மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.
என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட வாழ்க்கை மற்றொன்று மலையகத்திலிருந்து கொழும்பு போன்ற பெருநகருக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை. அவருடைய மூன்று குறுநாவல்கள், மீன்கள், கத்தியின்றி ரத்தமின்றி போன்ற சிறுகதைகள் தேயிலைத் தோட்டப் பின்புலத்தில் உருவாகியுள்ளன. அவருடைய நாவலான குடைநிழல், சிறுகதைகளான அம்மா, மழலை, பயணம், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் போன்றவைகள் நகரத்து பின்புலத்தில் உருவாகியுள்ளன.
மலையக தோட்டத்து வாழ்வை உயிர்ப்புடன் கொண்டுவருகிறார் தெளிவத்தை. தோட்டத்து தொழிலாளர்கள் என்றில்லை பெரிய துரைகள், சின்ன துரைகள், துரைசானிகள், கிளார்க்கர் ஐயாக்கள், கங்காணிகள், டிஸ்பென்சர், சிங்கள நாட்டு (தோட்டத்தை சுற்றி இருக்கும் வசிப்பிடங்கள் நாடு என்றழைக்கபடுகிறது) வியாபாரிகள் என அந்த உலகத்தின் அனைத்து தரப்பினரும் நுட்பமாக சித்தரிக்கபட்டுள்ளனர். மலையக தோட்ட கல்விசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு தமிழகத்தில் இருந்து வந்து 1920 களுக்கு பின்னர் குடியேறியவர் தான் ஜோசப்பின் தந்தை. அவர்கள் வசிப்பதற்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வாழ்ந்த இடுங்கிய லயன் வீடுகளில் ஒன்று தான் ஒதுக்கப்பட்டது. தாய் தந்தை சகோதர சகோதரிகள் என அனைவரும் அங்கு தான் வாழ்ந்தனர். அது அவருடைய படைப்புலகில் மிக முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியதாக சுப்பையா கமலாதாசன் குறிப்பிடுகிறார்.
தெளிவத்தையின் படைப்புகள் பொதுவாக அநாவசியமான விவரணைகள், படிமங்கள் என ஏதுமற்ற சொற்சிக்கனம் மிகுந்த எளிமையும் நேரடிதன்மையும் கொண்டவையாகவே இருக்கின்றன, கதை மாந்தர்களுக்குப் பெரும் தத்துவ சிக்கல்கள் என எதுவும் இல்லை. அன்றாட நெருக்கடிகளில் நெறிபட்டு அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்கள்தான் தெளிவத்தையின் கதை மாந்தர்கள். அவருடைய படைப்புலகின் ஆகப்பெரிய பலம் என்பது அதன் எளிமையில் புதைந்து கிடக்கும் அப்பட்டமான உண்மைத்தன்மை தான் எனத் தோன்றுகிறது.
கதை மாந்தர்களின் தவிப்பை, அவர்களின் அவலநிலையை, அவர்கள் படும் தர்ம சங்கடங்களை வாசகனுக்கு அவரால் கச்சிதமாகக் கடத்த முடிகிறது. குழந்தை ஒன்று குளியலறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுவிடுகிறது, வெளியே வரும் வரை குடும்பத்தினருக்கு உள்ள பதட்டம் வெகு இயல்பாக வாசகனையும் தொற்றி கொண்டுவிடுகிறது (சிறுகதை – மழலை).
தெளிவத்தையின் உலகம் தர்ம சங்கடங்களின் உலகம், நெருக்கடிகளின், அசட்டைகளின் உலகம், நெரிசலின், சுரண்டல்களின் உலகமும் கூட, துயரங்களையும் அதை கிழித்துக்கொண்டு புலப்படும் நம்பிக்கை கீற்றுக்காக காத்திருக்கும் எளிய மக்களின் உலகம். ஞாயிறு வந்தது எனும் அவருடைய குறுநாவல் குடியின் தீய விளைவுகளை பற்றியும் அதிலிருந்து மீள்வதை பற்றிய நம்பிக்கையையும் பேசுகிறது. எளிய பிரச்சாரக் கதையாகத் தென்பட்டாலும் அதில் எந்த குரலும் ஓங்கி ஒலிப்பதில்லை என்பதே இக்கதையின் சிறப்பு. குடி நேரடியாக வாழ்வை சீரழிக்கும் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரின் சமூகப் பங்களிப்பு என்றவகையில் இக்கதையை அணுகவேண்டும்.
