ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

ஜெயகாந்தன் மீதான மதிப்பீடுகளின் பின்னணி

ஜெயகாந்தனின் ஆக்கங்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஆழ்மன வெளிப்பாடற்ற , மேலோட்டமான உடனடி எதிர்வினைகள் என்பதே என் கணிப்பாகும். அது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தமிழ் எழுத்தாளனிடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது முதல் [அதாவது கலைமகள் குடும்ப இதழாகி ,சுதேசமித்திரன் நின்ற பிறகு] ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறு வரையிலான காலகட்டம் முன்வைத்த தெரிவுச்சாத்தியங்கள் இரண்டே . ஒன்று தன் காலகட்டத்து வாசக மனதை எவ்வகையிலும் எதிர்கொள்ளாமல் அந்தரங்க அறைக்குள் அமர்ந்து ஒற்றையாள் சீட்டாட்டம் போல இலக்கியம் படைப்பது . அல்லது அன்றைய பயிற்சியற்ற, மேலோட்டமான வாசகர்களுக்காக எழுதி நீர்த்துப்போவது.

முதல் முறையை தேர்வு செய்து சிறுத்தவர்கள் நகுலன், சுந்தர ராமசாமி முதலிய சிற்றிதழாளர்கள் . இரண்டாம் வகையை தேர்வு செய்து நீர்த்தவர்கள் லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி , தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் .போன்றவர்கள். அதிர்ஷ்டவசமாக தொண்ணூறுகளில் ஐராவதம் மகாதேவன், மாலன், கோமல் சுவாமிநாதன் , வாசந்தி, பாவை சந்திரன் ஆகியோரின் முயற்சியால் சமரசமற்ற எழுத்துக்கு இதழ்களில் பிரசுரமும் வாசகர்களும் உடனடியான எதிர்வினைகளும் உருவாகும் நிலை ஏற்பட்டது! இன்றைய தாராளமான பிரசுரமும், வாசிப்புச் சூழலும் இவர்களுக்குக் கடன்பட்டவை.

இலக்கியம் எந்நிலையிலும் ஓர் உரையாடலே . மறுதரப்பு அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அவ்வுரையாடல் நிகழாவிட்டால் இயல்பான கலைத்திறமை மெல்ல தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் சபாஷ்களுக்கான தொழில்நுட்பமாக சிறுத்து குறுகி நிற்க நேரிடும் . ஏனெனில் தன் ஆழ்மனம் வெளிப்படும்போது அதை சமூக ஆழ்மனம் எதிர்கொள்ளும் விதம் ஒரு எழுத்தாளனைப் பொறுத்தவரை மிக முக்கியமானது . தற்செயலான ஓர் ஆழ்மன வெளிப்பட்டைக்கூட பிரித்தறிய, அங்கே மேலும் வாசல்களில் முட்ட ,அவனை அது தூண்டுகிறது . ஒரு படைப்புக்கு சமூகமனம் அளிக்கும் தீவிர எதிர்வினை அந்தப் படைப்பின் வேர்மனநிலையின் பல்வேறு தளங்களுக்கு எழுத்தாளனை உந்திவிடுகிறது. ஆகவேதான் மகத்தான படைப்புகள் உருவாக அதற்கான சமூகச் சூழல் தேவையாக இருக்கிறது . இந்தியாவில்கூட சுதந்திர போராட்டம் தான் மேலான இலக்கியங்களையும் உருவாக்கியது. தாகூரும் பாரதியும் பிரேம்சந்தும் குமாரன் ஆசானும் அதன் சிருஷ்டிகளே.

நகுலன் , சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புகளில் பல வெற்று உத்திச் சோதனைகள் நம்மை சோதிக்கின்றன. தங்கள் குறுகிய உலகுக்குள் இருந்தபடி வாசகனைப்பற்றிய போதமே இல்லாமல் அவற்றை அவர்கள் செய்து சகஎழுத்தாளர்களின் எதிர்வினைகளுடன் திருப்திகொண்டிருந்தார்கள். உதாரணமாக சுந்தர ராமசாமியின் ‘பல்லக்கு தூக்கிகள் ‘ தொகுப்பில் அக்கதை தவிர எல்லாமே தட்டையான ஜோடனைகள். ஆசிரியன் புதைத்துவைத்த நுட்பங்களன்றி படைப்பில் மனம்தோயும் போது ஏற்படும் அகமடிப்புகள் அவற்றில் இல்லை. அதை அவருக்குச் சொல்ல அடுத்த தலைமுறை வாசகர்கள் உருவாகி வரவேண்டியிருந்தது, அதுவரை மெளனி பாணியில் ஆக்கப்பட்ட நுட்பமான படைப்புகள் அவை என்றே அவர் எண்ணி வந்தார். இன்னொரு உதாரணம் வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும் ‘ என்ற தொகுப்பு. ஏறத்தாழ இருபது வருடம் அதில் உள்ள ‘சோதனை ‘கள் மாபெரும் கலைவெற்றிகள் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

இதன் மறுபக்கமாக வாசகப் பங்கேற்பு உள்ள எழுத்துலகை உருவாக்கிய படைப்பாளிகள் பயிற்சியோ, கூர்ந்த வாசிப்போ இல்லாத , தங்களை எவ்வகையிலும் தகுதிப்படுத்துவதிலும் நம்பிக்கை இல்லாத , பிரபல இதழ்களீன் வாசகர்களை முன்னிலையாக்க வேண்டியிருந்தது . ஆகவே கலையே கைகூடாத படைப்புகளை வாசகர்கள் கோரியதனால் அவர்கள் எழுத நேர்ந்தது. எழுதும்படைப்புகளில் விளக்கங்கள் சேர்க்கவும் ,உணர்வுகளை மிகைப்படுத்தவும் ,அவர்களை அவ்வாசகச் சூழல் நிர்ப்பந்தம் செய்தது . லா.ச.ரா , ஜெயகாந்தன், ஜானகிராமன், அழகிரிசாமி போன்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புகளைப் படிக்கும் இன்றைய வாசகன் மனம் தோயாமல் வெறும் தொழில்நுட்பத்தாலோ, எளிய கருத்துநிலையாலோ உருவாக்கப்பட்ட படைப்புகளையே எண்ணிக்கையில் அதிகமாகக் காண்பான். பேசப்பட்ட பல கதைகள் எளிமையானவையாக, தட்டையானவையாக இருக்கையில் நுட்பமும் ஆழமும் கொண்ட ஆக்கங்கள் கவனிப்பின்றி போயிருப்பதை கண்டறிவான். நல்ல கதைகளுக்கு கூட பேசிப்பேசி உருவாக்கப்பட்ட ஓர் எளிய வாசிப்பு அதன் இறுதி அர்த்தமாக நிலைநாட்டப்பட்டிருக்கும். இன்றைய சூழலில் முதல்வகைப் படைப்பாளிகளை அவர்கள் படைப்புகள் மீது உருவாக்கப்பட்டுள்ள ‘அதி நுட்பம் ‘ என்ற பிரமையைக் களைந்து பகல் வெளிச்சத்தில் பார்க்கவேண்டியிருக்கும். இரண்டாம் வகைப்படைப்புகளை சருகுகளை விலக்கி கண்டடையவேண்டியிருக்கும்.

ஆக , ஒட்டுமொத்தமாக தமிழின் சிறந்த படைப்பாளிகளை எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் பத்து சிறந்த கதைகளையும் மேலும் பத்து கவனிப்புக்குரிய கதைகளையும் மட்டுமே நம்மால் காணமுடியும். [உண்மையில் புதுமைப்பித்தனில் மட்டுமே பத்து தேறும் என்பது என் கணக்கு] முந்தைய வரிசையில் நாம் நூறுகதைகளில் பத்தை தேர்வு செய்கிறோம். பிந்தைய வரிசையில் ஐம்பதில் ஏழெட்டை . கறாராக சொன்னால் இதுதான் நமது தரக்கணக்கு. புதுமைப்பித்தனின் ஆக்கங்களை இன்று எதையுமெ கேள்விப்படாமல் படிக்க நேரும் புது வாசகன் ஆழமான ஏமாற்றத்தையே அடைவான். குப்பைக்கூளங்களுடன் சேர்த்து பிரசுரம் செய்யப்பட்டுள்ள சமீபகாலப் பதிப்புகளை புதுமைப்பித்தன் மீது ஏற்றப்பட்டுள்ள விளம்பரங்களால் கவரப்பட்டு வாசிக்கமுற்படும் இளம் வாசகர்கள் தொடர்ந்து இந்த ஏமாற்றத்தை எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு விளக்கம் எழுதுவதே ஒரு தனிவேலையாக எனக்கு உள்ளது.. அந்த ஏமாற்றம் சிற்றிதழ் சார்ந்து ஓர் அறிமுகம் உள்ள வாசகனுக்கு இல்லை. ஏனென்றால் அவனுக்கு புதுமைப்பித்தனின் நல்ல கதைகளை ஏற்கனவே நம் விமரிசனச் சூழல் அடையாளம் காட்டிவிட்டிருக்கும். அவரது சிதைந்த கதைகளில் உள்ள நல்ல பகுதிகளும் அடையாளம் காட்டபட்டிருக்கும் — உதாரணம் துன்பக்கேணியின் முதற்பகுதி . அவரது காலகட்டத்தின், அவர் செயல்பட்ட கருத்துச்சூழலின் பின்னணியில் அவரது இடம் என்ன சாதனை என்ன என்ற ஒரு புரிதல் அவனுக்கு உருவாக்கப்பட்டிருக்கும்.

ஜெயகாந்தன் உள்பட உள்ள பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்படிப்பட்ட விமரிசனக் கவனம் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக அவர்களை வாசிக்கும் வாசகனுக்கு கிடைப்பது ஆழமான சோர்வே. பெருந்தொகைகளாக வெளியிடப்பெற்ற எல்லா தமிழ்ச் சிறுகதையாளர்களும் இந்த சோர்வை, சலிப்பை சூழலில் உருவாக்கிவருவதை கண்கூடாகக் காணலாம். தி.ஜானகிராமன் , லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன் , கி ராஜநாராயணன் போன்ற பழைய படைப்பாளிகள் மட்டுமல்ல, வண்ணதாசன் ,வண்ணநிலவன் போன்ற படைப்பாளிகளுக்கும்கூட இதே நிலைதான். அவர்களை விரிவான பின்னணிப்புரிதலுடனும் ,அவர்களுடைய அழகியல் குறித்த தெளிவுடனும், அவர்கள் மீதான உண்மையான அக்கறையுடனும் அணுகி , அவர்களுடைய கலைப்பெறுமானத்தை வாசகனுக்கு வகுத்துச் சொல்லி ,கூர்ந்த வாசிப்புக்கு வழிவகுக்கும் பொறுப்பு விமரிசகனுக்கு உண்டு. அதை ஆற்றும் விமரிசகர்கள் நம்மிடையே இல்லை என்பதே இப்போது நாம் காண்பது. இன்னும் ஒருபடி சென்று எளிய முறையில் அபிப்பிராய உதிர்ப்புகளையும் , அபத்தமான ‘கட்டுடைப்பு ‘களையும் , குழுமனப்பான்மை சார்ந்த முழுநிராகரிப்புகளையும் கவனமற்ற வாசிப்பின் பின்னணியில் செய்து இன்றைய சிக்கலை மேலும் குழப்பும் பணியே இங்கு விமரிசனம் என்றபேரில் நடக்கிறது. நுண்ணிய விமரிசகர்கள் செயல்படாத சூழலில் பெருந்தொகைநூல்கள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்பதையே நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். இக்கட்டுரைத்தொடரை எழுதும் தூண்டுதலே அந்த பெரும்போதாமையை நிரப்ப என்னளவில் ஏதேனும் செய்யவேண்டும் என்பதே.[ உண்மையில் விமரிசனங்களை சற்றும் அறியாமல் நான் வாசித்த மேலைநாட்டு எழுத்தாளர்களின் பெருந்தொகைகளும் இதே சலிப்பையும் ஏமாற்றத்தையும் எனக்களித்தன — உதாரணமாக எடித் வார்ட்டன் , ரேமாண்ட் கார்வர்]

இன்னும் ஒரு முக்கிய சிக்கல் , சிற்றிதழ் சார் வாசகர்கள் மற்றும் விமரிசகர்களின் பொதுமனநிலை. அவர்கள் ‘அபூர்வமானதை ‘ [அதாவது அறியப்படாததை ,மறைந்துவிட்டதை] கண்டடையவும் , சிக்கலானதை [அதாவது சிதைவுற்றதை,முழுமைபெறாததை ] ரசிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் அது அவர்கள் அவர்களுக்கே போட்டுக் கொள்ளும் சபாஷ் போல. அதிநுட்பமானவற்றை தேடித்தேடி படிப்பவர்கள் தாங்கள் என்ற மனப்பிரமையை அது அவர்களுக்கு அளிக்கிறது. மெளனி, ஜி.நாகராஜன், நகுலன்,சம்பத் போன்ற படைப்பாளிகள் மீது உருவாக்கப்பட்டுள்ள பிரமைகளுக்கு முக்கியமான காரணம் இதுவே. [ நவீனத்துவ ஒழுக்கவியல்: ஜி நாகராஜனின் படைப்புலகம் என்ற கட்டுரை காண்க] உதாரணமாக சம்பத் ஒரு மாபெரும் படைப்பாளி என்று சொல்ல ஒரு குழு உள்ளது. உலக இலக்கியத்தில் எளிய பரிச்சயமோ, அடிப்படை ரசனையோ உடைய ஒருவர் சம்பத் சில சாத்தியங்கள மட்டுமே வெளிபடுத்திய ஒரு துவக்ககட்ட எழுத்தாளர் என்று அறிவார். ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகள் கூட உரிய வாசிப்பு கிடைக்காமல் உள்ள நம் சூழலின் தரத்தை வைத்துப் பார்த்தால் சம்பத் ‘ரசிக்கபடுவது ‘ கட்டாந்தரையில் முக்குளிப்பது போன்ற சுய ஏமாற்று மட்டுமே. அங்கீகரிக்கப்பட்டவை, புகழ்மிக்கவை மீது உதாசீனத்தையோ , வெறுப்பையோ இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களை அபூர்வமானவர்களாகக் காட்ட விழையும் முனைப்பின் விளைவு இது. இம்மனநிலை தமிழ் விமரிசனத்தில் ஒரு சமநிலையின்மையை உருவாக்கி வருகிறது. தி.ஜானகிராமனும் அழகிரிசாமியும் இதற்குப் பலியான முக்கியப் படைப்பாளிகள் .ஜெயகாந்தனும் அவ்வரிசையைச் சேர்ந்தவரே.

