ராஜநாகங்களும் மண்ணுளிகளும்

ஜெ,

தருண் தேஜ்பால் பற்றி எழுதியிருந்த கட்டுரை இந்த விஷயத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரையாக எனக்குத் தோன்றியது நன்றி. அந்த விஷயத்தைப்பற்றிப்பேசியபோதெல்லாம் அத்தனைபேரும் சொன்னது அவரைப்போன்ற ஒருவருக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் கிடைக்குமே, பணம்தான் இருக்கிறதே, ஏன் இந்தப்பெண்ணிடம்தான் சீண்டினார் என்றெல்லாம்தான். அதற்கான பதில் உங்கள் கட்டுரையிலே இருந்தது. இதைப்பற்றி பேசுபவர்கள் எழுப்பக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் இதிலே பதில் இருந்தது

ஆனால் ஒரே ஒருவிஷயம்தான் நெருடல். இதைச்செய்பவர்களுக்கு இப்படிச் செய்திகளில் இடம்பெறுவதே பெரிய தண்டனை என்பதுபோல எழுதியிருந்தீர்கள். இதையே ஒரு தண்டனையாக எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.

சாந்தா ராகவன்

அன்புள்ள சாந்தா,

அந்தக்கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கவேண்டிய இன்னொரு கட்டுரை முன்னரே எழுதப்பட்டிருந்தது. டெல்லிசம்பவம் சில பதில்கள் அதை வாசித்தால் ஒவ்வொருமுறையும் ஒரேவகையான சப்பைக்கட்டுகள் தான் வருகின்றன என்பதைக் காண்பீர்கள். அவை தனிமனிதர்களின் குரல்கள் அல்ல, நம் சமூக மனநிலையின் வெளிப்பாடுகள்.

நான் சொல்வது செய்தியில் அடிபடுவதுதான் சிறந்த தண்டனை என்று அல்ல. தண்டனை நிச்சயம் தேவை. ஆனால் இந்தியச்சூழலில் இன்று சாத்தியமாக உள்ள குறைந்தபட்ச தண்டனை அதுவே என்றுதான். அதையும் விதவிதமான சப்பைக்கட்டுக்கள் வழியாக இல்லாமலாக்கிவிட்டால் நம் சமூகத்தில் பெண்களுக்குள்ள குறைந்தபட்சப் பாதுகாப்பும் இல்லாமலாகிவிடும் என்றுமட்டும்தான்.

பொதுவாக பெண்களுக்கு உண்மையான அச்சுறுத்தல் இருப்பது நான் ஏற்கனவே சொன்ன முதன்மை ஆண்களிடமிருந்துதான் [Alpha males] அவர்கள் சமூகத்தில் ஏதேனும் தளத்தில் வென்றவர்களாக, அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த அதிகாரத்தை அவர்கள் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.அந்த அதிகாரத்தை சந்தித்து தாண்டிச்செல்வதுதான் பெண்களுக்கு மிகப்பெரிய சவால்.

அந்த முதன்மை ஆண்களுக்கு அவர்களின் வெற்றி மற்றும் அதிகாரம் காரணமாகவே சமூகத்தின் அங்கீகாரமும் இருக்கும்.அவர்கள் ஏற்கனவே பல பெண்களை தங்கள் முதன்மை காரணமாக கவர்ந்தவர்களகாக்கூட இருக்கலாம்.

அத்தகையவர்களின் ஆளுமை என்பது முழுக்கமுழுக்க அகங்காரத்தாலானது. அந்த அகங்காரத்தில் விழும் அழி போல அவர்களை ஆட்டம்காணச்செய்வது ஏதுமில்லை. மெல்லிய அடிகள் கூட இரும்புச்சலாகையாக மாறி அவர்கள் மீது விழும். ஒரு பெண் தன்னைமீறிச்செல்வதையே முதன்மை ஆணால் தாங்கிக்கொள்ளமுடியாது. அவள் புகார்சொல்லி அது செய்தியாகி தான் குனிந்துபார்த்தவர்களெல்லாம் தன்னைப்பார்த்து ஏளனம்செய்யும் கணம் அவனுடைய உச்சகட்ட நரகம். அத்துடன் அவனைநோக்கிச் சிரிக்க, அவனை வீழ்த்த பொறாமைக்காரர்களும் எதிரிகளும் நிறையவே இருப்பார்கள்.

இன்னொரு தரப்பும் பெண்களைச் சீண்டும். அவர்கள் எந்தத்துறையிலும் எதையும் அடையாதவர்கள். எந்த அதிகாரமும் அற்ற வெறும் சில்லறைகள்.முதன்மை ஆண்கள் ராஜநாகங்கள் என்றால் இவர்கள் மண்ணுளிப்பாம்புகள். பாம்புகளே அல்ல பாம்பாக நினைக்கப்படும் புழுக்கள்.

இவர்களுக்கு ரப்பர்பாண்டால் ஆன முதுகெலும்பும் ஜெல்லிபோன்ற நாக்கும் இருக்கும். எதையும் பேசலாம். எப்படியும் நெளியலாம். எந்த பொறுப்பும் இல்லை. வெட்கம் மனாம் ரோஷம் எதுவும் பெரிய விஷயம் இல்லை.இத்தகையவர்களுக்கு நீங்கள் சொல்வதுபோல செய்தியாவதெல்லாம் தண்டனையே அல்ல.

சொல்லப்போனால் அதை இவர்கள் ஒரு விளம்பரமாகக்க்கூட எண்ணுவார்கள். இவர்கள் சாதாரணமாகவே தங்களுடைய பாலியல் வெற்றிகளைப் பற்றி பொய்க்கதைகளை தாங்களே உருவாக்கிப்பரப்புவதைக் காணலாம். காரணம் உண்மையில் இவர்களால் எந்தப்பெண்ணையும் கவர, வெல்ல முடியாது. எந்த ஆதிக்கத்தையும் பெண் மீது காட்டமுடியாது.

பெண் என்பது இவர்களைப்பொறுத்தவரை விதவிதமான பகற்கனவுகள் மட்டுமே. ஒருகட்டத்தில் பகற்கனவுகளையே உண்மையாகச் சொல்லிக்கொள்வார்கள். ஒரு பெண்ணிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் பத்துபேரிடம் அவள் தன் ஆள் என சொல்லிக்கொள்வார்கள். எல்லா அலுவலகங்களிலும் குறைந்தபட்சம் இத்தகைய மண்ணுளி ஒன்று நெளிந்துகொண்டிருக்கும். அவர்கள் சற்றுத் தைரியமான பெண்ணுக்கு ஒரு பிரச்சினையே அல்ல.

இத்தகைய மண்ணுளிகளை முழுமையாக அலட்சியம்செய்வதே சிறந்த வழி. ஒருபோதும் சாதாரண மனித அந்தஸ்துகொடுத்துக்கூட இவர்களிடம் பேசக்கூடாது. ஒருபோதும் ஒருவகை அந்தரங்க உரையாடலுக்கும் இடமளிக்கலாகாது. தனியிடங்களில் சந்திக்கக்கூடாது.

அத்தனைக்கும் அப்பால் தொல்லை என்றால் மிக எளிய தண்டனையே போதும். ஒரு சிறிய சட்டபூர்வ நடவடிக்கை. அப்படியே சுருண்டு நடுங்குவதைக் காணலாம். மண்ணுளிகள் அருகே ஒரு தீக்குச்சிச் சுடரைக்காட்டினாலேபோதும் அவை நெளிந்து குழைந்து சாகும்.

ஜெ

முந்தைய கட்டுரைம.பொ.சிவஞானம் பிள்ளை
அடுத்த கட்டுரைகிராமணிப்பிள்ளை