குமார் 60 கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெ,
நன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று ஏற்பாடு. அதனால் வரமுடியவில்லை. ஆனால் அவளைப் பெற்றவன் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்கறையாக வந்து நிற்கிறான் (அப்படி எப்போதாவது வருவான்). ஒருநாள் முந்தி வந்திருக்கக் கூடாதா?
இதுபோல நீங்கள் ஏற்று நடத்தும் விழாக்களின் அருமையை உணர்ந்து நெகிழ்ந்து உங்களைப் பாராட்டுகிறேன். செலவும் உங்களுடையது என்றே ஊகிக்க்றேன். நன்றி.
அன்போடு
ராஜசுந்தரராஜன்

அன்புள்ள ராஜ சுந்தரராஜன்

நன்றி. விழா சிறப்பாகந் அடைபெற்றது. நிறைய நண்பர்கள். அதேசமயம் சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் உருப்படியான கருத்தரங்காகவும் இருந்தது.

நாகர்கோயில் என்பது ஒரு இலக்கிய நகரம். இங்கே இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் உள்ளன. மரபிலக்கியம் மத இலக்கியம் அதிகம் பேசப்படும். கொஞ்சம் முற்போக்கு. நவீன இலக்கியத்துக்கு நாமே செய்தால்தான் உண்டு. வாசகர்கள் இருக்கிறார்கள். அமைப்புகள் இருந்தன- தேய்ந்துவிட்டன

இது என் நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உயர் திரு வேத சகாயகுமார் அவர்களளின் அறுபதாம் ஆண்டு நிறைவினை ஒட்டிய விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்ததை அறிந்து மகிழ்ந்தேன்.
தம்பதியருக்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


Best regards,
R.Raveendran

அன்புள்ள ரவீந்திரன்

குமாருக்கு தெரிவிக்கிறேன், நன்றி. உற்சாகமாக இருக்கிறார். உற்சாகம் வந்தால் மேற்கொண்டு ஒன்றுமே செய்யாமலிருப்பது அவரது பாணி
ஜெ

அன்புள்ள ஜெ,
வேதசகாய குமார் நிகழ்ச்சியில் தாமதமாக, உங்கள் உரையின் போது தான் வந்தோம். வந்ததுமே உங்கள் உரையோடு ஒன்ற முடிந்தது. பல ஆண்டுகளுக்கு முன் எதோ ஒரு நிகழ்ச்சியில், ‘எனது ஊடகம் பேச்சல்ல எழுத்து’ என பேசத் தொடங்கினீர்கள். இப்போது எழுத்தைப் போலவே பேச்சிலும் ஒருவித நடையும், சரளமும் இழையோடியது. உங்கள் எழுத்து மொழியை பேச்சு மொழி மிகவும் நெருங்கி வந்திருந்தது. மனம் எண்ணிய கணம் பேசியது போலத்தான் உங்களால் எழுதவும் முடிகிறது என்றொரு கற்பனை சித்திரமும் மனதில் விரிந்தது.
வேதசகாய குமாரின் இத்தனை ஆண்டுகால உழைப்பை, அற்பணிப்பை இலக்கிய உலகு அங்கீகரித்திருப்பதை இந்நிகழ்வு முழுமை செய்தது. வேதசகாய குமாரின் பேச்சோடு எனக்கு எப்போதுமே அலைவரிசை சிக்கல் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் இன்னொரு கூட்டத்திலும் இதே அனுபவம் தான். அவரது பேச்சில் ‘நான்’ தூக்கலாக இருக்கும். உள்முரண்களும் தட்டுப்படும். சொல்ல வரும் விஷயங்களின் ஆழத்திலும் செறிவிலும் தான் நான் வலிமை பெறும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாச்சே என தோன்றும். மேலும் நிகழ்ச்சிநிரல் படி நன்றிஉரை அமையவில்லையே என்ற எண்ணமும் எழுந்தது.
சுருங்கச் சொன்னால் தொடக்கத்திலேயே வரமுடியவில்லை என்ற ஆதங்கத்தை ஏற்படுத்திய நல்ல நிகழ்வு இது.
ஜி.எஸ்.தயாளன்

அன்புள்ள ஜி எஸ் தயாளன்

நன்றி. இப்போதெல்லாம் என்னுடைய பேச்சைந் ஆனே அடிகக்டி கேட்பதனால்  குறைகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறேன். ஆனால் நம் மாவட்டத்துக்காரர்கள் அனைவருக்குமே உள்ள சிக்கல் ஒன்று உண்டு– உச்சரிப்பு மலையாளம் போல மென்மையாகவும் கொஞ்சம் வேகமாகவும் இருக்கும். அது நாகர்கோயிலுச்சரி. மற்ற ஊரில் வேறுமாதிரி பார்ப்பார்கள்

நான் சரியாக யோசிக்காமல் ஆயுதபூஜை அன்றே விழாவை வைத்துவிட்டேன். பலர் தாமதமாக வர நேர்ந்தது. நெய்தல் கிருஷ்ணன் மிகவும்தாமதமாக வந்தார். ஆகவே நிகழ்ச்சியில் யார் என்ன பேசினார்கள் என அவருக்கு தெரியாமல் போய்விட்டது. ஆகவே விரிவான ஒரு நன்றியுரை இல்லாமல் சுருக்கமாக அ.கா.பெருமாளே முடித்துக்கொண்டார்

ஜெ

முந்தைய கட்டுரைபுகைப்படம் பதிவு
அடுத்த கட்டுரைகாந்திய மருத்துவம்