ஜெயகாந்தனின் படைப்புகள் எண்ணிகையில் அதிகம் என்ற நிலையில், அவற்றில் கலை கைகூடாத ஆக்கங்கள் அதிகம் என்ற நிலையில் அவர் மீதான கூர்ந்த விமரிசன அவதானிப்பின் உதவி இல்லாத வாசிப்புகள் அரைகுறையான தவறான முடிவுகளுக்கு எளிதில் வந்துவிடக்கூடும். நாம் இவற்றை கணக்கில் கொண்டபிறகே ஜெயகாந்தனைப்பற்றி பேசமுடியும்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

===============================

ஜெயகாந்தனின் பல கதைகள் அவர் அன்று உருவாக்கிய ஒட்டுமொத்த கருத்தியல் தளத்துக்கு தங்கள் பங்களிப்பை அளிப்பவை . ஆனால் கலைரீதியாக தங்கள் இருப்பை நிலைநாட்டும் திறன் அற்றவை. ஆரம்ப காலக் கதைகளில் இலக்கியத்தின் பொதுவான கவனத்துக்கு வராத எளிய மக்களின் வாழ்க்கையைப்பற்றிய சித்திரத்தை உருவாக்கவே ஜெயகாந்தன் முயல்கிறார். புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம் ‘ என்ற கதையை அவற்றுக்கான முன்னுதாரண வடிவமாக சொல்லலாம். அவை அச்சித்திரங்களை முன்வைப்பதிலேயே முழுமை கண்டு விடுகின்றன. இன்று அவை காலகட்டத் தடங்கள் மட்டுமே. அவற்றில் ஆசிரியனின் ஆழ்மனம் இயைபு கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும் . விதிவிலக்காக மெல்லிய ரேகையாகவேனும் வேறு ஒரு ஆழத்து ஓட்டம் கொண்ட கதைகள் சலிப்பு ,பூ வாங்கலியா பூ, தாம்பத்யம் போன்றவை. உதாரணமாக சலிப்பு கதை உழைப்பாளி ஒருவனுக்கு உழைப்பினால் உருவாகும் ஆழமான அன்னியமாதலைச் சொல்லக்கூடிய கதை. அந்த தொழிலாளியின் அகமீறல்களின் பல தடங்களை பதிவு செய்கிறது அது. பூ வாங்கலியா பூ என்ற கதையில் நவீன வாசகன் ஒருவனின் கூர்ந்த அவதானிப்புக்கான இடம் ஒன்று இருக்கிறது .பூ விற்கும் விதவை கணவனை இழந்தவன் வீட்டுக்குள் தவறாக நுழைகிறாள், அவன் அவளுக்கு பூவை சூட்டுகிறான். அவள் வெளியேறும்போது பூவை வீசிவிட்டு செல்கிறாள். ஏன் ? பூ வேறு ஒன்றுக்கு அடையாளமாகி விடுவதை குறைந்த சொற்களில் சொல்லக் கூடிய படைப்பு இது.

இக்காலகட்டக் கதைகளில் ஜெயகாந்தனின் தனித்துவத்தை சொல்லகூடிய முக்கியமான கதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி ‘ . பள்ளிக்கூடத்தில் பாடமாக இருக்கும் கதை. என் அக்கா மகளுக்கு இக்கதை அதன் எளிய வடிவிலேயே ஆழமான மனநெகிழ்வைக் கொடுக்க கூடியதாக இருந்ததைக் கண்டிருக்கிறேன். மரணத்தை அறியாத ஒருவனுக்கு சுடுகாட்டுத் தொழில் எந்த துன்பமும் அளிக்காத ஒன்றாக இருந்தது. தனக்கென ஒரு குழந்தை பிறந்து அதன் மரணத்தை அறிந்தபிறகுதான் அவனுக்கு மரணம் என்ற வலி தெரியவந்தது. எளிய வாசிப்பு இதுதான். ஆனால் அக்கதையின் ஆழத்துக்குச் செல்லும் ஒரு வாசகன் மேலும் பல தளங்களைக் காணமுடியும். ஆண்டி கொண்ட அந்த இரண்டாவது மனநிலை எளிய மரண தரிசனம் தானா ? அவன் அழுவது தன் சொந்த துக்கத்துக்காக்தானா ? மானுட துக்கத்தையே அங்கு வரும் உடல்களில் கண்டு அதற்காக கலங்கி அழும் அவன் அடையும் அந்த மனவிரிவு எளிய விஷயமல்ல .அவன் அதன் வழியாக வேறு இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். அந்த விடுதலையை, முழுமையை சென்று தொடக்கூடியது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி ‘ என்ற தலைப்பு . சுடுகாடு நந்தவன் என்று சொல்லப்படுகிறது.

இது ஆன்மீக முழுமை பற்றிய ஜெயகாந்தனின் பார்வை வெளிப்படும் படைப்பும் கூட . பற்றறவனாகவே ஆண்டி முதலில் தென்படுகிறான். அதில் கருணை இல்லை. ஏனெனில் கருணை என்பது ஒரு வகை பற்றே. மகன் மீதுள்ள பாசம் வழியாக பற்று கொண்டு கருணையும் மனவிரிவும் கொண்டு ஆண்டி மலர்கிறான்.மானுடம் மீதான பெரும்பற்று மூலம் தன் சுயம் சார்ந்த பற்றை அறுத்தலே இங்கு மீட்பாக ஆகிறது. பற்றறுத்தலுக்கு ஜெயகாந்தனின் இவ்விளக்கம் அவரது பல கதைகளில் உள்ளது. ஆன்மீகமான ஒரு மலர்வின் கணத்தை சொல்லாமல் உணர்த்தும் இக்கதைக்கு சமானமான பற்பல கதைகளை நமது சித்தர்களைப் பற்றிய வாய்மொழிக்கதைகளில் காணலாம். அவற்றின் ஆன்மீகமான சாரத்தை உள்வாங்கிய படைப்பு இது. ஓங்கூர் சாமி வைத்தியர் சாமிக்கு சொன்னது இதையே. தன் படைப்பியக்கத்தின் இறுதியில் ஜெயகாந்தன் ஆக்கிய சாமியார் கதைகளில் இவை மேலும் தெளிவாக வெளிப்படுகின்றன. அக்கதைகளில் இந்த நோக்கு நீதிக்கதைகளுக்குரிய எளிமையுடனும் கனிவுடனும் வெளிப்படுகிறது . ஜெயகாந்தனின் தேடலை ஒரு வகையில் ஜானகிராமனின் ஆன்மீகம் குறித்த உருவகத்துக்கு நேர் மாறானதாக சொல்லலாம். லெளகீகத்தின் முதிர்ந்த நிலையே ஜானகிராமனின் ஆன்மீகம். [பார்க்க: தி . ஜானகிராமனின் படைப்புலகம் ] ஜெயகாந்தனுக்கு ஆன்மீகத்தின் கனிந்த நிலை லெளகீகமாக உள்ளது. அதையே அவரது கடைசிக் காலகட்ட கதாபாத்திரமான சாமிநாதபிள்லை சாமியார் வெளிப்படுத்துகிறார்.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி ‘ யை அளவுகோலாக வைத்துத்தான் ஜெயகாந்தனின் பல துவக்க கால கதைகளின் கலைப்பெறுமானத்தை நான் பொருட்படுத்த மறுக்கிறேன். ‘சோற்றுச்சுமை ‘ ‘மூங்கில் ‘ ‘நான் இருக்கிறேன் ‘ போன்ற கதைகளுக்கு அவற்றின் தளத்துக்குள் உட்சிக்கலும் ஆழமும் உண்டு என்றாலும் அவை முக்கியமான இலக்கியப் படைப்புகளுக்கு இருந்தாகவேண்டிய ‘ஒருபோதும் முற்றிலும் விடுவித்து விடமுடியாத உள்முரண் ‘ ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. அவற்றின் கூறுமுறை ஒன்றை நோக்கி செல்லும்போதே அதற்கு எதிரான ஆழத்து நகர்வு ஒன்று ஆசிரியரை அறியாமலேயே நிகழவில்லை. அல்லது , ஒட்டுமொத்தமாக ஆசிரியனின் வடிவபோதம், பொதுப்புத்தி தருக்கம் ஆகியவற்றுக்கு அடியில் அவரது ஆழ்மனம் நகர்ந்து வந்து உச்சத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை . வேறு சொற்களில் சொன்னால் தர்க்கமும் ஆழ்மனமும் கொள்ளும் முரணியக்கம் இல்லை. அப்படி வெளிப்பாடு கொள்ளும் கதைகள் எளிய விஷங்களல்ல , எந்த ஆசிரியனிலும் அவை எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் சொல்ல விரும்புகிறேன். தி.ஜானகிராமன் , ஜெயகாந்தன் போல மிக பரவலான வாசகத்தொடர்பை சாத்தியமாக்கிய பெரும்படைப்பாளிகளில் அவர்களுடைய எளிய கதைகளும் , நடுத்தரக் கதைகளுமே அதிகமாக உள்ளது இயல்பே.

ஜெயகாந்தன் தன் பிற்காலக் கதைகளில்தான் முழுமையுடனும் வீச்சுடனும் வெளிப்பட்டிருக்கிறார் . அவரது அனைத்து பிற்காலக் கதைகளையும் வெறும் வணிக முயற்சிகள் , கலைப்போலிகள் என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் எம்.வேதசகாய குமாரின் அணுகுமுறை என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. வணிக இதழ்களின் எழுத்து இலக்கியமாக இருக்க வாய்ப்பேயில்லை என்ற அழுத்தமான முன்முடிவிலிருந்தும், கதைக்குள் விவாதித்தல் என்பது இலக்கியத்துக்கு முரணானது என்ற கோட்பாட்டிலிருந்தும் எழுந்த பிடிவாதம் அவரது ஆய்வுகளை பெரிதும் சுருக்கி விடுகிறது — எந்த இலக்கிய விமரிசனமும் ஏதோ ஒருவகையான சுருக்குதலை படைப்பை நோக்கி செலுத்துகிறது , அடுத்தகட்ட விமரிசகன் எப்போதுமே மூதாதை விமரிசகனின் போதாமைகளை நிரப்பியபடி எழுத துவங்குகிறான் என்பதை மறுக்கவில்லையென்றாலும் இந்த கோணம் மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதே என் எண்ணம். . ஜெயகாந்தன் தன் பிற்காலகட்டக் கதைகளில்தான் தனக்குரிய விவாதத்தன்மை கொண்ட இலக்கிய முறையைக் கண்டுகொண்டார். தன் வாசகர்கள் மீதான ஆழமான ஈடுபாட்டின் மூலம் அவ்விவாதத்தின் பல்வேறு தரப்புகளையும் அடையாளம்கண்டார். இரண்டாவது காலகட்டத்துக் கதைதான் ‘அக்கினிப்பிரவேசம் ‘.அவரது கதைகளில் அது முக்கியமானது என்று கண்டோம்.

இரண்டாவது காலகட்டக் கதைகளில் மேலும் ‘எங்கோ யாரோ யாருக்காகவோ ‘ , ‘, ‘மெளனம் ஒரு பாஷை ‘ , ‘ இருளைத்தேடி ‘ ‘புதிய வார்ப்புகள் ‘ ‘இறந்த காலங்கள் ‘, ‘கண்ணாமூச்சி ‘, ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் ‘ ‘கோடுகளைத்தாண்டாத கோலங்கள் ‘ ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ ‘ ‘டாக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் ‘ ‘ரிஷி பத்தினி ‘போன்ற கதைகளை அவரது சிறந்த படைப்புகளாக கொள்ளலாம். இக்கதைகளை அவை ஆற்றும் பல்வேறு பங்களிப்பின் அடிப்படையில் வகைப்படுத்தி புரிந்துகொள்வது பயன் தருவது.

ஜெயகாந்தனின் படைப்புலகில் அவரது தேடலின் நீட்சிகளாக அமையும் கதைகள் பல உண்டு. தன் அடிப்படையான வினாக்களை அவர் இப்படைப்புகளின் வழியாக வளர்த்தெடுக்கிறார், உடைத்துப் பார்க்கிறார். அவரை அறிய அவை இன்றியமையாதவை, அவரது படைப்புலகை ஒட்டுமொத்தமாக பார்க்கும் வாசகனுக்கு தவிர்க்கமுடியாதவை. தனியாக அவற்றின் மதிப்பு குறைவானதே. உதாரணமாகசொரு பகல்நேரப் பாசஞ்சர் வண்டியில் என்ற கதை அதன் முதல் தளத்துக்கு அப்பால் போக முடியாத ஒன்று. ஆனால் ஜெயகாந்தனின் அடிப்படையான தேடலின் பகுதியாக அது முக்கியமானது .ஜெயகாந்தன் எப்போதுமே பேரரறம் ஒன்றின் பிரச்சாரகர், அந்த அறத்தை தன் எழுத்துக்களின் வழியாக தேடவும் , நிர்ணயம் செய்யவும் முயன்றவர். இனம் ,வற்கம் போன்ற பிரிவினைகளுக்கு அப்பால் சென்று எங்கும் நிரம்பியிருக்கும் மானுட அறத்தை தரிசிக்கும் முயற்சிகளில் ஒன்று ‘பகல் நேர பாஸஞ்சர் வண்டியில் ‘ .ஆனால் இக்கதையில் அத்தேடல் அந்த விவாதத்தளத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ஓரு கருத்து எப்போதுமே அந்த விவாததளத்தின் பகுதியாக நிற்பது. ஒரு விவாத தளத்தின் பகுதியாக பிறப்பு கொண்டாலும் கூட இலக்கியப்படைப்பு அந்த விவாதத் தளத்தை தாண்டிச் செல்லும்.

