புதிய பரணி

உலகம் முழுக்க உள்ள காவியங்களில் பொதுவாக உள்ள சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் ‘சந்தம், காமம், வன்முறை’ என்று சொல்லிவிடமுடியும். சொல்லழகு, காதல், வீரம் என வேறு பெயர்களில் சொல்லலாம். கவிதை என்ற வடிவத்தின் ஆதி இயல்புகள் இவை.

இன்றும் பாடப்படும் பரணி

தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங்காப்பியங்களில் இன்று கிடைப்பவற்றில் சீவகசிந்தாமணி இந்த மூன்று அடிப்படை இயல்புகளும் பொருந்தியது. கம்பராமாயணம் அதன் உச்சம், தமிழ் இலக்கியத்தின் சிகரமும் அதுவே. எல்லாவகையிலும் அந்தப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியது கலிங்கத்துப்பரணி. அதில் கதை,கதாபாத்திரங்கள் என்ற கட்டமைப்பு இல்லாமையாலும் அது திரட்டிவைக்கும் தரிசனம் என ஏதுமில்லாததனாலும் அதை நாம் சிற்றிலக்கிய வரிசையில் வைக்கிறோம்.

ஆனால் எழுதப்பட்ட காலம் முதல் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கலிங்கத்துப்பரணி அதன் இலக்கியநயம் காரணமாக தமிழிலக்கியப்பரப்பில் பெரும்செல்வாக்குடன் இருந்துவருகிறது. அதன் செல்வாக்கு இல்லாமலிருந்த காலமே இல்லை என்று சொல்லலாம். இன்றும்கூட கலிங்கத்துப்பரணி கவிதைவாசகர்களால் விரும்பிப்படிக்கப்படும் ஒரு நூல்தான்.

உண்மையில் ஆயிரம் வருடம் ஒரு சிறிய கவிதைநூலின் மொழியழகு மனம்கவர்வதாக இருப்பதே மிகமிக ஆச்சரியமான ஒன்று. பெருங்காவியங்களில் கணிசமானவை ஒருகட்டத்தில் வரலாற்றுச்சான்றுகளாகவும், மதநூல்களாகவும், அறநூல்களாகவும்தான் தங்கள் இருப்பை நிறுவிக்கொள்கின்றன. அந்நூலின் பண்பாட்டு உள்ளடக்கம் காரணமாக அவை வாசிக்கப்படும்போது மொழியழகு மேலதிக இனிமையை அளிக்கிறது.

கொடுங்கல்லூர் பரணி ஆட்டம்

சீவசிந்தாமணி தமிழின் முதன்மையான சமணக்காப்பியம் என்றவகையிலும் தமிழின் ஐந்து பெருங்காப்பியங்களில் ஒன்று என்றவகையிலும் தான் முக்கியமானது.வெறும் காவியச்சுவைக்காக அதை எவரும் இன்று வாசிக்கமுடியாது. கம்பராமாயணமேகூட அதன் மதம்சார்ந்த முக்கியத்துவத்தாலும், அதன் கதைமாந்தரின் தொன்மத்தன்மையாலும், அதிலுள்ள புனைவின் நாடகத்தன்மையாலும் அது முன்வைக்கும் பேரறம் என்னும் தரிசனத்தாலும்தான் பெரிதும் ரசிக்கப்படுகிறது. அதன் மொழியழகு கூடுதல் எழில் சேர்க்கிறது

அவ்வாறன்றி வெறும் மொழியழகுக்காக மட்டுமே கலிங்கத்துப்பரணி ரசிக்கப்படுகிறது. அந்தச்சிறப்பன்றி வேறெதுவும் அதில் இல்லை என்றுகூடச் சொல்லலாம். மொழியழகு என்பது மிகச்சீக்கிரத்திலேயே புதுமையிழந்துவிடும் ஒரு தனித்தன்மை.நடையழகால் முக்கியத்துவம்பெறும் எந்த இலக்கியமும் விரைவில் ஒளியிழப்பதை நாம் காண்கிறோம். பொதுமொழி தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதனால் நடையின் சிறப்புகளாக கருதப்படும் அனைத்தும் பழையவையாகின்றன என்பதே முதற்காரணம். ஒரு படைப்பு உருவாக்கும் தனிச்சிறப்புத்தன்மை விரைவிலேயே இரண்டாம்தரப்படைப்புகளால் நகலெடுக்கப்பட்டு தேய்வழக்காக ஆக்கப்பட்டுவிடும் என்பது இரண்டாம் காரணம்

