பல்லவர் எனும் தொடக்கம்

1944இல் வெளிவந்த மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ தமிழில் முழுமையாகவும் சுருக்கமாகவும் பல்லவர் பற்றி எழுதப்பட்ட நல்ல அறிமுக நூல்.[முதல் பதிப்பு என்னிடமிருக்கிறது, அதில் டாக்டர். மா இராசமாணிக்கம் பிள்ளை என்று பெயர் இருக்கிறது.அவரே தன் பெயரை மாற்றிக்கொண்டாரா இல்லை தமிழியர் வலுக்கட்டாயமாக மாற்றினார்களா என்று அறிய ஆசை] வெவ்வேறு பாடநூல்கள் இன்னும் அதிகத் தரவுகளுடன் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்தாலும் இராசமாணிக்கனாரின் வரலாற்று நூல்களை நான் விரும்பி வாசிப்பது அதன் மொழிநடை வாசிக்க வைக்கிறது என்பதனால்தான்

இராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு பல்லவர்களுக்கு முற்பட்ட தமிழர்கள் என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது. இந்நூலின் மிகப்பலவீனமான அத்தியாயம் இதுவே. அக்காலகட்டத்தில் சங்க கால வரலாறு பற்றி இருந்த பொதுவான பெருமிதநம்பிக்கைகளையே வரலாறாக எழுதிவைத்திருக்கிறார் இராசமாணிக்கனார். இன்றைய வரலாற்று வாசகன் வழக்கமான தமிழாசிரியர்களின் கட்டுக்கதைவரலாறு என இந்நூலை எண்ணுவதற்கு அது இடமளிக்கிறது. தொடர்ந்து வரும் பல்லவர்களைப்பற்றிய சான்றுகள் என்ற அத்தியாயம் வரலாற்று நூலுக்குரிய அடிப்படை சமநிலையுடனும் ஆதாரங்களுடனும் எழுதப்பட்டிருக்கிறது.

பல்லவர் வரலாற்றை முதன்முதலாக எழுதிய ஆரம்பகால வரலாற்றாசிரியர்களைப்பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லும் பகுதி முக்கியமானது பல்லவர்களைப்பறி முதல்கட்ட ஆய்வுகளைச் செய்த சர் வால்ட்டர் எலியட், பல்லவர்காலக் கல்வெட்டுகளை ஆராய்வதற்கு முன்னோடியாக அமைந்த டாக்டர் பர்னெஸ் , மகாபலிபுரத்தை விரிவாக ஆராய்ந்து எழுதிய ஜேம்ஸ் பெர்கூசன், பல்லவர் வரலாற்றை எழுதுவதற்கான முன்வடிவை எழுதிய டாக்டர் ஃப்ளீட் ஆகியவர்களை நாம் இன்று அதிகமாக நினைப்பதில்லை. பல்லவர் வரலாற்றை முதலில் எழுதிய தமிழர் வெங்கையா என்று இராசமாணிக்கனார் அடையாளப்படுத்துகிறார்

பல்லவர் யார் என்ற விவாதம் தமிழ்சூழலில் தொடர்ந்து நடந்துவருகிறது. தமிழகத்தில் வரலாற்று விவாதத்தில் காணப்படும் எல்லா விதமான அசட்டுத்தனங்களையும் முன்முடிவுகளையும் குறுகியபார்வைகளையும் இந்த விவாதத்தில் காணலாம். இராசமாணிக்கனாரின் நூலில் அனைத்தையும் ஒருசில பக்கங்களில் தொகுத்துக்கொடுத்திருக்கிறார். வாசிக்கையில் ஆச்சரியமும் சலிப்பும் ஒரே சமயம் எழும் இடம் அது

தமிழக வரலாற்றில் பல்லவர் காலகட்டம் ஒரு மாபெரும் தொடக்கம். தமிழக வரலாற்றின் தொடக்கமான சங்ககாலம் பற்றி நமக்கு பெரும்பாலும் ஏதும் தெரியாது, சில பெயர்களையும் சில இலக்கியச் சித்தரிப்புகளையும் தவிர. களப்பிரர் காலமும் இன்னும் அறியப்படாத ஒன்றே.நாம் ஆதாரபூர்வமான தமிழக வரலாற்றை பல்லவர்கள் காலத்திலேயே அறிய ஆரம்பிக்கிறோம். சொல்லப்போனால் காலத் திரையை மீறி நம் முன் தெளிவாக வந்து நிற்கும் முதல் தமிழக மன்னர் பல்லவரான சிம்மவிஷ்ணுதான்.