தெளிவத்தை மனிதர்களின் வெவ்வேறு நிறங்களை, நிறமாற்றங்களை நுட்பமாக கவனிக்கிறார். நன்மையின் நிறங்களும், தீமையின் நிறங்களும் ஒரு சேர மனிதனுள் ஒளிர்ந்துகொண்டிருப்பது பெரும் சுவாரசியம் தான். பழகுவதற்கும் பேசுவதற்கும் அத்தனை இனிய மனிதராக தெரிந்த புது வீட்டு உரிமையாளர் முன்பணத்தை திருப்பிக் கேட்ட காரணத்தினால் சிங்களக் காவல்துறையின் உதவியுடன் காரனமற்று சிறையில் அடைக்கிறார் குடை நிழல் நாவலில். ‘மனிதர்கள் நல்லவர்கள்’ எனும் அவரது சிறுகதை மூன்று நல்லவர்களை பற்றி பேசும் முக்கியமான கதை. கூழாங்கற்களை உலுக்கிப் பிச்சை கேட்கும் பிச்சைக்காரன், பிறர் கூறும் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் ஒரு ரூபாய் பிச்சை போடும் ஒரு சாமானியன், ஒரு ரூபாயுடன் உணவகத்திற்கு உணவருந்த வரும் பிச்சைக்காரன் பணத்தை திருடியிருக்க கூடும் என சந்தேகிக்கும் உணவக முதலாளி. இறுதியில் ‘ பிச்சைக்காரன் நல்லவன்! முதலாளியும் நல்லவர் தான்! ஆனால் பொல்லாதது எது? இருவருக்கும் முன்னிருக்கும் அந்த அடையா (அடையாளமா)? என்று முடிக்கிறார்.
அவருடைய மனம் வெளுக்க குறுநாவல் கிளார்க்கர் ஐயாவின் கதையை பேசுகிறது. சோம்பலும் அசட்டையும் ஊழலும் நிறைந்த கச்சிதமான சித்தரிப்பு. தொழிலாளியின் பேங்கு பணத்தை திருட்டுத்தனமாக பதுக்கிகொண்டதன் விளைவாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றி மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். மனம் அலைகிறது. ‘வெளுக்கத் துடிக்கும் மனதை அடித்து அமுக்குகிறார் அய்யா’ சன்னமான முனகளாக விசும்பிய மனசாட்சியின் குரல் மீண்டும் பேரிரைச்சலில் தன்னைக் கரைத்துக் கொண்டது. வழக்கம் போல் பெண்களை சீண்டியபடி முடிகிறது கதை. காந்தியின் அகிம்சையை நெக்குருகப் போற்றும் தலைவர் கத்தியின்றி ரத்தமின்றி எனும் தலைப்பில் உரையாற்ற கிளம்புகிறார், இடையில் கொட்டித் தீர்க்கும் மழையில் சம்பள விடுப்பளிக்க மறுத்த கணக்கருடன் தகராறு ஏற்பட்டு கத்தியை தோளில் செருகுகிறார். ஒரு முக்கியமான முரண்பாட்டை அழகுபட சொல்லி செல்கிறார். ஏன் அங்கு கத்தியின்றி ரத்தமின்றி எதையும் சாதிக்க அவர் துணியவில்லை? எனும் கேள்வி எழுகிறது.
அவருடைய மற்றொரு குறுநாவல் பாலாயி மலையகத்தில் வாழும் மகன் உடல்நலம் குன்றி மரணத்தருவாயில் தமிழகத்தில் வாடும் தாயை காணச்செல்லும் முயற்சியில் மரித்து விடுகிறான். அவனை இழந்து, பெற்ற பிள்ளையையும் பறிகொடுத்து மனம் பிரழும் பாலாயி இறுதியில் மரணிக்கும் துன்ப நாடகம். அரசியல் சிக்கல்கள் அப்பாவி தனிமனிதனின் வாழ்வினிடை புகுந்து எல்லாவற்றையும் சிதைக்கும் சித்திரத்தை அளிப்பதாக பாலாயியும் குடைநிழலும் உள்ளன. மூன்று குறுநாவல்களும் முறையே மலையக மக்களின் தனி மனித, சமூக, தேசிய சிக்கல்களை குறிப்பதாக முன்னுரையில் எழுதுகிறார் தெளிவத்தை. .
ஞாயிறு வந்தது’ காத்தாயி, பாலாயி, குடை நிழலில் வரும் கதை சொல்லியின் தாய், அம்மா சிறுகதையின் அன்னை என தெளிவத்தையின் படைப்புகளில் உருபெறும் பெண்களின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அபாரமானவை. கருணையும் பொறுமையும் ததும்பும் நம் மனதில் பதிந்திருக்கும் தாய் எனும் தொல்படிமத்தின் வார்ப்பு தான் இவர்கள் எனினும் கணவனை இழந்து மனம் பிறழும் பாலாயியும் கணவனை கைவிட்டு வெளியேறும் குடை நிழல் நாவலில் வரும் கதை சொல்லியின் அன்னையும் ஒரு புள்ளியில் கலகக்காரர்கள் ஆகிறார்கள்.
அவருடைய ‘இருப்பியல்’ சிறுகதை லட்சியவாதத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள சமரசத்தை பற்றி இந்து – கிறித்தவ பின்புலத்தில் பேசுகிறது. மற்றுமொரு கதையான மீன்கள் மிக முக்கியமான சிறுகதை. லயம் வீட்டு வாழ்க்கை என்பதை தாண்டி, அதிலுள்ள மன நெருக்கடி, சங்கடம் கதையை மேலும் ஆழமாக்குகிறது. ‘இந்த புள்ள எப்பிடி..சேச்சே’ எனும் போது பல தளங்கள் திறந்துகொள்வதாக தோன்றியது.
தெளிவத்தையின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பான பாலாயி (வெளியீடு துரைவி பதிப்பகம்) நூலின் முன்னுரையில் மலையக தமிழர்களின் வரலாற்று அரசியல் பின்புலத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். கண்டியை 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு கைப்பற்றியதுடன் ஒட்டுமொத்த இலங்கையும் அவர்களின் ஆளுகைக்கு கீழ் வருகிறது. அப்போதுதான் காடழித்து ரப்பர், தேயிலை போன்ற பெருந்தோட்டங்கள் உருவானது. சிங்கள கிராமப்புற சிறு விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டது. அங்கு பணிபுரிய ஆங்கிலேயர்கள், வெறுங்காடாக கிடந்த பூமியை ‘கண்டிச்சீமை’ என்று நம்பி பிழைப்பிற்கு வந்த தமிழர்களை குடியமர்த்தியதால் சிங்களர்கள் இந்திய குடியேறி தமிழர்களை ஆங்கிலேய கைக்கூலிகளாக, தங்களது எதிரிகளாகவே கருதினர்.
“இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை 1931 ல் வழங்கப்பட்டது. 1928 லிருந்தே இந்திய தோட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது எனும் கோஷம் பலமாய் ஒலித்தது. சிங்கள அரசியல்வாதிகளினதும் இலங்கை தமிழர் களின் மேல்மட்ட பிரதிநிதிகளினதும் ஏகோபித்த குரலாய் இதுவே ஒலித்தது. இந்திய தமிழர்களின் இலங்கை வரவை தடை செய்வதில் இலங்கை தமிழர்கள் காட்டிய ஆர்வமும்,கல்வித்தகுதி வருமான தகுதி என்பனவற்றின் அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்த வேகமும் இவர்களுடைய இந்திய தமிழர் விரோத போக்கை பறைசாற்றின.
1948 ல் இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு இலங்கை பிரஜா உரிமை சட்டம் அமுலாக்கபட்டது. பெருந்தொகையான தோட்ட மக்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றவர்களாகவும் ஆக்கி விடுவதே இந்த சட்ட அமுலாக்கலின் முக்கிய குறிக்கோள்.” (பாலாயி குறுநாவல் தொகுப்பின் முன்னுரை)
அவருடைய பயணம் சிறுகதை மலையக மக்களின் நிலையை விளக்கிக் கொள்ள உதவுகிறது.
“மற்றவர்களின் இடுப்பளவுக்கு நிற்கும் ஒரு சிறுவன் கத்துகின்றான். அவனுக்கு மூச்சு முட்டித் திணறுகின்றது. கியூவுக்குச் சிறியவனாகவும் தூக்கி வைத்துக் கொள்ளப் பெரியவனாகவும் இருப்பதே அவனுடைய பிரச்சினை.
இந்த மக்களின் பிரச்சினைகள் போல் அதுவும் அவனுடைய எந்தவித முயற்சியாலும் தீர்க்க முடியாதது! அவன் கியூவில் நிற்கும் மற்றவர்கள் அளவுக்கு வளர்ந்துவிட வேண்டும் அல்லது சிசுவாகி யாராவது ஒருவருடைய இடுப்பிலோ தோளிலோ ஏறிக்கொள்ள வேண்டும். இரண்டுமில்லாவிட்டால் யாராவது வளர்ந்தவர்கள் அவனைத் தூக்கி வெளியே வீசி விடவேண்டும். இல்லாவிட்டால் அவன் இப்படியே நடுங்கி கத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான்.”
குறுகிய தூர பேருந்து பயணத்தின் நெருக்கடிகளை பேசும் பயணம் எனும் அவரது சிறுகதையின் இறுதி வரிகள் –
“இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும் சிக்கலானதுமாக இருக்கிறதென்றால்..வாழ்க்கை எனும் பெரும்பயணம்?” என முடிகிறது.
சிங்களர்கள் மற்றும் யாழ்ப்பாணத்து தமிழர்கள் என இரு தரப்புடனும் மலையக தமிழர்களுக்கு உரசல் இருக்கிறது எனும் சித்திரம் தெளிவத்தையின் படைப்புகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அவருடைய படைப்புகளின் இயங்கு தளத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வீச்சை உணர்ந்துகொள்ள இந்த புரிதல் அவசியம். இவை எல்லாவற்றையும் மீறி அங்கு கலை இலக்கிய செயல்பாடுகள் வழியாக தெளிவத்தை போன்ற பலரும் மேலெழும்பி வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். சுப்பையா கமலாதாசன் தெளிவத்தைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதை ஒட்டி எழுதிய கட்டுரையில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசுகிறார். “இன்று இலக்கிய உலகில் அரை நூற்றாண்டை கடந்திருக்கும் இவர் 1972க்கு பிறகு 1984 வரை ஒரு சதாப்தத்துக்கும் மேலாக எழுதவில்லை என்பதும் அனைவராலும் அறியப்பட வேண்டும். 1960கள் எப்படி இலக்கிய வளச்சியில் முக்கிய வருடமாக கருதப்படுகிறதோ, புனைக்கதைகள் ஜனரஞ்சக, லௌகீக கதைகளில் இருந்து வேறுபட்டு மனிதனின் வாழ்வியல் துயரங்களை சொல்ல தொடங்கியதோ அதேயளவிற்கு எழுத்தாளர்கள் பேனை பிடிப்பதற்கு பயந்த காலமும் அதுவாகவே இருக்கிறது. முற்போக்கு என்ற போர்வையில் முற்போக்கு சாரா எழுத்தாளர்களை கடுமையாக சாடி விமர்சித்து முடக்கியே வைத்திருந்த காலகட்டமது.” அதன் பின்னரும் கூட மலையக பாடசாலை முறை பற்றி அவர் எழுதிய சிறுகதைக்காக “யாழ்ப்பாண விரோதக்காரன்” என விமர்சிக்கப்பட்டார். படைப்புகளில் தொடர்ந்து சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் விமர்சித்து வந்துள்ளார். இலங்கையின் உயர்ந்த சாகித்திய விருது அவருடைய முதல் சிறுகதை தொகுப்பிற்கே கிட்டியதால் மேலும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
தெளிவத்தை அவர்களின் குடைநிழல் நாவல் மிகையற்ற சித்தரிப்புகளின் வழியே வாசகனை பதட்டம் கொள்ள செய்கிறது. மெல்லிய அச்சம் ஊற்றெடுப்பதை உணர முடிகிறது. இறுதியில் சாமானியனின் கையறு நிலையும், அவன் கொள்ளும் கோபமும் நம்மையும் ஆட்கொள்கிறது. அடையாளத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் அரச வன்முறை என்பது ஆபத்தானது. நம்மவர் மற்றவர் எனும் பேதம மழுங்கி ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் ஐயப்படும், சின்ன முனகளையும் கூட மவுனமாக்க முயலும். அந்த பிரம்மாண்டமான தேர் சக்கரத்தின் உறுப்புகளில் ஒன்றாகி தேய்ந்து அழிய வேண்டும் அல்லது அதன் பாதையில் கிடந்து நசுங்கி மரணிக்க வேண்டும். மனிதன் காலந்தோறும் இவைகளில் ஒன்றையே தேர்ந்தெடுக்கிறான் அல்லது வேறுவழியின்றி நிர்பந்திக்கப்படுகிறான். கவிதை புனையும் இஸ்லாமிய காவலன் அதன் பகுதியாக மாற முயன்று தோற்கிறான், வெள்ளையானையின் எய்டன் இவனுக்கு நெருக்கமானவன். கதைசொல்லி எதிரே உருண்டு வரும் தேர்ச்சக்கரத்திற்குக் கீழே பலவந்தமாக கிடத்தபட்டிருக்கிறான். ஒருவகையில் அவன் மரணத்தை கூட ஏற்றுகொள்ள கூடும், இந்த காத்திருப்பு, கொஞ்சம் நம்பிக்கைகளை அவனுள் எழுப்புகிறது ஏதோ ஒரு நாளைய நாளுக்காக, புதிய விடியலுக்காக கனவுடன் காத்திருக்கிறான். வவ்வால் போல தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் கதி அவனுக்கு என்றும் நேரலாம் எனும் அச்சம் ஒருபுறம், காவலனின் கனிவும், பெரியவர் நல்லவர் எனும் உத்திரவாதமும், நீதியின் மீதுள்ள பிடிப்பு மறுபுறமும் அவனை அலைக்கழிக்கின்றன.
நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய நேர்த்தி கொண்டவை. தமிழ் பள்ளி – சிங்கள பள்ளி என சிறு வயதிலிருந்தே மேட்டிமைவாத சித்தாந்தங்கள் விதைக்கபடுவதை (indoctrination) பதிவு செய்யும் பகுதி முக்கியமானது. மொழி அடையாளங்கள் கரைந்து, தமிழ் வழக்கொழிந்து போவதை பற்றி தெளிவத்தை விசனப்படுகிறார். அவருடைய மனம் வெளுக்க குறுநாவலிலும் தமிழ் துரைமார்கள் வந்தபின்னரும் கூட பங்களாவின் உட்சுவர்களுக்கு தமிழ் கேட்கும் பாக்கியமில்லை என வருந்துகிறார். கதைசொல்லியின் தாய் – தந்தை உறவை பேசும் பகுதி மலையக பெண்ணின் வாழ்வை கண் முன் காட்டி செல்கிறது. சுவடின்றி அழிக்கப்படுவதற்காக கடலில் வீசியெறியப்படும் சடலங்களை உண்டழிக்கிறது மீன்கள். நாவலின் அதி உக்கிரமான பகுதியாக எனக்கு தோன்றியது மீனின் வயிற்றில் விரல் தென்படும் பகுதி. ஒரு வரலாற்றை, ஒட்டுமொத்த அழித்தொழிப்பை இந்த ஒற்றை சித்திரம் அளித்து விடுகிறது. ஒரு காட்சியாக இது என்னை எப்போதும் தொந்திரவு செய்துகொண்டே இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதிகபட்சம் ஒரு மனிதன் எதற்காக ஆசைப்படுகிறான்? நிம்மதியான எளிய பாதுகாப்பான வாழ்வு! அவ்வளவு தான். அதை அடைவதற்கும், தக்கவைப்பதற்கும் தான் எத்தனை போராட்டங்கள்! அதுவும் இலங்கை போன்ற தேசத்தில் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சாமானியன் மற்றொரு சாமானியனின் மீது கொள்ளும் தனிப்பட்ட காழ்ப்பு எத்தனை பெரிய அரசியலாக உருவெடுக்கிறது? இப்படி எத்தனை பேரை இவ்வரசியல் உண்டு செரித்திறிக்கிறதோ? தெரியவில்லை! அடையாளத்தின் பேரால் ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன என்பது ஒருபுறம், அடையாளத்தின் பேரால் நீதி மறுக்கப்படுவது அதனினும் கொடுமை. அரசியல் நாவலாக இருந்தாலும் வலிந்து ஓலமிடாமல், எதையும் பிரகடனப்படுத்தாமல் சாமானியனின் நிலைமையை நொந்து மனித மனத்து ஈரத்தையும் பதிவு செய்து முடிகிறது நாவல்.
‘என் வாசிப்பின் எல்லையில், சிறுகதைகளில் மீன்கள், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் ஆகியவைகளும், குறு நாவல்களில் பாலாயியும், மனம் வெளுக்கவும் என்னைக் கவர்ந்தன. அவருடைய நாவலான குடைநிழல் நிச்சயம் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.
ஒட்டுமொத்தமாக தெளிவத்தையின் படைப்புகள் மனிதர்களின் துன்பங்களையும் துக்கங்களையும் பேசினாலும் கூட, வருத்தமும் கோபமும் உலர்ந்து தடம் கொண்டிருந்தாலும், மனிதர்கள் நல்லவர்கள், அவர்கள் மனம் வெளுக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனும் உணர்வே எல்லாவற்றையும் கடந்து எஞ்சுகிறது.