கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ,

நமஸ்காரம் . எனக்கிருந்த அதீதமான ஆன்மீக ஆர்வம் காரணமாக வேதாத்திரி மகரிஷி,சத்குரு என இலக்கில்லாமல் பயனித்துக்கொண்டிருந்த நான் தங்களுடைய எழுத்து வாயிலாக பகவத் கீதையை என்னாலும் படிக்க முடியும் என உணர்ந்து அதன் மூலம் நான் தேடும் ஆன்மிகத்தை அடையாளம் காண முயன்று கொண்டு இருக்கிறேன் அதற்கு என் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

முக்கியமாக தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை படித்த பின்பு தங்களுடன் மிகவும் நெருக்கமாக உணர்கின்றேன்.அதனால் உங்களை சந்திக்கும் வாய்ப்புகளை முக்கிய தருணங்களாக உணர்கிறேன்.சென்ற வருடவிஷ்ணுபுர விருது விழா,ஏற்காடு இலக்கிய முகாமில் சந்தித்திருந்தாலும் இந்த முறை உங்களிடம் முழுமையாக காலைநடை பயணத்திலும்,போட் கிளப் இரவு உணவிலும் கழித்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

விஷ்ணுபுர நாவலை எழுதியவருடன் நான் அமர்ந்து இருக்கின்றேன் என்ற நினைவே என் மனம் முழுதும் வியாபித்து இருந்தது.தங்களுடைய நாவல்,கட்டுரைகளைப் பற்றி பல முறை நண்பர் சுரேஷ் ,செந்தில் குமார் தேவன் அவர்களுடன் விவாதித்து இருந்தாலும் தங்கள் முன் பேச முடியாமல் கனத்த மௌனத்துடனே அமர்ந்திருந்தேன்.

இதுவரை பல கேள்விகள் உங்கள் கட்டுரையை ,நாவல்களை படித்தவுடன் எழுந்தாலும் , இதுவரை என் உரையாடல்கள் தங்களின் புத்தகங்கள்,கட்டுரைகளுடன் மட்டுமே இருந்து வந்தது அதனால் தங்களுக்கு எழுத முடியாமல் ஏதோ தயக்கம் வந்து தடுத்து விடும்.முதன் முதலாக அந்த உணர்வில் இருந்து விடுபட்டு இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.

நன்றி.

அன்புடன்

சுவாமிநாதன்.

அன்புள்ள சுவாமிநாதன்,

எல்லைகளைத் தாண்டி பேசிக்கொள்வதற்கு ஒரு தருணம் இருக்கிறது. அதுவரை காத்திருக்கலாம். ஆனால் நான் எப்போதும் உணர்ந்த ஒன்று உண்டு, நாம் வெளிப்படையாகப் பேசுவதுதான் உரையால் அல்ல. மானசீகமாகப் பேசிக்கொள்வதும்கூடத்தான். அதன் வழியாகவும் நாம் வெகுதூரம் நெருங்குகிறோம்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் ,

இன்று பனுவல் வாசகர் சந்திப்பில் உங்களை சந்தித்து மிகவும் மகிழ்ச்சி. தங்களை சந்திப்பது இதுவே முதல் முறை.

ஏழாம்உலகம் புத்தகத்தில் தங்களிடம் ரொம்ப நேரம் தயங்கி பின்னர் ஒரு கையெழுத்து வாங்கினேன். சினிமாவின் மசாலா அம்சத்தின் பின் உள்ள விஷயங்களை நீங்கள் சொன்னது அருமை. பகுத்தறிவு பிரசாரம் மக்களிடம் எப்படி இலக்கிற்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் எளிமையாக கூறினீர்கள். தங்கள் இணைய தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதால் நீங்கள் கலந்துரையாடல் போது கூறிய விஷயங்கள் மனதில் நன்றாக பதிந்தது.

நன்றி
மணிகண்டன்.

அன்புள்ள மணிகண்டன்

அந்தக்கையெழுத்து ஒரு தொடக்கமாக அமையட்டும். நாம் உரையாடுவதற்கு இனிமேலும் நிறைய இருக்குமென நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதிய பரணி