தமிழகத்தின் இன்றைய பண்பாட்டு அடையாளங்களான கற்கோயில்கள் பல்லவர் காலத்திலேயே உருவாகிவந்தன. நம்முடைய மாபெரும் பக்தி இலக்கியமரபு பல்லவர் காலத்தில் உருவானது. நம்முடைய ஓவியக்கலையும் இசைக்கலையும் திட்டவட்டமான தனியடையாளம் பெற்றுத்தெரிவதும் பல்லவர்காலத்திலேயே.

ஆகவே பல்லவர்களை எப்பாடுபட்டேனும் தமிழ் மன்னர்களாகக் காட்டிவிடவேண்டும் என்று தமிழியக்கம் சார்ந்த வரலாற்றாய்வாளர்கள் சாத்தியமான எல்லா கழைக்கூத்துக்களையும் ஆடியிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தமிழாசிரியர்களாதலால் சொல்லாய்வையே வரலாற்றாய்வாகச் செய்திருக்கிறார்கள். இலக்கியங்களில் இருந்து ஒற்றைவரியை பிடுங்கி விளக்கம் அளித்தும் தெளிவற்ற தொன்மங்களை மனம்போனபடி விளக்கியும் இதை உருவாக்கி நிறுவ முயன்றிருக்கிறார்கள்.

இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் என்ற தீவைச்சேர்ந்தவர்கள் பல்லவர் என மணிமேகலையின் ஒற்றை வரியைக்கொண்டு முடிவுகட்டியவர்களும் கரிகாலனின் பேரனிடமிருந்து உருவான மரபே பல்லவர் குலம் என்று வாதிட்டவர்களும் இருந்திருக்கிறார்கள். முக்கால்நூற்றாண்டுக்குப்பின் இன்றும்கூட சில வரலாற்று நூல்களில் இந்த வாதங்களை விடாப்பிடியாகத் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சங்ககால முடிமன்னர்கள் நூற்றுக்கணக்கான சிற்றரசர்களை வென்று மெல்ல உருவாகி வந்துகொண்டிருந்தகாலகட்டத்திலேயே நர்மதை,கோதாவரி, கிருஷ்ணா நதிக்கரைகளில் இந்தியாவின் மாபேரும் சாம்ராஜ்யங்களில் ஒன்றாகிய சாதவாகனப்பேரரசு உருவாகிவிட்டிருந்தது. மொத்தத் தமிழகத்தைவிடவும் மூன்றுமடங்கு பெரிய பேரரசு அது. சாதவாகனப்பேரரசிற்கு அடங்கிய பல்வேறு சிற்றரசர்கள் அன்றிருந்தனர். ஒவ்வொருவரும் தமிழக முடிமன்னர்களை விட பெரும்படைபலமும் நிலப்பரப்பும் கொண்டிருந்தவர்கள்.

சாதவாகனப்பேரரசின் மையம் வலுவிழக்க ஆரம்பித்தபோது அந்தச் சிற்றரசர்கள் தனியுரிமைபெறவும் நிலத்துக்காக ஒருவரோடொருவர் போரிடவும் ஆரம்பித்தனர். அவர்களில் ஒருசாரார்தான் களப்பிரர். அவர்கள் மூவேந்தர்களையும் வென்று ஒட்டுமொத்த்த் தமிழகத்தையும் கைப்பற்றி ஆட்சியமைத்தனர். இருநூறாண்டுக்காலம் அந்த ஆட்சி நீடித்தது.

சாதவாகனப்பேரரசின் சிற்றரசர்களே சாளுக்கியர்கள், வாகாடகர்கள்,விஷ்ணுகுண்டர், சாலங்காயனர், ஆனந்தர், சூட்டுநாகர், கதம்பர், கங்கர் போன்றவர்கள். இவர்களில் ஒரு சிற்றரசாக இருந்தவர்களே பல்லவர்கள். தமிழகவரலாற்றை தமிழ்மொழிக்குள்ளும் தமிழ்நிலத்திலும் மட்டுமே வைத்து எழுதும் பிழையை செய்பவர்களே பல்லவர்களின் தோற்றத்துக்கு தமிழிலக்கியத்தில் மட்டும் சான்று தேடுகிறார்கள்.

