உச்சவழு ஏன் வாசிக்கப்படவேயில்லை?

ஜெ,

நான் உச்சவழு கதையை இரண்டுமுறை வாசித்தேன். கதை என்ன சொல்லவருகிறது என்று எனக்குப்புரியவில்லை. அதைப்பற்றி வழக்கம்போல ஏதாவது வாசகர்கடிதங்கள் வருகிறதா என்று பார்த்தேன். வாசகர்கள் எவரும் எதுவும் எழுதவில்லையா? ?

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்,

உச்சவழு பற்றி எந்த வாசகர்கடிதமும் வரவில்லை.உச்சவழு பற்றி நான் வாசக எதிர்வினைகளை எதிர்பார்க்கவுமில்லை. காரணம், அக்கதையின் அமைப்பு பற்றி எனக்குத்தெரியும். அதைப்போன்ற பல கதைகளை முன்னரும் எழுதியிருக்கிறேன். அவையும் வாசிக்கப்படாத கதைகளே

பொதுவாக கதைகள் மூன்றுவகையில் வாசகனுடன் தொடர்புகொள்ள முயல்கின்றன.

உணர்ச்சித்தளம் வழியாகத் தொடர்புகொள்ளும் கதைகள் மிகப்பரவலாக வாசிக்கப்படுகின்றன. ஏனென்றால் ஒரு காலகட்டத்தில், ஒரு பண்பாட்டில் வாழும் பெரும்பாலானவர்களின் உணர்ச்சிநிலைகள் ஒன்றே. ஒரே நீரில் வாழும் மீன்களைப்போல மனிதர்கள் ஒரே உணர்ச்சிநிலைகளில் வாழ்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து இயல்பாகவே நமக்கு அந்த உணர்வுத்தளம் வந்துவிடுகிறது. நாம் பெறும் அடிப்படைப் பண்பாட்டுப்பயிற்சியே அந்த உணர்ச்சிகளை அடைவதுதான்.

ஆகவே கதைகளை வாசிக்கும் வழக்கம் கொண்ட எந்த ஒருவரும் உணச்சிமூலம் பேசும் கதைகளை கவனமாக வாசித்து கொஞ்சம் கற்பனையும் செய்யமுடியும் என்றால் அக்கதையின் சாராம்சத்துக்குள் வந்துவிடுவார். அறம் வரிசைக்கதைகள் அவ்வகையானவை.

இக்காரணத்தால்தான் பொதுவாக வணிக எழுத்து சார்ந்த கதைகள் எல்லாமே உணச்சிகள் மூலம் பேசுபவையாக உள்ளன. அல்லது உணச்சிகளை பயன்படுத்திக்கொள்பவையாக உள்ளன. இக்காரணத்தால்தான் ‘தீவிர’ இலக்கியவாதிகளில் ஒருசாரார் அனைத்து உணர்ச்சித்தளக் கதைகளையும் வணிகக்கதைகள் என நினைக்கிறார்கள். தங்கள் படைப்புகளில் உணர்ச்சிகளை கவனமாகக் களைய முயல்கிறார்கள். பேரிலக்கியவாதிகள் கணிசமானவர்கள் உணர்ச்சிகள் மூலம் பேசியவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை

வணிகக்கதைகள் கையாளும் உணர்ச்சிகள் பெரும்பாலும் ஒரு சூழலில் ஏற்கனவே தயாராக இருப்பவை. அந்த உணர்ச்சிகளை பயிற்சிபெற்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்குவதே வணிக எழுத்து. இலக்கியம் புதிய உணர்ச்சிநிலைகளை உருவாக்குகிறது. வாசகன் தன் உணர்ச்சிகளை தானே புதியதாக கண்டடையச் செய்கிறது. மேலும் உணர்ச்சிகளை உருவாக்குவது மட்டும் அதன் வேலை அல்ல. இலக்கியத்துக்கு உணர்ச்சிகள் ஓர் ஊடகம் மட்டுமே. அவ்வுணர்ச்சிகளினூடாக அது தொடர்புறுத்தும் தரிசனமே அதை இலக்கியமாக்கும்.

கருத்துத்தளம் வழியாகத் தொடர்புகொள்ளும் கதைகள் இன்னும் குறைவான வாசகர்களையே அடைகின்றன. காரணம் அவை ஒருசூழலில் நிகழும் கருத்துச்செயல்பாட்டின் ஒருபகுதியாக உள்ளன. அக்கருத்துச்செயல்பாட்டின் வளையத்துக்குள் ஏதேனும் ஒருவகையில் வந்துவிட்ட வாசகர்களே அக்கதையை உள்வாங்கமுடியும். அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே.

