, தத்துவக் களத்திலே தோற்கடித்தது என்பது போன்ற கருத்துக்களை நீங்கள் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

பிரபஞ்சம், பிரம்மன் ஆகியவற்றைப் பற்றிய உங்களது வேதாந்தக் கருத்துக்களையும் அவற்றிற்கு நேர் எதிர்மாறான பௌத்தக் கருத்துக்களையும் குறித்து எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான் புரிந்து கொண்டுள்ளளவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஆதி வேதாந்தம், சங்கரரின் அத்துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மாதவரின் துவைதம் ஆகியவற்றில் எது உண்மை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று புரியவில்லை. இவையெல்லாம் ஒன்றையன்று மறுப்பவையாக உள்ளனவே!

வேத உபநிடதக் கருத்துக்களுக்கு புத்தர் மறுப்பு என்றும் மாறாது நிலைத்திருக்கும் ஒரு தனிப்பெரும் பரம்பொருள், ஆன்மா அல்லது பிரம்மன் என்கிற உபநிடதக் கருத்து மூன்று வகைகளில் அனுபவ அறிவுக்கும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது காணும் அறிவுக்கும் முரண்பட்டதாக உள்ளளது. அவற்றைத் தொகுத்து அளித்திருக்கிறேன்

கிருஷ்ணன் ஓடத்துரை

அன்புள்ள கிருஷ்ணன்

உங்கள் நீண்ட கடிதத்தை வாசித்தேன்.. நீங்கள் என்னுடைய நூலை இன்னும் சற்று கவனமாக வாசிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

1. அதில் முன்னுரையிலேயே நான் பேசியிருப்பது இந்திய சிந்தனை மரபைப்பற்றியல்ல இந்து சிந்தனை மரபைப்பற்றி மட்டுமே என்றும், இந்திய சிந்தனை மரபு என்றால் அதில் சமணம் பௌத்தம் சீக்கியம் சூஃபி மரபு ஆகியவை அடங்கும் என்றும் விளக்கியிருக்கிறேன்.

எதற்காக இந்துமரபைப்பற்றி மட்டும் பேசப்பட்டிருக்கிறது என்றால் இந்து மரபென்றாலே பக்தி மட்டுமே என்று சொல்லப்படுவதை மறுத்து அதன் அவைதிக மரபுகளை, உலகியல் மரபுகளை சுட்டிக்காட்டும்பொருட்டே என்று திட்டவட்டமாகவே சொல்லியிருக்கிறேன். அதன்பிறகே நூலை ஆரம்பிக்கிறேன்.

பௌத்தம் அல்லது சமணத்தை ஒரு தருணத்திலும் இந்து தத்துவங்களை விட குறைவுபட்டவை அல்லது பின்தங்கியவை என்று நான் சொல்வதில்லை. அந்நூலிலும் அப்படிச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

2. எல்லா சிந்தனைகளும் வேதத்தை மூலநூலாகக் கொண்டவை என்று அந்நூலில் சொல்லப்படவில்லை. உண்மையில் நேர்மாறான கருத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்ட நூல் அது. ஆறு தரிசனங்களில் நான்கு வேதமறுப்புத்தன்மை கொண்ட அவைதிக தத்துவங்கள் என்பதை நிறுவும்பொருட்டு பேசுவது அந்நூல்.

3.வேதத்தில் பிற்கால வைதிகர் சொன்ன வேள்விச்சடங்குகளும் ஆன்மீகமும் மட்டுமல்ல, நாத்திக உலகியல் சிந்தனைகளுக்கே ஆதாரக்கூறுகள் உள்ளன என்றுதான் அந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

4. இந்துசிந்தனைமரபு என்பது வைதிக அவைதிக மரபுகளும், லௌகீக ஆன்மீக மரபுகளும், கர்மகாண்டமும் ஞானகாண்டமும் என முரண்பட்ட சிந்தனைப்போக்குகள் பல ஒரேசமயம் சேர்ந்தியங்கும் ஒரு வெளி என்பதை நிறுவவே அந்நூல் முயல்கிறது. அதை ஒற்றைப்படையாக்கும் போக்குக்கு எதிராக அது பேசுகிறது. அவ்விஷயத்தை முன்னுரை முதல் அனைத்து இடங்களிலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறது.

அதை நீங்கள் இந்துத்துவா என ஒற்றைப்படையாக, நேர் எதிராகப் புரிந்துகொண்டீர்கள் என்றால் உங்கள் வாசிப்பின் பிரச்சினை என்ன என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

5. உங்கள் பிரச்சினை என்பது எளிமையான அரசியல் வாசிப்பையும் தத்துவத்தையும் குழப்பிக்கொள்வதுதான். வேதத்தைச் சொன்னால் இந்துத்துவா, இந்துத்துவா என்றால் பிற்போக்கு என்ற வகையான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணப்போக்குகளை வைத்திருப்பதும் அதை தத்துவ விவாதங்களில் சகஜமாக எடுத்துப்போடுவதும் அபத்தம். இத்தகைய ஒற்றைப்படை நோக்குகளை உடைத்துக்கொள்ளாமல் தத்துவசிந்தனைபற்றி பேசமுடியாது.

6. என்னுடைய சிந்தனைமுறை நாராயணகுருவின் இயக்கம் சார்ந்தது. அது சமன்வயம் என்ற கொள்கையைக் கொண்டது. தத்துவசிந்தனைகளை ஒருங்கிணைத்து நோக்கும் பார்வை அது. அதுவும் நூலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஐந்து கைவிரல்கள் என்ற உவமை வழியாக அது விளக்கப்பட்டுள்ளது.

அச்சிந்தனைமரபு எந்த தத்துவத்தையும் இன்னொன்றைவிட மேலானதாக எண்ணாது. தத்துவத் தளத்தில் ஒரு தரிசனத்தை இன்னொரு தரிசனம் ‘முறியடிப்பது’ என்ற பேச்சுக்கே இடமில்லை. வெல்வதும் தோற்பதும் தர்க்கங்கள் மட்டுமே. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன்.

7. நீங்கள் பௌத்தம் பற்றிச் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அதன் அடிப்படைப்பாடங்கள். அவற்றை நான் அறிவேன். அவற்றுடன் மறுத்துவிவாதித்தே அத்வைதம் வந்தது. அத்வைதத்தை மறுத்து அடுத்தகட்ட சிந்தனைகள் வந்தன. தத்துவத்தின் வளர்ச்சி இவ்வாறு மறுத்து விவாதிப்பதன் வழியாகவே நிகழ்ந்தது. மறுக்கப்படாத எந்தத் தரப்பும் இல்லை. எந்த தத்துவமும் முழுமையாக, புறவயமாக நிறுவப்படமுடியாது.

8. இவ்வாறு மறுத்துமறுத்து விவாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மூர்க்கமான மதநம்பிக்கை அல்ல என் வழி. பௌத்த நம்பிக்கையே ஆனாலும் நான் நம்பிக்கைநிலைப்பாடுகளை ஏற்பவனல்ல. என் வழி சமன்வயத்தின் வழி. இணைத்துச் சிந்தித்து முன்னெடுப்பதன் வழி.

9. பௌத்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் வலிமையான முரண்பாடுகள் உண்டு. அவை சந்தித்துக்கொள்ளும் உச்சப்புள்ளியும் உண்டு. நாராயணகுருவும் அவரது மாணவர் மரபும் கவனித்தது அந்த சந்திப்புப்புள்ளியைத்தான். நானும் அந்த முரண்பாடுகளை கருத்தில்கொண்டு அந்தச் சந்திப்புப்புள்ளியை விவாதிக்கமுயல்கிறேன்.

இந்தவழியை நீங்கள் நிராகரித்து ‘கடைசி உண்மையாக’ பௌத்ததை முன்வைக்கிறீர்கள் என்றால் நம்மிடையே எந்த விவாதமும் நிகழமுடியாது. இவ்வாறு இந்துத்தரப்புகளும் கிறித்தவ இஸ்லாமிய தரப்புகளும் நிரூபிக்கப்பட்ட கடைசி உண்மைகளை என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்களெல்லாம் செயல்படும் களத்தில் நான் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31