‘சுய தரிசனம் ‘ ‘புதிய வார்ப்புகள் ‘ ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை, ‘ ‘யுக சந்தி ‘ போன்ற கதைகளை இவ்வரிசையில் சேர்க்கலாம். இக்கதைகளுக்கு அவை வெளிப்பட்ட காலகட்டம் சார்ந்து ஆழ்ந்த முக்கியத்துவம் உண்டு . நம் சூழலில் முற்போக்குவாட்களாக செயலாற்றியவை அவை. இக்கட்டுரையில் ஏற்கனவே சொன்னபடி ஒரு காலகட்டத்தின் சிந்தனையை வடிவமைத்தவை. நமது சமூகக் கருத்தியலில் அவை ஆற்றிய பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அணுகவேண்டியவை . ஆனால் இன்றைய வாசிப்பில் அவை அன்றைய கதைகளாகவே தோற்றம் கொள்கின்றன. அதேபோல சில கதைகளை தொடர்ந்து நீட்டி எழுதியுள்ளார் ஜெயகாந்தன். ‘மெளனம் ஒரு பாஷை ‘ என்ற கதையை விரிவாக்கி ஜெயகாந்தன் ‘ கிழக்கும் மேற்கும் ‘ என்ற கதையை எழுதியுள்ளமை உதாரணம். ‘ரிஷிபத்தினி ‘ ‘ரிஷிகுமாரன் ‘ ‘இன்னும் ஒரு வரம் ‘ போன்ற கதைகள் தொடராகவே உள்ளன. சிலகதைகளின் உள்ளார்ந்த நீட்சி வெளித்தெரியாமல் வேறு கதைகளில் தொடர்கிறது. அக்கதைகளை பிரித்துப் பார்க்க முடியாது.

ஜெயகாந்தனின் சிறந்த கதைகளில் அவரது குரலின் ஒரு தளம் அவர் எதிர்வினையாற்றும் சூழலுக்கு உரியதாக இருக்கும்போது புனைவின் போக்கில் மேலும் பல உள்ளோட்டங்கள் அவரை அறியாமலேயே குடியேறி அவை அந்தகாலகட்டத்தை , அந்த விவாதத்தளத்தை தாண்டிவிடுகின்றன. மிகச்சிறந்த உதாரணம் ‘ எங்கோ யாரோ யாருக்காகவோ ‘ . இக்கதையை ஓர் எளிய வாசகன் அந்த விபச்சாரி மீதான அனுதாபம் கலந்த சித்தரிப்பாக வாசிப்பான். அவளது குணச்சித்திரத்தை ஜெயகாந்தன் மிக நம்பகமாக , நுட்பமாக காட்டியிருப்பதாக எண்ணுவான். ஆனால்தேர்ந்த வாசகன் இரு வேறு சமூகத்தளங்களைச்சேர்ந்த மனிதர்கள் அவளுடன் கொள்ளும் உறவே இக்கதையின் மையம் என்று காண்பான். அதை சுட்டிக் காட்டவேண்டிய பொறுப்பு விமரிசகனுக்கு உண்டு. ஆனால் நம் சூழலில் துரதிருஷ்டவசமாக விமரிசகர்களே மேலும் மோசமான வாசகர்களாக இருக்கிறார்கள். இக்கதையை வேறு தருணங்களில் நான் குறிப்பிட்டு பேசியதுண்டு. அதை இங்கே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.தமிழில் விபச்சாரிகளின் உலகம் குறித்த நுட்பமான நேர்மையான, கதைகளை உருவாக்கியவர் ஜி.நாகராஜன் என்ற எண்ணம் பரவலாக உள்ளது . அது எனக்கு உடன்பாடான கருத்து அல்ல. ஜி.நாகராஜனின் வாழ்க்கை என்ற கதையை அவரது ஒவ்வொரு கதையுடனும் சேர்த்து வாசிக்கும் முதிராவாசிப்பின் விளைவு அது. ஜி நாகராஜனின் விபச்சாரிகள் அவரது சபலத்தால் உருவாக்கப்பட்டவர்கள். விபச்சாரிகளைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட கதைகளில் இக்கதையே முதன்மையானது. அடுத்தபடியாக ராஜேந்திர சோழன் எழுதிய கதைகள். [ பார்க்க: நவீனத்துவ ஒழுக்கவியல் : ஜி நாகராஜனின் படைப்புலகம் ]

விபச்சாரிகளைப்பற்றி ஏன் எழுதவேண்டும் ? உலக இலக்கியத்தில் எப்போதுமே அது ஓரு முக்கியமான கரு. ஏனெனில் நமது பாலியல் நடவடிக்கைகளின் சாரத்தை பரிசீலனை செய்ய உதவும் தருணம் விபச்சாரத்தில் உள்ளது. குடும்பம், காதல், சமூக உருவாக்கம் என காமத்தின்மீது நாம் எற்றும் அத்தனை சுமைகளும் , இரு மனிதர்களுக்கு இடையேயான உறவு என்ற அம்சம் கூட இல்லாமலாகி காமம் மட்டுமே எஞ்சும் நிலை இன்றைய கலாச்சார சூழலில் விபச்சாரம் மட்டுமே. நமது பாசாங்குகளை, நமது எல்லைகளை, நமது நம்பிக்கைகளின் அடித்தளங்களை காண உதவும் ஒரு இடம் அது. விபச்சாரத்தைப்பற்றிய ஆவணங்களை உருவாக்குதல் கலையல்ல. விபச்சாரத்தை தன் பலவீனங்களின் வெளிச்சத்தில் சித்தரித்து சுயநியாயங்களை உருவாக்கிக் கொள்ளுதலும்– ஜி நாகராஜன் செய்வது பெரும்பாலும் அதுதான் — சிறந்த கலை அல்ல. விபச்சாரியை தத்துவம் பேசவைக்கும் பகல்கனவையும் என்னால் ஏற்க முடியவில்லை– மெளனியின் குடைநிழல் , உறவு பந்தம் பாசம் போல [ பார்க்க மெளனியின் இலக்கிய இடம் எது] விபச்சாரிகளைப்பற்றிய இலக்கிய ஆக்கம் விபச்சாரியால் எழுதப்படாதபோது விபச்சாரியை அணுகின்றவனின், அக்கதையை சொல்பவனின் ஆழத்துக்குள் இறங்கிச் செல்லும்போதே முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. சாலையில் போகும் விபச்சாரியைப் பார்க்கும் ஒருவனின் கண்களை நாம் பார்க்கும் அனுபவம் போன்றது அத்தகைய படைப்பை படிப்பது.

ஜெயகாந்தனின் இக்கதையை மனைவியை இழந்த , காமத்தை ஒரு விளையாட்டுக்கு அப்பால் காணாத ஒருவர் , குடுமபஸ்தன் ஒருவர் என இருவர் அணுகும் கோணத்தில் வாசிக்கும்போது நுட்பமான உள்ளோட்டங்கள் கொண்ட கதையாக இது மாறிவிடுகிறது. அந்த விபச்சாரியையும் எளிதில் வகுத்துவிடமுடியாத ஒருத்தியாகவே நாம் காண்கிறோம். அவளுக்கு விபச்சாரத்தில் குற்ற உணர்ச்சி இல்லை. ஆனால் அதில் உள்ள கஷ்டம் காரணமாக அதிலிருந்து தப்பி விடவும் எண்ணுகிறாள். அவள் விபச்சார உறவுகளை ரசிக்கிறாள். அவளிடம் பெண்மையின் அழகுணர்வும் நேர்த்தியும் உள்ளது. மிஞ்சிய கள்ளை அவள் மணலில் குழிபறித்து ஊற்றும் இடம் அதை அழகுறக் காட்டுகிறது. என்னைப்பொறுத்தவரை இந்த இடம் மிக முக்கியமானது. ஜி.நாகராஜனின் விபச்சாரிகள் ‘பெண்களாக ‘ நமக்கு தோற்றம் அளிக்கும் இடங்களே இல்லை. அவர்கள் காமம் வழியாக மட்டுமே சொல்லப்படுகிறார்கள். இக்கதையின் விபச்சாரி மென்மையும் தாய்மையும் கொண்டபெண்தான்.ஆனாலும் அவள் விபச்சாரிதான். அவள் ‘திருந்தி ‘வாழ்வதெல்லாம் நடக்காத காரியம். தன்னை அழைத்துப்போக அவள் மன்றாடும்போது அங்கு சென்றும் வேறு ஒருவகை விபச்சாரியாக இருப்பதைப்பற்றித்தான் சொல்கிறாள்.

அவர்கள் இருவருமே தங்கள் வற்கத்துக்குரிய உதாசீனத்தை அவள்மீது காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்திருக்க முடியும் ? அவர்கள் உலகில் விபச்சாரிகளுக்கு இடமில்லை , வாசலை திறந்து விபச்சாரிகளின் உலகுக்கு வந்துபோகவே அவர்களால் முடியும். விபச்சாரத்தை ஒரு சமூக இழிவாகவும் , தனிமனித வீழ்ச்சியாகவும் சித்தரிக்கும் , நமது பரிதாபத்தையும் ரகசிய காமத்தையும் கோரும் படைப்புகளையே நாம் கண்டிருக்கிறோம். இருவேறு உலகங்களுக்கு நடுவேயுள்ள உரசலாக அதைக் காட்டும் ஜெயகாந்தனின் கதையில் முடிவேயில்லாத கேள்வி உள்ளது– ‘ ‘சரி, நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ? ‘ ‘ என. இக்கதையை வேறு எப்படி முடிக்க முடியுமென வாசகன் சிந்தித்துப் பார்க்கலாம். அதன் வழியாக நாம் வெகுதூரம் சென்றுவிடமுடியும். எல்லா கதைகளையும் இப்படி விரித்து விவாதிக்க இது இடமல்ல. ஜெயகாந்தனின் கதைகளின் முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கக் கூடிய ‘ஒழுக்கம் என்பது அறத்தின் விதியாக மாறும் இடம் எது ? ‘ என்ற வினாவுக்கு பல்வேறு தளங்களில் விடைதேடும் கதைகள் என ‘மெளனம் ஒரு பாஷை ‘ , ‘ இருளைத்தேடி ‘ ‘இறந்த காலங்கள் ‘ , ‘கோடுகளைத்தாண்டாத கோலங்கள் ‘ போன்றவற்றைச் சொல்லலாம். இந்த கதைகளிலெல்லாம் குறிப்புணர்த்தி கலையை உருவாக்க ஜெயகாந்தன் முயலவில்லை என்று மீண்டும் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஆகவே குறிப்புணர்த்தப்படுவது எது என்ற வினாவுடன் வாசிக்கும் முறை ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார் என்ற சலிப்புக்கே இட்டுச்செல்லும். இக்கதைகளின் அழகியல் அதுவல்ல. எல்லா தரப்புகளையும் சொல்லி, அவற்றை மோதவிட்டு, அப்பால் உள்ள ஒன்றை நோக்கி வாசகனை நகர்த்திவிடக் கூடியவை இவை.சொல்லப்படும் தரப்புகளை அனைத்தையும் உள்வாங்கி மேலும் தரப்புகளை உருவாக்கி முன்னகரும் வாசகனே அவற்றை அடையமுடியும்.

உதாரணமாக ‘இறந்த காலங்கள் ‘. இருவகையான வாழ்க்கைமுறைகளை இங்கே ஜெயகாந்தன் முன்வைக்கிறார். அனந்த சர்மா சராசரி ஒழுக்கநெறிகள் சராசரி பாசாங்குகள் ஆகியவற்றுடன் வாழ்பவர் . ரங்கமணி போகத்தை வெளிப்ப்டையாகவே வாழ்க்கை தர்மமாக கொண்டவர். இரு கதாபாத்திரங்களையும் அவர்கள் அந்திமகாலத்தில் சந்திக்கச்செய்து உரையாடவிட்டு அவர்கள் இருவரின் வாழ்க்கைமுறைகளின் பெறுமானத்தை அளக்கமுயல்கிறார் ஜெயகாந்தன். ஆனந்தவிகடனின் முதல் கட்ட வாசகனுக்கு இக்கதை அனந்தசர்மாவின் போலி ஒழுக்கத்தை ‘வெட்டவெளிச்ச ‘மாக்கும் கதை என்று மட்டுமே படும். கூர்ந்த வாசகனுக்கு ரங்கமணியின் ‘நேர்மை ‘ என்பது குரூரமான சுயநலத்தை மட்டுமே கொண்டது என்றும் தெளிவாகும். கோமதியின் காதலை மட்டுமல்ல அவளது வாழ்க்கையையே சர்வசாதாரணமாக உதறிவிட்டு செல்லமுடிகிறது அவரால். ரங்கமணியின் உயிர்துடிப்பு , வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு அடியில் உள்ளது அந்த இழிந்த சுயமையப்பார்வையே. நேர்மாறாக வாழ்க்கையில் நின்று அவரை மதிப்பிடும் சர்மா போலியான ஒழுக்கநெறியில், சுய ஏமாற்றுத்தனத்தில் , கோழைத்தனத்தில், சிறுமையில் உழல்கிறார். வாதாடக்கூடிய வெளிப்படையான குரலை இக்கதையெங்கும் நாம் காணலாமென்றாலும் இரு கதாபாத்திரங்களின் உள்மன ஓட்டங்கள் நுண்மையாக வெளிப்படும் பல வரிகள் இதில் உள்ளன . ‘கல்யாணமே பண்ணிக்கலியா நீ ‘ என்று கேட்கும்போது தனது குரலில் இழைவது பாராட்டுணர்வா அல்லது பரிதாப உணர்வா என்று சர்மாவாலேயே இனம்காணமுடியவில்லை என்ற சர்மாவின் தயக்கமும் சரி , யதார்த்தமாக அவர் மனைவி தலைப்பிரசவத்துக்குப் போன விஷயத்தை ரங்கமணி குறிப்பிட்டபோது சர்மா கொள்ளும் ‘சுருக் ‘ கும் சரி அத்தகையவை. அப்பட்டமானசுயநலம் மிக்க போகவெறி அல்லது போலித்தனம் இரண்டில் ஒன்றை தேர்வுசெய்யச் சொல்கிறது இக்கதை. அந்தரங்கமான நேர்மையுடன் இக்கேள்வியை எதிர்கொள்வது ஒன்றும் சுலபமல்ல என நாம் அறிவோம்.

‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ ‘, ‘கண்ணாமூச்சி ‘ ‘கோடுகளை தாண்டாத கோலங்கள் ‘ போன்ற கதைகளில் அக்கதைகள் நேரடியாக சொல்லும் உளஓட்டங்களுக்குள் நுட்பமான ஆழ்மன இயக்கங்கள் பதிவாகியுள்ளமை நம் கவனத்துக்கு உரியது. இக்கதைகளை விளக்கும் முகமாக ஜெயகாந்தன் இவற்றுக்கு உள்ளேயே பல வரிகளை எழுதியுள்ளார். உளநிகழ்வை முன்னிறுத்தும் கதைகளுக்கு அப்படி ஆசிரியன் குரல் வெளிப்படுவது ஓர் குறையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை . ஆனால் அது இக்கதைகளின் உள்ளோட்டங்களை நாம் காணமுடியாமல் செய்துவிடலாகாது. உதாரணமாக கண்ணாமூச்சி கதையில் தேவகி தன்னை எவ்வித தயக்கங்களும் இல்லாமல் உரிமையுடன் சொந்தமாக்கிக் கொள்ளும் ஓர் ஆண்மகனைத்தேடி அப்படி நடந்துகொள்வதாக அவள் வாயில் குடிகொண்டு ஆசிரியர் சொல்வதாக நமக்கு முதல் எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் தேவகியின் அந்த சுயவிளக்கத்தை , அல்லது சுய நியாயப்படுத்தலை ஓரு நுட்பமான பாவனையாகக் கொண்டால் இக்கதையில் அவளுடைய நடத்தைக்கான உளவியல் காரணங்கள் மேலும் அழுத்தம் பெறுகின்றன. அவள் தன் ஆண்களையல்ல தன்னைத்தானே தான் சோதித்துக் கொள்கிறாள் என்று தெரியவரும். அம்மனநிலையின் சிக்கல்களுக்குள் இறங்கிச் சென்று ஆராய்வது ஓர் முக்கியமான வாசிப்புப் பயணமாக இருக்கும். நாந் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ கதையை அந்த அம்மாள் சொல்வதை அப்படியே நம்பி வாசிப்பது சாதாரணமாக நிகழ்வது. ஆனால் அது அவளது சுயவிளக்கம் என்பதும் ,எந்த சுயவிளக்கமும் உரிய சுய ஏமாற்றுகளுடன் உள்மடிப்புகளுடந்தான் இருக்கும் என்ற பிரக்ஞையுடன் வாசிப்பதுதான் அக்கதைக்குரிய வாசிப்பாகும். அங்கே அவள் தன் கணவனை – ஆணின் அகங்காரத்தின் வெளிப்பாடான அறத்தை நிராகரிக்கும் பெண்குரலின் உள்ளொலிகளை நாம் கேட்கலாம்.

ஜெயகாந்தன் தமிழ் புனைவுலகுக்கு அளித்த முக்கியமான கொடை இலட்சியவாதத்தின் தீவிரமான முகத்தை உருவாக்கியதுதான் என்று முன்னரே சொன்னேன். நவீனத்துவ எதிர்மறை நோக்கும், இயல்புவாதத்தின் தகவல் துல்லியமும் நம்மை இலட்சியவாத அம்சத்தை வெறும் கற்பனாவாதமாக , மனமயக்கமாக எண்ணவே கற்பித்துள்ளன. ஆனால் ஓர் இலக்கியச் சூழலில் அதன் இன்றியமையாத அம்சமாக எப்போதுமே இலட்சியவாதம் இருந்துகொண்டே இருக்கும். மாபெரும் கனவுகளை உருவாக்கி அளிப்பதென்பது என்றுமே இலக்கியத்தின் முக்கியப்பணிகளில் ஒன்றுதான். அவ்வகையில் ஜெயகாந்தனின் இலட்சியக்கதபாத்திரங்கள் வரும் கதைகள் அனைத்துமே முக்கியமானவையே. அவற்றில் இலட்சியவாதம் ஆழ்ந்த மனக்கனிவுடன் வெளிப்படுத்தப்பட்ட சில கதைகளை முதன்மைப்படுத்தலாம் . ‘டாக்கடைக் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் ‘ என்ற கதை அதன் எளிமை காரணமாகவே என்னை கவர்வதாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. சாமிநாதபிள்ளை என்ற ‘முழுமைபெற்ற ‘ சாமியார் வரும் நான்கு கதைகளுமே முக்கியமானவை. ரிஷி பத்தினி அந்த கனிந்த மனநிலையை மட்டும் முக்கியப்படுத்தும் முதல் கதை என்பதனால் முக்கியமானது என்பது என் எண்ணம். இக்கதையை என்னால் ஆய்வுசெய்ய முடியாது, ஆனால் ஒருவகை மோகத்துடன் நான் மீண்டும் மீண்டும் படிக்கும் கதைகளில் ஒன்று இது

இத்தெரிவுகளில் நான் மீண்டும் மீண்டும் படிக்கையில் என் மனதில் கனவையோ முடியாத வினக்களையோ ஆழ்ந்த கனிவையோ உருவாக்கும் கதைகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் முக்கிய அளவுகோல் இதுவேயாகும். இலட்சியவாதமும் துறவுமனப்பான்மையும் கொண்ட கதைகளில் எப்போதுமே ஜெயகாந்தனின் சொந்த ஆளுமையின் அழுத்தமான இருப்பு உள்ளது ‘ எபோதுமே நான் என்னை காலத்தின் – எனது கதையின் எனது வாழ்க்கையின் – பற்றற்ற நாயகன் என்ற பாத்திரமாகவே சுயதரிசனம் பெற்றிருக்கிறேன் ‘ என்று ஜெயகாந்தன் சொல்லும் இடம் முக்கியமானது.

ஜெயகாந்தனின் நாவல்கள்

============================

ஜெயகாந்தனின் நாவல்கள் கூட சிறுகதைகளின் உணர்வுபூர்வ நீட்சிகளாகவே உள்ளன. நாவல்களுக்கு உரியதென நான் எப்போதுமே முன்வைக்கும் ‘தர்க்கபூர்வமாகவும் , உணர்வு பூர்வமாகவும், சித்தரிப்பினூடாவும் முழுமைநோக்கி விரியும் தன்மை ‘ கொண்ட அவரது நாவல் எதுவுமில்லை. எப்போதுமே ஒரு புள்ளியைச்சுற்றி ஒரேவகையான உணர்வுநிலையுடன் ஒரே வினாவுடன் சுழல்வதாகவே அவர்து நாவல்கள் உள்ளன. [நாவல் என்ற சொல்லை சாதாரணமாக அது அப்படி ஆசிரியரால் உத்தேசிக்கப்பட்டது என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறேன். நாவலின் இயல்புகள், சவால்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் நாவல்கள் என்று கருதும் படைப்புகள் குறைவு என்பதை என்னுடைய ‘நாவல் ‘ நூலில் விளக்கியுள்ளேன்] அதேசமயம் ஜெயகாந்தனின் சிறுகதைகளின் உள்ள சில அம்சங்களைப் பார்க்கும்போது அவர் சிறந்த நாவலாசிரியருக்கான குணங்களைக் கொண்டிருக்கிறார் என்றும் பட்டதுண்டு . கருத்துநிலைகளை பிரதிநிதித்துவம் செய்யும் கதபாத்திரங்களை உருவாக்கி விவாதங்களின் மூலமாக வாழ்க்கை குறித்த சிக்கலான ஆய்வை நிகழ்த்தும் அவரது இயல்பு நாவல்களுக்கு உரியதே.

ஜெயகாந்தன் நாவல்களில் போதிய வெற்றி பெறாது போனமைக்கு காரணங்கள் பல. முக்கியமான அகக்காரணம் அவருக்கு கரணிய முறைப்படி வரலாற்றையும் மனித மனத்தையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து ஆராயும் நோக்கு இல்லை என்பதே .அவர் எப்போதுமே அனுபவத்தின் ஒரு புள்ளிமீது உணர்ச்சிகரமாகவும் உள்ளுணர்வு சார்ந்தும் தன் மனதை செலுத்துகிறார் அவ்வளவுதான். ஒருபுள்ளியிலிருந்து அவர் விரிந்து பரவுவதில்லை என்பதனாலேயே அவர் நாவலாசியனாக ஆகவில்லை. முக்கியமான புறக்காரணம் நல்ல நாவலை எழுதத்தேவையான வடிவ போதம் அவருக்கு இருக்கவில்லை, அல்லது இருந்தாலும் அதை பயன்படுத்தும் நிலையில் அவர் இல்லை.அவரது நாவல்கள் எல்லாமே தொடர்கதையாக எழுதப்பட்டவை. அவை உடனடியாக உருவாக்கும் பாதிப்பு அவருக்கு முக்கியம் என்ற நிலையில் , தொடர்கதைகளாக பிரபல இதழ்களில் அவை எழுதப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்ற நிலையில் அவருக்கு வேறு வழி இல்லை.

ஜெயகாந்தனின் நாவல்களில் ‘ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் ‘ முதன்மையானது என்று ஏற்கனவே சொன்னேன். தன் படைப்பியக்கம் மூலம் ஜெயகாந்தன் எப்போதுமே தேடிவந்த இலட்சியப் புரட்சியாளனின் சித்திரம் முழுமைபெறும் நாவல் இது. அனைத்திலும் குழந்தைத்தனமான குதூகலத்துடன் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு ஈடுபடும் ஹென்றி அவை எதிலும் ஈடுபடாமல் விலகியிருக்கும் ஆழம் ஒன்றையும் கொண்டிருப்பதை சகஜமாக கூறிச்செல்கிறது இப்படைப்பு. கர்மத்துக்கும் மோட்சத்துக்கும் பூரண ஒத்திசைவு கூடிய ஓர் புள்ளியில் அமர்ந்திருக்கிறான் ஹென்றி. இந்நாவலைப்பற்றியும் நான் ‘டாக்கடைக் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் ‘ போலத்தான் சொல்லவேண்டியுள்ளது. அதன் எளிமையான நேரடித்தன்மையே அதன் அழகும் ஆழமும் கவற்சியும் ஆகும். எழுத்தாளனின் ஆழமான உண்மையான ஈடுபாட்டிலிருந்து உருவாகக் கூடியது இது. மிக இளம் வயதில் எனக்கு பெரும்பணம் அடங்கிய தோல்பையை சர்வசாதாரணமாக தூக்கி போட்டும் ஹென்றியின் சித்திரம் அளித்த அதே மனநிறைவை முப்பது வயதில் இயக்க ஈடுபாடுகளெல்லாம் கசந்து அமைப்புகளில் ஆழமான நம்பிக்கையிழப்புகொண்ட பிறகும் அடைந்தேன். இன்று நாற்பது வயதில் மனமயக்கங்களில்லாமல் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடியும் என்று தோன்றும்போதும் அதே மனநிறைவு ஏற்படுகிறது. இதற்கிணையான மனநிறைவை எனக்கு ‘ லே மிஸரபில்ஸ் ‘ நாவலின் ஜீன் வல் ஜின் இன்றும் அளிக்கிறான் .

‘சிலநேரங்களில் சில மனிதர்கள் ‘ மிதமிஞ்சிப் பிரபலமானதனாலேயே அந்தரங்கமான கூரிய வாசிப்புக்கு ஆளாகாமல் போன நாவல் என்பது என் எண்ணம்.அப்படி பிரபலமாகும்போது ‘தீவிர ‘ வாச்கர்கள் என தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அது உதாசீனத்தை பெறுகிறது. மேலோட்டமாக படிக்கும் பெரும்பான்மை வாசகர்கள் அதை அங்கீகரிக்கப்பட்ட பொதுவான வாசிப்புத்தடத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறார்கள். ஆகவே நல்ல இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படவேண்டிய —– அப்படி ஒன்றை கோருவது அதன் உரிமையும்கூட – பன்முக வாசிப்பை பெறாமலேயே எளிய முத்திரைகளுடன் அப்படைப்பு நம் முன் நின்று கொண்டிருக்கிறது . இக்கட்டுரையில் ஜெயகாந்தனின் நாவல்களைப்பற்றிய விரிவான வாசிப்பை நிகழ்த்த முற்படவில்லை . இக்கருத்துக்கள் என் நாவல் போன்ற நூல்களில் நான் சொல்லிச்சென்றவையே. இங்கு சில வாசிப்புச்சாத்தியக்கூறுகளை மட்டும் சொல்லவிழைகிறேன். ‘சிலநேரங்களில் சில மனிதர்கள் ‘ ல் வரும் வெங்குமாமா ஆசிரியரால் ‘ தோலுரிக்கப்படும் ‘ ஒரு கதாபாத்திரமாகவே இன்றுவரை படிக்கப்பட்டுள்ளது. அவரை அப்படி சித்திரப்படுத்தும் திரைப்பட வடிவம் அக்கோணத்தை ஆழமாக நிறுவியும் விட்டது. திரைப்படம் என்ற கலையின் எல்லை அது. ஆனால் நாவலில் வெங்குமாமா கங்காவின் கண்வழியாகவே அப்படி காட்டப்படுகிறார். அவரது சித்திரத்தில் கங்காவின் மனத்திரிபுக்கும் இடமுள்ளது , நாவலில் அவ்வாசிப்புக்குரிய எண்ணற்ற இடங்கள் உள்ளன.

‘கற்பை ‘ இழந்த ஒரு பெண்ணின் சிக்கலாகவே தொடர்ந்து அந்நாவல் படிக்கப்படுகிறது. ஆனால் ‘ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் ‘ போலன்றி அதன் முதல் தளமேகூட சிக்கலானதுதான். கங்காவின் பலவிதமான உளவியல்சிக்கல்கள் ஆன்மீகமான அலைபாய்தல்கள் அந்நாவலில் பல கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. மற்ற நாவல்களைப்போலன்றி இந்நாவலில் விவாத அம்சம் குறைவே.பெரும்பாலான விஷயங்கள் வாசகனின் ஊகத்துக்கும் கற்பனைக்குமே விடப்படுகின்றன. கங்காவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையேயான உறவின் முரண்பட்ட தன்மையை உணர்த்தும் வரிகளை மட்டும் ஓர் வாசகன் தொகுத்துக் கொண்டானானால் அவனுக்கு கிடைப்பது வேறு ஒரு நாவல். நாவலின் ஆண்கதாபாத்திரங்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் கங்காவுக்கு ஏன் அப்படி படுகிறார்கள் என்ற வினாவை வாசகன் எழுப்பிக் கொண்டால் கிடைப்பது வேறு ஒரு படைப்பு. பெண்ணை உரிமைகொண்டாடக் கூடியவர்களாக, ஆக்ரமிக்கக் கூடியவர்களாக மட்டுமே இந்நாவலில் ஆண்கள் வருகிறார்கள் என்பது என் வாசிப்பு . வெங்குமாமாவும் பிரபுவும் கணேசனும் எல்லாம் ஒரு நாணயத்தின் மாறுபட்ட பக்கங்களே. மீண்டும் மீண்டும் கங்கா ஆணிடம் ஏதோ ஒன்றை தேடி எமாந்து ஆங்காரமும் கண்ணீருமாக வெளியேறிக் கொண்டிருக்கிறாள். ஆண்களே இல்லாமல் அவள் உலகம் இயங்க முடியவில்லை. பெண்ணின் இயல்பான மறு முனையை , முழுமைப்படுத்தும் எதிர்நிலையை ஆண்களிடம் அவள் தேடியிருக்கலாம். அவள் கண்டதெல்லாம் விழுங்கத் திறந்த வாய்களையே. அஞ்சி அருவருத்து அவமானம்கொண்டு அவள் திரும்பிவந்து தன் தனிமையின் கூட்டுக்குள் அடைகிறாள்.

‘சிலநேரங்களில் சில மனிதர்கள் ‘ நம் கலாச்சாரத்தில் பெண்ணுக்கு உருவாகும் உக்கிரமான தனிமையைப்பற்றி பேசும் நாவல். என்னுடைய பார்வையில் ஆஷாபூர்ணாதேவியின் [ வங்காளி ] தொடர்நாவல்களான ‘பிரதம பிரதிசுருதி ‘ ‘ஸ்வர்ண லதா ‘ ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க நாவல் இது. தமிழில் பெண் எழுத்தாளர்கள் எவருமே இந்த தளத்தைச்சார்ந்த ஒரு படைப்பை உருவாக்கவில்லை. மீண்டும் மீண்டும் நமது பேரிலக்கியங்களும் , நவீன படைப்புகளும் பேசும் கருதான் இது. சீதை இந்த தனிமையின் மிகப்பெரிய ஆழ்படிமம். ஒருபோதும் புரிந்துகொள்ளப்படாதவள் . ஆண்களின் உலகில் சதுரங்க காயாக அலைக்கழிக்கப்பட்டவள். மண்ணின் பொறுமையும் ஆழமும் அமைதியும் கொண்டவள். கங்காவை ஜெயகாந்தன் அவள் தன் மனதில் உருவான கணத்திலேயே சீதையுடன் அடையாளம் கண்டுகொண்டாயிற்று .பல இந்தியநாவல்களின் கதாபாத்திரங்கள் அப்படி சீதையிலிருந்து பிறப்பு கொண்டவை என்பதை ஆஷாபூர்ணாதேவியின் நாவல்களை ஆய்வு செய்யும்போது பல விமரிசகர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் . கங்காவின் தனிமையையும் தேடலையும் ‘கங்கை எங்கேபோகிறாள் ? ‘ ‘சுந்தர காண்டம் ‘ ஆகிய இரு நாவல்களாக நீட்டி அவளை கங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கிறார் ஜெயகாந்தன். வேறு முடிவே இந்தியசூழலில் இந்நாவலுக்கு இருக்க முடியாது. சீதை மண்ணுக்கு திரும்பியதுபோலத்தான் கங்கா கங்கைக்கு மீள்வதும்.

பெரும் வாசகர்வட்டத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்தாலும் விமரிசகர்கள் விஷயத்தில் ஜெயகாந்தன் துரதிருஷ்டசாலிதான். மோகமுள்ளையும் இம்மூன்று நாவல்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அதை நாம் காணமுடியும். மோகமுள் தொடர்ந்து விமரிசகர்களால் பேசப்பட்டு, முக்கியப்படுத்தப்பட்டு , எப்போதுமே ஆழ்ந்த வாசிப்பை பெறும் நிலையில் உள்ளது. ஜெயகாந்தன் நாவல்கள் தற்செயலாக அவ்வாசிப்பை பெற்றால்தான் உண்டு.மோகமுள்ளின் யமுனா முழுக்கமுழுக்க ஆண்காமம் மூலமே சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம். அந்நாவலின் சரளம் கொண்ட அழகிய மொழி அதை நம் மனதில் வலுவாக நிறுவி விடுகிறது. அதைவிட யமுனாவின் அழகு, நாசுக்கும் கூர்மையும் கொண்ட பேச்சு ,ஆகியவை வாசக மனதின் உள்ளார்ந்த காமத்தை தூண்டுகின்றன. எல்லா இளம்வாசகர்களும் ஒரு வயதில் யமுனாவை காதலித்திருப்பார்கள் என்று ஒரு இலக்கிய வழக்காறு உண்டு. அந்நவலை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் அந்த மயக்கத்தைத்தாண்டி யமுனாவைப் பார்த்தால் உட்சிக்கல்கள் இல்லாத எளிய கதாபாத்திரமாகவே அவள் தெரிகிறாள். சீரான அமைதியான நதி. மாறாக கங்கா ஓடையாக உருவெடுத்து பாறைகளில் முட்டி மோதி கிளைகள் பிரிந்து தேங்கி வேகம் பெற்று ஆழ்நதியாகி அமைதிகொண்டு கடலை அடைகிறாள்.

பிரசுரவசதிக்காக மூன்று காலகட்டங்களில் எழுதப்பட்ட படைப்பு இது எனலாம். இம்மூன்று நாவல்களையும் ஒரே நாவலாக பொதுத்தலைப்பின் கீழே தொகுத்தால் [எம் எஸ் போன்ற ஒரு தேர்ந்த பிரதி மேம்படுத்துநரின் கவனமான வெட்டுதல்களுக்கு பிறகு ] தமிழில் எழுதப்பட்ட முக்கிய ஆக்கங்களில் ஒன்றாக இது அமையும் என்றே எனக்கு இப்போது படுகிறது. அப்போதும் பெரிய நாவல்களுக்கு உரிய முழுமைநோக்கி விரியும்தன்மை இல்லாத ஒற்றை ஓட்டமாக இது இருக்கும். இத்தனை விரிந்த அளவில் பேசும் நாவல் அது பேசும் தளம் சார்ந்து கரணியரீதியிலான ஒரு முழுமையை அடையவில்லை என்பதும் மாறுபட்ட பலவகை கதாபாத்திரங்கள் மற்றும் களவிவரிப்புகள் வழியாக தன் தரிசனத்தை விரிவுபடுத்தி முன்வைக்கவில்லை என்பதும் அந்நிலையிலும் முக்கியமான குறைப்பாடாகவே இருக்கும். நாவல் என்பதைவிட [ஏற்கனவே நான் நாவல் என்ற விமரிசன நூலில் குறிப்பிட்டதுபோல ] இது ஒரு நீள்கதை என்றே மதிப்பிடப்படும். ஆனால் இன்று இக்கட்டுரைக்காக் இம்மூன்று நாவல்களையும் சேர்த்துப் பார்க்கையில் இது பேசும் மையம் சார்ந்து ஆழமான வாழ்க்கைத் தரிசனத்தை உண்டு பண்ணக் கூடிய படைப்பாகவே என் பார்வைக்கு படுகிறது. நவீனத்துவ அலை ஓய்ந்து முழுமையின் சிக்கலும் , மரபின் ஆழமும் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்று , முற்றிலும் புதிய ஆழ்ந்த வாசிபையும் இந்நாவல் பெறக்கூடும். இந்நாவலைப்பற்றி பிறிதொரு தருணத்தில் விரிவாக எழுதவிருக்கிறேன்.

ஜெயகாந்தனின் இரு பிறநாவல்களை குறிப்பிடத்தக்கனவாக கருதுகிறேன். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ‘ , ‘ பாரீஸுக்குப்போ ‘. இவ்விரு நாவல்களிலும் ஜெயகாந்தனின் படைப்பாளுமை கதாபாத்திரங்களையும் கதைக்கருக்களையும் உருவகம் செய்வதில் வெற்றிகண்டுள்ளபோதிலும் இப்படைப்புகள் மெல்லமெல்ல தேய்ந்து சென்று முக்கியத்துவம் இழப்பதாகவே எனக்குபடுகிறது. உதாரணமாக ‘ பாரீஸுக்குப்போ ‘ நாவலில் மேலைப் பண்பாட்டின் சிறந்த கூறுகளையெல்லாம் தன்னுள்வாங்கிய சாரங்கன் தன் தந்தையின் பழமையை எதிர்கொள்கிறான். உணர்வுரீதியாகவும் தத்துவரீதியாகவும் அதன் பிரச்சினைகளை பேசமுற்பட்ட நாவல் மெல்ல தந்தை மகன் பிரச்சினையாக மாறி சாரங்கன் அந்த தளத்திலிருந்து வெளியேறுவதுடன் முடிந்துவிடுகிறது. ‘வாழ்க்கை அழைக்கிறது ‘ ‘காற்று வெளியினிலே ‘ போன்ற நாவல்களை ஜெயகாந்தனின் தோல்விகளாகவே நான் காண்கிறேன். முந்தையது துவக்க கட்ட சிதைவு. பின்னது இறுதிக்கட்ட சிதைவு.

ஜெயகாந்தனின் குறுநாவல்கள்

================================

ஜெயகாந்தனின் குறுநாவல்கள்தான் ஒப்புநோக்க சிறந்த வடிவம் கொண்டவை. சிறுகதைகளில் தேவையற்ற நீட்சிகளும் நாவல்களில் தேவையான விரிவாக்கம் இன்மையும் உள்ளது. நடுவே பல குறுநாவல்கள் அழகான முழுமையுடன் உள்ளன. அவரது குறுநாவல்களை முழுமையான ஆய்வுக்கு உள்ளாக்க இக்கட்டுரையில் இடமில்லை . இங்கு பேசப்பட்ட அடிப்படைகளைவைத்துப் பார்த்தால் ‘ யாருக்காக அழுதான் ? ‘ , ‘பிரளயம் ‘, ‘கருணையினால் அல்ல ‘ , ‘ரிஷிமூலம் ‘ ஆகிய குறுநாவல்களை முக்கியமான படைப்புகளாகக் கொள்ளலாம். ஜெயகாந்தனின் முதன்மையான படைப்பான ‘ விழுதுகள் ‘ கூட குறுநாவலே. ஜெயகாந்தனின் சிறந்த இலட்சியவாத கதாபாத்திரங்கள்பலவும் குறுநாவல்களில்தான் முதலில் முகம்காட்டியுள்ளன. யாருக்காக அழுதானின் சோசப்பு முக்கியமான கதாபாத்திரம் . கிறித்தவ இலட்சியவாதத்தின் உச்ச உருவகமாக அக்கதாபாத்திரத்தை வடித்திருக்கிறார் ஜெயகாந்தன். பாவத்தில் இருந்து ஆன்மசக்தியால் மீண்ட கதாபாத்திரமல்ல சோசப்பு .மாறாக தன் களங்கமின்மையினால் பாவத்தையே அறியாமல் அறியாமல் ஆன்மாவைகாத்துக் கொண்ட மனிதர். பல்வேறு அலைக்கழிப்புகள் கொண்ட தமிழ் புனைகதைக் கதாபாத்திரங்களின் மறு எல்லையாக தனித்து நிற்க திராணி கொண்ட கதாபாத்திரம். ஓங்கூர் சாமியின் சிரிப்பு போலவே உக்கிரமாக சோசப்பின் அழுமையையும் ஜெயகாந்தன் படைத்துள்ளார் . ஒரு முறை நித்ய சைதன்ய யதியிடம் இதைப்பற்றி சொன்னேன். சித்தர்மரபு கிறித்தவ மரபு ஆகிய இரண்டின் சாரத்தையும் ஜெயகாந்தன் அழகாக சொல்லிவிட்டார் என்று குறிப்பிட்டார். சிரிக்கும் சித்தனும் கண்ணீர்மல்கிய யேசுவும் நம் மனதில் ஆழப்பதிந்த பிம்பங்கள். இலட்சியவாதத்தின் அன்றாடமுகம் ஒன்றைக் காட்டும் ‘கருணையினால் அல்ல ‘ இன்னொரு முக்கிய குறுநாவல்.