கலிங்கத்துப்பரணிக்கு அடுத்தபடியாக தமிழில் குற்றாலகுறவஞ்சி வெறும் மொழியழகால் நிலைநிற்கும் இலக்கியப்படைப்பு. இவ்வாறு மொழியழகால் மட்டும் படைப்புகள் பலநூற்றாண்டுக்காலம் செல்வாக்குடனிருப்பதை ஆய்வாளர்கள் தனியாகத்தான் ஆராயவேண்டும். அந்தப்படைப்பாளியின் அபாரமான இலக்கியத்திறன் அதற்குக்காரணம் என்றாலும் அதைவிட முக்கியமாக அதில் சுட்டிக்காட்டவேண்டியது அந்தமொழியில் இருக்கும் மாறாததன்மைதான்.

சுரிகுழல் அசைவுற அசைவுற
துயிலெழும் மயிலென மயிலென
பரிபுரம் ஒலியெழஒலியெழ
பனிமொழியவர் கடைதிறமினோ!

என்றவரியின் நேரடியான எளிய சந்தத்திற்கும் மயிலெழுவதற்கு ஒப்ப மாதரின் சுருள்கூந்தல் அலையெழுவதைச் சொல்லும் கற்பனைக்கும் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறென்பது திகைப்பூட்டுவது. நூற்றாண்டுகளினூடாக மொழி மாறாமல் ஒழுகிக்கொண்டிருப்பதன் சித்திரம் மனதில் எழுகிறது.

[ப சரவணன் ]

இளையதலைமுறை தமிழறிஞர்களில் முதன்மையானவரான ப.சரவணன் பிழைநோக்கி,பாடவேறுபாடுகள் குறித்து முறையாகப் பதிப்பித்திருக்கும் கலிங்கத்துப்பரணி ஆய்வுப்பதிப்பு தமிழில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் முக்கியமான நுலாகும். கலிங்கத்துப்பரணியின் பதிப்புவரலாற்றை முறையாக பதிவுசெய்திருக்கிறார் ப.சரவணன்.

1840 ஆம் வருடம் கலிங்கத்துப்பரணி திருப்பாதிரிப்புலியூர் கா சுப்பராயமுதலியார் அவர்களால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த முன்னோடிக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். சரவணனின் உரைவிளக்கம் கச்சிதமாகவும் கூடுமானவரை சரியானதகவல்களைக்கொண்டு எழுதப்பட்டதாகவும் உள்ளது. தமிழில் இத்தகைய முயற்சி ஒன்று வழக்கமான கல்வித்துறைக் குளறுபடிகள் இல்லாமல் வெளிவந்திருப்பது நிறைவளிக்கிறது.

கலிங்கத்துப்பரணிதான் ஒருவேளை தமிழகத்தின் தொன்மையான காவியவடிவமாக இருந்திருக்கும் என்று படுகிறது. உலகமெங்கும் வீரயுகக் காவியங்களுக்குள்ள பொது இயல்புகள் இரண்டு. ஒன்று, குலவரலாற்றைப்பாடுவது, இரண்டு வெற்றிச்சிறப்பைப் பாடுவது. குலோத்துங்கனின் குலவரலாற்றையும் அவனுடைய வெற்றியையும் ஒரேசமயம் பாடியிருக்கும் கலிங்கத்துப்பரணி மிகச்சிறந்த வீரயுகப்பாடலாக உள்ளது.

தமிழகத்தின் வீரயுகம் சங்ககாலம் என்பதுண்டு. அப்படியென்றால் சங்ககாலத்திலேயே நாட்டார் வழக்கில் பரணிக்குச் சமானமான பாடல் வடிவங்கள் இருந்திருக்கலாம். கலிங்கத்துப்பரணிக்கு முந்தைய பரணிவடிவங்கள் எவை என்ற ஆய்வு நம்மை தமிழின் வீரயுக இலக்கியம் பற்றிய தெளிவைநோக்கி இட்டுச்செல்லக்கூடும்.

படையணிப்பாடல் -போர்விளையாட்டு

ஆனால் அத்தகைய ஓர் ஆய்வை நிகழ்த்துவதற்கான முழுமையான கல்வியும், நவீன ஆய்வுநோக்கும், சமநிலையும் கொண்ட ஆய்வாளர்கள் மிகமிக அருகிவிட்டார்கள். கலிங்கத்துப்பரணி பற்றி இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளைப்பார்த்தால் வருத்தமே எழுகிறது.

உதாரணமாக, பரணி என்ற பெயர் எப்படி வந்தது என்று ‘தமிழறிஞர்கள்’ ஆய்வுசெய்திருப்பதை சரவணன் அவரது நூலில் எடுத்துக்காட்டுகிறார். தினைப்புனம் காப்பவர்கள் பரண் மீதிருந்து பாடியதனால் பரணி என்று சொல்லப்பட்டது என்று ஒரு குரல். போர்க்களத்தில் பரண் அமைத்து பாடியமையால் பரணி என இன்னொருவர். பரணி என்றால் ஜாடி. எல்லா கவிதைகளையும் ஒரு ஜாடிக்குள் போட்டதுபோல இருப்பதனால் இதுபரணி என்கிறார் இன்னொருவர்.

இந்த அசட்டுத்தனங்கள் எந்த வித ஆய்வுநெறியும் இல்லாமல் வெறுமே வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு அந்தச்சொல்லைவைத்துக்கொண்டு செய்யப்பட்ட கற்பனைகள். தமிழாய்வில் இன்று அவசியமாக ஒழித்துக்கட்டப்படவேண்டிய கீழ்மை என்றால் இதுதான். இவ்வாறு தமிழாய்வுசெய்பவர்களை இழித்து ஆய்வுக்களங்களில் இருந்தே ஓடவிடாமல் இங்கே சரியான ஆய்வுமனநிலையை முன்னெடுக்கமுடியாது.

சரவணன் தெளிவாகவே பரணி என்ற சொல் எப்படி வந்தது என்று சொல்கிறார். க.வெள்ளைவாரணனை மேற்கோள் காட்டி பரணியின் நோக்கம் கொற்றவையைப் போற்றுதலே என்றும் கொற்றவைக்குரிய நாளான பரணிநாளில் பாடப்பட்டதனால் பரணி என்று பெயர் வந்திருக்கலாமென்றும் சொல்கிறார். இந்த ஆய்வுகளைச் செய்தவர்கள் ஒரு ஐம்பதுரூபாய்க்கு பயணச்சீட்டு எடுத்து பக்கத்து கேரள ஊர்களுக்குச் சென்று விசாரித்திருந்தால் பரணியின் பாரம்பரியம் அப்படியே நீடிப்பதை கண்டிருப்பார்கள். ஆய்வே தேவையில்லை, அப்படியே பதிவுசெய்தாலேபோதும்

சோழர்காலம் வரையிலான தமிழ்ப்பண்பாட்டின் எந்த ஒரு புதிருக்கும் கேரள நாட்டார் பண்பாட்டை கருத்தில்கொள்ளாமல் விடைதேடமுடியாது. பதினைந்தாம்நூற்றாண்டுக்குப்பின் தமிழகம் நாயக்கர் ஆட்சிக்குச் சென்றது அடுத்த நானூறு வருடங்களில் தமிழ்ப்பண்பாடு மிகப்பெரிய மாறுதல்களை அடைந்தது. இன்று தமிழகத்தில் உள்ள நாட்டார்கலைகள் கூட அதன்பின் முழுமையாக மாறுதலடைந்தவையே. ஆனால் முந்நூறாண்டுககாலம் சோழர் ஆட்சியிலும் அதற்கு முன்னர் சேரர்களின் ஆட்சியிலும் இருந்த கேரளத்தில் பெரும்பாலான பழந்தமிழ் பண்பாட்டுக்கூறுகள் அப்படியே நீடிக்கின்றன.

[படையணியின் ஒரு போர்த்தருணம். கலிங்கத்துப்பரணியின் இன்றையவடிவம்]

அவற்றில் ஒன்றே பரணி. பரணி என்பது கொற்றவையை வழிபடவேண்டிய நாள். மீனமாதம் [சித்திரை] பரணி நட்சத்திரமே கொற்றவைக்கு அல்லது பகவதிக்குரிய விழாநாளாகும். இந்தத் திருவிழாக்களே பரணி என்றுதான் சொல்லப்படுகிறன. கேரளத்தில் இன்று நூற்றுக்கணக்கான பரணித்திருவிழாக்கள் இருந்தாலும் முதன்மையானது கொடுங்கல்லூர் பரணி விழாதான். அது கொற்றவையாக வழிபடப்படும் கண்ணகிக்கான விழா

பரணிப்பாட்டு என்பது இந்த விழாக்களுக்காக உருவாகி வந்த தனித்த நாட்டார்கலைவடிவம். கோயில்கலை என்றும் சொல்லலாம். பரணிநாளில் மக்கள் கூட்டம்கூட்டமாக பாடியபடி வரக்கூடிய பாடல் அது. இன்றும் பரணிப்பாட்டுக்கு பல வடிவங்கள் கேரளத்தில் உள்ளன. பூரப்பாட்டு என்றும் பரணிப்பாட்டு சொல்லப்படுவதுண்டு. அடிதடியைப்பற்றிய வர்ணனையையே பேச்சுவழக்கில் பரணிப்பாட்டு என்று சொல்லும் பேச்சுவழக்கும் உண்டு.

இன்று பரணிப்பாட்டுக்கு ஒரு பெரிய ‘அனுஷ்டான’ முறை உள்ளது. பரணிநாளில் பகவதிகோயில்கள் பூசாரிகள் கோயிலை திறந்துவிட்டுவிட்டு விலகிச்செல்கிறார்கள். அன்று அனைத்து மக்களும் கோயிலுக்குள் நுழைந்து கொற்றவையை வழிபடலாம். இதன்பொருட்டு மக்கள் விரதமிருந்து கூட்டம் கூட்டமாகக் கிளம்பி திருவிழா நிகழும் கோயில்களுக்குச் செல்கிறார்கள்.

இந்தப்பயணம் ஒரு படையெடுப்பை நடித்துக்காட்டுவதுபோலவே இருக்கும். இதற்கு காவுபடையெடுப்பு என்று பெயர்.[காவு என்றால் காடு அல்லது சோலை. கொற்றவைகோயில்கள் ஒருகாலத்தில் சிறியகாடுகளுக்குள் மட்டுமே இருந்தன] இவ்வாறு செல்பவர்கள் கைகளில் கம்புகளையும் சிலர் வாட்களையும் ஏந்தியிருப்பார்கள். சிவப்பு ஆடை அணிந்து தலைப்பாகைகள் கட்டியிருப்பார்கள். உடலில் சிவந்த கோலங்கள் வரையும் வழக்கம் உண்டு. பரணிப்பாட்டை பாடியபடி நடனமிட்டுக்கொண்டு செல்வார்கள்

படையணிக்கு வரும் கொற்றவையின் பேய்க்கோலம்

இந்த பரணிப்பாடல் இன்றைய ரசனைக்கு ஆபாசமானதாகவே இருக்கும். பெண்குறி பற்றிய விவரணைகளும் ’கெட்டவார்த்தைகளும்’ நிறைந்தபாடல் இது. இந்தக்கூட்டம் கோயிலை கைப்பற்றுகிறது. இது காவுதீண்டல் எனப்படுகிறது.

அதன்பின் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுக்கப்படுகிறது. இருநூறாண்டுகளுக்கு முன்புகூட நரபலி சாதாரணம். நூறாண்டுகளுக்கு முன்புகூட நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டு குருதி ஓடும். அதன்பின் அவர்கள் விலகிச்செல்வார்கள். கோயிலை பூசாரிகள் சுத்தப்படுத்தி மீட்டெடுப்பார்கள். அதாவது இது பரணிநாளில் நடிக்கப்படும் ஒரு போர்நாடகம். இந்த விழாவை ஒட்டி ஆயுதப்போட்டிகள் நிகழும். பலர் செத்துவிழுவார்கள். கூடவே உண்மையான பூசல்களும் அரங்கேறும்

தென்கேரளத்தில் இந்தப்பாடல் படையணிப்பாடல் எனப்படுகிறது. துடிகொட்டிப் பாடப்படும் தொன்மையான கலிப்பாவின் சந்தம் கொண்ட பாடல் இது. இதுவும் போர்நாடகம்தான். ஆயுதமேந்தி வேடமிட்டு பாடியபடி வந்து போரிட்டு கொற்றவையை வழிபடுவதுதான் படையணிப்பாடல். மிகவிரிவான அனுஷ்டானங்களுடன் இன்றும் நடத்தப்படும் படையணி அல்லது பரணிப்பாடல் நிகழ்ச்சி திட்டவட்டமான விதிகளும் நூற்றுக்கணக்கான நுண்ணிய குறியீடுகளும் கொண்டது. பழந்தமிழரின் போர்ப்பண்பாட்டையே இவற்றினூடாக நாம் அறியமுடியும்.