முற்கால சங்க இலக்கியங்கள் எதிலுமே பல்லவர்களைப்பற்றி ஒரு சிறு குறிப்புகூட இல்லை. பல்லவர்கள் அக்காலத்தில் சிற்றரசர்களாகக்கூட குறிப்பிடப்படவில்லை. பல்லவர்களின் ஆரம்பகால ஆட்சி முழுக்கமுழுக்க ஆந்திரத்திலேயே நிகழ்ந்தது என இன்று திட்டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது.பல்லவர்களின் தொடக்ககாலத்துக்குச் சான்றாக உள்ள மூன்று செப்பேடுகளுமே குண்டூர் அருகே கிடைத்தவைதான். ஆனால் அக்காலத்திலேயே காஞ்சி பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழே அனேகமாக இரண்டாம் தலைநகரமாக இருந்துள்ளது.

பல்லவர்கள் ஆண்ட குண்டூர் பகுதி தெலுங்கு மொழியில் அன்றும் இன்றும் பல்நாடு என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்கல்நாடு என்று அதற்குப்பொருள். இங்கே கிடைத்த சலவைக்கற்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அமராவதி ஸ்தூபம் முழுக்கமுழுக்க வெண்பளிங்காலானது. அதன் எச்சங்கள் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. கிபி 12 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் நடந்த ஒரு பெரும்போர் ஆந்திர நாட்டுப்புற இலக்கியத்தில் அழியாப்புகழ் பெற்றது. தெலுங்கு கவிஞர் ஸ்ரீநாதா பல்நாட்டி வீரசரித்ரா என்ற நூலை எழுதி அதை இலக்கியமாக்கினார். பல்நாட்டை ஆண்டவர்களே பல்லவர்கள் எனப்பட்டனர்.

பல்லவர்களின் வரலாற்றை ஆந்திரவரலாற்றுடன் விரிவாக இணைத்துப்பார்க்கும் போக்கு இன்றைய வரலாற்றாய்வாளர்களிடையே உள்ளது. பல்லவர் வரலாற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடைகளை அந்தப்பொதுத்தளத்தில்தான் தேடவேண்டும். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் நிகழ்ந்த தலைமுறைப்போர்களின் காரணங்களையும், கங்கர் கதம்பர் உள்ளிட்ட அன்றைய ஆந்திர அரசர்களின் அரியணைச் சண்டையிலெல்லாம் பல்லவர்களின் பங்கிருப்பதையும் அவ்வாறுதான் புரிந்துகொள்ளமுடியும்

அவ்வாறு ஒரு விரிவான பார்வையை மூலநூல்களை ஒட்டி உருவாக்கி அளிக்கிறார் என்பதுதான் இராசமாணிக்கனாரின் நூலின் சிறப்பாகும். இந்நூல் இன்றுகூட ஒரு பொதுவாசகனுக்கு பல்லவர் வரலாற்றின் நல்ல சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருப்பது அதனால்தான்.

பல்லவர் வரலாற்றைப்பற்றிய தெளிவு இல்லாமல் ஒருவர் தமிழகத்தின் சமூக,பொருளியல், பண்பாட்டுப் பரிணாமம் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது. தமிழகத்தின் பண்பாட்டைத் தீர்மானித்த மூன்று அம்சங்கள் பல்லவர்களின் காலகட்டத்தில் தொடங்கின.

ஒன்று திட்டவட்டமான நிலவரி வசூல்.அதற்கான சமூக அமைப்புகள் உருவாயின

இரண்டு, சைவ வைணவ மதங்கள் பெருமதங்களாக ஆரம்பித்தன.

மூன்று, தமிழகத்தின் சிற்றரசர்குலங்கள் அனேகமாக அதிகாரத்தை இழந்தன. தமிழகத்தின் அரசகுலங்கள் ஆந்திர மையநிலத்தின் அரசகுலங்களுடன் நேரடி உதிர உறவுள்ளவையாக ஆயின.

இராஜமாணிக்கனாரின் இந்நூலை வாசிக்கும் ஒருவர் சாதவாகனப்பேரரசின் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று முந்நூறாண்டுக்காலம் நிகழ்த்திய தொடர்ந்த போர்களை மட்டுமே காண்பார். அந்தப்போரின் விளைவாக ஒவ்வொரு அரசும் வலிமையிழந்து அழிந்தது.

பல்லவப்பேரரசின் மொத்த ஆட்சிக்காலத்திலும் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் சில வருடங்களும் ராஜசிம்மனின் ஆட்சிக்காலத்தில் சில வருடங்களும் மட்டுமே நாட்டில் போர் நிகழாமல் அமைதி நிலவியது. அந்த அமைதியே தமிழகத்தில் மதம், கலை, பாசனம் ஆகியதுறைகளில் மறுமலர்ச்சிக்குக் காரணமாகியது

இந்த போர்வரலாற்றைப் புரிந்துகொள்ள மேலதிகமான நிலவியல் சார்ந்த பார்வை தேவை. ஜாரேட் டையமண்ட் போன்ற நவீன ஆய்வாளர்களை முன்னுதாரணமாகக் கொண்டால் அன்றைய வரலாற்றுப்பரிணாமத்தை இவ்வாறு சொல்லலாம்.

அன்று மக்கள்தொகைப்பெருக்கம் என்பது நதிப்படுகைகளைச் சார்ந்தே நிகழ்ந்தது. கங்கைநதிக்கரைக்குப்பின் மிக அதிகமாக மக்கள்தொகைப்பெருக்கம் நிகழ்ந்தது கிருஷ்ணா,கோதாவரி நதிகள் ஓடும் ஆந்திரபெருநிலத்தில்தான். இந்த ஆறுகள்தான் தென்னகத்தின் மிக அதிகமான நீர்ப்பெருக்குள்ளவை. அதிகமான நதிப்படுகை கொண்டவையும் இவையே. ஒப்புநோக்க மற்ற நதிப்படுகைகள் எல்லாமே மிகமிகச்சிறியவை. ஆகவே அங்கெல்லாம் சொல்லும்படி மக்கள்பெருக்கம் நிகழ்ந்திருக்கவில்லை

இவ்வாறு ஆந்திரநிலத்தில் பெருகிய மக்கள் அங்கே பிரம்மாண்டமான பேரரசாக ஆனார்கள். மேலும் வளர்ந்தபோது வளங்களுக்காகவும் வாழ்விடங்களுக்காகவும் அவர்கள் மற்ற தென்னக நிலப்பகுதிகளுக்குப் பரவினர். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஆந்திர மையநில மக்கள் பெருந்திரளாக குடியேறியதன் விளைவே களப்பிரர், பல்லவர், கங்கர், கீழைச்சாளுக்கியர் வரலாறுகள்.

இந்தப் பேரரசுகள் உருவாக்கிய மக்கள்பரவலின் விளைவாக விளைநிலங்கள் அதிகரித்தன. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் மக்கள்தொகை பற்பலமடங்கு பெருகியது. அதன் விளைவாகவே அடுத்தகட்ட பேரரசுகள் இங்கே உருவாயின. பல்லவர்களுக்குப்பிந்தைய சோழப்பேரரசை இப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும்.அந்த எழுச்சியில் கோதாவரிப்படுகையின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

தமிழகநிலத்தில் இரண்டாயிரம் வருடங்களாக ஆந்திரநிலத்தில் இருந்து பெருந்திரள் குடியேற்றங்களும் படையெடுப்புகளும் நிகழ்ந்தபடியே உள்ளன என்பதே வரலாறு. இன்று இங்கே வாழ்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் அங்கிருந்து வெவ்வேறு காலகட்டத்தில் வந்தவர்களின் வழித்தோன்றல்களே.

சரளமான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தச் சுருக்கமான வரலாறு அதன் சுருக்கம் காரணமாகவே ஒரு மூச்சில் வாசிக்கத்தக்கதாக உள்ளது. ஆகவே எளிதில் ஓர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றைப்பற்றிய பல சிந்தனைகளை உருவாக்கும் சித்திரம் அது.

பல்லவர் வரலாறு

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், பக்கம்: 336, HB, விலை: ரூ. 125/

முந்தைய கட்டுரைரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைகடிதங்கள்