இவற்றில் அமைப்புசார்ந்த கருத்துத்த்தளம் கொண்ட கதைகள் அதிகமாக வாசிக்கப்படுகின்றன. ஏனென்றால் அவை முன்வைக்கும் கருத்துத்தளம் ஏற்கனவே அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. புத்தம்புதியகருத்துத்தளமொன்றை தனக்கென உருவாக்கும் படைப்புகள் ஏற்கனவே உள்ள கருத்துச்சூழலில் வெறும் சலசலப்பை மட்டுமே ஆரம்பத்தில் உருவாக்கும். பலகோணங்களில் தவறான வாசிப்புகள் நிகழும். நீண்ட விவாதங்களுக்குப்பின்னரே அவை சரியான வாசிப்பைப் பெறும். பின்தொடரும் நிழலின் குரல் அதற்கு உதாரணம்

மூன்றாம் வகை, படிமங்கள் வழியாக மட்டுமே தொடர்புகொள்ளும் ஆக்கங்கள். அவை ஆசிரியனின் கனவுக்குள் இருந்து வாசகனின் கனவுக்குள் செல்லவேண்டியவை. ஆசிரியனாலேயே அவற்றை விளக்கமுடியாது. அவை ஒருவகை அகவெளிப்பாடுகள், அவ்வளவுதான்

ஆசிரியனை தொடர்ந்து வாசித்து, அவனுடைய அகப்படிம உலகை அறிமுகம் செய்துகொண்டு, அதை தன்னுடைய அகப்படிம உலகுடன் இணைத்துக்கொள்ளும் வாசகனே படிமங்கள் மூலம் பேசும் கதைகளை உள்வாங்கமுடியும். இருவர் சேர்ந்து ஒரே கனவைக் காண்பதுபோல என அதை விளக்கலாம்

அத்தகைய படிமம் சார்ந்த படைப்புகளை ‘விளக்க’ முடியாது. விளக்க ஆரம்பித்ததுமே இரண்டு சிக்கல்கள் வந்துவிடுகின்றன. ஒன்று, அந்தப்படிமத்தை குறியீடாக மாற்றித்தான் அதை விளக்க முடியும். இந்த விஷயம் இதைக்குறிக்கிறது என்று விளக்கினாலே படைப்பின் ஆழ்மனச்செயல்பாடு அறுந்து அது செயற்கையான ஒரு மூளைப்பயிற்சியாக ஆகிவிடும்

இரண்டாவது சிக்கல், அவ்வாறு ஒருமுறை விளக்கிய எதுவும் அடுத்த கதைக்கு பொருந்தாது என்பதே. ஒரு கதையின் படிமக்கோர்ப்பை தர்க்கரீதியாக விளக்கிக்கொண்டால் அந்தத் தர்க்கத்தை அடுத்த கதைக்கும் போடுவோம். மிக அபத்தமான வாசிப்பை அது உருவாக்கும்

என்னுடைய படைப்புகளில் என் அந்தரங்கக்கனவுகளால் ஆன பல கதைகள் இன்னமும்கூட எவராலும் வாசிக்கப்படாமல் உள்ளன. கொற்றவை அத்தகைய ஆக்கம். அதன் மிகச்சில பகுதிகளே வாசகர்களின் கவனத்துக்கு வந்துள்ளன. உச்சவழு அவற்றில் ஒன்று

இத்தகைய கதைகள் வரும் வழியே வேறு. டாப் ஸ்லிப் என்பதை நான் அப்படி மொழியாக்கம் செய்துகொண்டேன். ஒருபயணத்தில் மழையில் அந்த சொல் மனதில் வந்தது. உச்சவழு உச்சவழு என்று மாதக்கணக்கில் சொல்லிக்கொண்டே இருந்தேன். சட்டென்று ஒரு படிமம் மனதில் வந்தது. கதையை அதை நோக்கிக் கொண்டுசென்றேன், அது நிகழ்ந்தது, அவ்வளவுதான்.

அந்தக்கனவுவரை சாதாரணமாக எவரும் வரமுடியாது. தீவிர இலக்கிய வாசகர்களில் ஒருசாராருக்கு ஒரு காலகட்டத்தில் ஒரு சில படைப்பாளிகள் மீது பெரும் காதல் உருவாகும். அந்தக்காதல் வழியாகவே அக்கனவை பரிமாறிக்கொள்ளமுடியும். நான் அவ்வாறு மிகச்சில வாசகர்களையே அடைந்திருக்கிறேன்.இலக்கியம் பெரிதாக மதிக்கப்படாத தமிழ்ச்சூழலில் அதுவே பேரதிருஷ்டம்.

ஆயினும் நாம் இத்தகைய கதைகளை எழுதுகிறோம். எழுதி காற்றிவிடுகிறோம். என்றோ எவரோ வாசிப்பார்கள் என நம்பி.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி