விஷ்ணுபுரம் விருதுவிழா- பாலா

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இயக்குநர் பாலா கலந்துகொள்கிறார்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் பாலாவின் இடம் மாற்றுக்கருத்தின்றி திரையுலகத்தவராலேயே அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. பாலாவின் சேது வெளிவந்தபோது அது உருவாக்கிய அதிர்ச்சியலைகளே அதை ஒரு வணிகவெற்றிப்படமாக ஆக்கின. ஒருபோதும் தமிழ் சினிமா பார்த்திராத ஓர் உலகைப் படமாக்கிக் காட்டியதுதான் அதை முக்கியமான படைப்பாக இன்றும் நிலைநிறுத்துகிறது. நம்முடைய ‘மனச்சமநிலைகொண்ட’ சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ‘மனநோயாளி’ களின் உலகத்தின் அதிரவைக்கும் ஓர் உலகு அதில் இருந்தது

அது ஒரு குப்பைக்கூடை. நம் நாகரீகம் பயன்படுத்தி கசக்கி எறிந்த மனிதக்குப்பைகள் அங்கே குவிந்துக்கிடந்தன. அந்த உண்மை நம் மனசாட்சியை உலுக்கியதனால் அப்படம் அழியாத ஒரு நினைவாக நீடிக்கிறது. அதுவே என்றும் பாலாவின் பேசுபொருள். மனிதநாகரீகத்தின் குப்பைக்கூடை. மனிதக்குப்பைகளின் கதை.

பாலாவின் அடுத்தபடம் நந்தா இன்றும் நினைக்கப்படுவது இரண்டு பெரும் குப்பைக்கூடைகளின் கதை அது என்பதனால்தான். சிறுவர்சீர்திருத்தப்பள்ளி, அகதிமுகாம். அவரது மூன்றாவது படம் பிதாமகனும் மனிதக்குப்பைகளின் கதையே. சுடுகாட்டில் வாழும் வெட்டியான்களின், கஞ்சா விற்பவர்களின், தெருப்பொறுக்கிகளின் உலகம் அது

நான் கடவுள் நாம் வாழும் உலகுக்கு மேலேயும் கீழேயும் உள்ள இரண்டு இருள்வெளிகளின் கதை. இரண்டும் சந்திக்கும் ஒருபுள்ளி அதன் உச்சம். சமூகத்தால் ஏழாம் உலகுக்கு அழுத்தப்பட்ட பிச்சைக்காரர்கள். ஞானத்தின் பொருட்டு தன்னை பிச்சைக்காரனாக ஆக்கிக்கொண்ட அகோரி. உண்மையின் இரு முகங்கள். இருவகை அன்னியர்கள்

அவன்இவன் படத்தில் மீண்டும் அந்த குப்பைக்கூடைக்குள்ளேயே துழாவினார் பாலா. அடித்தளத்துக்கும் அடித்தளத்தில் வாழும் மக்களின் நக்கலையும் கிண்டலையும் அந்தப்படம் வெளிக்காட்டியது. அந்த நக்கல் அவர்களின் ஆயுதம் மட்டுமல்ல, அவர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை நியாயப்படுத்திக்கொள்ளும் வழியும் கூட. ஆபாசமும் அருவருப்பும் கலந்த அந்த கிண்டல் வழியாக அவர்கள் மௌனமாக தங்களைச்சூழ்ந்திருக்கும் இருளையும் அழுக்கையும் கடந்துசெல்கிறார்கள்

பரதேசி பாலாவின் மிகச்சிறந்த படம். இது கூலியடிமைகளின் குப்பைக்கூடை. பசியால் துரத்தப்பட்டு அந்த அழுக்குக்குவியலுக்குள் விழுந்துகொண்டே இருக்கும் மக்களின் அவலம்.

தமிழ்சினிமாவின் வரலாறு என்றேனும் முழுமையாக எழுதப்படுமென்றால் இச்சமூகத்தின் இருண்டமூலைகளைப்பற்றி மட்டுமே சிந்தித்த இந்தக்கலைஞனின் தத்தளிப்பையும் தனிமையையும் பலங்களையும் பலவீனங்களையும் பற்றித்தான் முதன்மையாகப்பேசும் என்று நினைக்கிறேன். கலைப்படமரபென ஏதுமில்லாத தமிழில் வணிகசினிமாவின் இறுக்கமான விதிகளுக்குள் நின்றுகொண்டு தன் படைப்புலகு முழுக்க அத்தனை படங்களிலும் தன் தேடலை மட்டுமே முன்னெடுத்த இன்னொரு கலைஞனைப் பார்க்கமுடியாது.

இருண்ட அழகியலின் மரபென தமிழில் இப்போது வேறு ஏதுமில்லை, பாலா என்ற தொடக்கப்புள்ளி மட்டும்தான்

=================


விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழ்

வரும் டிசம்பர் 22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
விழா அழைப்பிதழ்

Invitation_Facebook

2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாள் 22. 12. 2013

இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை

நேரம் மாலை 6 மணி

நிகழ்ச்சிகள்

விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி

தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு

வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு

வெளியிடுபவர் இயக்குநர் பாலா

தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்

தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்

வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]

சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி

வாழ்த்துரை இயக்குநர் பாலா

கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு

பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்

வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்

வாழ்த்துரை வி சுரேஷ்

வாழ்த்துரை ஜெயமோகன்

ஏற்புரை தெளிவத்தை ஜோசப்

நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]

அரங்கில் எழுத்து, நற்றிணை, சொல்புதிது நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும் .21 காலைமுதல் நண்பர்கள் கூடுவார்கள். இலக்கிய அரட்டைகள் நிகழும்.

விஷ்ணுபுரம் விருது விழா 2013
உதவிக்கு முக்கிய தொடர்புகளும் எண்களும் 
விழா நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு:
அரங்கசாமி ((9894033123)
செல்வேந்திரன் (9003931234)
விஜயராகவன் ( 9843032131)
ஸ்ரீனிவாசன் (9884377787)
விருந்தினர்கள் தங்குமிடம்/உபசரிப்பு/நிர்வாகம்/வழி மற்றும் உதவிகளுக்கு
சேலம் ப்ரசாத் (9500940750)
விஜய் சூரியன் (9965846999)
முந்தைய கட்டுரைமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி