பிராமண ஞானம்

ஐயா,

சமீபத்தில் மஹா பெரியவர் பற்றிய தங்கள் கருத்துக்களை ஒரு வாசகரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த்தேன். பகவத்கீதையில் ஒரு இடத்தில் ” ந புத்திபேதம் ஜனயேத் அக்ஞானாம் கர்ம ச்ங்கிணாம் என்று வரும். அதாவது அறியாதவர்களிடம் மேலும் மயக்கத்தை உண்டாக்காமல் இருப்பது அறிவுடையவர்களின் தலையாய கடமை. உங்கள் எழுத்துக்களைப் படித்து ஒரு வாசகர், பெரியவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது என்கிறார்.

ஒரு பக்கம் அவரை சூ மந்திரக்காளி சொல்லி தங்கள் கஷ்டங்களைப் போக்குபவர் என்று வெறும் சித்து வேலைகள் செய்யும் மந்திரவாதியின் அளவிற்குத் தாழ்த்தும் அவருடைய பக்தர்களின் அறியாமை. இன்னொரு பக்கம் அவரை வெறும் அறிஞர் மட்டுமாகப் பார்க்கும் அறிவு ஜீவிக்கூட்டம் மற்றும் அவர் அறிவுரைகளக் காற்றில் பறக்கவிட்டு அவர் படத்திற்குப் பூஜை செய்யும் “ஆசார சீலர்கள்’ . எல்லோரும் தங்களால் இயன்றவரை அவர் பெருமையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“காந்தி அவருடன் சந்திப்பதைத் தவிர்த்தார். தீண்டாமையின் அவசியத்தைப் பற்றி இவர் கூறினார். அதற்கு சாஸ்திர சம்மதம் இருப்பதாகத் தெரிவித்தார். நாராயண குரு அதன் உள்ளர்த்தத்தை விளக்கினார். ஸ்ருதி ஸ்மிருதி போன்றவற்றின் வித்தியாசங்களைக் கூறினார்” – மிகவும் அடிப்படையான இந்த விஷயங்கள் பற்றி மஹா பெரியவர் – உங்கள் கூற்றிலேயே சாஸ்திரங்களைக் கற்றறிந்த பேரறிஞர் – திரித்துக் கூறியது போல் சித்தரிக்கின்றது உங்கள் கட்டுரை. இவ்வளவு loose talk உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. வாக் தபஸ் பற்றி பகவத் கீதை என்ன சொல்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பேச்சையும் ஒரு தவமாகவே கருதவேண்டும். அதற்கான மிகத் தெளிவான வழிகாட்டுதல்கள் நம் சாத்திரங்களில் இருக்கின்றன.

அத்வேஷ்டா சர்வ பூதானாம் என்ற கீதையின் கூற்றை உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவர் “தீண்டத்தகாதவர்கள்-இழி நிலையில் இருக்க வேண்டியவர்கள்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்று கூறுவது முரணாகப் படவில்லை? தெய்வத்தின் குரல் படித்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். தயவு செய்து முதல் பாகத்தில் “வர்ண தர்மம்”, வேற்றுமையில் ஒற்றுமை”, “பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன?” ஆகிய பகுதிகளைப் படித்துப் பாருங்கள் உங்கள் வாதங்கள் எவ்வளவு ஆதாரமற்றவை என்பது புரியும். புரோகித மரபு, ஆசாரமான மடம், ஞான மரபு பற்றிய உங்கள் சிந்தனைகள் “அஞ்ஞனமென்னது ஞானறியும். மஞ்ஞளு போலே வெளுத்திருக்கும்” என்பது போன்று இருக்கின்றன.

சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் ஐயா. சில ஆதர்சங்கள் சமூகத்திற்குத் தேவை. வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை சாமானியனுக்கு அளிக்கும் சர்வ வல்லமையும், நல் வழி நடத்தும் திறமையும் அந்த ஆதர்ச புருஷர்களுக்கு உண்டு. அவற்றில் களங்கம் உண்டாக்குவது எந்த விதத்தில் லாபம் தரும்?

ஞான மரபு, மீமாம்ஸா பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள். இவ்விரண்டிற்கான தொடர்பையும், வேற்றுமையையும், அவசியத்தையும், குறிக்கோள்களையும், ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மையையும் பற்றி அறிய வேண்டுமானால் வேதங்களைப் பற்றிய தீர்க்கமான அறிவு தேவை. அதுவும் ஒரு நல்ல குருவிடமிருந்து பெற்றதாக இருக்க வேண்டும். தானாகப் படித்தால் அனர்த்தங்களே விளையும். அந்தக் கடலில் கால் நனைத்தால் கூடப் போதும். அடுத்தவர்களை அலசுவதை விட்டு நம்மைப் பண்படுத்திக் கொள்ள ஆரம்பிப்போம். ஏனென்றால இந்த மரபு ” “நான்” உதியாது ஒடுங்கிய நிலை நாம் அதுவாய் உள்ள நிலை” என்பதையே இறுதி நிலையாக ஒவ்வொரு மனிதனுக்கும் வகுத்த இணையற்ற மரபு. அதன் அறிவு சார் வாதங்கள் நம்மை வியக்க வைக்கும். அதன் உண்மை நம்மைப் பக்குவப் படுத்தும்.

சில சரித்திர நிகழ்வுகளின் படிமங்கள் நம் மரபின் இறையாண்மையில் கறை ஏற்படுத்தி இருப்பது துரதிருஷ்டவசமான ஒன்று. ஆனால் அது மரபின் தவறல்ல. அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களின் சிறுமை. அதனால் நம் மரபை எல்லோரும் காமாலைக் கண்களோடே பார்க்கின்றார்கள்- அதன் தாக்கத்திலேயே பல நிகழ்வுகள் அலசப்படுகின்றன. தவறான கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன. அதன் உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு முயற்சியும் இல்லை. அதனால் சமூகத்திற்குத்தான் நஷ்டம். நம் காலத்தில் அந்த மரபின் முழுமையை முற்றிலும் உணர்ந்து, மனித சமுதாயம் பயனுறும் வண்ணம் அதன் பெருமையைக் காப்பாற்றித் த்ந்தவர்களுள் தலையாயவர் மஹா பெரியவர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே என்று வாழ்ந்தவர். அவருடைய கருத்துக்கள் சாத்திரத்தின் குரல். அவை சமூகம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, மதம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, தத்துவமாக இருந்தாலும் சரி. சாத்திரத்தின் முன் எல்லோரும் சமம. (இங்கு சாத்திரம் என்று நான் கூறுவது ஸ்ருதி என்கிற வேதம்.) நடைமுறையில் வேறுபாடுகள் எந்தக் காலத்திலும் தவிர்க்க முடியாதவை. அவரவர் நிலையிலிருந்தே மேன்மை அடையும் வழியையும் அதே சாத்திரம் கூறுகின்றது. அதில் உயர்வு தாழ்வு கற்பித்தது மனிதர்களின் மடமை அல்லது அகம்பாவம்.

ஒரு முன்னூறு வருட இடைவெளி நம்மை உண்மையான நம் மரபிலிருந்து வெகுதூரம் கொண்டு வந்து விட்டது. அடிப்படைப் புரிதலிலும் நடைமுறையிலும் பல அலட்சியங்களும், அவலங்களூம் நிகழ்ந்து விட்டன. அதை மறுபடி உருவாக்குவதில் எழுத்தாளர்களின் பொறுப்பு கணிசமாக இருக்கின்றது. அதற்கு அவர்களிடம் உண்மையான தேடலும், பாரபட்சமற்ற சமநோக்கும் , விருப்பு வெறுப்பற்ற அணுகு முறையும், சுய மதிப்பீடுகளின் தாக்கமில்லாத ஆராய்ச்சியும் இருக்க வேண்டும். உங்களிடம் அதை நான் எதிர்பார்த்தேன். என்ன எழுதுகின்றோம் என்பதில் ஒரு எழுத்தாளர் மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா?

தனி மனிதர்களப் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் மஹான்களின் (உங்கள் கருத்தில் ஏதோ ஒரு பெரியவர் )ஆளுமைகளை ப் பற்றி ஆராயும் போது எது அவர்களின் மேன்மைக்குக் காரணமாக இருந்தது என்பதைப் பார்த்தல் நலம் பயக்கும். குறைகளை அவர்களை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நம்மை மேலோட்டமாகப் பார்த்தாலே நிறைய குறைகள் தெரிய வரும்.

பெரியவர் அத்வைத ஆசாரியராக இருந்தவர். உயர்வு தாழ்வு போன்ற இரட்டைகளுக்கு அந்த தத்துவத்தில் இடமே இல்லை. அவர் உயர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வேறுபடுத்திப் பார்த்தார் என்று கூறுவது அவருடைய நேர்மையைச் சந்தேகிப்பதற்கு ஒப்பாகும்.

அவரே கூறியிருக்கிறார். நம் சநாதன தர்மத்திற்கு ஆபத்து அதன் எதிர்ப்பாளர்களிடமிருந்து இல்லை. தவறாகப் புரிந்து கொண்டிருப்பவர்களிடமிருந்தே என்று.

இப்படிக்கு

அகிலா

அன்புள்ள அகிலா

உங்கள் சாதிசார்ந்த அசட்டுப்பெருமிதங்களில் இருந்து விடுபட முடிந்தால் நீங்கள் வரலாற்றை, காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் சொந்த வார்த்தைகளிலேயே வாசித்துப்பார்க்கமுடியும்

பிரச்சினை உங்களிடமுள்ளது. ஒருவர் பழைமையான நம்பிக்கைகள் ஆசாரங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து வாழ்ந்தார் என்றால் அவர் ஒரு ஞானி என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் ஞானம் என்றால் என்ன ஞானி என்றால் யார் என்ற உங்களுடைய எண்ணத்தில்தான் சிக்கல். ஆனால் அது ஒரு சாதிசார்ந்த நம்பிக்கை என்னும்போது விவாதிக்கவும் முடியாது. நம்பிக்கைகளுடன் விவாதிப்பது வீண்

எங்கள்சாதியின் ஆசாரங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்த எங்கள் மடாதிபதிதான் ஞானி என நீங்கள் சொல்வதைப்புரிந்துகொள்கிறேன். தருமபுரம் ஆதீனகர்த்தர் மட்டுமே ஞானி என கார்காத்தவேளாளர் சொல்லலாம். ஆனால் அவர்கள் இன்னும்கொஞ்சம் நாகரீகமானவர்கள், தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்களே ஒழிய பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களைப்போல பிறரை மதம் மாற்ற முயல்வதில்லை

‘தகுந்த’ குருவிடம் ‘ஞானம்’ பெறும்படி இருபதாண்டுகளாக எனக்கு பல பிராமணர்களும் ஆலோசனை சொல்லி வருகிறார்கள். பிராமணர்களில் கணிசமானவர்களுக்கு ஞானம் என்பது பிராமணர் மட்டும் எய்தத்தக்க ஒரு விஷயம். ஓரளவு விஷயமறிந்தவர்கள் கூட கவனமாக ராமகிருஷ்ணர், ரமணர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி என பட்டியலிடுவதைக் கண்டிருக்கிறேன்.என்ன சாஸ்திரம் படித்தாலும், என்ன தத்துவம்பேசினாலும் நான் வடமாள், வாத்திமார்,பிரகசரணம் என்ற நினைப்பை உதறமுடியாத ஓர் ஆசாமியை சுட்டசட்டி சட்டுவம் என்று மட்டுமே நான் மதிப்பிடுவேன். அது ஓரு ஜென்மசாபம். எந்த குருவும் எந்த ஞானமும் மீட்கமுடியாத இருண்ட கிடங்கு

நமக்குள் எந்த உரையாடலும் நிகழமுடியாது. நீங்கள் எனக்கு எழுதவேண்டியதில்லை. மடிஆசாரங்களில் ஈடுபடுங்கள். காஞ்சிபுரத்துக்குச் சென்று கும்பிடுங்கள். அந்தஞானமே வேறு

ஜெ

முந்தைய கட்டுரைமபொசி கண்ட ஒருமைப்பாடு
அடுத்த கட்டுரைஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…