புறப்பாடு கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

நலமா? நேற்று நுதல்விழி அருளப்பர் படித்ததும் மனதை முற்றிலும் கொள்ளை கொண்டு விட்டார். இப்படி ஒரு மனிதரா ?!! நேற்று மாலை மாலை அலுவகத்தில் இருந்து கார் ஒட்டிக்கொண்டு வரும்போது அருளப்ப சாமியார் போல் (சாலையில் செல்லும்) எல்லாரிடமும் அன்பாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன் … திடீரென்று கண்ணீர் பொங்கிவிட்டது. பிறகு யோசித்துப் பார்த்தால் முட்டாள் தனமாக இருந்தது. ஆனால், நாள் முழுவதும் அவரது சிந்தனையாகவே இருந்தது.. அருளப்பரை நீங்கள் உள்ளது உள்ளபடி எழுதி உள்ளீர்களா ? அல்லது கதைக்காக அவரை கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்களா ?

புறப்பாடு மூலம் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

அன்புடன்,
கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்

அருளப்பசாமியை எனக்கு சிலநாட்கள் மட்டுமே தெரியும். அதன்பிறகு சந்திக்கவில்லை. அவ்வாறு வந்து சென்றவர்கள் பலர் உண்டு. பிறிதொரு தருணத்தில்

ஜெ

நலமாக உள்ளீர்கள் என நம்புகிறேன். புறப்பாடு முன்னுரையைப் படித்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. அஜிதனுடன் பேசவேண்டும் போலிருக்கிறது.

அஜிதனின் குழந்தைப் புகைப்படம் இத்தனை அலைக்கழிவுக்குப் பின்னும் எங்களிடம் மிஞ்சியிருக்கிறது. அதை எடுத்துப் பார்த்தேன். நீங்கள் எழுதியதைப்போல அஜிக் குட்டிக்கு எங்கள் அன்பு.

எவ்வளவோ விசயங்களை எழுதியிருக்கிறீங்கள். அருண்மொழியைப்பற்றிக் கூட பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீங்கள். ஏன் அஜிதனைக் கூட பல இடங்களில் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், அஜிதன் குறித்த இந்த வார்த்தைகள்…

//மகனையே சிறந்த மாணவனாகப் பெறும் அதிருஷ்டம் அதிக தந்தையருக்கு வருவதில்லை. பின்பு அந்த மகனின் சிறந்த மாணவனாக ஆகும் பேரதிருஷ்டம் மிகமிகச் சிலருக்கே அமையும். //

மிக முக்கியமானவை என்பதை உணர்கிறேன்.

நீங்கள் மகிழக்கூடிய மனிதரே. அஜிதனுக்கும் அருண்மொழிக்கும் வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.

– கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்,

ஆம், அஜிதனைப்பற்றி நிறையவே உங்களுக்கு எழுதியிருக்கிறேன். ஒரு நீண்ட காலம், கொந்தளிப்புகளுடன் நம்மைக்கடந்துசென்றுவிட்டதென உணர்கிறேன்.

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி-நெல்சன் மண்டேலா
அடுத்த கட்டுரைதருண் தேஜ்பால்களும் பெண்களும்