பரணி என்ற காவியவடிவத்தின் தோற்றத்துக்கு இதைவிட திட்டவட்டமான சான்று ஏதாவது தேவையா என்ன? ஆனால் இன்றுவரை இந்தக்கோணத்தில் ஒரு காத்திரமான ஆய்வு செய்யப்பட்டதில்லை நம் ஆய்வுகளின் லட்சணம் என்ன என்பதற்கு இதைவிட இன்னொன்றைச் சுட்டிக்காட்டவேண்டியதில்லை.

நம்ஆய்வாளர்களுக்கு தமிழன்றி வேறு மொழி தெரியாது. வரலாற்றாதாரங்களை வாசிக்கும் பழக்கம் இல்லை.ஆகவே தமிழகத்துக்கு அப்பால் ஆய்வைக்கொண்டுசெல்லும் திறனே இருப்பதில்லை. எந்தவிதமான அறிவியல் முறைமைகளிலும் பழக்கம் இல்லை. ஆகவே எந்தவகையான முழுமைநோக்கும் இல்லை. வாயில்வந்ததை எழுதிவைக்க அவர்கள் வெட்கப்படுவதுமில்லை

கலிங்கத்துப்பரணிக்கு முன்னரே இருந்துவரும் பரணிப்பாடல் மரபை நாம் கேரளத்தில் காண்கிறோம். அது போருக்குச் செல்லும்போது கொற்றவையை வாழ்த்தியும் மன்னனை வாழ்த்தியும் போரை விதந்தோதி வீரத்தை ஊட்டியும் பாடப்படும் ஒரு பாடல்முறை. பின்னர் அது கொற்றவை வழிபாட்டுக்குரிய போர்நாடகமாக மாறியது. அதற்கான பரணிப்பாடல்கள் ஏராளமானவை அன்று நாட்டார்மரபில் இருந்திருக்கலாம். அவற்றில் இருந்து உருவான செவ்வியல் வடிவமே பரணி

பின்னாளில் பரணி என்றவடிவம் தத்துவத்துக்கும் மதவழிபாட்டுக்குமெல்லாம் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்கயாகபரணி போன்ற புராணமதநூல்களும் அஞ்ஞானவதைபரணி போன்றதத்துவ நூல்களும் இவ்வடிவில் வந்துள்ளன என்பதை சரவணன் எடுத்துக்காட்டுகிறார்

பேய் பிணக்கூத்தாடுகிறது! [படையணி]
கலிங்கத்துப்பரணியையே நடிப்பது போன்ற ஆட்டம்!
பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஆய்வு என்பது சென்ற காலம்வரை தமிழ்பெருமிதத்தை கட்டமைப்பதாகவும் தமிழ்வரலாற்றை உருவகிக்கும் நோக்கம் கொண்டதாகவும்தான் அதிகமும் நிகழ்ந்தது . அந்தக்காலகட்டம் இன்று முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அரசியல்கோஷங்களை உதறி புதிய தலைமுறையின் ஆய்வாளர்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அறிவியல்நோக்குள்ள ஆய்வுமுறையும் இந்தியாவின் மொத்த பண்பாட்டு- வரலாற்றுபின்னணியையும் கருத்தில்கொண்டு அணுகும் நோக்கும், செவ்வியல் மற்றும் நாட்டாரியல் ஆய்வுகளில் பயிற்சியும் கொண்ட ஓர் ஆய்வாளர் வரிசைக்காக தமிழ் ஏங்கி நிற்கிறது

அத்தகைய ஒரு அலைக்கான தொடக்கமாக ப.சரவணனைப்போன்ற இளம் ஆய்வாளர் பதிப்பித்திருக்கும் இந்த நூல் அமையவேண்டும். அதற்கான அம்சங்கள் இந்நூலில் உள்ளன. பாடவேறுபாடுகளை தொகுத்திருப்பதிலும் ,நூல்வரலாற்றை அளிப்பதிலும் உள்ள கறாரான அறிவியல் நோக்கை வியப்புடனேயே பார்க்கிறேன். அலட்டல் இல்லாத மொழிநடையும் மிகைத்தாவல்கள் இல்லாத பொருள்விளக்கங்களும் சரவணனை தமிழாய்வின் வருங்காலத்தைத் தீர்மானிப்பவர்களில் ஒருவர் என்று காட்டுகின்றன

[கலிங்கத்துப்பரணி ப சரவணன் ஆய்வுப்பதிப்பு சந்தியாபதிப்பகம் ]