‘பிரளயம் ‘ என் சொந்த வாசிப்பில் வேறுபல தளங்களை அடைந்த கதை. நேர்வாசிப்புக்கு சென்னை குடிசைப்பகுதியில் வந்த ஒரு பெருவெள்ளத்தினை சித்தரிக்கும் கதை இது. பல்வேறு கதாபாத்திரங்களின் அன்றாட வாழ்க்கை புரட்டிப்போடப்படுவதை, நெருக்கடிகளை சந்திக்கும் போது மனிதனின் சின்னத்தனமும் கம்பீரமும் கோழைத்தனமும் துணிச்சலும் வெளிப்படுவதைக் காட்டும் கதையாகவே கூட இக்கதை முக்கியமானதுதான். ஆனால் ஒரு மார்க்ஸிய முற்போக்காளரான ஜெயகாந்தனின் பார்வையில் ஒரு பிரளயம் சித்தரிக்கப்படும்போது , ஒவ்வொன்றையும் புரட்டிப்பார்க்கும் ஒரு நிகழ்வாக அது உருவகிக்கப்படும்போது அதற்கு கண்டிப்பாக வேறுபல தளங்கள் உள்ளன. இக்கத என் மனதில் அலக்ஸாண்டர் பூஷ்கினின் வெண்கலக்குதிரைவீரன் என்ற கவிதைகதையுடன் இணைந்துகொண்டது. அதில் பூஷ்கின் பெருவெள்ளத்தை புரட்சியாக உருவகிக்கிறார். அக்கவிதையின் வெள்ளத்தை போல்ஷவிக் புரட்சியுடன் இணைத்து உருவகிக்கும் ஒரு பகுதி என் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ நாவலில் உள்ளது. ஜெயகாந்தனின் பிரளயம் அனைத்தையும் புரட்டிப்போடுகிறது. இலவசமாக கிடைப்பதை உரிமையாக எண்ணும் கீழ்மைக்கு அது மக்களைக் கொண்டு செல்வதை கூர்ந்து பார்க்கவேண்டும். நெருக்கடிகளில் சிலர் அசாதாரணமான ஆற்றலை வெளிப்படுத்த பிறர் ஒழுக்கில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அனைத்தையும் விட முக்கியமாக அடிப்படையான மனநிலைகள் எதுவுமே மாறவுமில்லை.

ஜெயகாந்தனின் குறுநாவல்களில் மிகவும் தனித்து நிற்கும் படைப்பு , அதிகமாக பேசப்பட்ட படைப்பு , ரிஷிமூலம். தினமணியில் இதைபிரசுரித்தபோது வாசகர்கள் ஆபாசமான ஆக்கம் என்று கடுமையாக கண்டித்தார்கள். ஆசிரியர் சாவி மன்னிப்பு கோரி இனிமேல் இம்மாதிரியான ஆக்கங்கள் பிரசுரமாகாது என்று வாக்குறுதி அளித்தார். புஷ்பா தங்கத்துரையின் சிவப்பு விளக்கு எரிந்த கதைகள் பரபரப்பாக வந்துகொண்டிருந்த காலம் அது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இத்தனைக்கும் சாவி இக்கதையை கடுமையாம வெட்டித்தான் பிரசுரித்தார். இக்கதையை வெட்டியதை விமரிசகரான வெங்கட் சாமிநாதன் கடுமையான கண்டித்து எழுத அதற்கு அசோகமித்திரன் பதிலளிக்க கடுமையான விவாதம் சிற்றிதழ்களிலும் நடந்தது. இக்கதையைப்பற்றிய பிற்கால விமரிசனங்களிலெல்லாமே ஜெயகாந்தன் மார்க்ஸியத்திலிருந்து ஃப்ராய்டியத்துக்கு போனது இதன் வழியாகவே என்ற கோணம் காணப்படுகிறது. ஃப்ராய்டிய தாக்கம் ஜெயகாந்தனில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமலில்லை. அக்கதாபாத்திரத்தை ஃப்ராய்டிய அடிப்படையில் அமைத்தாலும் அவனை மனநோயாளியாக ஆக்கவில்லை என்று ஜெயகாந்தன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால் இக்கதையை அப்படி குறுக்குவது சரியல்ல. இக்கதை ஈடிஃபஸ் உளச்சிக்கலின் கதைவடிவமல்ல. ரிஷிமூலம் என்ற தலைப்பின் மூலம் ஜெயகாந்தனே இதை தெளிவும்படுத்தியுள்ளார் .

காமம் தாய்மையுடன் தவிர்க்கமுடியாதபடி உயிரியல் தொடர்பு கொண்ட ஒன்று . மனித ஆழ்மனத்தில் அவை இரண்டும் கலந்து வினோதமான படிமங்களை சமைக்கின்றன. அவற்றை அள்ளுவதும் தொகுப்பதும் எளிய விஷயமல்ல. நமது வசைகளில், பழங்குடி ஐதீகங்களில், நாட்டார் மரபுக் கதைகளில், பேரிலக்கியங்களில் தாயும்காமமும் கலந்த படிமங்கள் பலவிதமான வண்ணங்களும் வடிவங்களும்கொண்டு வெளிப்பட்டபடியே இருக்கின்றன. பிரபலமான இரு உதாரணங்கள் பிள்ளையாரின் புராணம், அருணகிரிநாதரின் வரலாறு. இந்த ஆழ்மனநிலையை குறிப்பிட்ட விதத்தில் சித்தாந்தப்படுத்தியவர்தான் ஃப்ராய்ட் . ஃப்ராய்டுக்கு முன்னும்பின்னும் அது தன் முடிவற்ற சாத்தியங்களுடன் படைப்புகளில் வந்தபடியேதான் உள்ளது. ரிஷிமூலம் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் ராஜாராமன் நிலைகுலையும்போதுகூட மாமி அதை பெரிதுபடுத்தாமல் இருக்கிறாள் என்பதுதான். ‘குழந்தை தன் மார்பை அள்ளுவது போல ‘ என்பதற்கு அப்பால் அவள் அதை பொருட்படுத்தவில்லை . ரிஷிமூலம் காமத்தைப்பற்றிய கதையல்ல, அதை தாண்டி மீள்வது குறித்த கதை. தாய்மைமூலம் சாதாரணமாக மாமி கடந்த தூரத்தைத்தான் கங்கைகரையிலும் தத்துவங்களிஉம் அலைந்து ராஜாராமன் தாண்டமுடிகிறது எந்பதே அக்கதை எனக்களித்த ஆழம். நுட்பமான உள்ளோட்டங்கள் பலவற்றை அக்கதையின் உளநிகழ்வுகளுடன் தன்னை தொடர்பு படுத்தும் வாசகன் அறியமுடியும். இன்னொருவகையில் தமிழ் மத, ஆன்மிக மையங்களுடன் ஆழமான மோதலை நிகழ்த்தும் கதை இது. கடந்த பல நூற்றாண்டுகளாகவே அன்னைவழிபாடு ஆழ வேரூன்றிய மண் இது. தாய்மையின் பலதளங்களை தொட்டு பேசும் பெரும்படைப்புகள் நமது சூழலில் உள்ளன. அப்படைப்புகள் உருவாக்கும் மனநிலையுடன் இக்கதையை தொடர்புபடுத்தும் வாசகன் ஆன்மீகமான ஓர் மறுபரிசீலனைக்கு தன்னை கொண்டு செல்லமுடியும். காமத்திலிருந்து மீட்பு விரக்தியினூடாக அல்ல கனிவினூடாக மட்டுமே சாத்தியம் என்றுதானே ஜெயகாந்தன் சொல்ல முடியும் ?

கோகிலா என்ன செய்துவிட்டாள், பிரம்மோபதேசம் போன்ற ஜெயகாந்தன் கதைகள் அவரது படைப்புலகம் முழுக்க தொடர்த தேடலின் பல்வேறு தருணங்களை முன்வைப்பவை என்ற முறையில் முக்கியமானவை. சினிமாவுக்குப் போன சித்தாளு, பாவம் இவளொரு பாப்பாத்தி போன்ற கதைகளில் ஜெயகாந்தனின் புனைவு அதன் குறைந்தபட்ச சமநிலையைக் கூட இழந்து வெற்றுக் கோஷமாக சுருங்கிவிடுகிறது.

ஜெயகாந்தனின் சரிவுகள், பலவீனங்கள்

========================================

எந்த படைப்பாளியிலும் அவனது தனித்தன்மை என்று சொல்லப்படுவது எதுவோ அதுதான் அவரது எல்லைகளை , பலவீனங்களை உருவாக்கும் அம்சமாகவும் இருக்கும். இது என் தனிப்பட்ட நம்பிக்கை . ஒரு படைப்பாளியாக ஜெயகாந்தனின் முக்கியமான பலவீனமே அவரால் மனிதனை வரலாற்றில் வைத்துப் பார்க்கமுடியவில்லை என்பதே. அவரது கதாபாத்திரங்கள் வலிமைமிக்கவர்களாக இருக்கிறார்கள், கதைகள் வரலாற்றின் ஒருபகுதியாக நின்று ஒட்டுமொத்த வரலாற்றையும் சுட்டும் தன்மையுடன் இல்லை. எந்த கதையிலும் கண்டிப்பாக வரலாற்றின் இயல்பான நீட்சி இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் .நான் இங்கு சொல்வது அப்படைப்பின் பின்னால் உள்ள ஆசிரியனின் வரலாற்றுவாத நோக்கு மூலம் உருவாகும் வரலாற்றுத்தன்மையையே. உதாரணமாக தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகனில் வரும் தோட்டிகள் விரிவான ஒரு வரலாற்றுப் பின்னணியைநோக்கி நம்மை செலுத்திக் கொண்டிருக்கிரார்கள் . ஜெயகாந்தனின் அம்மாசிக்கிழவனுக்கு [ ஒரு பகல்நேர பாஸஞ்சர் வண்டியில் ] அப்படி ஒரு இயல்பே இல்லை. ஜெயகாந்தனின் தார்மீக உணர்வில் , இலட்சியவாத நோக்கில் இருந்து உருவாகி வரும் ஒரு கதாபாத்திரம் அது. அதன் தனித்தன்மையே அதன் வலிமை, அதற்கு பிரதிநிதித்துவ குணமே இல்லை.

ஜெயகாந்தனின் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களும் அவற்றின் அசாதாரணமான தனித்தன்மையால் நம் மனதில் இடம் பெறுபவையே. அத்தனித்தன்மை அவரால் மிதமிஞ்சி அழுத்தப்படும் தருணங்கள் அதிகம். அக்கதாபாத்திரங்கள் சமூகத்தை எதிர்கொள்ளும்போது வாசாலம் கொள்ளுவதும் அவர்கதைகளில் காணலாம் .இப்படிச் சொல்லலாம், மொத்தையான கும்பலாக இருந்த தமிழ்ச்சூழலை நோக்கி அழுத்தமான தனிமனித அடையாளத்தை முன்வைத்துப் பேசிய படைப்பாளி ஜெயகாந்தன். ‘நான் தனிமனிதன், சுயமான எண்ணங்களும் தேர்வுகளும் உரிமைகளும் கொண்டவன்! ‘ என்று ஒரு காலகட்டத்து இலக்கியவாசகனை எண்ணச்செய்தார் என்பதே அவர்து சாதனை. அத்தனிதன்மையை ஒரு திட்டவட்டமான தரப்பாக அழுத்துவதன் மூலம் தனிமனிதனின் வரலாற்று இருப்பை கிட்டத்தட்ட இல்லாமல்செய்துவிட்டார் என்பதே அவரது பலவீனம்.

ஜெயகாந்தனின் இன்னொரு முக்கியமான பலவீனம், இன்று அவர் கதைகளில் கணிசமானவற்றை கீழே வீழ்த்திவிட்ட கூறு , அவர் மீதான இன்றைய விமரிசனங்களுக்கெல்லாம் அடிப்படை , அவரது அதீதமான சமகாலத்தன்மைதான். படைப்பை ஒரு நாடகம் எனலாம். மேடையில் நடிப்பவன் அரங்கை சற்றும் பொருட்படுத்தாமலிருக்கலாம். ஆனாலும் அரங்கு அவனை மெளனமாக வழிநடத்துகிறது. நல்ல வாசகத் தொடர்பு உள்ள எழுத்தாளனில் அக்காலகட்டத்தின் நேரடிப்பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். இப்பாதிப்பு கருத்து ரீதியாகவும் , அழகியல் [ முக்கியமாக வடிவம் ] ரீதியாகவும் , பிரச்சினைக்களங்கள் சார்ந்தும் மூன்று தளங்களில் அமைகிறது. முந்தைய இரண்டும் அதிகமான வாசக தொடர்பு இல்லாத எழுத்தாளர்களிடமும் வலுவாக காணப்படுகிறது. உதாரணமாக பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களிடம் ஃப்ராய்டியம் போன்ற மேலை கருத்துக்களின் நேரடியான பாதிப்பு இருப்பதைக் காணலாம். அறுபதுகளின் கதைகளை விட அதிகமாக எழுபதுகளின் கதைகளில் காஃப்கா ,காம்யூ, போன்றவர்களின் [நவீனத்துவ] வடிவம் பாதித்திருப்பதைக் காணலாம். வாசகதொடர்பு அதிகமாக உள்ள எழுத்தாளர்களில் சமகாலப்பிரச்சினைகள் , கொந்தளிப்புகள் நேரடியாக பாதிப்பு செலுத்திருக்கும். சிறந்த நடிப்பு என்பது முற்றாக ரசிகர்களை மறந்தோ , முற்றாக ரசிகர்களுக்கு பணிந்தோ நிகழ்வதல்ல. இருதரப்பும் சேர்ந்து உருவாக்கி எடுக்கும் ஓன்று அது.

பெரும்பாலான விஷயங்களில் நான் சமநிலையையே என் நிலைப்பாடாக சொல்வதுண்டு. எழுத்தாளனின் சமகால ஈடுபாட்டின் எல்லை என்ன ? சமகால ஈடுபாடே இல்லாத எழுத்தாளனின் கலை ஒரு இலக்கியச்சூழலில் விதிவிலக்காக, தனி உலகமாக நின்றுகொண்டிருக்கும். அதன் பாதிப்பே ஓர் அடிக்குறிப்பு என்ற நிலையில் மட்டுமே — மெளனி, நகுலனின் எழுத்துக்கள் சிறந்த உதாரணம். சமகால ஈடுபாடுகள் மட்டுமே கொண்ட இலக்கியத்துக்கு எழுத்துக்கு இதழியல் எழுத்துகளுக்கு அப்பால் மதிப்பில்லை . இரண்டுக்கும் நடுவே ஓர் இடம் நல்ல இலக்கியத்துக்கு உரியது. சமகால பிரச்சினைகளில் ஈடுபடும் எழுத்தாளனின் அப்பிரச்சினைகளை தன் ஆளுமைக்குள் இழுத்துக்கொண்டு , தன் பிரச்சினைகளாக அவற்றை மாற்றி , தன் சுயத்தின் வெளிப்பாடாக அவற்றை முன்வைக்கவேண்டும். என் முன் உள்ள சிறந்த உதாரணம் வைக்கம் முகம்மது பஷீர் மற்றும் புதுமைப்பித்தன். சமகால அரசியல் , சமூகவியல் அலைகள் பலவற்றை நாம் பஷீரிலும் புதுமைப்பித்தனிலும் காணலாம். ஆனால் அவையெல்லாம் அப்பிரச்சினைகளை மட்டும் நமக்கு காட்டுவதில்லை பஷீரையும் புதுமைப்பித்தனையும் சேர்த்துத்தான் காட்டுகின்றன. இது ஏன் முக்கியமென்றால் பிரச்சினைகள் அவற்றின் காலகட்டத்தை தாண்டியதும் சிறுத்துப்போக ஆரம்பிக்கும் . அப்பிரச்சினைகள் சார்ந்த எழுத்துக்களும் வெறும் வரலாற்றுப் பதிவுகளாக ஆகும். அப்படைப்புகளில் உள்ள எழுத்தாளனின் ஆளுமைக்கூறு அப்படி காலாவதியாவதில்லை. அது நம்முடன் அந்தரங்கமாக உரையாடியபடியே இருக்கும். அதற்காக சமகாலப்பிரச்சினைகள் அனைத்திலுமே எழுத்தாளன் தலையிட்டிருக்கவேண்டுமென்று சொல்லவரவில்லை .புதுமைப்பித்தனுக்கு சமகால சாதிப்பிரச்சினை முக்கியமாக பட்டது, சுதந்திரப்போராட்டம் கவனத்துக்கு வரவேயில்லை. எழுத்தாளனின் தெரிவு அவனது ஆளுமை, அவனது தேடல் சம்பந்தப்பட்ட ஒன்று.

இந்த விஷயத்தில் ஜெயகாந்தன் பலசமயம் மேடைக்கு பக்கமாக நகர்ந்துவிடுகிறார் என்று அவரது கதைகள் காட்டுகின்றன. எம் வேதசகாயகுமார் குறிப்பிடுவதைப்போல அவர் வாசகனைக் கவர்வதற்காகவே எழுதினார் என்று நான் எண்ணவில்லை. அவர் கதைக்கருக்களை தேர்வு செய்த விதத்தில் வாசகனை கவரும் நோக்கம் எப்போதுமே இருந்தது இல்லை என்பதே என் எண்ணம். தமிழ் வாசகனின் எக்காலத்துக்கும் உரிய கரு ஆண்பெண் உறவும் குடும்பமும்தான் . ஜெயகாந்தன் தன் கதைகளில் அத்திசை நோக்கி செல்லவில்லை. ஆரம்பம் முதல் அவரது தேடல்கள் மரபுக்கும் நவீனகாலகட்டத்துக்குமான உறவைச்சார்ந்தே இருந்தன. மரபின் மொத்தைப்பரப்பிலிருந்து தனிமனிதனை வெட்டி எடுப்பது, அவனுக்கான ஒழுக்கங்களை கண்டடைவது என. அக்கினிபிரவேசம், அந்தரங்கம் புனிதமானது சுயதரிசனம், பிரம்மோபதேசம் போன்ற கதைகளின் கருக்கள் அப்படிப்பட்டவைதான். ஆனால் அக்கதைகளை முன்வைக்கும் விதத்தில் தன் ஆளுமையின் வட்டத்தை விட்டு வெலுவாக நகர்ந்து வாசகர்களின் வட்டத்துக்குள் சென்றுவிட்டிருக்கிறார் . கதைகளை விளக்குவது , மையக்கருவை சவால்விடும் தோரணையில் அழுத்தி முன்வைப்பது, கதாபாத்திரங்களை உச்சகட்டத் தீவிரத்துடன் காட்டுவது போன்றவை அக்கதைகளில் நிகழ்ந்துவிடுகின்றன. அவ்வம்சங்களைமீறி எக்கதைகளில் அவரது ஆழ்மனம் தன்னிச்சையான உபரி நகர்வை நிகழ்த்தியிருக்கிறதோ அவையே அவரது நல்ல ஆக்கங்களாக உள்ளன.

வாசகர்களில் கொந்தளிப்பை உருவாக்கிய ஜெயகாந்தன் கதைகள் பல – உதாரணமாக அக்கினிப்பிரவேசம் , சுயதரிசனம், பிரம்மோபதேசம் , அந்தரங்கம் புனிதமானது, ஒரு பகல்நேரப் பாஸஞ்சர் வண்டியில் போன்றவை இன்று தங்கள் நெருப்பை இழந்து பின்னகர்ந்துவிட்டிருப்பது இதனாலேயே .இவை நின்றுபேசிய பற்றச்சினைக்களங்களுக்கு அப்பால் நகர இவற்றால் முடியாமைக்குக் காரணம் இவற்றுள் உள்ள ஜெயகாந்தனின் ஆளுமை வலுவாக இல்லை என்பதே. உதாரணமாக சுயதரிசனம் . தெரியாத மந்திரத்தை சொல்லி வாழ்வதனால் என்ன பயன் என்ற வினாவை அன்றைய வாசகனை நோக்கி எழுப்புவதே அதன் பணி, அங்கே அது நின்றுவிடுகிறது . ஜெயகாந்தன் அக்கேள்வியை தனக்கும் கேட்டுக் கொண்டிருப்பாரானால் சடங்குக்கும் நம்பிக்கைக்கும் அப்பால் உள்ள ஆன்மீக அம்சத்தையும் அக்கதை சென்று தொட்டிருக்கும். குருபீடம் போன்ற ஒரு படைப்பாக ஆகியிருக்கும்.

அழகியல் ரீதியான இன்னொரு முக்கிய குறைபாடும் ஜெயகாந்தனில் உள்ளது. அவர் தன் கதைகளின் வடிவத்தையும் மொழியையும் செப்பனிடுவது குறித்து குறைந்தபட்ச அக்கறைகூட காட்டியவரல்ல. அவரது கதைகள் எதையுமே அவர் மீண்டும் எழுதியதில்லை என்றே நான் அவர் சொல்லி கேள்விப்பட்டேன். மீண்டும் படித்துப்பார்க்கவே முடியாது என்றார் . படைப்பு ஒருபோதும் ஜோடனையல்ல, தன்னிச்சையான வெளிப்பாடுதான். எழுத்தாளனை மீறி அது வெளிப்படும்போதே, எழுத்தாளன் திட்டமிடாததும் அவனே அறியாததுமான விஷயங்கள் வெளிப்படும்போதே அது ஆழம் கொள்கிறது .ஆனால் தன்னிச்சையான வெளிப்பாடுக்கு பல விதமான குறைகள் உண்டு.என் அனுபவத்தில் கீழ்கண்டவற்றை குறிப்பிடலாம் அ] அப்படைப்பாளியின் அந்தரங்கமான மனஓட்டத்தை சேர்ந்த சில பழகிய சொல்லாட்சிகள், படிமங்கள் தொடர்ந்து வெளிப்படுதல். அதாவது புதியவற்றைக் கண்டுபிடிக்கமுடியாதபோது மனம் வழக்கமான ஒரு சொல்லாட்சியையோ படிமத்தையோ பயன்படுத்திவிடுகிறது. ஆ] நுட்பமாகவும் பூடகமாகவும் அகமனம் வெளிப்பட்டுவிட்ட பிறகு அதை அடையாளம்கண்டுகொண்ட போதமனம் பரபரப்படைந்து அதை மேலும் விளக்க தர்க்கபூர்வமாக முனைவது இ] படைப்பின் சில கூறுகள் மீதான எழுத்தாளனின் தனிப்பட்ட பற்று காரணமாக அவை அழுத்தம் பெற்று படைப்பின் சமநிலை குலைவது. ஈ] படித்தும் கேட்டும் அறிந்த பிற எழுத்தாளனின் படிமங்களும் கருத்துக்களும் நீண்டகாலம் மனதில் கிடந்து ஊறியமையினாலேயே நம்முடையனவாக மாறி வெளிப்பட்டுவிடுவது.

இக்குறைகளைக் களைய கண்டிப்பாக இலக்கியப்படைப்புகள் ஒரு குறிப்பிட்ட கால , மன இடைவெளிக்கு பிறகு மீண்டும் படிக்கப்பட்டு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். ஓர் எழுத்தாளன் தான் எழுதியதை தானே மீண்டும் மீண்டும் படிப்பது மிக அவசியம். தன் மொழிக்குறைகளை அது அவனுக்கு அடையாளம்காட்டும். மிதமிஞ்சிவிட்ட இடங்களை சுட்டிக் காட்டும். ஜெயகாந்தனின் படைப்புகளில் முதல் மூன்று குறைபாடுகளையும் சாதாரணமாக காணமுடிகிறது. உதாரணமாக நேரடியாக வியப்பை , கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் ஒரே சொற்ரொடர்களையே பயன்படுத்துகிறார் [ஓ அது ஒரு காலம்!] அக்கினிப்பிரவேசம் கதையில் கதையைமீறி சொல்லிக் கொண்டே செல்கிறார். தனித்துவம் கொண்ட கதாபாத்திரங்களிடம் அதீதமான வாசாலத்தை ஏற்றிவிடுகிறார். தன் கதைத்தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ள அவர் எப்போதுமே முயன்றதில்லை. அதன் பலவீனங்களை அவர் ஆக்கங்கள் காட்டியபடியே உள்ளன.

கடைசியாக ஜெயகாந்தனின் முதன்மையான குறையைச் சொல்ல விரும்புகிறேன். அவரது ஆளுமையின் அடிப்படை ஒன்றுடன் தொடர்புள்ளது இது. அவரது கருத்துக்களை அவரது உணர்ச்சிகளே நிர்ணயிக்கின்றன. அவ்வுணர்ச்சிகள்மீது அவருக்கு கட்டுப்பாடே இல்லை. ஒரு புள்ளிமீதான மிதமிஞ்சிய ஈடுபாடு, உத்வேகம் ஆகியவையே அவரது வெளிப்பாட்டின் தோற்றுவாய். எழுத்துக்கு தன்னை அவர் முழுமையாக ஒப்புக் கொடுத்துவிடுகிறார். கண்டிப்பாக நவீனத்துவ அழகியல் அல்லாதழழகியல் முறைகளில் இது ஒரு சாதகமான அம்சம்தான். தன்னை ஓர் ஊடகமாக ஆக்கிக் கொள்ளுதல். படைப்பு தன் வழியாக நிகழ அனுமதித்தல். ஆனால் அப்படி ஆட்கொள்வது படைப்பியக்கத்தின் ஆன்மீகவேகம் அல்லாமல் வெறும் உணர்ச்சிவேகமாக இருந்தால் அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும். கணிசமான ஜெயகாந்தன் கதைகளில் எழுதும்போது எழுத்தே தூண்டிவிடும் மிகையுணர்ச்சிக்கு ஆளாகி அவர் நிலையழிந்திருக்க காண்கிறோம். படைப்பூக்கம் கொண்ட நிலையழிதல் மொழி மற்றும் தர்க்கத்தின் புறஒழுங்கினை சிதறடித்துக் கொண்டு தனக்குரிய தர்க்கமொன்றை உருவாக்கிக் கொள்ளும் . சிறந்த கற்பனாவாதக் கவிதைகளில் அதன் உச்ச சாத்தியங்களைக் காணலாம். உணர்ச்சிவேகம் சார்ந்த நிலையழிதல் ஒற்றை தர்க்கத்தில் அதீதமாக சீறி வெளிப்படுகிறது. ஜெயகாந்தனின் சுயதரிசனம் போன்ற கதைகளின் இறுதியில் இதைக் காணலாம்.

ஜெயகாந்தனின் இந்த கட்டுப்பாடின்மைக்கு அவருக்கு கரணியஆய்வுநோக்கு இல்லை என்பதே காரணம் என்று படுகிறது. கரணியம் சார்ந்த தருக்கம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கடிவாளமாகவும் நமது வெளிப்பாடுகளுக்கு திட்டவட்டமான சட்டகமாகவும் செயல்படுகிறது. அதைவிட மேலோட்டமான புரிதல்கள் நம்மை ஆட்கொள்ளாமலிருக்கச் செய்கிறது அது. ஜெயகாந்தன் அதீத உணர்ச்சிவேகத்துடன் கருத்துக்களை எதிர்கொண்டதன் விபரீதமான விளைவு என நான் கருதுவது ‘ ஜயஜய சங்கர ‘ என்ற குறுநாவலை. சங்கர அத்வைதத்தின் உச்சகட்ட ஒருமைத்தரிசனத்திலும் , அதில் உள்ளடங்கியுள்ள சமத்துவ அடிப்படையிலும் ஜெயகாந்தன் உத்வேகம் கொண்டது அவரது இயல்புக்கு ஏற்றதே. விவேகானந்தரிலும் நாராயணகுருவிலும் செயல்பட்டது அந்த அத்வைதமே. அதை பண்டைய இந்திய முற்போக்கு தரிசனங்களில் முக்கியமானதென்றே இ.எம் எஸ் போன்ற மார்க்ஸிய விமரிசகர்களும் கருதுகிறார்கள் என்று கண்டோம். ஆனால் ஜெயகாந்தன் அதை சங்கரமடங்களின் பழைமைவாதத்தில் , சடங்குவாதத்தில் அடையாளம் கண்டுகொண்டது பெரும்பிழை.

இது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல . விவேகானந்தரும் நாராயணகுருவும் சங்கரமடங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அவர்கள் முன்வைத்த கருத்தியல் மாற்றங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அவர்கள் உயிர்வாழ்ந்தபோதும் , இன்றுவரையிலும் சங்கர மடங்கள் இருந்துவந்துள்ளன. ஒருமைக்கு எதிராக பன்மையை, தூய அறிவுக்கு எதிராக சடங்குகளை, சமத்துவத்துக்கு எதிராக சாதியத்தை முன்வைக்கும் சங்கர மடங்களின் கருத்தியல் அத்வைதத்துக்கு நேர் எதிரானது. இந்தியாவின் அனைத்து பிற்போக்கு எண்ணங்களும் உறைந்துகூடிய பழைமைவாத மையம் அது. தன் எழுத்துக்காலம் முழுக்க ஜெயகாந்தன் எதை எதிர்த்துவந்தாரோ அதன் குறியீடு. ஓங்கூர் சாமிக்கு சங்கர மடத்தில் என்ன இடமிருக்க முடியும் ? ஓங்கூர் சாமி எதையெல்லாம் விட்டு விலகினாரோ அதையெல்லாம் குவித்து செய்யப்பட்டதல்லவா அதுரங்கே ஜெயகாந்தனுக்கு என்ன இடம் ?

வெறும் உணர்ச்சிப் பாய்ச்சலினால் சங்கரமடத்தை அத்வைத விளைநிலமாக உருவகித்து ‘ஜயஜய சங்கர ‘ குறுநாவலை ஜெயகாந்தன் எழுதினார். அதில் அவரது புனைவின் திறன் முழுக்க குவிந்தமையினால் அசாதாரணமான இலட்சியவாதக் களமாக , வாசக மனதை கவர்வதாகவே அது அமைந்துள்ளது. ஆனால் அக்கதையின் உள்ளார்ந்த ஓட்டை ஜெயகாந்தனுக்கே உள்ளூரத்தெரியும் என்ற எண்ணம் ஏறபடுகிறது . தன் இலட்சியவாதக் கதாபாத்திரங்கள் அனைத்தையுமே அக்களத்தில் குவித்து அதற்கு மேலும் வலுவேற்ற அவர் செய்த முயற்சியின் விளைவே அதை ஒரு நாவலாக வளர்த்தெடுத்தது. ஜெயகாந்தனின் புனைகதை உலகில் பிராமணிீயம் சார்ந்த ஒரு மோகம் எப்போதுமே உள்ளது . அவரால் வைதீக தரிசனமரபின் கவித்துவத்தையும் புரோகித மரபின் லெளகீகச்சிறுமையையும் கரணிய ரீதியாக பிரித்தறிய முடியவில்லை . ‘அசதோமா சத் கமய: ‘ ஆதி கோஷத்தின் கவித்துவத்துக்கும் அதைச்சொல்லி சந்தியாவந்தனம் செய்யும் புரோகிதனின் தொழிலுக்கும் இடையே இரு துருவங்களுக்கு இடையே உள்ள தூரம் . பிறிதை நிராகரிக்காமல் முன்னதை அங்கீகரிக்க நம்மால் முடியாது. ஜெயகாந்தன் இப்பிரிவினையை நிகழ்த்திக் கொள்ளவில்லை .

ஜெயகாந்தன் ஒட்டுமொத்தமாக……

===============================

ஜெயகாந்தனை இப்படித் தொகுத்துக் கொள்வேன். நம் சூழலுக்கு நேராக ஓர் இலக்கியவாதியாக அழுத்தமாக எதிர்வினையாற்றியவர். சூழலின் சிறுமைகளுடன் சமரசம் செய்யாமல் நின்ற ஆளுமை. மொத்தையான மனிதப்பரப்பின் உறுப்புகளாக இருந்த நம் வாசகர்களிடம் தனிமனிதர்களாக அவர்களைக் கண்டு உரையாடியவர் , அவர்கள அப்படி எண்ணச்செய்தவர். இந்தியமுற்போக்கு இயக்கத்தை அதன் உண்மையான ஆழத்துடன் புரிந்துகொண்ட படைப்பாளி .வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் முன்னகர்வுக்கான, நன்மைக்கான துடிப்புடன், அந்த ஆன்மீகமான எழுச்சியுடன் மார்க்ஸியமுற்போக்குத் தரப்பை இணைத்தவர். அதன் இன்றியமையாத நீட்சியாக முற்போக்கியக்கங்களைக் கண்டவர். முற்போக்கு அரசியலின் ஆன்மீக சாரத்தை துலங்கச்செய்தவர். விரிவான வரலாற்றுப்பார்வையுடன் பிரச்சிைனைகளை அணுகாமையினால் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் தன் அழுத்தமான ஆக்கங்களை உருவாக்கியவர். பல்வேறு கருத்துநிலைகள், உணர்ச்சிமுனைகள் ஆகியவற்றுக்கிடையேயான மோதல்கள் விவாதங்கள் மூலம் தன் படைப்புகளை முன்னகர்த்தி அவை நின்றுவிடும் எல்லைக்கு அப்பால் உள்ளுணர்வால் நகர்வதன் மூலம் சொல்லப்பட்டாத ஆழ்ங்களை அடையும் சிறந்த படைப்புகளை ஆக்கியவர். வெளிப்பாட்டுமுறையில் பொதுத்தருக்கத்தை கடைப்பிடிப்பவர் என்றாலும் தன் கருக்களை உணர்ச்சிகரமாகவும், உள்ளுணர்வு சார்ந்தும் மட்டும் அணுகியவர். கரணிய ரீதியான ஆய்வு முறையில் நம்பிக்கையும் அது சார்ந்த பயிற்சியில் ஆர்வமும் இல்லாதவர். தன் காலகட்டத்துக்குரிய உணர்ச்சி வேகங்களுடனும் விவாதங்களுடனும் தன்னை மிதமிஞ்சி சம்பந்தப்படுத்திக் கொண்டமையினால் தன் அக ஆளுமை வெளிப்படாந்தும் தற்காலிகத்தன்மை மேலோங்கியதுமான படைப்புகளை அதிகம் எழுத நேர்ந்தவர். இலக்கியப்பயிற்சியற்ற வாசகர்களை முன்னிலை ஆக்கியதனால் பல படைப்புகளில் விளக்கங்கள், மிகையுணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி கலையின் நேர்த்தியை இழந்தவர். உணர்ச்சிகரமான அணுகுமுறையினால் சில படைப்புகளில் பிழைபட்ட நிலைபாடுகளை வெளிப்படுத்தியவர்.

நவீனத்துவம் மனிதனில் நம்பிக்கை இழந்த அழகியலைக் கொண்டது. மொழியின் வடிவத்தின் உச்சகட்ட நேர்த்தியே இலக்கியக்கலையின் உன்னத நோக்கம் என்று எண்ணியது . அதன் அழகியலுக்கு வெளியே நிற்பவை ஜெயகாந்தனின் கதைகள் . மனிதாபிமானத்தை அவை சாரமாகக் கொண்டிருக்கின்றன.

இலக்கியத்தில் உணர்வுகள், கருத்துக்கள் ஆகிய தளங்களுக்கு அப்பால் உன்னதம்[ sublime] என்று ஒன்று உண்டு . அறம் சார்ந்த ஆவேசமாக, முழுமை நோக்கி மனம் விரியும் உத்வேகமாக, ஒவ்வொன்றையும் ஒரேகணம் விளக்கிவிடும் ஓர் அக வெளிச்சமாக, அனைத்தையும் தழுவி விரியும் மாபெரும் கனவாக இது இலக்கியப்படைப்புகளில் அடையாளப்படுத்தப் படுகிறது . அதையே படைப்பின் ஆன்மீகஉச்சம் என்று நான் சொல்லி வருகிறேன். [மதம் ,கடவுள், வழிபாடு சார்ந்த பொருளில் அல்ல. உயிர்மை இதழில் இவ்வம்சத்தை தமிழ் இலக்கியப்பரப்பில் ஆராய்ந்து ஓர் தொடர் கட்டுரை எழுதவுள்ளேன்] இலக்கியப் படைப்புகளில் பரிச்சயமுள்ள வாசகர்களுக்கு பேரிலக்கியங்களின் சில தருணங்களை அடையாளம் காட்டி அதை விளங்கச்செய்ய முடியும். ரஸ்கால்நிகாஃப் சோனியாவை விபச்சார விடுதியில் சந்தித்து அவளிடம் பாவமன்னிப்பு கோரும் இடம் [ குற்றமும் தண்டனையும்- தஸ்தயேவ்ஸ்கி ] போரில் களம்பட்ட ஆன்ட்ரூ வானின் மகத்துவத்தைக் காணும் இடம் [போரும் அமைதியும்- தல்ஸ்தோய்]. காவியங்களில் எண்ணற்ற இடங்களை சுட்டிக் காட்டமுடியும். அந்த உச்சமே உண்மையில் இலக்கியம் இறுதி இலக்காக்கும் புள்ளி. நவீனத்துவத்துக்கு முன்பு கற்பனாவாதமும் [தத்துவத்தில் இம்மானுவேல் காண்ட்] , பின்பு பின்-நவீனத்துவமும் அதைப்பற்றி விரிவாக பேசுகின்றன.

அந்த படைப்புச்சத்தை எங்கும் அரிதாகவே காணமுடியும். நவீனத்தமிழ் படைப்புகளில் புதுமைப்பித்தனின் ‘சாமியாரும் சீடையும் குழந்தையும் ‘, ‘கபாடபுரம் ‘ , அழகிரிசாமியின் ‘ராஜாவந்திருக்கிறார் ‘ ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலில் பாண்டியன் பினாங்கு போகும் வழியில் கடலைக் காணும் எண்ண அலைகள் ,கி ராஜநாராயணனின் ‘பேதை ‘ , ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான் ‘ — என சில அபூர்வ உதாரணங்களை சொல்லலாம். நம் நவீனத்துவ எழுத்தாளர்கள், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்,அசோகமித்திரன், நகுலன் , ஆ.மாதவன் போன்றவர்கள் தங்கள் சாதனைகளுடன் கூட அங்கு ஒருபோதும் சென்றதில்லை, அதற்கான முயற்சிகூட செய்தது இல்லை. ஜெயகாந்தன் அங்கு சென்று தொடும் இடம் ‘விழுதுகள் ‘ . நான் ஒரு படைப்பாளியை இறுதியாக மதிப்பிடும் புள்ளி இதுதான். அழகியல் மாறும். கருத்துக்கள் காலாவதியாகும். இலக்கியத்தின் ஒளிகுன்றாத புள்ளியாக என்றுமிருப்பது இதுதான். நவீனத்துவத்தின் அவநம்பிக்கையின் புயல் கறுத்துச் சுழன்றடித்து ஓய்ந்துவிட்டது. இன்னும் தல்ஸ்தோயின் கனிவும் ,கதேயின் கனவும், விக்டர் யூகோவின் இலட்சியவாதமும் அப்படியேதான் உள்ளன. புயல் நட்சத்திரங்களை ஒன்றும் செய்வதில்லை.

‘எதையுமே வெறுக்கறவன் சாமியார் இல்லே – அல்லாத்தியும் ஆம், அல்லாத்தியும் விரும்பறவந்தாய்யா சாமியாரு… ‘ என்ற ஓங்கூர் சாமியின் வரிகளுடன் இரண்டற இழைபவை வாழ்க்கை பற்றிய ஜெயகாந்தனின் சொந்த அவதானிப்புகள். ‘ நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும் அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன். ….ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம் வந்துவிட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்கமுடியும் .. ‘ பலவருடங்களுக்கு முன்பு நான் எழுதிய வரியை இப்போது நினைவு கூர்கிறேன். என் ஆதர்ச பேரிலக்கியம் எதிர்மறைப்பார்வை கொண்டதாக இருக்காது, வாழ்க்கையின் ஒளியை சுட்டுவதாகவே அமையும் . அப்படியொன்றை நான் இன்றுவரை எழுத முடிந்தது இல்லையென்றாலும்.

ஜெயகாந்தன் ஆக்கங்கள் இருளை ஒளியைச் சித்தரிக்கும் நோக்கத்துடன் மட்டுமே சொல்லமுற்படும் இலட்சியவாத ஆக்கங்கள் .அனைத்து குறைகளுடன், எல்லைகளுடனும் ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகில் ஒளியுடன் இருந்துகொண்டுதான் இருப்பார், ஏனெனில் இலட்சியவாதம் எப்போதுமே அவநம்பிக்கைக்கு உள்ளாகும் , ஒருபோதும் காலாவதியாவதில்லை.
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2000]

  1. May 20, 2008: jeyamohan.in » Blog Archive » கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்

கட்டுரை குறித்த கருத்துக்களை [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

முந்தைய கட்டுரைஆசான்களின் ஆசான் -சுகா
அடுத்த கட்டுரைஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1